நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, July 31, 2006

கொழுகொம்பாகும் கொடிகள்

இந்தியாவில் இயங்கிவரும் மென்பொருள் நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்து அவற்றிற்காக அமெரிக்காவில் பணிபுரியவரும் இளைய தலைமுறையின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குறுகியகாலம் மட்டுமே வந்து செல்வோர், குறுகியகாலப் பணித்திட்டத்துக்கு வந்து பின் பணிநீட்டிப்புப் பெற்றுச் சிலவருடங்கள் இருந்து செல்வோர், சிலவருடங்கள் இருந்து பச்சைஅட்டை விண்ணப்பித்துப் பின் இங்கேயே தங்குவோர் எனப் பல பிரிவினர் இதில் உண்டு. இந்தப் பிரிவுகளுக்குள் இன்னும் சில உட்பிரிவுகள் உண்டு. திருமணம் ஆகாதவர்கள் (வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்காரங்கன்னும் எடுத்துக்கலாமா?), திருமணம் ஆகிப் பணிக்குச் செல்லாத மனைவியுடன் வசிப்பவர்கள், அமெரிக்காவிலேயே வேறெங்கேனும் தன்னைப்போலவே மென்பொருள்துறையில் பணிபுரியும் மனைவியை வார இறுதிகளில் சந்தித்து இல்லறம் நடத்துபவர்கள்,
வாரயிறுதி இல்லறத்தை அனுதினமுமாக மாற்றும் முயற்சியில், தன் நிறுவனத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை (பிறரிடம் இருக்கும் செல்வாக்காகவும் இருக்கலாம்) உபயோகித்து மனைவியையும் தன்னுடனேயே பணிபுரியவைத்துவிடும் திறமைசாலிகள்....... இதுபோல் பல உட்பிரிவுகள் உள்ளன.


திருமணம் ஆவதற்கு முன் இங்கு வருவோரில் ஆண்களைப்போலவே பெண்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். பெற்றோர்களைப் பிரிந்து நாடு கடந்து வந்து தனியாகவோ, தோழர் தோழியருடனோ தங்கியோ பொருளீட்டும் துணிச்சல்காரர்களாக இருக்கிறார்கள் இத்தலைமுறைப் பெண்கள். பெரியாரையெல்லாம் பேசத்தேவையேயில்லாத அளவுக்கு இங்கு பெண்விடுதலை வானம்வரை வளர்ந்துகிடக்கிறது என்பவர்களுக்கு
இவையெல்லாம் உதாரணங்களாகிப் போவதுமுண்டு. ஆனால், திருமணத்திற்குப் பிறகு நடப்பவை பெண்களுக்கு அவ்வளவு சுலபமாக இருப்பது இல்லை. அமெரிக்காவில் சம்பாதிக்கும் மாப்பிள்ளைகளுக்காக இந்தியாவில் தான் படித்துக்கொண்டிருக்கும் கல்வியைப் பாதியில் துறந்தும், செய்துகொண்டிருந்த வேலைக்கு (அது எவ்வளவு நல்ல வேலையாக இருந்தாலும்) முழுக்குப் போட்டும் இங்கு வந்து குடும்ப வாழ்க்கையைத்
தொடரும் பெண்கள் அதிகம். பிறகு இங்கு கிடைக்கிற வேலைக்குப் போவதோ, அல்லது விசா பிரச்சினையால் வேலை செய்யமுடியாது வீட்டை மட்டும் கவனித்துக்கொள்வதோ, மேலே படிப்பதோ அவரவர் சூழ்நிலைக்குத் தகுந்தபடி நடக்கிறது. இதுவே அமெரிக்காவில் பணிபுரிய வாய்ப்பும், ஆர்வமும் உள்ள பெண்களுக்காக அவர்களின் கணவன்மார்கள் இங்குவந்து இருப்பது என்பது அரிதாகவே உள்ளது. எப்போதும் பெண்கள்
"கொழுகொம்பைப் பற்றிப்படரும் கொடிகள்" என்பதே நம் சமூகத்தைப் பொறுத்தவரை அழகான சிந்தனை என்று ஆராதிக்கப்பட்டு வந்திருக்கிறது. மாற்றங்களைக் கொண்டுவருவதற்குத் தேவைகளும், ஏற்றுக்கொள்வதற்குப் பக்குவங்களும் வேண்டியிருக்கின்றன. அப்படி ஏற்றுக்கொண்டு இருக்கிற தம்பதிகளில் ஒருவர் தீபா-விவேக்.

நட்சத்திரவாரத்தில் அவர்களின் அனுபவங்களை இங்கு பதிவு செய்ய எண்ணி தீபாவுடன் கலந்துரையாடியதன் சுருக்கம் இது. அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கும், வெளியிட அனுமதித்தமைக்கும் தீபாவுக்கு நன்றிகள்.

எங்கு படித்தீர்கள்? எப்போது வேலையில் சேர்ந்தீர்கள்?

சென்னை மீனாட்சி கல்லூரியில் கணிதம் இளங்கலை, பின் சென்னை எம்ஐடியில் பிடெக். முடித்தவுடன் மென்பொருள் வல்லுனராக வேலை. வேலைக்குச் சேர்ந்தபின்னும் அஞ்சல்வழியில் எம்பிஏவும், எம்எஸ்சும் முடித்தேன்.

திருமணம்....

நான் எம்ஐடியில் படித்துக்கொண்டிருந்தபோதே தனியார்கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனராக இருந்த விவேக்கை வேலையில் சேர்ந்த ஒருமாதத்தில் திருமணம் செய்தேன். காதல் திருமணம். இருவரும் வேறுவேறு சாதி மற்றும் பொருளாதார நிலையில் இருந்ததால் ஏற்பட்ட சங்கடங்களைத் தாண்டிப் பெற்றோர்களையும் சம்மதிக்கவைத்து ஒன்றுசேர்ந்தோம். நம் ஊரில் என்னதான் கல்வியில் சிறந்து விளங்கினாலும் ஒரு மனிதனுக்கான மரியாதை அவன் பொருளாதரத்தை வைத்தே முடிவு செய்யப்படும் நிலை இருக்கிறது. அதனாலேயே திருமணத்திற்குப்பின் பொருளாதார அளவில் உயர்ந்தநிலைக்குப் போய் வெற்றிஅடைந்துகாட்டுவதையே லட்சியமாகக் கொண்டோம்.

அமெரிக்காவிற்குப் பணிபுரிய வந்ததைப் பற்றிச் சொல்லுங்கள்?

வேலையில் சேர்ந்து, திருமணமும் முடிந்து முதலில் சென்னையில்தான் வசித்தோம். பிறகு பொருளாதாரரீதியாக எடுத்த முடிவுகள் மற்றும் மேற்கொண்ட செயல்களுக்காக ஆன்சைட்டில் கொஞ்சகாலம் வேலைசெய்தால் நல்லதாக இருக்கும் என்று தோன்றியது. எனவே
எட்டுமாதக்குழந்தையைக் கணவரிடம் விட்டுவிட்டு முதலில் நான் மட்டும் ஒரு குறுகியகாலப் பணித்திட்டத்திற்குக் கம்பெனி அனுப்பி வைத்ததை ஏற்று
வந்தேன். பிறகு அது நீண்டகாலமாக மாற்றப்பட்டபோது நான்மட்டும் இங்கு குழந்தை கணவரைப் பிரிந்து இருப்பது துயரமாக இருந்ததால் விடுப்பு
எடுத்துக்கொண்டு ஊருக்குப்போய்க் கணவரிடம் பேசி அவரையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டுவர முயற்சி செய்தேன். ஆரம்பத்தில் அவர்
அங்குசெய்துகொண்டிருந்த வேலையை விடாமல் விடுப்பு மட்டும் எடுத்துக்கொண்டுவந்தார். ஆறுமாதங்கள் கழித்துத் திரும்பப்போய்விடும் முடிவில்தான் அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவிற்குக் குடும்பத்தைக்கொண்டுவருகிறபோது ஆரம்பகால வருமானத்தையெல்லாம் இங்கிருப்பதற்குச் செய்துகொள்ளவேண்டிய அவசிய வசதிகளான கார் வாங்குதல் போன்றவற்றிற்குச் செலவழிக்கவேண்டியிருந்ததால் மேலும் ஓரிரு வருடங்கள் இருந்து, நல்ல சேமிப்பொன்றை எடுத்தச்செல்ல விரும்பி என் பணியை இங்கேயே தொடர எண்ணினேன். குடும்பத்தைப் பிரிந்திருப்பதை இருவருமே
விரும்பாததாலும் விவேக்கிற்கு இங்கேயே ஏதாவது வேலைதேடிக்கொள்ள முடியுமென்றும் கருதி இந்தியாவில் அவரின் வேலையை ராஜினாமா செய்தார். இப்போது இரண்டு குழந்தைகளுடன் ஐந்தாவது வருடமாக இங்கேயே இருக்கிறோம்.

இங்கு இருத்தலின் அனுபவங்கள் எப்படியானவை?

குழந்தைகளுக்கு அடிவிழாத பள்ளிக்கல்வி, சுத்தம், சுகாதாரத்துடனான பொது விளையாட்டுப் பூங்காக்கள், வசதியான வாகனம், வாழ்க்கை முறை என்று நன்மைகளைச் சொல்லலாம். என்னதான் வசதிகள் இருந்தாலும் அவர்களின் உலகம் நம்வீடு, அவர்கள்பள்ளி என்று மிகச் சிறியதாக இருக்கிறது இங்கு. இதுவே நம் ஊரில் தெருவில் இறங்கி நடக்கும்போதே அவர்கள் சந்திக்கிற பல்வேறு மனிதர்கள், சமூக நிகழ்வுகள் என்று
அவர்களுக்குள் கேள்விகள் பிறக்கிற வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும். மற்றபடி குடும்பத்தின் உயர்வுக்காகவே இங்கு வந்திருக்கிறோமென்பதால் நமக்கு ஏற்படுகிற இழப்புகளையெல்லாம் ஏற்கப் பழகிக்கொண்டிருக்கிறோம். என்றாலும் உறவுகளைவிட்டு வெகுதூரத்தில் இருப்பது என்னைப்பொருத்தவரை ஒருவகையில் நன்மையாகவே தெரிகிறது, அவர்களுடன் சில்லரைப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள்
குறைவு என்பதால்.

இங்கிருக்கிற இந்திய சமூகத்தில் எப்படி உணர்கிறீர்கள்?

நண்பர்கள், உறவினர்கள் என்று நிறைய இருக்கிறார்கள். இந்திய சமூக சந்திப்புகளிலும் பங்குபெறுவதுண்டு. ஆனாலும் சில சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் அவர்களிடமிருந்து. விவேக் இங்கு வேலைதேட ஆரம்பித்தபோது அவர் அங்கு செய்துகொண்டிருந்த வேலைக்கு இணையான துறையில் வேலை கிடைப்பது இயலாததாக இருந்தது. என் பணிநேரம் காரணமாக குழந்தையை அவர் பார்த்துக்கொள்ளும் அவசியம்
ஏற்பட்டது. தொலைதூரத்தில் கிடைக்கும் வேலைக்காகப் பயணிக்க இன்னொரு கார் வாங்குவது, குழந்தையைக் காப்பகத்தில் விடுவது போன்ற செலவினங்களைக் கணக்கிட்டபோது வீட்டிற்கருகில் நடக்கும் தூரத்தில் அதுவும் நான் பணியிலிருந்து திரும்பிக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தபின் மாலைநேரங்களிலும், நான் வீட்டிலிருக்கும் வார இறுதிகளிலும் அவர் வேலைக்குச் செல்வதே எங்களுக்கு ஏற்புடையதென்று
முடிவெடுத்தோம். எந்த ஈகோவும் பார்க்காமல் என் நிலைகருதியும், குடும்ப நன்மை கருதியும் விவேக்கும் எரிவாயு நிரப்புமிடம், விடுதி என்றெல்லாம்
வேலைசெய்திருக்கிறார். நான் பழகுகிற அமெரிக்க நண்பர்கள், செய்யும்வேலை சார்ந்து மனிதர்களிடம் பாகுபாடு காட்டுவதில்லை. ஆனால் இந்திய
நண்பர்கள் விவேக் அந்த வேலைகளைச் செய்தபோது அதை ஏதோ அவர்களுக்கு ஏற்பட்ட கௌரவக் குறைச்சல் போல் பாவித்து என்னிடம் "அந்த வேலையெல்லாம் ஏன் செய்யவேண்டும்?" என்று கேள்வி கேட்டதுண்டு. இது நம் மனோபாவம். இந்தியநண்பர்கள் சந்திப்புகளில் கலந்துகொள்வதற்கு இந்தமாதிரிக் கேள்விகளும் அவை கேட்கப்படுகின்ற தொனிகளும் சிலசமயங்களில் விவேக்கிற்குத் தடைகளாக அமைந்துவிடுவதுண்டு.

அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ள உங்கள் இருவருக்குமிடையான புரிதல்தான் காரணமாக இருந்திருக்கும். அதைப் பற்றிச் சொல்லுங்கள்!

என் ஆசைகள், கனவுகள் எல்லாம் காதலித்த காலத்திலேயே விவேக்கிடம் பகிர்ந்து வந்திருக்கிறேன். வேலையிலும்சரி, படிப்பிலும்சரி மேலேமேலே
போய்க்கொண்டேயிருக்க வேண்டும், அதற்காக என்னைத் தகுதிப்படுத்திக்கோண்டே இருக்க வேண்டுமென நினைத்தேன். இரண்டு குழந்தைகள் பிறப்பின்போதும் பிறப்பிற்கு ஒருவாரம் முன்னும், பின்னுமாகத் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன். இதெல்லாம் விவேக்கின் மிகப்பெரிய ஆதரவால்தான் முடிந்தது. அமெரிக்காவில் இரண்டாவது குழந்தை பிறப்பிற்கு மாமனார் மாமியார் உதவிக்கு வந்து சென்றபின், அரைநாள் மட்டுமே
பள்ளி சென்று திரும்பும் முதல் குழந்தையையும், ஆறுமாதங்களே ஆகியிருந்த இரண்டாவது குழந்தையையும் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள நிச்சயம் ஒருவர் வீட்டிலிருந்தே ஆகவேண்டி வந்தபோது தான் பார்த்துக்கொண்டிருந்த பகுதிநேர வேலையையும் விட்டுவிட்டு வீட்டிலிருப்பதற்கு முன்வந்தார் விவேக். இப்போது வேலையோடு இங்கு சில பதவி உயர்வுகளைக் கருதி எம்பிஏவும் படித்துக்கொண்டிருக்கிறேன் நான். இரண்டு
குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு வீட்டிலிருந்த அவர் இப்போது மீண்டும் மாலைகளில் பணிபுரிய ஆரம்பித்திருக்கிறார்.


கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும் தன் தனிப்பட்ட லட்சிய எல்லைகளைக் கரைத்துக்கொள்ளும் பாங்கிலேயே வளர்க்கப்பட்டது நம் பெண்கள் சமூகம். மாறுதலைக் கொண்டுவரும்போது அப்படிக் கொண்டுவருபவர்களுக்கு புற அகக் காரணிகளால் ஏற்படுகின்ற அழுத்தங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். அவற்றைக் கடந்த அனுபவங்களைக் கூறுங்கள்!

குழந்தைகளோடு நிறைய நேரம் செலவிடமுடியாத வருத்தம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. குழந்தைக்காக வீட்டிலேயே இருக்க நேரிட்ட விவேக்கின் உணர்வுகளைக் கருதும்போதும் பேசாமல் ஊருக்குப் போய்விடலாமா என்று அடிக்கடி முடிவெடுப்பதும், பிறகு குடும்பத்தின் சில எதிர்கால நன்மை கருதி அதை ஒத்திப்போடுவதுமாக நாட்களைக் கழித்தோம். என் படிப்பை முடிக்கவேண்டிய கட்டாயமும், அதற்காக ஆகும் பெரிய செலவும்
இப்போது கண்முன் இருக்கிறது. எவ்வளவு ஓட்டமாக இருந்தாலும் வீட்டில் எல்லோர்க்குமான சமையலை மட்டும் நானே செய்ய ஆசைப்பட்டு செய்கிறேன். மற்ற உபவேலைகள் செய்வதும், குழந்தைகளுக்குத் தேவையானவை செய்யவும் விவேக்தான் பெரும்பாலும். அவரே வைத்துக்கொண்டிருந்ததால் இரண்டாவது குழந்தைக்கு அவரின் அருகாமை மிக அவசியம். அவன் எப்போது என்ன சாப்பிடுவான் என்பது
என்னைவிட அவருக்கே தெரியும். இதைப் பார்க்கும்போது அவர்தான் இங்கு தாயோ என்று எனக்கே தோன்றும். ஆனால் வேறெந்தப் பாகுபாடும் எங்களுக்குள் வர அனுமதித்ததில்லை. "ஒன்று முடிந்தால் இன்னொன்றைப் படிக்கிறேன், செய்கிறேன் என்று ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறாய். எவ்வளவுதான் பொறுமையாக இருப்பது? திரும்பப் போகலாம்" என்று விவேக் சொல்வதும் உண்டு. ஆனால் எந்த விவாதங்களும் இரண்டு நாட்களில் காணாமல்போய் நான் படிக்கத் தேவையானது செய்ய ஆரம்பிப்பார் அவர். இந்தப் புரிந்துணர்வுக்கு என் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஒருவேளை எங்களது காதல் திருமணம் என்பதால் வாய்ப்புகள் அதிகமோ என்று நான் நினைத்துக்கொள்வதுண்டு.
*********

இது தேவைகளின்பால் மாற்றங்களை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தின் அனுபவம். இப்படியான ஓவ்வொரு குடும்பத்திற்கும் வேறு வேறு அனுபவங்கள், நிகழ்வுகள் இருக்கலாம். அந்த நிகழ்வுகளின் பட்டியல் பரந்துபட்டதாக இருக்கும். அந்தப் பட்டியல் நம் சமூகத்தின் இன்னும் ஒரு பக்கத்தை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவும்.

Sunday, July 30, 2006

வணக்கம்

நட்சத்திரத்திற்கும் எனக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணிப்பார்க்கிறேன். நானும் ஒருத்தி இங்கிருக்கிறேன் என்று, எல்லோர்க்குமான என் இருப்பைச் சொல்லிக்கொள்ளும் வண்ணம், சுற்றிலுமான நிகழ்வுகளுக்கு எதிரொலியாய் என் உணர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்த கணத்திலேயே துவங்கியிருக்குமா நட்சத்திரத்திற்கான என் காத்திருப்புக்கள்? அப்படியென்றும் சொல்லிவிடமுடியாது. மேலே தொங்கவிடப்பட்டிருந்த, வெறும் நெல் உமி நிறைத்த கிளிப்பொம்மையையும், குஞ்சுக் கிளிகளையும் கைகளால் எட்டிப்பிடித்தும், காலால் உதைத்தும் ரசித்துக்கொண்டிருந்தபோது அதையேகூட நட்சத்திரமென்று நினைத்துக்கிடந்திருப்போனோ என்னவோ யாருக்குத் தெரியும்? ஏதோ ஒரு அவஸ்தையில் யாரும் புரிந்துகொள்ளமுடியாத ராகத்தில் நான் கத்தத் துவங்கிய நாளொன்றில் என் அவஸ்தையையோ அல்லது என்னாலான அவர்களின் அவஸ்தையையோ தணிக்க எடுக்கப்பட்ட முயற்சியாக அம்மாவோ அம்மாச்சியோ என்னை வெளியில் தூக்கிக்கொண்டுவந்து எதையாவது காட்டத் துவங்கியபோதுதான் ஆரம்பித்திருக்கும் என்னை நட்சத்திரத்திற்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி. கிலுகிலுப்பைகளில் அடங்காத அப்போதைய என் ராத்திரிப் பேரழுகைகள் நிலாவிலும், நட்சத்திரத்திலும் கரைந்து போனதாய்க் கதைகள் சொல்லும் அம்மாச்சியிடம், இன்றும் ஒரு பகலால் நிறைவுசெய்யப்படமுடியாது போகும் என் நாளை இரவில் முளைக்கும் நட்சத்திரங்கள் பூர்த்தியாக்கிவிடுகின்றன என்று சொன்னால் புரிந்துகொள்ளுமா?

எண்கள் கற்றுத்தெளிந்த காலத்தில் முதலில் நானாக எண்ண ஆரம்பித்தது நட்சத்திரங்களையாக இருக்கலாம். அந்தக் காலங்களில், அகலத்தில் அள்ளித் தெரிக்கப்பட்ட சோற்றுப்பருக்கைகளைப் போல் தெரிந்திருந்தன அவை. தட்டில் போட்டுவைத்த சோற்றை இறைக்காமல் சாப்பிடப் பழகிய பொழுதில் அந்தக் கற்பனை மாறி, பெரிய பந்தலில் தொங்கவிடப்பட்ட மின்மினி விளக்குகளாயின அவை பிறகு. விழாக்களிலும், திருமணங்களிலும் பந்தலில் மின்னும் அலங்கார விளக்குகள் மீதான மோகம் களைந்தபோது வான மண்டலத்தின் வரலாறு படித்துக்கொண்டிருந்த வயது. இயற்பியல் விஞ்ஞானிகளின் வாயில் வராத பெயர்களையும், அவர்கள் எழுதி வைத்த வரையறைகளையும், சூரியனுக்கு மிக அருகிலும், தொலைவிலும் உள்ள கோள்களின் பெயர்களையும் எழுதி எழுதி சலித்துக்கொண்டிருந்தபோது நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் உண்மைகள் கற்பிக்கப்பட்டன. அறிவியல் வகுப்பில் படித்துவிட்டு வருவதை தமிழ்வகுப்பில் மறுத்தார்கள் "மண்மீது பகலிலெல்லாம் தொழிலாளர் படும்பாடு கண்டு வேதனையில் அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம்" என்ற பாவேந்தன் கற்பனை கொண்டு. அதுவே பிடித்தும்போனதென்றாலும் கொப்புளங்களாகவும் அவை நீடிக்கவில்லை. முகமெல்லாம் பருக்கள் முளைத்துப் பத்துமுறை கண்ணாடி பார்த்த காலத்தில் சட்டென்று பூக்களாகியிருந்தன கொப்புளங்கள். அப்போது பூத்துக்கிடக்கும் ஒரு மல்லிகைச் செடி கடக்கும்போதும் இரவில் கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களின் ஞாபகம். உயிர்கரைத்து வரைந்த காதல் கடிதங்களில் வார்த்தைகளாகப் புகுந்துகொண்டவையும் அவையாகவேயிருக்கலாம். இப்போதோ இங்கத்தய குளிர்காலத்தின் விழுந்துகிடக்கும் பனிக்குவியல்களில் விளக்குவெளிச்சத்தில் மின்னுகின்றன அவை.

திடீரென நானும் ஒரு நட்சத்திரமாகிறேன் இன்னும் ஒரு வாரத்திற்கு இங்கு:)) ஒரு வருடத்திற்கு ஏழு பதிவுகளை எழுதிக் குவிக்கிற ஆசாமியிடம் ஒரு வாரத்திற்கு ஏழு பதிவுகளை எழுதப் பணித்திருத்திருக்கிறார்கள்:))

Monday, July 10, 2006

எங்கள் சாமிகள்!

லோகம் துன்பப்பட நேர்கையிலெல்லாம்
இவர்கள் அவதாரங்களாகிப் போரிடுவர்

துர்மிருகங்கள் பற்றிய பயங்களுக்கு
இவர்களின் நாமம் ஜெபித்தாலே போதும்

ஏழைபக்தனைப் பணக்காரனாக்கவும்
பணக்காரத்திமிரை ஏழையாக்கி அடக்கவும்
வெறும் திருவிளையாட்டுக்கள் கொண்டே
செய்யமுடிந்தவர்கள் இவர்கள்

யாருமற்ற அனாதைகளுக்கும்
பால்நினைந்தூட்டும் தாயினும்
சாலப்பரிந்து ஊட்டும்
காருண்யக்கதைகளின்
நாயகர்கள் இவர்கள்

இவர்கள்பால் பற்றுவைத்து
இவர்களே சரணென்று
இவர்களின் பசிதீர்க்க
பிள்ளைக்கறி படைக்கவும்
தயங்காத மானிடர்க்கு
மரணித்த குழந்தையையும்
உயிர்தரிக்க வைக்கும்
மாதிறனுடையவர்கள்

தீமையை அழிக்கவே சமரெனினும்
அரசனைப்போல் அன்று கொல்லாமல்
நின்று கொல்லும்
நிதானம் புரிந்தவர்கள் இவர்கள்

இவ்வளவும் தெரிந்திருந்தும்
பெண் தொட்டால்
பரவும் தீட்டிலிருந்து
தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாமல்
கதறும் எங்கள் சாமிகள்!

Wednesday, July 05, 2006

அடைக்க முடியாது "ஆறுக்குள்"

தமிழ்மணத்தில் விதவிதமான "ஆறு" பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. என்னையும் ஒரு "ஆறு" பதிவு போடுமாறு அழைத்திருந்தார் தெக்கிக்காட்டான். இப்போதுதான் நேரம் கிடைத்ததென்றாலும் இப்பதிவு எழுதுவதில் எனக்கு நிறையக் குழப்பங்கள் உண்டு. உண்மையைச் சொன்னால் இப்படி ஒரு கேள்வியை இப்போதுதான் நான் முதலில் சந்திக்கிறேன். எனக்குப் பிடித்தவைகள் என்று என்னையே கேட்டுப்பார்க்கிறேன். மழைக்குப் பின்னான உடனடி வெய்யிலில், ஈரத்துடன்
மினுமினுக்கும் இலைகளைப்போல் மனதின் அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன பலவும் பலவிதங்களில் "பிடித்தவைகள்" வரிசையில். எழுதலாம் எனப் பட்டியலிடும்போதுதான் பிரச்சினை. காரணம் "ஆறுக்குள்" அடங்க மறுக்கின்றன அவை. என் "பிடித்தவைகள்" ஒரு எல்லைக்குள் வராதனவாய் விரவிக்கிடக்கின்றன எங்கும்.

பிடித்த இடங்கள் எவையென்று எண்ணிப்பார்க்கிறேன். மண்ணில் விழுவதற்கு முன் கருவறை பிடித்திருக்கலாம். பிறந்தபின் தாயின் மடி பிடித்திருந்தது. திரிந்து விளையாடிய வீதி பிடித்திருந்தது. படித்த பள்ளியும், வசித்த ஊரும், வயல்காடும், வயல்களுக்கு நடுவே ஓடிய வாய்க்காலும், கோடைவிடுமுறையின் கொட்டும் வெப்பத்தில் கொட்டமடித்து மகிழ்ந்த உறவினர்கள்
வாழ்ந்த ஊரின் சிறுசிறு நீர்நிலைகளும் பிடித்தேயிருந்தன அப்போது. நினைவலைகளில் இப்போதும்.வாலிபத்தில் கல்வி வழங்கிய கல்லூரியும், உலகம் மறந்து புத்தகங்களை நேசிக்கவைத்த நான் நுழைந்த நூலகங்களும், ஒரு யோக வகுப்பில் என்னையே எனக்கு உருமாற்றிக்கொடுத்த அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைகொண்ட அழகான அறையும், ஏறி இறங்கிய மலைகளும், மணிக்கணக்கில் குளித்துக்கொண்டேயிருந்த அருவிகளும், மிதமான ஒலியில் அழகான பாடலை எந்த
ஒரு சினிமாப் பாடகர் குரலிலும் கேட்கமுடியுமொரு பேருந்தில் உட்கார்ந்துகொண்டு பயணிக்கக் கிடைக்கும் ஒரு இருக்கையும், மனதின் வெப்பமோ குளிர்ச்சியோ பகிர்ந்து கொள்ள முடிந்த நண்பர்களின் வீடுகளும் பிடித்தவைகளே!முதன்முதலாய்க் காதல் தோன்றியபோது இருந்த இடமும், காதலித்தபோது பிடிக்காதவை என்று எதுவுமேயில்லையென்ற வகையில் பிடித்திருந்த எல்லா இடங்களும் இப்போதும் பிடித்தேயிருக்கின்றன. என் வீடு பிடிக்குமென்பதைக்கூட
பொத்தாம்பொதுவாய்ச் சொல்ல மறுக்கிறது என்மனம். வீட்டிற்குள் எப்படியோ என்னை இழுத்துப்பிடித்து வேலைவாங்கி தன்னை பளிச்சென்று காட்டிக்கொள்ளும் சமையலறையும், அடுக்கிமுடித்ததாலும் அடிக்கடி கலைந்துகிடக்குமென் புத்தக அலமாரியும், படுத்தவுடன் நித்திரை வழங்கும் உட்காரும் இருக்கையும், சன்னலுக்கருகே தேநீர்குடிக்கத் தேர்ந்தெடுக்கும் பொழுதுகளில் அமர வசதியாய் அங்கே கிடக்கும் கொஞ்சம் காலுடைந்த நாற்காலியும், பூச்செடிகள் வைக்கப்படாமல் சிறிது
வெறுமையாயிருந்தாலும் என்னைத் தினம் ஒரு தடவையாவது உட்கார அழைக்கும் பால்கனியும், என்று வீட்டிற்குள் பிடித்தவைகளைத் தனியாய்ப் பட்டியலிடாமல் பொதுவாய் "வீடென்றால்" எப்படி அது முழுமை பெறுமென்கிறது மனம். இப்படி இடத்திற்குள் இடமாய் விரிந்துகொண்டேயிருக்கின்றன எனக்குப் பிடித்த இடங்கள்.

பிடித்த மனிதர்களையாவது ஆறுபேரைச் சொல்லமுடியுமா என்று பார்த்தால் அதிலும் சிக்கல். பிடித்திருந்து பின் பிடிக்காமல் போனவர்களும், பிடிக்காதிருந்து பின் பிடித்துப்போனவர்களும், எப்போதும் பிடித்தேயிருப்பவர்களுமாய் நிறைய இருக்கிறார்கள். இதில் எதில் எந்த ஆறு பேரைச் சொல்வது:)) இந்தக் கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கையில் வந்து போன, கூடவே வாழ்ந்துகொண்டிருக்கிற மனிதர்களின் பட்டியல் நீளமானது. உற்றுப்பார்த்தால் "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒரு குழந்தை மனம் இருக்கிறது" என்று எங்கோ படித்த ஞாபகம். அந்தக் குழந்தை மனதை தங்களை அறிந்தோ அறியாமலோ வெளிப்படுத்தும் வேளைகளில் எல்லா மனிதரும் எனக்குப் பிடித்து விடுகிறார்கள். அவசரங்கள் தின்றுகொண்டிருக்கும் அன்றாட அலைச்சல்களிலும்கூட எங்காவது ஒரு இடத்தில் அன்பினால் நனைத்து நம்மை ஆச்சரியப்படுத்திவிட்டு ஓடிக்கொண்டேயிருக்கும் மனிதர்களைச் சந்தித்தே வாழ்கிறோமென்பதால் பிடித்தவர்கள் என்று சொல்லுகையில் அவர்கள் எல்லோரையுமல்லவா சொல்லவேண்டும்? நம்மை நாம் விரும்பியபடி வளர உதவிய பெற்றோர்கள்,
உறவினர்கள், நண்பர்கள் என்பதோடு நின்றுபோய்விடுவதில்லை நமக்குப் பிடித்தவர்கள். நான் பள்ளிக்குக் கிளம்பிய ஒரு காலையில் பாதிவழியில் சுற்றும் சங்கிலி அறுந்து நின்றுபோன என் மிதிவண்டியை அந்நேரத்தில் சாலையில் போய்க்கொண்டிருந்த ஒரு மனிதர் சரிசெய்து கொடுத்தபோதும், பேருந்திலிருந்து இறங்கி எதிரே வந்துகொண்டிருந்த வாகனம் பார்க்காமல் சாலை கடக்கையில் என்னை அந்த வாகனத்திடமிருந்து காப்பாற்ற கைபிடித்து இந்தப்பக்கம்
இழுத்தெறிந்த பெண்ணொருவரும், இதோ இப்போது பணி முடிந்து திரும்புகையில் பிரச்சினை செய்த என் வாகனம் சரியாகக் கைகொடுத்த ஒரு வெள்ளைக் கிழவரும் என் வாழ்வில் ஒரு முறைதான் வந்தார்களெனினும் வந்தபோது பிடித்தேயிருந்தார்கள். எனக்கென்று எதுவும் செய்யக்கூட வேண்டாம், உதிர்ந்து கிடக்கும் அன்று பூத்த பூவை மிதிக்காமல் நடப்பவர்கள், செத்துப்போய்க்கிடந்தாலும் அதை மேலும் சிதைக்க விரும்பாமல் சாலையில் கிடக்கும் அணிலொன்றுக்காய்
வாகனத்தை வளைத்து ஓட்டுபவர்கள், மழை வந்தவுடன் குடை எடுக்காமல் கொஞ்சம் நனையத் தெரிந்தவர்கள் என்று இதுபோன்ற வரிசைகளில் கண்ணுறுகின்ற மனிதர்களும் பிடித்தவர்களே! அடைக்க முடியாது அவர்களை "ஆறுக்குள்" என்னால்.

மேற்சொன்ன தனிப்பட்ட வாழ்வியல் அனுபவங்கள் தவிர்த்து எல்லோர்க்கும் பொதுவான வேறு சில விடயங்களில்(லாவது) ஒரு "ஆறு" பட்டியல் தர முயற்சித்திருக்கிறேன் கீழே. ஆனால் அவையும் இந்த "ஆறு" மட்டுமே அல்ல என்பதுதான் உண்மை.

பிடித்த சமூக சிந்தனையாளர்களில் ஆறு பேர் (இப்படி எழுதுவதுதான் சரியென்று தோன்றுகிறது)
**************************************************
பெரியார்
சேக்குவாரா
அம்பேத்கார்
காமராஜர்
ஜீவா
அன்னை தெரசா

விரும்பிப் படித்தவை அல்லது படிப்பவைகளில் ஆறு பேர்
**************************************************************
பாரதி
ஆண்டன் செகாவ்
தொ.மு.சி.ரகுநாதன்
வைரமுத்து
கல்யாண்ஜி
மனுஷ்யபுத்திரன்

பார்த்த படங்களில் பிடித்தவைகளில் ஆறு
:*********************************************
விதி
பாரதி
கருத்தம்மா
காந்தி
டைட்டானிக்
சதிலீலாவதி.

கேட்ட பாடல்களில் பிடித்தவைகளில் ஆறு
:*********************************************
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால்வார்க்க வா
மார்கழிப்பூவே மார்கழிப்பூவே உன் மடிமீது ஓரிடம் வேண்டும்
போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு
பூங்காத்து திரும்புமா ஏம்பாட்டெ விரும்புமா
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே


இப்படி ஒரு பதிவு எழுத வைத்த தெக்கிக்காட்டான் அவர்களுக்கு நன்றி. இதைப் படிப்பவர்கள் திட்ட விரும்பினால் அதுவும்
அவருக்கே:))