பதின்மம்
பதின்மத்தைப் பற்றி என்ன சொல்வது?
தட்டான் பறந்த தூரத்தின் உயரமே இருந்த வாழ்வு
விண்ணில் ஏறி நிலவில் மிதந்து
எங்கும் நிற்காமல் அலைந்த கனவு
அப்பனும் ஆத்தாளும் முக்கனிச்சுவைக்கு வகுப்பெடுத்திருக்க
வேப்பங்காய்ச் சுவை விரும்பித் துடித்த மனதே குரு மற்றவர் எதிரிகள்
சிறுவனும் சிறுமியும் ஊரே அறியத் தொடுத்த அரும்புகள்
ஆணாய்ப் பெண்ணாய் விரிந்து உதிர்ந்த ரகசியப் பொழுதுகள்
உலகை உலுக்கும் அநீதிகளனைத்தையும்
பொசுக்கும் ரௌத்திரம் எனதெனச் சொல்லி
மருதாணி சிவக்கா ராத்திரிக்காக
அழுது சிவந்த கண்களில் மிஞ்சிய
வீரப்புரட்சியின் வெம்மைச் சுவடுகள்
சைக்கிள் ஓட்டிய சாகசத் தழும்புகள்
நீச்சலில் உடைத்த முழங்கால் சில்லுகள்
கவிஞராகி, எழுத்தாளராகி ஓவியருமான
காகிதக் கற்றைகள்
எல்லாம் உள்ளன பதின்மத்தின் சாட்சிகளாய்
இன்னும் சொல்லா நிகழ்வுகளின் சொற்ப ரணங்களும்
கொட்டிய அருவி நதியானால் என்ன
இசை இன்னும் இருந்துகொன்டுதானிருக்கிறது
அதற்குரிய சுருதியோடு
இந்த இசை இருக்கும்வரை இருக்கும் வாழ்வும்.
பின்குறிப்பு:-
அழைத்த தெக்கிக்காட்டானுக்கும், ஆரம்பித்த முல்லைக்கும் கடும் கண்டனங்கள்:))
36 Comments:
\\அப்பனும் ஆத்தாளும் முக்கனிச்சுவைக்கு வகுப்பெடுத்திருக்க
வேப்பங்காய்ச் சுவை விரும்பித் துடித்த மனதே குரு மற்றவர் எதிரிகள்//
அழகா சொல்லிட்டீங்க :)
ம் சுருக்கமா இருந்தாலும் சொல்லவந்ததயும் சொல்லிட்டீங்க ..சொல்லமுடியாததை சொல்லவும் இல்லை... :)
உலகை உலுக்கும் அநீதிகளனைத்தையும்
பொசுக்கும் ரௌத்திரம் எனதெனச் சொல்லி
மருதாணி சிவக்கா ராத்திரிக்காக
அழுது சிவந்த கண்களில் மிஞ்சிய
வீரப்புரட்சியின் வெம்மைச் சுவடுகள் //
மிகவும் ரசித்தேன்.
சுருக்கமா எழுதிட்டீங்க, ரொம்ப பெரிசா எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
ம் சுருக்கமா இருந்தாலும் சொல்லவந்ததயும் சொல்லிட்டீங்க ..சொல்லமுடியாததை சொல்லவும் இல்லை... :) //
- அனேகரின் பதிவில் சொல்லாமல் விடுபட்டவைக தான் நிறைய இருக்கும் போல ;)))
//அழைத்த தெக்கிக்காட்டானுக்கும், ஆரம்பித்த முல்லைக்கும் கடும் கண்டனங்கள்:))//
:-))))
//உலகை உலுக்கும் அநீதிகளனைத்தையும்
பொசுக்கும் ரௌத்திரம் எனதெனச் சொல்லி
மருதாணி சிவக்கா ராத்திரிக்காக
அழுது சிவந்த கண்களில் மிஞ்சிய //
:) எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருந்தது. கம்மலே போடாத காலத்திலும் அழகா இருக்குன்னு கம்மல் வாங்கினேன். சிலதை மாத்தறது கொஞ்சம் கஷ்டம்தான்.
/கொட்டிய அருவி நதியானால் என்ன
இசை இன்னும் இருந்துகொன்டுதானிருக்கிறது/
:-) இப்பவே இப்படின்னா அருவியாக தங்கள் எத்தனை வேகத்துடன் இருந்திருப்பீர்களென்று நினைத்து பார்க்கிறேன்! உங்களுக்கு ஓவியர்-னு இன்னொரு முகமும் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன்!
இந்த கவிதையும் ஒரு அழகான ஓவியமா இருக்கு! :-)
தொடர்ந்தமைக்கு நன்றி!
:))))) நாயகி, நான் உங்ககிட்ட கேட்டுக்கிட்டு பின்னே இணைப்போம்னு கேட்டேன், நீங்க எனக்கு முன்னாடியே போட்டு தொடரழைப்போட மரபையே மாத்தி அமைச்சிட்டீங்க. :)) எப்பொழுதும் போலவே சுருக், நறுக் - இதையாவது நீட்டி முழக்கி எழுதியிருந்திருக்கலாம். நன்றிங்கோவ்!
ம்ம்...
:)
செல்வநாயகி, கவிதை அழகு. இவை அனைத்தும் இல்லாத சோகம் கனத்த மனதுடன் இழையோடுகிறது.
முத்து,
சொல்ல முடியாதன அல்லது விரும்பாதன என நிறைய இல்லை, உண்மையில் வாழ்வில் சில மகிழ்ச்சிகள் சிலருக்கானவை என்பது போல் சில காயங்களும்கூடச் சிலருக்கானவை, அப்படி இங்கே ரணங்கள் என நான் குறிப்பிட்டு விட்டவை பல அத்தியாயங்களில் சொல்லப்பட வேண்டியவை. என்றைக்காவது சொல்ல முயலவேண்டும்தான். பார்க்கலாம். இப்போது தப்பிப்பதற்கு ஒரு பத்து வரிகள் எழுதிப்போட்டேன்:)) ஆமாம் கண்டனத்தில் உங்கள் பெயர் விட்டுப்போனது தெகாவை ஏன் எழுதச் சொன்னீங்க:))
அமித்து அம்மா,
சோமபலே சுருக்கத்திற்குக் காரணம்.
பதி,
ஒரே சிரிப்பா இருக்கீங்க, உங்களை மாட்டிவிட மறந்து விட்டேன், எழுதுங்க.
முல்லை,
ஓவியத்தையும் சாகடிக்கறதுன்னு முடிவு எதுக்குன்னு சில ஓவிய நலம் விரும்பிகள் கேட்டதால் விட்டாயிற்று:))
தெகா,
என்னது நீங்க எழுதும் முன்பே எழுதிவிட்டேனா:(( தூக்கக் கலக்கத்தில் உங்கள் மடல் பார்த்துப் பின் சொன்ன வேலையை ஒரு முறையாவது ஒழுங்காச் செய்யலாமேன்னு உடனே எழுதி அது இப்படி ஆகிவிட்டதா?
தமிழன் கறுப்பி,
ரொம்ப நாளாக் காணாமப் போயிட்டீங்க:))
அமரபாரதி,
நீங்கள் சொல்வதுபோல் தவறவிட்ட கணங்களுக்கான ஏக்கம் எப்போதும் இருக்கிறது நமக்குள்.
நன்றி அனைவருக்கும்.
இது ஒரு அழகான கவிதை.உங்க பதின்ம வயது டைரிக்குறிப்புன்னு பொய் சொல்லாதீங்கப்பா.ஏழு வருஷக்கதை அவ்ளதானா? (13 - 19)
சாந்தி லெட்சுமணன்,
தப்பிப்பதற்கு ஒரு பத்து வரிகள் எழுதிப்போட்டேன்:))
நன்றி.
கொட்டிய அருவி நதியானால் என்ன
இசை இன்னும் இருந்துகொன்டுதானிருக்கிறது
அதற்குரிய சுருதியோடு
இந்த இசை இருக்கும்வரை இருக்கும் வாழ்வும்.
நறுக்கென்று அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
நன்றி கண்ணகி.
//
கொட்டிய அருவி நதியானால் என்ன
இசை இன்னும் இருந்துகொன்டுதானிருக்கிறது
அதற்குரிய சுருதியோடு
இந்த இசை இருக்கும்வரை இருக்கும் வாழ்வும்.//
மிக அருமையான வரிகள்..
நன்றி உழவன்.
கவிதை நடையில் கதை. அருமையா இருக்கு.
நன்றி ஆடுமாடு.
//கொட்டிய அருவி நதியானால் என்ன இசை இன்னும் இருந்து கொண்டு தானிருக்கிறது அதற்குரிய சுருதியோடு
இந்த இசை இருக்கும் வரை இருக்கும் வாழ்வும்//
செல்வநாயகி ,இந்த வரிகள் அற்புதம்.
நன்றி கோமதி அம்மா.
அழகான நினைவலைகள் அம்மா.
///அழகான நினைவலைகள் அம்மா///
நன்றிங்க.
//தப்பிப்பதற்கு ஒரு பத்து வரிகள் எழுதிப்போட்டேன்:))//
அந்தப் பத்தும் செல்வ முத்துக்கள்.
தருமி,
வாங்க... நலமாக இருக்கிறீர்கள்தானே? இணையத்தில் வேறு வேலையைச் செய்துகொண்டிருந்துவிட்டு உறங்கச் செல்லும் முன் உங்களை இங்கு பார்த்தேன். அதிகமாய் இந்நாட்களில் வலைப்பக்கம் வர இயலுவதில்லை, எனவே உங்களைக் கண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
அக்கா
நீங்கள் எப்பொழுது விலாங்கு மீனாக மாறினீர்கள்.கொங்கு வட்டார இலக்கியத்துக்கு தலையாகவும் வினவு பிராண்ட் இலக்கியத்துக்கு வாலையும் கட்டுகிற மாதிரி இருக்கிறது.வினவில் உங்களது பின்னூட்டம் கண்டு அதிர்ந்தேன்.முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வில் இருந்து விடுபட விரும்புகிறீர்களா ? இப்பொழுது நாம் வாழும் வாழ்வுக்கும் அதற்கும் தொடர்பில்லாத போது எந்த வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்புகிறீர்கள் ? வினவு தனி மனித தாக்குதலின் உச்சகட்டத்தை எட்டி விட்டது பின்பு ஒரு நாள் செல்வநாயகி எழுதுவதும் சாதி இலக்கியமே என்று கண்டிப்பாக ஒரு பதிவெழுதி உங்கள் மீதும் சேறடிக்க முயல்வார்கள் ஏற்கனவே பழமைபேசி அண்ணனுக்கு அது நிகழ்ந்து விட்டது
அன்பிற்கினிய செந்திலான்,
இது விடயமாக நிறையச் சொல்ல இருக்கிறது. ஒரு இடுகையே எழுதவேண்டும் விரிவாகவும், முழுமையாகவும் எனது கருத்துக்களைப் பதிய. ஆனால் இப்போதைய அவகாசமின்மைகளில் நான் அரசியல், பதிவுலக விமர்சன இடுகைகளை எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன். பயம் காரணமல்ல, ஏற்கனவே முந்தைய காலகட்டங்களில் அத்தகைய இடுகைகளை விரும்பிச் செய்திருக்கிறேன். எழுதிய பிறகு குவியும் பின்னூட்டங்களில் கூடவே வந்துகொண்டிருக்கவும், இடுகை முழுதும் எழுதியும் அதை விளங்கமுடியாது பின்னூட்டமிடுபவர்களுக்கு விளக்கங்கள் எழுதி மாளவும் நேரம் கைவசம் இல்லை என்பதே காரணம்.
வினவில் கொங்கு வெள்ளாளர்களின் சாதிப்பற்று குறித்த கோவை இடுகையில் எனது பின்னூட்டத்தைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். எங்கெங்கும் கண்ணுக்குப் புலனாகும், புலனாகாத சாதியின் நிழல்கள் துரத்தவே நாம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்த நிழல் கொங்குவெள்ளாளர்களோடும் தொடரவே செய்கிறது. எங்களது குடும்பத்திலேயே ஒரு காதல் கலப்புத் திருமணத்தை நிறைவேற்றுவதற்காக நாங்கள் சந்தித்த தடைகள் பல. அதையும் மீறி அதை நடத்தி வைத்தோம். குடும்பங்களின் வேர்களை விட்டு தூரதேசங்களில் வாழும்போதும் இன்னும் ஊரில் நம் வீடுகளுக்குள் தலித்துகளை அனுமதித்து சரிசமமாக நடத்த முடிகிறதா என்பதை சிந்தித்து பாருங்கள். நாலைக்கே நான் ஊருக்கு வந்து எனது விருப்பங்களை சிந்தனைகளை இலகுவாக நடைமுறைப்படுத்த விரும்பினாலுமே கடுமையான எதிர்ப்புகளை உறவுகளுக்குள்ளேயே சந்திக்கத்தான் போகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, நம்மில் எத்தனையோ பேருக்கும் பொருந்தும். இதுதான் நமது அமைப்பு, வாழ்வு. இதை ஒத்துக்கொண்டுதான் நாம் அடுத்த தலைமுறையையேனும் இதிலிருந்து விடுவிக்க முடியும்.
வினவில் இடுகைகளின் பின்னால் பின்னூட்டங்கள் என்ற பேரில் தனிமனித தாக்குதல்கள் நடந்துவிடுவது குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறோம். அவர்களின் பர்தா நற்குடி இடுகையை வாசித்தீர்களா தெரியாது. எனக்கும் வினவுக்குமே இது குறித்து விவாதம் நடந்திருக்கிறது. ஆனால் நீங்கள் இன்னொன்றையும் நினைத்துப் பாருங்கள். அத்தகைய தாக்குதல்களை வினவு நண்பர்கள்மீது மற்ற பல பதிவர்களும்தான் தொடுத்திருக்கிறார்கள். அந்த விளையாட்டுக்களில் "அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்துகிறேன்" என்பதான பாவனைதான் பதிவுலகில்.
வினவில் அந்த இடுகையில் நான் பின்னூட்டமிட்டு வந்த பிறகு அங்கே பழமைபேசி ஒரு சுட்டி அளிக்கவும், அதன்பின் அவரைப் "பழமை வாயன்" என ஒரு நண்பர் திட்ட ஆரம்பித்துப் பின் வழமியான பாதையில் இருபுறத் தாக்குதல்களும் நடந்தேறின. வினவின் மீதும் பதிலுக்குத் தாக்குதல்கள் நடந்தன. எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கினீர்களானால் ஒன்றை நீங்கள் உணரமுடியும். நாம் எழுத்தில் அழகை, ஆராதனைகளை மட்டுமே வெளிப்படுத்த விரும்புகிறோம். கொங்குநாடென்றால் அதன் பெருமைகளையே நினைவில் வைக்கிறோம். அதன் இன்னொருபுறம் என்ற ஒன்று கசப்பானதாகவும் இருக்கிறது. அப்படியான கசப்பான பக்கங்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறபோது அந்தக் கசப்பைக் காட்டுகிறவர்கள் மீதான புரிதலிலும் தவறு செய்கிறோம்.
வினவின் ஊடக, உரையாடல் அணுகுமுறைகளை மாற்றச் சொல்ல நானும் அவர்களிடம் மடல்களிலும், இடுகைகளிலும் சன்டையிட்டிருக்கிறேன். ஆனால் அதற்காக அவர்களின் நியாயமான சமூக விமர்சனங்களை, தெருவில் இறங்கி அவர்கள் நடத்தும் போராட்டங்களை, ஏழை எளிய மக்களின் வாழ்வியலோடு கலந்திருக்கிற அவர்களின் அர்ப்பணிப்பை யாரும் உதாசீனப்படுத்திவிட முடியாது. அவர்கள் என்னையும் விமர்சிப்பார்கள் என்கிறீர்கள். எனக்கு நிச்சயம் அது ஒரு பிரச்சினையாக இருக்காது செந்திலான். நான் யார், எத்தகைய சிந்தனைகள் என்னுடையவை?, நான் எங்கே தவறு செய்கிறேன்? என் செயல்களுக்கும், சொல்லுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகளை என்னை நோக்கி நானே எழுப்பிக் கொள்கிறேன், பதில்களையும் கண்டுகொள்கிறேன். இப்படி ஒரு பயிற்சிக்குப் பழக்கப்படுத்திக்கொள்ள முடிந்தால் பிறகு நம் மேலான விமர்சனக்களில் உண்மை இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளவும், வெறும் தூற்றலும், தவறான புரிதலும் என்றால் வெகுசுலபாமாகக் கடந்துவிடவும் முடியுமல்லவா?
யோசியுங்கள். என்னை விலாங்கு மீனாக்கி விட்ட செந்திலானின் விமர்சனத்தையும் நான் ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறேன்:)) எனக்குக் கொங்கின் வாழ்வை அழகியலோடு மட்டும் எழுதும் விருப்பமில்லை, சமூகவியலோடும் தொடர்புபடுத்திப் பார்க்கவே விருப்பம். வினவைக் கனக்கில் வைக்காமல் பொதுவாக யோசித்துப் பாருங்கள் நம் வாழ்வு வெறும் அழகு மட்டும்தானா?
rajaram sir thalthil solliyirunthaanga.....vazhthukal!
athaan vanthen..:)
appuram inthak kavithai nallaayirukku!
பதின்ம பதிவுகள் அபாரம்
வாழ்த்துக்கள்
விஜய்
அன்பிற்கினிய செல்வநாயகி
வணக்கம்
இன்று வலையில் மேயுங்கள் திரு நெல்லை கண்ணன் அவர்களின் வலைபக்கத்தில் தங்களை பற்றிய சிறு தகவல் படித்தேன் மிகவும் இன்புற்றேன் எனவே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி அதை இங்கே தருகின்றேன்
தொடரட்டும் தங்களின் அயராத பணி
நல் வாழ்த்துகள்
ராதாகிருஷ்ணன் ஹைதராபாத்
வாழ்க தமிழுடன் !
நெல்லை கண்ணன்
Monday, March 22, 2010
தமிழ்மணம் பரிந்துரை : 0/0
Pathivu Toolbar ©2010thamizmanam.com
செல்வநாயகி என்றோர் பெண்ணார்
செல்வ நாயகி என்றோர் பெண்ணார்
சிறப்பாய்த் தமிழில் எழுதுகின்றார்
வல்லமை கொண்ட நல்லெழுத்து அவர்
வடிக்கும் யாவும் மெய்யெழுத்து
உள்ளத்துள்ளது எழுத்தாய் மாறும்
உயர்வு அதிலே தெரிகிறது
உயர உயர அவரின் எழுத்தால்
உண்மைத் தமிழும் உயர்கிறது
எழுதியது நெல்லை கண்ணன் வகைகள் பெண்ணுரிமை
just read .
very impressive..best wishes.
இரசிகை (நிறைய இடுகைகளை ஒரே நாளில் படித்துக் கருத்தெழுதியிருக்கிறீர்கள்), விஜய், ராகி (நீங்கள் சுட்டிய பிறகுதான் அவர்களின் இடுகையை வாசித்தேன்), டாக்டர் ருத்ரன்,
நன்றி உங்களின் மறுமொழிகளுக்கு.
மிகவும் ரசித்தேன்.
நல்ல கவிதை......
அழகா சொல்லியிருக்கிறீங்க........
உங்கள் தளத்திற்கு புதியவர் நான்...
வசதி இருக்கும் போது நம்ம பக்கமும் வர முயற்சியுங்களேன்..
நன்றி விடிவெள்ளி.
since march 2005 !!
எப்படி இங்கே வந்தேன்னு தெரியல..
நல்ல வேலை வந்தேன் :)
amazing works.. esp kavithaigal :)
kartin நன்றி.
Post a Comment
<< Home