நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, December 30, 2009

காலம்




உள்ளங்கை ரேகை சுட
ஊன்றி ஏறிய பாறையின் உச்சந்தலையில்
இன்னும் ஒரு துளி உலராமல் தெரிகிறது
நான் ஏறியது கண்டு எழுந்தோடிய கொக்கு
எங்கிருந்தோ கொண்டுவந்து உதறிவிட்டுப் போயிருக்கிறது.

அந்த நாக மடையில்
முழங்கால் நீரில் சீலை உயர்த்திக் கட்டி
ஊரான் துணிகளை அடித்துத் துவைக்கிறாள் நாகன் மகள்
அவள் காலுக்கிடையே விரவியோடும் அழுக்கில் ஒரு துளி நான்

அஞ்சாம் நெம்பர் பஸ்ஸில்
ஓட்டுனரின் வசவைப் புறம்தள்ளி
தன் கொய்யாப் பழக் கூடைக்கு இடம்பிடித்த கிழவி
சுருக்குப்பை திறந்து காசெடுத்து நிமிர்கையில்
பிஞ்ச பழத்தின் தோல் கிள்ளித் தின்று கொண்டிருந்தாள்
நெரிசலில் நசுங்கியிருந்த நெலாப் பொட்டுச் சிறுமி

ஏழு மார்க் பத்தாமல்
ஏழாம் வகுப்பில் பெயிலானதால் லீவுக்கு
மாமன் ஊட்டுக்குப் போவமுடியாதென
வைராக்கியமாய் இருந்தாள் பாலாமணி

குடிக்கும்போது ஒழுகி
வயித்தில் கோடிட்ட தெளுவோடு
வீதியெங்கும் இசையெழுப்பிச் செல்கிறான்
நொங்கு வண்டிச் சுப்பிரமணியன்

பட்டிப்படல் கட்டும் முன்பு எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது
உள்ளே போட்ட சோத்தை
தின்றுமுடித்து விட்டதா செவலை என்று ஆத்தா


குற்றங்களுக்குத் தண்டனை உண்டு
குற்ற உணர்வுகளுக்குத் தண்டனை ஏது
அந்த உணர்வுகளைத் தவிர?

11 Comments:

At 12:19 AM, December 31, 2009, Blogger செல்வநாயகி said...

படத்துக்கு நன்றி:-

www.ivcs.org

 
At 1:04 AM, December 31, 2009, Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

குற்றங்களுக்குத் தண்டனை உண்டு
குற்ற உணர்வுகளுக்குத் தண்டனை ஏது
அந்த உணர்வுகளைத் தவிர? //

ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு விதத்தில் அழகு.

கையாண்ட மொழிநடையும் அருமை.

 
At 1:04 AM, December 31, 2009, Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்.

 
At 5:54 AM, December 31, 2009, Blogger நேசமித்ரன் said...

//அந்த நாக மடையில்
முழங்கால் நீரில் சீலை உயர்த்திக் கட்டி
ஊரான் துணிகளை அடித்துத் துவைக்கிறாள் நாகன் மகள்
அவள் காலுக்கிடையே விரவியோடும் அழுக்கில் ஒரு துளி நான்//


எப்பவும் நினைத்துக் கொள்ளும்படியான வரிகளை எப்போதாவது வந்து தந்து விட்டு போகிறீர்கள் சகோதரி

 
At 12:47 AM, January 02, 2010, Blogger செல்வநாயகி said...

அமிர்தவர்ஷினி அம்மா,

புத்தாண்டு கொண்டாடுகிற மன ஆயத்தங்கள் எல்லாம் வரும் வழியில் எங்கோ தொலைந்து போய்விட்டது:)) அவ்வளவு முக்கியமானதில்லை என்பதால் தொலைந்ததைத் தேடவுமில்லை:)) என்றாலும் அன்பைப் பகிரும் முகமாக நண்பர்கள் வாழ்த்துச் சொல்லிக்கொண்டுதானிருக்கிறார்கள். உங்களின் அன்புக்கும் நன்றி.

நேசமித்ரன்,
நன்றி.

 
At 9:13 PM, January 02, 2010, Blogger தமிழ் said...

//குற்றங்களுக்குத் தண்டனை உண்டு
குற்ற உணர்வுகளுக்குத் தண்டனை ஏது
அந்த உணர்வுகளைத் தவிர? //

உண்மை தான்

 
At 9:32 AM, January 03, 2010, Blogger ரௌத்ரன் said...

என்ன கமெண்ட் போடறதுனு யோசிக்க வைக்கறீங்க எப்பவும்...

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

 
At 12:45 PM, January 04, 2010, Blogger செல்வநாயகி said...

ரௌத்ரன், திகழ்,

நன்றி.

 
At 2:15 AM, February 01, 2010, Blogger ஜோதிஜி said...

நண்பர்கள் என்ற பகுதியை இணைக்கவும். வாசிக்க தொடர வசதியாய் இருக்குமே?

 
At 2:16 AM, February 01, 2010, Blogger ஜோதிஜி said...

வினவு தளத்தில் கொடுத்துள்ள விமர்சனம் என்பதை எடுத்துக்கொண்டு உங்கள் ஆளுமையை இடுகையில் ஏன் இத்தனை குறைவாக கொடுத்து உள்ளீர்கள்?

 
At 9:39 PM, February 01, 2010, Blogger செல்வநாயகி said...

ஜோதிஜி,

நண்பர்கள் சிலர் இணைந்திருக்கிறார்கள், முகப்பிலும் இணைக்கலாம்தான், முயல்கிறேன்.

உங்களின் இரன்டாவது பின்னூட்டம் என்ன சொல்ல வருகிறீர்களெனப் புரியவில்லை. வருகைக்கு நன்றி.

 

Post a Comment

<< Home