அய்யனை எழுதலாமா?
மூத்த பதிவர் செல்வராஜ் மறுக்காவும் எழுத வந்துருக்காருன்னு ஒரெட்டுப் போய்ப் பாத்துட்டு வரலாம்னு அவர் பதிவுப் பக்கமாப் போனப்ப இந்த அமெரிக்காவுல வெள்ளக்காரங்க வயசானாலுங்கூட எப்படி வெரசலா எட்டி நடந்து, ஓடி ஒடம்புக்குப் பயிற்சி பண்றாங்கன்னு அழகா எழுதீருந்தாரு. அதுல கொழைந்தங்க ஒருபக்கமா ஓடுனா "அய்யனும் ஆத்தாளும்" அவங்களுக்கிணையா ஓடறாங்கன்னு ஒரு வரி சொல்லீருந்தாரு.யாரோ எங்கையோ எப்பவோ கடையில நாள்கணக்கா கெடந்து அதையும் ஆசைக்கு வாங்கி ஒரு துண்டு ஒடைச்சு வாயில போடறப்ப ஊருல நோம்பி தவறாம புதுசாப் பண்ணிதர்ற அம்மாவோட அன்பு நெறைஞ்ச மைசூர்பா ஞாபகம் வருமே, அதுமாதிரி இங்க எப்பவும் முக்கால்வாசி நேரத்தை இங்கிலீசு பேசியே ஓட்டறது பொழப்பா வாச்சிருக்கறப்ப எப்பவாவது நம்மளோட ஒரு சின்ன சொல் கெடைச்சாலும் அது வாழ்வோட ஆரம்பத்து இனிமைகளுக்குள்ளே தள்ளிவிடுது.
அப்படித்தான் செல்வராஜோட "அய்யனும் ஆத்தாளும்"
ஊர் ஞாபகத்தக் கொண்டாந்து சேத்துச்சு.
"அய்யன்" ங்கற சொல்லு கொங்குப் பகுதியில பொதுவா"அப்பா"ங்கற பொருளக் குறிக்கும். ஆனா இன்னொரு வகையில பாத்தா ஊட்டுல இருக்கற வயசான ஆணை அந்த ஊட்டுச் சனங்க, வர்றவங்க, போறவங்கன்னு எல்லாருமே "அய்யன்" னு கூப்புடுவாங்க. அப்பாறய்யன், அப்புச்சி எல்லாம் தந்தை, தாய் வழி உறவுமுறைச் சொல்லுன்னாலும் நெறைய ஊடுகள்ல வயசான ஆம்பளைகளை பொதுவா "அய்யன்" னு சொல்ற பழக்கம் இருந்தது இந்த இடத்துல "இருக்குது" ன்னு போடலாமா போடக்கூடாதான்னு ஒரு கொழப்பம். ஏன்னா இப்ப இருக்கற சின்னப் பேத்துப் பிதுறுக எல்லாம் "தாத்தா பாட்டி" ன்னு கூப்டறதுக்கு மாறீட்ட மாதிரித் தெரியுது.
ஆனா நம்ம சின்னப் புள்ளையா இருந்த காலத்துப் பேத்தி வாழ்க்கையில (20 வருசம் முன்னாடி)நெறைய அய்யன்களும் கூட இருந்தாங்க. ஊருக்கொரு வெநாயங் கோயில் மாதிரி ஊட்டுக்கொரு அய்யன் இல்லாட்டி ஆத்தா இல்லாட்டி ரெண்டுபேருமே இருந்தாங்க. அய்யன் ஆத்தா மனுசங்களுக்கு தலை பூளைப்பூவாட்டமா பெரும்பாலும் நரைக்க ஆரம்பிச்சிரும். மனசும் அந்தப் பூ நெறத்துலதான் இருக்கும். தலையையே டை போட்டு மறைச்சுக்காதவங்க மனசுக்கு என்ன தெரை போடப்போறாங்க?. எதார்த்தமான பேச்சும் செயலும் அவங்களோடது. அவங்க ஊட்டு, ஒறவுப் புள்ளை, பசங்கள மட்டுமல்ல ஊருக்குள்ள எல்லாச் சின்னஞ்சிறுசுக மேலையும் ஒரே மாதிரிப் பாசந்தான், அக்கறைதான்.
வெய்யிலுக்குத் துண்டைத் தலையில போட்டுக்கிட்டுக் கைக்குக் கவை ஊனிக்கிட்டு நடந்து போகையில எதுக்கால தண்ணிக் கொடத்தைத் தூக்கிக்கிட்டு சுப்போ, ரத்தினாளோ வந்தா "ஏத்தா நட்ட மத்தியானத்துல கொடத்தத் தூக்கீட்டு? சாயந்தரமா வெய்யத் தாழப் போலாமல்ல?" ன்னு கேட்டுக்கிட்டு,பக்கத்தூருல போயி மாட்டுக்குத் தவுடு வாங்கி சைக்கிள்ல கொண்டார சின்னக்குட்டியப் பாத்து "பேரன் நல்லாருக்கறானல்ல அப்புனு?" அப்படீன்னு வெசாரிச்சுக்கிட்டு, எதுக்கால வர்ற இன்னொரு அய்யனப் பாத்து "மானம் உருவங் கட்டியிருக்கறதப் பாத்தா இன்னிக்கு மழை ஏமாத்தாது போல இருக்குதுங்க மாப்ளே" ன்னு பேசிக்கிட்டு நம்ம அய்யன்கள் அந்தப் புழுதி ரோட்டுல நடந்து போறத நெனச்சேன். அப்படிச் சித்திரமா மனசுல உழுந்து கெடக்குற அய்யன்கள ஒவ்வொருத்தரா எழுதி வெச்சுக்கலாமான்னு தோணுச்சு.
இப்ப பேச்சு வழக்கெல்லாங்கூட நாகரீகமா மாறிக்கிட்டு வருது. என்ன நாகரீகமோ? என்னமோ? நாகரீகம்ங்கறதுக்கு என்ன அளவுகோலுன்னும் தெரியலை. அமெரிக்கா வந்தாலும், ஆஸ்திரேலியாவுக்குப் போனாலும் "சாதி" உணர்வையெல்லாம் உடாமப் பத்தரமா மூட்டை கட்டி மனசுல ஊறப்போட்டுக்கிட்டே இருந்தாலும் ஊர்ப் பேச்சு வழக்கெல்லாம் கொஞ்சம் மறக்கத்தான் செய்யுது நம்ம மக்களுக்கு. இங்கயே கொங்குப் பகுதி மக்களா ஒரே இடத்துல நெறையப் பேரைப் பாத்தாலுமே கூட அவங்க ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறப்ப சராங்கமா ஊர்மொழி ஒன்னும் பெருசா வர்றதில்லை போல சிலருக்கு. ஊர் மொழின்னு சொன்னா வார்த்தைக்கு வார்த்தை "ங்க" போட்டுப் பேசற அடையாளமல்ல. பழமைக்குள்ளையும், பேச்சுக்குள்ளையும் புதைஞ்சு கெடக்குற பாட்டனும், முப்பாட்டனும் புழங்கிய சொற்கள். ஒன்னுமில்லை, அன்னைக்கொரு நாளு எல்லோருமாக் கூடியிருந்த எடத்துல உள்ள போனதும் கொங்குக்காரரு ஒருத்தரப் பாத்து "இப்பத்தா வந்தீங்களா?" னு சாதாரணமான ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துனதுக்கே அவரு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு "இதையெல்லாம் கேட்டு எவ்வளவு நாள் ஆச்சுப் போங்க" னு சொல்லிக்கிட்டு இருந்தாரு.
நம்மகிட்டயுமே வேலையில்லாதப்ப யோசிச்சுப் பாத்தா எத்தனையோ சொற்கள் தொலைஞ்சுக்கிட்டே போற மாதிரித் தெரியுது. சரி செல்வராஜ் எடுத்துக்கொடுத்த "அய்யன்" ஐ சாக்கா வெச்சு ஒரு "அய்யன்" தொடர் எழுதலாம்னு. "அய்யன்" ஐ அவருக்கொசரம் மட்டுமில்லாம என் மனசுல ஆழப் புதைஞ்சுபோன அந்த வாழ்க்கைய ஒரு தரம் திருப்பிப் பாத்துக்கவும், அதுக்குள்ள பொக்கிசமா மறைஞ்சு நிக்கற "குமுனி", 'கண்ணுவலிப் பூவு" மழை பேஞ்ச காத்தால ஊறித் திரிஞ்ச "மொட்டைப் பாப்பாத்தி", "தாரை", "தப்பட்டை", "கொம்பு" இப்படியான வார்த்தைகளை, அதுக்குப் பின்னான ஞாபகங்களை மீட்டுக்கவும் எழுதலாம்னு யோசனை. "அது சரி நீதானே? எழுதுன பொறவு நம்பலாம்" ங்கறீங்களா?" அப்படியும் வெச்சுக்கலாம்.
31 Comments:
//அமெரிக்கா வந்தாலும், ஆஸ்திரேலியாவுக்குப் போனாலும் "சாதி" உணர்வையெல்லாம் உடாமப் பத்தரமா மூட்டை கட்டி மனசுல ஊறப்போட்டுக்கிட்டே இருந்தாலும் ஊர்ப் பேச்சு வழக்கெல்லாம் கொஞ்சம் மறக்கத்தான் செய்யுது நம்ம மக்களுக்கு.//
அதானே கேட்டேன். முதல் வாசிப்பில நினைச்சிக்கிட்டேன் வேற மாதிரி... அந்த மாதிரி நினைப்பெல்லாம் மூட்டைக் கட்டி அட்லாண்டிக், பசிபிக் சமூத்திரத்திலும் போட்டுட்டு மறந்துட்டாங்க நம்ம மேன் மக்கள்னு நீங்க சொல்லி இருக்கிறதா புரிஞ்சிட்டேன். மறு வாசிப்பிலதான் புரிஞ்சிச்சு நீங்களும் நல்லா சரியா கவனிச்சே வைச்சிருக்கீங்கன்னு.
மாற்றமெல்லாம் போட்டுருக்கும் உடையிலும், இரவல் மொழியிலும் வேண்டுமானால் இருக்கலாங்க. மற்றபடி பெருசா ஒண்ணும் நிகழ்ந்துறல உள்ளுக்குள்ளர...
ஆமா, நீங்க ஃபெட்னா வரலையா, நாயகி? என்னோட பதிவுகள் படிச்சீங்களா இப்போ சமீபத்தில... அந்த பூமிக்கும் முடிஞ்சா ஒரு எட்டு பொயித்து வாங்கதாயீ... :)
A,
ஆமா ஏன் இப்படிப் பேரு வெச்சுக்கிட்டீங்க? நான் பின்னூட்டத்தப் படிக்காம பேர மட்டும் மொதல்ல பாத்தப்ப வேற யாரோ (சில குறிப்பிட்ட வேலைகளுக்கு இந்தமாதிரிப் பேருல ஒளிஞ்சுக்கிட்டு இந்தப்பக்கமா சிலரு வந்த அனுபவம்ங்க) வந்துருக்காங்க போலன்னு இருந்தேன். அப்பறம் பாத்தா நீங்க நம்மூருக்க்காரங்க போல இருக்கு.
ஆமா, சாதியெல்லாம் யாரும் தொட முடியாத எடத்துல மனசுல பத்தரமா வெச்சுக்கிட்டுத்தான் வேற விண்ணானமெல்லாம் பேசவும் செய்வாங்க நம்ம மேன்மக்கள்னு வைங்க:))
அப்பறம் பெட்னாவுக்கு வரலைங்க. நாம இருக்கற மூலையில இருந்து விசுக்குனு வார மாதிரீங்களா இருக்குது அவ்வளவு தூரம்?
உங்க பூமிக்கு எப்படி வாரது? ஒரு தடமும் இல்லாம பேரு மொட்டையா இருக்குது, அத நூல் புடுச்சாவது வரலாம்னு தொட்டுப் பாத்தா அது இவரு விவரமெல்லாம் எங்கிட்ட இல்லைங்குது......யாருன்னு சொல்லுங்க, வந்துட்டாப் போவுது உங்க பூமிக்கும்:))
கொழந்தை பொறந்தா அதுக என்னை 'அய்யன்' -நு கூப்புடோணும்னு நெம்ப ஆச.. ..என்ற பொஞ்சாதிக்கு இப்பிடி கூப்பிட்டா புடிக்காதாமா..
//அய்யன்" னு கூப்புடுவாங்க.//
எங்கய்யனும் அவங்கய்யனை அப்பான்னு சொல்லி பழகிட்டாரு. அப்பறம் அப்பாரு எல்லாம் தாத்தா ஆகிட்டாங்க. ஆத்தானு யாருகூப்பிடறாங்க. பாட்டிதான்.
ஆகா, எழுதுங்க செல்வநாயகி. கிராமத்து வாழ்க்கைய நானெல்லாம் கரைசோத்துக்குத் தொட்டுக்கிட்ட ஊறுகாய் மாதிரி அனுபவிச்சது தான். நீங்க கரச்சுக் குடிச்சவங்களாச்சே... உங்க அனுபவமும், மொழிநடையும் சுவையா இருக்குமுங்கறதுல்ல சந்தேகமில்ல. எழுதுங்க.
அய்யன் படம் கம்பீரமா இருக்கு.
நல்லா எழுதுங்க செல்வநாயகி. படிக்கத் தயாரா இருக்கோம்..
எங்க அப்பாவை கோயம்புத்தூரில் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருந்தேன். அப்பொழுது ஒரு பெண் “அய்யனுக்கு உடம்புக்கு என்ன்?” என்று விசாரித்தார். எப்படிரா அப்பாவைப் பார்த்ததும் “அய்யன்” -னு கண்டுபிடிச்சாங்க அப்படீன்னு ஆச்சர்யப்பட்டேன்.. பூணூலும் வெளியே தெரியலையே.. சட்டை போட்டிருக்காங்களே-ன்னு என் சந்தேகம்.
அப்புறம் பக்கத்திலிருந்த என் நண்பர் சொன்னார் “அய்யன்” என்பது வயதானவர்களைக் குறிக்கும் என்று..
கொங்கு கலாச்சாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரிட்டயரானா அங்குதான் போய் வசிக்கலாமென்றிருக்கிறேன்.
//அய்யன் படம் கம்பீரமா இருக்கு.
// இதுக்கு ஒரு ரிப்பீட்டேய்... போட்டுக்கிறேன்..
அய்யனைப் பாக்குறது அப்புறம்.
செல்வாவையே பார்த்து நாளாச்சே!!!எங்கடா காணமேன்னு நினைச்சேன். நல்லாயிருக்கீங்களா.
படத்துல இருக்கிற அய்யன் படு கம்பீரமா இருக்கார்.
எங்களுக்கெல்லாம் தாத்தா பாட்டி யோகம்தான். எங்க பேரப் பிள்ளைகளுக்கும் அதே. நல்லவேளை இதுவாவது மிஞ்சியதேன்னு சந்தோஷப் பட்டுக்கலாம்.
திரு.செல்வராஜ் பக்கமும் போய்ப் பார்க்கிறேன். நல்ல தமிழ் நடையைச் சிலபேரைத் தவிர யார் இங்கு பயன் படுத்துகிறார்கள்,.
நன்றி செல்வா. எங்க ஊருப்பக்கம் ''விச்சா'' இருக்கியா என்று கேட்பார்கள்.
சௌக்கியமான்னு கேட்பதோட மறு உருவம்னு அப்புறமே புரிந்தது:)))
This comment has been removed by the author.
தங்ஸ்,
என்ன பண்றதுங்க? இந்தக்காலத்துப் புள்ளைக அப்படித்தான்:))
சின்னம்மினி,
நீங்க சொல்ற மாதிரிதான் ஆகிக்கிட்டு வருது இப்ப.
செல்வராஜ்,
நான் மாஞ்சு எழுதனும் அதுதான் பிரச்சினை:))
சீமாச்சு,
வாங்க.
வல்லிம்மா,
நல்லா இருக்கேன். உங்க அன்புக்கு நன்றி. வாழ்வின் சில முக்கியமான நிகழ்வுகள். எனவே எழுத்தையெல்லாம் தூர நிறுத்தியிருந்தேன். இப்ப அப்பப்பத் தலையக் காட்டுலாமுன்னு. அப்பத்தானே உங்களையெல்லாம் பாக்க முடியும்:))
படம் ரொம்ப நல்லா இருக்கு..
பதிவு அதை விட நல்லா இருக்கு..
நெம்ப சந்தோசம்ங்க
தயவு காட்டி எழுதுங்க
யாரு எழுதுவா நம்ப சொன்னாத்தான..
-நியாபகத்தின் இடுக்குகளில் இருந்து நழுவிக் கரையும் முன்னர்
ஆவணப் படுத்தி விடுங்கள் சகோதரி வாழ்வின் அவசங்கள் பால்யத்தை மட்டும் அல்ல நமக்குள் இருக்கும் சிறுமியையும் எளிதில் நீர்த்துப் போக வைக்க வல்லவை .
//A,
ஆமா ஏன் இப்படிப் பேரு வெச்சுக்கிட்டீங்க?//
நான் எங்கங்க பேரை மாத்திக்கிட்டேன், தெக்கிக்காட்டானில் இருந்து நாகரீகமடையவே மாட்டேன் போலிருக்கே :-)). ஏன் இப்படி ப்ரோஃபைல் ல A மட்டும் காட்டுதுன்னு தெரியலையே!!
//யாருன்னு சொல்லுங்க, வந்துட்டாப் போவுது உங்க பூமிக்கும்:))//
அதான் தெரிஞ்சுப் போச்சே... இங்க வாங்க முதல்ல இதப் படிங்க கடவுள்கள்: சாரு Vs ஜெமோ-Readers
பொறவு ரெண்டு ஃபெட்னா பதிவுகளும் இருக்கும் அதனையும் ஒரு பார்வை பாருங்க, முடிஞ்சா...
செல்வநாயகி, நல்லா எழுதறீங்க. வாழ்த்துக்கள். செல்வராஜ் வீட்டுக்கு வந்திருந்தபோது உங்களைக் குறிப்பிட்டார். கன்னிவாடி செல்லாண்டி அம்மன் கோயிலைப் பற்றி ஒருமுறை எழுதுங்களேன்.
ஒரு கிராமத்துக்கு தொழில்நுட்ப வருகைகளால் ஏற்படும் மாற்றங்களைக் கன்னிவாடி சீ. சிவகுமார் (பெங்களூரில் இருக்கிறார்) எழுதிய ஆதிமங்கலத்து விசேஷங்கள் (விகடன்) படித்துக் கொண்டிருக்கிறேன்.
சிவகுமாரும் பதிவுகள் எழுதினால் சிறக்கும் என்று நினைக்கிறேன்.
அவர் முகவரி, போன் எண் தேடணும்.
தமிழ், கணினி, இந்தாலஜி, கொங்கு மண்டிலம், ... சில இலக்கியப் பழஞ்செய்திகளை எழுதுவருகிறேன். நேற்று கொங்கில் எழுதப்பட்ட பழைய சீட்டுக்கவியைப் பதிந்தேன்:
http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
ஒருநாள் சந்திப்போம்!
நா. கணேசன்
naa.ganesan@gmail.com
281-648-8636 (வீடு)
அழகு செல்வநாயகி. பழைய ஞாபகங்களைக் கிளறுகிறது பதிவு.
எழுதுங்க செல்வா...........
எம்பூட்டு நாளாச்சு இதையெல்லாம் கேட்டு!!!!
ரொம்ப அழகான இடுகை! எங்க ஆயாவோட வடலூரிலே கை பிடிச்சுக்கிட்டு நடந்து போனது நினைவுக்கு வந்தது. “உங்ககூட வந்தா அடிகக்டி ப்ரேக் போடறீங்க”ன்னு சொன்னதும் நல்லா நினைவிருக்கு!
//தலையையே டை போட்டு மறைச்சுக்காதவங்க மனசுக்கு என்ன தெரை போடப்போறாங்க?. எதார்த்தமான பேச்சும் செயலும் அவங்களோடது. அவங்க ஊட்டு, ஒறவுப் புள்ளை, பசங்கள மட்டுமல்ல ஊருக்குள்ள எல்லாச் சின்னஞ்சிறுசுக மேலையும் ஒரே மாதிரிப் பாசந்தான், அக்கறைதான்.//
எவ்வளவு அழகா அருமையா சொல்லியிருக்கீங்க! தொடர்ந்து எழுதுங்க!!
//பழமைக்குள்ளையும், பேச்சுக்குள்ளையும் புதைஞ்சு கெடக்குற பாட்டனும், முப்பாட்டனும் புழங்கிய சொற்கள். //
உண்மைதான்..இதுபத்தி ஒரு தொடர் கூட கொஞ்சநாள் முன்னாடி வந்தது ....வழக்கொழிந்தச் சொற்கள் அப்படின்னு! ”நோம்பி”-ன்னு நீங்க சொன்னதும் என்னோட தோழி லதாவோடா ஞாபகம் வந்துடுச்சு..அப்படி ஒரு நோம்பிக்குத்தான் நாங்க உடுமலைபேட்டைக்கு அவங்க வீட்டுக்கு போயிருந்தோம்! :-) நல்ல நினைவுகளை மீட்டெடுத்துட்டீங்க உங்க இடுகை மூலமா!!! கலக்குங்க!
முத்து,
எல்லாருக்குமே அய்யன் படம் புடிச்சுட்டுது போல. இந்த அய்யன் கூகிள்லதான் கெடைச்சாரு.
நேசமித்ரன்,
உண்மை.
தெக்கிக்காட்டான்,
உங்களைய யாருன்னு கேட்டுப்போட்டு போனதியுமே மனசுக்குள்ள உங்க பேருதான் நினைவு வந்துச்சு. ஏன்னா "நாயகி" ங்கற விளிப்பு உங்களோடதுன்னு மூளை சொல்லுச்சு. நீங்க சொல்லியிருக்கற இடுகைகள் எல்லாமே வந்து படிச்சாச்சுங்க. பெட்னாவும் சரி, நம்ம இலக்கியவாதிக சண்டையும் சரி ரெண்டுமே ஊர்ப்பட்ட யோசனைகளை ஏற்படுத்திக்கிட்டிருக்கு. எழுதுனா நெனைக்கறதை எல்லாஞ் சொல்ற மாதிரி முழுமையா எழுதோனும்னே உங்களுக்குப் பின்னூட்டம் கூடப் போடாமையே வந்தாச்சு. ஒரு மனசு வந்து அதையும் இடுகையா எழுதுனாலும் எழுதுவன்னு வைங்க.
நா. கணேசன்,
வணக்கம். உங்களை முதல் முறையாக சந்திப்பதில் மகிழ்ச்சி. சீ. சிவக்குமாரினது கட்டுரைகள் சில நானும் படித்த நினைவு வருகிறது. நீங்கள் கேட்டுக்கொண்டபடி கோயில் பற்றியும் எழுதலாம்தான்.
ஆனால் இந்தச் சில வருடங்களில் நான் பெரியார் மீதும், அம்பேத்கார் மீதும் கொள்ள ஆரம்பித்திருக்கும் காதலில் கோயிலைப் பற்றி எழுதினாலும் மனம் வேறு தளங்களில் தன் பார்வைகளைக் கொண்டுபோய் நிறுத்தும் எனக் கருதுகிறேன்:))
உங்களின் சுட்டிக்கு நன்றி,படிக்கிறேன். மின்னஞ்சல் முகவரிக்கும் நன்றி. மடலிடுகிறேன்.
அமரபாரதி, துளசிம்மா,
கேக்க நீங்கெல்லாம் இருக்கறீங்கன்றது கதை சொல்லும் உற்சாகத்தைத் தூண்டவே செய்யுது:))
சந்தனமுல்லை,
வாங்க, ஆயாவோடும், ஆத்தாவோடும் கழித்த பால்யங்கள் என்றென்றைக்குமே பசுமைதான் இல்லையா? நன்றி.
அட்டகாசமா வந்திருக்குதுங்க இந்த இடுகை !!!!!
அதே உற்சாகத்துல அப்பாரு, அப்புச்சிங்க கிட்ட பேசிடலாம்னு போனப் போட்ட காது சரியாக கேக்கலைன்னு ஏதேதோ பேசுறாங்க !!!!! அதைக் கேக்குறதும் ஒரு சொகம் தான்....
இன்னமும் எங்க ஊரு பக்கம் நெறையா பேரு அய்யானு தான் கூப்பிடுறாங்க...
///அமெரிக்கா வந்தாலும், ஆஸ்திரேலியாவுக்குப் போனாலும் "சாதி" உணர்வையெல்லாம் உடாமப் பத்தரமா மூட்டை கட்டி மனசுல ஊறப்போட்டுக்கிட்டே இருந்தாலும்//
ஐரோப்பாவையும் கொஞ்சம் சேத்துக்குங்க... நம்ம ஊர்ப் பக்கம் கேக்காத கேள்வியெல்லாம், கொஞ்சம் கூட யோசிக்காம கேட்டு வைக்குறாங்க...
இந்தக் கருமாந்திரம் புடிச்சவங்களை வைச்சுகிட்டா தமிழர் ஒற்றுமை, புண்ணாக்குனெல்லாம் பேசிகிட்டு இருக்கோம்னு நினைச்சா வெக்கமா இருக்கு...
சரி தொலைஞ்சு போகட்டும், "மொட்டுல படிச்ச புத்தி கட்டைல போகர வரைக்கும் போகாது போலனு" நினைச்சுக்குவேன்...
எல்லோரும் படத்தைப் பற்றி குறிப்பிடுவதால்...
அது எனக்கு தெரிய மாட்டேன் என அடம் புடிக்கின்றது... நானும், கூகுள் குரோம், நெருப்பு நரி என அனைத்திலும் முயற்சி செய்துவிட்டேன்...
அப்படி என்ன படம்???
நெம்ப நல்லா பழம்யிகளைச் சொல்லி இருக்கீங்க... அய்ய்னும் அப்பிச்சியும்..... கொஞ்ச நஞ்சமுங்ளா... நினைக்க நினைக்க மனசுல தேனூறுதுங்...
முதன் முதன் முறையா வரேன் உங்க பதிவு பக்கம்!!! அருமை. இருங்க ஒரே நாளிள் அத்தனையும் படிச்சுடுவேன்!!!
பதி,
///இந்தக் கருமாந்திரம் புடிச்சவங்களை வைச்சுகிட்டா தமிழர் ஒற்றுமை, புண்ணாக்குனெல்லாம் பேசிகிட்டு இருக்கோம்னு நினைச்சா வெக்கமா இருக்கு...///
என்ன பண்றதுங்க? கனவுகளுக்கும் நெசத்துக்குமான இடைவெளிதான் எவ்வளவு:((
அப்பறம் அந்தப் படம் ஒரு அய்யன் தோட்டத்துச் சாலைக்கு முன்னால நிக்கற படம்தான். எனக்குமே புடிச்சுத்தான் போட்டேன்.
பழமைபேசி,
வாங்க, உங்க பெட்னா தொகுப்புகள் எல்லாம் பாத்தேன். பெரிய வேலை செஞ்சுருக்கீங்க, நன்றி.
அபி அப்பா,
நீங்க எங்க எல்லாத்தையும் ஒன்னு விடாமப் படிச்சுருவீங்களோன்னு கொஞ்சம் வெசனமாவும் இருக்கு, ஏன்னா அப்பறமா இதுதான் மொத வருகை மட்டுமல்ல, எனக்கு இங்கே கடைசி வருகையும்னு எழுதிட்டீங்கனா என்ன பண்றது:))
//ஊருல நோம்பி தவறாம புதுசாப் பண்ணிதர்ற அம்மாவோட அன்பு நிறைஞ்ச மைசூர்பா ஞாபகம் வருமே//
ஆமா! வந்துச்சு.வந்துச்சு.
கோமதி அரசு,
நன்றி.
யக்கா நல்லருக்கின்களா.
அப்பிச்சி, அய்யன் கதையால்ல கேட்டு ரொம்ப நாலாச்சு. எழுதுன்க்கா படுச்சுதான் பாக்கலாம் .
அம்மணி நல்லா எழுதுங்க ... வாழ்த்துக்கள் ...
நன்றி நந்து மற்றும் பாலா.
மிக நல்லா வந்திருக்கு..
அடுத்த பகுதி எப்போ?
கார்த்திகேயன்,
எழுதலாம் சீக்கிரம்:)) நன்றி.
"eanunga nalla irukkuthunga ayyan kathai,ippdi itha padikkirappa chinna vayasula ettavathu padikkarappa kaichal vandu aaspathirikku pona pothu enga appichi enna tholula eatthi ukkara vachuttu ponathu nenavu vanthuduchunga" INTHA MATHIRI PATHIVUGAL PADIKKARAVANGALODA MANATHAYUM,AVANGA MANASULA IRUKKARA AYYANKALAYUM NICHAYAMA NENAIKKA VAIKKUM.BY SHRITHAR
Post a Comment
<< Home