பாதை
வலையில் எழுதுவது நிர்ப்பந்தங்களற்றுப் போனதால் சில மாதங்கள் பக்கத்தையே திறந்து பார்க்கவில்லை. நண்பர்கள் ஜோதிஜி, இரா.தங்கபாண்டியன், போலூர் தயாநிதி, விஜி ஆகியோரின் பின்னூட்டங்கள் நாள்கணக்கில் காத்திருந்தன போலும், இன்றுதான் பிரசுரித்தேன். மன்னிக்கக் கோருகிறேன்.
இன்று ஏதோ ஒரு பொழுதில் தோன்றிய இந்த ஒற்றையடிப்பாதைக்காய்ப் பக்கத்தைத் திறந்தேன்.
நடந்து நடந்து புற்களைக் கொன்று
போட்ட ஒற்றையடிப்பாதை
தனித்துக் கிடக்கிறது
மீண்டும் படர்கின்றன புற்களின் வேர்கள்
கால் அழுத்தமற்ற ஆசுவாசத்தோடு
கொன்றை மரம்கூட
பூக்களை உதிர்த்திருக்கிறது
கொண்டாட்டச் சிவப்பில்
மெல்ல ஊர்ந்து நகர்கின்றது
இரைவிழுங்கிய நாகம்
தன் உடல்தடத்தைப் பதித்தபடி
சந்தடியின்மையில் பெருமூச்செறிந்து
இன்னும் முழுதும் அழிந்திடாத
பாதை காத்திருக்கிறது
காலடி ஓசைகளைக் கனவினில் சுமந்து
இருந்தாலென்ன?
திசைகளை அழித்த கால்களுக்கில்லை
இனியெப்போதும்
நினைவுகள் கனக்கும் பாதையின் பாரம்
7 Comments:
ஒத்தயடிப்பாதையே ஓரமா கதை சொல்லி புலம்பிட்டிருக்கு...
கால் இலகுவாகி தரையில் பாவாம இருக்குமோ:)
முத்து,
:))
செல்வநாயகி, கவிதை நன்றாக இருந்தது
//கொன்றை மரம்கூட
பூக்களை உதிர்த்திருக்கிறது
கொண்டாட்டச் சிவப்பில்//
கொன்றைப் பூவின் நிறம் மஞ்சள் இல்லையா? வாதநாராயண மரம் தானே சிவப்பு?
ஏன் யாரும் ஒத்தயடிப் பாதையில் பயணிக்க வில்லயா?
ஏன் தனித்துக் கிடக்கிறது?
கொன்றை மலர் ஏன் சிவப்பனது?(அதன் நிறம் மஞ்சள் தானே!)
எனக்கு மனதில் கேள்விகள் குடைகிறது செல்வநாயகி.
அமரபாரதி, கோமதி அம்மா,
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எங்களூர்ப்பக்கத்தில் நான் சிறுவயதில் சிகப்பு நிறத்தில் பார்த்த நினைவில் எழுதினேன். தங்களின் கருத்தும் சரியானதே. பல்வேறு வகைகள் கொன்றையில் இருப்பதாகவும் பூக்கள் சிவப்பு, மஞ்சள் என இரு நிறங்களையும் கொண்டிருப்பதாகவும் கீழுள்ள இணைப்பில் படித்தேன்.
http://anniyan2020.blogspot.com/2010/10/2.html?zx=4eabf017c9bc6896
காலடி ஓசைக்கு காத்து கிடக்கும் மண்..
உங்களின் வருகைக்கு நன்றி.
Post a Comment
<< Home