நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, July 21, 2010

எது தந்தாய் என் வாழ்வே? (பெட்னா மலருக்காக எழுதியது)

அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவின் தமிழ்விழா நடந்து முடிந்திருக்கிறது. நேரில் கலந்துகொள்ள இயலவில்லை. மலருக்காக நண்பர் சங்கரபாண்டி அவர்கள் எழுதக்கேட்டதின்படி கட்டுரை ஒன்றை அனுப்பி வைத்தேன். நேரில் கலந்துகொள்ளாவிட்டாலும் பெட்னாவின் நிகழ்ச்சி நிரல்கள், அவை நடந்தேறிய கொண்டாட்டங்கள் எனப் பலதையும் இணையவழி அறிய முடிந்தது. தமிழ்மணம் நேரடி ஒளிபரப்பில் நான் மிகவும் விரும்பிய தெருக்கூத்தைப் பார்த்து நிறைவடைந்தேன். தெருக்கூத்து மாதிரியான அரிய கலையையும் அதுசார்ந்த கலைஞர்களையும் கௌரவிப்பதில் பெட்னா தனிச்சிறப்பான பணி செய்துவருவதெல்லாம் மகிழ்வுக்குரிய விடயம். என்றாலும் தமிழகத்திலிருந்து மற்ற துறைசார்ந்த, கலைசார்ந்த வல்லுனர்களைத் தேர்வுசெய்யும் முறை, இன்னும் இங்கே புலம்பெயர்ந்து வந்த துறைசார்ந்த வெற்றியாளர்களை அழைத்தலின்மை உள்ளிட்ட சில விமர்சனங்களும் இருக்கின்றன. மேலோட்டமான, வழமையான புகழ்மொழிகள் தாண்டி ஒரு அமைப்பை அதன் நோக்கத்தை உண்மையாய் நேசிக்கிறவர்கள் சுயநலன்கள், தயக்கங்கள் களைந்து சரியான விமர்சனத்தை முன்வைக்க வேண்டியதும் முக்கியமானது. அவ்வகையில் தமிழ்சசியின் கட்டுரை பெட்னாவின் சறுக்கல்களாகச் சிலவற்றை விரிவாகவும், அக்கறையோடும் முன்வைத்தது. அக்கட்டுரையில் பின்னூட்டங்களில் அதே நோக்கில் வாசனும் சில முக்கியமான விடயங்களைத் தொட்டுப் பேசியிருக்கிறார்.

எனக்குப் புலம்பெயர்ந்த வாழ்வியல் அனுபவத்தில் பெட்னா மட்டுமல்ல பொதுவாகவே இங்கே வந்து தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எழுத வேன்டும் என்ற எண்ணம் உண்டு. இங்கே சில ஆண்டுகள் கொஞ்சம் தமிழர்களோடு "தமிழ்" "தமிழ்க்கலை" என்று நேரத்தையும், உழைப்பையும் செல்வழித்துப் பெற்ற எனது அனுபவங்களில் தேங்கிக்கிடக்கின்றன சொல்லப்படவேண்டிய பல கதைகள். எல்லாம் சேர்த்தே புலம்பெயர்த் தமிழ், தமிழர் குறித்த பார்வையை முன்வைக்க முடியும் என்பதால் அது இன்னும் கொஞ்சகாலம் விரிவாக எழுதுவதற்கான உத்வேகம் பிறக்கும்வரை கிடப்பில்தான் கிடக்கும் என நினைக்கிறேன். இப்போதைக்கு நான் பெட்னா மலருக்கு எழுதித் தந்த கட்டுரையை மட்டும் கீழே பகிர்ந்துகொள்கிறேன். என் சோம்பலைக் களைந்து இதை எழுதப்பணித்த நண்பர் சங்கரபாண்டிக்கு நன்றி.


எது தந்தாய் என் வாழ்வே?
*******************************************


அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை அருகில் சந்தித்துக்கொண்டோம்
உனக்கும் எனக்கும் ஒரே நாடு "இந்தியா" என்றாலும்
உனது முப்பாட்டனும் எனது முப்பாட்டனும் ஒன்றல்ல
ஒருவர் ஊருக்கு நடுவே இன்னொருவர் வெளியே

சிக்காகோ வீதியில் ஒரே விடுதியில் உணவுன்கிறோம்
உனக்கும் எனக்கும் ஒரே மொழி "தமிழ்" என்றாலும்
உனது பாட்டனும் எனது பாட்டனும் ஒன்றல்ல
ஒருவர் 'சாமி'யாக இன்னொருவர் சக்கிலியனாக

குடிநுழைவு அலுவலகத்தில் வரிசையில் நிற்கிறோம்
உனக்கும் எனக்கும் ஒரே ஊர் "திருச்சி" என்றாலும்
உனது தந்தையும் எனது தந்தையும் ஒன்றல்ல
ஒருவர் நாதஸ்வரம் இன்னொருவர் பறை

இதோ நியூஜெர்ஸியின் ஏழுமலையான் முன்பு பக்திகொள்கிறோம்
நீயும் நானும் ஒரே கல்லூரி "ஆதிபராசக்தி"
என்றாலும் நாம் ஒன்றல்ல
நீ கடவுளுக்குப் பட்டுடுத்த நான் கையேந்தித் தீர்த்தம் வாங்க

உணரநேர்ந்தால் எப்போதேனும் இந்த அபத்தங்களை நீயும் சொல்லிவை
இன்று பிஸ்ஸா தின்று பள்ளி செல்லும் நம் குழந்தைகள் நாளை
தத்தமது தந்தையர் கல்லறையில் நின்றேனும் புரிந்துகொள்ளட்டும்
அவர்கள் இருவரும் வேறுவேறல்ல ஒன்றுதான் என்கிற உண்மையை


பிரபஞ்சம் ஒரு நதியென்றால் அதில் மானுட வாழ்வு ஒரு சருகைப்போல் பயணிக்கிறது. நதியில் சருகு அறிந்ததெல்லாம் மேற்பரப்பில் சிற்றலைகள், சீரான நீரோட்டம், சிலசமயம் பயங்காட்டும் சுழிகள். நனைந்து நனைந்து ஈரம் அடர்வேற ஆழம் அமிழ்தல் எப்போதேனும் நடக்கலாம். இந்தப் பொதுவிதிக்குள் பொதிந்து ஆடி அடங்குகிறது மானுடத்தின் லௌகீகம். புவியியல் எல்லைகள், தட்பவெப்பம், கலாச்சாரம், பண்பாடு என வெவ்வேறு நூலிழைகளால் நெய்யப்பட்டுப் பின் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றது உலகம். ஓயாத பேரிரைச்சலாய் வாழ்வுக்கான தாகம் ஒவ்வொரு உயிரிலும்.ஒவ்வொரு மனித உயிர்க்கும் தன் பயணம் எங்கே தொடங்கி எங்கே முடியும் என்பது வாழ்வின் அவிழ்க்க முடியாத சுவாரசியமான புதிர்களுள் ஒன்றாய் வைக்கப்பட்டுள்ளது. யாருக்குப் பிறக்கப்போகிறோம் என்பது குழந்தைக்கும், யார் பிறக்கப்போகிறார்கள் என்பது பெற்றோருக்கும் தெரியப்படுத்தப்படாத ரகசியமாய்ப் பதுக்கப்பட்டிருப்பதாலேயே அதன் சுவை இன்னும் சலித்துவிடாததாக இருக்கிறது. திட்டங்களும், அவைநோக்கிய செயல்பாடுகளும், வகுத்துக்கொண்ட பாதைகளிலிருந்து பிசகாத பயணமும் ஒரு தனிமனிதவாழ்வில் எல்லாநேரங்களிலும் சாத்தியமாகிவிடுவதில்லை.

என் வேர்களற்ற மண்ணில் விழுதூன்றி பல ஆண்டுகளைக் கடந்துவிட்ட ஒருநாளில் திரும்பிப்பார்க்கிறேன். இந்தப்பயணம் திட்டமிடப்படாதது. ஏதோவொரு திருப்பத்தில் சட்டென்று கைகுலுக்கிய மனிதர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுவிடுவதுபோல் இந்த அந்நியமண்ணுக்கு வாழவந்ததும் பரிசீலனை முடியும் முன்பே செயல்படுத்தப்பட்டதாகவும், செயல்படுத்தப்பட்டபின்பும் பரிசீலனையில் உள்ளதாகவுமே தன் ஆரம்பநாட்களை விழுங்கிவந்திருக்கிறது.

தனியொருத்தியாக விமானத்துக்குள் ஏறிஅமர்ந்தபின்பு பக்கத்தில் இருந்த தாயொருத்தி தன் குழந்தையை சன்னலுக்கு இழுத்துக் காட்டிக்கொண்டிருந்தாள், "இனிமே எப்பப் பாக்கப் போறோம்னு தெரியலை, நம்ம ஊரை இன்னுமொருமுறை பாத்துக்கடா" . வெட்டிய குழியில் வைத்து மூடுவதற்கு முன் "கடைசியா எல்லாரும் முகம் பாத்துக்கங்க" என்று சொல்வதை ஏனோ அந்தத் தாயின் வார்த்தைகள் நினைவூட்டி விட்டன. அதுவரைக்கும் கட்டிவைத்திருந்த உணர்வுகள் மெல்ல அவிழத் துவங்கின. மேலே இன்னும் மேலே என எழுந்தபோது கீழே அதள பாதாளத்தில் ஏதோ இழக்கக்கூடாத ஒன்றைக் கைநழுவவிட்டுக் கொண்டிருப்பதான குழப்பமான சொல்லத்தெரியாத சிந்தனைகளின் கலவை. எல்லாவற்றையும் அழுது கரைத்துவிடக் கொடுக்கப்பட்டிருக்கும் கண்கள் அதன் வேலையைச் செய்தன. யாருக்கும் தெரியாமல் சில துளிகள். பின் பயணத்தின் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகளுக்குள் புகுந்து வெளிவந்தபோது வேறு நகரம், வேறு மனிதர்கள், வேறு நாடு.


தடைகளைத் தாண்டிய ஓட்டமே வாழ்வென்று வாழ்ந்துவந்த ஒருவற்குத் தடைகளற்ற பயணம் என்ற ஒன்றுகூட ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளச் சிரமமானதுதான். அந்நிய நாடு எனக்குப் பரிச்சயமற்ற தன் கண்களால் பயம் காட்டவே செய்தது. எங்கும் எப்போதும் தாய்மடியாய் இருந்துவந்த இயற்கை இங்கும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் மேலடர்ந்த பொலிவோடு இருந்தது. ஆனால் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிற அன்னியத்தன்மை மரம் செடிகளில்கூடப் பேதமை பார்க்கக் கற்றுக்கொடுத்திருந்தது. சுற்றிலும் பறவைகள் இருந்தன, ஆனால் அவற்றின் இசை எனக்கானதாய் இல்லை. வழியெங்கும் பூக்கள் மலர்ந்திருந்தன, ஆனால் அவற்றின் சுகந்தத்தில் என் மண்வாசனை இல்லை. தெருக்களிலும் காதலர்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள், பழக்கப்பட்டிருக்காத கண்கள் கூசித் திரும்பின. ஓயாத ஒப்பீடுகளுக்குப் பின் மனம் உள்நோக்கித் தேடியது. "எந்தத் தண்ணீரில் எறியப்பட்டாலும் நீச்சல் தெரிந்த மீன் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதில்லையா? தேடு...கண்டங்கள், கடல்கள் வேறு எனினும் இதுவும் மனிதர்களின் பூமிதானே? இந்த மனிதர்களின் வாழ்வும் வரலாறும் அறி, இலக்கியம், கலை, கலாச்சாரம்.... உனக்கேதும் புதிய பொருள் கிடைக்குமா ஆர்வத்தோடு அறியப்பார்" என்று உள்ளுக்குளேயே கேள்வியும் பதில்களுமாய்ச் சமாதானங்களைப் பெற்றுக்கொண்டபோது
உற்சாகம் பிறந்தது. பிறகு நேர்ந்த ஒவ்வொரு சந்திப்புகளும், பயணங்களும், அனுபவமும் உற்றுநோக்கலில் கூர்மையைத் தந்தன.


சிலநூறு வருட வரலாறுகளை மட்டுமே கொண்ட நாடொன்று உலக வல்லரசாக எழும்பி நிற்பதும், அதன் அதிகாரத் தலையீடுகளுக்கு வேண்டியவரை விமர்சனங்களைப் பெற்று நிற்பதும் அதன் அரசியலடிப்படையில் விவாதிக்கப்படவேண்டிய பெரும்விசயம் என்ற புரிதல்களுக்குள் எல்லாம் புகுந்திருக்காத காலகட்டம் அது. ஆயினும் தன்னளவில் ஒரு நாடு தன்னைச் செழுமைப்படுத்திக்கொள்ளச் செய்திருக்கிற உள்கட்டமைப்பு வேலைகள் என்ற அளவில் அன்றும் இன்றும் மாறாத கருத்துக்களையே கொண்டிருக்கச் செய்கின்றன அமெரிக்க அவதானிப்புகள்.

தொடர்புகொள்ளப் பாதைகளற்ற மனிதர்கள் தனித் தீவாகத் தேங்கிவிடுவது நடக்கும். ஒரு அரசுக்குத் தன் நாட்டில் அப்படியொரு கிராமத்தையோ, நகரத்தையோ விட்டுவிட்டு நகர்வது நல்லதல்ல. அடிப்படை சாலைவசதிகளில் தொடங்கி ஒரு ஆரோக்கியமான இணைப்பை மனிதர்களிடையே இங்கே ஏற்படுத்திவைத்திருப்பதைக் காண முடிந்தது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும் சாலைகளால் இணைக்கப்பட்டிருப்பதும் சாலைவிதிகளுக்குத் தரப்பட்டிருக்கிற முக்கியத்துவமும் புரிந்தது. எந்த இடத்திலும் வரிசை என்று இருந்தால் அதில் தன் முறை வரும்வரை காத்திருந்து அணுகுகிற தன்மைகளும், லஞ்சம் கொடுக்கத் தேவையில்லாத அன்றாடக் காரியங்களும், இதுபோன்ற இன்னபிற சௌகரியங்களும் இந்நாட்டின் வாழ்வியல் அனுபவத்தை வேறுபடுத்திக்காட்டிக்கொண்டிருந்தன.

ஒன்றிலிருந்து இன்னொன்று எனத் தொடர்ந்த நாட்கள் இன்னும் வேறான சிந்தனைகளுக்குள் இழுத்துச் சென்றன. நூலகங்கள் இதற்குப் பெரும்பங்காற்றின. எல்லா நூலகங்களும் தன் பகுதியில் குழந்தைகளுக்கென்று கொண்டிருந்த ஒரு பகுதியும், குழந்தைகளுக்கான நூலக நிகழ்ச்சி வடிவமைப்புகளும் புதிய சன்னல்களைத் திறந்தன. பூமியும் வாழ்வும் நாம் நமது மூதாதையரிடமிருந்து பெற்றுக்கொண்டதல்ல, அதை நம் குழந்தைகளிடமிருந்தே கடன் வாங்கியிருக்கிறோம். அப்படி வாங்கியதை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் எனப் படித்ததைச் செயல்வடிவமாக்குவதற்கு முன் இந்த உலகத்தை, வரலாற்றை நாம் அவர்களின் மொழியில் அவர்களுக்கு வழங்குவது முக்கியமானது என்பதை உணர்ந்த அனுபவங்கள் அவை.


"நிலாவைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும்
ஓயாது கதைசொல்லிக்கொண்டிருந்த என் மகள்
திடீரென எல்லாவற்றையும் நிறுத்தியிருந்தாள்
பிறகுதான் நான் யோசித்தறிந்தேன்
அவளை நான் இப்போது பள்ளியில் சேர்த்துவிட்டிருப்பதை"
என்றான் ஒரு கவிஞன். கல்வி என்பது வேருக்கு நீரூற்றுவதாய் அன்றி பூக்களில் ஆணியடிப்பதாய் மாறிவிடும்போது குழந்தைகள் தமக்குள் ஒரு எழுச்சிக்கான திறப்பை இழக்கிறார்கள்.


நூலகங்கள் கற்றுத்தரும் பள்ளிகளாகவும், பள்ளிகள் ஒரு நூலகத்திற்குரிய அறிவுப் புதையலோடும் இங்கே குழந்தைகளுக்காகக் காத்திருப்பதைப் புரிந்துகொண்டேன். செல்லச் செல்லத் திகட்டாத இடங்களென அவற்றைக் கண்டுகொண்ட பிறகு ஓய்வு நேரங்களை அவையே பெற்றுக் கொண்டன. இந்த நிலையில் எனது மண் மனிதர்கள் என்ற உள்நேசம் ஊற உறவு வைத்துக்கொண்ட எனது தோழியரில் பெரும்பாலோர் தம் ஒன்றுகூடல்களை வெறும் அரட்டை நிலையங்களாகவும், மீறிப்போனால் இல்லங்களில் பூசை, புனஸ்காரங்களாகவும் இங்கும் வகுத்துக்கொண்டிருப்பதை அறியநேர்ந்தபோது ஏற்பட்ட ஏமாற்றங்களில் இருந்து காப்பாற்றியவையும் மேற்சொன்ன நூலக நுழைதல்களே.


மார்ட்டின் லூதர் கிங் தினமென்றால் ஏன் பள்ளிக்கு விடுமுறை என வாசிக்க ஆரம்பித்த நூல் தனக்குள் இருந்த வரலாறுகளுக்குள் இழுத்துக்கொண்டு திறந்துவிட்ட கதவுகள் அதிகம். நிறவெறியால் அடிமைகளாய் வாழ நேர்ந்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் ஆரம்பம் தொட்டு இன்றுவரையான பயணங்களைப் படித்தபோது சமத்துவத்துக்காகச் சிந்தப்பட்ட ரத்தம் வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒட்டிக்கிடப்பதை உணரமுடிந்தது. இன்று ஒரு விளம்பரம் என்றால்கூட அதில் பலநிறத்தவரும் இனத்தவரும் இருக்கும்படியாகவே இந்நாட்டில் வடிவமைக்கப்படும் அளவில் வந்து நிற்கிற சமத்துவ முகமும், அதில் ஒரு சீர்குலைவு வரும்போது எதிர்த்துப் போராடச் சாமானியனுக்கும் வசதியிருக்கிற சூழலும் சொல்லித் தந்தவை நிறைய. இதையெல்லாம் அறிந்துகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பங்கள் நான் என்னவென்று புரியாமலே வெறும் அழகியலுக்காக ஆராதித்து வந்த என் மண் இலக்கியங்கள், புராணங்களையும் மறுவாசிப்புச் செய்ய வைத்தன. அவற்றின் அழகு தாண்டிய அநீதிகளைக் குறித்த கேள்விகளை எழுப்பின.

இலக்கியங்களும், புராணங்களும் காட்டிய எமது கடவுள்களின் கருணை நிசமாய் என் சமூகத்தில் வஞ்சிக்கப்பட்டவர்கள் மீது காட்டப்படாத உண்மையும், அப்படி விடாது கட்டிக் காக்கிற அமைப்புகளும் அடையாளம் தெரிந்தன. அவற்றை விமர்சிக்கவும், அதை எழுதவும், பேசவும் சூழல் அமைத்துக் கொடுத்தது இந்தப் புலம்பெயர் வாழ்வுதான். சொந்தங்களும், அவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளும் அற்ற வாழ்வு தனிமையானதெனத்தான் பயமுறுத்தியது ஆரம்பத்தில். ஆனால் அந்தத் தனிமையும், வாழ்வு குறித்த, உலகம் குறித்த இன்னொரு புரிதலுக்கான, செயல்பாடுகளுக்கான களமாய் அமையமுடியும் என ஆகியிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கும், அனுபவங்களுக்கும் பிறகு இப்போது எனக்கு அருகாமையில் வசிக்கிற, எனது நாடு, எனது மொழி, எனது மாவட்டம், எனக்கும் அவள் அப்பாவுக்கும் ஒரே தொழில் என்று இருந்தும்கூட மனிதர்களில் பேதம் பார்க்கிற பெண் ஒருத்தியிடமிருந்து மெல்ல விரல்களைப் பிரித்துக்கொண்டு விலகுகிறேன், 65 வயதில் தன் எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டதான அந்திம வாழ்விலும் தனக்கென்று துணையாய் ஒரு காதலனைத் தேடிக்கொண்டிருக்கும் கலாச்சாரம் கொண்டவளானாலும் வேறு நாடு, வேறு மொழி கொண்ட பெண்ணொருத்தியின் விரல்கள் பற்றி இறுக்கிக்கொள்கிறேன் பேதமற்ற அவளின் மானுட செயல்களுக்காக. சமூகமோ, வாழ்வோ சிந்தனைகளில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் திரும்ப என் மண்மிதிக்கும்போதும் எனக்கான மாற்றுப்பாதையிலேயே செலுத்தவேண்டும், செலுத்தும் என்றே நம்புகிறேன்.

22 Comments:

At 10:53 PM, July 21, 2010, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா எப்ப இந்த மண்ணை மிதிக்கப்போறீங்க

 
At 4:57 AM, July 22, 2010, Blogger பதி said...

ஆரம்ப கால புலம்பெயர் வாழ்வு குறித்தான கற்பிதங்களில் எனது இரண்டாண்டுகளுக்கு முந்தைய மனநிலையைக் காண்கிறேன் !!!!

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்தும் மாறாத சில மனங்களையும் மாற வேண்டிய பல கருத்துக்களையும் தெளிவாய்ச் சுட்டி நிற்கின்றது உங்களது கட்டுரையும் இந்தப் புலம்பெயர் வாழ்வும்.

இந்த எழுத்து சென்றடைய வேண்டிய சிலருடன் இதனைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி.

 
At 5:41 AM, July 22, 2010, Blogger பாலராஜன்கீதா said...

படித்தவுடம் தோன்றும் எண்ணங்களை வார்த்தையில் வடிக்க இயலவில்லை.
இடுகை மிகவும் அருமை.

 
At 6:06 AM, July 22, 2010, Blogger நேசமித்ரன் said...

பிரபஞ்சம் ஒரு நதியென்றால் அதில் மானுட வாழ்வு ஒரு சருகைப்போல் பயணிக்கிறது. நதியில் சருகு அறிந்ததெல்லாம் மேற்பரப்பில் சிற்றலைகள், சீரான நீரோட்டம், சிலசமயம் பயங்காட்டும் சுழிகள். நனைந்து நனைந்து ஈரம் அடர்வேற ஆழம் அமிழ்தல்
//
எவ்வளவு அழகாய் சொல்லிவிட முடிகிறது உங்களுக்கு மட்டும் . மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் இந்த இடுகையை

 
At 4:14 PM, July 22, 2010, Blogger திரு/thiru said...

//பல ஆண்டுகளுக்கும், அனுபவங்களுக்கும் பிறகு இப்போது எனக்கு அருகாமையில் வசிக்கிற, எனது நாடு, எனது மொழி, எனது மாவட்டம், எனக்கும் அவள் அப்பாவுக்கும் ஒரே தொழில் என்று இருந்தும்கூட மனிதர்களில் பேதம் பார்க்கிற பெண் ஒருத்தியிடமிருந்து மெல்ல விரல்களைப் பிரித்துக்கொண்டு விலகுகிறேன், 65 வயதில் தன் எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டதான அந்திம வாழ்விலும் தனக்கென்று துணையாய் ஒரு காதலனைத் தேடிக்கொண்டிருக்கும் கலாச்சாரம் கொண்டவளானாலும் வேறு நாடு, வேறு மொழி கொண்ட பெண்ணொருத்தியின் விரல்கள் பற்றி இறுக்கிக்கொள்கிறேன் பேதமற்ற அவளின் மானுட செயல்களுக்காக. சமூகமோ, வாழ்வோ சிந்தனைகளில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் திரும்ப என் மண்மிதிக்கும்போதும் எனக்கான மாற்றுப்பாதையிலேயே செலுத்தவேண்டும், செலுத்தும் என்றே நம்புகிறேன்.//

பலர் வாசிக்க வேண்டிய கட்டுரை. முகநூலில் பகிர்ந்துள்ளேன்.

 
At 6:26 PM, July 22, 2010, Blogger நம்பி.பா. said...

எத்தனை வருடங்களானாலும் வேர்களற்ற மண் நமக்கு வேர்களற்ற மண்தானே!
நல்ல பதிவு செல்வநாயகி!

 
At 9:20 PM, July 22, 2010, Blogger செல்வநாயகி said...

நன்றி நண்பர்களே.

 
At 4:15 PM, July 24, 2010, Blogger Thekkikattan|தெகா said...

நாயகி,

இந்தக் கட்டுரை ரொம்ப அழுத்தமாக வந்திருக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரும் உள் வாங்கி தன் கண்களை அகலத் திறந்து இந்தத் தனிமையையும், அன்னிய உணர்வையும் விரைவாகவே பழகிக் கொண்டு ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தி தன் சுய வளர்ச்சிக்கு பயன் படுத்திக் கொண்டு, குறைந்த பட்சம் நமது தனி மனித நிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவாவது தம்மை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

...அவற்றை விமர்சிக்கவும், அதை எழுதவும், பேசவும் சூழல் அமைத்துக் கொடுத்தது இந்தப் புலம்பெயர் வாழ்வுதான். சொந்தங்களும், அவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளும் அற்ற வாழ்வு தனிமையானதெனத்தான் பயமுறுத்தியது ஆரம்பத்தில். ஆனால் அந்தத் தனிமையும், வாழ்வு குறித்த, உலகம் குறித்த இன்னொரு புரிதலுக்கான, செயல்பாடுகளுக்கான களமாய் அமையமுடியும் என ஆகியிருக்கிறது.....

ம்ம்ம், so, you are ready take a flight :) ...

 
At 8:34 AM, July 26, 2010, Blogger செல்வநாயகி said...

நன்றி தெகா.

 
At 9:02 AM, July 26, 2010, Blogger அமர பாரதி said...

அருமை செல்வநாயகி.

 
At 3:31 PM, July 26, 2010, Blogger ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு

என்பார்வையில்(சிபஎபா)
, இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்.

 
At 8:48 PM, July 26, 2010, Blogger செல்வநாயகி said...

அமர பாரதி, இளா,

நன்றி.

 
At 11:16 PM, July 26, 2010, Blogger Deepa said...

அற்புதமான எழுத்து. அசர வைக்கிறீர்கள்!

//பெரும்பாலோர் தம் ஒன்றுகூடல்களை வெறும் அரட்டை நிலையங்களாகவும், மீறிப்போனால் இல்லங்களில் பூசை, புனஸ்காரங்களாகவும் இங்கும் வகுத்துக்கொண்டிருப்பதை அறியநேர்ந்தபோது ஏற்பட்ட ஏமாற்றங்களில் இருந்து காப்பாற்றியவையும் மேற்சொன்ன நூலக நுழைதல்களே.//
தப்பித்தீர்கள்! :)

 
At 1:13 AM, July 27, 2010, Blogger கோமதி அரசு said...

//பேதமற்ற அவளின் மானுட செயல்களுக்காக//

பேதமற்ற மானுடம் வாழ்க!

//என் மண் மிதிக்கும் போதும் எனக்கான மாற்றுப் பாதையிலேயே செலுத்த வேண்டும்,செலுத்தும் என்றே நம்புகிறேன்//

நம்பிக்கை பலிக்கட்டும்.
நம்பிக்கைகள் பொய்ப்பது இல்லை.

செல்வநாயகி, அருமையான எழுத்துக்கு வாழ்த்துக்கள்!

 
At 11:18 AM, July 27, 2010, Blogger செல்வநாயகி said...

தீபா, கோமதியம்மா,

நன்றி.

 
At 10:28 PM, August 04, 2010, Blogger sweatha said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

 
At 11:55 PM, August 04, 2010, Blogger Mahi_Granny said...

எப்படி இதை வாசிக்க தவறினேன் எனத் தெரியவில்லை. வாசித்து அசந்து போய்விட்டேன்.எவ்வளவு அருமையாய் , சரளமாய் , பிரமிக்க வைத்து விட்டது. தங்களைப் போல பல சமயங்களில் உணர்ந்தாலும் இப்படி வெளிபடுத்த முடிந்த அழகுக்கு மனம் திறந்த பாராட்டுக்கள் .எல்லாப் பகுதிகளுமே அழகு. இங்குள்ள நூலகங்கள் எனக்குமிகவும் பிடித்த பள்ளிகளாகவே தெரிகிறது.எதைச் சொல்ல எதை விட , வாழ்த்துக்கள்.

 
At 8:03 AM, August 10, 2010, Blogger செந்திலான் said...

அறிவுஜீவிகளின் ஆழ் மனதில் என்ன இருக்கிறது ?
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் அக்கா ?
இங்கே நமக்கு தேவை சிந்தனைகளல்ல செயல்பாடுகள்.நீங்கள் இங்கு வந்து பாருங்கள் வந்து உங்கள் வேலை திட்டங்களை ஆரம்பியுங்கள் நல்வரவு!!!.

அமெரிக்க வாழ்வில் அது தரும் விடுதலையில் அது தரும் வசதிகளில் இருந்து நீங்கள் நமது சமூகத்தை பார்க்கிறீர்கள்.இங்கே தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.இது உங்களை வேண்டுமானால் தனித்து காட்டலாம் ஆனால் பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வைத் தராது.
இங்கே சாதி பிரச்சினை என்பது ஏதோ "ஆதிக்க" சாதி என்று சொல்லப் படுவர்களிடம் மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ஆனால் எங்கும் எதிலும் சாதி தான் இருக்கிறது.இன்றைக்கு சாதி விடுதலை பற்றி பேசுகின்ற இயக்கங்களிடம் சென்று ஆழமாக வேலை செய்து பார்த்தீர்களானால் தெரியும் அவர்கள் எவ்வளவு "தன்" சாதி வெறியர்கள் என்று.
சாதியை வைத்து பொய் வழக்கு போட்டு கட்டப் பஞ்சாயத்து பண்ணி காசு பிடுங்கும் இயக்கங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

சாதி எங்கே எப்படி அதன் வீரியத்தை இழக்கிறது என்றால் அது பொருளாதாரம் தொழில் நுட்பம் வளரும் போது கொஞ்சம் கொஞ்சமாக அது சிதைவடையத் தொடங்குகிறது.கொங்கு மண்டலத்தில் சாதி வெறி குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பொருளாதாரம்.சமூகத்தின் கீழ் நிலையில் இருக்கும் சாதி மேல் நிலையில் இருக்கும் சாதியினரிடம் இருந்து பொருளாதார ரீதியான சார்ந்து இருத்தல் இல்லை.அவரவர் வேலை தொழில் அவரவர்க்கு என்ற அளவில் இருப்பதால் இங்கே மோதல் குறைவு.
இது தான் அடிப்படை .

நீங்கள் இருக்கும் அமெரிக்கா வில் கூட இன்னமும் கருப்பர்கள் இழிவாகத் தான் நடத்தப் படுகிறார்கள் ஆனால் அதன் தாக்கம் சுத்தமாக வெளியே தெரியவில்லை என்ன காரணம் அங்கே எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை இருக்கிறது.

கடைசியாக
வினவு-லீனா பிரச்சினையில் உங்கள் கருத்தை அறிய ஆவல்.
அற்புதமான கதை சொல்லியாக இருக்கிறீர்கள்.அதை மீண்டும் புது எழுச்சியோடு நீங்கள் தொடர வேண்டும்.
நீங்கள் கம்யுநிசம் உட்பட எந்த இனக்குழு வாத பார்வை பிரிவிலும்(tribal mentality)
இல்லை என்றே நம்புகிறேன் அது ஒரு படைப்பாளியின் படைப்புத் திறனை அரித்து ஓட்டை விழச் செய்துவிடுகிறது.
நன்றி மீண்டும் சந்திப்போம்

 
At 10:55 AM, August 10, 2010, Blogger செல்வநாயகி said...

Mahi_Granny,
உங்கள் புரிதலுக்கு நன்றி.

செந்திலான்,

உங்களின் ஒரே பின்னூட்டம் பலமுறை வந்திருக்கக் கண்டேன். பிரசுரிக்கப்படாததால் மீண்டும் பதிந்தீர்களா எனத் தெரியவில்லை. இங்கே இரவு, அதுதாண்டியும் நான் வலைப்பக்கம் வருவது குறைந்த நேரம்தான் என்பதால் எப்போதுமே தாமதங்கள் நிகழலாம் பின்னூட்டங்கள் பிரசுரமாவதில், மன்னிக்க.

நான் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை ஒரு உள்நோக்கிய பயணம். அது சாதி என்கிற ஒரு பரிமாணம் மட்டுமின்றி இன்னும் சிலவற்றையும்கூடத் தொட முயன்றிருக்கிறது. ஆனால் உங்களுக்கு அது ஒன்றே பிரதானமாகவும், அதிலே என் பார்வைகள் சரியானதல்ல என்றும் தோன்றியிருக்கிறது. அதிலும் கொங்குநாட்டு உதாரணங்களை கட்டுரை பேசியிருக்காவிட்டாலும் நீங்களே எடுத்துக் கொண்டு சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்.

கடைசியாக இக்கட்டுரைக்குச் சம்பந்தமேயின்றி மீண்டும் வினவும், அங்கே நான் பின்னூட்டம் இடுவதையும் நினைவூட்டி ஒரு கருத்தும் உங்களிடமிருந்து.

செந்திலான், நிறையப் பேச வேண்டும். இப்போதைய எனது வேலைகளுக்கிடையில் அது உடனே சாத்தியமானதல்ல. முடிகிறபோது எழுதுகிறேன். நீங்கள் அதுவரை லீனா விடயத்தில் நான் வினவில் என்ன பேசியிருக்கிறேன் என்பதை (நர்சிம், சந்தனமுல்லை பிரச்சினை குறித்த வினவின் இடுகைகள்), இவ்வளவு வருடங்களில் நான் எழுதியிருக்கும் சமூகம் சார்ந்த எனது இடுகைகள், குறிப்பாக இப்போது பின்னூட்டப் பகுதியில் தெரியும் தேடும் முகவரிகள் மீள்பதிவு எண் 2, ஆகியவற்றைப் படித்து விடுங்கள். அவை திறந்த மனதோடு அணுகப்பட்டால் உங்களுக்குச் சில புரிதல்களைத் தரலாம்.

மற்றபடி கருத்து வேறுபாடுகளைத் தாண்டியும் உங்களின் நட்புணர்வையும், அன்பையும் புரிந்துகொண்டுதானிருக்கிறேன், அதற்கு நன்றி.

 
At 8:30 PM, August 25, 2010, Blogger ஜோதிஜி said...

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் கடிதத் தொடர்பு வாயிலாக திரு செல்வராஜ் அவர்களுக்கு வலைதளம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். 70 சதவிகித அத்தனை தலைப்புகளையும் படித்து இருப்பேன்.

அடுத்து என்னுடைய பணி இந்த இடுகைகள் தான்.

கவிதை கலங்க வைத்து விட்டீர்கள். புலம் பெயர் வாழ்க்கையை குறித்து உங்களைப் போலவே அறிய ஆவல் உண்டு.

தொடர்கின்றேன்.

 
At 7:05 PM, February 25, 2011, Blogger Deiva said...

Selvanayaki,
I read your blogs and continue to follow up and fail to write comments. But this time I would like to register my views because your views are very true about immigrants in US. Please keep it up

 
At 10:37 PM, February 25, 2011, Blogger செல்வநாயகி said...

தெய்வா,

நான் எழுதுவது மிகக் குறைந்துவிட்ட இந்நாட்களிலும் உங்களைப் போல் வந்து சொல்லிச் செல்லும் நண்பர்கள் ஒருவித மன எழுச்சியை ஏற்படுத்திச் செல்கிறீர்கள். நன்றி அன்புக்கு.

 

Post a Comment

<< Home