நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Sunday, July 26, 2009

குழந்தைகள் பைத்திய‌ங்க‌ள் க‌ட‌வுள்க‌ள்என் அன்றாட சோதனைகள் மனதோடுதான். மாடு தண்ணீர் குடிக்கும் நீளச் செவ்வகத் தொட்டி ஒன்று ஊரில் எப்போதும் பாசியேறிக் கிடக்கும். அதிலே நிறையக் கொரத்துக்குட்டிகள்(குழந்தைத் தவளைகள்) இருக்கும். நல்ல வெயில் பொழுதில் தொட்டியை யாரும் சலனம் செய்யாத நேரத்தில் அக்குட்டிகள் தண்ணீரின் மேல்பரப்பில் மிதந்தபடி எதையோ ஆழ்ந்து அனுபவித்துக் கொன்டிருக்கும். மாடோ, மனிதரோ சிறு அதிர்வு தரும் தருணத்தில் பாய்ந்து உள்ளோடிப் பாசியின் அடியில் ஒளிந்துகொள்ளும். அக்கொரத்துக் குட்டிகளின் தன்மையினை மனம் பலநேரங்களில் கொண்டிருப்பதைத் தள்ளியிருந்து அவதானிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ நிகழ்வுகளுக்குள் பொருந்த எத்தனிக்கிற வாழ்வில் எந்திரகதியான எந்த விடயத்திலும் வேறுவழியின்றி உடலும், மூளையும்தான் பொருந்துகிறதே தவிர மனமல்ல. அப்படியான நேரங்களில் அது பாசிகளுக்கடியில் தன்னைப் பத்திரமாய் மூடிக்கொள்கிறது.

பூட்டிக் கிடக்கிற மனதைச் சாவியிட்டுத் திறப்பவை சிலதான். அந்தச் சாவிகளில் ஒன்றை நமக்காகச் சதாசர்வகாலமும் தம் கைகளில் சுமந்தபடி அலைந்துகொண்டிருப்பவர்கள் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து கவனிக்கிறேன் நான். ஒரு கூட்டத்திற்குள் நுழைந்துவிட்டால் அரட்டையடிக்க ஆள் கிடைத்ததேவென நிம்மதியான வெளிதேடுபவர்களல்லாத பெண்களில் நானும் ஒருத்தி.
வழமையாய்ச் சந்திக்கிற, வழமையாய் ஒரு போலிப்புன்னகையை உதிர்க்கிற, தன் அத்துனை அழுக்குகளையும் வழக்கம்போலவே வாசனை திரவியங்களுக்குள் புதைத்துக் கொண்டு வருகிற கூட்டங்களை விட்டுக் குழந்தைகளின் கூட்டத்திற்குள் புகுந்துகொள்வது எப்போதும் சுகமானது.

வாழும் நகரத்தில் குழந்தைகள் கூடும் இடங்களும், அவர்களுக்கான செயல்களும் என் பிரியத்திற்குரியவை. நீன்ட இடைவெளிக்குப் பிறகு Katie ன் கதை சொல்லும் நேரத்திற்குப் போயிருந்தேன். சுற்றியலைந்துவிட்டு மீண்டும் யாருக்கும் தெரியாத தன் கூட்டிற்குள் வந்துவிட்டதன் உற்சாகம் மனதுக்கு. நுரைகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் பரப்பை மேல் நகர்த்தி ஒரு துள்ளலுடன் பொங்கிச் சிரிக்கும் பாலின் நிறத்தில் பூரிக்கத் தொடங்குகிறது உள்ளே ஏதோ ஒன்று. சுற்றிச் சில பெண்கள், சில ஆண்கள், சில குழந்தைகள், பின் மேடையில் கதை சொல்ல Katie. எல்லாக் குழந்தைகளையும் இருக்கைகளில் அமரவைத்து ஒரு ஒழுங்கைப் புகுத்திக் கதை சொல்ல ஆரம்பித்தார். தனக்கு மான்கொம்பு, யானைமூக்கு, புலிவால் என்று மாற்றி மாற்றிப் பொருத்திக்கொள்ளும் குழந்தை ஒன்றைப் பற்றிய எதோ வேடிக்கையான கதை அது. ஐந்தே மணித்துளிகளில் ஒழுங்கைக் கலைத்துச் சுதந்திரமானார்கள் கதை கேட்டவர்கள்.


மெல்ல ஒருவர் எழுந்துபோய் Katie க்கு முன் அமர்ந்து அவர் முகத்துக்கு நேரே தன் காலைத் தூக்கி "செருப்பு, பார் செருப்பு" என்றார் ஒருவர். ஜார்ஜ் புஷ்ஷுக்கும், மன்மோகன்சிங்குக்கும், ப. சிதம்பரத்துக்கும் காட்டப்பட்ட ஷு நினைவில் வந்தது எனக்கு. "ஆமாம், எனக்கும் உன்னைப்போலவே உன் செருப்பு பிடித்திருக்கிறது" என்று சொல்லிவிட்டுக் கதையைத் தொடர்ந்தார் Katie. வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த தன் பையை மெல்லப் பிரித்து அதற்குள்ளிருந்த சின்ன நாய்க் குட்டிப் பொம்மையை எடுத்து வாஞ்சையோடு இடுப்பில் ஏந்தி " நாய்க் குட்டி, நாய்க்குட்டி" என்று அதை வருடியபடி கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் காட்டிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார் இன்னொருவர். எல்லாக் கதவுகளும், சன்னல்களும் இழுத்து மூடப்பட்ட ஒரு தெருவில் நிலா தன் வெளிச்சத்தைச் சுமந்து அலைவது போல் இருந்தது அது. என்னமோ நினைத்துக்கொண்டு அதுவரை Katie க்குக் கொடுத்திருந்த முகத்தைத் திரும்பப் பெற்று முதுகு காட்டி அமர்ந்து எனக்கே எனக்கென்று ஒரு புன்னகை சிந்தினார் மற்றொருவர். இன்று தனக்குக் கிடைக்கவேண்டிய புதையல் தவறாது கிடைத்ததென்றது மனது. இது எதுவுமே தன்னைப் பாதிக்காத அத்தருணத்தில் கீழே படுத்து அண்ணாந்து கூரைபார்த்து அதில் கண்ட அவருக்கு மட்டுமே புரிந்த‌ ஒன்றுக்கு அவராய்ச் சிரித்துச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் இன்னுமொருவர். புத்தன் அரண்மனையை விட்டுப் பிரிந்ததும் இப்படியாகத்தான் இருக்கவேண்டும் என்றது மனது. இவர்களில் யாரின் கனவையும் கலைக்காமல் கதை சொல்லி முடித்தார் Katie செடிகளுக்கு வலிக்காமல் மலர் கொய்வதான மென்மையுடன். அவர்களுக்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌தையை நான் உங்க‌ளுக்குச் சொல்லிவிட‌லாம். ஆனால் அவ‌ர்க‌ள் சொல்லிய‌ க‌தைக‌ளை முடியுமா? எத்த‌னை முறை முய‌ன்றாலும் என் வ‌ழியாக‌ வ‌ரும் அவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் என் க‌தைக‌ளாக‌ மாறிப்போகிற‌ பிற‌ழ்த‌லே நிக‌ழ்கிற‌து. அவ‌ர்க‌ளின் க‌தைக‌ளை அவ‌ர்க‌ள‌ன்றி யார் சொன்னாலும் அது அவர்களின் கதைகளாகவன்றிச் சொன்ன‌வ‌ரின் கதைகளாக‌வே சுய‌ம் இழ‌க்கின்ற‌ன‌. என்றாலும் சொல்வ‌தை நிறுத்துப‌வ‌ர்க‌ளா நாம்?

இன்றும் அவ‌ர்க‌ள் சொல்லிய‌ க‌தைக‌ளை என் க‌தைக‌ளாக‌ மாற்றும் அவ்வேலையைச் செய்ய‌வே செய்கிறேன். நெடுநெடுவென்று வ‌ள‌ர்ந்து க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளைச் சும‌க்கும் கூன‌ர்க‌ளாய் அடைத்த‌ பைக‌ளுக்குள் வாழ்வைச் சுருட்டிக்கொண்ட‌ மானுட‌ம் ம‌த்தியில் குழ‌ந்தைக‌ள் எவ்வித‌த்திலும் க‌ள‌ங்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ த‌ம் ம‌ன‌தோடு ஒரு குறிப்பிட்ட‌ வ‌ய‌துவ‌ரை சுத‌ந்திர‌மாய்க் கொண்டாட்ட‌மாய் வாழ்வைக் க‌ழிக்கிறார்க‌ள். மதங்களை நம்புகிறவர்கள் அப்போது அவர்களை‌க் கடவுள்கள் என்கிறார்கள். அவ‌ர்க‌ளின் அதே சுத‌ந்திர‌, கொண்டாட்ட‌ ம‌ன‌நிலையில் வ‌ய‌துக‌ட‌ந்தும் த‌ம் வாழ்வை அமைத்துக்கொண்ட‌வ‌ர்க‌ளைப் பார்த்துத் தெய்வ‌ங்க‌ளை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ளும் "பைத்திய‌ங்க‌ள்" என்கிறார்க‌ள். வ‌ர‌ங்க‌ளுக்காய்க் க‌ட‌வுள்க‌ளின் வியாபார‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் காத்திருக்கும் மூட‌ருக்குத் தமது க‌ட‌வுள்க‌ள் மூத்திர‌ நாற்ற‌ம‌டிக்கும் ஒரு பொதுக் க‌ழிப்பிட‌த்தின் காரை பெய‌ர்ந்த‌ சுவ‌ற்றோடு ஒட்டி உற‌ங்கிக்கொண்டிருப்ப‌தும், நமது குப்பைத்தொட்டி ஒன்றில் ப‌ன்றிக‌ளோடும், நாய்க‌ளோடும் எச்சில் இலையில் ப‌ருக்கை தேடித் த‌ட‌விக் கொண்டிருப்ப‌தும், அந்த‌ ர‌யில் நிலைய‌த்தின் எதிரிலான பாழ‌டைந்த‌ க‌ட்டிட‌ம் ஒன்றில் உதிர‌ம் பெருகச் சிசு ஒன்றைப் பிர‌ச‌வித்துக் கொண்டிருப்ப‌தும் தெரியுமா?

10 Comments:

At 4:17 AM, July 27, 2009, Blogger நேசமித்ரன் said...

அருமை அருமையான படைப்பு
நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன் ..!
கேள்விகளற்று திரியும் வழமைகளின் முகத்தில் நீர் தெளிக்கிறது கடைசி பத்தி ...

 
At 10:43 AM, July 27, 2009, Blogger செல்வநாயகி said...

நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுத முயற்சிப்பேன், உங்கள் அன்புக்கு நன்றி நேசமித்ரன்.

 
At 11:07 AM, July 27, 2009, Blogger சந்தனமுல்லை said...

அருமையாக இருக்கிறது...கடைசி பத்தியின் கேள்விகள் முகத்திலறைகிறது!!

 
At 9:49 PM, July 27, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி முல்லை, இப்போதெல்லாம் குழந்தைகளுடனான என் உலகமும், அக உரையாடலும் உங்கள் பப்புவையும் உள்ளடக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது, சிலநேரங்களில் அவள் சொல்வதாய் நீங்கள் எழுதும் விடயங்கள் சிந்தனைகளை எங்கெங்கோ இழுத்துப் போகிறது.

 
At 8:07 AM, July 28, 2009, Blogger பதி said...

நன்றாக வந்துள்ளது.... :)

 
At 10:38 AM, July 28, 2009, Blogger செல்வநாயகி said...

பதி,
நன்றி:))

 
At 1:04 PM, July 28, 2009, Blogger அய்யனார் said...

மிக நன்றாக எழுதப்பட்ட பத்தி

தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நன்றி செல்வ நாயகி

 
At 2:37 PM, July 28, 2009, Blogger மலைநாடான் said...

எழுத்தும், அனுபவமும், கேள்வியும், அழகு.

 
At 11:04 PM, July 28, 2009, Blogger செல்வநாயகி said...

அய்யனார்,
நன்றி.

மலைநாடான்,
உங்களை இங்கே பார்த்தபின் நிறையப் பேசவேண்டும்போல் தோன்றுகிறது. நிதானமாக மடலிடுகிறேன், அல்லது அழைக்கிறோம். நன்றி.

 
At 3:54 AM, March 20, 2010, Blogger இரசிகை said...

last paragraph-il athirnthu vitten..

nalla yezhuthukkal..!

 

Post a Comment

<< Home