நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, June 25, 2009

சீனாவிலும் பெண்கள் இப்படித்தான்... ஜெயந்தி சங்கரின் நூலும் என் எண்ண இடைச்செருகல்களும்மரங்கள் வழமைபோல் கோடையைச் சூடிக்கொண்டுவிட்டன. இம்மாதங்களில் மட்டும் பறந்து
திரியும் குருவிகள் சிலவும் வருடம்போலவே வந்துவந்து சன்னலுக்கருகில் சத்தமெழுப்பியே
போகின்றன. எல்லாம் இருந்தும் இந்தக் கோடை பசுமையைக் கொண்டாடும் மனநிலையை
வாரி வழங்கியதாகத் தெரியவில்லை. சிலமாதங்களாய்ப் பதைபதைப்புடனும், இன்னபிற
கையாலாகத் தனங்களோடும் செய்திகளை மட்டும் வாசித்துக் கடைசியில் இன்னும்
மோசமான உணர்வுகளுக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கும் தமிழர்களில் ஒருத்தியாக நானும்.
எப்போதாவது தொலைதூர ஈழத்து நண்பர்கள், தோழிகளிடம் இருந்து வரும் தொலைபேசி
அழைப்புகளில் கூட என்ன பேசுவதெனத் தெரியாத தடுமாற்றங்களே எஞ்சுகின்றன. .
இலக்கியம், கவிதை, ஈரம், நேசம், மனிதாபிமானம், உயிராபிமானம், லொட்டு, லொசுக்கு
இன்னபிறவெல்லாம் எழுதவும், படிக்கவும் சுவைகூட்டுகின்றனவேயொழிய நடைமுறையில்
எவ்வளவுதூரம் சாதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்து உலகம் முழுமையும் வெறுமையால்
சூழப்பட்டதான காட்சியைச் சில கணங்களில் விரித்துப் பின் தன்னுள் சுருங்குகிறது.
இருந்தும் எழுதவே செய்கிறோம். ஏனென்றால் எழுத்து சில சமயம் ஆத்மதிருப்தியைத்
தருகிறது. உள்ளே உருண்டுபுரளும் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கிறது. எழுத்தை
அருந்திப் பழகியவருக்கு அது ஒரு போதையாகக்கூடப் போய்விடுகிறது. ஒருசிலநேரம் நம்
இருத்தலுக்கான அச்சுறுத்தல்களுக்கு ஒரு எதிர்ப்பாகவும் எழுத்தை ஏந்தலாம்.


எழுத்துக் குறித்து மேற்சொன்ன எண்ணங்களெல்லாம் இருந்தாலும் நாளைத்
தொடங்குகிறபோது வாசிக்கிற செய்திகளும் பிறகு அவை தருகிற உணர்வுகளின்
அலைக்கழிப்பிலும் உழலும் மனதை வைத்துக்கொண்டு எழுதும் எதிலும் உருப்படியாகச்
சொல்லமுடிந்ததும் ஒன்றுமில்லையென்றே தோன்றுகிறது. இந்த ஒழுங்கற்ற நாட்களுக்கு
நடுவே புத்தகம் படிக்கலாமென்ற எண்ணம் தோன்றியது. கி.மு, கி.பி மாதிரி புத்தக
நேசத்தின் அடர்த்தியைக் க.மு (கணினிக்கு வரும் முன்), க.பி (கணினிக்கு வந்த பின்) என்ற கால வரையறை கொண்டே அளக்க வேண்டியிருக்கிறது. க.பி அந்த நேசத்தை ஒரு
அடர்ந்த இருட்டுக்குள் தள்ளிவிட்டது போலவே இருக்கிறது. ஊரிலிருந்து உறவினர்களால்
அன்போடு கொடுக்கப்பட்ட வடக வகைகளையெல்லாம்கூட இரக்கமின்றிப் புறக்கணித்துப்
பெட்டிநிறைய எடுத்துவந்த புத்தகங்கள் இங்கே தூசியோடு பேசிக்கொண்டு வருந்துவதைப்
பார்க்கும்போது நிச்சயமாய் ஒரு சுய சுத்திகரிப்பு செய்தாகவேண்டுமென்றே படுகிறது.
வலிந்து நாளிடமிருந்து நேரத்தைப் பிடுங்கிக்கொண்டு புத்தகமொன்று தேடியபோது ஜெயந்தி
சங்கரின் "பெருஞ்சுவருக்குப் பின்னே" கைகளில் அகப்பட்டது. அது வெளியிடப்பட்டதும்
ஜெயந்தியால் அனுப்பிவைக்கப்பட்டு இரு வருடங்களுக்கு முன்பே ஒருமுறை
வாசித்துவிட்டிருந்தேன். என்றாலும் மீண்டும் வாசித்தேன்.

இணையத்தில் 2003 வாக்கிலேயே குடிபுகுந்தவர்களுக்கு ஜெயந்தி சங்கரை நன்கு
பரிச்சயமிருக்கலாம். அப்போதிருந்த மிகச்சில பெண்பதிவர்களில் அவரும் ஒருவர்.
சிறுகதைகள், குறுநாவல், நாவல், கட்டுரைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என இதுவரை பல
நூல்களை வெளியிட்டிருக்கும் இவரின் படைப்புகளில் என் மனதுக்கு மிக நெருக்கமாக
உணர்ந்தது "பெருஞ்சுவருக்குப் பின்னே" நூல். சிங்கப்பூர்வாசியான ஜெயந்திக்கு அங்கே
சீனர்களின் மொழி, வாழ்வியல், வரலாறு குறித்த ஆர்வமும், தேடலும் ஏற்பட்டதே
இந்நூலுக்கு வித்திட்டிருக்கிறது. இந்தநூல் முழுதும் சீனவரலாற்றில் பெண்களின் நிலை
குறித்த ஆய்வை நிகழ்த்தியிருக்கிறார்.

தோற்றங்கள், தோல்நிறம், மொழி, இடம், இனம் மாறினாலும் 'பெண்" என்னும் சொல்லின்
வரையறை எந்த ஒரு வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. எல்லா இடங்களிலும்
அவளுக்கான வரையறை "ஆணுக்குக் கட்டுப்பட்டு, ஆனுக்காக வாழ்" என்பதே.
கட்டப்பட்டிருந்த நூல்களும், அடைக்கப்பட்டிருந்த சிறைகளும் வண்ணங்களால்
வேறுபட்டிருந்தாலும் "அடிமைத் தத்துவம்" காக்கப்பட்டே வந்திருக்கிறது. சீனப் பெண்கள்
மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியுமா என்ன? நீண்டு நிற்கும் பெருஞ்சுவர் சீனாவுக்கான
அடையாளம். அந்தப் பெருஞ்சுவருக்குப் பின்னான பெண்களின் இருண்ட வாழ்வு குறித்துப்
பேசுகிறது இந்நூல்.

சீனப்பெண் சிறு அறிமுகம் என்பது தொடங்கி, மதங்களால் உருவாக்கப்பட்ட பெண் ,
பெண்களுக்கான சமூகப்பாடங்கள், மரணித்த பாதங்கள் இலக்கியத்தில், அரசியலில்,
கல்வியில், தற்காலத்தில் சீனப்பெண்களின் பரிமாணங்கள், புலம்பெயர்நாடுகளில் அவர்களின்
வாழ்வியல், சாதனைகளில் சீனப்பெண்கள் எனக் கிட்டத்தட்ட 40 தலைப்புகளில் மிகுந்த
நுணுக்கங்களோடும், உண்மைகளோடும், அக்கறையோடும் எழுதப்பட்டிருக்கிறது.

"திறமையற்ற பெண்தான் நற்குணமுடையவள்", "மகள்களை வளர்ப்பதைவிட வாத்துக்களை
வளர்ப்பது மேல்" போன்ற சீனப்பழமொழிகளிலும், "பெண்ணாயிருப்பது எத்தனை
வருந்தத்தக்கது!! பூமியில் வேறெதுவும் இத்தனை கீழ்த்தரமில்லை, ஆண்கள் வாயிற்கதவில்
சாய்ந்துநிற்பது சொர்க்கத்திலிருந்து தெய்வங்கள் வீழ்ந்ததுபோல், நான்கு கடல்களையும்
வீரத்துடன் எதிர்கொள்வான், ஆயிரம் மைலகளுக்கு காற்றையும் தூசியையும்கூட,
பெண்பிறந்தால் யாருக்கும் பிடிக்காது" என்று தொடங்கும் சீனப்பழங்கவிதையொன்றிலும்
ஆரம்பித்த்டிருக்கிறார் ஜெயந்தி சீனப்பெண்களுக்கான அறிமுகத்தை. அங்கும்
தந்தைவழிச்சமூகம் ஆரம்பித்த காலத்தேதான் பென்ணடிமைத்தனம் தன் வேர்களைத் திறம்பட
ஊன்ற ஆரம்பித்திருக்கிறது. தாவோவும், பௌத்தமும் கொண்டிருந்த பெண்மீதான
அணுகுமுறை மற்றும் முடியாட்சிக்கால நிலை என எங்கும் பெண்ணுக்கு இருண்டகாலமே.

உலகம் போற்றும் தத்துவஞானி கன்பூசியஸ¤க்கும்கூடப் பெண் கடைநிலைதான் என்பது
வருந்தத்தக்கதெனினும் அதிர்ச்சியளிக்கவில்லை. ஏனென்றால் இங்கே பிதாமகன்கள் என்று
பேசப்படுகிற பல கொம்பர்களுக்கும்கூடப் பெண் அவர்களுக்கான ஒரு சேவகி மட்டுமே
என்பது வரலாற்று உண்மை.ஆண் கன்பூசியஸை விட்டுப் பெண்கன்பூசியஸ் என்று கொண்டாடப்பட்ட சீனப் பெண் அறிஞர் பான் ஜாவ் பெண்களுக்கு என்ன சொன்னார் என்று பார்த்தாலுமே நம்முடைய "தையல் சொல் கேளேல்" பாணியாக இருக்கிறது. அச்சம், மடம், நாணப் பாடங்களைத்தான் பான் ஜாவும் எடுத்துத் தொலைக்க வேண்டிய சிந்தனை அவலத்தை அச்சமூகம் ஊட்டி வளர்த்திருக்கிறது.

ஆணுக்காக வார்க்கப்பட்ட பெண்களைச் சீனச் சமூகத்திலும் கண்டறிந்து பல்வேறு
பழக்கவழக்கங்கள், வரதட்சணை, குடும்ப நிகழ்வுகள் எனப்பலவற்றையும் விட்டுவிடாது
விளக்கியிருக்கிறார் ஜெய்ந்தி. என்னை மிகவும் பாதித்த அங்கத்தைய பழக்கம் ஒன்று
"மரணித்த பாதங்கள்" என்ற தலைப்பில் கட்டுரையாக்கப்பட்டிருக்கிறது. "பெண்ணின் உடலும்
ஆணுடையதே" என்ற சமன்பாட்டைப் பலசமூகங்களும் நிறுவியே வந்திருக்கிறது.
பழஞ்சீனச்சமூகத்தில் பெண்ணின் பாதங்கள் ஆணுக்கு இச்சையைத் தூண்டுவதாகவும்,
அவன் அழகின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் அவன் எதிர்பார்க்கும் அளவுகளில் சிறியதாக
இருக்கவேண்டுமாம். அதற்காகப் பெண்கள் பாதங்களை இறுக்கி, மடக்கிக்
கட்டிக்கொள்வார்களாம் அதன் வளர்ச்சியைத் தடுக்க. இதுவேறு ஒரு சடங்காக
நடத்தப்படுமாம். முதலில் கால்விரல் நகங்கள் வெட்டப்பட்டுப் பின் எலும்பையும், தசையையும் மென்மையாக்க மூலிகை காய்ச்சிய சுடுநீரில் காலை ஊறவைத்துக் கடைசியில்
கட்டைவிரலை மட்டும் விட்டு மீதி விரல்களையெல்லாம் உள்ளே தள்ளி இறுக்கிக்
கட்டிவிடுவார்களாம். அப்படிக் கட்டிய பாதங்களோடே சிலவருடங்கள் நடந்தால் பாத
வளர்ச்சி தடுக்கப்பட்டுச் சிறியதாகவே இருக்குமாம். இவ்வளவு பெரிய வன்முறை 20ம்
நூற்றாண்டுத் தொடக்கம் வரை இருந்துவந்துள்ளது என்பது உபகுறிப்பு. இப்படியெல்லாம்
ஒருவனுக்காகச் சிரமப்பட்டுச் சிறியபாதங்கள் கொண்டு கல்யாணம் கட்டித்தான்
தொலைக்கவேண்டுமா என்றால் "செத்தபின் அவளின் கல்லறையைப் பராமரிக்க கணவனோ,
வாரிசுகளோ இல்லாதுபோனால் அவள் மோட்சம் அடைய முடியாது" என்பது இன்னொரு
எழவெடுத்த நம்பிக்கையாம். உண்மையில் இந்தக்கட்டுரையை இரண்டாவது முறையாக
வாசிக்கும்போதும் நான் உணர்ச்சிவயப்பட்டேன். நம்மை மாதிரி ஆட்கள் அங்கே பிறந்து
தொலைந்திருந்தால் நிச்சயமாக மோட்சமே கிடைத்திருக்காதே என்ற எண்ணமும்
வந்துபோனது.

ஆனால் பெரும் இடிகளுக்கு நடுவிலும் சின்ன மழையொன்று சிதறி விழுவதைப்போல்
இத்தனை இடர்ப்பாடுகள் நிறைந்த சமூக அமைப்பிலும் தடைகளைத் தாண்டிச் சாதித்த
பெண்களும் உண்டுதான். அப்படி வெளிப்பட்ட முதல் சீனப்பெண் விமானி உள்ளிட்ட
இன்னும் சில முதல்பெண் வகையராக்களையும், சமீபத்திய சட்ட, சமூக மாற்றங்களையும்
கூடக் கோடிட்டுக் காட்டிச் சில நம்பிக்கைகளையும் விதைத்து முடிகிறது நூல்.

எனக்கு இந்நூல் சொல்லியவை ஏராளம். அவ்வகையில் இதை ஒரு படிக்கவேண்டிய நூல்
என்பேன். புத்தகம் குறித்து முதல்முறை வாசித்தபோதே தனிப்பட்ட முறையில் என்
நண்பர்களுக்குப் பரிந்துரைத்தேன் எனினும் அது குறித்து இங்கே எழுத நினைக்கையில் சில
தயக்கங்கள் இருந்தன. அதில் முக்கியமானது ஜெயந்தி என் நண்பர் என்பது. எனது
கருத்துத் தளங்கள் சிலவோடு ஜெயந்திக்கு இடைவெளிகள் இருக்கலாம், என்றாலும்
இணையத்தில் நான் நெருங்கிப்பேசும் சுகமான சொற்ப நட்புகளில் அவர் இருக்கிரார்.
நண்பர்களின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எழுதுவதில் சில அகவயப்பாட்டுச் சிக்கல்கள்
உள்ளன. அதில் ஒன்று வெறும் சொரிதலாய் முடிந்துவிடக்கூடும் என்பது. ஆனால்
இரண்டாவது முறையாகவும் வாசித்தபின்பு ஜெயந்தியை மறந்து அந்தப்பிரதி தனக்குள்
மட்டும் என்னை வைத்திருந்தது. எனவே எழுத நினைத்தேன்.

இப்போதும் ஜெயந்திக்கு இந்தப்பிரதியின் வாசகியாக மட்டும் சொல்ல நினைப்பது
"சிந்திக்கிற, எழுத விரும்புகிற எல்லாப்பெண்களும் தாம் நினைக்கும் தூரம்வரை
வந்துசேர்ந்துவிடுவதில்லை. இடையில் வீடு இழுத்துவிடுகிற, சமூகச் சேறு விழுங்கிவிடுகிற
சோகங்கள் உண்டு. எல்லாம் தாண்டி வந்தபின்னும் எத்தனைபேருக்கு உண்மையான சமூக
அக்கறை இருக்கமுடியும் என்பதும் சொல்வதற்கில்லை. விகடனிலும், குமுதத்திலும் ஒரு
காதல் அல்லது சாதல் கதை வந்த கையோடு அந்த வெளிச்சத்திலேயே தன் ஆயுளைக்
கரைத்துக்கொள்கிறவர்களும் உண்டு. அப்படியின்றி எழுதக் கிடைத்த வாய்ப்பை
சமூகநேசத்தின்பாலும் செலுத்த முடிவது சிறப்பானது. நீங்கள் பெருஞ்சுவருக்குப் பின்னே
எழுத நினைத்ததில் அப்படியொரு நேசம் நிறைந்திருக்க வேண்டும் என்பதே என் கணிப்பு.
அதை நீங்கள் தொடரவேண்டும். இரண்டாவது நானறிந்தவரை தற்கால சமூக நிகழ்வுகளில்
அது பெண் சம்பந்தப்பட்டதே எனினும் ஒரு எழுத்தாளராக அல்லது பெண் எழுத்தாளராக
உங்களின் குரலை நான் கேட்டதில்லை. கேட்க விரும்புகிறேன். சீனப் பெருஞ்சுவரையும்
தாண்டி விடயங்கள் சேகரிக்கும் ஜெயந்தியின் எழுத்து மனம் மற்ற தேவையான
நேரங்களிலும், இடங்களிலும்கூடத் தன் மௌனம் உடைத்து வெளிவரவேண்டும் அதன்
சாதக பாதகங்கள் பற்றிய பிரக்ஞைகள் இன்றி." நன்றி.

8 Comments:

At 1:52 AM, June 25, 2009, Blogger சந்தனமுல்லை said...

//அவன் அழகின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் அவன் எதிர்பார்க்கும் அளவுகளில் சிறியதாக
இருக்கவேண்டுமாம். அதற்காகப் பெண்கள் பாதங்களை இறுக்கி, மடக்கிக்
கட்டிக்கொள்வார்களாம் அதன் வளர்ச்சியைத் தடுக்க. இதுவேறு ஒரு சடங்காக
நடத்தப்படுமாம்//

அவ்வ்வ்வ்!
நல்ல அறிமுகத்துக்கு நன்றி! வாசிக்க முயற்சி செய்கிறேன்!

 
At 2:06 AM, June 25, 2009, Blogger rapp said...

//நம்முடைய "தையல் சொல் கேளேல்" பாணியாக இருக்கிறது. அச்சம், மடம், நாணப் பாடங்களைத்தான் பான் ஜாவும் எடுத்துத் தொலைக்க வேண்டிய சிந்தனை அவலத்தை அச்சமூகம் ஊட்டி வளர்த்திருக்கிறது.//

:):):)

பாதங்கள் சிறிதாக்கும் முறையிலிருந்து சீனப் பெனகளிப் போலவே பல பயங்கர வழக்கங்கள், அதே முட்டாள்தனமானக் காரணத்துக்காகவே ஜப்பானிலும் இருந்தது எனக் கேள்விப்பட்டும், படித்தும் உள்ளேன்(உண்மையான அப்படி இல்லையென்றால் என்றால் ஓகே).

என்னோட பாட்டி சீனாவிலும் திருமணமானப் புதிதில் வாழ்ந்துள்ளார். அவர் கூறிய பழக்கவழக்கம் மற்றும் அதனை சார்ந்த கதைகள் இதேரகமாக இருக்க கேட்டிருக்கிறேன்.

 
At 4:50 PM, June 25, 2009, Blogger செல்வநாயகி said...

சந்தனமுல்லை, rapp,
நன்றி.

rapp,
///பாதங்கள் சிறிதாக்கும் முறையிலிருந்து சீனப் பெனகளிப் போலவே பல பயங்கர வழக்கங்கள், அதே முட்டாள்தனமானக் காரணத்துக்காகவே ஜப்பானிலும் இருந்தது எனக் கேள்விப்பட்டும், படித்தும் உள்ளேன்///

இருக்கலாம். நான் இதுவரை அறியவில்லை.

உங்கள் பாட்டியின் சீன அனுபவங்களும் இவற்றை உறுதிப்படுத்துவது நம்மை மேலும் சிந்திக்க வைக்கிறது.

 
At 6:31 AM, June 26, 2009, Blogger பதி said...

நல்ல பகிர்வு... நீங்களாவது பரவாயில்லை, பெட்டி நிறைய புத்தகம் கொண்டு வந்து படிக்க முடியவில்லை.. நான் கொண்டு வந்ததே சில புத்தகங்கள் தான்... அவையும் தூங்கிக் கொண்டுள்ளன...

சீன அனுபவங்கள் ஏதோ சித்திரவதை முகாம் அனுபவங்களைப் போல உள்ளது.

எனக்கு ஒரு சந்தேகம்.. பெண்களை இது போல் எல்லாம் கொடூரமாக நடத்தாத, சமமாய் நடத்திய ஏதேனும் ஒரு சமூகம் உள்ளதா என்ன? அறிய ஆவலாக உள்ளது.

 
At 2:28 PM, June 29, 2009, Blogger நேசமித்ரன் said...

நல்ல பதிவு

செறிவு நிறைந்த உங்கள் எழுத்துக்கள் இத்தொய்மை நிறைந்த வெளியிலிருந்து காலத்திலிருந்து வெகு விரைவில் வெளிவர வேண்டுகிறேன்

 
At 11:01 PM, June 29, 2009, Blogger செல்வநாயகி said...

பதி,
தாய்வழிச்சமூகங்களில் நிலைமை வேறுபட்டிருந்தது என்று படிக்கிறோம். இப்போதைய ஐரோப்பியச் சமூகங்களில் ஆசியச் சமூகத்தைக் காட்டிலும் கொஞ்சம் நிலைமையும், விழிப்புணர்வும் வேறுபட்டே இருக்கிறது அல்லவா?

நேசமித்ரன்,
உங்களின் வருகைக்கும், அன்புக்கும் நன்றியும், நெகிழ்ச்சியும்.

 
At 12:53 PM, July 08, 2009, Blogger தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி...

 
At 2:27 PM, July 08, 2009, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த சீனப்பாதங்கள் பற்றி சின்னவயதில் பூந்தளிரில் படிச்சிருக்கேன்.இந்த விடுமுறையில் கதைகள் படிக்க போரடிக்குது என்ற மகளை துணுக்குகளைப் படி என்று சொல்லி இருந்தேன்..அவளும் படித்திருப்பாள் போல..யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள்..அப்போது அதனை மேற்கோளிட்டுப் பேசிக்கொண்டிருந்தாள்.. ஆகா வந்தாச்சு வாரிசு என்று நினைத்துக்கொண்டேன்.. :)

 

Post a Comment

<< Home