நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, August 23, 2010

ஒரு பிரபலமற்ற பதிவரின் நூல்வெளியீடு

தமிழ்மணம் நிர்வாகக்குழுவில் பங்கேற்றும் தமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டும் பணியாற்றி வரும் நண்பர்களில் ஒருவர் இரா. செல்வராசு. பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதிவருபவரும் அவர். வலைப்பதிவுகள் என்பவை சிறந்த மாற்று ஊடகங்களாக அறிமுகமானவை. ஆனால் சமீபகாலமாக வலைப்பக்கங்களும் பலநேரங்களில் வணிக, வியாபாரத் தந்திர ஊடகங்களைப்போலவே ஆகிவிட்டனவோ எனக் கருதுமளவு அவற்றின் உள்ளடக்கங்களும், செயல்பாடுகளும் ஆகிக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாட்களுக்கொருமுறை அவியலாகவும், குவியலாகவும், தாளிப்புகளாகவும் எப்படியேனும் அதிக பார்வைகள் கிடைக்க வேண்டுமே என ஏ ஜோக்குகள் உள்ளிட்ட தகிடுதத்த வேலைகளோடு கனஜோராக வலைப்பதிவு வியாபாரம் நடந்தேறிக்கொண்டுள்ளன. வாசகர் பரிந்துரை எனும் மோசடிகளில் ஈடுபடுவதிலும்கூட யாருக்கும் எந்தக் குற்றவுணர்வும் இல்லை. வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து மின் அரட்டை வழியாகவோ, தொலைபேசி வழியாகவோ அல்லது அடுத்தடுத்த சந்திப்புகள் வழியாகவோ கூட்டமொன்றைச் சேர்த்து விட்டால் அல்லது சேர்ந்துவிட்டால் நிரந்தர வாசகர் பரிந்துரைதான் என்ன எழுதினாலும்.

இப்படியாகப் பெரிதாகிக் கொண்டிருக்கும் வலைச்சமுத்திரத்தில் ஆரம்ப காலம் முதல் ஏதோ ஒரு வகையிலும், நேர்மையாகவும் இச்சமுத்திர உருவாக்கத்திற்காய் அப்போதைய ஒன்றுமற்ற மணல்வெளியில் உண்மையான அர்ப்பணிப்போடு சொட்டுச் சொட்டாய்ச் சுரந்தவர்கள் இப்போது அதன் அடியாழத்தில் வெளித் தெரியாதவர்களாய்க் கரைந்தபடி இதன் நீரோட்டம். வலைப்பதிவுகளில் ஆரம்பம் முதல் இயங்கிவரும் இரா.செல்வராசும்கூட அப்படிப்பட்ட ஒருவராய் அடியாழம் அமிழ்ந்தவராய், இப்போதும் எப்போதாவது அவர் எழுதினாலும்கூட வாசகர் பரிந்துரை ஓடங்களில் மிதக்காதவராய் இப்பரப்பில் இருந்துவருபவர்.

"என்னது கல்யாணமாகி 4 மாசமாச்சே, உன் மருமகளுக்கு இன்னும் விசேசமில்லையா?" என்று பேசுவது போல் "வலைப்பதிவுக்கு வந்து ஒருவருசமாச்சே இன்னும் புஸ்தகம் போடலையா?" என்று கேட்கும் சூழலே உருவாகி, பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் அன்றாடம் சந்தித்துக் கொள்கிற, வியாபாரம் பேசிக்கொள்கிற நிலையே உருவாகிவிட்ட
இந்தப் பின்னுக்கும் பின்னவீனத்துவ காலம் வந்துதான் "நாமும் நம் எழுத்தைத் தொகுப்பாக்கலாமா? அவை அதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கின்றனவா? இது தமிழுக்கும், தமிழ் வாசகனுக்கும் சிறிதேனும் பயன் தருமா?" என்றெல்லாம் மிகுந்த தன்னடக்கத்தோடு யோசித்து யோசித்து ஒருவழியாக தனது எட்டாண்டுக்கும் மேலான எழுத்து அனுபவத்திற்குப் பிறகு ஒரு தொகுப்பு வெளியிடும் முடிவை இரா. செல்வராசு எடுத்திருக்கிறார். "மெல்லச் சுழலுது காலம்" என்ற தலைப்பில் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகளாய் "வடலி" பதிப்பகம் மூலம் வரும் அவரது நூல் ஆகஸ்டு 26 அன்று ஈரோடு கொங்கு கலை மன்றத்தின் சக்தி மசாலா அரங்கில் மாலை 4 மணியளவில் வெளியீட்டு விழா காண இருக்கிறது. விருப்பமுள்ள நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். தமிழ்மண நிறுவனர் காசி அவர்களால் வெளியிடப்படுகிறது.

எட்டு ஆண்டுகளாய் இங்கே எழுதியும் தன்னைப் பிரபல பதிவராய் ஆக்கிக்கொள்ளத் தெரியாத இரா.செல்வராசு தன் நூலுக்கு ஒரு அணிந்துரை பெற்றுக்கொள்ளவும்கூட இன்னொரு பிரபல பதிவரை அணுகாத தவறையும் செய்திருக்கிறார்:))

கீழே அத்தொகுப்புக் குறித்த ஒரு வாசகப் பார்வையாக ஒரு பிரபலமற்ற பதிவர் எழுதிய கட்டுரை:))


வாழ்வின் மொழி


எழுத்து ஒரு தவம் என்றும், எழுத்து ஒரு வேள்வி என்றும் புகழின் வெளிச்சத்தில் நிற்கிற எழுத்தாளன் ஒருவன் கூறுகையில் அவனை இப்போது அதாவது ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் அவன்மீது அடிக்கப்படுகிற காலகட்டத்தில் கூடிநிற்கிற கூட்டமும் ஆமோதித்து ஆரவாரித்தபடி இருக்கும். ஆனால் அவனே கையிலிருந்த காசு முழுதும் தபால்தலையாக்கித் தன் படைப்புகளை விடாது ஊடகங்களுக்கு அனுப்புவதும், பின்பு அவை பிரசுரமாகாமலே திருப்பி அனுப்பப்படுவதுமான காலமொன்றில் அக்கம்பக்கத்தினரால்கூட உதாசீனப்படுத்தப்பட்டவனாக இருந்திருப்பான். நல்லெழுத்து, வல்லெழுத்து என்று பின்னால் உச்சியில் வைக்கப்படுகிற பல எழுத்துக்களுக்கும்கூட துவக்ககால இலக்கணம் இப்படியாக இருந்துமிருக்கிறது. எழுத்துக்களுக்கான கதவுகளும், வாசல்களும் அவ்வளவு எளிதில் தமிழ்ச்சூழலில் திறந்திருக்கப்பட்டதில்லை. எழுத நினைப்பவனுக்கு எழுதமுடிவது மட்டுமல்ல, நல்ல படைப்புகளை, நூல்களை வாசிக்க நினைக்கும் தாகம் உள்ளவனுக்கு அவற்றை வாங்கிப் படிக்கிற வசதியும்கூடப் பலநேரங்களில் கைகூடிவிடுவதில்லைதான். ஒரு அரசுப்பள்ளியில் அது இலவசமானது என்பதாலேயே சேரமுடிந்து கல்வியில் மேலேறிக்கொண்டிருந்த எனக்கு எப்படியோ தொற்றிக்கொண்ட வாசிப்புமோகத்தின்பொருட்டுத் தேடியலைந்த புத்தகங்கள் வாங்கிப்படிக்க முடிந்ததில்லை. அந்தச் சோர்ந்து கிடந்த சிறு உள்ளூர் நூலகச் சுவர்களில் ஒட்டியிருந்த புத்தகங்கள் தாண்டி அப்போது வேறெதையும் வாசிக்க வாய்ப்பிருந்ததில்லை. எத்தனையோ பேருக்கும் இதுதான் நிலையென்றும் இருந்திருக்கலாம். எழுத நினைத்தும் எழுதப்படாத கதைகளும், வாசிக்க நினைத்தும் வாசிக்கப்படாத எழுத்துக்களும் வடிக்கும் பள்ளங்கள் இருந்தபோதும் ஒவ்வொருவருக்கும் சொல்ல இருக்கும் கதைகள் குறைந்துபோவதில்லை. ஒரு அம்மிக்கல் கொத்த வருபவரும், கோடாலிக்கொண்டை முடிந்த ரப்பர்வளையல் பெண்ணும் பேசிக்கொண்டிருக்கும் உரையாடல்கூட அத்தனை உணர்வுகளோடும், நுணுக்கங்களோடும் ஒரு சிறுகதையைக் காற்றில் எழுதிச்செல்கிறது.


இப்படிச் சாமானியர்களின் வாழ்வும், அனுபவமும், ஆதங்கங்களும், அக்கறையும் அவர்களாலேயே அவர்களின் மொழியிலேயே எழுத்தில் பதிவுசெய்யப்படப் போதிய வாய்ப்புகள் அற்ற குறையை இந்த நூற்றாண்டில் இணையம் கொஞ்சம் போக்கியிருக்கிறது. கணினியில் தமிழும், அத்தமிழில் படைப்புகளும் செய்வது இலகுவான காலம்தொட்டே எழுதிவந்தவர்களில் ஒருவராக இந்நூலாசிரியர் செல்வராசு இருந்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழனும், தாயகத் தமிழனும் ஒரு சிறு பெட்டி வழியே தம் மொழியில் எழுதிப் பரவசமடைகிற தருணங்கள் அழகானவை. அதிலும் வேர்விட்டு விலகி வேறொரு தேசத்தில் விழுதூன்ற வரும் தமிழருக்கு இவ்விணைய எழுத்து ஊடகங்கள் அற்புதமானவை. அப்படியான விரிவெளி வழியேதான் செல்வராசு அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. தனக்கென்று ஒரு மொழியும், நடையும், இயல்பும் கொண்டு எழுதிவந்த இவரிடம் அவரின் மண்வாசனை எழுத்துக்கள் இழுத்துச் சென்றன.

இணைய ஊடகத்தின் இன்னொரு சிறப்பம்சம் எழுதுபவர்களுக்கும், வாசகர்களுக்குமான இடைவெளியற்ற தன்மை. எழுதிப் பிரசுரிக்கும் பத்தாவது நிமிடத்தில் உலகின் வேறொரு மூலையிலிருக்கும் தமிழர் வாசித்து முடித்துக் கருத்து பரிமாற்றமோ, உரையாடலோ நிகழ்த்திவிடமுடியும் எழுதியவருடன். அதேசமயம் அந்த உரையாடல் பயனுள்ளதாக இருக்கும் ஒன்றாக வேண்டுமென்றால் எழுதுபவரும், வாசிப்பவரும் கருத்துரீதியான முரண்பாடுகளையும் தாண்டி உரையாடலுக்கான நெகிழ்வுத்தன்மையோடு இருக்கும்போது மட்டுமே சாத்தியம். அப்படியொரு நெகிழ்வுத்தன்மையை எப்போதும் கொண்டிருப்பவர் செல்வராசு. அது அவர் எழுத்தில் ஒலிக்கும் வாழ்வுமீதான தீராக்காதலின் இன்னொரு பரிமாணம். பேரண்டம் என்பதை பெரியதொரு அன்புப் பிண்டமாய் உருவகப்படுத்தினால் அதிலிருந்து தெறித்து விழுந்த சிறு பகுதியாய் தனிமனித வாழ்வைக் கொள்ளலாம். ஒரு வலைபின்னும் சிலந்தியைப் போல் ஒவ்வொரு மனித உயிரும்கூடத் தன்னைச் சுற்றித் தனக்கென்று மனிதர்களைச் சேர்த்துவைத்துக்கொள்ளவே என்றும் பிரியப்படுகிறது. இதன் சூட்சுமங்களைத் தன் அனுபவங்களையே சோதனைக்கூடமாக்கித் தெளிவுபடுத்திக்கொண்டே செல்கின்றன இந்நூலாசிரியரின் வாழ்வியல் குறிப்புகள். சுற்றியுள்ள மனிதர்கள் வேறுவேறானாலும் அடிப்படையில் ஆதாரமான முடிச்சுகள் பொதுவென்றே இருப்பதால் ஆசிரியரின் அனுபவங்களோடு தானும் ஒருவராய்ப் பயணிப்பது படிக்கும் எல்லோருக்குமே சாத்தியம்தான்.


ஒரு சின்ன மழை பெய்து முடித்திருக்கிறது. அந்த வரிசையில் உள்ள அத்தனைவீடுகளிலும் கதவுகள் சாத்தியிருக்க ஒருத்தி மட்டும் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்து நிலம் ஏந்தியிருக்கும் மழையின் ஒவ்வொரு துளி ஈரத்திலும் கைதொட்டும் கால் வைத்தும் பேரானந்தம் சுகிப்பவளாய் ஓடிக்கொண்டிருக்கிறாள். இதை அப்படியே வாழ்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அவசரகதியில் ராட்சத சக்கரங்களுடன் அனாயாசமாகத் திசைமாற்றி வைத்துவிடும் வாழ்வை அதற்கு வெளியே வந்து அதைப் பார்த்துக் கைதட்டியும், கொட்டியும் சிரிக்குமொரு மனநிலை வாய்த்துவிட்டால் பிறகு அது பேரானந்தப் பெருவாழ்வுதான். அதன் சக்கரங்கள் எதிலும் சிக்கிக்கொள்ளாமல் நாம் அதன்மீது சவாரி செய்யலாம். வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வையும் நினைவுகளில் தேக்கிப் பின் நிதானமாய் அசைபோடும் செல்வராசின் இத்தொகுப்பு பலருக்கும் அவர்கள் சுவைத்த அல்லது சுவைக்க மறந்த கணங்களைத் திரும்பப் பெற்றுக்கொடுக்கிறது.


தான் குழந்தையாய்த் தவழ்ந்த தன் ஆத்தாவின்(அம்மாவின் அம்மா) கைரேகைகளின் வளைவுகளைக்கூடப் பத்திரமாக எழுத்தில் சேகரித்து ஒரு பாமரத் தாய்மையை, அதன் பொங்கும் பிரவாகத்தை எழுத்தில் வடித்தெடுப்பதும், இப்போது தன் கைகளில் குழந்தைகளாய்த் துள்ளும் தன் மகள்களின் விழிகளில் இருந்து தன்மீது சொரியும் குழந்தமைத் தாய்மையை விசும்பும் நன்றியோடு பதிந்து வைப்பதும் செல்வராசுவின் திகட்டாத மொழியில் வரிசையாய் நகர்கின்றன. அவரின் குழந்தைகள் சார்ந்த அனைத்துப் பதிவுகளுமே புதிதாய்ப் பெற்றோர் ஆனவர்களுக்கும், ஆக இருப்பவர்களுக்கும் ஒரு அழகான கையேடு என்பேன். ஆனால் அவை யாருக்கும் அறிவுரைகள் அல்ல, செய்முறை விளக்கங்களும் அல்ல. சில கவிதைகள் அவை. உள்ளே தோய்ந்து அதன் ஈரத்தில் நனைந்து மெல்லிய புன்னகையைக் கசியவிட்டு நமக்குத் தேவையான எதையும் அள்ளிக்கொள்ள விரிந்துகிடக்கும் அனுபவங்கள் அவை.


"நீ விளையாடப் போகையிலே
விரல் அழுந்தும் என்று சொல்லி
வெள்ளியிலே சிறு செருப்புச்
செய்திடுவார் உன் மாமா
நீ பச்சைக் குடைப் பிடிச்சுப்
பயிர்பார்க்கப் போகையிலே
பாதம் நோகுமின்னு
பவுனால் ஒரு செருப்புச்
செய்திடுவார் உன் மாமா" என்று கொங்குச் சீமையிலே தாய்மார்கள் பாடுவதாய் நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்கள் கேட்டதுண்டு. ஒன்றரை ஏக்கர் வறக்காடும், ஒன்பது ஆடுகளும் வைத்துக் கஷ்ட சீவனம் செய்வதுதான் நிதர்சனம் என்றாலும் கனவுகளில், பாடல்களில் வசந்தங்களை வாரியிறைத்துக் குழந்தைகளை வளர்க்கும் தன் சொந்தச் சீமைவிட்டு அந்நியச் சீமையிலே அகப்பட்டுக்கொண்ட தன் குழந்தைகளுக்குத் தான் தாலாட்டுப் பாடித் தூங்கவைத்த கதையை நகைச்சுவை ததும்ப இயல்பாக எழுதியிருக்கிரார். ஆனால் வாசிப்பவருக்கு அது தரும் இன்பம் அதிகம். தமிழ்கேட்கா தூரத்தில் தன் குழந்தைகளுக்குத் தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடித் தூங்கவைக்கும் தந்தை செல்வராசு.

"கண்ணையுங் காதையும் மட்டும் உட்டுப்போட்டு நீங்க தோலையே உரிச்சாலுஞ் சேரீங்க, பையன் நல்லாப் படிச்சாப் போதுமுங்க" என்று பாமர வெகுளித்தனத்தோடு பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிடும் ஊர்ச்சூழல் ஒன்றில்தான் இந்நூலாசிரியரும் பிறந்து வளர்ந்திருக்கிறார். தான் பெற்ற கல்வியும், மேன்மையும், உழைப்பும், அர்ப்பணிப்பும் இன்று தந்திருக்கும் இடத்திலிருந்துகொண்டு தன் பிள்ளைகளிடம் தன்னை மாணவனாக ஒப்படைத்துப் பாடம் கேட்கிறார். குழந்தைகளைச் சக்தியற்றவர்களாய்ச் செய்யும் எந்தவொரு மிரட்டல் வழிமுறையையும் அவர்களை ஒழுங்குபடுத்தக் கையாளக்கூடாது என்பதை ஒரு பக்குவமான நிலையிலிருந்து எடுத்துச் சொல்கிறார். அந்தப் பிள்ளைகள் அவருக்குச் சொல்லும் கதைகளையும், அவர் பிள்ளைகளுக்குச் சொல்லும் கதைகளையும் சலிப்புகளற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். ஒவ்வொரு எழுத்திலும், சொல்லிலும் உயிர் இருக்கிறது.

புலம்பெயர் தேச வாழ்வு புதிய அனுபவங்களை மட்டும் தருவதில்லை. அது விட்டுவந்த சுவடுகளை நினைத்தும் ஏங்கவைக்கிறது. எந்தக் குளிரூட்டியும் ஈடாவதில்லை ஒரு மரநிழலுக்கு. அந்த இதந்தரும் மரநிழல்களாய்க் கூடவந்த மனிதர்கள் சிலரையும் பிரிய நேர்ந்திருப்பதும், அடிக்கடி சந்திக்க இயலாதிருப்பதும் விதைக்கும் பெருமூச்சும் சில கட்டுரைகளாக இந்நூலில் எழுதப்பட்டிருக்கின்றன. பிரிவுத்துயர் இல்லாத இலக்கியங்கள் ஏது தமிழில்? பெருங்குரலெடுத்து ஆவேசமான கோபத்தை எதன்மீதும் காட்டுவதில்லை செல்வராசின் எழுத்துகள். ஆனால் மென்மையாகச் சொல்லப்பட்டாலும் உயிர்வரை தைக்கும் வலியை அது தரவே செய்கிறது. நீதித்துறை ஊழியராகப் பணிபுரிந்த தன் தந்தையைப் பற்றிய நினைவுகூறல்களிலும், அவரைத் தன்னோடு அழைத்துவந்து வைத்துக்கொள்வதற்காய் விசா ஏற்பாடுகளைச் செய்தபோது நமது அரசாங்க நடைமுறைகள் அவரைத் துவள துவள அலைக்கழித்ததையும் நுட்பமாக எழுதியிருக்கிறார். அவை அவரின் தந்தை தாண்டிய எத்தனையோ விடயங்கள் குறித்து நமது கவனத்தைக் கோருகின்றன.


செல்வராசுவின் இடுகைகளைத் தனித்தனியாகத் தொடர்ச்சியற்று நான் இணையத்தில் வாசித்தபோது அறியாத ஒன்றை இப்போது தொகுப்பாக வாசித்தபோது அறிந்துகொண்டேன். அது அவரின் எழுத்துக்களில் குடிகொண்டிருக்கும் நகைச்சுவை நடை. ஆழமான அனுபவம் ஒன்றை எழுதும்போதும் படிப்பவனை விலகி ஓடவைக்காத, இழுத்துப் பிடித்துக்கொள்கிற மெல்லிய நகைச்சுவை எல்லா இடங்களிலும் இழையோடுகிறது. இது தொடர்ந்து எழுதுகிறபோது எழுத்தில் இன்னும் பலதூரங்களை இவரைக் கடக்க வைக்கும். "கண்கள் சொல்லும் கதை" பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது
ஆசிரியரின் சுய எள்ளல் பாணி நகைச்சுவை.


ஓரளவிற்கு நூலைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இன்னும் இந்த முன்னுரையில் நான் குறிப்பிடாத கதைகளிலும், கட்டுரைகளிலும் நிறைந்து கிடக்கின்றன வாசிப்பவரை அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கச் செய்யும் சிறப்புகள்.

மொத்தமாகச் சொல்வதென்றால் குழந்தைகளைச் சுண்டியிழுத்து அவர்களை வாங்கவைத்து வாயில் இட்டதும் கரைந்து பிறகு முடிந்தபிறகும் தன் சுவையை அவர்கள் மூலம் சப்புக்கொட்டவைக்கும் பஞ்சுமிட்டாயைப் போல இத்தொகுப்பு. எளிய மொழியில் தனிமனித வாழ்வை அழகான கதைகளாகக் காட்டிக்கொண்டே போகிறது. அதற்காகப் பஞ்சு மிட்டாய் குழந்தைகளுக்கானது என்பதுபோல இந்நூலும் ஒருசாராருக்கானது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒளிந்திருக்கும் துள்ளல் குழந்தையொன்றின் மனநிலை போதும் இத்தொகுப்பின் பல பகுதிகளை உள்வாங்க. அப்படியொன்றில்லை தொலைந்துபோனது என்பவருக்கும் அப்படியான மனநிலையை இத்தொகுப்பே தோற்றுவித்தும் கொடுக்கும் என்பது மிகையில்லை.

நிறைய எழுதிக்கொண்டிருங்கள் செல்வராசு உங்களுக்கான பயணங்களோடு. அன்போடு வாழ்த்துகிறேன்.

செல்வநாயகி,
ஜூலை 2010.

45 Comments:

At 7:20 PM, August 23, 2010, Blogger செல்வநாயகி said...

வலைப்பதிவுகளின் நிகழ்வுகள் பற்றிச் சொல்லும்போது "அவியல், குவியல், தாளிப்பு" என்ற பதங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். அந்தப் பெயர்களில் அடிக்கடி இடுகைகள் இடும் பதிவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக அவற்றை யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அவற்றை எழுதுபவர்கள் ஏ ஜோக்குகளெல்லாம் எழுதாதவர்களாகவும் இருக்கலாம். பொதுவாக இத்தகைய இடுகைகள் பலநேரங்களில் வணிகத் தந்திரங்களை மட்டுமே கொண்டிருப்பதாகப் பட்டதால் வைக்கும் விமர்சனமே அது. நியாயப்படி அதில் சாண்வெஜ், நான்வெஜ், கொத்துப்பரோட்டா, கொத்தாத பரோட்டா எனப் பல பதங்களும்கூடச் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். இடுகையை வெளியிட்டு மீண்டும் வாசித்தபோது இதைச் சொல்ல வேண்டுமென்று தோன்றியதால் இப் பின்னூட்டம்.

 
At 7:43 PM, August 23, 2010, Blogger Photo 'N Paint said...

/ஒரு பிரபலமற்ற பதிவரின் நூல்வெளியீடு /
;-)
அவர் நன்றாகத் தமிழில் எழுதுகிறார் என்பதை நேரடியாகச் சொல்ல எதுக்கு இவ்வளவு சுற்றிவளைப்பு?

 
At 7:47 PM, August 23, 2010, Blogger Photo 'N Paint said...

/தனது எட்டாண்டுக்கும் மேலான எழுத்து அனுபவத்திற்குப் பிறகு ஒரு தொகுப்பு வெளியிடும் முடிவை இரா. செல்வராசு எடுத்திருக்கிறார்/
18 ஆண்டுகள் என்பதுதான் பொருத்தம். அவர் user.net களிலேயே கதை எழுதியவர்

 
At 8:42 PM, August 23, 2010, Blogger Ravichandran Somu said...

நண்பர் செல்வராசுவின் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

நல்ல அணிந்துரை....

 
At 9:23 PM, August 23, 2010, Blogger Thekkikattan|தெகா said...

நண்பர் செல்வராசுவின் புத்தக வெளியீடு சிறப்புற வாழ்த்துக்கள்!

சரியான ஆளிடம்தான் அணிந்துரை வாங்கியிருக்கார், நண்பர். அருமையாக வழங்கி இருக்கீங்க. வலையுலகின் தற்போதைய பாதையை சுட்டிக்காட்டியதும் அவசியமானதென்றே கருதுகிறேன்.

காலம் கரைத்துச் சொல்லும் எது சாயம் எது வண்ணமென்று...

 
At 9:41 PM, August 23, 2010, Blogger ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் புத்தக செல்வராஜ் அவர்களுக்கும் அவரின் புத்தக வெளியீட்டு விழாவிற்க்கும்...!

 
At 10:45 PM, August 23, 2010, Blogger Deepa said...

மிக்க நன்றி செல்வநாயகி.
உடனே வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது உங்கள் அற்புதமான அறிமுகம்.
வலையுலகச் சூழல் பற்றி நீங்கள் எழுதி இருப்பது கசப்பான உண்மை.
செல்வ‌ராசு அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி இந்த‌ உங்க‌ள் இடுகையின் மூல‌ம் தான் அறிகிறேன் என்ப‌து என‌க்கு வெட்க‌மாக‌ இருக்கிற‌து.

 
At 10:55 PM, August 23, 2010, Blogger KarthigaVasudevan said...

செல்வாராஜ் அவர்களின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் ,இவரது எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை ,அணிந்துரை வழங்கியதன் மூலம் இவரை அறிமுகப் படுத்திய செல்வநாயகி அவர்களுக்கும் நன்றிகள் .

 
At 10:57 PM, August 23, 2010, Blogger Deepa said...

மிக்க நன்றி செல்வநாயகி.
உடனே வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது உங்கள் அற்புதமான அறிமுகம்.
வலையுலகச் சூழல் பற்றி நீங்கள் எழுதி இருப்பது கசப்பான உண்மை.
செல்வ‌ராசு அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி இந்த‌ உங்க‌ள் இடுகையின் மூல‌ம் தான் அறிகிறேன் என்ப‌து என‌க்கு வெட்க‌மாக‌ இருக்கிற‌து.

 
At 11:06 PM, August 23, 2010, Blogger புலவன் புலிகேசி said...

செல்வராசுவிற்கு எனது வாழ்த்துக்கள்...

 
At 11:06 PM, August 23, 2010, Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...

செல்வராசுவின் புத்தக வெளியீடு சிறப்புற வாழ்த்துக்கள்!

 
At 11:08 PM, August 23, 2010, Blogger Cable சங்கர் said...

நண்பர் செல்வராசுவின் புத்தக வெளியீட்டூக்கு வாழ்த்துக்கள்

 
At 11:29 PM, August 23, 2010, Blogger துளசி கோபால் said...

அட! நம்ம செல்வராஜ்!!

இனிய பாராட்டுகளும் வெளியீட்டு விழா சிறப்பாக நடக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்து(க்)களும்.

கவனத்திற்குக் கொண்டுவந்த உங்களுக்கு நன்றி செல்வா.

நம்ம காசி வெளியிடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.

 
At 11:31 PM, August 23, 2010, Blogger ராம்ஜி_யாஹூ said...

இந்த பிரபலம், பிரபலம் அல்லாதவர் என்ற வார்த்தைகள்/பாகுபாடே தவறாகப் படுகிறது எனக்கு, அனைவரும் மனிதர்களே, அனைவரும் பதிவர்களே.

உங்கள் பார்வையில் பிரபலமாகப் படும் ஒரு மனிதர்/பதிவர் எனக்கு பிரபலம் அல்லாதவராக தெரியலாம். & vice versa


மற்ற படி, உங்கள் எழுத்து நடை, வார்த்தை பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்தது, படிக்க சுவையாக இருந்தது. உங்கள் karuthu எனக்கு உடன்பாடு அல்ல, ஆனால் உங்கள் வார்த்தை கோர்வைகள் என்னை கட்டி போட்டன.

 
At 11:36 PM, August 23, 2010, Blogger ஈரோடு கதிர் said...

செல்வராசு அவர்களை சமீபத்தில் எனக்கு இட்ட பின்னூட்டம் வாயிலாக ஈரோட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து, நண்பர் பழமைபேசி மூலம் கைபேசி எண் பெற்று பேசினேன்.

அடுத்து அவருடைய புத்தக வெளியீடு குறித்து எங்கள் ஈரோடு தமிழ்ப்பதிவர்கள் குழும உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை மடல் அனுப்பியுள்ளோம்.

மேலும் எங்கள் குழும வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.

புத்தகம் குறித்து மிக நேர்த்தியாக விவரித்துள்ளீர்கள்.

பதிவர்கள்களின் இடுகைகள் குறித்த தங்கள் கருத்துடன் ஒத்துப்போக முடியவில்லை. மிகச் சிறந்த புத்தகம் குறித்து எழுதும் போது, தலைப்பும் - பரிந்துரை மற்றும் இன்ன பிற குறிப்பிட்டிருப்பது பொருந்தாத ஒன்று - தேவையில்லாத ஒன்று

தயவுசெய்து தவிர்த்திருக்க வேண்டும்

செல்வராசு அவர்களுக்கு வாழ்த்துகள், ஈரோடு பதிவர்கள் பெரும்பான்மையாக விழாவில் கலந்துகொள்வார்கள் என நம்புகிறேன்

 
At 11:52 PM, August 23, 2010, Blogger ரமி said...

சகோதரி,

ஒருவரை புகழ வேண்டும் என்றால், அடுத்தவரை இகழ வேண்டும் என்ற உங்களது கருத்து உங்களது
அனுபவ முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

 
At 11:53 PM, August 23, 2010, Blogger கோமதி அரசு said...

செல்வநாயகி,அருமையாக உள்ளது. செல்வராசு அவர்களின் நூலுக்கு நீங்கள் அளித்துள்ள அணிந்துரை.

செல்வநாயகி,பஞ்சு மிட்டாய் இந்த வளர்ந்த குழந்தைக்கு பிடிக்கும்.

செல்வராசு அவர்களின் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

 
At 12:07 AM, August 24, 2010, Blogger கண்ணகி said...

செல்வராசுக்கு வாழ்த்துக்கள்...உங்கள் அறிமுக எழுத்துக்கள் அழகாக இருக்கிறது..

 
At 12:18 AM, August 24, 2010, Blogger vasu balaji said...

செல்வராசு அவர்களின் அறிமுகத்துக்கு நன்றி. புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

 
At 12:25 AM, August 24, 2010, Blogger உண்மைத்தமிழன் said...

எழுத்தாளர் அண்ணனுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்..!

 
At 12:45 AM, August 24, 2010, Blogger Uma said...

அறிமுகத்திற்கு நன்றி.

 
At 2:27 AM, August 24, 2010, Blogger Indian said...

செல்வராஜ் அவர்களின் இடுகைகளை நானும் விரும்பிப் படிப்பவன். நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

 
At 3:08 AM, August 24, 2010, Blogger நிலவகன் said...

ஏ ஜோக்கு எழுதிப் பொழைக்கும் நாறப் பொழைப்பு அதுக்கு வக்காலத்து வாங்கவே சில நாதாரிப் பசங்க. அது மட்டுமா உள்ள செக்ஸ் பக்கத்தில் உள்ள விடயங்களை எல்லாம் கூட பகிர்கிறார்கள் இந்த அவியல் , துவையல், கொத்து பரோட்டா , கொத்து ரோட்டி, சாண்ட்ஜ் விச் , இடியப்பம், பிட்டு , என்று சமைக்கும் சமயல் காரர்கள்.

இந்த நாய்கள் அதுக்குள்ளே பிதட்டல் வேற, தாங்க ரேங்கில ஒரு லட்ச்சத்துக்குள்ள எண்டு..

இவர்களுக்கு தெரியாது இவனுகள் ஏ ஜோக்கு எடுக்கும் செக்ஸ் பக்கங்களின் தர வரிசை சில ஆயிரங்களுக்குள்ளே எண்டு...

களவாணிப் பயலுகள் தங்கட பொம்பிளைப் பிள்ளைக்கு தன பதிவுகள காட்டுவானுகளா?

ஏ ஜோக் எழுதாம ஒரு மாதத்திற்கு அவரேஜ் கிட்ஸ் ஒரு ஐம்பது எடுப்பானுகளா ?

 
At 3:08 AM, August 24, 2010, Blogger நிலவகன் said...

ஏ ஜோக்கு எழுதிப் பொழைக்கும் நாறப் பொழைப்பு அதுக்கு வக்காலத்து வாங்கவே சில நாதாரிப் பசங்க. அது மட்டுமா உள்ள செக்ஸ் பக்கத்தில் உள்ள விடயங்களை எல்லாம் கூட பகிர்கிறார்கள் இந்த அவியல் , துவையல், கொத்து பரோட்டா , கொத்து ரோட்டி, சாண்ட்ஜ் விச் , இடியப்பம், பிட்டு , என்று சமைக்கும் சமயல் காரர்கள்.

இந்த நாய்கள் அதுக்குள்ளே பிதட்டல் வேற, தாங்க ரேங்கில ஒரு லட்ச்சத்துக்குள்ள எண்டு..

இவர்களுக்கு தெரியாது இவனுகள் ஏ ஜோக்கு எடுக்கும் செக்ஸ் பக்கங்களின் தர வரிசை சில ஆயிரங்களுக்குள்ளே எண்டு...

களவாணிப் பயலுகள் தங்கட பொம்பிளைப் பிள்ளைக்கு தன பதிவுகள காட்டுவானுகளா?

ஏ ஜோக் எழுதாம ஒரு மாதத்திற்கு அவரேஜ் கிட்ஸ் ஒரு ஐம்பது எடுப்பானுகளா ?

 
At 3:09 AM, August 24, 2010, Blogger பவள சங்கரி said...

நண்பர் இரா. செல்வராசு அவர்களின் நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள். வலைப்பதிவின் இன்றைய நிலை குறித்த உங்களின் எண்ணம் முற்றிலும் சரி. நானும் இதை அதிகமாக உண்ர்ந்திருக்கிறேன். நன்றி.

 
At 4:00 AM, August 24, 2010, Blogger பதி said...

செல்வராசு அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களது அறிமுகத்திற்கு நன்றி.

 
At 4:15 AM, August 24, 2010, Blogger " சித் || sid " said...

பதிவர் செல்வராசுவிற்கு எனது வாழ்த்துக்கள்...

" ஒன்றரை ஏக்கர் வறக்காடும், ஒன்பது ஆடுகளும் வைத்துக் கஷ்ட சீவனம் செய்வதுதான் நிதர்சனம் என்றாலும்" சாதியை இருக்க பிடித்து தொங்கி கொண்டிருக்கும் சாதி கவுண்ட சாதி . அவர்களின் அடக்குமுறைகளும் அராஜகமும் ஊர் அறிந்தது . நீங்கள் எழுதிருப்பதை பார்த்தால் (சொந்த)சாதியை எதிர்த்து சிறிதும் வாய் திறவாத மனிதராகத்தான் எனக்கு தெரிகிறது .அநேகமாக வாங்கி படிப்பேன் என்று நினைக்கிறன் .

 
At 4:32 AM, August 24, 2010, Blogger "உழவன்" "Uzhavan" said...

//வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து மின் அரட்டை வழியாகவோ, தொலைபேசி வழியாகவோ அல்லது அடுத்தடுத்த சந்திப்புகள் வழியாகவோ கூட்டமொன்றைச் சேர்த்து விட்டால் அல்லது சேர்ந்துவிட்டால் நிரந்தர வாசகர் பரிந்துரைதான் என்ன எழுதினாலும்//
 
இப்போது 90%க்கும் மேல் இப்படித்தான் இருக்கிறது பதிவுலகம் :-(
 
செல்வராசு அவர்களுக்கு வாழ்த்துகள்

 
At 4:41 AM, August 24, 2010, Blogger Unknown said...

செல்வராசு அவர்களுக்கு வாழ்த்துகள்

 
At 4:59 AM, August 24, 2010, Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

எழுதவேண்டுமே என்பதற்காக இல்லாமல் .. அவ்வப்போது தோன்றும் உணர்வுகளை அழகாக பதிவாக்குபவர் செல்வராஜ்.. உங்கள் அணிந்துரையும் அழகாக இருக்கிறது. செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 
At 5:35 AM, August 24, 2010, Blogger பா.ராஜாராம் said...

செல்வராஜ் சார், வாழ்த்துகள்!

அணிந்துரை ரொம்ப நல்லா வந்திருக்கு, செல்வநாயகி.

//பிரபலம், பிரபலமற்ற//

நீங்களுமா? :-)

 
At 5:51 AM, August 24, 2010, Anonymous Anonymous said...

புத்தக வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்

 
At 8:39 AM, August 24, 2010, Blogger செல்வநாயகி said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

கதிர்,

ஏன் எழுதக் கூடாது:)) உள்ளதை உள்ளபடிதானே எழுதியிருக்கிறேன்? மூடி வைத்துக்கொள்வதால் நம் சீர்கேடுகள் இல்லையென்று ஆகிவிடுமா? இன்று கல்லூரி கல்லூரியாக மாணவர்களையெல்லாம் வலைப்பதிய அழைத்துக்கொண்டுள்ளீர்களே! உண்மையில் படிக்கிற நேரத்திலிருந்து கொஞ்சம் ஒதுக்கி அவர்கள் இங்கே வந்து எழுதி சமூகப் பங்காற்றுவதற்கான ஆரோக்கியமான சூழலைத்தான் நாமெல்லாம் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோமா? வலைப்பதிவில் நட்பு என்பது வேறு, நியாயமான விமர்சனங்களைத் தேவையான இடங்களில் வைப்பது என்பது வேறு. இதை நாம் உண்மையில் உணர்ந்து செயல்படுகிறோமா என்பதை நாம் யோசித்துப்பார்க்க வேண்டும்.

ரமி,

உங்களின் அனுபவ முதிர்ச்சியான எழுத்துக்களைப் பிரசுரித்து இவ்வலைச்சமூகத்தைச் செழுமையாக்க வேண்டுகிறேன்:))

சித்,

கவுண்டர்கள் என்பவர்களும் சாதி ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாதவர்களே! அதேசமயம் அச்சாதியில் வெறும் விவசாயத்தை நம்பி வறக்காட்டில் வாழும் பொருளாதார நிலையில் மிகவும் பிந்தங்கியவர்களின் வாழ்வு கவனம் செலுத்தப்பட வெண்டிய கண்ணீர்ப் பக்கங்களும் ஆகும். அதற்காக அப்படி வாழ்பவர்கள் என்பதால் அவர்களின் மனதில் ஓடும் தீண்டாமை உணர்வுகளைப் பேசக்கூடாது என்றில்லை. பேசப்பட வேண்டும்தான் தகுந்த நிகழ்வுகள், வாழ்வியலோடு.

செல்வராசு பொதுவாகவே இயங்கும் தளம் வேறு, சர்ச்சைக்குரிய தலைப்புகளை அவர் எழுதி நான் பார்த்ததில்லை. ஆனால் அதே சமயம் தன் சொந்தசாதியை விமர்சித்து விட்டார்கள் என்று ஆவெசம் கொண்டு சாதியை ஆதரித்து அவர் எழுதியும் நான் பார்த்ததில்லை, கண்ணை மூடிக்கொண்டு கொங்கின் புகழ் வளர்க்க ஆசைப்பட்டவருமில்லை. எனவே நீங்கள் தொகுப்பை வாசித்து நியாயமான விமர்சனங்களைப் பதிவு செய்யலாம்.

 
At 8:59 AM, August 24, 2010, Blogger மணிகண்டன் said...

செல்வநாயகி,

செல்வராஜ் அறிமுகத்துக்கு நன்றி.

உங்கள் தலையில் இரண்டு கொம்பு முளைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்:)-

 
At 9:04 AM, August 24, 2010, Blogger செல்வநாயகி said...

கதிர்,

சொல்ல விட்டுப்போனது ஒன்று. ஈரோடு வலைப்பதிவர் குழுமம் தன் குழுமத்தில் சேர்ந்தவர்கள், சேராதவர்கள் என்ற பாகுபாடு கொண்டிருக்காமல் எந்தப் பதிவரின் ஈரோட்டு நிகழ்வுக்கும் ஆதரவு தந்து கலந்துகொள்வது நல்ல விடயம். அதற்காகவும், அதுகுறித்த உங்களின் முயற்சிக்காகவும் நன்றி.

 
At 9:20 AM, August 24, 2010, Blogger ஈரோடு கதிர் said...

செல்வநாயகி...

நீங்கள் தாராளமாக எழுதிக் கொள்ளுங்கள்.... இங்கே தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை, ஏனெனில் அது செல்வராசு அவர்களின் புத்தகம் குறித்து எழுதியதை தடம்புரட்டும்

அடுத்து கல்லூரி மாணவர்களிடம் நான் என்ன பகிர்ந்தேன் என்பதை முழுமையாகத் தெரியாமல் முன் முடிவுக்கு வராதீர்கள். அப்படித் தெரிந்து கொள்ள விரும்பினால் என் கைபேசி எண் என வலைப்பூவில் இருக்கிறது, அழையுங்கள்.

 
At 10:05 AM, August 24, 2010, Blogger செல்வநாயகி said...

அன்பின் கதிர்,

நான் எதையும் அவசரப்பட்டோ, முன்முடிவுகளோடோ எழுதவில்லை. வருத்தப்படாமல் யோசிக்க வேண்டுகிறேன். பதிவுலகின் நடப்புகளைப் பொறுமையாக அவதானித்தே எழுதுகிறேன். நீங்கள் விவாதிக்க விரும்பாதது உங்களின் சுதந்திரம் அதை மதிக்கிறேன். எனக்கும்கூடப் பதிவுலகின் அத்தனை போக்குகளையும் தனி இடுகையாக எழுதி விவாதிக்கும் எண்ணம்கூட இல்லைதான். நேரப்பிரச்சினை ஒன்று, தவிரவும் இங்கே எழுதப்படுகிற இடுகைகளோ, பொருளோ எடுத்துக்கொள்ளப்படாமல் வேறு பல அரசியல்களின் அடிப்படையிலேயே அவை அணுகப்பட்டு எழுதியவர் மீதான தீர்ப்புகளும் அளிக்கப்படுகின்றன பலநேரங்களில். எனவே மனம் திறந்த விவாதம் என்பது ஒன்று நடந்தால் அது அதிசயம்தான். எனவேதான் என் கருத்தாகச் சிலவற்றை இடுகையில் பதிவுசெய்து விட்டு நகர்ந்தேன்.

நீங்கள் கல்லூரி மாணவர்களுக்கு வலைப்பதிவுக் கருத்தரங்கு நடத்தியது நல்ல விசயம்தான், பொதுவாக இத்தகைய கருத்தரங்குகளை எப்படி நடத்துவோம், அவற்றில் நாம் எப்படி உற்சாகமளித்துப் பங்காற்றுவோம் என்பதை அனுபவப்பூர்வமாகவும் நானும் அறிந்துதான் இருக்கிறேன். எனவே நீங்கள் கல்லூரி மானவர்களிடம் என்ன பேசினீர்கள் என்பதிலெல்லாம் எனக்கு எந்த முன்முடிவுகளும் இல்லை, கேல்விகளும் இல்லை. அவர்கள் அப்படி இங்கே வந்தால் என்ன மாதிரியான சூழலுக்கு அவர்கள் இரையாக வேண்டியிருக்கும் என்பதே என் கவலை. அதைத்தான் சுட்டியிருக்கிறேன். எனவே தயவுசெய்து நீங்களும் அந்தக் கோணத்தில் சிந்திக்க வேண்டுகிறேன். நன்றி.

மணிகண்டன்,

கொம்பு இல்லாமலே நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியெல்லாம் கொம்பு முளைத்தாலேனும் நான் ஆக முடியுமா என்பது ஐயம்தான்:)) எனவே அந்த யோசனையையெல்லாம் விட்டுவிட்டு வேறு ஏதும் செய்யலாமே நாம்? செய்ய எவ்வளவோ இருக்கே!

பா.ரா உள்ளிட்ட நண்பர்களுக்கு,

நான் பிரபலம், பிரபலமற்ற என்ற சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல வந்தது வேறு,
எனவே "நீங்களுமா" என்பதை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன்.

 
At 1:52 PM, August 24, 2010, Blogger சென்ஷி said...

செல்வராசு அண்ணனுக்கு வாழ்த்துகள்.

 
At 6:31 PM, August 24, 2010, Blogger பா.ராஜாராம் said...

//பா.ரா உள்ளிட்ட நண்பர்களுக்கு,

நான் பிரபலம், பிரபலமற்ற என்ற சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல வந்தது வேறு,
எனவே "நீங்களுமா" என்பதை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன்//

//நான் பிரபலம், பிரபலமற்ற என்ற சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல வந்தது வேறு,//

புரிகிறது செல்வநாயகி. புரியாமலா செல்வநாயகி( நீங்களுமா?) என அழைக்க முடியும்?

எல்லாமே நம் மக்கள். இதில் எங்கிருந்து வருகிறது பிரபலம் மற்றும் பிரபல மற்றவர்கள் செல்வநாயகி?

அம்புலி மாமா, முத்து காமிக்ஸ், வாராந்திர ராணி, குமுதம், விகடன், கணையாழி, readers digest,என்பது போல மனிதர்களையும்(தளங்களையும்) பார்க்க தெரிந்திருக்கும் உங்களுக்கு, என்பதே என்னுடைய

நீங்களுமா? என்பதும்.

ஏனெனில், இது நம் வீடு.

எல்லாம்தானே இருக்கும் நம் வீட்டில்... எல்லாம் இருந்தால்தானே வீடும் செல்வநாயகி?

 
At 11:17 PM, August 24, 2010, Blogger ஜோதிஜி said...

நண்பர் செல்வராசுவின் புத்தக வெளியீடு சிறப்புற வாழ்த்துக்கள்!

சரியான ஆளிடம்தான் அணிந்துரை வாங்கியிருக்கார்,

நண்பர். அருமையாக வழங்கி இருக்கீங்க.

வலையுலகின் தற்போதைய பாதையை சுட்டிக்காட்டியதும் அவசியமானதென்றே கருதுகிறேன்.

காலம் கரைத்துச் சொல்லும் எது சாயம் எது வண்ணமென்று.

உங்கள் எழுத்தும் வந்துள்ள விமர்சனமும் மிகத் தெளிவானதாக இருக்கு.

என்னுடைய வாழ்த்துகள்.

விவாதம் தவிர்க்க நண்பர் சொல்லியதை என்னுடைய கருத்தாகவும் எடுத்து போட்டுள்ளேன்.

 
At 3:49 AM, August 25, 2010, Blogger ஈரோடு கதிர் said...

அடடா..

நீங்களும் ஈரோடுதானுங்களா

ரொம்ப மகிழ்ச்சி

 
At 7:59 PM, August 25, 2010, Blogger மாதவராஜ் said...

நேர்த்தியான புத்தக அறிமுகம். செல்வராசுவுக்கு வாழ்த்துக்கள். எழுத்து நடை ஈர்க்கிறது.

 
At 10:13 AM, September 05, 2010, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அன்புள்ள செல்வநாயகி,

முன்னுரைக்கு மட்டுமல்ல, இந்த அறிமுகத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனித்தனிப் பதிவுகளாக நின்றவற்றை உங்கள் உரை ஒன்று சேர்த்து ஒரு சரமாகக் கட்டிக் காட்ட உதவியிருக்கிறது என்றே எனது ஏற்புரையிலும் சொன்னேன்.

விழா நன்முறையிலேயே முடிந்தது. சற்று வித்தியாசமான ஒன்று (பிற புத்தகங்களுடனான ஒன்று என்பதில்) என்றாலும், ஒரு வகையில் நிறைவு தான்.

உங்களுடைய அறிமுக இடுகையின் வாயிலாகப் பலபேர் இது பற்றி அறியவந்திருப்பது தெரிகிறது. அழகாக எழுதி இருக்கிறீர்கள். அதில் உங்கள் அக்கறையும் தெரிகிறது. பின்னூட்டத்திலும் கூட எனது சார்பாகச் சரியான முறையில் விளக்கி இருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி.

உங்கள் வாழ்த்திற்கும் தொடரும் ஊக்கத்திற்கும் நன்றி.

 
At 10:42 PM, September 28, 2010, Blogger Vijiskitchencreations said...

செல்வாராஜ் அவர்களின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.

 
At 12:49 AM, November 18, 2010, Blogger era.thangapandian said...

தங்களின் வலைபூவில் சற்று நேரம் வசிக்க நேர்ந்து. செல்வராசு போன்று பலர் இருக்கிறார்கள். நமது ஊடகங்களில் பார்வை படாததாலேயே பல எழுத்தாளர்கள் இப்பொழுது முன்னால் எழுத்தாளர்களாகிவிட்டார்கள்.

தங்களின் கோபம் நியாயமானதுதான். நானும் தங்களின் கோபத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். நன்றி
தோழமையுடன்

இரா. தங்கப்பாண்டியன்
vaigai.wordpress.com

 

Post a Comment

<< Home