பதிவில் கடந்த பாதை (முல்லையின் அழைப்பின் பேரில்)
இதற்கு முன்பு இப்படித் தொடர் விளையாட்டுகளில் அழைக்கப்பட்டு நான் எழுதிய ஒன்றே ஒன்று "கிறுக்கு" தொடர்தான். வேறொன்றும் காரணமில்லை, சோம்பேறித்தனம்தான். என்னதான் வலிந்து மனதைச் செலுத்த முயன்றாலும் ஒரு உள் உந்துதல் இல்லாமல் எழுத நினைக்கும் சில விடயங்கள் ஏறாத சுவற்றில் ஆணிஅடித்துத் தோற்பதைப்போல் ஆகிவிடுகின்றன. அப்படி விட்டவையும் உண்டு. சிலமாதங்களுக்கு முன்பு என் மீது வருடங்களாக மாறாத அன்பைக் கொண்ட பேராசிரியர் தருமி தன் பேத்தி மூலம் ஒரு பதிவுலக விருதைத் தந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லியிருந்தார். ஒரு பச்சைப்பிள்ளை கைநீட்டிக் கொடுத்ததென்றும் பாராமல் அதைப் புறக்கணிக்க வைத்தது அந்நேரத்துப் பாறைமனசு. தேள்கொட்டினாலும் அதைக் காப்பாற்றவே விரும்புகிற துறவியாய் அன்பைத் துறக்காதவர் தருமி.
இப்போது நீண்டநாட்களுக்குப் பின் மீண்டுமொரு தொடர் விளையாட்டில் சந்தனமுல்லையால் அழைக்கப்பட்டிருக்கிறேன். "இந்த விளையாட்டிலும் எழுதாது போனாலும் போவேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்" என அவருக்குச் சொல்லியும் விட்டேன். ஆனாலும் மனதுக்கு இதைச் சொல்வது பிடித்துப்போயிருக்க வேண்டும், வந்தாயிற்று. எப்போதும் முன்னோக்கியே ஓடிக்கொண்டிருக்கிற மனதுக்கு இந்தப் பின்னோக்கிய அசைபோடல்களில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடுவது இயல்புதான். நான் சம்பாதித்தவையும் இழந்தவையும் நிறுக்கப்பட்டு ஒன்றைப்போல் இன்னொன்றும் இயல்பானதுதான் என்ற சமநிலையைப் பழக்கப்படுத்துகிறது இந்த அசைபோடல்.
நான் 2004 பிப்ரவரியில் இணையத்தில் எழுதவந்தேன். அயல்தேச வாழ்வில் கிடைத்த தனிமையான நேரமும், முன்பே ஊரில் மொழிசார்ந்த வேறுதளங்களில் இயங்கிக்கொண்டிருந்த அனுபவமும் எழுத்தில் ஈடுபடவைத்தன. "மரத்தடி" என்ற இணையக் குழுமத்தில்தான் முதலில் போய்விழுந்தது. அங்கே கவிதை, கட்டுரை எனவும் எல்லோர்பாலும் நட்பைத் தேடி நகர்கிற மனதுமாய்ப் போய்க் கொண்டிருந்தது. அப்படியான நாட்களில் அக்குழுமம் தாண்டி 'திண்ணை" யெல்லாம் இருப்பதறிந்து அங்கேயும் எழுத ஆரம்பித்தேன். இக்காலகட்டங்களில் அங்கே வாசித்த, எழுதிய அனுபவங்களில் சில அவ்விடங்களில் இருந்த ஈடுபாட்டை நீர்த்துப் போகச் செய்துகொண்டிருந்தது. இச்சமயத்தில் வலைப்பதிவு என்பது உருவாகிப் பிரபலமாகத் தொடங்கியிருந்தது. என்றாலும் தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்கி எழுதுவது ஏதோ ஒரு பத்திரிக்கையை நானே நிர்வகித்து, வினியோகிப்பதான பயத்தையும் தந்துகொண்டிருந்ததால் வலைப்பதிவு தொடங்கவில்லை. அதற்கேற்றாற்போல் அப்போது பெண்களுக்கான ஒரு கூட்டு வலைப்பதிவை உருவாக்கியிருந்த மதிகந்தசாமியின் அழைப்பின்பேரில் அங்கே எழுத ஆரம்பித்ததும் தனிப்பதிவிற்கான தேவையைக் குறைத்தன.
விரைவில் யாராலோ அத்தளம் தகர்க்கப்பட்டதென நினைக்கிறேன். பிறகுதான் எலிவங்கானாலும் தனிவங்கே தலைசிறந்ததென "நிறங்கள்" 2006 இல் உருவெடுத்தது. வலைப்பதிவில் நான் எழுதிக் கிழித்ததைவிட வாசித்துக் கிழித்தவைதான் அதிகம். எனக்கான புதையல்கள் இங்கிருந்தன. என் தாகத்திற்கான நீரும், என் கண்களைத் திறந்த வெளிச்சமும், என்னையும், என் சமூகத்தையும் எனக்கு அடையாளம் காட்டியவையும் நிறைய இருந்தன. தூக்கம் கெட்டதால் வாசித்தவைகளைவிட, வாசித்ததால் தூக்கம் இழந்து யோசிக்க வைத்தவை நிறைய. உள்வாங்கியதைப் போலவே வெளித்துப்பி மனதை ஒரு சுயசுத்திகரிப்புச் செய்துகொள்ள முடிந்தது.
வாசித்த நேரம் போக எப்போதாவது எழுதுவதுண்டு. அந்தக் குறைந்தநேர எழுத்தாலும் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நான் அப்படி நினைக்காவிடினும் என்னையும் எதிரியாகச் சிலர் ஏற்றுக்கொண்டார்கள்:))நண்பர்களிலும் தாவிப்பிடித்துத் தொடவந்தவர்களில் சிலர் வந்தது மாதிரியே போயும் விட்டார்கள். உண்மையான நண்பர்கள் ஆறுவருட எழுத்துப்பழக்கத்தின்பின்னும் என் தொலைபேசி எண்ணைக்கூடத் தெரிந்துகொள்ளாமலும், ஒருமுறைகூட அரட்டையடிக்காமலும், இன்னமும் நண்பர்களாகவே ஆத்மார்த்தமானவர்களாய் இருக்கிறார்கள்.
தாக்குதல்கள், மிரட்டல்கள்.......அவையெல்லாம் இல்லாமல் போனால் சுவாரசியங்கள் ஏது? இதில் உலகத்தில் நானறியாத மூலையிலிருந்து அனானியாக வருபவர்களில் இருந்து, ஈழத்தமிழ்ச்சாவு குறித்த, உதவி கேட்ட என்இடுகையொன்றில் "நீ எழுதிய கருத்துக்கள் சிலதால் என் புகழ் அழிந்துவிட்டது, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்" என்கிற ரீதியில் எனக்கு மட்டுமின்றி, என் வாழ்க்கைத் துணைவருக்கும் 'தனிமனித, கருத்து சுதந்திரத்திற்குக் குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கிவருகிற ஒரு நாட்டிலிருந்துகொண்டே தாதாத்தன மிரட்டல் விட்ட உள்ளூர்த்தமிழன் வரை சுவாரசியம் சேர்க்கிற இவர்கள் உண்மையில் மனவலிமையைக் கூட்டுபவர்களாயும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இதே உலகின் இன்னொரு மூலையில் உண்மையை ரட்சிக்கும் கடவுளர்களாயும், கீதையை உபதேசிக்கும் கண்ணன்களாகவும் கூடப் பிம்பங்கள் கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும்.
வலைப்பதிவில் எழுதி அடுத்த கட்ட முயற்சியாக என்ன செய்யப் போகிறேன்? பிரபலமடைந்திருக்கிறேனா? அல்லது பிரபலமானவர்களால் குறிப்பிடப்படும்படியாக ஆகியிருக்கிறேனா? என்றெல்லாம் எதுவும் என்னை நான் இப்போது கேட்டுக்கொள்வதில்லை. ஏனென்றால் எழுத்துக்கு வரும்முன்பு வேறு துறையில் சுமந்துதிரிந்த பிரபலக் கிரிடங்களைக்கூடச் சுக்குநூறாக உடைத்துப்போட்டு என்னைக் காலியாக்கி வைத்துக்கொள்ளவே உதவுகிறது எழுத்து.
இப்போதெல்லாம் எப்போதாவது எப்படியாவது தலைதூக்கிவிடும் கிரீடப் பீடை நினைவுகள் ஒரு அடுக்கில் வந்தாலும் அடுத்த நொடியே மூத்திரச் சட்டியோடு சூத்திரனை நினைத்தழுத கிழவனும் வருகிறார். "எனக்கு மன்னிப்புக் கேட்டு உங்களை யார் மனுபோடச் சொன்னது? என்னைத் தூகிலேற்றட்டும், அதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்" எனச் சொன்ன பகத்சிங்கும், பச்சைக் குழந்தையிடமும் சுதந்திரத்தின் தாகத்தை எழுதிவைத்த போராளித்தாய் இடானியாவும் வருகிறார்கள், மாதவிடாய் ஒழுக ஒழுகக் கட்டிக்கொள்ளவும் துணியற்று ஈழவிடுதலைப் போராளியாய் போலீசிடம் அடிபட்டு, உதைபட்டு, பெண் எனும் முறையிலும், தலித்தாகவும் தான் பட்ட வேதனைகளையும் தாண்டி "மேலைத்தேய வாழ்வு நமது சாதீய, பெண்ணீய அடக்குமுறைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தந்ததாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு "நான் எப்போது அடிமையாக இருந்தேன் விடுதலை பெற? எப்போதும் எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்தே வாழ்கிறேன், இந்த எதிர்ப்பே என் விடுதலை" எனும் புஸ்பரானியும் கூட நினைவின் இன்னொரு அடுக்கில் வந்து நிற்கிறார். அவர்களையெல்லாம் நினைவுகளில் மீட்டு வரும் அப்படியான தருணங்கள் நான் ஒரு வெறும் சருகென்பதை நேர்மையாக எனக்குள்ளேயே பதிவு செய்கின்றன.
"இன்னும் என்னைக் காலியாக்கு, எறும்பினும் சிறிதாகும் எளியளாக்கு" எழுத்தைப் பற்றிச் சொல்லவும், எழுத்திடம் சொல்லவும் இப்போதைக்கு எனக்கு இருப்பது இதுதான்.
நான் யாரையும் அழைக்கவில்லை, விதிமுறைகளைக்கூட ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை. "ஒன்றும் விளங்காததுகளிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால் இப்படித்தான்" என்று முல்லை நீங்கள் பின்னூட்டமிட்டு வாழ்த்த வேண்டுகிறேன்:))
41 Comments:
I enjoyed this post selvanayaki. thanks.
செல்வநாயகி, என்ன சொல்வது..உங்ககிட்டேயிருந்து நான் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கிறது!
/உள்வாங்கியதைப் போலவே வெளித்துப்பி மனதை ஒரு சுயசுத்திகரிப்புச் செய்துகொள்ள முடிந்தது.
/
!!
/"இன்னும் என்னைக் காலியாக்கு, எறும்பினும் சிறிதாகும் எளியளாக்கு" எழுத்தைப் பற்றிச் சொல்லவும், எழுத்திடம் சொல்லவும் இப்போதைக்கு எனக்கு இருப்பது இதுதான்./
என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்,நீங்கள்!
தங்கள் முந்தைய இடுகைகளை வாசித்திருந்தாலும் ஏனோ பின்னூட்டமிட்டதில்லை..நீண்ட நாட்களாக ஒரு சைலன்ட் ரீடராக மட்டுமே கடந்துப் போயிருக்கிறேன், தங்கள் மொழியாளுமையை, எண்ணக்கோர்வையை வியந்தபடி...இன்றும் அதே மலைப்பு என்னுள்!! என் அன்பும், வாழ்த்துகளும்...செல்வநாயகி!!
தங்கள் பணிச்சூழலிலும் இடுகையிட்டதற்கு மிக்க நன்றி!
நீங்க மயக்கமாகறது முன்னாடி கூட நன்றி சொல்லிட்டு மயக்கமாவீங்க....கடந்த பின்னூட்டதில் நன்றி சொல்றதுக்கு மறந்துட்டேன், நான்! :)
//"ஒன்றும் விளங்காததுகளிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால் இப்படித்தான்" என்று முல்லை நீங்கள் பின்னூட்டமிட்டு வாழ்த்த வேண்டுகிறேன்:))//
avvv..என்னை வாழ்த்துபவர்கள் சிநேகிதியை மறக்காமல் வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...ஹிஹி!! :))
சுட சுட போட்டுயிருக்கிங்க போல.!பதிவில் கடந்த பாதை நல்லாயிருக்கு.
செல்வநாயகி,
உங்களின் இந்த பின்
நோக்கிய அசை போடல் நெஞ்சை
கொஞ்சம் கனக்க வைக்கிறது.
சகோதரி உங்கள் பதிவுகள் ஏன் இப்படி என்னை உணர்ச்சிவசப் பட வைக்கின்றன
ஏன் மயிர்கூச்செரிகிறது . ஏன் கண்கள் குளம் கட்ட வைக்கின்றன
எப்போதேனும் தோன்றும் தெரியவில்லை பதில்தான் இப்போதும்
அருமை அல்லது அற்புதம் அல்லது அபாரம் என்பவற்றையே ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமிட முடியுமா?,நீங்களே சொல்லுங்கள்.:))
அதாவது உங்களது ஒவ்வொரு பதிவுமே அற்புதமாகத்தான் இருக்கிறது.உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் படித்துவிட்டு 'மனதிற்குள்ளேயே கைதட்டிச்செல்லும்' பலரில் நானும் ஒருவனாகிவிட்டேன்.
முன்னாள் ஜாலிஜம்பர்
நாயகி,
அது எப்படிங்க, அப்படியே தென்றல் மாதிரி வீச ஆரம்பிச்ச காத்து, கொஞ்சமா திடீர்னு உய்ய்ய்ங்க்னு சத்தத்தோட ஒரு எகிறு எகிறி மேலெழும்பி சுத்த ஆரம்பிக்கிற மாதிரி... வேகமெடுத்து, சொய்ங்க்னு கீழே இறக்கி இன்னுமிருக்குமின்னு எதிர்பார்த்து உட்கார்ந்திருக்க சுற்றின ராட்டினத்திலருந்து கீழே இறங்குகப்பா முடிஞ்சிருச்சுன்னு அடிச்சு இறக்கி விடுகிற மாதிரி கீழே பிடிச்சு தள்ளி விட்டு முடிக்கிறீங்க :) ...
என்னது தருமி பேத்தி கொடுத்த பட்டயத்தை ஏத்துக்கிடலையா ... :=0
//இதில் உலகத்தில் நானறியாத மூலையிலிருந்து அனானியாக வருபவர்களில் இருந்து, ஈழத்தமிழ்ச்சாவு குறித்த, உதவி கேட்ட என்இடுகையொன்றில் "நீ எழுதிய கருத்துக்கள் சிலதால் என் புகழ் அழிந்துவிட்டது, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்" என்கிற ரீதியில் எனக்கு மட்டுமின்றி, என் வாழ்க்கைத் துணைவருக்கும் 'தனிமனித, கருத்து சுதந்திரத்திற்குக் குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கிவருகிற ஒரு நாட்டிலிருந்துகொண்டே தாதாத்தன மிரட்டல் விட்ட உள்ளூர்த்தமிழன் வரை சுவாரசியம் சேர்க்கிற இவர்கள் உண்மையில் மனவலிமையைக் கூட்டுபவர்களாயும் இருக்கிறார்கள்.//
அம்மாடி எவ்வளோ பெரிய வாக்கியம்.
//"ஒன்றும் விளங்காததுகளிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால் இப்படித்தான்" என்று முல்லை நீங்கள் பின்னூட்டமிட்டு வாழ்த்த வேண்டுகிறேன்:))//
நானும் உங்க மாதிரிதான். நிறைய பேர் தொடர்னாலே ஓடிப்போகறாங்களே. நானும் யாரையும் கூப்பிடவே இல்லை. :)
வணக்கம் நலமா ?
\\அதற்கேற்றாற்போல் அப்போது பெண்களுக்கான ஒரு கூட்டு வலைப்பதிவை உருவாக்கியிருந்த மதிகந்தசாமியின் அழைப்பின்பேரில் அங்கே எழுத ஆரம்பித்ததும் தனிப்பதிவிற்கான தேவையைக் குறைத்தன.\\
அந்தநாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே:)
கனநாள் உங்கள் எழுத்துக்கள் வாசிக்கவில்லை. விடுபட்டதெல்லாம் படிக்கவேணும்.
யாருப்பா சினேகிதிக்கு வாழ்த்துச்சொல்றது? வாங்கோ வாங்கோ எல்லாரும் வந்து வாழ்த்துங்கோ:)
செல்வநாயகி
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பூவில் உங்கள் பதிவை வாசித்த இந்த தருணத்தில் மறுபடியும் எழுத வேண்டுமென்ற ஆவல் முகிழ்த்தெழுகிறது. தொடுப்பு அனுப்பிய `சினேகிதி' க்கு மிக்க நன்றி. எனது நினைவலைகள் சரியானதென்றால் , நீங்கள் தாராபுரம் சார்ந்த செல்வநாயகி தானே?என்றென்றும் அன்புடன்
தாணு
தங்கமணி, சந்தனமுல்லை, கோபிநாத், கோமதி அரசு, நேசமித்ரன்,சாலிசம்பர், தெக்கிக்காட்டான், சின்ன அம்மிணி, சென்ஷி, சினேகிதி, தாணு (ஆம் நான் அதே செல்வநாயகிதான்),
உங்கள் அனைவரின் வருகைக்கும், அன்புக்கும் நன்றி.
செல்வநாயகி,
கோபமோ, தாபமோ, சோகமோ, சந்தோசமோ எதைத்தான் நீங்கள் பத்தியாக எழுதினாலும்,
படித்து முடித்த கணத்தில் மறந்து விட முடியாமல் காலாகாலத்துக்கும் நினைவுகளுக்குள் புரண்டெழும் வசீகரம் உங்கள் வார்த்தைத் தொடுப்புகளில்.
தொடங்கினால் அரைகுறையில் விட்டுப் போகமுடியாத ஏதோ ஒரு ஈர்ப்பு உங்கள் வரிவடிவங்களில்.
சந்திரவதனா,
சிநேகிதி, தாணு, நீங்களெல்லாம் "தோழியர்" நினைவுகளைத் திரும்பவும் கொண்டுவருகிறீர்கள். நன்றி.
பாறை மனசின் ஈரம் எத்தகையது என உங்கள் பல பதிவுகளில் உணர்ந்திருக்கிறேன்.
எல்லாப் பதிவுகளிலும் வாசிப்பவனின் மனதில் ஒரு கனத்தை இடம்பெயரச்செய்யும் எழுத்துகள் உங்களுடையது. பலநேரம் என்னை மவுனமாக்கியிருக்கிறது உங்கள் மொழியின் அடர்த்தி. இப்பவும் இன்னெதென்று வரையிறுத்திடாத அழுத்தம் படர்ந்த மனநிலையைத் தரும் எழுத்தாளுமை.
உங்கள் எழுத்துகள் ஏற்படுத்திய தாக்கத்தினை முழுமையாகச் சொல்லவியலாத வார்த்தைப் பற்றாக்குறையுடன் கடந்ததை பதிவு செய்கிறேன்
முத்துக்குமரன்,
என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை. வெறும் சாதாரணமானவளின் சில உணர்வுகள், அவ்வளவே. ஒத்த அலைவரிசைகளின் பிணைப்பால் உருவாகும் தோழமைதான் இங்கே நீங்களும், மற்ற நண்பர்களும் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். நன்றி.
கனமான பதிவு.
//வாசித்ததால் தூக்கம் இழந்து யோசிக்க வைத்தவை நிறைய. //
ஓ! அப்படி பதிவுகளும் உள்ளனவா?
தருமி,
இருக்கின்றனவா? என்ற கேள்விக்குப் பதில் அவ்வளவு மகிழ்வாய் இல்லைதான்.
ஆனால் இருந்தனவே ஒருகாலத்தில்.
இரசித்தேன் இரசித்தேன்...பிரபலக் கிரீடம்....
”A celebrity is a person who works hard all his life to become well known, then wears dark glasses to avoid being recognized - Fred Allen ”
///”A celebrity is a person who works hard all his life to become well known, then wears dark glasses to avoid being recognized - Fred Allen ///
:))
//உண்மையான நண்பர்கள் ஆறுவருட எழுத்துப் பழக்கத்தின் பின்னும் என் தொலைபேசி எண்ணைக்கூடத் தெரிந்து கொள்ளாமலும், ஒருமுறைகூட அரட்டையடிக்காமலும், இன்னமும் நண்பர்களாகவே ஆத்மார்த்தமானவர்களாய் இருக்கிறார்கள்.
//
அதே அதே :-)
பாலராஜன் கீதா,
பதிவுலகம் மட்டுமின்றிப் பலவிடங்களிலும் நட்பின் இலக்கணம் இதுதான் போலும்:))
மிரட்டுகிறது எழுத்து :)
ம்ம்...
நல்லா எழுதிருக்கீங்க...
அருமையான இடுகை.
வாழ்த்துக்கள்!
ரௌத்ரன், தமிழன் கறுப்பி, அன்புடன் அருணா, ராமலட்சுமி,
உங்களின் மறுமொழிகளுக்கு நன்றி.
எழுத்தின் கச்சிதமும்,நேசிப்பும்,நேர்மையும்,பதிகிற தைரியமும் அசத்துகிறது செல்வநாயகி.இதை வாசிக்கிரதெப்போதும்(உங்கள் எழுத்துக்களை எல்லாம்)பால்யத்தில் அப்பா சட்டையை போட்டுக்கொண்ட டொம்மா,டொம்மா உணர வாய்க்கிறது என் எழுத்துக்களில்,அல்லது எழுதியதற்க்கதிகமான என் பேச்சுக்களிலும்.ரொம்ப நல்ல பதிவு இது செல்வநாயகி.
ராஜாராம்,
உங்கள் அன்புக்கு நன்றி.
அழகா எழுதியிருக்கீங்க மேடம்
உங்களின் பதிவுகளை படிக்க படிக்க உங்களின் மீதான மரியாதை ஒரு படி கூடிக்கொண்டே போகிறது.
அமிர்தவர்ஷினி அம்மா,
அன்புக்கு நன்றி.
செல்வநாயகி,
பதிவில் பணிவும் அனுபவமும் இருக்கிற அதேநேரத்தில் ஏதோ ஒரு சலிப்பும், விரக்தியும் இழையோடுகிறதே? பயணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் திசை பற்றிய பிரச்சினையா? உதவ விரும்புகிறோம். இதனால் வினவு தனது கட்சிக்கு ஆள்பிடிக்க முனைகிறது என நீங்கள் எண்ணமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்
வினவு,
கடந்தவைகளைப் பற்றிய நினைவுகூறலே இது. கடக்கவிடாமல் தடுத்தவைகள் குறித்த ஆயாசம், கடந்து முடித்தவைகள் குறித்த ஆசுவாசம் இரண்டின் கூட்டுக்கலவையே இது. ஆனாலும் இவையெல்லாம் சலிப்பையோ, விரக்தியையோ ஏற்படுத்திப் பயணிப்பதிலிருந்து பின்வாங்கச் செய்வதில்லை ஒருபோதும். மாறாகப் பல புதிய தெளிவுகளை வழங்கியே நகர்கின்றன. என்னுடைய இந்தப் பகிர்வு வாசிப்போருக்கு எப்படியான புரிதலையும் தரலாம். அப்படியே உங்களுக்கு ஒரு புரிதலைத் தந்திருக்கிறது. அதை மாற்றி நீங்கள் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என நான் சொல்லப்போவதில்லை:))
சக பயணி ஒருவரைப் பரிவோடு விசாரித்து உதவ விரும்புவது உங்கள் அன்பைச் சொல்கிறது. அதற்கு நன்றி. மற்றபடி வினவு ஆள்சேர்ப்பு வேலைகள் செய்வதாக நான் நினைக்கவில்லை. இச்சமூகத்தில் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், சுரண்டிப் பிழைப்பவர்கள் போன்றவர்கள் எல்லாம் ஆள்சேர்ப்பு வேலைகள் செய்து வரும்போது பல நல்ல சமூக விழிப்புணர்வு எழுத்துக்களை முன்னெடுத்து வரும் வினவு அப்படியொரு ஆள்சேர்ப்பு வேலையே செய்தாலும்கூட நான் அதைத் தவறெனக் கருத மாட்டேன்:))
ஆறுக்கு காலநிலையால் நிலை வேறுபடுவதுமாதிரி நீங்க பாறையா உறைஞ்சிருந்தப்ப கேட்ட பதிவு வரலைன்னாலும் இளகிய நீரோடையா இருந்தப்ப இந்த பதிவு வந்துடுச்சு போல..:)).
கவிதைத்தன்னைத்தானே எழுதறாப்ல பதிவும் தன்னைத்தானே எழுத ஆரம்பிச்சிடுச்சோ இல்லாட்டி.. :)
http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html
Please accept this gift from me with deep appreciation for your blog.
-vidhya
உங்கள் மின்னஞ்சல் பெட்டியைத்திறந்து பார்க்கவும்
எப்போதும் செல்வநாயகியின் எழுத்துக்கள் தனித்துவம் பெற்றே ஒளிரும் அதிசயத்தை எங்கு சென்று நான் கண்டுபிடிப்பது?
என்ன மாதிரியான வார்த்தைகள் இவை. இதற்குள் எப்படி இத்தனை அடர்த்தி. ஏன் ஒவ்வொன்றும் நூறு அர்த்தங்களை சொல்லுகின்றன.
இந்த பொருளை கூட இவ்வளவு நெகிழ்ச்சியாய் சொல்ல முடியுமா? சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
http://blog.nandhaonline.com
பின்னூட்டங்கள் எழுதுவதை புகழ்வதாகவே அல்லது பாராட்டுபவையாக இருக்கின்றன. பதிவின் உள்ளடக்கம் குறித்து விமர்சனமாக ஆரோக்கியமாக இருந்தால் நல்லது.
மற்ற பதிவர்களின் பதிவுகளிலும் இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் இடப்படுகின்றன. அதையே இங்கும் தொடர்கிறார்கள். உங்கள் பதிவின் வாசகர்களையாவது ஆரோக்கியமாக பின்னூட்டமிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்.
nerththiyaa irukku...
Post a Comment
<< Home