நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Tuesday, April 11, 2006

பெண்விடுதலை என்பது.......

"தவமாய் தவமிருந்து" படத்தினால் விளைந்த எண்ணங்களை சென்ற பதிவில் பகிர்ந்துகொண்டபோது பின்னூட்டமிட்ட நண்பர்கள் பலரும் பதிவு
வித்தியாசமாய் இருக்கிறதென்றும் அதேசமயம் சேரன்மீது கோபப்படுவது நியாயமல்ல என்றும் கூறியிருந்தார்கள். சேரன்மீதான என் பார்வையில்
நான் அவரைப்பற்றிக் கொண்டிருக்கிற எண்ணங்களை என் பதிவின் கடைசியில் சொல்லி இருக்கிறேன். சேரன் என்கிற படைப்பாளியின்
கலைத்திறன்மீது எனக்கு எந்த எதிர்மறை விமர்சனமும் இல்லை என்பதைச்சொல்லியபிறகும் என்பதிவு அவருக்கு இழைக்கப்படும் அநீதி
என்பதுபோல் புரிந்துகொள்ளப்பட்டுப் பின்னூட்டங்கள் வந்து விழுந்திருந்தன. திருமணம் ஆனவுடன் ஏற்கனவே இருந்த தன் இனிஷியல் துறந்து,
பிறந்த ஊரும், திரிந்து விளையாடிய வீதியும் துறந்து கட்டிக்கொண்ட ஆணும் அவன் குடும்பமும்தான் இனி அவளுக்கு எல்லாம் என்று
இருப்பவள்தான் "நல்ல மனைவி" என்று காலம்காலமாகப் போற்றிவரும் சமூகத்தின் வரையறையை மீற 2006ல் வெளிவரும் "தவமாய்
தவமிருந்து"க்கும் துணிவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவே அப்பதிவு. மற்றபடி தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் பிற தமிழ்
மசாலாப்படங்களோடு ஒப்பிட்டு இதை நல்லபடம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடுதான்.

அதில் பின்னூட்டமிட்டிருந்த தாணு , "கணவரின் பெற்றோருக்கு பணிவிடை செய்வதாலேயே ஒரு பெண் அடிமைத் தளையில் இருப்பதாக ஆகாது",
என்று குறிப்பிட்டிருந்தார். இது முக்கியமானது. இங்கு பெண்ணுரிமை என்று பேசப்படுவதற்கும், "பெண்விடுதலை" என்ற சிந்தனைக்கும் பலராலும்
புரிந்துகொள்ளப்படும் பொருள் இதுவாகவே இருக்கிறது, நிறையப் பெண்கள் உட்பட. மாமனாருக்குக் காபி கலந்து தருவதோ, மாமியாரின்
உடுப்புக்களைத் துவைத்துத் தருவதோ, கணவன், குழந்தைகளுக்குச் சமைத்துத் தருவதோ பெண் அடிமைத்தனம் கிடையாது. உறவுகளின்
இணக்கத்தில் அவையெல்லாம் செய்யப்படக்கூடியவை. ஆனால் அவ்வளவு நீளப்ப்படத்தில் அக்காட்சி வரும் சூழலைக் கவனிக்கவேண்டும்.
உண்மையில் இன்று படித்து, வேலைக்குப்போய்க்கொண்டிருக்கும் தம்பதிகளில், காலில் சக்கரம் கட்டிக்கொண்டுதிரியும் மனைவியின் அவசரநேர அலுவல் புறப்பாடுகளில் ஒருகைகொடுத்து உதவும் அளவு சில ஆண்களே முன்வந்துகொண்டிருக்கும் நிலையில், காலையில் "தவமாய்த் தவமிருந்து" ராமலிங்கம் சாவகாசமாகக் காலணி அணிகையில், அதேபோல் பணிக்குக் கிளம்பவேண்டிய வசந்தியோ கையில் காபியை எடுத்துவந்து
மாமனாருக்குத் தந்துவிட்டுப்போவது போன்ற ஒரு காட்சியும், கதைநாயகரான "அப்பா" தன் இளையமகன் வீட்டில் நிம்மதியாகத்
தன்காலத்தைக்கழிக்க இதுவெல்லாமும் அல்லது இதுவும் முக்கியமானதெனப் பார்ப்பவர்களைப் புரிந்துகொள்ளச்செய்கிற முயற்சியும், இராமலிங்கம் தன் பெற்றோரைக் கடைசிவரை கண்கலங்காது தன்னுடன் வைத்துக்கொள்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவ்வளவும்
செய்துவிட்டுப்போபவள்தான் வசந்தி, அவளின் பெற்றோர்கள் பற்றிய சிந்தனைகூட அவளுக்கு வருவதோ, வராமலிருப்பதோ இயக்குனரைப்
பொறுத்தவரை முக்கியமற்றதாகப்போய்விடுவதும் பெண்ணடிமைத்தனமல்ல; உறவினால் பிணைக்கப்பட்ட நம் குடும்பங்களின் பண்பாடுதான் என்று
இன்னும் எத்துனைகாலத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இங்கு?

கல்வியின்றி, வெளியுலகம் என்னவென்று அறியும் வாய்ப்பின்றி வீட்டிற்குள், நான்கு சுவர்களுக்குள் தன்னிருப்பைத் தொடங்கி முடித்துக்கொண்ட நம்
மூதாதையப் பெண்களுக்கு மேற்சொன்ன வேலைகளைச் செய்வது மட்டும்தான் வாழ்வாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த வேலைகள் எல்லாம் பெண்கள் செய்யவேண்டியவை என்று வகைப்படுத்தப்பட்டதே அவர்களைச் சுற்றிப் படரும் தளைகளின் ஆரம்பம் எனலாம். கொஞ்சம்கொஞ்சமாக இடர்களைக் கடந்து வெளியில் வரும் பெண்களை இந்தச் சமூகம் இன்றும் எந்த அளவுகோலில் மதிப்பிடுகிறது? அவளின் தனிப்பட்ட திறமையோ, பணிச்சிறப்போ பேசப்படுவதைவிடவும், அவள் புகுந்தவீட்டில் யாரிடம் எப்படி நடந்துகொள்கிறாள் என்பதே
முதன்மைப்படுத்தப்படுகிறது சமூகத்தாலும், குடும்பத்தாலும். படிக்கலாம், பட்டமும் வாங்கலாம்; காரியதரிசியாகலாம், கலைத்துறையிலும் சாதிக்கலாம்;
எழுதலாம், இலக்கியமும் படைக்கலாம்; ஆனால் இத்தனையிலும் அவளின் மனைவி, மருமகள் பதவிகளுக்கென்று உள்ள வேலைகளிலிருந்து,
அடக்கமாக நடந்துகொள்வதுவரை நிறைவேற்றியேயாகவேண்டும். அதைப்பொறுத்துத்தான் அவளின் குடும்பவாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.
பெருகிவரும் விவாகரத்துகளின் பின்னணியில் ஒரு நுட்பமான காரணமாக இன்றைய பெண்களின் மேற்சொன்ன "அடக்கம்" மீறுதலும் உண்டு. இந்த
அடக்கம் என்பதன் வரையறைக்குள் அடங்குபவை ஏராளம். தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ புகுந்தவீட்டினரின் நோன்பு, பண்டிகைக்கால
கலாசாரங்களைக் கடைப்பிடிப்பதிலிருந்து அவளிடம் எதிர்பார்க்கப்படும் செயல்கள் ஏராளம். முடிந்தவரை இவற்றை நிறைவேற்ற முடிந்தவள்
வாழ்க்கைப்பட்ட குடும்பத்திற்குப் பிடித்தமானவளாகவும், கேள்விகள் கேட்கும் பெண் மோசமானவளாகவும் பார்க்கப்படும் பார்வை நம் சமூகத்தில்
இன்னும் தீவிரமாகவே இருக்கிறது. எம்சிஏ முடித்து, இந்தியாவில் நல்ல வேலையிலிமிருந்து கணவனுக்காகத் தன் வேலையைத்துறந்து வெளிநாடு
வந்து, இங்கு விசா பிரச்சினையால் வேலைசெய்ய முடியாதுபோய் வீட்டிலிருக்க நேர்ந்து சிலவருடங்களுக்குமேல் வெளிநாட்டின் இவ்வெறுமைவாழ்வு பிடிக்காது திரும்பவும் இந்தியா போய்த் தான் விட்ட வேலையை மீண்டும் தேடிக்கொண்ட தோழி ஒருவர் இங்கிருந்து கிளம்பும்முன் "என்னை எம்சிஏ படிக்கவைத்ததன் பின்னணியிலான என் பெற்றோர்களின் கனவுகளோ, எனக்கென்று பணிசார்ந்து பெற்றிருந்த என் பெருமிதங்களை நான் தொலைத்துவிட்டிருப்பதோ புரிந்துகொள்ளப்படாது, நான் அவர்களின் மகனுக்கு வேளாவேளைக்குச் சரியாகச் சமைத்துப்போடுகிறேனா, சமைத்த பாத்திரங்களை ஒழுங்காகக் கழுவிவைக்கிறேனா, அவர்களின் குடும்ப வாரிசைச் சீக்கிரமே பெற்றுத் தருவேனா என்பதத் தெரிந்துகொள்வதில் மட்டுமே குறியாய் இருப்பவர்கள் இல்லாத சமூகம் எப்போது வாய்க்குமோ அப்போதுதான் நம்மைப் போன்றவர்களுக்கு விமோசனம் உண்டு" என்று சொல்லிப்போனது இவ்விடத்தில் ஏனோ நினைவுக்கு வருகிறது.

தங்களைப் பண்பாடும், கலாசாரமும் தொலைத்தவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டால் என்ன செய்வதென்ற பயத்தில், படித்து நல்ல பொறுப்புக்களில் இருக்கும் பெண்கள்கூட ஆழ்ந்த நோக்கோடும், நம்மைக்கழித்த பெண்களின் நிலை என்ன என்றும் சிந்திக்காமல் விடுவது இயல்பாக இருக்கிறது. சமீபத்திய பத்திரிக்கையொன்றில் மத்திய மந்திரி ஒருவரின் மருமகள் சொல்வதாக வந்திருக்கிறது, "என்னதான் வேலையிலிருந்தாலும் வீட்டைக் கவனித்துக்கொள்வது பெண்கள்தான் செய்யவேண்டியது" என்று. வீடு முழுவதும் வேலைக்காரர்களும், கூப்பிடும் குரலுக்குக் காரைக்கிளப்பிக்கொண்டுவந்து நிறுத்தும் டிரைவரும், கூடவே செல்லுமிடத்திலெல்லாம் இன்னாரின் மகள், மனைவி, மருமகள் என்று அடையாளம் காணப்பட்டுக் கிடைக்கும் சிறப்புக்களும் பெற்று வாழ்கிற பெண்ணுக்கு வேலையையும், வீட்டையும் ஒருசேர நிர்வகிப்பதில் உள்ள சிரமங்களைவிடவும் பல்வேறு பிரச்சினைகளோடும் பணத்தேவை கருதி வேலைக்குப் போகும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும், வறுமையில் வயிற்றுப்பாட்டைத் தீர்க்கவே வேலைக்குப் போகவேண்டியுள்ள பெண்களும் நேர்கொள்ளும் சிரமங்கள் வலிமையானவையும் வலிதருபவையுமாகும். மகன்கள் தலையெடுத்து வேலைக்குப்போகையில், திருச்சியின் புகழ்பெற்ற "பெல்" நிறுவனத்தில் சாதாரண எழுத்தராகத் தொடங்கி மூத்த அலுவலகக் கண்காணிப்பாளராகத் தொடர்ந்துகொண்டிருந்த தன் பணியிலிருந்து விருப்ப ஓய்வுகொண்டு தற்போது அமெரிக்காவிலிருக்கும் தன் மகன் குடும்பத்துடன் நாட்களைக் கழிக்க வந்திருந்த வயதான பெண்ணொருவரிடம் அவரின் அனுபவங்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் சொன்னது இது: "குடும்பத்துக்குப் பணம் வேண்டும் நிலையிருந்தால் பெண்களும் வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும். ஆனாலும் நாம் குடும்பச் சமையலிலிருந்து, மாதச்சாமான் பட்டியல் எழுதுவதுவரை செய்துதானே ஆகவேண்டும். அலுவலகத்திலும் உழைத்துக்கொண்டு வீட்டிலும் எல்லாம் செய்வதற்குப்பதிலாய் வேலைக்கே போகாமலிருப்பது எவ்வளவோ நல்லது பெண்களுக்கு".

படித்துப் பட்டம் வாங்கியிருந்தாலும், நல்ல குடும்பத் தலைவியாக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கும் இதையே பொருத்திப்
பார்க்கலாம். நம்மில் பெரும்பாலானோருக்குப் பெண்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்கவும், முடிந்தால் குடும்பப்பாரம் சுமக்க அப்படிப்பைக்கொண்டு
வெளியில் வருவதுமே "பெண்சுதந்திரம்" முழுமையாகிவிட்டதற்கான அடையாளங்களாகத் தெரிந்துகொண்டிருக்கின்றன. காற்றுக்குப் பறக்கிற
இலைகளுக்கு இறக்கைகள் இருப்பதாய்க் கற்பனை செய்வதுபோல்தான் இதுவும். இறக்கைகள் தாங்கிப் பறக்கும் பறவைகளுக்கிருக்கும் சுதந்திரம்
கிளைகளில் தொங்கியபடி காற்றுக்குப் பறக்கும் இலைகளுக்கில்லை.