நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, June 22, 2010

செம்மொழி மாநாடு......தீயெனச் சுடுகின்ற நாட்கள்
செம்மொழி மாநாடு தமிழகத்தை விழாக்கோலம் பூண வைத்திருக்கிறது. பள்ளிகளுக்கெல்லாம் திடீர்த் தமிழுணர்வு கோப்பை கோப்பையாக வழங்கப்பட்டிருக்கின்றன போலும். மொட்டை வெய்யிலில் மாணவ, மாணவிகள் பாரதியார்களாய் வேடமிட்டுச் செம்மொழி மாநாட்டு விளம்பரங்களோடு மதுரையில் தெருத்தெருவாக நடந்திருக்கிறார்கள். அன்புடமையும், பண்புடைமையும் கொட்டிக்கிடக்கும் இலக்கிய வரிசையில் திருக்குறள் படைத்த தமிழினம்தான் இன்று தெருவில் சோறின்றிச் செத்துக்கிடக்கும் இன்னொரு தமிழனை மிக இயல்பாகக் கடந்து போகும் சென்னை மாநகர வாழ்க்கையை வாழ்கிறது. என்றாலுமென்ன? திருவிழாச் சம்பிரதாயங்கள் முக்கியமானவை, மாணவர்கள் சென்னையிலும் மாநாட்டுக்காக உட்கார்ந்தே திருவள்ளுவர் சிலை அமைக்கப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

செய்தித்தாள்கள் எங்கும் மாநாட்டு அரங்கங்களின் அழகும், அரங்கத்தை ஆட்சி செய்ய இருக்கும் அரசியலரசர்களின் அழகும் விரவிக் கிடக்கின்றன. கோவையில் பஞ்சாயத்து அலுவலகமொன்றில் பொதுமக்களுக்காக முடிக்கப்படவேண்டிய சினச் சின்ன வேலைகளையும்கூடக் கடந்த ஒருமாதகாலமாக மக்கள் நடையாய் நடந்தும் முடிக்க முடியவில்லை. அரசு அலுவலர்களின் "செம்மொழி மாநாடு முடிந்துதான் ஆகும்" என்ற காரணம் மக்களின் வேலைசார்ந்த கோப்புகளையும் இறுக்கக் கட்டி வைத்திருக்கிறது.

'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முந்தோன்றிய மூத்த மொழி" என்று பெருமை சூட்டிக் கொண்டிருக்கும் தமிழ் என் மொழியாக இருப்பது இனிமையானது. அது இன்று வரைக்கும் இருக்குமிடந்தோறும் கூட இருப்பதாலேயே வாழ்வும் இனிமையானது. ஆனால் இந்த மொழியார்வமோ, அதன் ஆழம் தேடலோ உள்ளே ஊறியிருப்பதற்கு இந்த மாநாடுகள் எதுவும் காரணமானதில்லை. பிறந்து எனக்குப் பல் முளைக்கும் முன்பே தன் பல் தொலைத்த வயதிலும் பாமரக் கிழவி ஒருத்தி "உங்குன்னு சொல்லம்மா உன் உலகம்பூ வாயினாலே, பாலுன்னு சொல்லம்மா உன் பவளப்பூ வாயினாலே" என்று எந்தக் கர்நாடக சங்கீத விற்பன்னரும் கற்றுத் தராத தன் ஒப்பற்ற ராகத்தால் பாடியது
கேட்டுத்தான் என் நா தமிழ் கற்றுக் கொண்டது. அதற்குப் பிறகும் ஆங்கிலம் கற்றிருக்காத கைநாட்டுப் பாமர ஊர்தான் சொற்களாய்ச் சொலவடைகளாய், விடுகதைகளாய், தாலாட்டாய், ஒப்பாரியாய் என் தமிழை எனக்குப் பலவடிவங்களிலும் ஊட்டியது.

எட்டுக் கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே பள்ளியாயிருந்த அந்தத் தாவணிபாவாடைப் பள்ளிக்கூடமும், அதன் ஆசிரியர்களும் சொல்லித் தந்தார்கள் பேசத் தெரிந்திருந்த தமிழைக் கைகூட்டி எழுதவும் அதிலே கவிதை, கட்டுரைகள் வடிக்கவும். யேசு காவியமும், சீறாப்புராணமும், கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும் செவிகளில் ஏற்றியது ஒரு ஐம்பது கிலோமீட்டர் தாண்டி வெளியில் அறியப்படாது வாழ்ந்து செத்துப்போன அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் தமிழாசிரியைதான். பழகிய ஊரைவிட்டு பலநூறு மைல்களும், கொண்டிருந்த தொடர்பைவிட்டுப் பல பத்து மாதங்களும் தாண்டி வந்தபின்னும் வானொலியில் என் துறைசார்ந்த உரையாடல் ஒன்றில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அதில் உச்சரிப்புத் திருத்தமொன்றை ஊரிலிருந்து எழுதி அனுப்பிய ஓய்வுபெற்றுக் கண்மங்கிய தமிழாசிரியர் இன்று ஒவ்வொரு இடுகை எழுதி முடித்தபின்பும் வந்து படித்துப் பார்ப்பதுபோலக்கூட மனக்கண்ணில் விரிவதுண்டு. இப்படித் தமிழை உயிரிலே கொஞ்சம் ஒட்டவைத்துத் திரிகிற ஆயிரமாயிரம் தமிழ்க்குடிமகன்கள், குடிமகள்களுக்கும் பலப்பல கதைகள் இருக்கலாம். அவையெல்லாம் எந்த அரசியல்வாதியின் மாநாட்டுச் சாதனைகளாலோ வந்தவையல்ல. அப்படியொன்று இல்லாமல்போனாலும் மனதிலிருந்து வற்றிவிடுபவையுமல்ல.


சரி. நம் மொழியார்வத்தை உலகுக்குப் பறைசாற்றிக் கொள்ளவும், இப்படியொரு மொழிபேசுகிற இனம் உலகில் இருக்கிறது என்பதை ஓங்கி அறிவிக்கவும் இத்தகு நிகழ்ச்சிகள் பயன்படப் போகின்றனவா? எப்போது அறிவிப்பது "நாங்கள் எவ்வளவு பெரிய இனம் தெரியுமா?" என்பதை. லட்ச லட்சமாய்ச் சொந்த இனத்தினன் ஒரு கடல் தாண்டும் தூரத்தில் செத்துக் கொண்டிருந்தபோது, அவர்தம் செத்த பிணங்களின் மீதும் அரசியல் செய்துவிட்டு
கதறக் கதற நின்றவர்களைக் கொன்று குவிக்கும் அரசோடு கூடியிருந்து குலவிவிட்டு எங்களால் முடியவில்லையே எனக் கைவிரித்து மண்தள்ளிவிட்டு அவர்மாண்ட இடத்தில் புற்கள் முளைக்கும் முன்பே கலை நிகழ்ச்சிகள் நடத்தி அறிவித்தால் ஆயிற்றா நாம் எவ்வளவு பெரிய இனம் என்பதை?

சோறுபோடாமல் கொடுமைப்படுத்திவிட்டுச் செத்த பிறகு ஊரைக்கூட்டி செத்தவர்களுக்குப் படையல் வைத்துக் கொண்டாடும் ஒரு அருவறுப்பான தனிமனிதப் பண்பாடு போல நம் அரசியல் பண்பாடுகள் தோலுரிந்து நிற்கின்றன. அவை தோலுரிந்தது தெரியும் என்றாலும் அந்த நாற்றத்தோடே கைகோர்த்து நிற்கவும் தயங்காதவர்களாகிவிட்டோம் நாம். வேறொன்றும் காரணமில்லை, அரசியல்வாதிகளுக்கு அரியனைச் சுகமென்னும் தன் நலம் இருப்பதுபோல் எங்கு எதில் இயங்கினாலும் தன் இருப்பைப் பிரபலப்படுத்திக்கொள்ளும் விதமாகத் தமிழர்கள் நமக்கு புகழும், அங்கீகாரமும், மாலைகளும், இடைவிடாத புகழ் ஒலிகளும் தேவையாக இருக்கின்றன. அதற்கான காய்நகர்த்தல்களோடே தனிமனித வாழ்வும் சுருங்கி நிற்கிறது.


மாநாட்டு நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் மட்டுமில்லை, நாடறிந்த தமிழறிஞர்களும் சேர்ந்தே கைகோர்த்து நிற்கிறார்கள். தமிழினத் தலைவர் ஒருவர் தன்னிடம் சக்தியிருந்தும் தன் இனப் படுகொலைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி மத்திய அரசைக் கேள்வி கேட்காமல் அதிகாரக் கனவு பிரதானமாகிக் கையாலாகாது நின்றதை அறியாதவர்களா இம்மாநாட்டில் கலந்துகொள்பவர்கள்? கூப்பிட்ட குரலுக்குத் தலைவர் பின்னால் அணிவகுத்து நிற்கும் எதிர்க்கேள்வி கேட்கும் உரிமையற்ற தொண்டர்களைத் தவிர இதில் கலந்துகொள்ளும் மற்றவர்கள் "தமிழ் என்றால் தம் உயிர்" என்று மார்தட்டி அதற்காகத்தான் தமிழின் பெயரால் கூடுகிறோம் என்று சொல்கிரார்களே, அவர்கள் கற்றறிந்த தமிழ் இதைத்தானா அவர்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறது?

தமிழன் என்றால் வீரம் என்றும் மறத்தமிழன், தமிழச்சி என்றும் உணர்வூட்டும் புறநானூற்றைப் படித்தவர்கள்தானே மாநாட்டுத் தமிழறிஞர்கள்? குறுங்கோழியூர்க்கிழார் சேரமானைப் பார்த்துப் பாடினாராமே," உன்னுடைய மண்ணைக் கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே உண்ணுவர், எதிரிகள் உண்ண முடியாது" என்று. உயிர்களைக் கொடுத்தாலும் தன் இனத்து மண்ணை இன்னொருவனுக்கு விட்டுத்தந்திராத வீரப்பரம்பரைத் தமிழர்கள் தம் இனத்துக்காகப் போரில் மடிந்தவர்களுக்கு நடுகல் எழுப்பி அவர்களை மட்டுமே தெய்வமாகக் கும்பிடும் பண்பாடு உடையவர்கள் என்கிறார் இன்னொரு புலவர்.

புறநானூறில் மாங்குடி கிழார் இப்படி சொல்கிறார்.
மலர்களில் குரவம், தளவம், குருந்தம், முல்லை என்று நான்கு வகை உள்ளன.
உணவில் வரகு, தினை, கொள், அவரை என்று நான்கு வகை இருக்கின்றன.
குடிகளிலும் நான்கு வகை.
ஆனால் தொழுவதற்கு எங்களுக்கு தெய்வம் ஒன்றுதான்.
அது இறந்துபோன வீரனின் நடுகல்.

தமிழ் மண்ணுக்காகத் தம் உயிரைத் துறந்தவர்களின் நடுகல்களைக்கூட அழித்து அவர்மீது தம் வெற்றியை அறிவித்து நின்றதே சிங்கள அரசின் இனவெறி. வீரப்பரம்பரைத் தமிழர்கள் நாம் இன்று நடுகற்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்கள் ஆகி நின்றோமே! எக்காலத்திலும் சுடச்சுட அரசியல் எழுதாத ஈழ இலக்கியவாதிகூட இன்று

இன்றோ எமக்கு தெய்வமில்லை.
நடுகல் இல்லை.
ஒரு மண்ணும் இல்லை.
என்று தம் வரலாற்றைச் சொல்கிற கதி நேர்ந்திருக்கிறதே! (நன்றி எழுத்தாளர் முத்துலிங்கம்).

இந்தக் கதிநேர்ந்த போது நாற்காலியில் ஒட்டிப்போய்க் கைக்குட்டை எடுத்து அழுவதான பாவனையில் கண்களில் ஒற்றி நாடகம் காட்டியவர்களோடுதான் எம் தமிழறிஞர்கள் ஒன்றுசேர்ந்து இன்று இனம் காக்க அறைகூவல் விடுக்கிறார்கள்.
'தேரா மன்னா செப்புவதுடையேன்" என மன்னனை எதிர்த்துத் தன் கணவனுக்காக நீதிகேட்ட கண்ணகியைக் கரைத்துக் குடித்த தமிழறிஞர்கள்தான் இனம் கருகவும் மக்களைத் திரட்டாமல் மௌனம் காத்த எமது தமிழ்த்தலைவர்களை ஏனென்றும் கேட்காததோடு இன்று சாமரமும் வீசுகிறார்கள். ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும்? ஒரு நாட்டை ஆள்கிறவர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்று உருகி உருகி வரையறை செய்த வள்ளுவரை ஓதி ஓதியே ஒவ்வொரு நாளையும் வாழ்வதாய்ச் சொல்லும் தமிழறிஞர்தாம் மக்கள் சாகத் தன் மகன்களை மந்திரிகள் ஆக்கும் எம் அரசர்களைத் தொழுது நிற்கிறார்கள்.

இலக்கியங்களாகவும், அறநூல்களாகவும் காலகாலத்திற்கான பெருமைகளைக் கொண்டிருக்கும் தமிழ்மொழியே! தாம் கற்றதிலிருந்து காசும், புகழும் பெற்றுக்கொண்டதுதாண்டி எந்த அறத்தையும் பொதுவாழ்வில் கடைப்பிடிக்காத தமிழர்கள் உனக்குப் பதிலுக்கு என்ன தந்துவிடப் போகிறார்கள் மாநாட்டுப் பந்தல்களில் தோரணங்களைத் தவிர?

எது உன் இனம்? எது உன் மொழி?
எதுவும் அறிந்திராது வந்துதித்த இளம் பிறையே!
உன் முப்பாட்டனுக்கும் முந்தைய ஆண் ஒருவன்
சங்கத் தமிழ் வீரத்திற்கு அழகு
அவனை மணந்திருந்த தமிழச்சி ஒருத்தி
முறத்தால் விரட்டிப் புலியை வென்றவள்
பந்தலில்லா முல்லை, போர்வையில்லா மயில்
எதுவும் கைவிடப்படாத கருணையும் நம்மது
வெற்றி வாள், வீர வேல் அடையாளம் நமதென்று
அப்போது இருந்தது

எல்லாம் இழந்தது ஒருநாளில் அல்ல
காலக் கருக்கலில் நாள் ஒருவிதமாய்
கண்ணெதிரேதான் காட்சி மறைந்தன
வெட்டத் தவறிய சுயநல நகங்களில்
புதைந்து கிடக்கின்றன பூச்சுக்களுக்கடியில்
அறம் மறம் அழிந்த அத்தனை கதைகளும்
கைகள் சாத்தும் மாலைகளுக்கே மயக்கம்
எங்கும் விரல்நக அழுக்குக்கு விசாரணையில்லை

கவலைகள் ஏதுமின்றிக் கண்மூடித் தூங்கும் இளம்பிறையே!
நாளை உனக்கு என்ன மிச்சமிருக்கும் என்று யோசித்துப்பார்க்கிறேன்
சுயநலக் கரையான்களால் மூடப்பாட்ட நாட்கள்
தீயெனச் சுட்டுக் கொண்டிருக்கின்றன தன் நாவுகள் சுழட்டி.

14 Comments:

At 12:22 AM, June 23, 2010, Blogger செல்வநாயகி said...

படத்துக்கு நன்றி:- தட்ஸ்தமிழ்.காம்

 
At 1:28 AM, June 23, 2010, Blogger திகழ் said...

உண்மை

 
At 6:59 AM, June 23, 2010, Blogger Uma said...

//உச்சரிப்புத் திருத்தமொன்றை ஊரிலிருந்து எழுதி அனுப்பிய ஓய்வுபெற்றுக் கண்மங்கிய தமிழாசிரியர் இன்று ஒவ்வொரு இடுகை எழுதி முடித்தபின்பும் வந்து படித்துப் பார்ப்பதுபோலக்கூட மனக்கண்ணில் விரிவதுண்டு// :)

//சோறுபோடாமல் கொடுமைப்படுத்திவிட்டுச் செத்த பிறகு ஊரைக்கூட்டி செத்தவர்களுக்குப் படையல் வைத்துக் கொண்டாடும் ஒரு அருவறுப்பான தனிமனிதப் பண்பாடு போல நம் அரசியல் பண்பாடுகள் தோலுரிந்து நிற்கின்றன. அவை தோலுரிந்தது தெரியும் என்றாலும் அந்த நாற்றத்தோடே கைகோர்த்து நிற்கவும் தயங்காதவர்களாகிவிட்டோம் நாம். வேறொன்றும் காரணமில்லை//
:(

சிறந்த நடையில் மிக வீரியமாக எழுதியுள்ளீர்கள்.

 
At 7:22 AM, June 23, 2010, Blogger கல்வெட்டு said...

செல்வநாயகி,
கோபங்களைப் பதிந்தமைக்கு நன்றி!

***

தனக்கென்று ஒரு கொள்கையோ அல்லது அரசியல் பார்வையோ இல்லாமால் ஆட்டுமந்தையாய் சிலரும், கட்சிக் கட்டுப்பாடு என்ற காண்ட்ராக்ட்டை மீற முடியாதவர்களும் கலந்துவிட்டுப் போகட்டும்.

**

போருக்கு உதவிய இந்தியாவின் பின்னனி தெரிந்தும் என்ன காரணத்தினாலோ பாராமுகமாய் இருந்துவிட்டார் கலைஞர். நினைத்திருந்தால் எப்பேர்ப்பட்ட எழுச்சியை உண்டாக்கி இருக்கலாம்.

பிரபாகரனைத் தாண்டியும் மக்கள் இரத்தமும் சதையுமாய் உள்ளார்கள். பிரபாகரக் காரணங்களை வைத்து இன அழிப்பை வேடிக்கை பார்த்ததை இந்த செந்தமிழ் வரலாறு சொல்லட்டும்.

 
At 10:25 AM, June 23, 2010, Blogger பதி said...

சோறு கூடப் போடாமல், செத்த பிறகு சந்தனக்கட்டையை (சிறு அளவு தான்) போட்டு எரித்த வாரிசுகளை சிறு
பிராயத்திலே கண்ட பொழுது இருந்தே வரும் கேள்வி தான் இன்றும். நமக்கென்று ஏதேனும் அறத்தைக் கடைப்
பிடிக்கின்றோமா என்ன?

தகவல் தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்திலும், சில மைல் தொலைவில் நடந்த மிக கொடூரமான இன அழிப்பைக் காட்டி பெரும்பான்மையினோருக்கு சொரனை வரவைக்க கருணா போன்ற தமிழீனத் தலைவர்கள் தான் தேவையென்று இருக்கும் சமூகத்தை என்னவென்று சொல்ல?

அல்லது இது போன்ற சொரணையற்ற கும்பலுக்கு கருணா போன்றவர்கள் தான் பொறுத்தமானவர்களா? சேற்றில் தானே தாமரை மலரும். :(

 
At 2:23 PM, June 23, 2010, Blogger முத்துகுமரன் said...

செல்வநாயகி!

பலரின் உள்ளக்குமுறல்களை தேர்ந்த எழுத்தின் மூலம் உரக்க ஒலித்திருக்கிறீர்கள். என்ன செய்ய சாமன்யனுக்கு ஒரு பொருளையும், அரசியல்வாதிக்கு வேறு பொருளையும் தரும் வண்ணம் நம் இலக்கணம் திரிந்துகிடக்கிறது. ஒட்டுமொத்தமாய் ஒரு இனத்தைக் காவுகொடுத்துவிட்டு எதை எழுதி என்ன ஆகப்போகிறது என்ற விரக்தியையும், அடிமனதில் தங்கிவிட்ட குற்ற உணர்வின் உளைச்சலுக்குள் வாழும் நிலையை ஏற்படுத்திவிட்ட தலைவரின் அடுத்த நாடகம் இது. கோர்வையாக எழுதக்கூட வருவதில்லை, நடந்த துரோகத்தையும், கேட்பாரற்று மண்ணோடு மக்கிப்போன உறவுகளின் அவலமும். இந்தப் பதிவை வாசித்த உடன் குற்ற உணர்ச்சி இன்னும் கொஞ்சம் அதிகரித்துவிட்டது. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு வாழும் எல்லாத் தமிழனும் ஒரு வகையில் சவமே.. நான் உட்பட

 
At 1:09 AM, June 24, 2010, Blogger ஓர்மைகள் said...

செல்வநாயகி நல்ல பதிவு இது அரசியல் ரீதியாக எழுதியுள்ளீர்கள்.தமிழறிஞர்கள் மீது எப்போதுமே எனக்கு மரியாதை இருந்ததில்லை. பசையுள்ள இடத்தில் ஒட்டிக் கொள்கிறவர்கள்தான் தமிழறிஞர்கள். மக்கள் கொலை, தமிழ், தமிழனின் வீழ்ச்சி என எதைப் பற்றியும் அக்கறையில்லாத இவர்கள்.....மொழியைப் பற்றிக் கூட கவலைப்படுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. 400 கோடி செலவில் பெரிய மனிதர்கள் ஆளும் வர்க்கங்களுக்கு முன்னார் பேசவும்....பழகவும் வாய்ப்புக் கிட்டுகிறது என்பதால் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு செல்கிராஅர்கள் தமிழறிஞர்கள் என்றே தொன்றுகிறது........இந்த நூற்றாண்டின் இரு பெரும் வேதனைகளாக பதியப்பட வேண்டியது இரண்டு ஒன்று ஈழ மக்களின் படுகொலை, இன்னொன்று படுகொலைகளின் நினைவை மறைக்க போலியான தமிழ் பெருமிதம் பேசிய செம்மொழி மாநாடு......ஆமாம் தோழி அப்படித்தான்...

டி.அருள் எழிலன்

 
At 1:22 AM, June 24, 2010, Blogger ஜெஸிலா said...

எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு. இதைவிட கேவலமாக கேள்விகள் எழுப்பினாலும் யாருக்கும் உரைக்கப்போவதில்லை. மறத்தமிழன் மாண்டுவிட்டான் இப்போது அவன் வெறும் ‘மர’த்தமிழன் :-(
விடியாத இரவென்று எதுவுமில்லை. நமக்கும் விடியும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

 
At 6:15 AM, June 24, 2010, Blogger Maria Mcclain said...

You have a very good blog that the main thing a lot of interesting and useful!hope u go for this website to increase visitor.

 
At 7:09 AM, June 24, 2010, Blogger தருமி said...

வேதனை தரும் நல்ல பதிவு

 
At 2:28 AM, June 25, 2010, Blogger போராட்டம் said...

//கைகள் சாத்தும் மாலைகளுக்கே மயக்கம்
எங்கும் விரல்நக அழுக்குக்கு விசாரணையில்லை//

கட்டுரையிலிருந்து கவிதைக்குப் பயணித்த உணர்வின் தவிப்பை புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது மாநாடுகளால் விரல் நகங்களுக்கு பாலிஷ் போட்டு கொள்ளலாம். ஆனால், காக்கா கவிஞன் வைரமுத்து சொன்னது போல, "காலம் உங்கள் பிணங்களைக் கூட தோண்டியெடுத்து தூக்கில் போடும்."

 
At 8:56 PM, June 28, 2010, Blogger -/சுடலை மாடன்/- said...

செல்வநாயகி, செம்மொழி மாநாடு பற்றிய பலருடைய மனக்குமுறல்களுக்கு அழுத்தமான எழுத்துவடிவம் கொடுத்திருக்கிறீர்கள்.

//செய்தி:
செம்மொழி மாநாட்டுக் கவியரங்கத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், "இக்காலத்து இளங்கோ நீ, உனது உமிழ்நீர் கூட தமிழ்நீர் தான் உனக்கு, ஏழைகளின் இக்கால குலோத்துங்கன், குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடு கொடுத்த கரிகாலன், செம்மொழி மாநாட்டிற்கு கோவையை தேர்வு செய்த தமிழ்கால பாண்டியன், பாட்டுடை தலைமகனே, செம்மொழி நாயகனே !’’ என்று கவிதை படித்தார்.

* * * ********

தமிழச்சி தங்கபாண்டியன் மீது நல்லதொரு கவிஞரென்ற மதிப்பிருந்தது. அவரே இப்படியெல்லாம் தரமிரங்கி எழுத ஆரம்பித்தபிறகு தமிழ் மொழி செம்மொழியாக இருப்பதைவிட செத்த மொழியாக இருப்பதே மேல்! வைரமுத்து போன்றோர்களைக் கேட்கவேண்டியதில்லை.

பெரியாரின் பின்வரும் கருத்து நினைவுக்கு வருகிறது, "கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்துவான்கள் என்றால் 100க்கு 90 பிச்சை எடுத்தே அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழில் உடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ, ஏதேதோ பேசி பணம் பெறுவதிலேயே கவலையுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது. ஆகவே தான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்காக அல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற்கு இல்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்."

நன்றி - சொ.சங்கரபாண்டி

 
At 5:52 AM, October 22, 2010, Blogger ஜோதிஜி said...

ஒரு நண்பர் இடுகையில் எழுதியிருந்தார். இந்த மொழி மாநாடு என்பது கலைஞர் என்ற தனி நபரின் சாதனை என்று. இவர் என்ன தான் சாதனை புரியவில்லை. புரியாத மந்தைக்கூட்டமே அவரின் மிகப் பெரிய பலம். அந்த அளவிற்கு அவர் உருவாக்கி உள்ளார் என்பது தான் அவரின் சாதனை. எந்த வகையில் பார்த்தாலும் தமிழ்மொழியை வைத்து பிழைத்த நபரில் எத்தனையோ பேர்கள் இப்போது முன்னால் நிற்கிறார்கள். ஆனால் இவர்களின் எத்தனை பேர்கள் வரலாற்றில் இருப்பார்கள் என்பதை நான் இறப்பதற்குள்ளாவது உணர வைப்பாயே பராசக்தியே??????????????

 
At 6:49 AM, October 26, 2010, Blogger polurdhayanithi said...

ungalin aakkangal arumai
polurdhayanithi

 

Post a Comment

<< Home