நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, January 01, 2010

நான் நீங்களாகாத வரை...
பார்பராவை சமீபமாகத்தான் தெரியும். அடுக்கடுக்காய்க் குடும்பங்கள் நிறைந்திருந்த அந்தப் பொந்தில் புதிதாய் வந்து சேர்ந்துகொண்டபோது யாரையும் அறிந்திருக்கவில்லை. யாரையும் சட்டென்று போய் அறிந்துகொள்ள ஆர்வமுமில்லை. வாழ்வில் நாம் உள்ளம் தொடும் உறவுகள் பலதைத் திட்டமிட்டுக்கொண்டு அறிந்துகொள்வதும் இல்லை. நல்ல வெய்யிலில் சைக்கிள் டயர் ஒன்றைக் குச்சி கொண்டு தட்டிக் கூடவே ஓடும் சிறு பிராயத்தில் எதிர்பாராமல் வரும் ஐஸ்காரனுடன் கூடவே நாலணாவும் கையில் இருந்து விடுவதைப்போலத்தான் சில மனிதர்களைச் சந்திப்பதும், ஒட்டிக்கொள்வதற்கென்று சில காரணங்களை அவர்களிடத்தில் கண்டடைவதும். பார்பராவைச் சந்திக்கவும் எந்தத் திட்டமிடுதலும் இருக்கவில்லை. சாமான்கள் வந்துகொண்டிருந்த திறந்த கதவுக்கு வெளியே வெளிர்நீலச் சட்டையும் பளீரென்ற சிரிப்புமாக நின்று கையசைத்தார். "நான் உன் அண்டை வீட்டுக்காரி, உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, ஏதேனும் உதவி வேண்டுமா?"...அந்தக் கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியேயும், உள்ளேயும் அவசரமாய் ஓடிக்கொண்டேயிருந்த மனிதர்களுக்குள் பார்பரா இப்படி நின்றுவிட்டு நடந்தார். "எனக்கும் அப்படியே பார்பரா, நன்றி". அன்றைய பேச்சு அவ்வளவுதான்.

பிறகான நாட்களில் பேசிக்கொள்ளாமலேயே தெரிந்துகொண்டது பார்பராவுக்குச் சின்னச் சின்ன வயதுகளில் ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள் என்பது. வெளியிலே குளிருக்கிதமான ஆடைகள் அணிவித்து விளையாடிக் கொண்டிருப்பார். அம்மாவைக் கத்தி அழைத்துக்கொண்டு துரத்தித் தொட்டுக்கொண்டிருப்பார்கள் அவர்கள். பனிகொட்டத் தொடங்கியிருந்த ஒரு நண்பகலில் வீடு வந்து சேர்ந்தபோது கைகளில் அளவுக்கு மீறிய பளு இருந்தது. வாசல் கதவு திறக்கத் திணறிக்கொண்டிருந்தபோது உள்ளே எங்கிருந்தோ பார்த்து ஓடி வந்து கதவைத் திறந்தார். கூடவே ஒரு மன்னிப்புக் கேட்டார் கையில் சிகரெட் வைத்துப் புகைத்துக் கொண்டிருந்ததற்காக. பிறகு அடிக்கடி கண்ணாடி வழி பார்த்தால் வெளியே புகை பிடிப்பதற்கென்றே வந்து நடந்துகொண்டிருக்கும் பார்பராவைப் பார்க்க முடிந்தது. யாரேனும் அவ்வழி கடக்க நேரிடுகிறபோது அவர் வெளிவிடும் புகை கடப்பவர் நாசியேறுமேவெனப் பதைபதைத்து மன்னிப்புக் கேட்பதையும் கூடவே. தன் சக்கர நாற்காலியுடன் தன்னந்தனியே படியேற முடியாதவருக்கு ஓடிச் சென்று உதவுவது, வண்டியை நிறுத்துவோருக்குப் பின்னாடியிருந்து போதும் எனச் சாடை செய்வது என இன்னபிற காலத்தினால் செய்யும் உதவிகள் எனவும் இருந்தார் அப்படிப் புகைபிடிக்கும் நேரங்களில்.

போகப் போகப் புரிந்தது பார்பாராதான் ஓடிஓடி மனிதர்களை நேசித்துக் கொண்டிருந்தாரே தவிர பார்பராவுக்கு யாரும் அப்படி இல்லை என்பது. ஊருக்கு நிழலாகும் மரங்களுக்கு ஏது நிழல்? பார்பரா தனியாகத்தான் இருக்கிறார். இந்தத் "தனி" என்பது ஒரு பெண்ணுக்கு எந்தத் தனியாகவும் இருக்கலாம். உறவினர்களும், நண்பர்களும் குறைவுதான். பொறுக்கப் பருக்கைகளற்ற இடத்தில் காகங்களும் கரைவதில்லை.

மாதங்களாய் வாழ்ந்ததில் பார்பரா என்னும் நல்ல மனுசியைத்தான் தெரிந்து வைத்திருந்தேன். ஒன்றுக்கும் ஆகாத ஒரு வெட்டிப் பொழுதில் அந்த இந்தியத் தோழி பார்பராவைப் பற்றிய தன் கதைகளைச் சொன்னாள். கதை சொல்வதில், அடுத்தவர் பற்றிய புனைவுகளை வரைவதில் தேர்ந்த கதை சொல்லிகள் எங்கும்...எங்கெங்கும்... மிகுந்த சுவாரசியங்களோடு அவள் சொல்லி முடித்த கதைகளுக்குப் பின்னால் பார்பராவின் பழக்கத்திலிருந்து என்னைப் பிரித்து விடும் எத்தனங்கள் இருந்தன. மௌனத்தோடு விடைபெற்றுக் கொள்கையில் அவளுக்குச் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட முடியவில்லை. நாகரீகப் போலிப் பெருஞ்சுமை கழட்ட முடிந்தால் பல நிமிடங்கள் பாக்கியம் பெற்றவை.

மிக நெடிய புகைப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போராடிய நண்பன் அபாயத்தை நோக்கி உடல் அடியெடுத்து வைப்பதான எச்சரிக்கைக்குப் பிறகு மருத்துவ உதவிக்குப் போயிருந்தான். ஒரு முறை, இருமுறை, பலமுறை கவுன்சிலிங் பலனேதும் தந்தபாடில்லை. இடையிலே எப்போதோ கற்றுக்கொண்ட கேவலம் ஒரு உடல்பழக்கத்தை விடுவதற்கு இத்தனை ஆலோசனைகளா? ஆமாம். பழக்கங்களில் இருந்து விடுபடல் அவ்வளவு எளிதல்ல. மீண்டும் ஒருமுறை குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதாகச் சொன்னான். மருத்துவர்கள் அவனை நடத்திய விதம் அப்படித்தான். எப்படியும் எந்த இதத்திற்கும் வளைந்து கொடுக்காத பழக்கத்திற்கு, ஒரு போதைக்கு மருந்தாய் இன்னொரு போதையை மருத்துவர்களே பரிந்துரைத்தார்கள். நிக்கோடின் சிகரெட்டுக்குப் பதில் நிக்கோடின் கம் என்று சில நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதன் ஆபத்து எந்த விதத்திலும் அவன் பழக்கத்திற்குக் குறைந்ததல்ல என்றாலும் குணப்படுத்தலின் ஒரு படியாய் அப்போதைக்கு வடிவம் மாற்றப்பட்டது. மீண்டும் மீண்டும் மருத்துவ மனைப் படையெடுப்புகள், ஆலோசனைகள். கடைசியாகவும் எல்லாம் எடுத்துவிட்ட பின்பு ஒருநாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நா வறண்டு, வாய் உலர்ந்து எதையாவது தந்தே ஆகவேண்டுமெனக் கிறுகிறுத்து ஆடுகிற மூளையைச் சரிக்கட்டியே ஆக ஒயின் ஒரு பெக் என்று அவன் மருத்துவ முன்னேற்றம் போய்க்கொண்டிருக்கிறது. சிகெரெட் கம்பெனிக்காரன் காசு சம்பாதிக்கிறான். சிக்கிக் கொள்பவன் இந்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

அவனோடு உரையாடிவிட்டு வரும் வழியெங்கும் மனம் அசைபோட்டுக்கொண்டு வந்தது....."ஒரு ஏழு வருட உடல் பழக்கத்தை உதறிவிட முடியாது விடுதலையாவதில் இத்தனை சிரமங்கள் இருக்கும்போது மனப்பழக்கங்கள் அதுவும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஊறிப்போன கசடுகளைக் கழுவுதல் எளிதா என்ன? அப்படிக் கழுவ வேண்டுமெனில் போதையிலிருந்து மீண்டவன் போதையில் கிடப்பவனை அணுகவேண்டிய வழிமுறைகள் என்னென்ன? போதைக்குத் திட்டமிட்டே அடிமைப்படுத்துபவனுக்கும், அதில் ஒரு ஈசலைப் போல் விழுந்துகிடப்பவனுக்கும் வேறுவேறு வழிமுறைகள் அறியாத மருத்துவம் எதை நோக்கிய பயணம்? சுற்றிக் கொண்டிருந்த மனதைக் கூட்டிக்கொண்டு வந்து படுக்கையில் விழுந்தபின்பு ஒரு சுற்றுத் தூக்கம் முடிந்திருக்கும். சுவர்களைத் தாண்டி இருளைப் பிளந்து சீரான இடைவெளிகளில் அதிர்வதும் அடங்குவதுமாய் இருந்தது பார்பராவின் இருமல்.

அப்போதுதான் கேட்டுவிட்டு வந்திருந்த நண்பனின் நிகழ்வும், பார்பராவை நம்பி யாருமற்றுக் கண்களில் உலகைத் தேடி வளரும் பிஞ்சுகளும், விபரீதக் கனவுகளுமாய்க் கண்களில் வந்துபோய்க் கொண்டிருந்தன மீதித் தூக்கத்தில். காலையில் கதவு திறந்து சந்தித்துக்கொண்டபோது பார்பரா மீண்டும் புகைத்துக் கொண்டிருந்தார். "எப்படியிருக்கிறீர்கள் பார்பரா?".....அவரிடமிருந்து புன்னகை. பதில்களற்ற பதில் ஒன்றைச் சொல்ல புன்னகையே உகந்தது. "நீங்கள் இந்தப் புகைப்பழக்கத்தைக் கைவிட முயற்சிகள் எடுத்துக்கொள்ளலாமே பார்பரா, நேற்று இரவு நிறைய இருமிக் கொண்டிருந்தீர்களே?".... "மன்னிக்கவும், தூக்கம் பாதிக்கப்பட்டுவிட்டதா? முயல வேண்டும்தான்....நன்றி...ஆனால்.....வேண்டாம்...என் பிரச்சினை உனக்குப் புரியாது, வருகிறேன் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க வேண்டும்" பார்பரா மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். சரிதான் பார்பரா...நான் நீங்களாகாத வரை எனக்குப் புரியாதுதான்....பார்பராவிடம் முதன்முறையாக மன்னிப்புக் கேட்கத் தோன்றியது. என்றாலும் இன்னொருநாள், பிறகொருநாள், அதற்கும் பிறகொருநாள் என உங்களிடம் பேசிக்கொண்டுதானிருக்கப் போகிறேன் இந்தப் போதையை நிறுத்துவதற்காக. என்னால் காத்திருக்க முடியும் உங்களை நானும், என்னை நீங்களும் புரிந்துகொள்ளும் புள்ளி வரும்வரை...

15 Comments:

At 12:53 AM, January 02, 2010, Blogger ஆடுமாடு said...

நல்லாயிருக்கு.

பார்பரா மாதிரி எனக்கு, எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, ஒவ்வொரு வருட முதல் நாள் தீர்மானத்துல சிகரெட்டை விட்டுடணும்னு நினைக்கிறேன். முடியலை.

இதை சொல்ல எனக்கே வெட்கமாத்தான் இருக்கு. என்ன ஜென்மமோ நான்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

 
At 1:39 AM, January 02, 2010, Blogger sornavalli said...

ithu nijama illai punaiva nu theriyala


aanaal arumai selva ! eluthukkal vaseegarikkirathu

 
At 10:40 AM, January 02, 2010, Blogger சந்தனமுல்லை said...

வணக்கம் செல்வநாயகி,

இடுகை மிகவும் அருமை! /ஊருக்கு நிழலாகும் மரங்களுக்கு ஏது நிழல்? / இதை மிகவும் ரசித்தேன்!

விரைவில் பார்பராவை சந்திக்கும் புள்ளி வந்தடையட்டும்!

புத்தாண்டு வாழ்த்துகள், தங்களுக்கும் , குடும்பத்தினருக்கும்!

 
At 9:20 AM, January 03, 2010, Blogger ரௌத்ரன் said...

//டயர் ஒன்றைக் குச்சி கொண்டு தட்டிக் கூடவே ஓடும் சிறு பிராயத்தில் எதிர்பாராமல் வரும் ஐஸ்காரனுடன் கூடவே நாலணாவும் கையில் இருந்து விடுவதைப்போல//

எப்படி இப்படியெல்லாம் :))

நல்ல இடுகை.

 
At 5:38 PM, January 03, 2010, Blogger செல்வநாயகி said...

ஆடுமாடு, சொர்ணவல்லி, முல்லை, ரௌத்ரன்,
நன்றி.

 
At 6:56 PM, January 03, 2010, Blogger Thekkikattan|தெகா said...

ஆ... ஹா. உங்களுக்குப் புரியாதுதான். சிகரெட் துண்டம் விரல்களுக்கிடையில் அடைக்கலம் புகும் பொழுது ஏதோ மனதுக்கு நெருக்கமான நண்பனை/பியை பக்கத்து பெஞ்சில் உட்கார வைச்சு பேசிக் கொண்டிருப்பதனைப் போன்ற உணர்வு, பார்பராக்களுக்கு.

கண்டிப்பாக உங்களுக்கு அந்தப் புள்ளி அமையும்... ஆனால், பொறுமை வேண்டும். அந்த தோழி.... :))

 
At 12:46 PM, January 04, 2010, Blogger செல்வநாயகி said...

நன்றி தெகா.

 
At 1:30 AM, January 07, 2010, Blogger raki said...

This comment has been removed by the author.

 
At 1:49 AM, January 07, 2010, Blogger raki said...

"பொறுக்கப் பருக்கைகளற்ற இடத்தில் காகங்களும் கரைவதில்லை."

"சில மனிதர்களைச் சந்திப்பதும், ஒட்டிக்கொள்வதற்கென்று சில காரணங்களை அவர்களிடத்தில் கண்டடைவதும்"

"ஊருக்கு நிழலாகும் மரங்களுக்கு ஏது நிழல்? "

உண்மை வார்த்தைகளை நேசிக்கிறீர்கள்

ர ராதாகிருஷ்ணன்

 
At 6:25 AM, January 08, 2010, Blogger கமலேஷ் said...

வாழ்க்கையை அப்படியே பிரதி பலிகிறது உங்களின் எழுத்துக்கள்......அழமான அழுத்தமான பதிவு ,,,பாராட்ட வார்த்தைகளே இல்லை...வாழ்த்துக்கள்...

 
At 8:52 AM, January 08, 2010, Blogger அமர பாரதி said...

செல்வ நாயகி,

இனிய வளமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அழகான விவரிப்பு. புகைப் பழக்கத்தை விடுவது மிகவும் கடினம்தான். //போகப் போகப் புரிந்தது பார்பாராதான் ஓடிஓடி மனிதர்களை நேசித்துக் கொண்டிருந்தாரே தவிர // அமெரிக்கர்கள் பெரும்பாலும் உதவி செய்யும் குணம் கொண்ட நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.

 
At 12:17 PM, January 08, 2010, Blogger பா.ராஜாராம் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வநாயகி!

இந்த பதிவு மிக நெகிழ்வு.ஆடுமாடு கதையே என்னுடையதும்.இன்னும் புத்தாண்டு தீர்மானம் கூட எடுக்க நினைக்கவில்லை.போகிறது வரையில் போகட்டும்..

:-)

 
At 10:49 PM, January 09, 2010, Blogger செல்வநாயகி said...

ராகி, கமலேஷ், அமரபாரதி, பா.ராஜாராம்,

உங்களின் வருகைக்கு நன்றி.

 
At 5:58 AM, January 25, 2010, Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

பார்பரா கூடிய சீக்கிரம் புகைப்பழக்கத்தை விட்டுவிடுவார் என்றே நினைக்கிறேன் மேடம், அதை இந்தப் பதிவு சொல்கிறது.
கண்டிப்பாக அதையும் நீங்கள் ஒருநாள் எழுதக்கூடும்.

மனிதர்களைச் சந்திப்பதும், ஒட்டிக்கொள்வதற்கென்று சில காரணங்களை அவர்களிடத்தில் கண்டடைவதும்//

ஊருக்கு நிழலாகும் மரங்களுக்கு ஏது நிழல்? //

பொறுக்கப் பருக்கைகளற்ற இடத்தில் காகங்களும் கரைவதில்லை.//

நாகரீகப் போலிப் பெருஞ்சுமை கழட்ட முடிந்தால் பல நிமிடங்கள் பாக்கியம் பெற்றவை//

மிகவும் ஈர்த்து பலதடவை படித்த வரிகள்

 
At 11:33 PM, January 26, 2010, Blogger கோமதி அரசு said...

//பொறுக்கப் பருக்கைகளற்ற இடத்தில் காகங்களும் கரைவதில்லை//

ஆம் செல்வநாயகி ,மிக,மிக உண்மை.

//என்னால் காத்திருக்க முடியும் உங்களை நானும் என்னை நீங்களும் புரிந்து கொள்ளும் புள்ளி வரும் வரை.//

வெகு சீக்கிரத்தில் வரட்டும் அந்தகாலம்.
வாழ்க வளமுடன்.

 

Post a Comment

<< Home