நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, August 23, 2010

ஒரு பிரபலமற்ற பதிவரின் நூல்வெளியீடு

தமிழ்மணம் நிர்வாகக்குழுவில் பங்கேற்றும் தமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டும் பணியாற்றி வரும் நண்பர்களில் ஒருவர் இரா. செல்வராசு. பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதிவருபவரும் அவர். வலைப்பதிவுகள் என்பவை சிறந்த மாற்று ஊடகங்களாக அறிமுகமானவை. ஆனால் சமீபகாலமாக வலைப்பக்கங்களும் பலநேரங்களில் வணிக, வியாபாரத் தந்திர ஊடகங்களைப்போலவே ஆகிவிட்டனவோ எனக் கருதுமளவு அவற்றின் உள்ளடக்கங்களும், செயல்பாடுகளும் ஆகிக்கொண்டிருக்கின்றன. இரண்டு நாட்களுக்கொருமுறை அவியலாகவும், குவியலாகவும், தாளிப்புகளாகவும் எப்படியேனும் அதிக பார்வைகள் கிடைக்க வேண்டுமே என ஏ ஜோக்குகள் உள்ளிட்ட தகிடுதத்த வேலைகளோடு கனஜோராக வலைப்பதிவு வியாபாரம் நடந்தேறிக்கொண்டுள்ளன. வாசகர் பரிந்துரை எனும் மோசடிகளில் ஈடுபடுவதிலும்கூட யாருக்கும் எந்தக் குற்றவுணர்வும் இல்லை. வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து மின் அரட்டை வழியாகவோ, தொலைபேசி வழியாகவோ அல்லது அடுத்தடுத்த சந்திப்புகள் வழியாகவோ கூட்டமொன்றைச் சேர்த்து விட்டால் அல்லது சேர்ந்துவிட்டால் நிரந்தர வாசகர் பரிந்துரைதான் என்ன எழுதினாலும்.

இப்படியாகப் பெரிதாகிக் கொண்டிருக்கும் வலைச்சமுத்திரத்தில் ஆரம்ப காலம் முதல் ஏதோ ஒரு வகையிலும், நேர்மையாகவும் இச்சமுத்திர உருவாக்கத்திற்காய் அப்போதைய ஒன்றுமற்ற மணல்வெளியில் உண்மையான அர்ப்பணிப்போடு சொட்டுச் சொட்டாய்ச் சுரந்தவர்கள் இப்போது அதன் அடியாழத்தில் வெளித் தெரியாதவர்களாய்க் கரைந்தபடி இதன் நீரோட்டம். வலைப்பதிவுகளில் ஆரம்பம் முதல் இயங்கிவரும் இரா.செல்வராசும்கூட அப்படிப்பட்ட ஒருவராய் அடியாழம் அமிழ்ந்தவராய், இப்போதும் எப்போதாவது அவர் எழுதினாலும்கூட வாசகர் பரிந்துரை ஓடங்களில் மிதக்காதவராய் இப்பரப்பில் இருந்துவருபவர்.

"என்னது கல்யாணமாகி 4 மாசமாச்சே, உன் மருமகளுக்கு இன்னும் விசேசமில்லையா?" என்று பேசுவது போல் "வலைப்பதிவுக்கு வந்து ஒருவருசமாச்சே இன்னும் புஸ்தகம் போடலையா?" என்று கேட்கும் சூழலே உருவாகி, பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் அன்றாடம் சந்தித்துக் கொள்கிற, வியாபாரம் பேசிக்கொள்கிற நிலையே உருவாகிவிட்ட
இந்தப் பின்னுக்கும் பின்னவீனத்துவ காலம் வந்துதான் "நாமும் நம் எழுத்தைத் தொகுப்பாக்கலாமா? அவை அதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கின்றனவா? இது தமிழுக்கும், தமிழ் வாசகனுக்கும் சிறிதேனும் பயன் தருமா?" என்றெல்லாம் மிகுந்த தன்னடக்கத்தோடு யோசித்து யோசித்து ஒருவழியாக தனது எட்டாண்டுக்கும் மேலான எழுத்து அனுபவத்திற்குப் பிறகு ஒரு தொகுப்பு வெளியிடும் முடிவை இரா. செல்வராசு எடுத்திருக்கிறார். "மெல்லச் சுழலுது காலம்" என்ற தலைப்பில் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகளாய் "வடலி" பதிப்பகம் மூலம் வரும் அவரது நூல் ஆகஸ்டு 26 அன்று ஈரோடு கொங்கு கலை மன்றத்தின் சக்தி மசாலா அரங்கில் மாலை 4 மணியளவில் வெளியீட்டு விழா காண இருக்கிறது. விருப்பமுள்ள நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். தமிழ்மண நிறுவனர் காசி அவர்களால் வெளியிடப்படுகிறது.

எட்டு ஆண்டுகளாய் இங்கே எழுதியும் தன்னைப் பிரபல பதிவராய் ஆக்கிக்கொள்ளத் தெரியாத இரா.செல்வராசு தன் நூலுக்கு ஒரு அணிந்துரை பெற்றுக்கொள்ளவும்கூட இன்னொரு பிரபல பதிவரை அணுகாத தவறையும் செய்திருக்கிறார்:))

கீழே அத்தொகுப்புக் குறித்த ஒரு வாசகப் பார்வையாக ஒரு பிரபலமற்ற பதிவர் எழுதிய கட்டுரை:))


வாழ்வின் மொழி


எழுத்து ஒரு தவம் என்றும், எழுத்து ஒரு வேள்வி என்றும் புகழின் வெளிச்சத்தில் நிற்கிற எழுத்தாளன் ஒருவன் கூறுகையில் அவனை இப்போது அதாவது ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் அவன்மீது அடிக்கப்படுகிற காலகட்டத்தில் கூடிநிற்கிற கூட்டமும் ஆமோதித்து ஆரவாரித்தபடி இருக்கும். ஆனால் அவனே கையிலிருந்த காசு முழுதும் தபால்தலையாக்கித் தன் படைப்புகளை விடாது ஊடகங்களுக்கு அனுப்புவதும், பின்பு அவை பிரசுரமாகாமலே திருப்பி அனுப்பப்படுவதுமான காலமொன்றில் அக்கம்பக்கத்தினரால்கூட உதாசீனப்படுத்தப்பட்டவனாக இருந்திருப்பான். நல்லெழுத்து, வல்லெழுத்து என்று பின்னால் உச்சியில் வைக்கப்படுகிற பல எழுத்துக்களுக்கும்கூட துவக்ககால இலக்கணம் இப்படியாக இருந்துமிருக்கிறது. எழுத்துக்களுக்கான கதவுகளும், வாசல்களும் அவ்வளவு எளிதில் தமிழ்ச்சூழலில் திறந்திருக்கப்பட்டதில்லை. எழுத நினைப்பவனுக்கு எழுதமுடிவது மட்டுமல்ல, நல்ல படைப்புகளை, நூல்களை வாசிக்க நினைக்கும் தாகம் உள்ளவனுக்கு அவற்றை வாங்கிப் படிக்கிற வசதியும்கூடப் பலநேரங்களில் கைகூடிவிடுவதில்லைதான். ஒரு அரசுப்பள்ளியில் அது இலவசமானது என்பதாலேயே சேரமுடிந்து கல்வியில் மேலேறிக்கொண்டிருந்த எனக்கு எப்படியோ தொற்றிக்கொண்ட வாசிப்புமோகத்தின்பொருட்டுத் தேடியலைந்த புத்தகங்கள் வாங்கிப்படிக்க முடிந்ததில்லை. அந்தச் சோர்ந்து கிடந்த சிறு உள்ளூர் நூலகச் சுவர்களில் ஒட்டியிருந்த புத்தகங்கள் தாண்டி அப்போது வேறெதையும் வாசிக்க வாய்ப்பிருந்ததில்லை. எத்தனையோ பேருக்கும் இதுதான் நிலையென்றும் இருந்திருக்கலாம். எழுத நினைத்தும் எழுதப்படாத கதைகளும், வாசிக்க நினைத்தும் வாசிக்கப்படாத எழுத்துக்களும் வடிக்கும் பள்ளங்கள் இருந்தபோதும் ஒவ்வொருவருக்கும் சொல்ல இருக்கும் கதைகள் குறைந்துபோவதில்லை. ஒரு அம்மிக்கல் கொத்த வருபவரும், கோடாலிக்கொண்டை முடிந்த ரப்பர்வளையல் பெண்ணும் பேசிக்கொண்டிருக்கும் உரையாடல்கூட அத்தனை உணர்வுகளோடும், நுணுக்கங்களோடும் ஒரு சிறுகதையைக் காற்றில் எழுதிச்செல்கிறது.


இப்படிச் சாமானியர்களின் வாழ்வும், அனுபவமும், ஆதங்கங்களும், அக்கறையும் அவர்களாலேயே அவர்களின் மொழியிலேயே எழுத்தில் பதிவுசெய்யப்படப் போதிய வாய்ப்புகள் அற்ற குறையை இந்த நூற்றாண்டில் இணையம் கொஞ்சம் போக்கியிருக்கிறது. கணினியில் தமிழும், அத்தமிழில் படைப்புகளும் செய்வது இலகுவான காலம்தொட்டே எழுதிவந்தவர்களில் ஒருவராக இந்நூலாசிரியர் செல்வராசு இருந்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழனும், தாயகத் தமிழனும் ஒரு சிறு பெட்டி வழியே தம் மொழியில் எழுதிப் பரவசமடைகிற தருணங்கள் அழகானவை. அதிலும் வேர்விட்டு விலகி வேறொரு தேசத்தில் விழுதூன்ற வரும் தமிழருக்கு இவ்விணைய எழுத்து ஊடகங்கள் அற்புதமானவை. அப்படியான விரிவெளி வழியேதான் செல்வராசு அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. தனக்கென்று ஒரு மொழியும், நடையும், இயல்பும் கொண்டு எழுதிவந்த இவரிடம் அவரின் மண்வாசனை எழுத்துக்கள் இழுத்துச் சென்றன.

இணைய ஊடகத்தின் இன்னொரு சிறப்பம்சம் எழுதுபவர்களுக்கும், வாசகர்களுக்குமான இடைவெளியற்ற தன்மை. எழுதிப் பிரசுரிக்கும் பத்தாவது நிமிடத்தில் உலகின் வேறொரு மூலையிலிருக்கும் தமிழர் வாசித்து முடித்துக் கருத்து பரிமாற்றமோ, உரையாடலோ நிகழ்த்திவிடமுடியும் எழுதியவருடன். அதேசமயம் அந்த உரையாடல் பயனுள்ளதாக இருக்கும் ஒன்றாக வேண்டுமென்றால் எழுதுபவரும், வாசிப்பவரும் கருத்துரீதியான முரண்பாடுகளையும் தாண்டி உரையாடலுக்கான நெகிழ்வுத்தன்மையோடு இருக்கும்போது மட்டுமே சாத்தியம். அப்படியொரு நெகிழ்வுத்தன்மையை எப்போதும் கொண்டிருப்பவர் செல்வராசு. அது அவர் எழுத்தில் ஒலிக்கும் வாழ்வுமீதான தீராக்காதலின் இன்னொரு பரிமாணம். பேரண்டம் என்பதை பெரியதொரு அன்புப் பிண்டமாய் உருவகப்படுத்தினால் அதிலிருந்து தெறித்து விழுந்த சிறு பகுதியாய் தனிமனித வாழ்வைக் கொள்ளலாம். ஒரு வலைபின்னும் சிலந்தியைப் போல் ஒவ்வொரு மனித உயிரும்கூடத் தன்னைச் சுற்றித் தனக்கென்று மனிதர்களைச் சேர்த்துவைத்துக்கொள்ளவே என்றும் பிரியப்படுகிறது. இதன் சூட்சுமங்களைத் தன் அனுபவங்களையே சோதனைக்கூடமாக்கித் தெளிவுபடுத்திக்கொண்டே செல்கின்றன இந்நூலாசிரியரின் வாழ்வியல் குறிப்புகள். சுற்றியுள்ள மனிதர்கள் வேறுவேறானாலும் அடிப்படையில் ஆதாரமான முடிச்சுகள் பொதுவென்றே இருப்பதால் ஆசிரியரின் அனுபவங்களோடு தானும் ஒருவராய்ப் பயணிப்பது படிக்கும் எல்லோருக்குமே சாத்தியம்தான்.


ஒரு சின்ன மழை பெய்து முடித்திருக்கிறது. அந்த வரிசையில் உள்ள அத்தனைவீடுகளிலும் கதவுகள் சாத்தியிருக்க ஒருத்தி மட்டும் தன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்து நிலம் ஏந்தியிருக்கும் மழையின் ஒவ்வொரு துளி ஈரத்திலும் கைதொட்டும் கால் வைத்தும் பேரானந்தம் சுகிப்பவளாய் ஓடிக்கொண்டிருக்கிறாள். இதை அப்படியே வாழ்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அவசரகதியில் ராட்சத சக்கரங்களுடன் அனாயாசமாகத் திசைமாற்றி வைத்துவிடும் வாழ்வை அதற்கு வெளியே வந்து அதைப் பார்த்துக் கைதட்டியும், கொட்டியும் சிரிக்குமொரு மனநிலை வாய்த்துவிட்டால் பிறகு அது பேரானந்தப் பெருவாழ்வுதான். அதன் சக்கரங்கள் எதிலும் சிக்கிக்கொள்ளாமல் நாம் அதன்மீது சவாரி செய்யலாம். வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வையும் நினைவுகளில் தேக்கிப் பின் நிதானமாய் அசைபோடும் செல்வராசின் இத்தொகுப்பு பலருக்கும் அவர்கள் சுவைத்த அல்லது சுவைக்க மறந்த கணங்களைத் திரும்பப் பெற்றுக்கொடுக்கிறது.


தான் குழந்தையாய்த் தவழ்ந்த தன் ஆத்தாவின்(அம்மாவின் அம்மா) கைரேகைகளின் வளைவுகளைக்கூடப் பத்திரமாக எழுத்தில் சேகரித்து ஒரு பாமரத் தாய்மையை, அதன் பொங்கும் பிரவாகத்தை எழுத்தில் வடித்தெடுப்பதும், இப்போது தன் கைகளில் குழந்தைகளாய்த் துள்ளும் தன் மகள்களின் விழிகளில் இருந்து தன்மீது சொரியும் குழந்தமைத் தாய்மையை விசும்பும் நன்றியோடு பதிந்து வைப்பதும் செல்வராசுவின் திகட்டாத மொழியில் வரிசையாய் நகர்கின்றன. அவரின் குழந்தைகள் சார்ந்த அனைத்துப் பதிவுகளுமே புதிதாய்ப் பெற்றோர் ஆனவர்களுக்கும், ஆக இருப்பவர்களுக்கும் ஒரு அழகான கையேடு என்பேன். ஆனால் அவை யாருக்கும் அறிவுரைகள் அல்ல, செய்முறை விளக்கங்களும் அல்ல. சில கவிதைகள் அவை. உள்ளே தோய்ந்து அதன் ஈரத்தில் நனைந்து மெல்லிய புன்னகையைக் கசியவிட்டு நமக்குத் தேவையான எதையும் அள்ளிக்கொள்ள விரிந்துகிடக்கும் அனுபவங்கள் அவை.


"நீ விளையாடப் போகையிலே
விரல் அழுந்தும் என்று சொல்லி
வெள்ளியிலே சிறு செருப்புச்
செய்திடுவார் உன் மாமா
நீ பச்சைக் குடைப் பிடிச்சுப்
பயிர்பார்க்கப் போகையிலே
பாதம் நோகுமின்னு
பவுனால் ஒரு செருப்புச்
செய்திடுவார் உன் மாமா" என்று கொங்குச் சீமையிலே தாய்மார்கள் பாடுவதாய் நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்கள் கேட்டதுண்டு. ஒன்றரை ஏக்கர் வறக்காடும், ஒன்பது ஆடுகளும் வைத்துக் கஷ்ட சீவனம் செய்வதுதான் நிதர்சனம் என்றாலும் கனவுகளில், பாடல்களில் வசந்தங்களை வாரியிறைத்துக் குழந்தைகளை வளர்க்கும் தன் சொந்தச் சீமைவிட்டு அந்நியச் சீமையிலே அகப்பட்டுக்கொண்ட தன் குழந்தைகளுக்குத் தான் தாலாட்டுப் பாடித் தூங்கவைத்த கதையை நகைச்சுவை ததும்ப இயல்பாக எழுதியிருக்கிரார். ஆனால் வாசிப்பவருக்கு அது தரும் இன்பம் அதிகம். தமிழ்கேட்கா தூரத்தில் தன் குழந்தைகளுக்குத் தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடித் தூங்கவைக்கும் தந்தை செல்வராசு.

"கண்ணையுங் காதையும் மட்டும் உட்டுப்போட்டு நீங்க தோலையே உரிச்சாலுஞ் சேரீங்க, பையன் நல்லாப் படிச்சாப் போதுமுங்க" என்று பாமர வெகுளித்தனத்தோடு பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிடும் ஊர்ச்சூழல் ஒன்றில்தான் இந்நூலாசிரியரும் பிறந்து வளர்ந்திருக்கிறார். தான் பெற்ற கல்வியும், மேன்மையும், உழைப்பும், அர்ப்பணிப்பும் இன்று தந்திருக்கும் இடத்திலிருந்துகொண்டு தன் பிள்ளைகளிடம் தன்னை மாணவனாக ஒப்படைத்துப் பாடம் கேட்கிறார். குழந்தைகளைச் சக்தியற்றவர்களாய்ச் செய்யும் எந்தவொரு மிரட்டல் வழிமுறையையும் அவர்களை ஒழுங்குபடுத்தக் கையாளக்கூடாது என்பதை ஒரு பக்குவமான நிலையிலிருந்து எடுத்துச் சொல்கிறார். அந்தப் பிள்ளைகள் அவருக்குச் சொல்லும் கதைகளையும், அவர் பிள்ளைகளுக்குச் சொல்லும் கதைகளையும் சலிப்புகளற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். ஒவ்வொரு எழுத்திலும், சொல்லிலும் உயிர் இருக்கிறது.

புலம்பெயர் தேச வாழ்வு புதிய அனுபவங்களை மட்டும் தருவதில்லை. அது விட்டுவந்த சுவடுகளை நினைத்தும் ஏங்கவைக்கிறது. எந்தக் குளிரூட்டியும் ஈடாவதில்லை ஒரு மரநிழலுக்கு. அந்த இதந்தரும் மரநிழல்களாய்க் கூடவந்த மனிதர்கள் சிலரையும் பிரிய நேர்ந்திருப்பதும், அடிக்கடி சந்திக்க இயலாதிருப்பதும் விதைக்கும் பெருமூச்சும் சில கட்டுரைகளாக இந்நூலில் எழுதப்பட்டிருக்கின்றன. பிரிவுத்துயர் இல்லாத இலக்கியங்கள் ஏது தமிழில்? பெருங்குரலெடுத்து ஆவேசமான கோபத்தை எதன்மீதும் காட்டுவதில்லை செல்வராசின் எழுத்துகள். ஆனால் மென்மையாகச் சொல்லப்பட்டாலும் உயிர்வரை தைக்கும் வலியை அது தரவே செய்கிறது. நீதித்துறை ஊழியராகப் பணிபுரிந்த தன் தந்தையைப் பற்றிய நினைவுகூறல்களிலும், அவரைத் தன்னோடு அழைத்துவந்து வைத்துக்கொள்வதற்காய் விசா ஏற்பாடுகளைச் செய்தபோது நமது அரசாங்க நடைமுறைகள் அவரைத் துவள துவள அலைக்கழித்ததையும் நுட்பமாக எழுதியிருக்கிறார். அவை அவரின் தந்தை தாண்டிய எத்தனையோ விடயங்கள் குறித்து நமது கவனத்தைக் கோருகின்றன.


செல்வராசுவின் இடுகைகளைத் தனித்தனியாகத் தொடர்ச்சியற்று நான் இணையத்தில் வாசித்தபோது அறியாத ஒன்றை இப்போது தொகுப்பாக வாசித்தபோது அறிந்துகொண்டேன். அது அவரின் எழுத்துக்களில் குடிகொண்டிருக்கும் நகைச்சுவை நடை. ஆழமான அனுபவம் ஒன்றை எழுதும்போதும் படிப்பவனை விலகி ஓடவைக்காத, இழுத்துப் பிடித்துக்கொள்கிற மெல்லிய நகைச்சுவை எல்லா இடங்களிலும் இழையோடுகிறது. இது தொடர்ந்து எழுதுகிறபோது எழுத்தில் இன்னும் பலதூரங்களை இவரைக் கடக்க வைக்கும். "கண்கள் சொல்லும் கதை" பல இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது
ஆசிரியரின் சுய எள்ளல் பாணி நகைச்சுவை.


ஓரளவிற்கு நூலைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இன்னும் இந்த முன்னுரையில் நான் குறிப்பிடாத கதைகளிலும், கட்டுரைகளிலும் நிறைந்து கிடக்கின்றன வாசிப்பவரை அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கச் செய்யும் சிறப்புகள்.

மொத்தமாகச் சொல்வதென்றால் குழந்தைகளைச் சுண்டியிழுத்து அவர்களை வாங்கவைத்து வாயில் இட்டதும் கரைந்து பிறகு முடிந்தபிறகும் தன் சுவையை அவர்கள் மூலம் சப்புக்கொட்டவைக்கும் பஞ்சுமிட்டாயைப் போல இத்தொகுப்பு. எளிய மொழியில் தனிமனித வாழ்வை அழகான கதைகளாகக் காட்டிக்கொண்டே போகிறது. அதற்காகப் பஞ்சு மிட்டாய் குழந்தைகளுக்கானது என்பதுபோல இந்நூலும் ஒருசாராருக்கானது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒளிந்திருக்கும் துள்ளல் குழந்தையொன்றின் மனநிலை போதும் இத்தொகுப்பின் பல பகுதிகளை உள்வாங்க. அப்படியொன்றில்லை தொலைந்துபோனது என்பவருக்கும் அப்படியான மனநிலையை இத்தொகுப்பே தோற்றுவித்தும் கொடுக்கும் என்பது மிகையில்லை.

நிறைய எழுதிக்கொண்டிருங்கள் செல்வராசு உங்களுக்கான பயணங்களோடு. அன்போடு வாழ்த்துகிறேன்.

செல்வநாயகி,
ஜூலை 2010.