நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, August 24, 2006

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

"எங்க அப்பா நான் சின்ன வயசாயிருக்கும்போது ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நடந்தது, நடந்தது, நடந்துகொண்டே இருந்தது. என் அப்பாவுடனான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நின்றுகொண்டிருந்த எங்களுக்கு எதிர்காலம் பொருளாதார ரீதியாகவும்
பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் என் அப்பாவின் மரணத்திற்காகச் சட்டப்படி வந்துசேரவேண்டிய இழப்பீட்டுத்தொகை அவரின் குழந்தைகளான எங்கள் படிப்புக்குக்கூடக் கைகொடுக்கும் வகையில் வேகமாக வந்துசேரவில்லை. என் தாய் தனியொரு பெண்ணாக வருந்தி உழைத்த பணத்தில்தான் நாங்கள் படித்துக் கரைசேர்ந்தோம்" இது சிலவருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரால் அவர் அவ்வாறு பதவியேற்றபோது பேசப்பட்ட வாக்கியங்கள். நீதி கிடைக்காமல் போவது எவ்வளவு கொடுமையானதோ அதேஅளவு கொடுமையானது அந்த நீதி கிடைக்க வேண்டிய நேரத்தில்
கிடைக்காமல்போவதும். இழுத்தடிக்கப்படும் வழக்குகளில், பாதிக்கப்பட்டவன் வருந்திச் செத்துக்கொண்டிருப்பதும், தவறு செய்தவர்கள் எதுவுமே நடக்காதது மாதிரித் தங்களின் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதும் மிக இயல்பாக நடக்கிறது. குவியும் வழக்குகளை ஆராய்ந்து நீதியை நிலைநாட்டவேண்டிய கட்டாயம் மட்டுமின்றி, வழக்குகளின்
நடைமுறைகளைத் துரிதப்படுத்தவேண்டிய அவசியமும் நம் நீதித்துறைக்கு இருந்துகொண்டே இருக்கிறது.


தாமதமான நீதியாக இருந்தாலும் தனக்கு நீதி கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தற்போது தமிழகத்தில் ஒரு பெண். வெகுசனப்பத்திரிகைகளைத் தினம் மேய்ந்துகொண்டிருக்கும் நீங்களும் அறிந்திருப்பீர்கள். செஞ்சிக்கருகில் உள்ள ஊரொன்றில் பிறந்து வளர்ந்த "இருளர்" என்னும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த விஜயாதான் அவர். 13 ஆண்டுகளுக்கு முன்
ஏதோ ஒரு வழக்கின் விசாரணை என்று கூட்டிச் செல்லப்பட்டு ஐந்து காவலர்களால் வன்புணர்வு செய்யப்பட்டவர். படிப்பறிவோ, வெளிஉலக மனிதர்களுடன் பெரிதான தொடர்போ இன்றி வாழ்ந்துகொண்டிருந்து, இப்பாதிப்பால் போராளியாக மாற்றப்பட்டவர். வன்புணர்ந்தவர்கள் மீது புகார் கொடுக்கக் காவல்நிலையம் போனபோது அவமதிக்கப்பட்டு
வெளியேற்றப்பட்டவர். "பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்" நடத்தி வரும் சமூக ஆர்வலர் கல்யாணி போன்றவர்களின் உதவியோடு நீதிமன்றம் போனவர். வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கேட்டு லட்சங்களைப் பேரமாகப் பெற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டும் மறுத்தவர். இப்போது தன்னைக் கதறக் கதறத் துன்புறுத்தியவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பது கண்டு தன் போராட்டம் வீண்போகவில்லை என்று ஊடகங்களினூடே உரையாடிக்கொண்டிருப்பவர்.

நமக்கு விஜயா மாதிரியானவர்களின் சோகங்கள் புதிதில்லை. பக்கத்து ஊரில் காவல்துறை செய்தது என்று செய்தி படிப்போம். பக்கத்து நாட்டில் இதையே இராணுவம் செய்தது என்று செய்தி கேட்போம். இவ்வளவு ஏன்? பக்கத்துத் தெருவில் நடந்துபோகும் பெண்ணை அருவருக்கும் சாடை மொழியில் அங்க விமர்சனம் செய்யும் இளைஞர்களையும் பார்த்து
நடப்போம். வீட்டிற்குள்ளேயே நடந்தாலும் "வெளிக்கொண்டுவந்து மானம் தொலைப்பானேன்" என்று பொறுத்து இருப்போம். இன்னும் அலுவலகத்தில், பேருந்தில், ரயிலில், விமானத்தில் இடைவெளிகளில் கை, கால், கண் நீட்டிப் பெண்ணின் உடல்
உரசும் உத்தமர்களைக் கண்டபடியே பயணித்து இருப்போம். "உலகில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மணியிலும் ஏதோ ஒரு பெண் பாலியல்ரீதியிலான வன்முறைக்கு ஆளாகிறாள்" என்று ஐ.நா சபையின் மனித உரிமைப் பிரிவே சொன்னால்தான் என்ன? கடந்து போகலாம் இவை அனைத்தையும் நாம், ஸ்ட்ரிப் கிளப்பில் வேலைசெய்யும் பெண் கலாசாரத்தை மீறிவிட்ட கவலையிலும், அதிக சம்பளமுள்ள மனைவி, குறைவான சம்பளமுள்ள கணவன் என்ற குடும்பத்தில் குழந்தைகளுக்காக வீட்டிலிருக்க அக்கணவனே விரும்பி முன்வந்தாலும் அவர் பொண்டாட்டிதாசன் ஆகிவிட்டாரே என்ற கவலையிலும்.

பின் குறிப்பு:
************
தலைப்பு இப்படி வைக்கக் காரணம் விஜயாதான். "இருளர் பாதுகாப்பு சங்கத்தின்" பிரச்சாரப் பாடல் ஒன்று

"மனுசங்கடா நாங்க மனுசங்கடா
ஒன்னப்போல அவனப்போல
எட்டுசாணு ஒசரமுள்ள மனுசங்கடா"
என்று தொடங்குவதாகத் தன் செவ்வி ஒன்றில் கூறியிருந்தார் விஜயா. அதற்குள்ளிருக்கும் துயரம் மனதை என்னவோ செய்து இடம்பிடித்துக்கொண்டது. முழுப்பாடலையும் அறிந்துகொள்ளவேண்டும்போலவும் உள்ளது. நண்பர்கள் யாருக்கேனும் அப்பாடல் தெரிந்தாலும் எழுதி உதவினால் நல்லது.

35 Comments:

At 8:21 AM, August 24, 2006, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

செல்வநாயகி, இது போன்ற தகவல்களும் வெற்றிகளும் பரவலாக அறியப்பட வேண்டும். விழிப்புணர்வை அதிகரிக்கும் இதுபோன்ற பதிவுகளை வரவேற்கிறேன்.

 
At 11:10 AM, August 24, 2006, Blogger பத்மா அர்விந்த் said...

செல்வநாயகி
இது போல் பெண்கள் போராடி வெற்றி பெறுவதை யாரும்(வலைப்பதிவுலகில்) பாராட்டுவதில்லை. திருச்சியில் ஒரு பெண் போராடி ஓதுவாராக பணி புரிவதை பற்றியும் அவரின் போராட்டங்களையும் படித்த போது எழுத வேண்டும் என்றிருந்தேன். தகவலுக்கும் நன்றி.

 
At 11:43 AM, August 24, 2006, Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்ல பதிவு.

//மனுசங்கடா நாங்க மனுசங்கடா
ஒன்னப்போல அவனப்போல
எட்டுசாணு ஒசரமுள்ள மனுசங்கடா//

இந்தப் பாடல் முன்னால பாடியிருக்கேன் இப்போ மறந்து போச்சு... பல பழைய நினைவுகளைக் கொண்டுவரும் பாடல் எனக்கு.

 
At 12:07 PM, August 24, 2006, Blogger கூத்தாடி said...

//உலகில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மணியிலும் ஏதோ ஒரு பெண் பாலியல்ரீதியிலான வன்முறைக்கு ஆளாகிறாள்" என்று ஐ.நா சபையின் மனித உரிமைப் பிரிவே சொன்னால்தான் என்ன? கடந்து போகலாம் இவை அனைத்தையும் நாம், ஸ்ட்ரிப் கிளப்பில் வேலைசெய்யும் பெண் கலாசாரத்தை மீறிவிட்ட கவலையிலும், அதிக சம்பளமுள்ள மனைவி, குறைவான சம்பளமுள்ள கணவன் என்ற குடும்பத்தில் குழந்தைகளுக்காக வீட்டிலிருக்க அக்கணவனே விரும்பி முன்வந்தாலும் அவர் பொண்டாட்டிதாசன் ஆகிவிட்டாரே என்ற கவலையிலும்//

சரியான வார்த்தைகள் .இப்படித்தான் நம் நடுத்தர வர்க்கம் இருப்பார்கள் ..

இருளர்களை நம் சமூகம் மனிதராகப் பார்ப்பதில்லை என்பது உண்மை தான் ..
போராடும் சமூகத்திற்கு ஆதரவாய்ப் பதிவு போட்டதற்குப் பாரட்டுக்கள்

 
At 12:33 PM, August 24, 2006, Blogger சுந்தரவடிவேல் said...

அந்தப்பாடலை கீழவெண்மணி படுகொலைகளைப் பற்றி வெளிவந்திருக்கும் "ராமய்யாவின் குடிசை" என்ற ஆவணப்படத்தில் கேட்ட ஞாபகம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

 
At 12:46 PM, August 24, 2006, Blogger Thangamani said...

செல்வநாயகி:

விஜயாவின் வழக்கில் கிடைத்த தீர்ப்பு நிச்சயம் இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாதிக்கப்படப்போகும் மக்களுக்கு உதவியாக, நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். ஆனால் சமூக மாற்றத்துக்கான எந்த நீண்டகால முயற்சியையும் கல்வி, அறநெறிகள் (ethics) இவைகளில் இந்திய (தமிழ்)சமூகமுன்னெடுக்காத போது இத்தகைய அரிதான தீர்ப்புகளால் பெரிய பயன்கள் விளையப்போவதில்லை. இன்னமும் ஊடகங்கள் 'கற்பழிப்பு' என்று தான் எழுதுகின்றன; நாகரீகமடைந்த (அடைய விரும்புகின்ற) சமூகங்களில் இது போன்ற ஒரு வழக்கும், தீர்ப்பும், அதன் சட்ட, அறநெறி கோட்பாடுகளை மீள்வுருவாக்கம் செய்யவும், மதிப்பீடுகளில் மாற்றத்தை உண்டாக்கவும், கல்விக்கூடங்களிலேயே மாற்று சிந்தனைகளை விதைக்கவும் உந்துசக்தியாக இருக்கும். நமது சமூகத்தில் இதுவே பெரும் சாதனையாக மட்டும் காட்டப்பட்டு,இப்படியான அரிதான நிகழ்வுகளே இச்சமூக நிலைப்பாடுகளை, மதிப்பீடுகளை மறைமுகமாக நியாயப்படுத்த பயன்படுத்தப்படும்.

எனினும் இது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்காக அப்பெண்ணிற்கு உதவிய கம்யுனிஸ்ட் இயக்கங்களுக்கும், இந்திய மாதர் சங்கமும், பேராசிரியர் கல்யாணி (இவர் வீரப்பன் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்)யும் பாரட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.

பி.கு.
நீங்கள் குறிப்பிட்ட பாடல் குணசேகரன் (பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்) பாடிய இன்குலாபின் பாடல்.


எதிர்ப்பிசை குறித்த இரண்டு பதிவுகள்:
http://peddai.blogspot.com/2004/12/blog-post_20.html

http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_28.html

 
At 1:24 PM, August 24, 2006, Blogger VSK said...

மனதை உருக்கியது.

குணசேகரன் பாடல் புத்தகம் ஒன்று வீட்டில் இருக்கிறது!

பார்த்துவிட்டு, அதில் பாடல் இருந்ப்தால் மாலை பதிகிறேன்.

வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த உங்களுக்கும், சில தினங்களுக்கு முன் இதைப் பதித்த செல்வனுக்கும் நன்றி.

 
At 1:26 PM, August 24, 2006, Blogger VSK said...

http://holyox.blogspot.com/2006/08/141.html

This is the link for Selvan's post!

 
At 2:08 PM, August 24, 2006, Blogger Sarah said...

இந்தப் பாட்டை நானும் கேட்டிருக்கிறேன். தேடிப் பார்த்து (என் கணினியில்தான் ) அனுப்ப முயற்சி செய்கிறேன்.

இந்தப் பதிவு, இன்னுமொருமுறை நாம் எப்படிப் பட்ட சமூகத்தில், எவ்வளவு கையறு நிலையில் இருக்கிறோம் என்பதனைச் சுட்டிக் காட்டுகிறது.

ஒரு சில சமயங்களில், சம்பத்தப் பட்டவரின் ஓயாத போராட்டத்தால் மட்டுமே வெற்றி காண முடியும் என்பதற்கு, விஜயா போன்றோர்கள் எடுத்துக்காட்டாக இருப்பது ஒரு நல்ல விடயம். ஆனாலும், அதற்கான கூலி நிறையத்தான் கொடுக்க வேண்டியுள்ளது. என்ன செய்ய. பதின்மூன்று ஆண்டுகள் என்பது அவரது வாழ்வின் பெரும்பகுதியாகவே (கிட்டத்தட்ட ஒரு ஆயுள் தண்டனைக் காலம்) நான் காண்கிறேன்.ஆனாலும் அவரது வெற்றி ஒரு நல்ல விடயம்.இப்பதிவுக்கு நன்றி செல்வநாயகி.


சாரா

 
At 3:11 PM, August 24, 2006, Blogger துளசி கோபால் said...

செல்வா,

பெண்ணுக்கு செய்யும் அநீதிகளும் சரி, பெண்கள் முட்டி மோதி மேலே வந்து அடையும் வெற்றிகளும் சரி,
எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போல வெளி உலகுக்குத் தெரியாமல் போயிருது (-:

உண்மையான சமநீதி எப்போ கிடைக்கும்?

 
At 3:29 PM, August 24, 2006, Blogger செல்வநாயகி said...

பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்தப் பாடலை அளிப்பதாய்ச் சொன்னவர்களுக்கு இன்னொரு நன்றி.

தங்கமணி,

நீங்கள் கொடுத்த சுட்டிகளில் புகுந்து வெளிவந்தபோது கத்தார், எதிர்ப்பிசை, அவற்றின் அவசியங்கள் பற்றியெல்லாம் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. இப்பதிவில், நாகரீகமடைய விரும்பும் சமூகத்தின் அடையாளங்களாக நீங்கள் சுட்டியிருக்கும் விடயங்களே இதுமாதிரிப் பிரச்சினைகளை இல்லாமலாக்குவதற்கான நிரந்தரத் தீர்வுகளாகவும் இருக்கமுடியுமெனத் தோன்றுகிறது.

சாரா,

///ஒரு சில சமயங்களில், சம்பத்தப் பட்டவரின் ஓயாத போராட்டத்தால் மட்டுமே வெற்றி காண முடியும் என்பதற்கு, விஜயா போன்றோர்கள் எடுத்துக்காட்டாக இருப்பது ஒரு நல்ல விடயம். ஆனாலும், அதற்கான கூலி நிறையத்தான் கொடுக்க வேண்டியுள்ளது////

இது முழுக்க உண்மை. அடுத்தவேளைச் சோத்துக்கான போராட்டமா? இல்லை ஒரு அநீதியைக் கையிலெடுத்து எதிர்ப்பதற்கான போராட்டமா என்று வரும்போது பலர் பல நேரங்களில் முன்னதை மட்டுமே தேர்வுசெய்துகொள்ளும்படியாகவே பெரும்பாலும் வாழ்வு அமைந்துவிடுகிறது.

 
At 3:54 PM, August 24, 2006, Blogger வீரமணி said...

செல்வநாயகி நல்ல பதிவு...உங்கள் எழுத்தில் வீரியம் இருக்கிறது....

வீரமணி

 
At 4:59 PM, August 24, 2006, Blogger மலைநாடான் said...

செல்வநாயகி!

அருமையான பதிவு. இப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் மூலம், குறிப்பாக நண்பர் தங்கமணி தந்த சுட்டிகள் மூலம் என் மனம் நிறைந்த கலைஞன் கத்தார் நினைவுக்கு வந்தான். கததாரின் ஒளிப்பதிவு நாடா ஒன்று நீண்டகாலம், பொக்கிசமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். யாழ்ப்பாணத்தில் என் வீடு எறிகணைத்தாக்குதலுக்குள்ளான போது, அதுவும் அழிந்துவிட்டது. அந்த ஒளிப்பதிவில் இந்தப்பாடலும் இருந்ததாக ஞாபகம். கத்தாரின் குரல் கம்பீரம் ஒரு போராளிக்கே உரிய கம்பீரம்.
நன்றி!

 
At 4:59 PM, August 24, 2006, Blogger இளங்கோ-டிசே said...

இந்த வழக்கின் வெற்றியைவிட, பாதிக்கப்பட்ட பெண்-'சமூகம்' என்ன நினைக்கும் என்று ஒதுங்கிப்போகாமல் - போராடிய ஓர்மம்தான் எனக்கு முக்கியமாய்ப்படுகிறது. பதிவுக்கு நன்றி செல்வநாயகி.

 
At 5:01 PM, August 24, 2006, Blogger VSK said...

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா -- உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்த்தில தர்ம அடிய வாங்கி கட்டவும் -- அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் -- நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது -- இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது -- உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க -- நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்க போனீங்க -- டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா

 
At 6:28 PM, August 24, 2006, Anonymous Anonymous said...

தீர்க்கமான வரிகள். பதிவர் வட்டத்துக்குள்ள கொண்டு வந்து கருத்து தேடுவது நிச்சயமா நல்ல காரியம். எனக்கு கவலையெல்லாம் "எதனால இத்தனை வருஷமாகுது இதுக்கு?" பதிமூணு வருஷம் இவனுங்க சுத்திருக்காங்களே சுதந்திரமா?! ஆள் யாருன்னு தெரியாம தேடியிருந்தாலும் பரவாயில்லை. தெரிஞ்சே பதிமூணு வருஷம் யோசிச்சா!!! என்ன பண்றது! கடைசியில நியாயம் கிடைச்சுது சந்தோஷமா இருக்கு. இது சம்பந்தமா ஒரு அழகான நீதிபதி கதையும் குடுத்திருக்கீங்க. அவங்க வந்தப்புறம் நாடு கொஞ்சமாவது முன்னேறி இருக்கும் அப்படின்னு சந்தோஷப்பட்டுக்கிறேன். விஜயா தவிர, இவனுங்கள கட்டி, தாலி தாங்கி நிக்கிற மனைவிகள நினைச்சாலும் கதி கலங்குது! என்ன ஆனாங்களோ!

 
At 8:46 PM, August 24, 2006, Blogger Senthil said...

"மனுசங்கடா நாங்க மனுசங்கடா , "

இந்த வரிகளைப் பார்த்ததும் படிக்கதூண்டியது.ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் சொல்லலாம் என நினைத்தேன்.பலர் கூறிவிட்டனர்.எஸ்கே பாடலையே தட்டச்சிவிட்டார்.

ஆனால் பாடலில் என்னவோ (எவ்வளவோ)குறைகிறது.குணசேகரன் பாட நேரில் கேட்கவேண்டும் .அப்போதுதான் அதன் வீரியம் தெரியும்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஓர் புத்தாண்டு தின பகலில் (abt 1 am)பாண்டிச்சேரியில் நடு வீதியில் ம.க.இ.க பிரச்சார கூட்டத்தில் நேரில் கேட்டேன்.உறைந்துவிட்டேன்.வாழ்க்கையின் வேறு ஒரு தளத்தை உணர்ந்தேன்.எனவேதான் எனக்கு தாழ்த்தப்பட்டோரின் வன்முறைகள் (அடக்குமுறைக்கு எதிரான )தவறாக தெரிவதில்லை.ஆனால் அதனையே கேடயமாக கொண்டுள்ள பல சமூக விரோதிகளையும் தெரியும். :(

அன்புடன்
சிங்கை நாதன்.

 
At 10:53 PM, August 24, 2006, Blogger  வல்லிசிம்ஹன் said...

பதிவுக்கு நன்றி செல்வா.
விழிப்பு எப்போது வரும் என்று நினத்தபோது வலையிலும் இதை பதித்ததால் இவ்வளவு நண்பர்களுமறிந்து எண்ணம் பதிய முடிந்தது.
//ரயிலில் விமானங்களில் சீண்டப்படும்போது அருவருப்பு//
வந்தாலும் சொல்லவா முடியும். வயதா பார்த்துசெய்கிறார்கள்/?
உயர் மட்ட சீண்டலை யார் கேட்பது? மறைமுகமா முட்டுக்கட்டை போடும் உயர் அதிகாரிகள் எல்லாமே மனித உரிமை மீறல்கள். இதில் ஒரு பெண் 13 வருடம் விடாமல் போராடியதுதான் செய்தி.

 
At 12:11 AM, August 25, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி நண்பர்களே உங்கள் எல்லோரின் மறுமொழிகளுக்கும்.

மலைநாடான்,
/// யாழ்ப்பாணத்தில் என் வீடு எறிகணைத்தாக்குதலுக்குள்ளான போது, அதுவும் அழிந்துவிட்டது///

இவ்வரிகள் காட்டும் ஊமைவலிகளுக்கு என்ன சொன்னாலும் அது மருந்தாகுமா:((

டிசே,

உங்களிடமிருந்து இன்று எனக்கு ஒரு புதிய சொல் அறிமுகம், ஓர்மம்- என்ன பொருள்? "துணிவு" என்று நானாகக் கொண்டிருக்கும் பொருள் சரியா?

எஸ்.கே,
பாடலைத் தட்டச்சி இட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. சுந்தர வடிவேல் சொன்னதுபோல் இப்பாடல் கீழவெண்மணி சம்பவத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டதாகவே புரிந்துகொள்கிறேன். ஆனாலும் நம் சமூகத்தில் உடல், உள்ள வன்முறைகளுக்குள்ளாக்கப்படும் அனைவருக்கும் பொருந்திவரும் பொருளையும் பொதித்து வைத்துள்ளது. எல்லோரும் சொன்னபிறகு இதை கத்தார் மற்றும் கே.ஏ.குணசேகரன் இருவரின் குரல்களிலும் கேட்டுவிடும் ஆவல் மிகுகிறது.

 
At 5:05 PM, August 25, 2006, Blogger VSK said...

1995 டோலீடோ ஃபெட்னாவுக்கு வந்திருந்தீங்களா?
சிவாஜி, பரதிராஜா, வைரமுத்து எல்லாம் வந்தாங்களே அது!
அங்க இவரும் வ-ந்து கலக்கினாரு!
கேக்கத்தான் ஆளில்லை... வழக்கம் போல!
இதையும் பாடினாரு!

 
At 11:38 PM, August 25, 2006, Blogger  வல்லிசிம்ஹன் said...

ஓர்மம் என்றால் நினைவில் இருப்பது ,ஞாபகம் இருக்கிறது என்று தோன்றுகிறது.செல்வநாயகி.

 
At 12:53 AM, August 26, 2006, Blogger மலைநாடான் said...

செல்வநாயகி, வள்ளி!

"ஓர்மம்" எனும் சொல் தமிழீழப் பேச்சு வழக்கில் சராசரி மனிதர்களாலும் பேசப்படும் அழகிய தமிழ் சொற்பதம். இது குறிக்கும் பொருள் பலவாயினும், மேலான துணிவு, பெருமைமிகு வீரம், மிகுதியான தன்னம்பிக்கை, செயல் வைராக்கியம், என்பன சாலப்பொருந்தும். இங்கே பின்னூட்டத்தில் டி.சே. விஜயாவின் மிகுதியான தன்னம்பிக்கை, மேலான துணிவு, செயல் வைராக்கியம், எனபவற்றைச் சுட்டிப் பாவித்திருக்கிறார். எத்துனை பெரிய சங்கதிகளை தன்னுள் வைத்திருக்கிறத இந்த "ஓர்மம்" பார்த்தீர்களா?

 
At 1:02 AM, August 26, 2006, Blogger வணக்கத்துடன் said...

செல்வநாயகி,
மரபுகளை மீறி ஒரு தாழ்தப்பட்ட பெண் நீதி கேட்பதை, இந்திய நீதித்துறை 13 ஆண்டுகாலம் எதிர்த்து போராடியுள்ளது புரிகிறது. தன் மரபு காக்கும் மாண்பை (மீண்டும்) வெளிப்படுத்தியுள்ளது நீதித்துறை.

பதிவுக்கு நன்றி.

தங்கமணி எதிர்ப்பிசை குறித்த சுட்டிகளுக்கு நன்றி.

 
At 1:13 AM, August 26, 2006, Blogger Sudhakar Kasturi said...

அன்பின் செல்வநாயகி,
மிகவும் நல்ல பதிவு.
ஓர்மம் என்பது நினைவு என்பது மலையாளத்தில் பொருள். பழந்தமிழ் வாக்காக இருக்கலாம்.
அன்புடன்
க.சுதாகர்.

 
At 11:24 PM, August 27, 2006, Blogger செல்வநாயகி said...

அனைவருக்கும் நன்றி.

எஸ்.கே, நான் அந்த விழாவுக்கு வரவில்லை.
மலைநாடான், "ஓர்மம்" குறித்த விளக்கத்திற்கு மகிழ்ச்சி. எங்கள் வழக்கில் இல்லாத ஈழத்தமிழ்ச்சொற்கள் பல எனக்குள் ஈர்ப்பையும், அவற்றைப் பயன்படுத்தும் ஆர்வத்தையும் விதைப்பன. இதற்காகவே இங்குள்ள ஈழநண்பர்கள் பதிவுகளைப் பெரும்பாலும் தவறவிடாது படித்துவிடுவதுண்டு. சிவரமணி போன்றவர்களை நான் தெரிந்துகொண்டதும் இங்குதான்.

வள்ளி, மங்கை (சுதாகர்),

நீங்கள் சொன்னபிறகு மலையாளத்தில் "ஓரனை இருக்கா" என்று நினைவிருக்கிறதா என்ற பொருளில் பயன்படுத்தக் கேட்டிருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது.

 
At 12:37 AM, August 28, 2006, Blogger நாமக்கல் சிபி said...

கலக்குறீங்க எஸ்.கே!
நானும் கூகிளில் தேடிப்ப் பார்த்து கிடைக்காபல் போனதால் விட்டு விட்டேன்.

முழுப் பாடலையும் தந்தமைக்கு நன்றி.

(எங்கே இந்தப் பாடலைப் பிடித்தீர்கள் என்று கூற முடியுமா?)

 
At 3:58 AM, August 30, 2006, Blogger thiru said...

செல்வநாயகி, நல்ல பதிவு! 19 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பாடலை பாட பழகியது உங்களது பதுவு நினைவூட்டியது. வெகுவிரைவில் இப்பாடலின் ஒலிவடிவத்தை இணைக்க முயல்கிறேன்!

இந்த பாடலில் தமிழகத்தில் நடந்த சாதிக்கொடுமை நிகழ்வுகள் வரலாறு அடங்கியிருக்கிறது. பாடுகிற வேளைகளில் உணர்ச்சி பிழம்பாக மனம் மாறும். இன்றும் அதே!

 
At 10:24 AM, August 30, 2006, Blogger செல்வநாயகி said...

///வெகுவிரைவில் இப்பாடலின் ஒலிவடிவத்தை இணைக்க முயல்கிறேன்!///


நன்றி திரு.

 
At 10:30 AM, August 30, 2006, Blogger VSK said...

//குணசேகரன் பாடல் புத்தகம் ஒன்று வீட்டில் இருக்கிறது!

பார்த்துவிட்டு, அதில் பாடல் இருந்ப்தால் மாலை பதிகிறேன்.//

I said this earlier, sibiyaarE!

 
At 10:36 AM, August 30, 2006, Blogger ஜெயஸ்ரீ said...

நல்ல பதிவு செல்வநாயகி.

ஓர்மம் என்ற சொல்லுக்கு துணிவு , வீரம் என்று பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் fortitude என்ற சொல்லுக்கு நிகரானது.
அடக்குமுறையை/எதிர்ப்பைத் துணிவுடன் எதிர்க்கும்/எதிர்நோக்கும் தன்மை, துன்பத்தைத் தாங்கும் மனவலிமையே ஓர்மம்.
மலையாளத்தில் உள்ள ஓர்மம் வேறு.

 
At 10:53 AM, August 30, 2006, Blogger செல்வநாயகி said...

நன்றி ஜெயஸ்ரீ.

"சொல் ஒரு சொல்" பதிவில் சமீபத்தில் "திகிரி" குறித்த விளக்கங்களை நீங்கள் இட்டிருந்ததையும் பார்த்தேன். பயனுள்ளதாக இருந்தது.

 
At 11:17 AM, August 30, 2006, Blogger VSK said...

ஜெயஸ்ரீ அவர்கள் சொன்னது போல் தான் வருகிறது.

ஓர்மம் (p. 0627) [ ōrmam ] n ōrmam . < ஓர்மி-. Fortitude, courage, bravery; மனோதிடம். (J.)

 
At 6:59 PM, August 30, 2006, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Selvanayaki,

thanks for the post. I hope Thiru or somebody else would upload the mp3 version. The urge to listen to it has increased after reading Singai Nathan's comment.

Here's an old post of podichichi's, some parts of it and the comments are quite relevant to this post.

http://peddai.net/?p=18

-Mathy

 
At 11:47 PM, August 30, 2006, Blogger தருமி said...

இனிமேல் புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறேன் - பதிவுக்கு நன்றி என்பதைத் தவிர...

ஆனாலும், அத்தி பூத்தது போல் எப்போதோ, எங்கேயோ இப்படி ஒரு நிகழ்வு இன்னும் கொஞ்சம் நீதி நியாயம் இருக்கிறதென்பதை மெலிதாக நினைவுறுத்துகிறது. ஆனால் அந்த நினைவுறுத்துதலே நியாயத்திற்காகக் காத்திருக்கும் பெரிய மக்கள் கூட்டதை வேதனையோடு நினைவுறுத்துகிறது.

 
At 12:50 AM, August 31, 2006, Blogger செல்வநாயகி said...

விஜயாவுக்குப் பக்கபலமாக நின்ற இயக்கங்களும், அமைப்புக்களும் போன்ற ஆதரவு கிடைக்கும்போது பாதிக்கப்பட்ட பெண்களின் போராட்டம் வலுப்பெறவும், சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும் முடிகிறது. யாருக்கும் தெரியாமல் அல்லல்படும் நிலையில் உள்ளவர்களுக்கு இது இன்னும் துயரமானது. உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி தருமி.

மதி, நீங்கள் தந்துள்ள சுட்டியை ஏற்கனவே தங்கமணியும் தந்திருந்தார். அப்பதிவைப் படித்தேன். நன்றி.

 

Post a Comment

<< Home