நம் இசை வேறுவேறானது
இசையின் வெளியைப் பருகி உறைந்தேன்
தேனில் துவண்ட வண்டென ஆனேன்
என்றென் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன்
அந்தப் பாடக நண்பன் நம்புவதாயில்லை
இடைவெளியின்றி
ஒட்டிப் பொருத்திய உதடுகள் துணுக்குற
அடித்தொண்டை கனைத்தொரு ஒலியை எழுப்பி
என்ன ராகமென்று கேட்டான்
பட்டுத் துணிகளால் பொத்தி வைத்திருந்த
தன் இசைக்கருவிகள் காட்டி
ஒன்றையேனும் வாசித்துக் காட்டென்றான்
தப்பட்டை லயத்தை எழவுவீட்டில்கூடப்
பார்த்திருக்க வக்கற்றவனுக்கு
இசையின் பரிபூரணத்தை எப்படி உணரவைப்பது?
******************
அவற்றின் நிறப்பொடிகள் கைநனைக்க
பட்டாம்பூச்சிகளை அனுப்பியிருந்தேன்
தட்டான்கள் வந்துசேர்ந்ததாகக் குறிப்பு வருகிறது
எல்லாவற்றையும் மாற்றிவிட
இடையில் யாரேனும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள்
*******************
முற்றி வெடித்த வெள்ளைச் சோளக் கதிரில்
உட்காரவும் முடியாமல் விடவும் முடியாமல்
பறந்து பறந்தேனும்
சில சோளங்களை ருச்சிபார்த்துக் கொண்டிருக்கிறது
நீலவால்க் குருவி
ஒரு மழை வருவதற்குள்ளாகவோ
அல்லது
வெட்டப்படுவதற்குள்ளாகவோதான் எல்லாமும்
****************
வானம் பகலிலும் இருட்டாக இருந்தது
சூரியன் பூமிக்கு வந்துவிட்டதாய்ச்
செய்தியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்
எல்லோரும் வானத்திற்குக் குடிபெயர
வாகனங்கள் வந்துகொண்டிருந்தன
முதல் வாகனத்தில் கடவுள் ஏறிக்கொண்டார்
பிறகு மதங்கள்வாரியாகவும்
மதங்களுக்குள் சாதிகள்வாரியாகவும்
மக்கள் ஏறிக்கொள்ள வரிசை அமைந்தது
இனி மற்றதெல்லாம் சுலபம்தான்.
***************
Thanks for the picture:- 2.bp.blogspot.com
13 Comments:
முதல் கவிதை - செமையா இருக்குங்க! எனது பட்டாம்பூச்சிகளும் தட்டான்களாக மாறியிருக்கிறது! :-)
கவிதை அருமை செல்வநாயகி.
நீலவால்க் குருவி கவிதை நல்லா இருக்கு.
முல்லை, கோமதி அம்மா,
நன்றி மறுமொழிகளுக்கு.
\\எல்லாவற்றையும் மாற்றிவிட
இடையில் யாரேனும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள்//
வாழ்க்கை அரசியல்!!..
\\உட்காரவும் முடியாமல் விடவும் முடியாமல்
பறந்து பறந்தேனும்//
நமக்கும் நீல வால் இருக்குதோ..:)
//எல்லாவற்றையும் மாற்றிவிட
இடையில் யாரேனும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள்//
பிடிச்சிது
முத்து,
வாழ்க்கை அரசியல்......சொல் நல்லா இருக்கு.
தருமி,
நன்றி, உங்கள் பதிவில் பிரச்சினை எனப் படிக்க நேரிட்டது வருத்தமாக இருந்தது, சரியாகியிருக்குமென நம்புகிறேன்.
வெள்ளைச் சோளம் பச்சை கதிரை ஒடித்து தின்னா கடைசியிலே ஒரு ருசி வருமே அதுமாதிரி இருக்குதம்மா.
தாராபுரத்துக்காரர்,
வாங்க, சோளக்கதிர், கம்மங்கதிர் தின்ற காலங்கள் நினைவு வருகின்றன. உங்கள் பாராட்டுக்கு நன்றி. சரளமாகக் கணினித் தமிழைக் கற்று வேகமாக நீங்கள் இயங்கி வருவதறிந்தும் மகிழ்ச்சி.
வானம் பகலிலும் இருட்டாக இருந்தது
சூரியன் பூமிக்கு வந்துவிட்டதாய்ச்
செய்தியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்
எல்லோரும் வானத்திற்குக் குடிபெயர
வாகனங்கள் வந்துகொண்டிருந்தன
முதல் வாகனத்தில் கடவுள் ஏறிக்கொண்டார்
பிறகு மதங்கள்வாரியாகவும்
மதங்களுக்குள் சாதிகள்வாரியாகவும்
மக்கள் ஏறிக்கொள்ள வரிசை அமைந்தது
இனி மற்றதெல்லாம் சுலபம்தான்.//
enna solvathendre theriyavillai....
"எல்லாவற்றையும் மாற்றிவிட
இடையில் யாரேனும் இருந்துகொண்டேயிருக்கிறார்கள் "
நல்ல வரிகள் ...
தட்டான்கள் கூட பட்டாம்பூச்சிகள் ஆகிறது
அது உன்னிடம் இருந்து வரும்பொழுது...
இப்படித்தன எல்லாரும் எழுதுவார்கள் ??
அனன்யா,
மாற்றி எழுதிவிட்டேனோ:))
ஆச்சரியப்படுத்தும் எழுத்துக்கு சொந்தக்காரர் நீங்கள். ஆனால் இந்த வலை தள அமைப்பு என்ன பாவம் செய்தது?
அதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டீர்கள்?
இல்லை நீங்களும் என்னைப் போல இது குறித்த தொழில் நுட்பம் தெரியாதா?
ஜோதிஜி,
Thank you for your kindness.
Post a Comment
<< Home