நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, August 07, 2009

காடு வாவாங்குது, ஊடு போபோங்குது.......அய்யன் க‌தை 2"சாலை" ன்னு பொதுவாச் சொன்னா நாம அதை என்னம்போம்? "தெரு", "வீதி", "ரோடு" இதுல எதோ ஒன்னு. ஆனா நம்மூருல "சாலை" ங்கற சொல் தோட்டங் காடுகள்ல மண்சுவரு இல்லன்னா அதுகூட இல்லாம நாலு பனந்தப்பைய வெச்சு முட்டுக் கொடுத்து மேல்கூரைக்கு ஓலை போட்டு வேஞ்சிருக்கற ஒரு தங்குமிடத்தைக் குறிக்கும். காடே வேலையாப் போன சனத்துக்கு ஊருக்குள்ள ஒரு ஓட்டு ஊடு இருக்குமின்னாலும் மண்ணுலயே மனசையும், உசிரையும் வெச்சுப் பாடுபடற பகல்பொழுது பூராவும் சித்த தலையச் சாச்சுக்க, சோறு, தண்ணி உங்க இந்தச் "சாலை" தான் கதி. ராத்திரிக்குங்கூடத் தண்ணி பாச்ச, தட்டுப் புடுங்க, மாடோ, எருமையோ கன்னுப்போடறதுன்னு சிலசமயம் இங்கயே இருந்துடறதுதான் அவங்க பொழப்பு. இன்னுஞ்சிலபேருக்கு ஊடுங்கறதே சாலை மட்டுமாக்கூடப் போறதும் உண்டு. பாம்பு, பூரான், தேளுன்னு சகல சந்துக்களும் சாலையில இவங்ககூட‌ ஒன்னாப் படுத்து உசிருக்கே ஒலைவெக்கிற‌ கதைகளும்
நடக்கறதுதான்.

இந்தச் "சாலை"க் கதையை எதுக்குச் சொல்றன்னா, அந்தப் பகுதி ஊருகள்ல "மாரிமுத்து சாலைக்கு எப்படிப் போறதுங்க?" ன்னு புதுசா வார ஏவாரிகீது(வியாபாரி) யாராச்சும் கேட்டா "இப்படியே இந்த இட்டாலில (இட்டேரி) போனீங்கன்னா கொரங்காடு ஒன்னு வரும்ங்க, அதத்தாண்டுனா ஒரு பெரிய வேலாமரமொன்னு வரும், ஆடு அங்க நின்னுதுன்னா அய்யன் ஒருத்தரு நிப்பாரு, அவரக் கேளுங்க சாலையக் காட்டுவாரு, அவரு மகந்தானுங்க மாரிமுத்து" ன்னு வழி காட்டுவாங்க. இப்படி வேலாமரம், வேப்பமரம்னு அங்கங்க சிலதுக்கு "அடையாளங்களா" "முகவரிகளா" மாறிப் போறதத் தவிர பெரிசா ஒன்னுமில்லாதவங்கதான் "அய்யன்கள்". ஒன்னுமில்லைன்னு நான் சொல்றது குடும்பத்துல "அதிகாரம்", "உரிமை" "வசதி" ன்னு ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்ப‌றம் அவங்க எதையும் சுமக்கறதில்லை. எல்லாத்தையும் பசங்க கையில ஒப்படைச்சுட்டு, எடுபடற வரைக்கும் மக்களுக்கு ஒத்தாசையா சின்னச் சின்ன வேலைகள் செஞ்சிக்கிட்டுக் காலத்தை ஓட்டறதுதான். சில அய்யன்கள் ரோசங்கொறையாம "அவங்கிட்டென்ன நாங் கேக்கறது?" ன்னு மவனுக்கே எல்லாங் கொடுக்காமத் தனியா இத்தனவலக்(இத்துனூண்டு அகல) காட்டை வெச்சுக்கிட்டுப் பாடுபட்டுக்கிட்டிருக்கறதும் நடக்கும்.

நம்ம மேக்காலூட்டு அய்யனுக்கு அப்படி ரோசமெல்லாம் இல்லை. ரெண்டு மகளுகளையும் தன்னால முடிஞ்சதை செஞ்சு கரையேத்துனப்புறம் மண்ணை மவனுக்குக் கொடுத்துட்டுக் கூடவே இருந்துக்கிட்டாரு. மாமியார்க்காரியும் போய்ச்சேந்த பொறவு மருமவ அய்யனுக்கு அட்டாலி வள‌த்திக்கு மரியாதை குடுக்கறதில்லைன்னாலும், "த்தூ" ன்னு தூக்கி எறியறதில்லை. பேரன் பெருசானதுல இருந்து அய்யனுக்கு அவந்தான் பேச்சுத்தொணை, மத்தவங்களுக்கெல்லாம் அவங்கவங்க சோலி அந்த ஊட்டுல. 'ராசு' தான் அய்யனோட பேரன். அவ‌னுக்கு வச்சது கொலதெய்வத்துப் பேருன்னாலும் கூப்படறது 'ராசு' தான். இந்தமாதிரி ஊடூட்டுக்கு ஒரு 'ராசு' வேற இருப்பாங்கன்னு வைங்க. கொங்குப் பக்கத்துக் கிராமங்கள்ல இந்த 'ராசுகள்' எப்படி வந்திருப்பாங்கன்னு யாருக்குந்தெரியாம சின்னவயசிலயே நான் ஆராய்ச்சி பண்ணிப் பாத்துட்டு இருந்தேன். "அரசனாட்டமா வாழுவான்னு ஆசப்பட்டுக்கிட்டு அரசனுக்கு இன்னொரு பேரான 'ராசா'வை வெச்சுக் கூப்படனும்னு நெனச்சசிருப்பாங்க. அதச் சரியாக் கூப்படக் கத்துக்கக்கூடக் கல்வி வாசனை கெடைக்கக் கொடுத்து வைக்காத நம்ம பாட்டனுக வாயில அது 'ராசு'வா மாறிப்போயிருக்கும்" அப்படீங்கறதுதான் என்னோட ஆராய்ச்சி முடிவு. சரி அது எதுக்கு இப்ப? ந‌ம‌க்கு இப்ப‌க் க‌தை மேக்காலூட்டு ராசும், அய்ய‌னும்தான்.


ராசு ப‌ள்ளிகொட‌த்துல‌ இருந்து வ‌ந்த‌தீமே அய்ய‌ங்கிட்ட‌த்தான் வ‌ருவான். ப‌ள்ளிக்கொட‌த்துல‌ யாருக்கும் யாருக்கும் ச‌ண்டை வ‌ந்த‌து, வாத்தியார் யாரை அடிச்சாரு, க‌டையில‌ என்ன‌ வாங்கித் தின்ன‌துன்னு சொல்ற‌துக்கு ராசுகிட்ட‌ நெறைய‌வே க‌தைக‌ இருக்கும். அய்ய‌னுக்கும் ஆடு குட்டி போட்ட‌துல‌ இருந்து, போட‌ற‌துக்குப் பொகையிலை தீந்து போன‌துவ‌ரைக்கும் ராசுக்குச் சொல்ற‌துக்கும் விச‌ய‌ம் இல்லாம‌ப் போவாது.

ர‌வைச்(இரவு) சாப்பாடுகூட‌ ஊட்டுல‌ ஒன்னா உக்காந்து சாப்ப‌ட‌ற‌து அய்ய‌னும் ராசும்தான். நொங்கு வெட்டிக் கொடுக்கற‌து, எல‌ந்த‌ப் ப‌ழ‌ம் பொறுக்கி ம‌டியில‌ க‌ட்டி வெச்சிருந்து கொடுக்க‌ற‌து, எள‌நீர் சீவிக் கொடுக்க‌ற‌துன்னு ராசுக்கு அய்ய‌னோட‌ சேவையும், ப‌திலுக்கு அய்ய‌னுக்கு வெத்த‌லை எடுத்தாந்து குடுக்க‌ற‌து, முதுகு வ‌லிக்க‌ற‌ப்ப‌ மேல‌ ஏறி முதிக்க‌ற‌துன்னு ராசுவோட‌ சேவையும் ந‌ட‌க்கும். லீவுக்கு மகளுக ஊட்டுப் பேரனுக வந்தாலுங்கூட ராசு மவன் வயித்துப் பேரனுங்கற கூடுதல் பாசம் அய்யனுக்கு. எப்பவுமே ராசுவ உட்டுக்கொடுத்து ஒருவார்த்தை பேசாது அய்யன். பெரிய மக ஊட்டுப் பேரன் கொஞ்சம் மூத்தவன்ங்கறதால "இப்பிடியே ராசுவத் தூக்கித் தலைமேல வெச்சுக்கிட்டுருங்க நாங்க இனி இங்க வரவேயில்லை"ன்னு அய்ய‌னோட சமமில்லாத பாசத்தைக் குத்தஞ்சொன்னாலுங்கூட அவங்களுக்கு ஒரு கதைய எடுத்து உட்டுடும் அய்யன். "அந்தக்காலத்துல என்னை மாதிரி ஒரு அய்யந்தான் மகம் பேரனையும்,(மகன் வழிப் பேரன்)மகபேரனையும்(மகள்வழிப் பேரன்) தூக்கிக்கிட்டுக் காட்டுக்குப் போனாராமா, அப்ப மக பேரன் சொன்னானாமா 'அய்யா உங்க மாடு வருது' ன்னு,ஆனா மகம்பேரன் சொன்னானாமா 'அய்யா நம்ம மாடு வருது' ன்னு. அது காலங்கலாமா அப்படியே ஆயிட்டுது" ன்னு சொல்லித் தன்னோட பக்கத்தை நிலைநாட்டீருவாரு அய்யன். கால‌ம் இப்ப‌டியேவா போகுது? எற‌க்கை மொள‌ச்ச‌ குஞ்சு கூட்டை உட்டுப் ப‌ற‌க்க‌ற‌ மாதிரி ராசுவுக்கு அடுத்த‌டுத்த‌ வ‌குப்புக்குப் போய் மேல்ப்ப‌ள்ளிக்கூட‌மெல்லாம் போகையில‌ சோட்டாளுக‌ சாவுகாச‌ம்,(சகவாசம்) சினிமா, பாட்டுன்னு ம‌ன‌சு மாற‌மாற‌ அய்ய‌ங்கூட‌ப் பேச்சுக் கொறைஞ்சுதான் போச்சு.

ராசு அப்ப‌டி ஆயிட்டாலுங்கூட‌ அய்ய‌ன் ம‌ன‌சுல‌ ராசு எட‌ம் மாற‌வா போறான்? "எங்கூட்டு மைன‌ருக்கு இப்பெல்லாம் சோலி கூடிப்போச்சு, உக்காந்து பேச‌ நேர‌ம் எங்கிருக்குது" ன்னு வாரவ‌ங்க‌, போற‌வ‌ங்க‌கிட்ட‌ப் பெருமை பேசிக்குவாரு. ராசுக்கு அய்ய‌ன்கூட‌ ம‌ட்டுமா பேச்சுக் கொறைஞ்சு போச்சு? தாய் த‌க‌ப்ப‌ங்கூட‌வுமே அப்ப‌டியாக‌ற‌ வ‌ய‌சாப்போச்சு. ஊட்டு நெறையாச் ச‌ன‌ம் இருந்தாலுமே மீசை வர்ற‌ வ‌ய‌சுல‌ ப‌ச‌ங்க‌ நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ மாதிரி ஒட்டாம‌த் திரிய‌ற‌தாச்சு. பெத்த‌ அப்ப‌னும், அம்மாலுங்கூட‌ அதுக்கேத்த‌ அனுச‌ர‌ணையாவா எல்லா ஊட்டுல‌யும் இருந்துட‌றாங்க‌? எங்க‌ கெட்டுப் போயிருவானோன்னு க‌ண்ணுக்குத் தெரியாத‌ க‌டிவாள‌மும் கையுமா ப‌ச‌ங்க‌கிட்ட‌ நிக்க‌ற‌தாச்சு. ராசு ஊட்டுல‌யும் அப்ப‌டித்தான்னு வைங்க‌. தாந்தாம் ப‌டிக்க‌லை, ம‌க‌னாவ‌து ப‌டிக்க‌ட்டும்னு மாட்ட‌ வித்துக் க‌ன்ன‌ வித்துப் பைய‌ன் ப‌டிப்புக்குச் செல‌வு ப‌ண்ண‌த் த‌யாரா இருந்தாலும் ப‌ய‌னோட‌ ரொம்ப‌க் க‌றாருதான் அப்ப‌ங்கார‌ன். அய்ய‌னுக்கு அப்ப‌டியாகுமா என்ன‌? ராசு மேல‌ அதோட‌ பாச‌ம் என்னைக்கும் வ‌த்தாக் கெண‌றுதான்.

ராசு எப்ப‌டியாவ‌து எஞ்சினீரிங் ப‌டிச்சாகோனும்னு ப‌ன்ன‌ண்டாவ‌து பெரிய‌ ப‌ரிச்சைக்கு வெடிய‌ வெடியாப் ப‌டிச்சுக்கிட்டு இருந்தான். எல்லாருந் தூங்குன‌ பொற‌வும் சின்னாசார‌த்துல‌ லைட்ட‌ப் போட்டுக்கிட்டு இரும்புச் சேர்ல‌ உக்காந்து ப‌டிச்சிட்டுக்கிட்டிருப்பான். அப்ப‌ன், அம்மாவெல்லாம் கைகால் அச‌ரிக்கையில‌ (சோர்வுல‌) ப‌டுத்தா எந்திரிக்க‌ மாட்டாங்க‌. வெளிவாச‌ல்ல‌ க‌ட்ட‌ல‌ப் போட்டுப் ப‌டுத்திருக்க‌ற‌ அய்ய‌ந்தான் ரெண்டு மூனு த‌ர‌க்கா ஒன்னுக்குப் போக‌ எந்திரிக்க‌ற‌மாதிரி எந்திரிச்சுட்டு உள்ள‌ எட்டிப் பாத்து "சாம‌ம் ஆகிப்போச்சாட்ட‌ இருக்குது ராசு, மீனே வந்துருச்சு (இது ஒரு குறிப்பிட்ட திசையில் தோன்றும் நட்சத்திரம்), தூங்கு போ, வெடிய‌க்கால‌ நேரமே எழுப்பி உட‌ற‌ம்போ, வெடியால படிச்சாத்தேன் மண்டையிலயும் ஏறும், சும்மாவா சொன்னாங்க பொழைக்கறவன் பொழுதோட தூங்குவான் கூறுகெடறவன் கோழிகோப்புடத் தூங்குவான்னு" இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டிருப்பாரு. "அவ‌னெப்ப‌டியோ அவ‌ஞ்ச‌வுரீத்துக்குப் ப‌டிச்சிட்டுப் போறான், நீங்க‌ளுமா போய்ப் ப‌ரீச்சை எழுத‌றீங்க‌? போய்ப் ப‌டுங்க‌, சும்மா தொண்ணந்தொண்ணன்னு, தூங்கறவனயும் தூங்க உடாம‌" இது அய்ய‌னோட‌ ம‌வ‌ன். அய்ய‌ன‌ வார்த்த‌ பேச‌ற‌துக்க‌ள‌வா (திட்ட‌ற‌துக்கு) பெச்சீட்ட‌த் தொற‌ந்துட்டு மூடிக்குவாரு அய்யன் மவன். "சேரிச்சேரி கெழ‌வ‌ம் பேச்சு கிண்ணார‌க்கார‌னுக்கேறுமா?" ன்னு ராச‌ப்பாத்துச் சொல்லுவாரோ இல்லை த‌ன் ம‌வ‌னுக்குச் சொல்லுவாரோ சொல்லீட்டு அய்ய‌னும் போய்த் தூங்கீருவாரு.


ராசு எப்ப‌த் தூங்குவானோ தெரியாது, காலைல‌ எந்திரிக்க‌வே முடியாம‌ க‌ண்ணுல‌ ஒரே எரிச்ச‌லா இருக்கும். சுத்தீமு எல்லாரும் பேச‌ற‌து கேட்டாலும் உன்ன‌ஞ் சித்தே ப‌டுத்துக்க‌லாமுன்னு ப‌டுத்திருப்பான்.
பொழுதோட‌ வ‌ராத க‌னிஞ்ச‌ சொல்லா அப்ப‌னுக்குக் காலைல‌ வ‌ர‌ப்போவ‌து? ம‌ன‌சுல‌ பாச‌ம் இருந்தாலும் வார்த்தைல‌ வெண்ணை பூச‌த் தெரிஞ்சா அவ‌ங்க‌ பொழ‌ப்பெல்லாம் ஏன் இப்ப‌டி இருக்க‌ப்போவுது? "எந்திரீடா ராசு, ம‌ணி ஏழாவுது, மேக்க‌ போன‌ ப‌ஸ்சு கெழ‌க்க‌ வார‌துக்குள்ள‌ கெள‌ம்போனும‌ல்ல‌? இப்ப‌டித் தூங்கியாடா நீ போய்ப் ப‌ரீச்சை எழுத‌ப் போறே?" ன்னு வ‌ழ‌க்க‌ம்போல‌ பேசீட்டு வேலைய‌ப் பாக்க‌ப் போயிருவாரு அப்ப‌ன். அய்ய‌ந்த்தான் காலைல‌யும் ராசு கால்மாட்டுல‌ நின்னுக்கிட்டு "ராசு, எந்திரிடா சாமி, சைக்கிள‌த் தொட‌ச்சு வெச்சிருக்க‌றேன், அழுத்திக்கிட்டுப் போனாத்தான‌ கெழ‌க்க‌ வார‌ ப‌ஸ்ச‌ப் புடிக்க‌ச் செரியா இருக்கும்?" னு சொல்லிக்கிட்டிருக்கும்.


ஆச்சு, ந‌ம்ம‌ ராசுவும் காலேஜு முடிச்சு,எஞ்சீனீர் ஆவி, நல்ல வேலையும் கெடைச்சு, வெளிநாட்டுக்கும் வ‌ந்தாச்சு. அய்ய‌ன் என்ன‌ ஆனாருங்க‌றீங்க‌ளா? இன்னமும் க‌த‌ர்க்க‌டைப் பெச்சிட்டு ஒன்ன‌ப் போத்திக்கிட்டு அதேமாதிரி ஒரு க‌ட்ட‌ல்ல‌ ப‌டுத்துக்கிட்டுத்தான் இருக்க‌றாரு. எப்ப‌வாவ‌து ந‌ம்ம‌ ராசுகூட‌ போன்ல‌ ஒரு ப‌ழ‌மை பேசுவாரு. அதுங்கூட‌ அப்ப‌ங்கார‌ரு ப‌க்க‌த்துல‌ மொழிபெய‌ர்ப்பு வேலை செய்யோனும். காது கேக்காத‌ அய்ய‌னுக்கு ராசு சொல்ற‌து புரியுமான்னு தெரியாது. ஆனா அய்ய‌ஞ் சொல்ற‌து எல்லாருக்குமே புரியும், ஏன்னா அவ‌ரு இப்பெல்லாம் ஒன்னையேதான‌ திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்காரு? "என‌க்கென்ன‌ சாமி? காடு(சுடுகாடு) வாவாங்குது, ஊடு போபோங்குது. நீங்கெல்லா ந‌ல்லா இருந்தீங்க‌ன்னாச் ச‌ரி". இப்ப‌டி எத்த‌னை ராசுக்க‌ளோ? எத்த‌னை அய்ய‌ன்க‌ளோ? சீமையுட்டுச் சீமை வாழுற‌ ராசுக்க‌ளையும், செங்காட்டுச் சீமைய‌றிஞ்ச‌ அய்ய‌ன்க‌ளையும் இன்ன‌மும் எணைச்சுக்கிட்டிருக்க‌ற‌து "ஒற‌வு"ங்க‌ற‌ மூனெழுத்துத்தானே?

36 Comments:

At 1:37 AM, August 07, 2009, Blogger பழமைபேசி said...

’சாளை’ன்னு மாத்தோணுமிங்க...

 
At 1:40 AM, August 07, 2009, Blogger பழமைபேசி said...

வெடிஞ்சதுமு வந்து படிக்கிறனுங்க நானு...

 
At 2:25 AM, August 07, 2009, Blogger திகழ்மிளிர் said...

அது எல்லாம் ஒரு காலம்

 
At 2:35 AM, August 07, 2009, Blogger திகழ்மிளிர் said...

அய்யன் என்ற உடன்
பழைய நினைவிற்கு அழைத்துச் சென்று வீட்டீர்கள்

உடன் இல்லாவிட்டாலும்
உதடுகள் உச்சரித்த உறவுகள்

இடுகையைப் படிக்க படிக்க‌
இதயம் என்னமோ செய்கிறது.

 
At 3:01 AM, August 07, 2009, Blogger செந்தில் said...

//சாலை//

அக்கா அது சாலை இல்லீங்க சாளை இது சரியானு நீங்க தான் சொல்லோனும் என்துருங்க நீங்க

 
At 3:01 AM, August 07, 2009, Blogger செந்தில் said...

அக்கா அது சாலை இல்லீங்க சாளை இது சரியானு நீங்க தான் சொல்லோனும் என்துருங்க நீங்க

 
At 3:06 AM, August 07, 2009, Blogger செந்தில் said...

உங்க எழுத்து நடை நெகிழ வைக்குது போங்க.என்னோட பழைய ஞாபகங்கள் அல்லாத்தையும் நினைவு படுத்துது செல்வநாயகி அக்கா போன்றவர்கள் வரவால் மெல்லத் தமிழ் இனி வாழும் கொங்கு வட்டார இலக்கியமும் தழைக்கும்

 
At 4:53 AM, August 07, 2009, Blogger வல்லிசிம்ஹன் said...

செல்வா,மண்மணம் வீசும் அய்யன்.

ஒருசெம்மை ஓவியம் கையில் தடியோடு,கண்ணில் ஒளியோடு பேரனுக்காகக் காத்திருப்பது போல உருக்கம்.
என்றோ மறைந்துவிட்ட, என் பாட்டிகளும் தாத்தாக்களும் வந்து போனார்கள். மிகுந்த நன்றி.

 
At 6:48 AM, August 07, 2009, Blogger நேசமித்ரன் said...

செல்வ நாயகி

ஆத்தா எங்க ஆத்தா இருக்குற . நீ இருக்குற தெசஎதுன்னு தெரீல
ஆனா நல்லா இரு சாமி . கண்ணு ரெண்டும் பனிச்சுப் போச்சு தாயி
நானும் அப்பிடி ஒரு ராசுதேன்.வேறேதும் எழுத முடியில .

 
At 8:50 AM, August 07, 2009, Blogger பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...திசை சொல்லுங்க செல்வநாயகி. திசை நோக்கி கும்பிடனும் எனக்கு!.

 
At 3:04 PM, August 07, 2009, Blogger செல்வநாயகி said...

பழமைபேசி,
எழுத்துப்பிழையைச் சுட்டியமைக்கு நன்றி. வெடிஞ்சதும் மறுக்காவும் படிச்சீங்களா:)) ஏனோ பிளாக்கர் கொஞ்சம் தகராறு பண்ணிக்கிட்டு இருக்கு. பிழை திருத்தம் இன்னும் செய்யமுடியலை. ஆற அமர முயல்கிறேன். பொறுத்தருள்க:))

திகழ்மிளிர்,(பெயர் அழகு)
///உடன் இல்லாவிட்டாலும்
உதடுகள் உச்சரித்த உறவுகள் ///

இப்போதெல்லாம் பல உறவுகளும்கூட அப்படித்தான் ஆகிக்கொண்டு வருகின்றன:((

செந்தில்,
கோயமுத்தூர்ல இருந்து வந்துருக்கீங்க. மகிழ்ச்சி. நான் ஈரோடு, கோயமுத்தூர் ரெண்டையுமே என்னோட ஊருன்னு சொல்லிக்கறது:))

///செல்வநாயகி அக்கா போன்றவர்கள் வரவால் மெல்லத் தமிழ் இனி வாழும் கொங்கு வட்டார இலக்கியமும் தழைக்கும்////

பாருங்க, சாளை சாளையா சுத்திக்கிட்டிருந்த காலுதான், ஆனா இப்பச் "சாளை" யக்கூட ஒழுங்கா எழுதத் தெரியலை எனக்கு. என்னால தமிழ், கொங்கு இலக்கியமெல்லாம் வாழும்னு சொல்றீங்களே, ரொம்ப நல்லவங்களா இருக்கறீங்க செந்தில் நீங்க:))

வல்லிம்மா,
முடிந்தவரை அய்யனை ஒரு ஓவியமாய்ச் சிறைபிடிக்க முடியுமா என்று ஒரு ஏக்க முயற்சிதான் இது. ஆனால் என் எழுத்துக்களை, நினைவுகளை வைத்துக்கொண்டு அது சமுத்திரம் குடிக்க விரும்பும் பூனையின் ஆசைதான், வருகைக்கு நன்றி.

நேசமித்ரன், ராஜாராம்,
ரெண்டுபேரும் திசையெல்லாம் கேட்டு இப்படிக் கலாட்டா பண்ணிங்கன்னா என்ன பண்றது:))உங்களின் வாசிப்புக்கும், அன்புக்கும் நன்றி.

 
At 4:47 PM, August 07, 2009, Blogger பதி said...

இந்த இடுகை, பல ஊர் பெருசுகளின் நினைவுகளை மீட்டெடுத்தது.

அது சரி, அய்யங்களைப் பத்தி மட்டும் தான் எழுதப் போறீங்களா??? அப்பத்தாங்களைப் பத்தியெல்லாம் எழுதப் போறதில்லையா???

 
At 8:22 PM, August 07, 2009, Blogger சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா இருக்குங்க செல்வநாயகி. நேற்று இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். எனக்கு தாத்தா இல்லை..ரெண்டு சைடிலேயும்..ஆனா, ராசுவும் அவங்க அய்யனுக்கும் இருக்கற அதே பந்தம் தான் எனக்கும் எங்க ஆயாவுக்கும்! எங்க ஆயாவைத்தான் நினைச்சுக்கிட்டேன்! ரொம்ப நல்ல இடுகை! நெகிழ்ச்சியா இருந்தது!

 
At 9:07 PM, August 07, 2009, Blogger பழமைபேசி said...

//அப்ப மக பேரன் சொன்னானாமா 'அய்யா உங்க மாடு வருது' ன்னு//

அப்பிச்சின்னுதான சொல்லி இருக்கணும்...

 
At 10:13 PM, August 07, 2009, Blogger செல்வநாயகி said...

பதி,

அய்யனைத்தான் முதன்மைக் கதாபாத்திரமா எடுத்துக்கிட்டேன்:)) இனிவர்ற இடுகைகள் சிலதுல அப்பத்தாக்களும் துணையா வருவாங்கன்னுதான் நினைக்கிறேன்.

முல்லை,
ஆமாம், சில குடும்பங்களில் ஆயாக்களும்,ஆத்தாக்களும் எடுக்கும் விசுவரூபம் தாத்தாக்களோ அய்யன்களோ இல்லாத இட‌த்தையும் பூர்த்தி செய்து விடுகின்றன.

பழமைபேசி,
நீங்க சொல்றதும் சரிதான். நீங்க, செந்தில் எல்லாம் இப்படிக் கையில குச்சியோட வந்து பிழைகளைத் திருத்தறது நல்லாருக்கு. எனக்கும் ஒழுங்கா எழுதனும்னு மனசுல ஒரு பயம் வர இவை உதவும்:))

 
At 12:51 AM, August 08, 2009, Anonymous Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

 
At 12:59 AM, August 08, 2009, Blogger கோமதி அரசு said...

என் மகனும் சீமையிலிருந்து தன்

அய்யனிடம் தொலைபேசியில் பேசும்

போது அந்தஅய்யன்( தாத்தா)வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவார்கள்,

உங்கள் பதிவு நெஞ்சை தொட்டது.
சீமையில் இருக்கும் பேரனையும் அய்யனயும் இணைப்பது ஒறவு என்ற
மூனெழுத்துத்தான், உறவுகள் வாழ்க.

 
At 5:52 AM, August 08, 2009, Blogger பழமைபேசி said...

//இப்படிக் கையில குச்சியோட வந்து பிழைகளைத் திருத்தறது நல்லாருக்கு.//

அவ்வ்வ்..... நெம்ப நல்லா இருக்குங்க.... தங்கத்தைப் போயி யாருனாச்சியுமு இது தங்கம்ன்னு சொல்லிச் சொல்வாங்களா?

 
At 8:09 AM, August 08, 2009, Blogger செல்வநாயகி said...

வெயிலான்,

மன்னிக்கவும், உங்கள் பின்னூட்டத்தைப் பிரசுரித்தேன், ஆனால் இங்கு வந்து பார்த்தால் காணவில்லை. எனவே என் நினைவிலிருந்து அதை இங்கே இடுகிறேன்.

///நல்லாருக்குங்க செல்வநாயகி

ஒரு சின்ன சந்தேகம்

விவரிப்புகள் பாண்டிய மண்டலம் சார்ந்தும், பேச்சு வழக்குகள் கொங்கு மண்டலம் சார்ந்தும் இருக்கின்றனவே//////

நான் கொங்கு ம‌ண்ட‌ல‌ம் சார்ந்து எழுத‌த்தான் முய‌ன்றேன்:)) ஒருவேளை ச‌ரியாக‌ எழுத‌வில்லையோ:))

 
At 8:12 AM, August 08, 2009, Blogger செல்வநாயகி said...

செய்தி வளையம் குழுவினர், கோமதி அரசு, பழமைபேசி,
நன்றி.

 
At 9:56 PM, August 08, 2009, Anonymous Anonymous said...

நேசமித்திரன் சொன்னது மாதிரியே எனக்கும் சொல்லணும் போல இருக்கு. சரியான சொற்கள் கிடைக்கல.
எங்கப்பாவும் , அண்ணன் மகனுக்கும் கிட்டத்தட்ட இப்படித்தான் உரையாடல் நடக்கும். ஆத்தா, அப்பத்தா எல்லாரும் வருவாங்கன்னு சொன்னது மகிழ்ச்சி.

 
At 9:58 PM, August 08, 2009, Anonymous Anonymous said...

எனக்கு அய்யம்படம் சுத்தமா தெரீலிங்க. அடுத்த பதிவுக்காச்சும் ப்ளாக்கரு கிட்ட நீங்க ஓரியாடி நல்ல படமொண்ணு போடுங்க

 
At 10:28 PM, August 08, 2009, Blogger செல்வநாயகி said...

சின்ன அம்மினி,

மறுமொழிக்கு நன்றி. அய்யன் படம் எனக்கும் தெரீலீங்க:)) தினமுமே பிளாக்கர்கூட இப்பெல்லாம் ஓரியாடற பொழப்பாவே இருக்குதுங்க, முடிந்தவரைக்கும் பாக்கறேன் படத்துக்கு:((

 
At 4:14 AM, August 09, 2009, Blogger லதானந்த் said...

சாளை என்பதே சரி

 
At 4:20 AM, August 09, 2009, Blogger லதானந்த் said...

நீங்கள் சாளை என்பதி எழுத்துப் பிழையாய்ச் சாலை என எழுதவில்லை. ஏனெனில் சாலை என்றால் தெரு, ரோடு என்றெல்லாம் சொல்வார்கள் எனச் சொல்வதிலிருந்து சாலை என்பதுதான் ஓலைக் குடில் என அர்த்தப் படுத்தியிருக்கிறீர்கள். கொங்கு பாஷை புனிதமானது. வலிய அதில் எழுதும்போது இத்தகு பிழைகள் ஏற்படுகின்றன.

 
At 6:31 AM, August 10, 2009, Blogger ☼ வெயிலான் said...

// நான் கொங்கு ம‌ண்ட‌ல‌ம் சார்ந்து எழுத‌த்தான் முய‌ன்றேன்:)) ஒருவேளை ச‌ரியாக‌ எழுத‌வில்லையோ:)) //

ஒரு வேளை எனக்கு இரண்டு வட்டார வழக்குகளும் தெரிந்ததால் வித்தியாசம் தெரிகிறதோ என்னவோ? :)

பரவாயில்லை. இப்படியே தொடருங்கள்.

 
At 7:02 AM, August 10, 2009, Blogger Karthikeyan G said...

This article is Superb..

Thanks!!

 
At 11:50 AM, August 11, 2009, Blogger செல்வநாயகி said...

Karthikeyan G, வெயிலான், லதானந்த்,

உங்களின் வாசிப்புக்கு நன்றி.

 
At 12:50 PM, August 11, 2009, Blogger செந்தில் said...

அது வந்துங்க எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னால சாலையா,சாளையா அப்படின்னு சந்தேகம் வந்தது அப்பறம் பல தேடல்களுக்கு பின்னாடி அது சாளைனு தெரிஞ்சுதுங்க.கரக்டா நீங்க சாலைனு எழுதிருந்தத பாத்த உடனே சொல்லீட்டேன்.நம்ம பொழைப்பு இப்ப பெங்களூர் லெங்க.அது கோயமுத்தூர் ல இருக்கும் பொது ஆர்வக் கோளாறுல ஆரம்பிச்சது.கொங்கு மண்டல வாழ்வியல் சிறந்த விழுமியங்களையும் கூறுகளையும் கொண்டிருந்தாலும் கூட அது பெரிய அளவுல எழுதப் படல.அதுக்கு காரணம் நம்ம கிட்ட இருக்கற ஒருவித materialism தான் நு நெனைக்கறேன்.வேலை தொழில் அப்படீன்னு மூழ்கீரறாங்க.நீங்க,அண்ணன் பழைமைபேசி எல்லாம் ரொம்ப நல்லா எழுதறீங்க.நம்ம கிட்ட இருக்கற எதார்த்தம் எல்லாம் சுத்தமா தொலைஞ்சுக்கிட்டு இருக்குதுங்க.இந்த சொலவடைய எங்க பெரியம்மா அடிக்கடி சொல்றத கேட்டுருக்கேன் .இதப் பாத்த உடனே எனக்கு கண்ல தண்ணியே வந்துடுச்சுங்க.எனக்கு அய்யனப் பத்தி சரியான அனுபவம் இல்ல ஆனா ஆத்தா தான் என்ன அஞ்சாப்பு வரைக்கும் வளத்துச்சு.ஆத்தாக்களைப் பத்தியும் எழுதுங்க.நான் பின்னூட்டம் இடரதுக்கு முன்னாடி யாருமா இடல ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா பழைமை அண்ணன் எனக்கு முன்னாடியே சொல்லிருக்காங்க அது எப்படின்னு தெரியல ஒரு வேல இந்த நேர வித்தியாசமா இருக்குமோ(அமெரிக்க - இந்தியா).சரி வர்றேன்ங்அக்கா

 
At 3:36 AM, August 18, 2009, Blogger Chellamuthu Kuppusamy said...

அன்பின் செல்வநாயகி,

அய்யங்கதையைப் படிச்சப்ப எல்லாருத்தையும் போல எனக்கும் கொசுவர்த்திச் சுருள் சுத்துச்சு.. நன்றி.

தான் வாழ்ந்த காலத்தையும், தன்னைச் சுற்றி வாழப்பட்ட வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டிய சமுதாயக் கடமை ஒரு படைப்பாளுக்கு உள்ளதென நான் எப்போதும் நம்புவதுண்டு. அதுதான் இலக்கியம்! சமகாலத்தில் வாசித்த எந்தவொரு இலக்கியத்தைக் காட்டிலும் இது சளைத்ததல்ல.

சாளையா, சாலையா என்ற விவாதம் குறித்து... அதை சாலை என அழைப்பதே சரி என்பது என் கட்சி. தொழிற்சாலை, பாடசாலை என்றுதானே சொல்லுகிறோம்?

- செல்லமுத்து குப்புசாமி

 
At 9:13 AM, August 18, 2009, Blogger செந்திலான் said...

சாளை _ ஒரு மீன் வகை : குடிசை : வழிந்து ஒழுகும் வாய் நீர்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9838&mode=threaded&pid=139523

 
At 10:01 PM, August 18, 2009, Blogger செல்வநாயகி said...

செல்லமுத்து குப்புசாமி,

ஏற்கனவே நிறையநாட்கள் முன்பு ஒருமுறை இதுபோன்ற மண்சார்ந்த இடுகைகளை எழுதவேன்டும் என்றும் எழுதுவதற்கு நான் எடுத்துக்கொள்ளும் பெரிய இடைவெளிகள் குறையவேன்டும் என்றும் நீங்கள் அதட்டியது (அன்போடு) நினைவுக்கு வருகிறது:)) வாசிப்புக்கும், மறுமொழிக்கும் நன்றி.

செந்திலான் (செந்தில்தான் செந்திலான் ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன், இதுவும் நல்லாருக்கு),

செல்லமுத்து குப்புசாமி சொன்னதுபோல் இன்னொருவரும் "சாலை" என்றும் எழுதலாம், பிழையில்லை எனக் குறிப்பிட்டார். மற்றபடி "சாளை"
என்பதன் பொருள் விளக்கங்களை நீங்கள் சொன்ன சுட்டியில் நானும் பார்த்திருந்தேன். நீங்கள் இங்கு இட்டமைக்கு நன்றி. எப்படியிருப்பினும் "சாலை", "சாளை" பொருள் குறித்த விவாதங்கள் பின்னூட்டங்களில் இருப்பதால் நான் இடுகையைத் திருத்தவில்லை, எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என:))

 
At 5:52 PM, September 01, 2009, Blogger கோபிநாத் said...

எல்லோரும் சொல்லிட்டாங்க...நான் என்னாத்த சொல்லிறது...வரிக்கு வரி ரசித்தேன்..கற்பனையில் அந்த மனுஷங்களோட சேர்ந்து பயணம் போனேன்.

தாத்தா பேரன் உறவுக்கு எப்பாவும் ஒரு ஸ்பெசல் இருக்கும். கள்ளிக்காட்டு இதிகாசத்துல கூட வைரமுத்து முதல்மை கருவாக எடுத்துக்கிட்டு எழுதியிப்பாரு.

உங்க அய்யன் அவர்கள் பதிவுகளும் அப்படியே கொண்டு போகுது.

பாட்டிகளும் வருவது மகிழ்ச்சி ;))

 
At 5:58 PM, September 01, 2009, Blogger செல்வநாயகி said...

கோபிநாத்,
இந்தப் பத்து நாட்களுக்கும் மேலா ஒரு சின்ன சோம்பேறித்தனம் (வழக்கமான வியாதி:)) அடுத்த அய்யன் கதை தள்ளிப் போகுது:)) இப்ப உங்களுடைய கருத்து எழுதணும்னு நினைக்க வைக்குது, நன்றி.

 
At 10:31 PM, September 18, 2009, Blogger தங்ஸ் said...

கண்ணுல தண்ணி வருதுங்க..அப்பிடியே நம்மூர்க்கு கூட்டீட்டு போய்ட்டீங்க..
எங்கூட்டுல எம்பேரு சின்ராசு தான்..

 
At 10:57 PM, September 18, 2009, Blogger செல்வநாயகி said...

தங்ஸ்,
உங்களின் வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home