நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, February 22, 2007

நான் ரசித்த பயணம்

முன்குறிப்பு:-
நண்பர் கானாபிரபாவிற்கு சமர்ப்பணம் இப்பதிவு. கூடப்படித்த ஒரு நண்பன் பொன்னாம்பூச்சி பிடித்துத் தீப்பெட்டியில் போட்டுப் பள்ளிக்குக் கொண்டுவந்தான் என்பதற்காக அதேமாதிரித் தானும் கொண்டுபோக விரும்பிய மனதும், மயில் தோகையின் சில இறகுகளைப் புத்தகத்தில் ஒளித்துவைத்து அது குஞ்சு பொறிக்கும் எனச்சொன்ன தோழியைப்பார்த்துத் தானும் மயிலிறகு தேடி அலைந்த மனதும் முற்றிலும் கரைந்துவிடாமல் இன்னுமிருக்கிறதுபோலும். எனவேதான் சமீபத்தில் கானாபிரபா மாட்டுவண்டிகள் பற்றிய இடுகை ஒன்று எழுதியதிலிருந்து நான் எப்போதோ திசைகளின் பயணச்சிறப்பிதழுக்காக எழுதிய இக்கட்டுரை நினைவில் வந்து நின்றுகொண்டேயிருந்தது. கணினியில்
ஒவ்வொரு இடமாகத்தேடி இன்று கண்டுபிடித்தேவிட்டேன். உங்களை இதைப்படிப்பதிலிருந்து காப்பாற்ற கணினி எவ்வளவோ முயன்று ஒளித்துவைத்துப் பார்த்தது. கடைசியில் நானே வென்றேன். வேறுவழியில்லை, படியுங்கள்:))


"எல்லோர்க்கும் அன்புடன்" என்ற கடிதங்களின் தொகுப்பு நூலில் கல்யாண்ஜி தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் "உதிர்ந்த மாஞ்சருகுகளுக்கு அடியே அமுங்கிக் கிடக்கும் ஒரு கிளிச்சிறகு போல" என்றொரு உவமையைக் கையாண்டிருப்பார். அப்படித்தான்
தற்போதைய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ரயில், விமானப் பயண அனுபவங்களுக்கு அடியில், அசைபோட்டால் தாலாட்டும் அற்புத நினைவுகளாய் அமுங்கிக் கிடக்கின்றன அந்த மாட்டுவண்டிப் பயண நாட்கள்.


பேருந்துகள் ஊருக்குள் வந்துபோகும் முன்னேற்றமோ, இருசக்கர வாகனங்களின் படையெடுப்போ, மகிழுந்துகள் வைத்துக்கொள்ளுமளவு வசதியோ இல்லாதிருந்த காலத்தில் மக்களின் பயணங்களுக்குக் கைகொடுத்தவை மாட்டு வண்டிகள். ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் மானாவாரி விவசாயம் செய்து வாழும் மக்களுக்கு மத்தியில் பாவாடை சட்டை போட்ட பள்ளிச்சிறுமியாய்த் திரிந்தவரைக்கும் மாட்டுவண்டிப் பயணங்களை என்னால் அனுபவிக்க முடிந்தது. விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு அப்போது டிராக்டரை விடவும் மாடுகள் கொண்டு நிலத்தை உழுவது பொருளாதார ரீதியாகச் சிக்கனமானதாகவிருந்தது. எனவே வீட்டுக்கு வீடு மாடுகள் இருந்ததால் வண்டிகளும் கூடவே இருக்கும். "மாடுகள்" என்ற வார்த்தை பொதுவாய்ப் பயன்படுத்தப்பட்டாலும் உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் பசுமாடுகளைப் பயன்படுத்துவது அதிகம் விரும்பப்படாதவை. "காளைகள்" மற்றும் "எருதுகள்" என்று சொல்லப்படும் ஆண்பால்
விலங்கினங்களே இந்த வேலைகளைச் செய்பவை. வண்டிகளில் இருவகை உண்டு. விவசாயத்திற்குத் தேவையான பொருள்களையும், விளைபொருள்களையும் சுமந்து செல்ல கூடாரம் அற்ற மொட்டைவண்டிகளும்*, ஆட்கள் பயணம் செல்ல மழை, வெயிலில் இருந்து
காக்கும் கூடாரம் வேயப்பட்ட சவாரி வண்டிகளும்* அவை. இந்த விவரங்கள் எல்லாம் தமிழ்சினிமா பார்க்கும் நமக்குத் தெரிந்தே இருக்கும் மாட்டுவண்டிப் பயனத்தையே மேற்கொண்டிராதவர்கள் உட்பட.


கூட்டுப்புழுப் பருவமான குழந்தமைக் காலம் கழிந்து பட்டாம்பூச்சியாய்ப் பறந்துகொண்டு தெருவில் திரிந்து விளையாட ஆரம்பித்தபோது அதிசயமாய்த் தெரிந்தன மாட்டுவண்டிகள். சைக்கிள்கூட மிதிக்க வேண்டும், ஆனால் எதுவும் செய்யாமல் ஏறி உட்கார்ந்தால் எருது
நம்மையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போகிறதே என்ற அப்பருவத்திற்கேயுரிய அறியாமை கலந்த பிரமிப்பைத் தந்தன அவை. தோட்டத்திலிருந்து வீட்டிற்கு எதையாவது சுமந்துகொண்டு வரும் மொட்டைவண்டி திரும்பித் தோட்டம் போகையில் வண்டியிலிருந்து
பொருட்கள் இறக்கப்படும் காலஇடைவெளிக்குள் அவசரமாகக் காரணம் யோசித்து அம்மாவிடம் அதைப் பதட்டமின்றி நிதானமாகச் சொல்லி இயல்பென்று நம்பவைக்கும் சாதனையைச் செய்து முடித்து வண்டியில் ஏறி உட்கார்ந்திருப்பேன் தோட்டம் போக. சந்தைக்கோ, வேறு சோலிக்கோ (வேலைக்கோ) பக்கத்து ஊரில் போய்ப் பேருந்து பிடிப்பதற்கு சவாரி வண்டியில் கிளம்பும் அப்பாறய்யனுடன் அந்த ஊர்வரைக்கும் போய் அவரைப் பேருந்தில் ஏற்றிவிட்டுத் திரும்ப வரும் வேலையில் வண்டியோட்டும் தங்கராசண்ணனுடன் இணைந்துகொள்ளத் திட்டம் போட்டுத் தோற்றுவிடும் நாட்களில் ஏற்பட்ட சோகங்களை எப்படி நான் எழுதிச் சொல்ல? வீட்டிலிருந்து கிளம்பும் வண்டி எதுவானாலும் ஏறிச் சிறிது தூரமேனும் சென்றுவிட்டுப் பின் அங்கிருந்து இறங்கி நடந்து வரும் அளவு அப்போது அந்தப் பயண மோகத்தில் ஆழ்ந்து கிடந்தேன்.


எல்லாவற்றிற்கும் சிகரம்போன்ற அனுபவம் ஒன்றுண்டு. கருவேலமரங்களில் வெள்ளைப் பூக்களாய்க் கொக்குகள் அமர்ந்திருக்கக் கீழே அலையடித்துச் சிரித்துக்கொண்டிருக்கும் அப்போதைய மழைக்கு நிறைந்த குளம். குளத்தோரக் காட்டுவெளியொன்றில் களையெடுக்கும் வேலைக்குக் கைக்குழந்தையுடன் வரும் தாயொருத்தி மரத்தில் தூளிகட்டிக் குழந்தையைத் தூங்கவைத்துக் களையெடுக்கப் போனபின்னும் காற்றுக்கு ஆடும் அத்தூளி. காற்றுக்கு ஆடினாலும் தாயே ஆட்டுவதாய் நினைத்துத் தூங்கும் அக்குழந்தை. விதைத்த தானியங்கள் முளைத்து வளர்வதில் அவ்வருட வருமானம் கணக்குப்போட்டபடி கவலையற்றிருப்பார்கள் உழவர்கள் அன்று குடித்தது வெறும் கஞ்சிதான் ன்றாலும். அப்படியான மாதங்களில் ஒன்றில் வரும் கோட்டைமாரியம்மன் சாட்டுத் திருவிழா. அதற்கு ஊரே புறப்பட்டுப்போகும் மாட்டு வண்டிகள் கட்டிக்கொண்டு. அந்தப்பகுதியில் சாமிநம்பிக்கை கொண்டவர்கள் அடிக்கடி போகும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கோட்டை
மாரியம்மன் கோயில். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அங்கு சாட்டுத் திருவிழா கொண்டாடப்படும். அக்கம்பக்க ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் வந்து சேரும். அதன் வழிபாட்டு முறை வித்தியாசமானது. சாட்டுத் திருவிழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து துவங்கும் சுற்று வட்டார ஊர்களில் அது தொடர்பான கொண்டாட்டங்கள். பெண்கள் காலையில் எழுந்து பச்சைத்தண்ணீரில் குளித்து
முடித்து ஈரம் உலராமலே சேலையில் முன்பக்கம் மடித்துக்கட்டியவாறு வீடுவீடாகப் போய் மடிப்பிச்சை எடுத்து வருவார்கள். அதில் சேரும் தானியங்களைப் பெரும்பாலும் இரந்துவருவோர்க்குத் தானமாக வழங்குவார்கள். பிறகொரு நாள்குறித்து ஊரேசேர்ந்து சாட்டப்பட்டிருக்கும் மாரியம்மனுக்காகத் தங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைப்பார்கள். இவையெல்லாம் முடிந்தபின் திருவிழாவின் மூன்று நாட்களில் ஏதோவொரு நாளுக்குக் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கும் ஊரே சேர்ந்து போய்வருவார்கள்.


அப்படி ஊர்சேர்ந்து போவதே மக்களின் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் கொண்ட சேர்ந்துவாழும் வாழ்வியல் கலாசாரத்தின் ஒரு குறியீடு. எல்லோருக்கும் வசதியான நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயணம் முடிவு செய்யப்படும். பின்னர் கூட்டத்திற்குத் தகுந்தபடி மாட்டு
வண்டிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். குறைந்தது ஐந்திலிருந்து அதிகபட்சம் பத்து வண்டிகள் வரை இருக்கும். சவாரி வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுக்கபட்டு, போதவில்லையெனில் மொட்டை வண்டிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். நிலமில்லாத
விவசாயத்தொழிலாளர்கள், நிலமுள்ள விவசாயிகள் என்ற வேறுபாடுகள் பெரும்பாலும் இந்தக் கொண்டாட்டங்களில் ஏற்றத் தாழ்வுகளைப் புகுத்தியதில்லை. அவர்கள் எந்த வண்டியிலும் ஆள் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு சேர்ந்துகொள்வார்கள். சாப்பிடுவதற்கு வசதியாகக் கட்டுச்சோறு, முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகள் தயாரிக்கப்படும். பயணம் புறப்படும்நேரம் மாலையாகவும், திரும்பி வந்துசேரும் நேரம் அடுத்தநாள் அதிகாலையாகவும் இருக்கும். பொழுது கிளம்பையில் அவிழ்த்துவிடும் ஆடுமாடுகளைக் கவனித்துப் பொழுது சாய்கையில் அவற்றை ஓரிடம் சேர்த்தபின்தான் ஓய்வென்பது உழவனுக்கு. எனவே அவர்கள் திருவிழாப் பயணத்திற்குத் தோதான நேரம் இரவுதான்.


அடிவானத்தில் மஞ்சள் கரைத்து சூரியன் உறங்கச் செல்கையில் எம்மக்கள் கோட்டை மாரியம்மனை நோக்கி உற்சாகமாகக் கிளம்புவார்கள். துவைத்து நீலம்போட்ட வெள்ளைவேட்டி சட்டைகளில் ஆண்களும், நீண்டநாட்களுக்கு முன்பிருந்தே
கோயிலுக்குச்செல்லவென்று எடுத்து வைத்திருந்த சேலைகளில் பெண்களும் குதூகலத்தோடு கூடுவார்கள். வண்டியில் பூட்டுவதற்கு முன் எல்லா எருதுகளுக்கும் தீவனம் வைக்கப்பட்டதா என்பது பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு வண்டிக்கும் எருதுகள் இழுக்குமளவு சரியான
பாரம் பார்த்து ஆட்களின் எண்ணிக்கை பிரிக்கப்படும். குழந்தைகள் இக்கணக்கில் வருவதில்லை. அவர்கள் விரும்பும் வண்டி அவர்களுக்கு வழங்கப்படும். கொஞ்சம் கூடஇருந்தாலும் குழந்தைகளின் இருப்பை எருதுகளும் பாரமென்று நினைப்பதில்லை. ஏறி உட்கார்ந்தவர்கள் முன்பாரம்* பின்பாரம்* ஏற்படாவண்ணம் (load balancing) சரியாக நகர்ந்து அமரச் சொல்லப்படுவார்கள். புழுதிமண்சாலைகளில் புறப்படும் வண்டிகள் கோவிலை அடையும்முன் வாகனப் போக்குவரத்துள்ள தார்ச்சாலைகளிலும் பயணிக்க வேண்டியிருக்குமென்பதால் எந்த வாகனசப்தம், ஒலிப்பான்சப்தம், விளக்குவெளிச்சத்திற்கும் மிரளாத அனுபவமுள்ள எருதுகளின் வண்டி முன்செல்ல, மற்றவை பின்தொடரும்.
தங்களின் மக்கள், பேரன்பேத்திகளை கோயிலுக்கு வழியனுப்பிவைத்துவிட்டு உறங்கப்போகும் பெரியவர்களை மட்டும் கொண்ட ஊர் முத்துக்களைப் பிரிந்த கொலுசாக மௌனமாக இருக்கும்.


கேலியும், கிண்டலும், சிரிப்பொலிகளும் நிரம்பிய அப்பயணத்தைப் பார்க்க நிலவு மெல்லக்கிளம்பிவந்துகொண்டிருக்கையில் பயணம் பாதிதூரம் கடந்துவிட்டிருக்கும். தார்ச்சாலைகளில் எதிர்ப்படும் வாகனங்களுக்கு இவ்வண்டிகள் ஒதுங்குவதைவிட அவ்வாகனங்கள் ஒதுங்கிச்செல்வதே அதிகமாக இருக்கும். ஏதாவது ஏடாகூடமாய் வேகம்கூட்டி உரசுவதுபோல் வரும் வாகன ஓட்டுனர்களை இப்பாமர மக்களின் கோபம் பதம்பார்க்கும். புலியை முறத்தால் விரட்டிய மறத்தமிழச்சிகளின் வாரிசுகளாய் ஆண்களுக்கு ஆதரவாய்ப் பெண்களும் அம்மாதிரி சமயங்களில் பின்வகுத்து நிற்பார்கள். சில மணிநேரங்களைப் பயணத்திற்குக் கொடுத்துக் கோயிலை அடைந்தவுடன்
ஒரேஇடத்தில் வண்டிகளை நிறுத்தி எருதுகள் அவிழ்க்கப்பட்டு வண்டிகளிலேயோ அல்லது பக்கத்திலுள்ள மரங்களிலோ கட்டப்படும். கையோடு கொண்டுவந்த தீவனத்தை அவற்றிற்கு வைத்தபின்பே அவ்விடம்விட்டு நகர்வார்கள் ஆண்கள். அந்த நேரத்தில் அலைமோதும் கூட்டத்தைப் பார்த்தபடி கோயிலில் மாரியம்மன் அமர்ந்திருக்க அமராவதி ஆறு எதிரே ஓடிக்கொண்டிருக்கும். நன்கு மழைபெய்து ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடும் காலத்தில்தான் கோட்டைமாரியம்மன் சாட்டப்படும். பரந்துவிரிந்த அகலத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் குளிக்கச்செல்வார்கள் பலரும் அந்நேரத்தில். ஓடும் ஆற்றில் பிரதிபலிக்கும் நிலவு பிடித்து விளையாட நீண்ட தொலைவு தண்ணீருக்குள் செல்லும் நானும் என்சோட்டு நண்பர்களும் தொடர்ந்த மிரட்டல்களுக்குப் பின் கரையேறி வருவோம்.


தங்களுடன் வந்து, குளிருக்குப் பயந்து ஆற்றில் இறங்காதவர்களைச் சீண்டியபடி விதவிதமான வேண்டுதல்களையும் நிறைவேற்றி முடிப்பார்கள். சேற்று வேசமிட்டுக் குளித்தல், அடியளந்து தெண்டலிடுதல், பழம் வாங்கிச் சூறையிடுதல், கண்ணடக்கம் வாங்கி
மாரியம்மனுக்கு சாத்துதல் என்று அவரவர் கோரிக்கைகள் முடிந்து உணவும் முடித்த பின் கடைகளுக்குச் செல்வார்கள். அம்மாதிரிக் கோயில்களில் வியாபார லாபம் கருதி திருவிழாக்களுக்கு மட்டும் நிறையக் கடைகள் போட்டிருப்பார்கள். பலூனிலிருந்து கண்களுக்கு அணிய வண்ணக் கண்ணாடிகள் வரை வேண்டியது கேட்டுப் பெறும் ஆண்குழந்தைகளைவிட கூடுதலாக வளையல், பாசி, சடைவில்லை, ரிப்பன் என்று நீளும் பட்டியலோடு பெண் குழந்தைகள் நிற்பார்கள். முடிந்த அளவு வாங்கிக் கொடுத்தும், முடியாதவற்றிற்குச் சமாதானங்கள் சொல்லியும் அந்த வேலை முடிந்தபின் பெண்கள் பாத்திர பண்டங்கள் வாங்கத் தொடங்கினால் சுவாரசியம் ஆரம்பிக்கும். யானைவிலை சொல்லும் கடைக்காரர்களை மடக்கிக் கோழி விலைக்கு வாங்கும் சாதுர்யம் நம் பெண்களுக்கு அதிகம். அந்த சாதுர்யம் தெரிந்தே ஒரு கள்ளச் சிரிப்போடு விலையை உச்சாணியிலிருந்து துவங்கும் கடைக்காரர்கள் உண்டு. ஒட்டுப் பொட்டிலிருந்து வீட்டுக்கிழவிக்கு வெற்றிலை கொட்டும் சிறு உலக்கைவரை வாங்கி முடித்தபின் வண்டி வந்து சேர்வார்கள். அந்த வியாபாரத்தில் அவரவர் தேவை தீர்த்துக்கொள்ளும் வாழ்வு மட்டுமின்றி அடுத்தவர்களுக்கு வாங்கிக்கொடுத்து மகிழும் பண்பாடும் இருக்கும். இந்தக் களேபரங்களுக்குள் மூழ்க விரும்பாதவர்கள் வண்டிகளில் காத்திருப்பார்கள். சிலர் ஒரு உறக்கம் போட்டு எழுந்திருக்கப் போதுமான
அவகாசம் பொதுவாய் அச்சமயங்களில் பெண்களால் ஆண்களுக்கு வழங்கப்படும். ஆட்கள் எல்லோரும் திரும்ப வந்துவிட்டார்களா என்ற கணக்கெடுப்புக்குப் பின் வந்தபாதையில் திரும்பத்தொடங்கும் வண்டிகள்.


சிறிது தூரத்திற்கு மீண்டும் கலகலப்பு இருக்கும். வாங்கிய பொருட்களின் விலை பற்றியதாகவோ, அவற்றின் அழகு பற்றியதாகவோ, யார்யார் என்னென்ன வாங்கினார்கள் என்பதாகவோதான் உரையாடல்கள் அமையும். அதற்குப்பின் சிலதினங்களாய்ச் சேர்த்துவைத்த ஆசைகளோடு இன்று பலமணிநேரங்களாய்ப் பறந்துதிரிந்த கொண்டாட்ட மனமும், கூடவே அலைந்த உடலும் களைப்பை உணரத்தொடங்குகையில் அனைவரும் அமைதியாவார்கள். ஒரு மழைப்பருவத்துவிதைப்பு அறுவடையில் முடிந்தபின் அக்கடாவென இருக்கும் வயலைப்போல் கொஞ்சம் சும்மா இருப்பார்கள் எல்லோரும். அந்த அமைதியில் எருதுகளும் தூங்கத் துவங்கிவிடுமோ என்ற அச்சத்தில் வண்டி ஓட்டுபவர்கள் சிலரை வம்புக்கிழுப்பார்கள் வண்டிக்குள். வரவழைக்கப்படும் உற்சாகம் இயற்கையாய் இருக்காதெனினும் தூரம் கடக்கும் வேலையில் ஒரு கைகொடுக்கும் என்பது உண்மை. மெல்லநடக்கும் எருதுகளைத் துரத்தாமல் அவற்றின் போக்கில் விட்டுவிட்டுப்
பீடி குடித்துக்கொண்டு வருவார்கள் சில ஓட்டுனர்கள். வாங்கிய பொம்மைகளைக் கைகளில் பிடித்தவாறே தங்களின் கடலளவுக் கனவுகள் நிறைவேறிய நிம்மதியில் யார் மடியிலேனும் படுத்துத் தூங்கிப்போன குழந்தைகள், வாய்ப்பேச்சுக்கு வராவிட்டாலும் வழித்துணையாகக்
கடைசிவரை இருக்கும் நிலவு என்று சில கவிதைகளைக் கொண்டபடி ஊர்வந்து சேரும் வண்டிகள். குழந்தைகளையும், பொருட்களையும் வாரியணைத்தபடி எல்லோரும் வீட்டுக்குள் போகையில் அடுத்தநாளுக்காய்க் கிழக்கு வெளுக்கத் துவங்கியிருக்கும். இதோ! இருபது
ஆண்டுகளுக்குப்பின் உலகின் எதோ ஒரு மூலையில் எறிந்துகிடக்கும் என் வாழ்க்கையைப் பொறுக்கி எடுத்துக்கொண்டே திரும்பிப் பார்க்கிறேன், இப்போது பயணங்களில் என் ஊர் மக்கள் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவதில்லை. நம் தேசத்து உழவர்களின்
வாகனங்கள் மாறிவிட்டன, ஆனால் வாய்க்கும் கைக்கும் பத்தாமலே போகும் அவர்களின் வாழ்க்கை?


பின் குறிப்பு:
* குறியிட்ட சொற்கள் கொங்கு நாட்டில் பேசப்படும் வழக்குசொற்கள்

21 Comments:

At 11:30 PM, February 22, 2007, Blogger தமிழ்நதி said...

"கருவேலமரங்களில் வெள்ளைப் பூக்களாய்க் கொக்குகள் அமர்ந்திருக்கக் கீழே அலையடித்துச் சிரித்துக்கொண்டிருக்கும் அப்போதைய மழைக்கு நிறைந்த குளம்."

"காற்றுக்கு ஆடினாலும் தாயே ஆட்டுவதாய் நினைத்துத் தூங்கும் அக்குழந்தை."

"ஒரு மழைப்பருவத்துவிதைப்பு அறுவடையில் முடிந்தபின் அக்கடாவென இருக்கும் வயலைப்போல் கொஞ்சம் சும்மா இருப்பார்கள் எல்லோரும்."

"வாய்ப்பேச்சுக்கு வராவிட்டாலும் வழித்துணையாகக்
கடைசிவரை இருக்கும் நிலவு"

செல்வநாயகி!முன்பொரு பதிவில் உங்கள் எழுத்தில் என்னைக் காண்பதாக எழுதியிருந்தேன். அதை நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையோ ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் என்பதை இந்தப் பதிவை வாசித்தபிறகு உணர்கிறேன். காலங்களை, தூரங்களைக் கடந்து ஒரு கிராமத்துத் திருவிழாவில் நின்றுகொண்டிருந்தேன். மாட்டுவண்டிப் பயணமும் கூடவே வரும் நிலாவும் மனசுக்குள் நிற்கின்றன செல்வநாயகி!

 
At 11:45 PM, February 22, 2007, Anonymous Anonymous said...

அருமையான வர்ணனைகள், அப்படியே கண்ணால் பார்ப்பதுபோல் இருக்கிறது, கூடவே கவித்துவமும் சேர்ந்து, அவ்வப்போது இனிய கிறக்கமும் கொடுக்கிறது.

நீங்க, நீங்க தான் செல்வ நாயகி. படிச்சு முடிச்சுட்டு நிஜமாவே அய்யோ இது எல்லாம் மருவி வேறேதோ ஆகிப்போகுதேன்னு ஒரு கலக்கம் வருது. கலாச்சாரத்தையும் கலை அழகோடு யதார்த்தமாய் எழுதி ... இப்படி கலக்குறீங்களே.

 
At 3:25 AM, February 23, 2007, Blogger கானா பிரபா said...

வணக்கம் செல்வநாயகி

இப்போது தான் கண்ணிற்பட்டது உங்கள் பதிவு. முழுமையாய் வாசித்தேன். உங்களின் நனவிடை தோய்தல் கவிச்சிறப்பு மிக்க நடையாக அருமையாக் இருந்து.

நான் ஒரு சின்னப்பயல், சமர்ப்பணம் அது இது என்று பெரிய விஷயங்களை என் தலையில் சுமத்தாதீர்கள் ;-)

 
At 5:37 AM, February 23, 2007, Blogger Haran said...

(Muthalil mannikkavum... ennidam Tamil Font illai intha computeril)

Nalla oru pathivu.... athenna Kaanaa Praba ku samarpanam... hahaha... Avar enna mandaya pooddidaaraaa??:P

 
At 5:49 AM, February 23, 2007, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீண்ட பதிவாக இருக்கிறதே. நிறுத்தி நிதானமாய் மனசு ஒன்றி படிப்போம் என்று ஒத்திப்போட்டு ஒத்திப் போட்டு இப்போ தான் படித்து முடித்தேன்.
அப்படியே நானும் [பாவடையும் சட்டைசிறுமியாய் ] ஒரு மாட்டு வண்டியில் திருவிழாவுக்கு போய்,
யாரோ மடியில் தலைசாய்த்து தூங்கிப் போய் இப்போதான் வீடு வந்து சேர்ந்தேன்.
என் வீட்டுக்காரங்க நீங்கலெல்லாம் ரிக்ஷாவில் பள்ளிக்கூடம் போனீங்க "நா....ங்கள்ளாம் மாட்டுவண்டியில் கான்வெண்ட் போனவங்களாக்கும்" என்று சொல்வார்கள். பொறாமையாத்தான் இருக்கு இப்போ.

 
At 6:57 AM, February 23, 2007, Blogger செல்வநாயகி said...

தமிழ்நதி,
///பேசாமல் நான் எழுதுவதை நிறுத்திவிட்டு உங்களின் எழுத்துக்களை வாசித்துக்கொண்டு இருந்துவிடலாமென யோசிக்கிறேன் சிலநேரங்களில்:)) ஆமாம், நம் அலைவரிசைகள் நிறையவே ஒத்திருக்கின்றன. ///

என்று அந்தப்பதிவிலேயே உங்களுக்குப் பதில்சொல்லியிருந்தேனே!

மதுரா,
உங்களுக்கும் மாட்டுவண்டிக்கும் எதோ தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன். முன்பொருமுறை வண்டிக்காரர் பற்றிய என் பதிவொன்றிலும் வந்து கண்கலங்கி நின்றீர்களே:)) ஆமாஆஆஆ.... உங்க பதிவுக்கு வந்தப்பவே கேக்கனும்னு இருந்து மறந்து போச்சு, அந்தக் கூடைக்காரத் தமிழச்சி படத்தை ஏன் எடுத்துட்டீங்க:((

கானாபிரபா,
நீங்கள், வசந்தெனெல்லாம் இப்படியே சின்னப்பசங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கலாம்னு பாக்கறீங்க, விடமாட்டோம்:))

ஹரன்,
தமிழ்ல எழுதாட்டிப் பரவாயில்லை, என்ன பிரபாவைப் பத்தி இப்படிச் சொல்லிப்போட்டீங்க:)) அவர் கோவிச்சா நான் என்ன பண்ணறது?

முத்துலெட்சுமி,

///நீங்கலெல்லாம் ரிக்ஷாவில் பள்ளிக்கூடம் போனீங்க "நா....ங்கள்ளாம் மாட்டுவண்டியில் கான்வெண்ட் போனவங்களாக்கும்" ///

இது நல்லாருக்கு. சைக்கிள்ல பள்ளிக்கூடம் போய்க்கிட்டிருந்த நானெல்லாம் ரிக்சாவுல போன பசங்களப் பாத்து ஏங்கிக் கிடந்ததும் உண்டு. ஆனாலும் மாட்டுவண்டி மாதிரி வராது:))

வருகைக்கு நன்றி அனைவர்க்கும்.

 
At 9:30 AM, February 23, 2007, Blogger தாணு said...

மாட்டு வண்டிப் பயணத்தைப் போலவே உங்கள் எழுத்து நடையும் அழகாக இருக்கிறது

 
At 10:55 AM, February 23, 2007, Blogger மங்கை said...

கல்லூரி நாட்களில், study leave ல பொள்ளாச்சி பக்கம் தோட்டத்திற்கு தோழிகளுடன் போன போது ஏற்பட்ட அதே உணர்வு..ம்ம்ம் வழியில் கொறிப்பதற்கு பாட்டி தன் கையால் செய்து, வண்டிக்காரரிடம் கொடுத்தனுப்புவார்...சிறு தீனீன்னு சொல்வோம்...அந்த முறுக்கு வாச்னையும், கஜாயத்தின் வாசனையும் இப்ப வருது எனக்கு...16 வருஷம் பின்னால கொண்டு போயிட்டீங்க, நன்றி

 
At 11:29 PM, February 23, 2007, Blogger செல்வநாயகி said...

தாணு,
நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைக் காண்பது மகிழ்ச்சி.

மங்கை,
மாட்டுவண்டிப் பயணத்தையும் விட்டுவைக்கலையா நீங்க:))

நன்றி இருவருக்கும்.

 
At 4:26 AM, February 24, 2007, Blogger அருள் குமார் said...

வீட்டுக்குத் தெரியாமல் வண்டியோட்டியின் துணையுடன், மாட்டுவண்டி ஓட்ட கற்றுக்கொண்டு, முதன்முதலாய் வண்டியோட்டிய அந்த நாள்... ஏதோ பெரிய சாதனை புரிந்ததுபோலிருந்தது!

ம்... இப்படி அடிக்கடி கிராமத்து பால்ய நாட்களை பசுமையாக நினைவுபடுத்திவிடுகிறீர்கள் :)

 
At 6:12 PM, February 24, 2007, Blogger செல்வநாயகி said...

அருள்,

நானும் ஓட்டிப்பழக ஆசப்பட்டதும், அடம்புடிச்சதும் உண்டு. ஆனா அம்மா அனுமதி கொடுக்கல அப்போது:))

 
At 9:28 PM, February 24, 2007, Anonymous Anonymous said...

அந்த தமிழச்சி படம் பீட்டாவுக்கு போகும்போது போடவில்லை. இந்தியாவுக்கு வந்தபின் அந்த படத்திலிருந்தது போல் பின் கொசுவ சேலை கட்டும் முறையை கற்க வேண்டும் என்று நினைத்தும் இப்போதுதான் ஞாபகம் வருகிறது!

ஆமாம் செல்வநாயகி எனக்கு மாட்டு வண்டிகள் மீது சிறு வயதில் வந்த காதல் இன்னும் மறக்கவில்லை.எனது பள்ளிக்குமுன்னால் ஒரு இஞ்ச் இடம் விடாமல் மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் நின்றிருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு குதிரைக்கு லாடம் அடித்துக் கொண்டிருப்பார்கள். ஒன்று இரண்டல்ல, குறைந்தது இருபது முப்பது வண்டிகள் தினம் வரும் திருநெல்வேலியிலிருந்து பாளையங்கோட்டையில் இருக்கும் எங்கள் பெண்கள் பள்ளிக்கு. இன்றைய ஆட்டோ ரிக்ஷா போல பல மாணவிகளை சுமந்து கொண்டு வரும்! குழந்தையாய் இருக்கும் போது மிகவும் ஆசையாய் பார்த்து ஏங்கியவை! ;) ... நான் நடராஜாவில் (Walking!) செல்பவள்!

இந்த வயசிலும், இன்றும் பாளையங்கோட்டை போகும்போது ஸ்கூல் முன்னால் நின்று மாட்டு வண்டிகளை மனதில் நிறுத்தி என்னையும் நினைத்து சிரித்து கொள்கிறேன்.

உங்கள் வார்த்தைகளில் சவாரி வாங்கி மாட்டு வண்டிகளில் ஏறும் போதும் குஷி!

 
At 3:20 PM, February 26, 2007, Blogger செல்வநாயகி said...

///இந்தியாவுக்கு வந்தபின் அந்த படத்திலிருந்தது போல் பின் கொசுவ சேலை கட்டும் முறையை கற்க வேண்டும் என்று நினைத்தும் இப்போதுதான் ஞாபகம் வருகிறது!///


அது ஒரு தனி அழகுதான் மதுரா. கட்டிப் பழகுங்கள்:))

 
At 1:02 AM, March 31, 2007, Blogger அமிர்தா said...

நான் பிறந்து வளர்ந்ததே நகரத்தில் தான். கிராமங்களைப் பற்றி கதைகளிலும், படங்களிலும் பார்த்தவை தான்.

உங்களைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். நல்ல பதிவு.

விவசாயிகளின் வாழ்க்கைத்தான் பரிதாபம். உசிலைச் சேர்ந்த ஒருவர் சொல்வார். "விவசாயியை பழிவாங்கனும்னா ஒரு ஏக்கர் கொடுத்து விவசாயம் செய்ய வச்சுக்கப்பா! - சொன்னாப்போதும். இரண்டு வருசத்திலே தற்கொலை பண்ணிக்குவார்."

இது உங்க முதல் கவிதையா? நம்பவே முடியல! வாழ்த்துக்கள்.

நானெல்லாம் நிறைய கவிதைகள்-னு எழுதி, பல பேரை கொன்னு, ரத்தத்திலே நடந்து, கடந்து வந்தேன்.
அவர்களுடைய தியாகமெல்லாம் வீணாய் போயிடக்கூடாதே ஒரு காரணத்துக்காகத்தான் இப்பவும் கவிதைகள் எழுதி கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.

 
At 1:27 AM, March 31, 2007, Blogger செல்வநாயகி said...

மஹா,

வாருங்கள். உங்கள் மறுமொழிக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. வலையுலகுக்குப் புதுவரவா நீங்கள்? இப்போதுதான் உங்கள் பக்கத்தைப் பார்வையிட்டேன். நல்வரவு ஆகுக. தொடர்ந்து எழுதுங்கள்.

///நானெல்லாம் நிறைய கவிதைகள்-னு எழுதி, பல பேரை கொன்னு, ரத்தத்திலே நடந்து, கடந்து வந்தேன்.///

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை. அடுத்தவங்க படிச்சு என்னாவங்களோன்னு கவலைப்பட்டா நாம கவிதையே எழுதமுடியாது:)) இந்த விசயத்துல எனக்கு அடுத்தவங்களப் பத்திக் கவலையே இல்லைன்னு வையுங்களேன்:))

 
At 5:13 PM, May 18, 2007, Blogger தனசேகர் said...

'காங்கயம்' என கூக்ளில் தேடும்போது உங்கள் பக்கம் கிடைத்தது...

அனைத்து பதிவுகளும் அருமை ..

நம் மக்களின் வாழ்க்கையை அப்ப்டியே சொல்லியுள்ளீர்கள்...

நிறைய எழுதுங்கள்..

நானும் காங்கயம் அருகில் வீரசோழபுரம் எனும் கிராமம்.

இன்னும் எனக்குப் பிடித்த இடம் என்றால் அது கிராமம்தான்.. சுத்தமான சுதந்திரமான காற்றை அங்குதான் சுவாசிக்க முடியும்..

ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.. வீட்டிற்கு செல்ல.... (புலம்ப வைத்து விட்டது உங்கள் பதிவு ;))

அன்புடன்
தனசேகர்

 
At 3:24 PM, May 20, 2007, Blogger செல்வநாயகி said...

தனசேகர்,

வீரசோழபுரம் நீங்கள் என அறிய மகிழ்ச்சி. ஊர் தேடிப் பேர் தேடி வந்து படித்தமைக்கும் மறுமொழிக்கும் நன்றி:)) உயிரோடு ஒட்டிக்கொண்ட கிராமவாசனை உங்களுக்கும் உலர்ந்துவிடாதிருப்பதே இங்கு சேர்த்திருக்கிறதென நினைக்கிறேன்.

 
At 4:18 PM, May 20, 2007, Blogger சோமி said...

விரல் சூப்பித்திரிந்த சின்னவயதுகளில் என் தாத்தவோ மாட்டு வண்டியில் தோட்டத்துக்கு போவதுண்டு.
ஒரு போர் வந்தது..........சில ஆண்டுகள் போன பின் மீண்டும் வீட்டுக்குப் போனேன்.அப்போது தாத்தா இல்லை. தாத்த என்னை வைஉ ஓட்டித்திரிந்த மாட்டுவண்டீன் சக்கரம் மட்டும் என் வருகைக்காக காத்திருந்தது....மனிதர்களைப் போலவே மாட்டு வண்ணியும் கொண்டடிபட்டு உடல் சிதறிப் போய் விட்டது..........

கட கட வண்டி மாட்டுவண்டி,,,,,,என்று குரலெடுத்துப்பாடிப் பயணித்த பயணங்களின் நினைவு மீட்ட வைத்த பதிவுக்கு நன்றி.

எழுத்தாழுகை உங்களுக்கு நன்ராகவே இருகிறது. இன்னும் இன்னும் படிக்கவும் காங்கேயம் சேதிகளைக் கேட்கவும் காத்திருகிறேன்.

 
At 5:02 PM, May 20, 2007, Blogger செல்வநாயகி said...

சோமி,

///மனிதர்களைப் போலவே மாட்டு வண்டியும் கொண்டடிபட்டு உடல் சிதறிப் போய் விட்டது.///

உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன், வேறெதுவும் இதற்குப் பதிலாய்ச் சொல்லமுடியாத வழமையான கையாலாகத்தனத்துடன்:((

வருகைக்கு நன்றி.

 
At 4:49 AM, March 20, 2008, Blogger tamilachi said...

iniya vannakkangal selvanayaki.....

THANGALIN NAN RASUTHA PAYANAM PADIVU VEGU ARPUTHAM...ENNAKUM EN SIRU VAYADU NIGALVUGAL NINAIVUGALAGA ENNAI THATTI SELKINDRANA...INDRUM EN KALLOORI THOZHIYARUKU KIDAIKADA SILA SILLENDRA ANUBAVANGAL ENAKKU KIDAITHIRUPATHAGA IRUMANTHIRUNTHEN...ANAL UNGAKL PATHIVAI PADITHA PIRAGU EN THALAI MURAIYILUM PALAVATRAI ILANTHU VANTHIRUKIRENO ENDRA UNARVU ENNUL ELUNTHU VANTHU VITTATHU...

ENI NAM VARUNGALA SANTHATHIYARUKKU IVATRAI YEALLAM VERUM PADHIVUGALAGA MATTUMEA VUITTU SELVOMO ENDRA VARUTHAMUM ELUKINDRATHU...

UNGAL KONGU TAMIL AALLUGAI ENAKUM EN SONTHA MANNIL SUTRANGALUDAN PESIA NIMIDANGALAI NINAIKA SEIKIRATHU..

NAM VARUNGALA SANTHATHIYARUKKU INDA INBANGAL KIDAIKAMAL POI VIDUMO NAMEA ATHARKU VAZHI AMAIKKAMAL ENTHIRATHANAMANA VALKAIKKUL AMILNTHU VIDUMO ENDRA KUTRA UNARCHI THONDRI VITTATHU..

NAM ENNA SEIYALAM..NAM ALIYA NINAIVUGALAI ATTHANAI PEARUKKUM KIDAIKKA SEIYA.........
VALTHUKKALUDAN,
KA.SELVANAYAKI.

 
At 10:25 AM, March 21, 2008, Blogger செல்வநாயகி said...

thank you selvanayaki.

 

Post a Comment

<< Home