சுய விலாசம்
அறிவின் ஒளி சுடர்விட நின்றாள் ரூபி
"குருப்பிரம்மா குருவிஷ்ணு குருதேவோ"
வாயில் வரும்வரை விடவில்லை விஸ்வநாதன்
செங்கல் எடுத்துத் தந்துகொண்டிருந்தாள் மேஸ்திரிக்கு
சும்மாடு கூட்டிய தலையோடு
கண்ணப்பன் மகள் ருக்காள்
குதிரையில் நின்றிருந்த அவன் கைகளுக்கு எட்டாமல்
மூச்சுப்பிடித்துக் காலுந்தியதில்
உள்ளாடையில்லாப் பாவாடை நனைத்தது
முட்டிய மூத்திரச் சொட்டு
பதனாறு தொடங்கையில் தாலியும்கட்டி
சிண்டும் நண்டுமாய்ப் பிள்ளைகளை விட்டு
வேலைக்குப் போன கருங்கல் லாரியில்
தலை நசுங்கி முழியும் பிதுங்கினாள்
ரூபியின் நாவில் சரஸ்வதி அமர்ந்தாள்
சகல தெய்வங்களும் இவளையும்
இவள் சகல தெய்வங்களையும்
காலம் முழுக்கக் கட்டியணைத்து
கல்வியின் மேன்மைக் கனங்கள் அழுத்த
சுய விலாசத்தை எழுதிப்பதிகிறாள்
"விஸ்வநாத ஐயர்" மகள் தான் என
பளிச்சென்று தெரிகிறது
ரூபியின் சுயவிலாசத்தில்
முகவரியற்றுச்செத்துப்போன ருக்காளின்
பாவாடை நனைத்த மூத்திரக்கறை
12 Comments:
கவிதை முடிந்ததும் வாசகனை தொடங்கவைக்கும் கவிதை. ரூபியின் சுயவிலாசத்தில் ருக்கா எப்படி என நான் தொடங்கியிருக்கிறேன்.
//சுய விலாசத்தை எழுதிப்பதிகிறாள்//
கூடவே இன்னமும் தேவையா இடப் பங்கீடு (இட ஒதுக்கீடு அல்ல) போன்ற விவாதங்களில் மிக ஆர்வமுடன் பங்கேற்றுக் கொண்டு...
நாயகி, எப்பொழுதும் போலவே உங்க கை ரேகை தெரிகிறது, கவிதையில். அருமை போங்க!
நல்லாயிருக்கு செல்வநாயகி...
முதலில் புரியவில்லை..கடைசி வரிகள் ஏதோ புரிவது போல இருந்தது - திரும்ப இரண்டு முறைகள் வாசித்தேன். வீரியமான எழுத்துகள்!
பி.ஏ.ஷேக்தாவூத்,
இடுகைக்குத் தொடர்பற்றது எனக் கருதுவதால் உங்கள் பின்னூட்டத்தைப் பிரசுரிக்க இயலவில்லை, மன்னிக்கவும்.
எழுத்தனைத்தும் சிறப்பாக
எண்ணமெல்லாம் துடிப்பாக
வடித்தளிக்கும் உங்களை நான்
வாயார வாழ்த்துகின்றேன்
கொழுத்தவர்கள் செய்து வைத்த
கொடுமையெல்லாம் பெண்களுக்கே
அழுத்தம் இதில் அன்னையென்னும்
ஆபாசப் பம்மாத்து நெல்லை கண்ணன்
மறுமொழியிட்டிருக்கிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
//எழுத்தனைத்தும் சிறப்பாக
எண்ணமெல்லாம் துடிப்பாக
வடித்தளிக்கும் உங்களை நான்
வாயார வாழ்த்துகின்றேன்
நெல்லை கண்ணன்////
நீங்கள் இணையத்திலும் எழூதிக்கொண்டிருக்கிறீர்கள் என இப்பின்னூட்டம் மூலம் அறிந்தேன். மகிழ்ச்சியும், வரவேற்பும்.
ரவி,
இவ்விடுகையில் பின்னூட்டமாக இடப்பட்டிருந்த உங்களின் மடல் கண்டேன். வழமையான அன்புக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் செல்வநாயகி.
செல்வராஜ் அவர்களின் நூல் குறித்து எழுதிய தலைப்பை கூகுள் பஸ் மூலமாக கண்டு உள்ளே வந்தேன்.
ஈரோட்டில் உள்ள தமிழ்மணம் செல்வராஜ் அவர்களிடம் பேசி விட்டு இந்த பின்னோட்டத்தை அடிக்கின்றேன்.
நீங்கள் பக்கத்தில் நின்று இருந்தால் நீங்கள் பெண்மணி என்று கூட பாராமல் உங்கள் உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பேன். என்னவொருஅற்புதம்.
ஆகா மறக்க முடியாத வார்த்தைகள்.
சரியான நபருக்கு சரியான நபரிடம் இருந்து பாராட்டுகள்.
அதுவும் பதிவுலகம் குறித்து சொல்லியவைகள் நிதர்சனம்.
குற்ற உள்ள மனங்கள் குறுகுறுத்த மக்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.
நல்வாழ்த்துகள்.
ஜோதிஜி,
உங்களின் அன்புக்கு நன்றி.
ஐயோ என்ன இப்படி சொல்லிட்டீங்க.
உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லனும். இது போன்ற இடுகைகள் தான் என்னைப் போன்ற ஜீவன்களை நம்பிக்கை கொள்ள வைக்கின்றது.
உங்கள் இடுகையை படித்து விட்டு ஈரோட்டில் இருக்கும் திரு செல்வராஜ் அவர்களிடம் ரொம்பவே கூச்சப்படும் அளவிற்கு புகழ்ந்து தள்ளிவிட்டேன்.
காரணம் உங்கள் ஒவ்வொரு வரியும் ஐவரி.
மனதில் இருக்கும் என்னுடைய அத்தனை ஆதங்கமும் அப்போது எனக்கு வடிந்தது போல் இருந்தது.
ஜோதிஜி,
உங்களின் அறிமுகம் நெகிழ்வைத் தருகிறது. செல்வராசு அவர்களும் உங்களின் தொலைபேசி விசாரிப்புகள் பற்றி எழுதியிருந்தார். நீங்கள் நிறையப் புகழும் அளவுக்கு நான் பெரிதாக என்ன செய்துவிட்டேன்? நம்மூர்க் காடு மேடுகளில் சுற்றிக் கொண்டிருந்தவள்தான். வாழ்வு விசிறியடித்த திசைகளில் பயணித்துக்கொண்டு தற்சமயம் எழுதக் கிடைத்த இந்த ஊடகத்தை அவ்வப்போது சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
உங்களைப் போன்றவர்கள் உடன் வருகிறீர்கள் என்பதுதான் உற்சாகம். நன்றி.
Post a Comment
<< Home