நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Sunday, September 13, 2009

காளி ஒறவு கருது பகையா?.......அய்யங்கதை 4

"எல்லா இங்க மேயுதுக, உனக்கு மட்டு அங்க என்ன போட்டு வெச்சிருக்குது?" ஒரு கல்லெடுத்து வீசிக்கிட்டே வார்த்தை பேசுனாரு கரையோரமா பனங்கருக்குக்கிட்ட கவையப் புடிச்சுக்கிட்டு நின்ன அய்யன். வார்த்தைக்குப் ப‌யந்துதோ இல்லையோ கல்லுக்குப் பயந்துக்கிட்டுப் போன வேகத்துல திரும்பி வந்து மத்த ஆட்டோடவே மேயஆரம்பிச்சுது அந்தக் கறுப்பாடு. கறுப்பாட்டுக்கு அய்யனுக்காட்டவே அறிவு சாஸ்தி. எங்க போனாலும் மேயற எடத்து உட்டுப்போட்டுத் தூரத்துப் பச்சையக் கண்டுபிடிச்சு அந்தப்பக்கமா மொல்ல நகர ஆரம்பிக்கும். அப்பறமா எல்லா ஆடும் அதும்பொரவாலெ போகும். அய்யன் உடுவாரா? அவரும் ஆடாத கூத்தாடினாலும் காரியத்துல கண்ணாயிருக்கோனும்ங்கற மாதிரி யாருகிட்டப் பேசிக்கிட்டிருந்தாலும் கறுப்பாட்டு மேல ஒரு கண்ணாவேதான் இருப்பாரு.
கறுப்பாடு திரும்பிவந்தபொறகு இனிச் சித்தநேரத்துக்குப் பிரச்சினையிருக்காது, எல்லாம் பொட்டாட்ட (அமைதியா) மேயும்னு நெனச்சுக்கிட்டுத் தலைக்குக் கட்டீருந்த துண்டை அவுத்து நெழல் பாத்து விரிச்சு உக்காந்துக்கிட்டாரு. எங்காச்சும் சோலியாப் போனாத் த‌விர அய்யனுக்கு அங்கராக்கு (மேல்ப் பனியன் வலைவலையாக் கைவெச்சுத் தச்சது) போட்டுப் பழக்கமில்லை. வெள்ளைவேட்டியில கோமணம் மட்டும் கட்டிக்கிட்டு முண்டக்கட்டையாத்தான் இருப்பாரு. மழைகிழை பேஞ்சு கூதலடிக்கிறன்னைக்கு ஒரு துப்புட்டுப் போத்திக்குவாரு. இன்னைக்கு உப்புசமா இருந்ததுனால வெறும் மேலோட அப்படியே காத்தாட உக்காந்துக்கிட்டு பக்கத்தால கெடந்த கல்லைப் பொறுக்கி வெச்சுக்கிட்டிருந்தாரு. ஆமா, கறுப்பாட்டுக்குத்தேன் கல்லு, வேற எதுக்கு?

பாப்பா கொளத்தேட்டி ஏறும்போதே அய்யனப் பாத்துட்டா, அதனாலயே வடக்கெ போற தடத்துட்டுட்டு மேக்கெ வந்தா. பாப்பா பக்கத்துத் தோட்டத்துத் தெண்டபாணி மக. பதிமூனு வயசாச்சு, லீவுநாளானா தோட்டத்துல இருந்து கொரங்காட்டுக்கு ஆடு, மாடு ஓட்டிக்கிட்டுப் போறது, அதுகளுக்குத் தண்ணிகட்டப் போறதுன்னு கொளத்துத் தடத்துல போகையில அய்யனக் குறுக்க மறுக்க பாக்கமுடியும் பாப்பாவுக்கு. அய்யன் ஆடு மேய்க்கிறது தெண்டபாணி தோட்டத்துக்கு ஒட்டுனாப்புல இருக்கற கொரங்காடு. பாப்பா வழக்கம்போல அய்யன் உக்காந்திருக்கற நெழலுக்கு வந்தா. "அப்பாவும் அம்மாவும் எங்கயோ பைக்குல போனமாதிரியிருந்துதாத்தா?" விசாரணைய ஆரம்பிச்சாரு அய்யன். "கோயலுக்குங்கய்யா" னு சொல்லீட்டுப் பாப்பாவும் உக்கார எடம்பாத்தா. "இவத்திக்கு வாத்தா, அவத்திக்கு ஒரே கட்டெறும்பா இருக்குது" ன்னு எடம் பாத்துக் குடுத்தாரு அய்யன்.


அய்யனுக்கு எல்லாமையும் தெரிஞ்சுக்கோணும். பெரிசா வளந்த ஆளுக இந்தய்யனோட ஒரே தொணதொணப்பா இருக்குதுன்னுட்டு விவரமாவெல்லாம் எதையும் சொல்லமாட்டாங்க. அதனால பாப்பா மாதிரிச் சிட்டாளுககிட்டத்தான் அய்யனோட விசாரணைன்னு வைங்களேன். பாப்பாவும் லேசுப்பட்ட ஆளில்லை, பின்னெ? ஆரு புள்ளை அவ? அந்த ஊருல‌யே பதனொண்ணாவது படிச்ச ஒரே ஆளு தெண்டபாணியோட புள்ளையாச்சே.
எதுலயுமே ஒரு இத்தூனூண்டு பிரயோசனமில்லைன்னாலும் அதையச் செய்யமாட்டா அவங்க அப்பாவாட்டவே. அய்யனோட விசாரணைக்கெல்லாம் அவ பதில்ச்சொல்றதே அப்பறமா தனக்கு வேண்டியதைக் கேட்டுக்கறதுக்குத்தான். இன்னைக்கும் கேட்டா.
எத்தனையாவது மொறையாக் கேக்கறான்னு தெரியலை "அய்யா ஆக்காட்டிப் பாட்டுச் சொல்லுங்க"ன்னு நேயர் விருப்பமா அய்யம்பாட்டுக்கு அடிப்போட்டா பாப்பா.
எச்சையப் பொளிச்சுனு அந்தப்பக்கமாத் துப்பீட்டுச் சிரிச்சாரு அய்யன். "ஆக்காட்டிய உடமாண்டே நீயி" ன்னு சொன்னாலும் அய்யனுக்கும் அதைப் பாடறதுக்கு ஒரு குஷிதேன்னு வைங்க. ஆமா ஊருலயோ ஊட்டுலயோ வேற ஆரு இப்படி அய்யனோட திறமைய மதிச்சுக் கேக்கறாங்க?


"ஆக்காட்டி ஆக்காட்டி நீ எங்கெங்க மொட்டு வெச்சே?"

அய்யன் ராகமாப் பாட ஆரம்பிச்சிட்டாரு.
ஆக்காட்டின்னா "ஆள்காட்டிக்குருவி" னு ஒன்னு இருக்குமே அதுதான். ஆளப் பாத்தாக் கத்தும் அதுனால அதுக்கு அந்தப்பேரு. இப்பவெல்லாம் நம்மூருப்பக்கம் அது இருக்குதான்னுகூடத் தெரியலை.அந்த ஆக்காட்டிக்கும் அய்யனுக்குமான உரையாடலாப் போவுது பாட்டு.


"ஆக்காட்டி ஆக்காட்டி நீ எங்கெங்க மொட்டு வெச்சே?"

"நா கல்லத் தொளஞ்செடுத்துக் கருங்கரட்டில் மொட்டு வெச்சேன்,
வெச்சதொரு அஞ்சு மொட்டு,
பொறிச்சதொரு நாலு குஞ்சு
நாலுகுஞ்சுக்கெரைதேட நான் நாக்காத‌ம் போயிவந்தேன்
மூணுகுஞ்சுக்குகெரைதேட முக்காதம் போயிவந்தேன்
நானில்லாத குறிபாத்து நாகம் வந்து தீண்டிருச்சு
நாம்பெத்ததொண்ணும் இல்லாம அத்தனையும் செத்துருச்சு,
நானழுத கண்ணீரு நாலுபக்கம் பெருகீருச்சு
ஐந்நூறு பாப்பாரு அள்ளி மொகம் கழுவ‌
முந்நூறு பாப்பாரு மோந்து மொகம் கழுவ‌
தொண்ணூறு பாப்பாரு தொட்டு மொகம் கழுவ‌
நானழுத கண்ணீரு ஆறாப் பெருகிருச்சு"

இப்படி ஒரு ஆக்காட்டியோட சோகக்கதைய அய்யன் எங்கிருந்து கத்துக்கிட்டாருன்னு தெரியாது. ஆனா அதை அவரே ஒரு ஆக்காட்டியப் பாத்திருந்து எழுதனமாதிரி அனுபவிச்சுப் பாடுவாரு. சிலசமயம் பாடிக்கிட்டே ஆக்காட்டிக்காக அழுதும்போடுவாரு. பாப்பா இந்தப்பாட்டுக்கு அப்படியே கட்டுப்பட்டு உக்காந்திருப்பா. ஏன்னு தெரியாது, அதுக்கப்பறம் அதைய‌வே நெனச்சிக்கிட்டும் இருப்பா. தெண்டபாணிகிட்ட இந்தக் கலைரசனையெல்லாம் ஒண்ணுமில்லைன்னாலும் அவரு மகளுக்கெப்படியோ இது சின்னவயசுலயே படிஞ்சுபோச்சு. அதுமட்டுமில்லாம பாப்பாவோட அப்பாறய்யன் அவ சிறுசா இருக்கும்போதே போய்ச் சேந்துட்டதாலயோ என்னமோ இந்தப் பக்கத்துக்காட்டு அய்யங்கிட்ட அவளுக்கும் ஒரு பாசம் உளுந்திருச்சு.பாப்பாவுக்கும் அய்யனுக்கும் ஒரு வேலிக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமா இப்படியொரு ஒறவு கூடிவந்தாலும் அய்யனோட மகனுக்கும் பாப்பாவோட அப்பனான தெண்டபாணிக்கும் அப்படியொண்ணும் ஒறவு சோகிரீயமில்லை. மனுசங்களைவிட மண்ணுமேல இருக்கற ஆசை எங்கதான் ஒறவு தழைக்க உட்டுருக்குது? தெண்டபாணி காட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமா ரெண்டு காடுக இருந்துது. அது ரெண்டுமே பக்கத்து ஊருக்காரர் ஒருத்தருக்குச் சொந்தமானது. அதுல ஒண்ணை தெண்டபானி குத்தகைக்கு எடுத்திருந்தாரு ஆடு குட்டிய அவசரத்துக்கு அதுல மேச்சுக்கலாம்னு. இன்னொன்ன அய்யனோட மவன் அதேமாதிரிக் குத்தகைக்கு எடுத்திருந்தாரு. அதுலதான் பாப்பாவுக்கும் அய்யனுக்கும் வேலி தாண்டி ஒறவு. அதுல என்னாயிப்போச்சுன்னா அந்தக் காடுகளோட சொந்தக்காரருக்குப் புள்ளைக கல்யாணத்துக்குப் பணம் வேணும்னு இந்த ரெண்டையுமே விக்கப் பாத்தாரு.

இதைய மொதல்ல அவரு தெண்டபாணிகிட்டத்தான் சொன்னது. சொன்னதீயுமே தென்டபாணிக்கு ஒரு யோசனை தங்காட்டுக்கு இந்தப்பக்கமொண்ணு அந்தப்பக்கமொண்ணுனு ரெண்டையும் புடிச்சுப்போட்டா தனக்கு ஒரே எனமா நல்ல பூமி ஆகிக்குமுன்னு. கையில காசில்லைன்னாலும் சம்சாரத்துக் கையில கழுத்துல கெடந்ததைக் கழட்டி வித்தாவது புடிச்சுப்போடலாமுன்னு ஆசை வர அதைக் காட்டுக்காரருகிட்டச் சொல்லி வெலையும்கூடப் பேசிவெச்சுட்டாரு. ஒண்ணைக் கெரையமும் முடிச்சாச்சு. இன்னொன்னை விக்கறதுக்கு முன்னாடி அதையக் குத்தகைக்குப் போட்டுக்கிட்டு இருக்கற அய்யனோட மவனுக்குச் சொல்லி அவங்க கணக்கை பைசூலு செஞ்சிட்டுக் கெரையத்தை வெச்சுக்கலாமுன்னு தெண்டபாணிகிட்டச் சொல்லீருந்தாரு காட்டுக்காரரு(பைசல் செய்தல்னா கணக்குவழக்கு முடிக்கறது) தெண்டபாணியும் நம்பிக்கிட்டு உக்காந்திருந்தாரு கெரைய நாளுக்காக.


அஞ்சுவயசுல அண்ணந்தம்பி, பத்து வயசுல பங்காளின்னு சொந்த அண்ண‌ந்தம்பிகளே ஒருத்தம் பொழைக்கறான்னு இன்னொருத்தன் வயிறெரிஞ்சு கெடக்கையில தெண்டபாணி சொத்துவாங்கறான்னு அய்யன்மவன் பூரிச்சா போவாரு? அய்யனோட மவன் தெண்டபானியோட‌ ஆசையில மண்ணள்ளிப்போட்டுட்டாரு. தங்கிட்டக் காட்டைக் காலிபண்ண‌ச் சொல்லவந்த காட்டுக்காரர்கிட்ட நைச்சியமாப் பேசிக் கோழிக்கறி ஆக்கிப்போட்டு பிராந்தியும் வாங்கி ஊத்தி அதையத் தனக்கேதான் விக்கோணும்னு நின்னு ஏக்கருக்கு ரெண்டாயிரம் தெண்டபானியவிடச் சேத்திக் குடுக்கற‌ன்னும் சொல்லிக் காரியத்தைக் காதுங்காதும் வெச்சமாதிரி ரகசியமா முடிச்சுப்போட்டாரு. காட்டுக்காரர் ஏமாத்தியிருந்தாலும் தெண்டபாணிக்கு அய்யன்மவனோட வஞ்சகத்துமேல அளவில்லாத கோபம் வந்திருச்சு.

அய்யம்மவன் நேர்மையா நடக்கலைன்னாலும் இனி அவருமேல கோபப்பட்டு என்னாவப்போவுது? நம்முளுக்குத் தெரியுது. தெண்டபானிக்குத் தெரியோனுமே! அதுவும் ஊருலயே பதனொண்ணாவது படிச்சிருந்தும் தென்டபானிக்கு அப்ப "படிச்சவம் புத்தி பானைக்குள்ள" ங்கற கதையா மூளை வேலை செஞ்சமாதிரித் தெரியலை. தெரிஞ்சிருந்தா அய்யம் மவனப் பழிதீக்கறதுக்குக்கொசரம் எந்தப் பாண்டு பத்திர ஆதாரமும் இல்லாம எப்பவோ யாரோ வாய்ப்பழமையாச் சொன்னதை வெச்சுக்கிட்டு இப்ப அய்யன் மவன்மேல கேசு(வழக்கு) போடுவாரா? ஆமா, தெண்டபாணி, அய்யன் மவன்மேல கேசு போட்டாரு. என்ன கேசுன்னா இப்ப அய்யன்மவன் புடிச்சிருக்கற காட்டுக்குள்ள இருந்து தன்னோட வேலியோரமா ரெண்டுசெண்டு நெலம் தன்னோட காட்டுக்குச் சேரவேண்டியது, அந்தக்காலத்துல வேலி போடும்போது தப்பாப் போட்டுருக்காங்க, அதனால இப்ப அய்யன் மவன் அதையத் தனக்குத் தந்து வேலியப் புடுங்கி அந்தப்பக்கமாத் தள்ளிப் போடோனும்னு.......இதுதான் கேசு. இந்தமாதிரிச் சிவில் கேசுகள்ல, அதுவும் சொத்து சம்பந்தமான கேசுகள்ல நீங்க என்ன சத்தியமான, நேர்மையாளனா இருந்தாலுமே உங்க சொல்லைவிடக் கோர்ட்டுல பத்திரங்கள்ல இருக்கர எழுத்துத்தான் பேசும். அதனால பத்திரத்தே வெச்சே சொல்லீரலாம் ஒரு சொத்துல உங்களுக்கு உரிமை இருக்குதா இல்லையான்னு. கேசுபோட்டாலும் செயிப்பீங்களா மாட்டீங்களான்னும் ஒரு நல்ல வக்கீல் பாத்தாச் சொல்லீருவாங்க. ஆனா வ‌ந்தா வ‌ழ‌க்காச்சு, ந‌ம‌க்குப் பொழ‌ப்பாச்சுன்னு பாக்க‌ற‌ வ‌க்கீலுங்க‌ளும் நெறைய‌ப் பேரு இருக்க‌றாங்கில்லையா?

ந‌ம்ம‌ தெண்ட‌பானி அப்ப‌டியொரு வ‌க்கீலுகிட்ட‌ மாட்டுனாரு. நானாச்சு செயிச்சுக் காட்ட‌றேன்னு தெண்ட‌பானிகிட்ட‌ச் ச‌வால் விட்டுட்டு ந‌ம்ம‌ தெண்ட‌பானி அந்த‌க் காடு புடிக்க‌ வெச்சிருந்த‌ காசையெல்லாம் கேசு ந‌ட‌த்த‌ வாங்கிகிட்டு ந‌ல்ல‌வார்த்தை சொல்லி அனுப்பியுட்டாரு. அந்த‌ வ‌க்கீல் நோட்டீசு த‌ன் ம‌வ‌னுக்கு வ‌ந்த‌ன்னைக்கு அய்ய‌ன் நேரா வேலிய‌த் தாண்டிக் க‌ட‌வ‌த் தொற‌ந்துக்கிட்டு தெண்ட‌பானிய‌ப் பாக்க‌ வ‌ந்துட்டாரு. தன்னட வாழ்நாளைல அப்படியொரு துக்கம் அய்யனுக்கு இருந்துருக்காது, மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க வந்தவரு தூரத்துல தெண்டபாணியப் பாத்ததீமே பேச ஆரம்பிச்சிட்டாரு "ஏனுங்க‌ மாப்ப‌ளே! இத்த‌ன‌ நாளா தாய் புள்ளையாட்ட‌ப் பேசிக்கிட்டிருந்துட்டு ந‌ம்முளுக்குள்ள‌ இப்ப‌டி அக்குர‌முத்துக்குப் போலாமுங்க‌ளா? அந்த‌க் காட்டு மேல‌ உங்க‌ளுக்கு ஆசை இருந்துருக்க‌லாமுங்க‌, அந்த‌ நாயும் ஆச‌ப்ப‌ட்டுட்டான், அவ‌ம் புத்திக்குத் தெரிஞ்ச‌ள‌வு ந‌ட‌ந்து வாங்கீம் போட்டான். நீங்க‌ ந‌ல்லாருந்தா என்ன‌? அவ‌ன் ந‌ல்லா இருந்தா? அந்த‌ ரெண்டு செண்டுல‌ அவ‌ன் கோட்டை க‌ட்ட‌றானா? இல்ல‌ நீங்க‌தான் குடிமுழுகிப் போயிருவீங்க‌ளா? இந்த‌க் கேசு கீசெல்லாம் ந‌ம்முளுக்கு ஆவ‌றதுங்க‌ளா? அதெல்லாம் கொழுப்பெடுத்த‌விய‌ளுக்கு ஆவ‌ற‌துங்க‌, இப்ப‌டிப் ப‌ண்ணீட்டீங்க‌ளே மாப்ப‌ளே" ன்னு தொற‌ந்த‌ வாய் மூடாம‌ ம‌ன‌சுல‌ இருந்த‌த‌க் கொட்டிப் போட்டாரு.

தெண்ட‌பானிக்கு என்ன‌ சொல்ற‌துன்னு தெரிய‌லை. ஏன்னா அய்ய‌ம் மேல‌ ஒரு ம‌ரியாதை தெண்ட‌பானிக்கும் இருக்க‌த்தான் செஞ்சுது. ஆனாலும் அய்ய‌ம் ம‌வ‌னை எதாவ‌து செய்யாம‌ இருக்க‌வும் முடிய‌லை. எல்லா இனிக் கோர்ட்டுல‌ பாத்துக்க‌லாங்க‌ய்யான்னு சுருக்க‌மாச் சொல்லீட்டு நிக்காம‌ப் போய்ட்டாரு. அய்ய‌னுக்கு அப்போதைக்குத் திரும்பி வ‌ந்தாலும் ம‌ன‌சு ஆற‌வேயில்லை. ம‌வ‌ங்கிட்ட‌யும் சொல்லிப் பாத்தாரு. "கேசெல்லாம் ந‌ம்ம‌ குடும்ப‌த்து ஆவாத‌டா, போ போயிப் பேசு, அவிய‌ளுக்கும் வேன்டாம், ந‌ம்ம‌ளுக்கும் வேன்டாம் ஆளுக்கொரு செண்டா பிரிச்சிக்கிட்டாப் போவுது"ன்னாரு. காட்டையே திட்ட‌ந்தீட்டிப் புடிக்க‌த் தெரிஞ்ச‌ அய்ய‌ம் ம‌வ‌னுக்கு இதுல‌போயி தெண்ட‌பானிக்கு உட்டுத்த‌ர‌ முடியுமா என்ன‌?
"நீங்க‌ வாய‌ மூடிக்கிட்டு இருங்க, எல்லா நாம் பாத்துக்குவேன், ஆட்ட‌ ஓட்டீட்டுப் போன‌மா வ‌ந்த‌மான்னு இல்லாம கேசுபோட்ட‌வ‌ங்கூட‌ப் போயி பேச‌ற‌து ப‌ண்ற‌துன்னு இருந்தீங்க‌ன்னா அவ‌ன் ஊட்டுல‌யே சோறும் வாங்கித் தின்னுட்டுப் ப‌டுத்துக்குங்க, காளி ஒறவு கருது பகையா? நான் எதுக்கு உங்க‌ளுக்கு?" ன்னு பெத்த‌ பைய‌ங்கிட்ட‌யும் வாங்கிக் க‌ட்டிக்கிட்டாரு அய்ய‌ன். இந்த‌க் "காளி ஒற‌வு க‌ருது ப‌கையா?" ன்னா ஒரு சோள‌த் த‌ட்டுத் தாவ‌ர‌த்துல‌ அடிப்ப‌குதி ஒற‌வு மேல‌ இருக்க‌ற‌ க‌ருதுப் ப‌குதி ப‌கையான்னு அர்த்த‌ம். இங்க ஒரே ஊட்டுக்குள்ள‌ இன்னொருத்த‌ங்க‌ கூட‌ அப்ப‌ன் ஒற‌வு, ம‌க‌ன் ப‌கையா இருந்தா முடியுமான்னு அர்த்த‌ம்.

சொன்னதை யாரும் கேக்கலைன்னாலும் அய்யனுக்கு பெருசா யார்மேலயும் வெட்டுறுப்போ, வஞ்சமோ இருந்த மாதிரித் தெரியலை. கேசுல மவன் செயிச்சோரனும்ங்கற அய்யக்கானம் இருந்தாலும் பாப்பாவுக்கு ஆக்காட்டிப் பாட்டுச் சொல்ல மனசில்லாமப் போகலை அவருக்கு. ஆனா அவளுக்கும் பதிமூணு வயசு ஆச்சே! ஊட்டுல கேசு கோர்ட்டுன்னு நடந்த பேச்சையெல்லாம் கேட்டவ அய்யங்கிட்டப் பேசறதை நிறுத்திக்கிட்டா. போகையில வரையில அய்யனப் பாத்தா வேற தடத்துல நடந்து போய்ட்டா. "காளி ஒறவு கருது பகையா?" ங்கறதை அய்யனை மாதிரிக் காளிகளுக்கு ஏத்துக்க முடியலைன்னாலும் பாப்பா மாதிரிக் கருதுகளுக்கு எதோ புரியுது அதுல.


கேசு நடந்து எதிர்பார்த்தமாதிரியே தெண்டபாணி தோத்துத்தாம் போனாரு. வருசக்கணக்கா நடந்த கேசுல‌ அய்யனுக்கு நடை தளந்து காட்டுக்கு வாரதெல்லாம் மாறிக் கெடைல படுத்துட்டாரு. கேசுல தோத்தாலும் அய்யன் செத்ததுக்கு எழவுக்குப் போனாரு தெண்டபாணி. என்ன பேச்சுவார்த்தை இல்லைன்னாலும் நல்லதுக்கு(கல்யாணத்துக்கு) போகாட்டியும் கெட்டதுக்கு(எழவுக்கு) போகோணுங்கறது நம்ம சனத்தோட பண்பாடா இருந்தாலும் பண்பாட்டுக்காக இல்லாம பெத்த தகப்பனாட்ட வந்து புத்தி சொன்ன அய்யன் மொகத்தைக் கடைசியா ஒருதடவை பாத்துக்கலாம்னுகூடப் போயிருக்கலாம் தெண்டபாணி.

21 Comments:

At 2:27 AM, September 13, 2009, Blogger ரௌத்ரன் said...

ம்ம்..செமத்தியா இருக்குதுங்க நடை...எங்க ஊரு பக்கம் இதையே 'ஆடு பகை,குட்டி ஒறவா'னு கேப்பாங்க...

 
At 7:36 AM, September 13, 2009, Blogger கோபிநாத் said...

வந்துட்டிங்களா அய்யன்கதையோட..நல்லது ;))

காளி ஒறவு கருது பகையா..ம்ம்ம் இப்ப எல்லாம் பணம் தான்..ஒன்னும் சொல்றதுக்குல்ல!

\\ஆக்காட்டி ஆக்காட்டி நீ எங்கெங்க மொட்டு வெச்சே?"\\

இந்த ஆக்காட்டி பாட்டை கேட்டவுடன் இயக்குனர் சேரன் தவமாய் தவமிருந்து ஒரு படம் எடுத்தாரு அதுல இந்த ஆக்காட்டி வச்சி ஒரு பாட்டு வரும். ஆனா அது படத்துல இல்ல...பாட்டு சிடியில இருக்கும். பாடத்தோட நீளத்தை நினைச்சி அதை எடுத்துட்டாங்க. அருமையான பாட்டு அது ;))

 
At 7:53 AM, September 13, 2009, Blogger Thekkikattan|தெகா said...

படிக்க ஆரம்பிச்சுட்டா ச்சும்மா போயிட்டே இருக்குது :) ...

ஆக்காட்டி(lapwing?) குருவி இன்னமும்தான் இருக்குதுன்னு நினைக்கேன், தண்ணீர் கொஞ்சம் நஞ்சம் கெடைக்கிற பகுதிகளில்...

 
At 9:18 AM, September 13, 2009, Blogger கோமதி அரசு said...

//ஆக்காட்டி ஆக்காட்டி நீ எங்கெங்க
மொட்டு வெச்சே?//

//வந்தா வழக்காச்சு,நமக்குப் பொழப்பாச்சுன்னு//

//அய்யன் மொகத்தைக் கடைசியா ஒருதடவை பாத்துக்கலாம்னு கூடப்
போயிருக்கலாம் தெண்டபாணி.//

மனிதரில் எத்தனை நிறங்கள்?

அய்யன் கதை நெஞ்சை விட்டு அகலாது.

 
At 11:17 AM, September 13, 2009, Blogger செல்வநாயகி said...

ரௌத்ரன், கோபிநாத், தெகா, கோமதி அரசு,

நன்றி கருத்துப் பகிர்வுக்கு.

ரௌத்ரன்,
நம்ம ஊருலயும் நீங்க சொன்ன சொலவடையும் உண்டு. ஒரே பொருளுக்கு வேறவேற சொலவடை வெச்சிருந்த நம்ம முன்னோர்களோட சொற்களஞ்சியம் அதிசயக்கத்தான் வைக்குது.

கோபி,

நான் சேரனோட அந்தப் பாட்டைக் கேட்டதில்லை. ஒருவேளை அது சரியான, முழுமையான பாட்டாக்கூட இருக்கலாம். இது நம்ம மூளையில கெடந்த நியாபகத்தை வெச்சும், மறந்ததை நாமளே சொந்தப் பாட்டாக் கட்டியும் எழுதுனது இங்க:))


மொத்தமா இதையப் படிக்கிற மக்கள்கிட்ட ஒரு மன்னிப்பு கேட்டுக்கறேன், ஏன்னா பொழுதோட கண்ணுல தூக்கம் நின்னப்பத் தட்டுனது, ஒழுங்காப் பிழையே திருத்தலை. இப்ப நல்ல கண்ணோட பாக்கறேன், எனக்கே என் எழுத்துப் பிழைகள் சகிக்கலை:)) மூணு சுழிக்கு ரெண்டு சுழி, ஓங்காரத்துக்கு ஏங்காரம்னு அரிசில கல்லா நல்லாத்தான் கலக்கி வெச்சிருக்கறேன்:)) செல்வராஜ், செந்திலான், பழமைபேசியெல்லாம் வர்றதுக்குள்ள நானே கண்டுபிடிச்சிட்டேன் (ஆமா இதுல இந்தப் பெருமை வேற) நேரமிருக்கறப்பத் திருத்துவேன், பொறுத்துக்குங்க:))

 
At 12:15 PM, September 13, 2009, Blogger சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லா இருந்தது இந்த அய்யனோட கதை, செல்வநாயகி! பாப்பாக்கு பாடி காட்டுற அந்த பாட்டு நான் நிறைய தடவை கேட்டுருக்கேன் - யெம்பி3 ப்ளேயர்லேதான் - ஒரு படத்துலே வரும்! ஆனா, அதைக்கேக்கும்போது ஒரு மாதிரி பயமா, கஷ்டமா மனசை என்னவோ பண்ணும் - சுபமாத்தான் முடியும்னாலும்! :)

உங்க அருமையான நடைக்காகவே ரெண்டு மூனு தடவை படிச்சேன்! இந்தப் பழமொழி புதுசா இருக்கு எனக்கு!
தொடர்ந்து எழுதுங்க!!

 
At 6:19 PM, September 13, 2009, Anonymous Anonymous said...

//பொட்டாட்ட//

எங்க வீடுகளில் ஒரு சில பெண்களை அப்படி சொல்வார்கள். அவ்வளவு அமைதியும் அடக்கமுமாம்.

 
At 9:21 PM, September 13, 2009, Blogger பழமைபேசி said...

நல்லா இருக்கு தொடருங்கள்...

சின்ன அம்மணி அவங்களுக்கு சொன்ன அதே பேச்சுத்தான் இங்கயும்....

கொஞ்சம் வடிவா பத்தி பிரிச்சு, வரிசைப்படுத்தினா (format) இன்னும் சிறப்பா இருக்குமுங்....

 
At 9:38 PM, September 13, 2009, Blogger பழமைபேசி said...

// செல்வராஜ், செந்திலான், பழமைபேசியெல்லாம் வர்றதுக்குள்ள நானே கண்டுபிடிச்சிட்டேன்//

//தென்டபாணிக்கு //
தெண்ட‌பானி - தெண்டபாணி

பன்றி - பன்னி
கன்று - கன்னு
கண் - கண்ணு
ஒன்று - ஒன்னு
மூன்று - மூனு

பிறகு - பொறவு

அப்பாறய்யன் - அப்பார்+அய்யன், அப்பாரய்யன்

//உளுந்திருச்சு//
விழுந்து - உழுந்துருச்சு

பழமை,

போடா போடா! நல்லா எழுதுறவங்ககிட்டவே வந்து தப்புச் சொல்லாட்டி என்ன? போ, போ, போயிட்டே இரு...

 
At 9:56 PM, September 13, 2009, Blogger செல்வநாயகி said...

முல்லை, சின்னம்மிணி,

நன்றி.

பழமைபேசி,

வாங்க:)) அய்யந்தொடருக்கு முக்கியமான விமர்சகர் நீங்க:))

பத்தியெல்லாம் நல்லாப் பிரிச்சிருக்கறம்னு நான் ஒரு கெத்துல இருந்தனுங்க, இப்படிச் சொல்லீட்டீங்க:)) இன்னமும் சின்னச்சின்னப் பத்தியாப் பிரிக்கோணும்ங்கறீங்களா? அது படிக்கச் சுலபமா இருக்குமா?

எழுத்துப் பிழையெல்லாம் சரியாத்தான் எதிர்பார்த்தமாதிரியே புடிச்சீட்டீங்க:)) இன்னம்கூடச் சில பிழைகள் இருக்கு பாருங்க!

அதுல தெண்டபானியெல்லாம் பல இடத்துல சரியாத்தான் இருக்கும்பாருங்க, தூக்கத்தோட உக்காந்து வேகமாத் தட்டச்சுனா இப்படித்தான்னு வைங்க, ஆனா என்னன்னா ஆறஅமரப் பிழைதிருத்தம் பாத்துட்டுத்தான் பிரசுரிக்கோனும்னு ஒரு கொள்கை வெச்சுக்கோணும் இனிமேல, மிக்க நன்றிங்க.

 
At 10:12 PM, September 13, 2009, Blogger பழமைபேசி said...

நீங்க பத்தி பிரிச்சிதான் போட்டு இருக்கீங்க... ஆனாலும் அது பிறழ்ந்திடுச்சி... முதல் பத்தியில பாருங்க, அது பிரிபடலை.... அதுக்கு நீங்க பிரிம்பா, <p> பாவிக்கணும்...

 
At 9:22 AM, September 14, 2009, Blogger Karthikeyan G said...

Superr!!!!

 
At 2:28 PM, September 14, 2009, Blogger பதி said...

வழக்கம் போல அற்புதமா வந்திருக்குதுங்க செல்வநாயகி..

இரண்டு மூனு நாளா இணையப் பக்கம் வர முடியாததினால் இந்த தாமதமான பின்னூட்டம்...

 
At 1:47 AM, September 15, 2009, Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

எங்க ஊரு பக்கம் ஆடு பகை, குட்டி ஒறவா ந்னு சொல்லுவாஙக்.

ஆக்காட்டிப் பாட்டு ரொம்பவும் நல்லா இருந்துச்சு.

வயித்துக்கு இருந்துச்சுன்னா போதும்மா, பொட்டாட்டம் கெடக்கும்மா அது ..

உங்களின் //பொட்டாட்ட// படித்தவுடன் அம்மா எப்போதோ சொல்ல இந்த வாசகம் ஞாபகம் வந்தது..

 
At 9:56 PM, September 15, 2009, Blogger செல்வநாயகி said...

கார்த்திகேயன், ப‌தி, அமித்து அம்மா,

ந‌ன்றி.

 
At 4:14 AM, September 16, 2009, Blogger Indian said...

very nice.

 
At 7:12 AM, September 17, 2009, Blogger செல்வநாயகி said...

நன்றி இண்டியன்.

 
At 7:54 PM, September 18, 2009, Blogger தங்ஸ் said...

இதப்படிச்சுப்போட்டு மனசெல்லாம் ஒரே அய்யன் நெனப்புத்தாங்க...ரொம்ப நெகிழ்வான பதிவு.

 
At 7:19 PM, March 18, 2010, Blogger நேசமித்ரன் said...

இது எழுத்து...

என்ன சொல்றதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன் பொட்டி முன்னாடி...


ஆமா பனிப்பொம்மைகள் ன்னு நீங்க தொகுப்பு எதும் போட்டுருக்கீங்களா?

இந்த லீவில் வாங்கினேன்

 
At 10:22 PM, March 18, 2010, Blogger செல்வநாயகி said...

நேசமித்ரன்,

இருதினங்களுக்கு முன்புதான் எதோ வாசித்துக்கொண்டிருந்தபோது உங்களின் நினைவு வந்தது. ஊருக்குப் போயிருந்தீர்கள் என்றும் அங்கே சில கலந்துரையாடல்களில் பங்குபெற்றீர்கள் எனவும் அறிந்தேன். ஆமாம்......அந்தப் பனிப்பொம்மைகளை எழுதியது நானேதான்:)) எழுத்துக்கு வந்தபின் ஆரம்பகாலக் கவிதை முயற்சிகள், வாங்கினாலும் நீங்கள் படித்துவிடாதிருக்கக் கடவுக:))

 
At 4:54 AM, March 20, 2010, Blogger நேசமித்ரன் said...

செல்வநாயகி

மிக்க நன்றி ! வாசித்துக் கொண்டிருக்கிறேன் பனிப்பொம்மைகளை

தனிமை பிரிவு பிரியம் வாதை பால்யம் பற்றி நிறைய மொழி மாறுதல்கள் கொண்ட தொகுப்பாக இருக்கிறது


:)

 

Post a Comment

<< Home