நேற்றும் இன்றும்
நேற்றுவரைகூட அது அங்குதான் இருந்தது
தடித்த பருமனை உடலாகக் கொண்டு
எல்லாவற்றிற்கும் மௌனசாட்சியாய்
உண்ட உணவும்
செரிக்க நடக்காத சீமாட்டிப் பெண்ணுக்கு
கணுக்கால்வரை புடைத்து வெளித்தெரிந்த
பச்சை நரம்புகளின் முடிச்சுகளை நினைவூட்டி
துருத்தி நீண்டன
அதன் வேர்கள் மண்ணுக்குமேலும்
இலைபார்த்துக்கொண்டே
தளிராக நடந்த குழந்தைக்கால்களை
அந்த வேர்கள்தாம் ரத்தம் பார்க்கச் செய்தன
குடையாக விரிந்திருந்த கிளைகளில்
உயிரினம் எதுவும் அண்டவுமில்லை
கிளைகளின் அந்த அடர்ந்த இருளுக்குள்
உயிர்குடிக்கும் பெரும்பேயொன்று
உலவுவதாகவும் கதைகள் இருந்தன
பூக்கவும் தெரியாத மரமதில்
சிரிக்காத மனிதர்களின் சித்திரங்களே தெரிந்தன
ஆளரவமற்ற பொழுதின் துணைகளில்
அனாதைத் தவளைகளைத் துரத்திச்சேர்த்து
கருநாகங்கள் உண்டுமுடிக்கவும்
கவலைகளின்றி நிழல் தந்திருந்தது.
இப்படியாகச் சுயம்தரித்த மரம்தான்
அவை போகையில் வருகையில் பார்த்துக்கொண்டிருந்து
புத்தம்புதிய பறவையும் ஆனது
இதனினும் உள்ள வசதிகள் கருதி
இப்போது நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கலாம்
பறவை வேடங்களில்
மரத்தின் பாடல்களை
7 Comments:
தோழி,
எப்போதும் போல நல்ல படைப்பு. இன்னும் நிறைய எழுதுங்கள்.
அற்புதம்
அதுவும்கடைசி வரிகள் உண்மைதான் பறவை வேடம் பூண்டுதான் திரிகிறது மனசுகளும் மரங்களும் அவற்றில் ஒட்டியிருக்கும் மண்ணும் மண்ணாகிப் போகாத நினைவுகளும் உணர்வுகளும் ....
நன்றி செல்வ நாயகி
\\பூக்கவும் தெரியாத மரமதில்
சிரிக்காத மனிதர்களின் சித்திரங்களே தெரிந்தன //
இந்த இடம் ரொம்ப பிடிச்சது செல்வநாயகி, நல்லா இருக்கு..
திரு, நேசமித்ரன், முத்து,
உங்களின் வாசிப்புக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி.
//இப்போது நீங்களும் கேட்டுக்கொண்டிருக்கலாம்
பறவை வேடங்களில்
மரத்தின் பாடல்களை //
super
நன்றி செந்திலான்.
அருமையாய் இருக்குங்க செல்வநாயகி.
Post a Comment
<< Home