சமூக உணர்வு
பதின்மம் முளைவிட்டிருந்தபோதுதான்
அவனைக் கல்லால் அடித்துத் தெறித்த
குருதியைக் கண்களால் குடித்திருந்தேன்
இரவில் சீதை ஒருவளை வேசியாக்கி
பகலில் குன்றேறி ஏகபத்தினிவிரதம்
உரைத்தவனைக் கல்லால் அடிப்பதே
நீதியென்று ராமன் கிருஷ்ணன் சிவன்
சீனிவாசன் எல்லோருக்கும் சொல்லியும் வைத்தேன்
அன்றோடு பதினேழு முடிந்ததென்று
அம்மா சொன்ன திகதியில்கூட
உள்ளூர் தபாலலுவலகத்தில்
உதவித்தொகை கேட்டு நின்ற கிழவியை விட்டு
பொண்டாட்டியோடு தொலைபேசியில்
கொஞ்சிக்கொண்டிருந்த அலுவலனை
சட்டை பிடிக்கப்போனேன்
எனக்கான "ரௌடி" பெயரை
ஊருக்குள் முன்மொழிந்தவன் அவனாகத்தான் இருக்கவேண்டும்
நான் புளியமரத்துக் கல்லுக்கடைப்பக்கமாய் நடந்துபோகையில்
குடிகாரன்களும் அவசரமாய் வரிசையமைத்தார்கள்
அஞ்சு பைசா சில்லரை பாக்கிக்கு நடத்துனரோடு
பேர் இல்லாததுக்கு ஓட்டுச்சாவடியாட்களோடு
எதிரில் வந்த எம் எல் ஏவோடு
யாருக்காகவேனும் எப்போதும்
சண்டையிட்டேன்
ஏழெட்டு வேலை, ஊர் மாற்றீ
இன்று அந்த முனீஸ்வரன் கோயிலருகே
ஒரு பைத்தியத்தை நாலுபேர்
அடித்துக்கொண்டிருக்க நான்
வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறேன்
சாலையையும் அனைத்தையும்
6 Comments:
வாழ்த்துக்கள் செல்வநாயகி.. கவிதை எனக்குப் பிடித்தது!
நன்றாக உள்ளது...
மதன், பதி,
என்னளவில் இது சரியாக சிந்தித்து எழுதப்படாத ஒன்று (அதுசரி எல்லாத்தையும் சரியா செஞ்சனா என்ன?) வேறெதையோ நினைத்து எழுத ஆரம்பித்து இடையில் ஏற்பட்ட தடங்கல்களால் இப்படி முடிந்தது இது:))
இருந்தாலும் உங்கள் இருவருக்கும் பிடித்ததறிந்து மகிழ்ச்சிதான்:)) நன்றி.
பொறி பறக்கிறது உங்கள் வரிகளில்
நன்றாக இருக்கிறது உட்பொருளின் தீவிரம்..!
என் சிறு அறிவுக்கு எட்டிய வரை வரலாற்ற்றில் ஒரு பெண் கலகக்காரி கூட இல்லையே என்ற மன வருத்தம் உண்டு அது என் அறிவு போதாமையாக இருக்கலாம்.இந்த அளவுக்கு கேவலமாக ஆண்கள் இவர்களை அடக்கி வைத்திருக்கிறார்களே ஏன் இதனை ஆயிரம் ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கோபம் வரவில்லை என்று அத்சயதிருகிறேன் .இப்போது சிறிது மாறி இருப்பது மகிழிச்சி அளிக்கிறது .உங்களின் வினவு மீதான விமர்சனத்தை படித்தேன் .பெண்கள் இந்த அளவு கருத்து ரீதியாக விமர்சனம் செய்வது ஆச்சர்யத்தையும் மகிழிசியையும் அளித்தது .தொடர்ந்து நீங்கள் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் அது மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும், ஊக்கத்தையும் அளிக்கும் என்பது என் விருப்பம் .தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .
வரலாற்ற்றில் ஒரு பெண் கலகக்காரி கூட இல்லையே என்ற மன வருத்தம் உண்டு
கண்ணகி மாதவி இதை கொண்டு வர முடியும் அல்லவா?
Post a Comment
<< Home