நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, July 29, 2009

"சோத்துக்கு வந்தவந்தான?"......அய்யன்கதை 1

நாளைக்கே நம்மள‌ய "நீங்க இப்படி அடாது மழை பெய்தாலும் விடாது பதிவெழுதித் தமிழ் இலக்கியத்துக்கும் இணையத்துக்கும் எதுவும் வெளங்காமப் போகச் சேவை செய்யனும்னு நெனைக்க மூலகாரண‌மா அமைஞ்சது எது?" அப்படின்னு யாராச்சும் பேட்டி எடுக்கறாங்கன்னு வைங்க, அதெல்லாம் நடக்கப்போகுதாங்கறீங்களா? அடச் சும்மா ஒரு பேச்சுக்கு வெச்சுக்கவுமே, நெருப்புன்னா வாய் வெந்தா போகுது? நாம என்ன பதில் சொல்லலாம்ங்கறீங்க?

"எங்க அம்மா தமிழாசிரியர், தாத்தா தேவநேயப் பாவாணரோட நண்பர், அப்பா பொதுவாழ்க்கையில இருந்ததாலே எப்பவும் அறிஞர்கள் கூடும் எங்க வீடு, இப்படி இருந்த சூழல்ல பொறந்ததால நான் எட்டு மாசத்துலயே எட்டுத்தொகை பாட ஆரம்பிச்சுட்டன்னாப் பாருங்களே!" ன்னு எடுத்து உடறதுக்கெல்லாம் ஒன்னுமில்லைன்னு வைங்க. கை ஊனி எந்திரிச்சப்ப, கைசூப்பி நடந்தப்ப, காதுகுத்தப்ப, காட்டுல தூங்குனப்பன்னு ஆத்தாமாருகளும், அத்தைமாருகளும் சொன்ன அவங்கவங்க ஊட்டுக் கதைகதே நாம கேட்ட, படிச்ச மொதத் தமிழ்இலக்கியமாப் போச்சு. கம்பன்ல தேனூறுச்சு, இளங்கோவுல மனசூறுச்சு, பின்னால பாரதியில மூளை ஊறுச்சுன்னெல்லாம் நம்ம இலக்கியத் தேடலப் படம் போட்டுக்கிட்டாலும் எல்லாமுக்கும் மூலமா இருந்த கதைசொல்லிக நம்ம ஊருல வெய்யில்லயும், வேக்காட்டுலயும் கருகிக் கெடந்தவங்கதான்ங்கறத மறந்தா மனுசரா நாம?

நாங்கேட்ட கதையில விதத்துக்கொன்னு இருந்தாக்கூட இப்ப உங்களுக்குச்சொல்லப்போறது "அய்யன்கதை"
மட்டுந்தான். அய்யனை எழுதலாம்னு சொன்னதீமு ஆளாளுக்கு வந்து ஆதரவு கொடுத்த உங்களுக்கு நான் பாத்த அய்யன்களை எழுதறதுக்கும் முன்னால கேட்ட அய்யன் ஒருத்தரச் சொல்லலாம்னு தோணுச்சு. ஒத்த அய்யனா இருந்து இன்னைக்குப் பொட்டுப் பொடுசுகளோட ஒரு முப்பது முப்பத்தஞ்சு வாரிசுகள் வரைக்கும் இருக்கற ஊட்டுக் கதை இது. அய்யனோட மருமக, மருமகளுக்கும் மருமகன்னு பலபேரு சொல்ல, பல்லு உழுந்து மொளச்சப்ப இருந்து பலமொறை அந்த அய்யனோட கதையக் கேட்டாச்சு. அதனாலயோ என்னமோ நான் கண்ணுத் தொறந்து பூமியப் பாக்கும் முன்னாலயே போய்ச் சேந்துட்ட அந்த அய்யன், போட்டோவெல்லாம் புடுச்சு வைக்கப்படலைன்னாலும் எம் மனசுலயும் பதிஞ்சுதான் கெடக்கறாரு.

பொழுது சாஞ்சு மசமசன்னு ஆயிருச்சு. காட்டுல இருந்து வந்து கைகால் கழுவீட்டு,நல்ல நாயம் பேசும்போது ஊடு இருட்டாக் கெடக்கக்கூடாதுன்னு ஊட்டுப் பொம்பளைக தீபம் பத்தீட்டாங்களான்னு எட்டிப் பாத்துட்டு வெளித்திண்ணையில உக்காந்து மச்சுனங்கிட்டச் சொல்லுச்சு பெரியூட்டு அய்யன்,

"நாளைக்கு நாளு நல்லா இருக்குமாட்ட இருக்குதுங்க, பழையசோத்து நேரம் போய் உப்புக் கெணத்து சோசியங்கிட்ட முகூர்த்தத்தக் குறிச்சுக்கிட்டு வரலாம்னு"

"சேரிப் போய்ட்டு வந்துட்டாப் போகுதுங்க"


"அதெல்லா போவேண்டீதில்ல, தீபங் கெட்டுப் போச்சு, சயனஞ் செரியில்ல" சொல்லிக்கிட்டே வந்த பொன்னாத்தாளுக்குத்தே கல்யாணம் பேசிக்கிட்டிருந்தாங்க அவங்கய்யனும் மாமனும். தீபமுங்கூடத் தானாக் கெடலை, ஊதிக் கெடுத்துட்டு வந்ததே நம்ம பொன்னாத்தாதான். ஏன்னா பொண்ணுப் புள்ள பொன்னாத்தாளுக்கு ஊட்டுப் பெருசுக அதைய சாமீப்ப மாப்பளைக்குக் கட்டி வெக்கறது புடிக்கலை. இந்த சாமீப்ப மாப்பளைதான் என் மனசுல பதிஞ்சு கெடக்குற நான் இன்னைக்கு உங்களுக்குச் சொல்லப்போற அய்யன்.


சாமீப்பய்யன் பொன்னாத்தாளுக்கு அத்தை மவன். அத்தை தூரத்து ஊருக்கு வாக்கப்பட்டுப் போயி மொத மவனா சாமீப்பய்யன் பொறந்தபோதே பெத்துபோட்டுட்டு பிரசவத்துல போய்ச் சேந்திருச்சு. கொழந்தைக்குத் தகப்பன் வேற கல்யாணம் பண்ணிக்க,பொறந்தவளோட மவனைத் தன் மவனா வளத்திக்கலாமுன்னு ஒரு பாசத்துல மாமங்காரரு கூட்டிக்கிட்டு வந்துட்டாரு. கூட்டியாந்ததுக்கு ஒன்னும் கெட்டுப்போகலை. சாமீப்பய்யனும் மாமன் மேலயும், அவரு குடும்பத்து மேலயும் உயிராத்தாங் கெடந்திருக்காரு. மாமனுக்கும் பையன் இல்லாதிருக்க‌ ஊட்டுக்குச் சொந்தப்பயனாட்டமா வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருக்காரு. பொன்னாத்தாளுக்கு அக்கா ஒன்னு இருந்திருக்கு, அதுக்கும் தம்பி மாதிரி சாமீப்பன்னா பாசந்தான். ஆனா நெறைய வயசு வித்தியாசமாப் போச்சு, அதுனால அக்காவ வேற மாப்பளை பாத்து கட்டி அனுப்பிட்டாங்க.

பொன்னாத்தாளச் சாமிப்பனுக்கே கட்டி வெச்சுட்டுக் கண்ணை மூடோனும்ங்கறதுதான் மாமங்காரரோட ஆசை. ஆனா பொன்னாத்தா போக்கு வேற மாதிரி இருந்துருக்கு. சிறுசுல இருந்தே சாமீப்பய்யன்கிட்டச் சண்டை போடறதும், வெளையாட்டூச் சண்டையிலகூட‌
"நீ எங்கூட்டுக்கு மொத்தச் சோத்துக்கு வந்தவந்தான?"ன்னு வெடுக்கு வெடுக்குனு பேசறதுமா இருந்துருக்கு. ஆனாச் சாமீப்பய்யன் அதையெல்லாம் பெருசு பண்ணிக்கிட்டதில்லை, கன்னுக்குட்டி எட்டி ஒதைச்சாலும் மாட்டுக்கொசரம் பொறுத்துக்கற மாதிரி
பொன்னாத்தாகிட்டப் பொறுத்தேதான் போயிருக்கு.


இது எதோ சின்னப்புள்ளைக சண்டைன்னு நிக்காம கல்யாணப் பேச்சு எடுக்கும்போதும் பொன்னாத்தா பூந்து வெளையாடியிருக்குது. "இத்தன பண்ணையத்த வெச்சுக்கிட்டு ஒன்னுமில்லாம சோத்துக்கு வந்து இருந்தவனுக்குக் கட்டி வெக்கறீங்களா? நான் தெக்காலூரு மணிக்குட்டியத்தான் கட்டிக்குவேன்" ன்னு ஒரு நூறு வருசத்துக்கு முன்னாடியே அந்தக் கரட்டாங்காட்டுல இருந்துக்கிட்டு "பெண்ணுரிமை" பேசியிருக்குது பொன்னாத்த ஆத்தா. ஆனா பெருசுக தம் பேச்சக் கேக்காம மறுக்கா மறுக்கா கல்யாணத்து நாயத்த எடுத்தா நம்ம பொன்னாத்தாளுக்குப் புடிக்கறதில்லை. அதுனால நடக்கறதுதான் இந்த சயன வெளையாட்டு. பெரியவங்க பேசும்போது தீபத்தை நிறுத்தறது, எதையாவது ஒடைக்கறது, செஞ்சுட்டு ஓடிவந்து சயனஞ் செரியில்ல பேச்சை நிறுத்துங்கன்னு சொல்லிப்பாக்கறது, அப்படியாவது தனக்கு மணிக்குட்டி மாப்பளை கெடைக்க மாட்டாரான்னு ஏக்கம் பொன்னாத்தாளுக்கு.

இப்படியே நடக்கறதப் பாத்துக்கிட்டு இருந்துட்டு ஒருநாளு சாமீப்ப அய்யன் சொல்லீருக்காரு "பொன்னாத்தாளுக்கு இஷ்டமில்லீன்னா உட்டுருங்க‌ மாமா, மணிக்குட்டிக்கே கட்டி வெச்சுருங்க, நான் அவ பசங்கள வளத்திக்கிட்டு இப்பிடியே இருந்துக்கறேன்" அப்படீன்னு. இதைக் கேட்ட பொறகு "இவன விட ஒனக்கு எந்த மவராசன் மாப்பளை கெடைப்பான்? நீ ஒன்னுமே பண்ண வேண்டீதில்லை, தல‌மேல வெச்சுத் தாங்குவாஞ் சாமீப்பன்" னு பொன்னாத்தாளை ஒரே அமுக்கா அமுக்கீட்டாங்க எல்லாரும்.

அவங்கெல்லாம் சொன்னதிலயும் ஒன்னும் கொறையில்லை. பொன்னாத்தாளைப் பூப்போலத்தான் பாத்துக்கிட்டாராமா சாமீப்ப அய்யன். நாலு பசங்க, ரெண்டு பொம்பளைப் புள்ளைக பொறந்து எல்லாத்தையும் நல்லா வள‌த்திக் கல்யாணங் காச்சி மூச்சு வந்த மருமக்கமாருககிட்டயும் பாசமா இருந்து செத்துப் போயிருக்குது அய்யன். அய்யனோட பொறுமைக்கு ஒரு உதாரணம் சொல்வாங்க அய்யன் கதை சொன்னவங்க. பொன்னாத்தா ஆத்தா வாய்தான் நெறையாப் பேசுமாமா. ஆனா வேய்க்கானம் பத்தாது. மழைபேஞ்ச காத்தால ஒழவோட்டிக்கிட்டு இருக்கற சாமீப்பய்யனுக்குப் பழைய சோறு கொண்டுபோகோனும் ஆத்தா. அப்ப எல்லாம் சோளச்சோறு, கம்மஞ்சோறூதான உணவு? ஆக்கிக் குண்டாவுல போட்டுச் சும்மாடு கூட்டித் தலையில வெச்சுக் கொண்டுபோகுமாமா. போற வழியில தடத்துல சாணி கெடந்தா ஆத்தா சும்மா போகாது. சாணி தடத்துல கெடந்தா வீணாப்போவுது, எடுத்துப் பக்கத்தால காட்டுக்குள்ள வீசுனா மண்ணுக்கு ஒரமாவும்னு சோத்தை வெச்சுப்போட்டுச் சாணிய எடுத்து வீசிட்டுக் கையைப் பக்கத்து ஊத்துத் தண்ணியில போயிக் கழுவிக்கிட்டு வருமாம். வரதுக்குள்ளே தடத்துல வெச்சுருந்த சோத்த நாய் எதாவது போச்சுன்னா தட்டியுட்டுத் தின்னுக்கிட்டிருக்குமாம். அப்பறம் வெறுங்குண்டாவைத் தூக்கீட்டுப் போய் அய்யங்கிட்ட "சோறுதான் போயிருச்சு, ஆனாச் சாணியப் பத்தரமாக் காட்டுக்குள்ள போட்டுட்டு வந்துட்டேன்" ன்னு சொல்லுமாம். பொழுது கெளம்பப் பூட்டுன ஏரை எளமத்தியானம் வரை ஓட்டீட்டுப் பசியோட கெடந்தாலும் பொண்டாட்டியச் சோத்தை நாயிக்கு உட்டுட்டு வந்துட்டாளேன்னு ஒரு சொல்லும் கடிஞ்சு பேசமாட்டாராம் அய்யன். "போனாப் போவுது ஊட்டுக்குப் போயி ஆக்கி வை" ன்னு சொல்லீட்டு வேப்பமரத்துல குச்சிய ஒடுச்சுப் பல்ல வெள‌க்கீட்டுப் பனைமரமேறரவுங்க எறக்கி வெச்சிட்டுப் போன தெளுவுத் தண்ணியவே மறுக்காவும் குடிச்சிட்டு காட்டுக்கு மாட்டை அவுத்துட்டு ஓட்டிக்கிட்டுப் போவாராம். "இப்பிடிப் புருசனத்தான பொன்னாத்தா கட்டிக்க மாட்டேன்னாளாமா" ன்னு ஊருக்குள்ள பேசிக்குவாங்களாம்.


சாமீப்பய்யனோட வாழ்வுக்கு நான் மரியாதை செலுத்தற‌துக்கு இன்னொரு காரணம். நாலு பசங்களுக்குள்ள சின்ன வயசுகள்ல எதாச்சும் சண்டை வந்தா அவங்க‌ பேசி முடிக்க வரைக்கும் அமைதியா இருந்துட்டுக் கடைசீல அய்யன் சொல்லுவாராமா "எப்புடியோ எல்லா ஒரே வயித்துல வந்து பொறந்திட்டீங்கடா, ஒரு ஆகாவழிக் கெரகத்துக்கு அடிச்சுக்கறதுக்கு முன்னால இன்னொருக்காவா நாம இப்படி ஒன்னா வந்து பொற‌க்கப்போறோம்னு நெனச்சுப் பாருங்க, இந்தக் கெரகமெல்லாம் பெருசாத் தெரியாது" அப்படீன்னு. சரியாத்தான் சொல்லீருக்காரு சாமீப்ப அய்யன். ஆனா நமக்கெல்லாம் மண்டையில ஏறனுமே!

Sunday, July 26, 2009

குழந்தைகள் பைத்திய‌ங்க‌ள் க‌ட‌வுள்க‌ள்



என் அன்றாட சோதனைகள் மனதோடுதான். மாடு தண்ணீர் குடிக்கும் நீளச் செவ்வகத் தொட்டி ஒன்று ஊரில் எப்போதும் பாசியேறிக் கிடக்கும். அதிலே நிறையக் கொரத்துக்குட்டிகள்(குழந்தைத் தவளைகள்) இருக்கும். நல்ல வெயில் பொழுதில் தொட்டியை யாரும் சலனம் செய்யாத நேரத்தில் அக்குட்டிகள் தண்ணீரின் மேல்பரப்பில் மிதந்தபடி எதையோ ஆழ்ந்து அனுபவித்துக் கொன்டிருக்கும். மாடோ, மனிதரோ சிறு அதிர்வு தரும் தருணத்தில் பாய்ந்து உள்ளோடிப் பாசியின் அடியில் ஒளிந்துகொள்ளும். அக்கொரத்துக் குட்டிகளின் தன்மையினை மனம் பலநேரங்களில் கொண்டிருப்பதைத் தள்ளியிருந்து அவதானிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனையோ நிகழ்வுகளுக்குள் பொருந்த எத்தனிக்கிற வாழ்வில் எந்திரகதியான எந்த விடயத்திலும் வேறுவழியின்றி உடலும், மூளையும்தான் பொருந்துகிறதே தவிர மனமல்ல. அப்படியான நேரங்களில் அது பாசிகளுக்கடியில் தன்னைப் பத்திரமாய் மூடிக்கொள்கிறது.

பூட்டிக் கிடக்கிற மனதைச் சாவியிட்டுத் திறப்பவை சிலதான். அந்தச் சாவிகளில் ஒன்றை நமக்காகச் சதாசர்வகாலமும் தம் கைகளில் சுமந்தபடி அலைந்துகொண்டிருப்பவர்கள் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்து கவனிக்கிறேன் நான். ஒரு கூட்டத்திற்குள் நுழைந்துவிட்டால் அரட்டையடிக்க ஆள் கிடைத்ததேவென நிம்மதியான வெளிதேடுபவர்களல்லாத பெண்களில் நானும் ஒருத்தி.
வழமையாய்ச் சந்திக்கிற, வழமையாய் ஒரு போலிப்புன்னகையை உதிர்க்கிற, தன் அத்துனை அழுக்குகளையும் வழக்கம்போலவே வாசனை திரவியங்களுக்குள் புதைத்துக் கொண்டு வருகிற கூட்டங்களை விட்டுக் குழந்தைகளின் கூட்டத்திற்குள் புகுந்துகொள்வது எப்போதும் சுகமானது.

வாழும் நகரத்தில் குழந்தைகள் கூடும் இடங்களும், அவர்களுக்கான செயல்களும் என் பிரியத்திற்குரியவை. நீன்ட இடைவெளிக்குப் பிறகு Katie ன் கதை சொல்லும் நேரத்திற்குப் போயிருந்தேன். சுற்றியலைந்துவிட்டு மீண்டும் யாருக்கும் தெரியாத தன் கூட்டிற்குள் வந்துவிட்டதன் உற்சாகம் மனதுக்கு. நுரைகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் பரப்பை மேல் நகர்த்தி ஒரு துள்ளலுடன் பொங்கிச் சிரிக்கும் பாலின் நிறத்தில் பூரிக்கத் தொடங்குகிறது உள்ளே ஏதோ ஒன்று. சுற்றிச் சில பெண்கள், சில ஆண்கள், சில குழந்தைகள், பின் மேடையில் கதை சொல்ல Katie. எல்லாக் குழந்தைகளையும் இருக்கைகளில் அமரவைத்து ஒரு ஒழுங்கைப் புகுத்திக் கதை சொல்ல ஆரம்பித்தார். தனக்கு மான்கொம்பு, யானைமூக்கு, புலிவால் என்று மாற்றி மாற்றிப் பொருத்திக்கொள்ளும் குழந்தை ஒன்றைப் பற்றிய எதோ வேடிக்கையான கதை அது. ஐந்தே மணித்துளிகளில் ஒழுங்கைக் கலைத்துச் சுதந்திரமானார்கள் கதை கேட்டவர்கள்.


மெல்ல ஒருவர் எழுந்துபோய் Katie க்கு முன் அமர்ந்து அவர் முகத்துக்கு நேரே தன் காலைத் தூக்கி "செருப்பு, பார் செருப்பு" என்றார் ஒருவர். ஜார்ஜ் புஷ்ஷுக்கும், மன்மோகன்சிங்குக்கும், ப. சிதம்பரத்துக்கும் காட்டப்பட்ட ஷு நினைவில் வந்தது எனக்கு. "ஆமாம், எனக்கும் உன்னைப்போலவே உன் செருப்பு பிடித்திருக்கிறது" என்று சொல்லிவிட்டுக் கதையைத் தொடர்ந்தார் Katie. வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த தன் பையை மெல்லப் பிரித்து அதற்குள்ளிருந்த சின்ன நாய்க் குட்டிப் பொம்மையை எடுத்து வாஞ்சையோடு இடுப்பில் ஏந்தி " நாய்க் குட்டி, நாய்க்குட்டி" என்று அதை வருடியபடி கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் காட்டிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார் இன்னொருவர். எல்லாக் கதவுகளும், சன்னல்களும் இழுத்து மூடப்பட்ட ஒரு தெருவில் நிலா தன் வெளிச்சத்தைச் சுமந்து அலைவது போல் இருந்தது அது. என்னமோ நினைத்துக்கொண்டு அதுவரை Katie க்குக் கொடுத்திருந்த முகத்தைத் திரும்பப் பெற்று முதுகு காட்டி அமர்ந்து எனக்கே எனக்கென்று ஒரு புன்னகை சிந்தினார் மற்றொருவர். இன்று தனக்குக் கிடைக்கவேண்டிய புதையல் தவறாது கிடைத்ததென்றது மனது. இது எதுவுமே தன்னைப் பாதிக்காத அத்தருணத்தில் கீழே படுத்து அண்ணாந்து கூரைபார்த்து அதில் கண்ட அவருக்கு மட்டுமே புரிந்த‌ ஒன்றுக்கு அவராய்ச் சிரித்துச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் இன்னுமொருவர். புத்தன் அரண்மனையை விட்டுப் பிரிந்ததும் இப்படியாகத்தான் இருக்கவேண்டும் என்றது மனது. இவர்களில் யாரின் கனவையும் கலைக்காமல் கதை சொல்லி முடித்தார் Katie செடிகளுக்கு வலிக்காமல் மலர் கொய்வதான மென்மையுடன். அவர்களுக்குச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌தையை நான் உங்க‌ளுக்குச் சொல்லிவிட‌லாம். ஆனால் அவ‌ர்க‌ள் சொல்லிய‌ க‌தைக‌ளை முடியுமா? எத்த‌னை முறை முய‌ன்றாலும் என் வ‌ழியாக‌ வ‌ரும் அவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் என் க‌தைக‌ளாக‌ மாறிப்போகிற‌ பிற‌ழ்த‌லே நிக‌ழ்கிற‌து. அவ‌ர்க‌ளின் க‌தைக‌ளை அவ‌ர்க‌ள‌ன்றி யார் சொன்னாலும் அது அவர்களின் கதைகளாகவன்றிச் சொன்ன‌வ‌ரின் கதைகளாக‌வே சுய‌ம் இழ‌க்கின்ற‌ன‌. என்றாலும் சொல்வ‌தை நிறுத்துப‌வ‌ர்க‌ளா நாம்?

இன்றும் அவ‌ர்க‌ள் சொல்லிய‌ க‌தைக‌ளை என் க‌தைக‌ளாக‌ மாற்றும் அவ்வேலையைச் செய்ய‌வே செய்கிறேன். நெடுநெடுவென்று வ‌ள‌ர்ந்து க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌ பாட‌ங்க‌ளைச் சும‌க்கும் கூன‌ர்க‌ளாய் அடைத்த‌ பைக‌ளுக்குள் வாழ்வைச் சுருட்டிக்கொண்ட‌ மானுட‌ம் ம‌த்தியில் குழ‌ந்தைக‌ள் எவ்வித‌த்திலும் க‌ள‌ங்க‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ த‌ம் ம‌ன‌தோடு ஒரு குறிப்பிட்ட‌ வ‌ய‌துவ‌ரை சுத‌ந்திர‌மாய்க் கொண்டாட்ட‌மாய் வாழ்வைக் க‌ழிக்கிறார்க‌ள். மதங்களை நம்புகிறவர்கள் அப்போது அவர்களை‌க் கடவுள்கள் என்கிறார்கள். அவ‌ர்க‌ளின் அதே சுத‌ந்திர‌, கொண்டாட்ட‌ ம‌ன‌நிலையில் வ‌ய‌துக‌ட‌ந்தும் த‌ம் வாழ்வை அமைத்துக்கொண்ட‌வ‌ர்க‌ளைப் பார்த்துத் தெய்வ‌ங்க‌ளை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ளும் "பைத்திய‌ங்க‌ள்" என்கிறார்க‌ள். வ‌ர‌ங்க‌ளுக்காய்க் க‌ட‌வுள்க‌ளின் வியாபார‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் காத்திருக்கும் மூட‌ருக்குத் தமது க‌ட‌வுள்க‌ள் மூத்திர‌ நாற்ற‌ம‌டிக்கும் ஒரு பொதுக் க‌ழிப்பிட‌த்தின் காரை பெய‌ர்ந்த‌ சுவ‌ற்றோடு ஒட்டி உற‌ங்கிக்கொண்டிருப்ப‌தும், நமது குப்பைத்தொட்டி ஒன்றில் ப‌ன்றிக‌ளோடும், நாய்க‌ளோடும் எச்சில் இலையில் ப‌ருக்கை தேடித் த‌ட‌விக் கொண்டிருப்ப‌தும், அந்த‌ ர‌யில் நிலைய‌த்தின் எதிரிலான பாழ‌டைந்த‌ க‌ட்டிட‌ம் ஒன்றில் உதிர‌ம் பெருகச் சிசு ஒன்றைப் பிர‌ச‌வித்துக் கொண்டிருப்ப‌தும் தெரியுமா?

Thursday, July 16, 2009

அய்ய‌னை எழுத‌லாமா?


மூத்த பதிவர் செல்வராஜ் மறுக்காவும் எழுத வந்துருக்காருன்னு ஒரெட்டுப் போய்ப் பாத்துட்டு வரலாம்னு அவர் பதிவுப் பக்கமாப் போனப்ப இந்த அமெரிக்காவுல வெள்ளக்காரங்க வயசானாலுங்கூட எப்படி வெரசலா எட்டி நடந்து, ஓடி ஒடம்புக்குப் பயிற்சி பண்றாங்கன்னு அழகா எழுதீருந்தாரு. அதுல கொழைந்தங்க ஒருபக்கமா ஓடுனா "அய்யனும் ஆத்தாளும்" அவங்களுக்கிணையா ஓடறாங்கன்னு ஒரு வரி சொல்லீருந்தாரு.யாரோ எங்கையோ எப்பவோ க‌டையில‌ நாள்க‌ண‌க்கா கெட‌ந்து அதையும் ஆசைக்கு வாங்கி ஒரு துண்டு ஒடைச்சு வாயில‌ போட‌ற‌ப்ப‌ ஊருல‌ நோம்பி த‌வ‌றாம‌ புதுசாப் ப‌ண்ணித‌ர்ற‌ அம்மாவோட‌ அன்பு நெறைஞ்ச‌ மைசூர்பா ஞாப‌க‌ம் வ‌ருமே, அதுமாதிரி இங்க‌ எப்ப‌வும் முக்கால்வாசி நேர‌த்தை இங்கிலீசு பேசியே ஓட்ட‌ற‌து பொழ‌ப்பா வாச்சிருக்க‌ற‌ப்ப‌ எப்ப‌வாவ‌‌து நம்மளோட ஒரு சின்ன‌ சொல் கெடைச்சாலும் அது வாழ்வோட‌ ஆர‌ம்ப‌த்து இனிமைக‌ளுக்குள்ளே த‌ள்ளிவிடுது.
அப்ப‌டித்தான் செல்வ‌ராஜோட‌ "அய்ய‌னும் ஆத்தாளும்"
ஊர் ஞாப‌க‌த்த‌க் கொண்டாந்து சேத்துச்சு.

"அய்ய‌ன்" ங்க‌ற‌ சொல்லு கொங்குப் ப‌குதியில பொதுவா"அப்பா"ங்க‌ற‌ பொருள‌க் குறிக்கும். ஆனா இன்னொரு வ‌கையில‌ பாத்தா ஊட்டுல‌ இருக்க‌ற‌ வ‌ய‌சான‌ ஆணை அந்த‌ ஊட்டுச் ச‌ன‌ங்க‌, வ‌ர்ற‌வ‌ங்க‌, போற‌வ‌ங்க‌ன்னு எல்லாருமே "அய்ய‌ன்" னு கூப்புடுவாங்க‌. அப்பாற‌ய்ய‌ன், அப்புச்சி எல்லாம் த‌ந்தை, தாய் வ‌ழி உற‌வுமுறைச் சொல்லுன்னாலும் நெறைய‌ ஊடுக‌ள்ல வயசான ஆம்பளைகளை பொதுவா "அய்ய‌ன்" னு சொல்ற‌ ப‌ழ‌க்க‌ம் இருந்த‌து இந்த‌ இட‌த்துல "இருக்குது" ன்னு போட‌லாமா போட‌க்கூடாதான்னு ஒரு கொழ‌ப்ப‌ம். ஏன்னா இப்ப‌ இருக்க‌ற‌ சின்ன‌ப் பேத்துப் பிதுறுக‌ எல்லாம் "தாத்தா பாட்டி" ன்னு கூப்ட‌ற‌துக்கு மாறீட்ட‌ மாதிரித் தெரியுது.

ஆனா ந‌ம்ம சின்னப் புள்ளையா இருந்த கால‌த்துப் பேத்தி வாழ்க்கையில‌ (20 வ‌ருச‌ம் முன்னாடி)நெறைய‌ அய்ய‌ன்க‌ளும் கூட‌ இருந்தாங்க‌. ஊருக்கொரு வெநாயங் கோயில் மாதிரி ஊட்டுக்கொரு அய்ய‌ன் இல்லாட்டி ஆத்தா இல்லாட்டி ரெண்டுபேருமே இருந்தாங்க‌. அய்ய‌ன் ஆத்தா ம‌னுச‌ங்க‌ளுக்கு த‌லை பூளைப்பூவாட்ட‌மா பெரும்பாலும் ந‌ரைக்க‌ ஆர‌ம்பிச்சிரும். ம‌ன‌சும் அந்த‌ப் பூ நெற‌த்துல‌தான் இருக்கும். த‌லையையே டை போட்டு ம‌றைச்சுக்காத‌வ‌ங்க‌ ம‌ன‌சுக்கு என்ன‌ தெரை போட‌ப்போறாங்க?. எதார்த்த‌மான‌ பேச்சும் செய‌லும் அவ‌ங்க‌ளோட‌து. அவ‌ங்க‌ ஊட்டு, ஒற‌வுப் புள்ளை, ப‌ச‌ங்க‌ள‌ ம‌ட்டும‌ல்ல‌ ஊருக்குள்ள‌ எல்லாச் சின்ன‌ஞ்சிறுசுக‌ மேலையும் ஒரே மாதிரிப் பாச‌ந்தான், அக்க‌றைதான்.

வெய்யிலுக்குத் துண்டைத் த‌லையில‌ போட்டுக்கிட்டுக் கைக்குக் க‌வை ஊனிக்கிட்டு ந‌ட‌ந்து போகையில‌ எதுக்கால‌ த‌ண்ணிக் கொட‌த்தைத் தூக்கிக்கிட்டு சுப்போ, ர‌த்தினாளோ வ‌ந்தா "ஏத்தா ந‌ட்ட‌ ம‌த்தியான‌த்துல‌ கொடத்த‌த் தூக்கீட்டு? சாய‌ந்த‌ர‌மா வெய்ய‌த் தாழ‌ப் போலாம‌ல்ல‌?" ன்னு கேட்டுக்கிட்டு,ப‌க்க‌த்தூருல‌ போயி மாட்டுக்குத் த‌வுடு வாங்கி சைக்கிள்ல‌ கொண்டார‌ சின்ன‌க்குட்டிய‌ப் பாத்து "பேர‌ன் ந‌ல்லாருக்கறான‌ல்ல‌ அப்புனு?" அப்ப‌டீன்னு வெசாரிச்சுக்கிட்டு, எதுக்கால‌ வ‌ர்ற‌ இன்னொரு அய்ய‌ன‌ப் பாத்து "மான‌ம் உருவ‌ங் க‌ட்டியிருக்க‌ற‌த‌ப் பாத்தா இன்னிக்கு ம‌ழை ஏமாத்தாது போல‌ இருக்குதுங்க‌ மாப்ளே" ன்னு பேசிக்கிட்டு ந‌ம்ம‌ அய்ய‌ன்க‌ள் அந்த‌ப் புழுதி ரோட்டுல‌ ந‌ட‌ந்து போற‌த‌ நென‌ச்சேன். அப்ப‌டிச் சித்திர‌மா ம‌ன‌சுல‌ உழுந்து கெட‌க்குற‌ அய்ய‌ன்க‌ள‌ ஒவ்வொருத்த‌ரா எழுதி வெச்சுக்க‌லாமான்னு தோணுச்சு.

இப்ப பேச்சு வழக்கெல்லாங்கூட நாக‌ரீக‌மா மாறிக்கிட்டு வ‌ருது. என்ன‌ நாக‌ரீக‌மோ? என்ன‌மோ? நாக‌ரீக‌ம்ங்க‌ற‌துக்கு என்ன‌ அள‌வுகோலுன்னும் தெரிய‌லை. அமெரிக்கா வ‌ந்தாலும், ஆஸ்திரேலியாவுக்குப் போனாலும் "சாதி" உண‌ர்வையெல்லாம் உடாமப் பத்தரமா மூட்டை கட்டி மனசுல ஊறப்போட்டுக்கிட்டே இருந்தாலும் ஊர்ப் பேச்சு வ‌ழ‌க்கெல்லாம் கொஞ்ச‌ம் ம‌ற‌க்க‌த்தான் செய்யுது நம்ம‌ ம‌க்க‌ளுக்கு. இங்க‌யே கொங்குப் ப‌குதி ம‌க்க‌ளா ஒரே இட‌த்துல‌ நெறைய‌ப் பேரைப் பாத்தாலுமே கூட‌ அவ‌ங்க‌ ஒருத்த‌ர‌ ஒருத்த‌ர் பாத்துக்க‌ற‌ப்ப‌ ச‌ராங்க‌மா ஊர்மொழி ஒன்னும் பெருசா வ‌ர்ற‌தில்லை போல‌ சில‌ருக்கு. ஊர் மொழின்னு சொன்னா வார்த்தைக்கு வார்த்தை "ங்க‌" போட்டுப் பேச‌ற‌ அடையாள‌ம‌ல்ல‌. ப‌ழ‌மைக்குள்ளையும், பேச்சுக்குள்ளையும் புதைஞ்சு கெட‌க்குற‌ பாட்டனும், முப்பாட்ட‌னும் புழ‌ங்கிய‌ சொற்க‌ள். ஒன்னுமில்லை, அன்னைக்கொரு நாளு எல்லோருமாக் கூடியிருந்த‌ எட‌த்துல உள்ள போனதும் கொங்குக்கார‌ரு ஒருத்த‌ர‌ப் பாத்து "இப்பத்தா வ‌ந்தீங்க‌ளா?" னு சாதார‌ண‌மான‌ ஒரு வாக்கிய‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்துன‌துக்கே அவ‌ரு ரொம்ப‌ உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு "இதையெல்லாம் கேட்டு எவ்வள‌வு நாள் ஆச்சுப் போங்க‌" னு சொல்லிக்கிட்டு இருந்தாரு.


நம்மகிட்டயுமே வேலையில்லாத‌ப்ப‌ யோசிச்சுப் பாத்தா எத்த‌னையோ சொற்க‌ள் தொலைஞ்சுக்கிட்டே போற‌ மாதிரித் தெரியுது. ச‌ரி செல்வ‌ராஜ் எடுத்துக்கொடுத்த‌ "அய்ய‌ன்" ஐ சாக்கா வெச்சு ஒரு "அய்ய‌ன்" தொட‌ர் எழுத‌லாம்னு. "அய்ய‌ன்" ஐ அவ‌ருக்கொச‌ர‌ம் ம‌ட்டுமில்லாம‌ என் ம‌ன‌சுல‌ ஆழ‌ப் புதைஞ்சுபோன‌ அந்த‌ வாழ்க்கைய‌ ஒரு த‌ர‌ம் திருப்பிப் பாத்துக்க‌வும், அதுக்குள்ள‌ பொக்கிச‌மா ம‌றைஞ்சு நிக்க‌ற‌ "குமுனி", 'க‌ண்ணுவ‌லிப் பூவு" ம‌ழை பேஞ்ச‌ காத்தால‌ ஊறித் திரிஞ்ச‌ "மொட்டைப் பாப்பாத்தி", "தாரை", "த‌ப்ப‌ட்டை", "கொம்பு" இப்ப‌டியான‌ வார்த்தைக‌ளை, அதுக்குப் பின்னான‌ ஞாப‌க‌ங்க‌ளை மீட்டுக்க‌வும் எழுத‌லாம்னு யோச‌னை. "அது ச‌ரி நீதானே? ‌ எழுதுன‌ பொற‌வு ந‌ம்ப‌லாம்" ங்கறீங்க‌ளா?" அப்ப‌டியும் வெச்சுக்க‌லாம்.

Friday, July 10, 2009

சமூக உணர்வு




பதின்மம் முளைவிட்டிருந்தபோதுதான்
அவனைக் கல்லால் அடித்துத் தெறித்த‌
குருதியைக் கண்களால் குடித்திருந்தேன்
இரவில் சீதை ஒருவளை வேசியாக்கி
பகலில் குன்றேறி ஏகபத்தினிவிரதம்
உரைத்தவனைக் கல்லால் அடிப்பதே
நீதியென்று ராமன் கிருஷ்ணன் சிவன்
சீனிவாசன் எல்லோருக்கும் சொல்லியும் வைத்தேன்

அன்றோடு பதினேழு முடிந்ததென்று
அம்மா சொன்ன திகதியில்கூட‌
உள்ளூர் தபாலலுவலகத்தில்
உதவித்தொகை கேட்டு நின்ற கிழவியை விட்டு
பொண்டாட்டியோடு தொலைபேசியில்
கொஞ்சிக்கொண்டிருந்த அலுவலனை
சட்டை பிடிக்கப்போனேன்
எனக்கான "ரௌடி" பெயரை
ஊருக்குள் முன்மொழிந்தவன் அவனாகத்தான் இருக்கவேண்டும்
நான் புளிய‌ம‌ர‌த்துக் க‌ல்லுக்க‌டைப்ப‌க்க‌மாய் ந‌ட‌ந்துபோகையில்
குடிகார‌ன்க‌ளும் அவ‌ச‌ர‌மாய் வ‌ரிசையமைத்தார்கள்
அஞ்சு பைசா சில்ல‌ரை பாக்கிக்கு ந‌ட‌த்துன‌ரோடு
பேர் இல்லாத‌துக்கு ஓட்டுச்சாவ‌டியாட்க‌ளோடு
எதிரில் வ‌ந்த‌ எம் எல் ஏவோடு
யாருக்காக‌வேனும் எப்போதும்
ச‌ண்டையிட்டேன்


ஏழெட்டு வேலை, ஊர் மாற்றீ
இன்று அந்த முனீஸ்வர‌ன் கோயிலருகே
ஒரு பைத்திய‌த்தை நாலுபேர்
அடித்துக்கொண்டிருக்க‌ நான்
வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறேன்
சாலையையும் அனைத்தையும்