நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, April 22, 2010

தர்மசபை
தர்மசபையைக் கடக்க நேரிடுகையில் எல்லாம்
நியாயங்களின் கூச்சல்கள் குருதிபுகத்தான் செய்கின்றன
இராமனும், தருமனும் கண்ணனும் தீர்ப்பெழுதும் அரங்கத்தில்
சீதையும் திரௌபதியும் எங்கிருக்கலாம் என்பது அறிந்ததுதான்
என்றாலும் சபை நடுங்கும் குரலெடுத்து
நீதியைக் கைகால் தலை பிரித்து அவர்கள் கூறிடும் அழகை
வீதியின் முனையொன்றிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்

வீடணனோ, கும்பகர்ணனோ, துரியோதனனோ, இவனோ, அவனோ
எவனோ ஒருவன் அகப்பட்டிருக்க வேண்டும் இன்றைய பரிபாலனத்திற்கு
ஏன் எவளோகூடக் கூண்டிலேற்றப்படவும் வாய்ப்புண்டு
குரங்கொன்றுக்குக்கூட நேராய்நின்று மோட்சம்தரத் திணறிய ராமந்தான்
தொண்டை புடைக்க நியாயங்களை விளக்குகிறான் தர்மசபையில்
குறிப்பெடுத்து ஏகபத்தினி விரதனை வழிமொழிகிறான் தர்மன்
தன் கருத்த தேகம் அதிர அரியாசனத்திலிருந்து இறங்கி
கையொப்பமிட்டு அதையே முடிவென்று எழுதுகிறான் கண்ணன்

சத்தியத்துக்கு நேர்ந்த சோதனையைத் தீர்த்துவைத்த
பெரும்களைப்பில் அதோ நீதிதேவன்கள் படியிறங்குகிறார்கள்
லட்சுமன, அர்ச்சுன சகாதேவன்களும் கைக்குட்டைகள் சகிதம் பிந்தொடர்கிறார்கள்
புனிதாத்மாக்களில் துளிர்த்த வியர்வை ஒற்றி எடுக்க


காதலோ கண்ணீரோ பெருக தர்மசபைநோக்கி
வெகுதூரத்திலிருந்து பதைத்து ஓடிவரும் ராதைக்குச் சொன்னேன்
"காத்திரு ராதா! சத்தியங்களும் சோதனைகளும் மாறினாலும்
சபையும் நீதிதேவன்களும் இதுதான் இவர்மட்டும்தான்
நாளை தன் அடியார்கள் பூத்தூவ மீண்டும் வரும்
கண்ணன் உனக்குத் தன் கைதூக்கி அபயமளிப்பான்"

படத்துக்கு நன்றி: www. blog.jennescalona.com

8 Comments:

At 5:01 AM, April 22, 2010, Blogger நேசமித்ரன் said...

//சத்தியங்களும் சோதனைகளும் மாறினாலும்
சபையும் நீதிதேவன்களும் இதுதான் இவர்மட்டும்தான் //

அறைகிறது வரிகள் .வடுக்களில் இருந்து முளைக்கத் துவங்குறது மரம்

 
At 11:02 AM, April 26, 2010, Blogger கோமதி அரசு said...

கண்ணனின் வரவுக்காக காத்திருக்கும்
ராதை போன்ற பெண்கள் எத்தனை எத்தனையோ!!

செல்வநாயகி,’தர்மசபை’ அருமை.

 
At 11:47 AM, April 26, 2010, Blogger கண்ணகி said...

இன்னும் மாற்றமில்லை தர்மசபை...

 
At 6:48 PM, April 26, 2010, Blogger தாராபுரத்தான் said...

சத்தியத்துக்கு நேர்ந்த சோதனை

 
At 9:32 PM, April 26, 2010, Blogger செல்வநாயகி said...

நேசமித்ரன், கோமதி அம்மா, கண்ணகி, தாராபுரத்துக்காரங்க எல்லோருக்கும் நன்றி.

 
At 8:18 AM, April 27, 2010, Anonymous Anonymous said...

Madam செல்வநாயகி!

"""தர்மசபையைக் கடக்க நேரிடுகையில் எல்லாம்
நியாயங்களின் கூச்சல்கள் குருதிபுகத்தான் செய்கின்றன""""

Stunning starting words!!
Its pleasure in reading your articles.
You are actually edifying us.
Thanks

S.Ravi
Kuwait

 
At 8:38 AM, April 27, 2010, Blogger செல்வநாயகி said...

ரவி,
உங்களின் வழமையான வாசிப்புக்கும், அன்புக்கும் நன்றி.

 
At 5:07 AM, May 04, 2010, Blogger Uma said...

நன்றி.

 

Post a Comment

<< Home