நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, August 24, 2006

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

"எங்க அப்பா நான் சின்ன வயசாயிருக்கும்போது ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நடந்தது, நடந்தது, நடந்துகொண்டே இருந்தது. என் அப்பாவுடனான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நின்றுகொண்டிருந்த எங்களுக்கு எதிர்காலம் பொருளாதார ரீதியாகவும்
பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் என் அப்பாவின் மரணத்திற்காகச் சட்டப்படி வந்துசேரவேண்டிய இழப்பீட்டுத்தொகை அவரின் குழந்தைகளான எங்கள் படிப்புக்குக்கூடக் கைகொடுக்கும் வகையில் வேகமாக வந்துசேரவில்லை. என் தாய் தனியொரு பெண்ணாக வருந்தி உழைத்த பணத்தில்தான் நாங்கள் படித்துக் கரைசேர்ந்தோம்" இது சிலவருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரால் அவர் அவ்வாறு பதவியேற்றபோது பேசப்பட்ட வாக்கியங்கள். நீதி கிடைக்காமல் போவது எவ்வளவு கொடுமையானதோ அதேஅளவு கொடுமையானது அந்த நீதி கிடைக்க வேண்டிய நேரத்தில்
கிடைக்காமல்போவதும். இழுத்தடிக்கப்படும் வழக்குகளில், பாதிக்கப்பட்டவன் வருந்திச் செத்துக்கொண்டிருப்பதும், தவறு செய்தவர்கள் எதுவுமே நடக்காதது மாதிரித் தங்களின் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதும் மிக இயல்பாக நடக்கிறது. குவியும் வழக்குகளை ஆராய்ந்து நீதியை நிலைநாட்டவேண்டிய கட்டாயம் மட்டுமின்றி, வழக்குகளின்
நடைமுறைகளைத் துரிதப்படுத்தவேண்டிய அவசியமும் நம் நீதித்துறைக்கு இருந்துகொண்டே இருக்கிறது.


தாமதமான நீதியாக இருந்தாலும் தனக்கு நீதி கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் தற்போது தமிழகத்தில் ஒரு பெண். வெகுசனப்பத்திரிகைகளைத் தினம் மேய்ந்துகொண்டிருக்கும் நீங்களும் அறிந்திருப்பீர்கள். செஞ்சிக்கருகில் உள்ள ஊரொன்றில் பிறந்து வளர்ந்த "இருளர்" என்னும் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த விஜயாதான் அவர். 13 ஆண்டுகளுக்கு முன்
ஏதோ ஒரு வழக்கின் விசாரணை என்று கூட்டிச் செல்லப்பட்டு ஐந்து காவலர்களால் வன்புணர்வு செய்யப்பட்டவர். படிப்பறிவோ, வெளிஉலக மனிதர்களுடன் பெரிதான தொடர்போ இன்றி வாழ்ந்துகொண்டிருந்து, இப்பாதிப்பால் போராளியாக மாற்றப்பட்டவர். வன்புணர்ந்தவர்கள் மீது புகார் கொடுக்கக் காவல்நிலையம் போனபோது அவமதிக்கப்பட்டு
வெளியேற்றப்பட்டவர். "பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்" நடத்தி வரும் சமூக ஆர்வலர் கல்யாணி போன்றவர்களின் உதவியோடு நீதிமன்றம் போனவர். வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கேட்டு லட்சங்களைப் பேரமாகப் பெற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டும் மறுத்தவர். இப்போது தன்னைக் கதறக் கதறத் துன்புறுத்தியவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருப்பது கண்டு தன் போராட்டம் வீண்போகவில்லை என்று ஊடகங்களினூடே உரையாடிக்கொண்டிருப்பவர்.

நமக்கு விஜயா மாதிரியானவர்களின் சோகங்கள் புதிதில்லை. பக்கத்து ஊரில் காவல்துறை செய்தது என்று செய்தி படிப்போம். பக்கத்து நாட்டில் இதையே இராணுவம் செய்தது என்று செய்தி கேட்போம். இவ்வளவு ஏன்? பக்கத்துத் தெருவில் நடந்துபோகும் பெண்ணை அருவருக்கும் சாடை மொழியில் அங்க விமர்சனம் செய்யும் இளைஞர்களையும் பார்த்து
நடப்போம். வீட்டிற்குள்ளேயே நடந்தாலும் "வெளிக்கொண்டுவந்து மானம் தொலைப்பானேன்" என்று பொறுத்து இருப்போம். இன்னும் அலுவலகத்தில், பேருந்தில், ரயிலில், விமானத்தில் இடைவெளிகளில் கை, கால், கண் நீட்டிப் பெண்ணின் உடல்
உரசும் உத்தமர்களைக் கண்டபடியே பயணித்து இருப்போம். "உலகில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு மணியிலும் ஏதோ ஒரு பெண் பாலியல்ரீதியிலான வன்முறைக்கு ஆளாகிறாள்" என்று ஐ.நா சபையின் மனித உரிமைப் பிரிவே சொன்னால்தான் என்ன? கடந்து போகலாம் இவை அனைத்தையும் நாம், ஸ்ட்ரிப் கிளப்பில் வேலைசெய்யும் பெண் கலாசாரத்தை மீறிவிட்ட கவலையிலும், அதிக சம்பளமுள்ள மனைவி, குறைவான சம்பளமுள்ள கணவன் என்ற குடும்பத்தில் குழந்தைகளுக்காக வீட்டிலிருக்க அக்கணவனே விரும்பி முன்வந்தாலும் அவர் பொண்டாட்டிதாசன் ஆகிவிட்டாரே என்ற கவலையிலும்.

பின் குறிப்பு:
************
தலைப்பு இப்படி வைக்கக் காரணம் விஜயாதான். "இருளர் பாதுகாப்பு சங்கத்தின்" பிரச்சாரப் பாடல் ஒன்று

"மனுசங்கடா நாங்க மனுசங்கடா
ஒன்னப்போல அவனப்போல
எட்டுசாணு ஒசரமுள்ள மனுசங்கடா"
என்று தொடங்குவதாகத் தன் செவ்வி ஒன்றில் கூறியிருந்தார் விஜயா. அதற்குள்ளிருக்கும் துயரம் மனதை என்னவோ செய்து இடம்பிடித்துக்கொண்டது. முழுப்பாடலையும் அறிந்துகொள்ளவேண்டும்போலவும் உள்ளது. நண்பர்கள் யாருக்கேனும் அப்பாடல் தெரிந்தாலும் எழுதி உதவினால் நல்லது.

Sunday, August 06, 2006

நல்லதொரு வாரம்

நல்லதொரு வாரமா இல்லையா என்று நாங்கள்தானே சொல்லவேண்டும்? அதையும் நீயே சொல்லிக்கொள்வாயா? என்று கேட்கிறீர்களா:)) உங்களுக்கு எப்படிப்பட்ட வாரம் என்று நீங்கள்தான் சொல்லப்போகிறீர்கள். இது எனக்கு:)) உண்மையில் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்த வாரம் எனக்கு நல்லதொரு வாரம்தான். அமெரிக்கா வந்திருக்காவிட்டால் இணையத்தமிழ் எனக்கு பரிச்சயமாகியிருக்குமா என்பதே சந்தேகம்தான். ஓடிக்கொண்டேயிருந்த வாழ்க்கை ஊரில் எனக்கு. ஓட்டமும் வெற்றியும் மட்டுமே இலக்காயிருந்தபோது என்னைத் தெரியப்படுத்திக்கொள்வதில்தான் குறியிருந்ததே தவிர நான் தெரிந்துகொள்ளவேண்டியவை மீதான தேடல் கிடப்பில் போடப்பட்டது. காலம் வழங்கும் முடிவுகள் சிலவற்றில் பல நல்ல தொடக்கங்களும் நிகழலாம். அப்படிக் கிடைத்ததுதான் எனக்கு இணையத்தமிழும். என்னிடமிருப்பவைதான் வைரங்கள் என்ற
கர்வமெல்லாம் இல்லாமலில்லை நுழைந்தபோது. இங்கே வந்து உரசிப்பார்த்துக்கொண்டபின் உணராமலில்லை அவற்றில் பலவும் வெறும் கண்ணாடிகள் என்று. எங்கெங்கோ சுற்றித் தமிழ்மணம் வந்தநாளில் வேறெங்கும் படித்திராத சில நண்பர்களின் எழுத்துக்களைக் கண்டேன். அவை எனக்கான மொழியிலும், நான் உண்மைகள் என்று
நம்பிக்கொண்டிருந்தவைகளைத் தாண்டியும் சில உண்மைகளிருப்பதைக் காட்டுபவையாகவும் இருந்தன. பிறகு பல்துலக்குவது, சாப்பிடுவது, தூங்குவதுபோல் தமிழ்மணம் வந்துபோவதும் இயல்பாகிப்போனது.

ஆனால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது எனக்கு இயலாததாகவே இருந்தது. எப்போதாவது ஒரு பதிவிடுவதும், பிறகு மற்ற நண்பர்களின் எழுத்து வாசிப்பிலேயே தொலைந்துபோவதுமாயிருந்திருக்கிறேன். அப்படியிருந்தவளைத் தொடர்ந்து
ஒருவாரம் எழுதவைத்துவிட்டது நட்சத்திரப்பொறுப்பு. பதிவிடுவது மட்டுமின்றி, இடப்படுகிற பின்னூட்டங்களை உடனே பிரசுரிக்கவும், முடிந்தவரை அன்றன்று இடப்படும் மற்றவர்களின் இடுகைகளைப் படிக்கவும், மொத்தத்தில் தமிழ்மணத்தில் ஒருவாரத்திற்குத் தொடர்ந்திருப்பதென முடிவெடுத்துக்கொண்டிருந்தேன். அதை ஓரளவு செய்யமுடிந்ததில் மகிழ்ச்சி.

எல்லாவற்றிற்கும் சில பக்கவிளைவுகள் இருப்பதுபோல் இதற்கும் இருந்தன. கடந்த ஒருவாரத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு வீட்டிலிருந்துகொண்டு அலுவலுக்கும், தமிழ்மணத்துக்கும் போய்க்கொண்டிருந்தவள், போனவாரம் பூராவும்
தமிழ்மணத்திலிருந்துகொண்டு வீட்டிற்கும், பணிக்கும் சென்றுகொண்டிருந்திருக்கிறேன்:)) தூர இருக்கும்போது அன்பு பெருகும் என்பது உண்மையாகிப்போனது. ஒவ்வொரு நிகழ்வையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிந்தது எந்த எதிர்வினையுமின்றி. இல்லாத காய்கறியின் ஏக்கமின்றி, இருந்ததை வைத்துச் சமைக்க முடிந்தது. அடுப்பில் போட்டு
வைத்துவிட்டுப் பின்னூட்டம் ஒன்றிற்குப் பதில் சொல்ல வந்து, திரும்பிப் போகையில், வெந்துகொண்டிருந்த உருளைக்கிழங்கு கடைசிச் சொட்டுத் தண்ணீரில் கருகிவிடாது காத்திருந்ததற்கு நன்றி சொல்லிக்கொண்டே தோலுரிக்க முடிந்தது. பதிவிற்காகக் குறிப்பெடுத்தபோது வெடிச்சத்தம் கேட்டுப் பதைத்து ஓடினால் தண்ணீர் முழுதும் ஆவியானதால் சூடுபொறுக்காமல் வெடித்திருந்தது முட்டை. அளவுக்கு மீறி வதைத்துக்கொண்டிருந்தால் ரௌத்திரம் பழகும் முட்டையுமென்று ரசித்துக்கொண்டே நிற்க முடிந்தது. எதையெடுத்தாலும் "எடுக்காதே" என்ற எதேச்சாதிகாரப் போக்கை விட்டு, கேட்ட
மாத்திரத்தில் பெரிய டப்பா நிறையப் பவுடரை எடுத்துக் குழந்தையின் கைகளில் கொடுக்க முடிந்தது. பதிவு எழுதி, முடித்துப் பார்த்தால் தலையிலிருந்து பாதம் வரைக்கும் அவன் சுத்த வெள்ளையில் நின்றபோதும், பவுடர் தீர்ந்ததென்ற பதட்டமின்றிக் கட்டிக்கொண்டு சிரிக்க முடிந்தது. "அம்மா அம்மாவாக இல்லாமல் நட்சத்திரமாகவே இருந்தால் நல்லதென" அவன் நினைப்பதுமாதிரி உணர முடிந்தது. வீட்டில் என் அருகாமை குறைந்த இருவரின் சுதந்திரம் ஆனந்த சுதந்திரம் ஆனது கேட்டு "பாவம் இதை அவர்களுக்கு ஒருவாரமேனும் தரமுடிந்ததே" என்று தன்னிறைவு கொண்டு மகிழ முடிந்தது.

இப்படி ஒரு வாரம் எனக்கு அமைய உதவிய தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும், என் பதிவுகளை வாசித்த நண்பர்களுக்கும் நன்றி.

முக்கியமான பின்குறிப்பு:
********************

இந்த வாரத்தைக் கொடுங்குளிர் மாதமொன்றில் வழங்காமல் இந்த இனிய வெயில்காலத்தில் வழங்கி ஒருவாரமாக என் மாலைநேர வெளிப்போதலை முடக்கிய மதிக்கு மட்டும் நன்றி மட்டுமின்றி சிறிய கண்டனமும் சென்று சேர்வதாக:))

ஒரு அமெரிக்கப் பெண்மணியின் பதில்கள்

நட்சத்திர வாரத்தின் இறுதிப்பதிவாக இதை இடுகிறேன். ஒரு சாதாரண அமெரிக்கப் பெண்ணின் வாழ்வு எத்தகையது என்று அவரே சொல்லுகின்ற விடயங்கள் இவை. ஒரு மேலைநாட்டுப் பெண்ணின் வாழ்வியல் அழகுகளும், சிக்கல்களும் இதில் தெரியலாம். இதற்காக நேரம் ஒதுக்கிப் பேசியமைக்கும், தான் பேசியதை இங்கு நான் பிரசுரித்துக் கொள்ள அனுமதித்ததற்கும் கிம்பர்லிக்கு நன்றி. மொழிபெயர்ப்புச் செய்யாமைக்கு அவகாசமின்மை மட்டுமின்றி அப்படிச் செய்கிறபோது சில இடங்களை அவர் சொல்லவருகிற அதே பொருளில் கொண்டுவந்து சேர்க்கமுடியுமா என்ற சந்தேகமும் காரணம். எனவே ஆங்கிலத்திலேயே உள்ளிடுகிறேன்.

Where did u born and tell something about your childhood days? And also about your family now?

I was born in Menominee, MI and raised in Marinette, WI, a small town with a population of 11,000. I grew up in a happy home with a younger sister, brother and a dog. My father had a job transfer when I was 13, so we moved to Green Bay, WI. It was a very difficult to leave my friends in Marinette and move to such a large city. I had a few difficult years of adjustment, and then when I became a freshman I started to meet new people and we became great friends throughout my high school years.

My family now consists of my husband Michael, my 23 year-old daughter Wendy, my two step sons, Jason and Tyler, and two cats and a horse. My mother now lives in Florida, my father passed away four years ago this summer. My sister and brother both live in Green Bay, and are married with children.

Could u tell something about your hobby, favorite movie etc?

My hobbies include taking care of my horse Max, reading and watching movies that are full of suspense and mystery.

What do u do in weekends, how often u travel?

On the weekends I enjoy spending time with my horse, riding with my husband on his Harley, and just relaxing and reading.

What is your job and tell something about it?

I work at Kohl’s Department store as a Point of Sales Supervisor. My duties include answering questions that the register operators may have during their transactions, financial input and output of the registers, and I am also specially trained to give new associate orientations and audio register training.

What is your first job? At what age you started working?

I started babysitting for family members and neighbors at the age of 11. My first real job was at Ponderosa Steakhouse at 16 years old.

Did you get equal opportunities as men when u applied for jobs?

This is hard for me to answer this question, because I have never had to compete with men for any job position I have ever held.

Do you think you are competing enough with men at workplace?

At my current job everyone starts at the same base pay, male or female.

Do you have any role models in your life? And what is your dream which should come true?

My role model is my mother; she was one of the only working mothers in my neighborhood where I grew up. She bought and ran her own business from the time she was 40 until she retired at age 62. My mother led by example, always believing in me and showing me how to be independent. My dream is financial independence and to be debt free someday.

When do you wake up in the morning? What are your normal day to day activities? Tell about your typical day.

A normal day for me is getting up at 5:30 am with my husband Mike, eating breakfast together and getting him off to work for 6am. If I am not scheduled for work at Kohl’s, I will do some chores around the house, and then head out to see Max around 10 am. After I get home I will do laundry, pay bills, make Mike’s lunch for the next day and get ready for work if I am working nights.

The working women here, how they manage their family and work at same time?

I only had to work part time when my daughter was young. Eventually when she was in school full time, I went to work full time. So I was home with her in the evening, and did the majority of the household chores on the weekends.

Whether women prefer to be working woman or to be stay at home mom?

There is a lot of guilt in either one you do. If you are working women I feel in America you have the guilt about you are at home not raising your children. If you do become stay at home mother, you have a lot of guilt about not being out in the working world. I had to go through it myself with my daughter. So I worked part time. It took care of whole lot of things. I was home quite a bit with my daughter, but yet I was still able to go out and contribute to the working world and do something for me. That was important to me. I think that made me a better mother.

What are the issues working women face at home? How do they tackle these?

Again it is the guilt. I feel guilt about not being home. I know for fact that my husband did not. The gents don't feel the guilt that women feel. I don't know if that is society making us feel like that or it is self inflicted. It was different for me again, because my mother worked. My mother owned her own business 30 years ago. She was ahead in the curve. She did very well and supported the family. My dad quit his job to work for my mother. He could help her and make her business grow which was something unusual. But that was tough for her to too, because she was not home for us. I had to do a lot of the raising of my younger siblings. I know now she feels guilty about it. She really shouldn't. She had to do what she had to do.

All over the world, considerable amount of inequalities exist between men and women in various stages of their life. Do you find anything like that in your society?

Even in my marriage, my husband works very hard. But he doesn't think anything about going out with guys or doing something with men. I don't know if they do it in India? They just do it. They assume that the wife will take care of the children and wife will be there to do grocery shopping and take care of the house runs. I think once they commit to the marriage the family should come first and they should work as a team. They can ask "Dear do you have any plans? Is it alright with you if I do something on Saturday?”. My husband now does that. But at the beginning he didn't. He has come a long way.

There are two different lives for woman before and after marriage (of course, for men too). Which way life after marriage differs for woman?

Definitely, two different life styles exist for women in America before and after marriage. I was single for a while. I can do whatever I want. You don't need to answer anybody. You are in control of your own destiny. If you become married it changes you. You become part of a team/partnership. You need to keep the other person's feelings, thoughts and opinions in the forefront. You can't operate as a single unit anymore. Some days are difficult. Some days I like to say "I had enough now, I want to be single again for a week (laughing)". I think that is one of the biggest ways life changes after marriage. Also the fact that they have to make the decision then who is going to stay at home, who is going to raise the children. How you are going to work that between you. From what I am reading now, that is changing little bit. I do see there are a lot of men now coming home, staying home and being more involved in raising the children, which I think is wonderful. I think they understand now that is ok for men to stay at home and raise the children if the women has better carrier or if it works for them as a couple. I think every individual couple makes their own decision and society as a whole should support it. I think till recently that wasn’t happening. I think society always backed men should be the one out making the money and the women who is the one raising the family. It is nice to see that is changing.

Women do not hesitate to break their marriage at any stage here when they feel they are not satisfied with their life. Is it true?

Yes. Women do not hesitate to break the marriage. I have been divorced myself. Actually this is the third marriage for me. My first marriage was very difficult. I stayed in it as long as I could because of my daughter. But, yet I know, I would be ok if I did end the marriage, and we did. I was ok and was single for seven years. I raised my daughter myself. He was not involved. I did receive money from him. But as far as him being involved in raising our daughter, he chose not to be. So, I do think, now, if women feel the marriage is not working they end the marriage. What they are saying statistically 50% marriages end in divorce. That is huge. During my mother’s days, they stayed. They felt they had no reason because of the fact that lot of them did not work. They felt what are they going to do without their husband to support them.

What are the challenges that divorced women face here?

Of course the first challenge is money. That is the huge thing. Especially, if you are raising children and if you do not get child support. Because women do not make what men make. Trying to raise children without any support is really difficult to keep them in the lifestyle that they really should have. I was lucky, because I did receive child support. I was able to support my daughter. She was able to do things that she wanted. I have personal friends that never received a dime of support. My friend raised her daughter 18 years on her own. Never got a dime. That guy doesn’t live in the state. One of my coworker here only receives fifty dollar per month for two children.

What about law here regarding maintenance of children?

Law is there. But he refuses to keep a job. When he does work, he doesn`t work very many hours. By the time it is all set and done, she only receives around fifty dollars a month and trying to raise two boys with her income.

Do the divorced women receive maintenance?

I received maintenance in the first divorce for three years. I could have received because we were married for 10 years. I could have received maintenance for another year if I chose to go to school. I worked for my family at that time; I didn’t have the need to go to school. Some women doesn’t receive maintenance. They will just take child support for their children and do the rest on their own. I chose to take maintenance, because I supported his business. I felt he deserves to give some money back for what I have supported for him. But I think as far as in society being a single woman here is very difficult. If you have noticed everything here is for couples. I always felt like a third wheel. All my friends are married. They always included me in everything. But I always felt out of place being divorced. Even though it is so common, I felt like failure, because I couldn’t keep my marriage. It is a guilt thing again.

Do women here face sexual harassment anywhere in their life?

I personally have never come across sexual harassment. I worked in many places, it just never happened in my life.

In workplaces I think the law is serious, what about other public places like schools?

Now they don’t tolerate it at all in schools. They follow zero tolerance for that which I think is a good thing. In our days, a lot of us, girls, were harassed in high schools as the girls are developing and they are changing, the boys would tease them. This is hard on the girls self esteem. They don’t just tolerate that anymore.

What are the issues that old single women face?

That is tough. That will be a good one for my mom. She is more than 6o years old. She is single and widowed. Luckily she does have an income as she owned a business. Even after she sold it she is getting income from that. I think the biggest issue a single old woman face is poverty in this country. If they were not prepared financially, it is a huge thing. I am thinking now, if something happens to my husband it will be very difficult. Watching my mother if she didn’t have her business, what she gets from social security and Medicare, she would probably at poverty level or she would have continued to work. I think that is very sad for elderly in this country. The government is not supporting as much it should. Lot of elderly people has to choose between paying for the medication and not taking it. I think that is ridiculous. That one makes me angry. Cost of medication and the hospital care in this country is costly. I have had an ongoing bill to Aurora hospital for five years, because I can not afford health insurance at this point. So I just continue to pay him, pay him and pay him. The country is perceived to be rich, but we have many many starving people ourselves. There are children in this town that we read in the paper that didn’t eat for days.

Friday, August 04, 2006

பழைய கவிதைகள்

தொட்டிச்செடி
****************


வாங்கிவந்தவிதை
பொய்க்கவில்லை
சமையலறை ஜன்னல் மேடையில்
சூரிய ஒளி ஈர்த்து
ஊற்றிய நீர் குடித்து

முளைத்துவிட்டது

அரும்பிய துளிர்கள்
கண்களைச்சுண்டியிழுத்த

நாளொன்றில்
வருபவர்களுக்கு அழகுகாட்ட
வரவேற்பறைக்குத் தொட்டியை

நகர்த்தினேன்

மொட்டுக்கள் இதழ்விரித்தபோது
பூஜைப்பொழுதுகளில்
பறித்துக்கொள்ள

வசதியாயிருக்கட்டுமென
சாமியறை ஜன்னலின்

வெளிப்புறமாய் வைத்தேன்

பயன்கொடுக்கும் பருவம் கழிந்தபின்
தொட்டிச்செடியின் இருப்பிடத்தை
கொள்ளையின் ஒருமூலைக்கு

மாற்றினேன்

வானம் தூறல்தெளிக்கும் காலத்தில்
நேர்த்தியாகக் கத்தரித்துவிட்டு
மொட்டைமாடியில் உட்கார

வைத்திருக்கிறேன்

மழைநீரின் ஸ்பரிசத்தில்
வேகமாய்ப்பெருகும்

இளமென்துளிர்கள்
தொட்டுச்செல்லும் காற்றிடம்
கைகளாட்டிச் சொல்லிக்கொண்டிருக்கின்றன
இன்னுமொருபிறப்பு

செடியே என்றாலும்
தொட்டிச்சிறைக்குள்

அதுவேண்டாமென்று

வேர்கள்நீட்டி கிளைகள்விரிக்க
வேண்டியசுதந்திரம் கிடைக்குமொரு நிலத்தில்
விழட்டும் அவ்விதை
என்கைகளில்

அகப்படாமல்.



பனிப்பொம்மைகள்
***********************

வெளிப்போதலை முடக்கும்
கொடுங்குளிரைச் சபிக்காமல்
நன்மை தேடி உணர்ந்து
பொம்மை செய்து விளையாடின
வெள்ளைக்குழந்தைகள் பனிமணலில்

சரியாக வரவேண்டுமேயென்று
நாய் செய்தபோது வாலுக்கும்
யானை செய்தபோது காதுக்கும்
படைத்தலின் பரிதவிப்போடு
போராடிச் சிவந்தன
பிஞ்சுக்கரங்கள்

போகும் வரும் மனிதர்கள்
உருவுகொண்ட பொம்மைகளை
பார்த்துவிட்டுச்சிந்தும்
இதமானவார்த்தைகளை
குடித்து மலர்ந்தன சின்னக்கண்கள்

பத்திரமாக
இருக்கின்றனவாயென
ஒவ்வொருநாளும்
ஓடோடிவந்து
பொம்மைகளைக்கேட்பதை
கடமையாய்க் கொண்டன

காலம்மாறும்
உலகினில் கூடவே
காட்சிகள் மாறும்
தத்துவம்புரிய
மழலை
மனதுக்கெப்படி முடியும்?

பறவைக்குரல்களின்
பள்ளியெழுச்சியில்
மெல்லவிழிக்கும்
வசந்த இளங்கதிர்
தொட்டுருக்குகின்றது
பனிப்பொம்மைகளை
பதைபதைப்போடு
பார்த்துநிற்கின்றன
குழந்தைகள்
ஏதும் செய்யவியலாப்
பெருஞ்சுமையோடு

மிச்சமின்றிக்
கரைந்துபோகும்
நாளுக்கப்புறமும்
குழந்தைகளோடு
கனவில் பேசும்
அப்பனிப்பொம்மைகள்
இன்னொரு குளிர்காலம்
மீண்டும் பனிமணல்
கொடுக்குமென்று.

Thursday, August 03, 2006

ஊகங்கள் கற்பனைகள் உண்மைகள்

சமீபத்தில் துளசிதளத்தில் இடப்பட்டிருந்த "அம்மா என்றால் அன்பு" பதிவும், பின்னூட்டங்களும், அதில் பத்மாவும், மதியும் சுட்டிக்காட்டிய குறிப்புகளும், அந்தக் குறிப்புகளின் ஊடாக பிறகு எனக்கு நானே எழுப்பிக்கொண்ட கேள்விகளும், அதைத்
தொடர்ந்து இணையத்தில் தேடி எடுத்த செய்திகளும்தான் என்னுடைய இந்தப்பதிவுக்கு அடிப்படை. ஒரு கைக்குழந்தையின் தாய் இரவில் தொடர்ந்தழுகின்ற தன் குழந்தையைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போய் அது எரிச்சலாக மாறிச்
செய்ய ஒன்றும் தெரியாத இயலாமையில் அல்லது ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கிக் கட்டிலின்மீது வீசியதில் அது இறந்துபோய்விடுகிறது. பிறகு தாய் அழுகிறாள். இதுதான் பதிவு. பதிவிலேயே post natal depression பற்றியும் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. நம்முடைய ஜனரஞ்சக இதழ்களிலும் இப்போது மனச்சோர்வு, மனஅழுத்தங்கள் பற்றிய கட்டுரைகளும், அது குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள் என்று ஒவ்வொரு பிரிவினரிலும் வருவதற்கான வாய்ப்புகள் எப்படி உருவாகின்றன என்பதெல்லாமும் எழுதப்படுகின்றன. ஆனாலும் பெண்களைத் தாக்கும் இக்குறிப்பிட்ட பேறுகால மன அழுத்தம்
பற்றி இன்னும் பெரிதான விழிப்புணர்வு ஏற்படவில்லையென்றே தோன்றுகிறது. இந்நிலையில் மேலைநாடுகளில் தெரிந்திருக்கிற, பேசப்படுகிற இப்பிரச்சினை என்னவென்றோ அது எவ்வளவுதூரம் பாதிக்கிறதென்றோ அது நம் மக்களிடையேயும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதாவென்றோ அதுகுறித்துச் சொல்லப்படும் பதிவின் பின்னூட்டங்களில் யோசித்தால் அதுதான் நமக்குப் பயனுடையதாக இருக்கமுடியும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? இது மேலைநாடென்பதால்தான் நடக்கிறதென்கிறோம். மேலைநாட்டுத் தாய்களுக்குக் குழந்தைகள் மீது அன்பில்லை என்கிறோம். ஒரு தமிழச்சியால் இப்படிச் செய்யமுடியாதென்கிறோம். நம் ஊரில்தான் வறுமை, அங்கு அப்படியில்லை, எனவே கொழுப்புக்குத் தண்டிக்கச் சொல்லிச் சாமியைக் கூப்பிடுகிறோம். மனிதாபிமானம்
இல்லாமைக்குத்தான் post natal depression என்று பெயரென சொந்த வரையறை கூடக் கொடுக்கிறோம். இவையெல்லாம் நம் ஊகங்கள், இப்படித்தான் இருந்திருக்கவேண்டுமென்ற கற்பனைகள். ஆனால் post natal depression பற்றிய உண்மைகளுக்கும் இவற்றிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது உலக அளவிலான பிரச்சினை என்கின்றன மருத்துவ
ஆராய்ச்சிகள். மாசாசூட்ஸ் ஜென்ரல் ஹாஸ்பிடலின் உளவியல் மருத்துவத்துறையின் இணை இயக்குனரும், பல்வேறு மருத்துவக் கழகங்களின் உறுப்பினருமான டாக்டர் ரூடா நோநாக்ஸ் இது குறித்தான தன் ஆய்வு நூலில் மருத்துவ வார்த்தைகளில் post partum depression என்று அழைக்கப்படக்கூடிய பிரசிவித்த தாய்மார்களைத் தாக்கும் நோய் பற்றி
இவ்வாறு கூறுகிறார். அது அவரின் வார்த்தைகளில் அப்படியே:

"During the postpartum period(பிரசவத்தின் பின்னான காலம்) upto 85% of women experience some type of mood disturbance. For most women, symptoms are transient and relatively mild(ie, postpartum blues); however few women experience a more disabling and persistent form of mood disturbance (eg, postpartum depression, postpartum psychosis).

1. Postpartum depression occurs in 10-15% of women in the general population.

2. Women at highest risk are those with a personal history of depression, previous episode postpartum depression, or

depression during pregnanacy, or depression during pregnanacy.

3. typically postpartum depression develops insidiously over the first 3 postpartum months.

4. Signs and symptoms are clinically indistinguishable from major depression that occurs in women at other times. Symptoms may include depressed mood, tearfulness, insomnia, fatighu, appetite disturbance, suicidal thoughts and recurrent thoughts of death.

5. Anxiety is prominent, including worries or obsessions about the infant`s health and well being.

6. The mother may have ambivalent or negative feelings toward the infant. She may also have thoughts about harming the infant. "

இவ்வளவும், இதற்கு மேலும் இருக்கிறது இதுகுறித்து. இதில் 4 ஆவதாகச் சொல்லப்பட்டிருக்கிற அறிகுறி நிலையிலேயே இது கண்டுணரப்பட்டுத் தேவையானவை செய்யப்பட்டுவிடுகின்றன பெரும்பாலும் இங்கெல்லாம். இவை கண்டுணரப்படாது விடப்படுகிற, சரியாக்கத் தேவையான மருத்துவம் மற்றும் வீட்டுச் சூழ்நிலைகளில் இல்லாத பெண்கள்தான் இதன் 6 ஆவதான சிந்தனைவரை போகிறார்கள். அதுவும் இதில் கவனிக்க வேண்டியது, சிந்தனைவரையே இழுத்துச் செல்கிறது இந்த postpartum depression. அந்தமாதிரி செய்துவிடுகிறவரை போகிறவர்களை இன்னும் தீவிரவமாகப்
பாதிக்கப்பட்ட நிலையான postpartum psychosis வகையைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். மருத்துவனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை செய்யப்படவேண்டிய தீவிரமான நிலை இது. மிதமான சோர்வுநிலையில் இருக்கும் பெண்கள் வெளிப்படையாக இதைச் சொல்லாமலும், அது கவனிக்கப்படாமலும் இருக்கும்பட்சத்தில்கூட அவர்களிடம் வளரும் குழந்தைகளில் இது சில பாதிப்புக்களை சிறிய அளவிலேனும் ஏற்படுத்துமென்கிறார்கள். சரியான வயதில் பேசக்கற்றுக்கொள்ளாமை, மற்ற குழந்தைகளுடன் சுலபமாகக் கலந்து விளையாட முடியாமை போன்றவை அவை.

இதற்கான காரணங்களாக பலவகைகளைக் குறிப்பிடுகிறார் ரூடா நோநாக்ஸ். பிரசவித்தின்பின் உடனடியாக மாற்றமடைகிற ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள், (hormonal factors) குடும்பப் பிரச்சினைகள் (psychosocial factors) , மூதாதையருக்கு
இருந்து அதனால் வருவது என்று பல காரணங்கள் இருக்கின்றன. இதில் இரண்டாவதான psychosocial factors பற்றி அவர் வரிகளை அப்படியே கவனிக்க வேண்டியது முக்கியமானது.

"Women who report inadequate social supports, marital discord or dissatisfaction are more likely to experience postpartum depression"

என்கிறார். இதற்குள் இருக்கும் பொருள்களை நம் சமூகத்தோடு பொருத்திப்பார்த்தால் தெரியும், நம் ஊரிலும் இது இருக்கிறதா இல்லையா என்பது. கண்டுணரப்படவில்லை என்பதே உண்மை. இங்கு வந்து, பிரசவித்த பின் தொடர்ந்த முதல்மாத follow up முழுதிலும் என்னிடம் "சோர்வு ஏற்படுகிறதா? குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிறாயா?
பாலூட்டுகிறாயா? தூங்குகிறாயா? எத்தனை மணிநேரம் தூங்குகிறாய்? மன அழுத்தம் ஏதுமில்லையே?" என்றே கேட்டுக்கொண்டிருந்த என் மருத்துவர் மற்றும், அவர் குழுவினரிடம் எல்லாக்கேள்விகளுக்கும் மகிழ்ச்சியாகப் பதில் சொல்லிவிட்டுக் கடைசிக் கேள்விக்கு மட்டும் "குழந்தை பிறந்தால் மனமகிழ்ச்சிதானே வரும்? மனஅழுத்தம் பற்றியெல்லாம் கேட்கிறார்களே! என்ன ஊரடா இது!" என்று எரிச்சல்பட்டுக்கொண்டே ஒரு வார்த்தையில் பதில் சொல்லியிருக்கிறேன் நானும். பிறகு நாட்கள் செல்லச்செல்ல குழந்தை படுத்திய நாட்களில் காரணமின்றிக் கணவரிடம் எரிந்து விழுந்த என் அனுபவத்தையும், தோழியர் சிலரின் பிரச்சினைகளையும், இதோ இப்போது இரண்டுநாட்களாக இது குறித்த பல்வேறு ஆய்வுகளடங்கிய கட்டுரைகளைப் படித்துத் தெரிந்துகொள்வதையும் வைத்துக் குறைந்தபட்சம் ஒரு முழுமையான புரிதல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது ஏற்படுகிற சமயத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களையும்.

நான் சிறுவயதாயிருந்தபோது குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்த அக்கா ஒருவர் "எப்பப் பார்த்தாலும் அழுதுக்கிட்டே இருக்குது இது. கொண்டுபோய்ப் புங்கங்கரையில எறிஞ்சிட்டு வந்தரலாம்னு தோணுது" என்று அவரின் அம்மாவிடம் சொன்னதை அங்கு விளையாடிக்கொண்டே கேட்டிருக்கிறேன். தோட்டத்துக்குப் போகும் அந்த அக்காவின் அம்மாவைப் பார்த்து "சாயந்தரம் சீக்கிரமே வந்துரு, இதவெச்சுக்கிட்டு என்னால சீராழிய முடியாது" என்று சண்டைபோட்டதையும் பார்த்திருக்கிறேன். வெய்யிலில் வேலை செய்துவிட்டு வந்த என் அத்தை ஒருவர் வீட்டிற்குள் வந்ததும் படுத்துக்கொண்டு
கெக்கெபிக்கே வெனச் சிரித்துக்கொண்டிருந்த தன் 3 மாதக் குழந்தையை எடுக்கப்போனபோது என் அம்மாச்சி "இப்பத்தான் குளிச்சு வெச்சிருக்கேன், நீயும் குளிச்சிட்டு வந்து அப்பறம் எடு, வெய்யில்ல போனதுக்கு வேத்துக்கிடப்பே" என்று சொன்னதற்கு "என் புள்ளைய எப்ப எடுக்கனும், எப்ப எடுக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியும் யாருஞ்சொல்ல
வேண்டியதில்லை" என்று எரிந்து விழுந்ததைப் பார்த்திருக்கிறேன். மனநலம் குன்றியிருந்த தாத்தா ஒருவரின் மகள் எனக்குச் சித்தி முறை. அவர் தன் பிரசவத்தின் பின் திடீரென மனநலம் குன்றிப்போய் மிகத் தீவிரமாகவும் பாதிக்கப்பட்டுக் கடைசியில் குழந்தை இறந்து, பின் சிலமாதங்களில் அவரும் தற்கொலை செய்து இறந்த அந்த வீடின் துக்கத்தைப் பார்த்திருக்கிறேன்.

அந்த அக்காவின், அத்தையின், சித்தியின் பிரச்சினைகள் என்ன? அக்காவுக்கு அவரின் முன்கோபம் காரணம் என்றும், அத்தைக்கு அவர் ஒரே பிள்ளையாக வளர்ந்ததன் திமிர் என்றும் சித்திக்கு விதி என்றும்தான் அப்போது எனக்குச் சொல்லபட்டது. ஆனால் இப்போது ரூடா நோவாக்ஸ் சொல்லுகின்ற உண்மைகள் அத்தனையும் அவர்களோடும்
பொருந்தியிருந்தது புரிகிறது. இங்கே postpartum depression மட்டுமல்ல, கருவுற்ற காலத்திலும் ஏற்படும் உளவியல் மாறுபாடுகளையும் கவனிக்கச் சொல்கிறார்கள். அப்போதும் இக்காரணங்கள் கருச்சிதைவு, குறைப்பிரசவத்தில் கொண்டுபோய்விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை வராமல் தடுக்க ஒரு தாய்க்குக் கூறப்படும் அறிவுரைகள் இவை;

1. Try to get as much rest as you can. Try to nap when the baby naps.

2.Ask for help with household chores and nighttime feedings. Ask your husband or partner to bring the baby to you so you can breastfeed. If you can, have a friend, family member, or professional support person help you in the home for part of the day.

3. Stop putting pressure on yourself to do everything. Do as much as you can and leave the rest.

4.Talk to your husband or partner, family and friends about how you are feeling..

5. Do not spend a lot of time alone. Get dressed and leave the house. Run an errand or take a short walk.

6. Spend time alone with your husband or partner.

7. Talk with other moms so you can learn from their experiences.

8.Don`t make any major life changes during pregnancy. Major changes can cause unneeded stress. Sometime big changes cannot be avoided. When that happens, try to arrange support and help in your new situation ahead of time.

தாயாகும் ஒரு பெண்ணில் ஏற்படும் மாற்றங்களுக்கு மருத்துவம் கூறும் இவ்வளவு உண்மைகள் அடிப்படையாக இருக்கின்றன."தாய் என்றால் பொறுமையின் சிகரமாக இருக்கவேண்டியவள், அப்படியில்லாதுபோனால் அவள் நல்ல தாய் இல்லை" என்பது
போன்ற பெண் மீது சுமத்தப்படும் தியாக பிம்பங்களுக்குள் மூழ்கிக்கொண்டும், கரு கலைந்துபோனால் ஏழரைச்சனி என்று எள்தீபம் போட்டுக்கொண்டும், அவள் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தால் உடனே பேயோட்டிக்கொண்டும் இருக்கிற நம்
அளவுகோல்களை வைத்துக்கொண்டு ஒரு மேலைநாட்டுப் பெண்ணை அளக்க முயற்சிக்கிறோம். எப்போதும் கற்பிக்கப்பட்டவைகளையே பேசிக்கொண்டிருக்கும் நாம் கற்கும் ஆவலில் பேசுவதில்லையோ!

Wednesday, August 02, 2006

தேடும் முகவரிகள்

வேலைகள் பிடுங்கித் தின்றதால் இன்றைய நாளுக்கென்று புதிய பதிவு ஒன்றும் எழுதமுடியவில்லை. சில குறிப்புக்களோடு எழுதவேண்டிய பதிவொன்றை ஆரம்பித்துப் பாதிக்குமேல் தட்டச்ச அவகாசமில்லை. நாளையோ பிறகோ முடித்தபின்
உள்ளிடுகிறேன். அப்புறம் என்ன செய்யலாம்? பேசாமல் இதையே இன்னும் கொஞ்சம் நீட்டி ஒரு விடுப்பு விண்ணப்பப் பதிவாகப் போட்டுவிட்டால் அதுவே இன்றைய பதிவாகிவிடாதா என்றெல்லாம் மனம் யோசிக்காமலில்லை:)) ஆனால் நண்பர்களின் வருகையும், ஊக்கமும், தரும் உற்சாகம் அப்படியொரு ஒப்பேத்து வேலை செய்யவும் அனுமதிக்கவில்லை.
அதனால் இப்படி யோசித்தேன். முன்பு "தோழியர்" என்னும் பெண்களுக்கான கூட்டு வலைப்பதிவில்தான் (ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம்) என் முதல் "தமிழ்மணப்" பயணம் ஆரம்பித்தது. அங்கு "தேடும் முகவரிகள்" என்ற தலைப்பில் ஒரு
தொடர் ஆரம்பித்து அது நண்பர்களின் ஆதரவோடு நன்றாகவும் போய்க்கொண்டிருந்தது. 7 பகுதிகள் எழுதினேன் என்று நினைக்கிறேன். இடையில் ஏற்பட்ட பயணங்கள் மற்றும் சில மாற்றங்களால் நின்றுபோனது. அதை மீண்டும் தொடரலாமா என்றும் யோசனை இருக்கிறது. அதற்குள் "தோழியர்" வலைப்பக்கமும் நின்றுபோனது. எனவே முதல்கட்டமாக அங்கு
எழுதியவற்றை இந்த வலைப்பக்கத்தில் சேமிக்கத் துவங்க வேண்டும். அப்படியொரு முயற்சியாகவும், இன்றைய நேரநெருக்கடியாலும் அதிலிருந்து ஒரு பதிவை இங்கு மீள்பதிவாக இடுகிறேன் இன்று. அங்கேயே படித்துவிட்ட நண்பர்கள்
சொன்னதையே சொல்லும் அறுவையைப் பெரிய மனது பண்ணிப் பொறுத்துக்கொள்ள வேண்டும்:))

தேடும் முகவரிகள் 3 ஆவதாக அப்போது எழுதப்பட்ட பதிவு இது.
***********************************************************

பங்குச் சந்தை, உலகச் சந்தை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டிய தேவை எதுவுமின்றித் தாம் கொண்டுவந்த பச்சைமிளகாய்க்கு, ஒரு சாக்கு மூட்டைக்கு மற்றவர்களைவிடப் பத்து ரூபாய் ஜாஸ்தி தருவதாய்ச் சொல்லும் வியாபாரியிடம் 12 ரூபாய் தரக் கேட்டு நின்றிருப்பார்கள் காங்கயம் சந்தையில் எங்கள் மக்கள். அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பது பங்குச் சந்தையோ, உலகச் சந்தையோ இல்லை. அந்தக் காங்கயம் சந்தைதான். ஈரோட்டில் இருந்து பழனிக்குப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் இடையில் காங்கயம், தாராபுரம் என்ற இரண்டு சிறு நகரங்களைக் கண்டிருக்கலாம். இந்தச் சிறு நகரங்களுக்கு மத்தியில் இருக்கும் ஊர் எங்கள் கிராமம். எனவே எங்கள் ஊர் விவசாயிகள் விளைபொருட்கள் விற்பனைக்கு காங்கயம் அல்லது தாராபுரத்தை நம்பியே இருந்தார்கள். எங்களுக்குக் காங்கயம் சந்தைதான் மிகவும் பரிச்சயம்.


நிலக்கடலை, பருத்தி போன்றவை விளையும்போது வியாபாரிகள் ஊருக்கே வந்து விலைபேசி வாங்கிச் செல்வார்கள். தேங்காய், பச்சைமிளகாய், எள், மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு சந்தைதான் சௌகரியம். கொஞ்சம் கூடப் பயணம் செய்தால் திருப்பூர் அல்லது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்குக் கொண்டுபோகலாம். ஆனால் போக்குவரத்துக்கே நிறைய செலவாகும் என்பதால் அங்கு யாரும் அதிகம் போனதில்லை. எங்கள் ஊரிலிருந்து கோயம்புத்தூர் போகும் வழியில் உள்ள குண்டடத்திலும் சந்தை இருக்கும். அங்கு செம்மறி ஆட்டுக்குட்டிகளின் விற்பனைக்கு மட்டுமே அவ்வப்போது போய்வருவார்கள். விவசாயிகளின் வாழ்வு, அதிலும் சிறு விவசாயிகளின் வாழ்வு அடிக்கடி சோதனைக்குள்ளாகும். அவர்களுக்கு, இந்த வருடம் இவ்வளவு வருமானம் வரும் என்று எந்த ஆடிட்டராலும் கணித்துவிட முடியாது. அதிலும் கால்வாய்ப்பாசனம் எதுவுமற்று வானம் பார்த்த பூமிதான் எங்கள் மக்களுக்கு."காஞ்சு கெடுக்குதுன்னு கடவுளுக்கு மனுச்செஞ்சா பேஞ்சு கெடுத்திருச்சே பெருமாளே என்ன பண்ண?" என்ற வைரமுத்துவின் வரிகள் எங்கள் ஊருக்குப் பொருந்தாது. மழை எங்களைப் பேஞ்சு கெடுத்ததில்லை. பேயாமல்தான் கெடுக்கும்.


மழைமாதத்தில் நிலத்தை உழுதுபோட்டு, விதைத் தானியம் சேர்த்துவைத்து, வானம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். வானமும் வஞ்சனையின்றி எங்கள் ஊருக்கு மேலே கார்மேகங்களோடு நிறைந்து நிற்கும். ஆனாலும் சிலசமயம் பொய்த்துவிடும். அதுவும் எப்படித் தெரியுமா? அம்மாவின் இடுப்பிலமர்ந்திருக்கும் அழகுக் குழந்தை நாம் எடுப்பதற்குக் கை நீட்டினால் சிரித்துக்கொண்டே தாவி வருவது மாதிரிப் பாவனை காட்டிக் கடைசியில் திரும்ப அம்மாவிடமே ஒட்டிக்கொள்வதுபோல் ஏங்கிநிற்கும் நிலத்தின்மீது கொட்டப்போவது கணக்காய் வந்து, கடைசியில் பொட்டுப்பொட்டாய் அம்மைத் தழும்புகள் அளவுக்கே பெய்து திரும்பும் மழையை மன்னிக்கமுடியாமல் வெதும்பி நிற்பார்கள் விவசாயிகள். பிறகு ஊர்கூடி முடிவுசெய்து மாரியம்மனுக்குக் காவேரித் தீர்த்தம் கொண்டுவந்து அபிஷேகம் செய்வார்கள். அவர்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யமாட்டாள் அந்த மாரியும். காலம் தவறியாவது பெய்துவிடும் மழையும். ஆனாலும் அவரவர் ரசனைக்கேற்ப எதையும் விளைவித்துவிட முடியாது. எங்கள் மண்ணில் வாராவாரம் குடும்பச் செலவுக்கு ஒரு வருமானம் வருவது பச்சைமிளகாய் மூலம்தான். அதிலும் சம்பா மிளகாய்தான் நன்கு விளையும். எனவே மழையில் நீர்பெருகும் கிணறுகள் மூலம் பாசனம் செய்யப்பட்டு விவசாயம் ஆரம்பமாகும்.


விளைந்ததைச் சந்தைக்கு எடுத்துப்போகும் வாகனம் பாலுச்சாமி மாமாவின் மாட்டு வண்டிதான். அவரும் அடிப்படையில் ஒரு விவசாயி. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லையென்று சந்தை வண்டி ஓட்ட ஆரம்பித்தாராம். அவர் எங்கள் ஊர் கிடையாது. அருகில் இருந்த வேறொரு கிராமத்தைச் சேர்ந்தவர். என்றாலும் எங்கள் ஊரில்தான் அவருக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். காங்கயம் சந்தை திங்கட்கிழமை கூடும். ஞாயிறன்றே மிளகாய் பறித்து, இலை, பழமிளகாயெல்லாம் பொறுக்கி சுத்தம் செய்து சாயந்திரம் சாக்குப்பைகளில் நிரப்பித் தைத்து வைக்க வேண்டும். பெரு விவசாயிகள், சிறு விவசாயிகள் உட்பட 15 அல்லது 20 பேர் பாலுச்சாமி மாமா வண்டியில், சந்தைக்கு மூட்டை அனுப்புவார்கள். நான்கு மூட்டைகளிலிருந்து அதிகபட்சம் பத்துப் பன்னிரண்டு மூட்டைகள் வரை ஒவ்வொருவரும் அனுப்புவார்கள். யாருடையது எந்த மூட்டை என்று அடையாளம் காட்ட மையினால் இனிஷியல் செய்திருப்பார்கள். பால்க்காரர், கடைக்காரர் மாதிரி பாலுச்சாமி மாமாவும் சந்தைவண்டிக்காரர் என்று அழைக்கப்பட்டார்.


ஞாயிறு இரவு 9 மணி வாக்கில் வீட்டிலிருந்து வண்டியைப்பூட்டிக் கொண்டு புறப்படும் அவர் வழியில் அங்கங்கு மூட்டைகள் ஏற்றிக் கொண்டு எங்கள் ஊர் வர இரவு 10 அல்லது 11 மணி ஆகும். மாட்டு வண்டிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சவாரி வண்டி. ஆட்கள் சவாரி செல்லப் பயன்படுத்தப்படும். மேலே தார்க்குச்சிகள் மற்றும் கெட்டியான துணி வேய்ந்த கூரையுடன் சிறியதாக இருக்கும். இன்னொன்று பெரியதாகக் கூரையின்றி, பொருட்களின் பாரம் ஏற்றிக்கொண்டு போகும் மொட்டை வண்டி. சந்தைவண்டிக்காரர் வைத்திருந்தது இரண்டாவது வகையில் மிகப் பெரியது. மழையில் மூட்டைகள் நனையாமல் இருக்க ஒரு பெரிய தார்ப்பாய் வைத்திருப்பார். எருதுகளும் வலுவுள்ள பெரிய எருதுகள்தான். அத்தனை மூட்டைகளின் பாரத்தையும் இழுக்க வேண்டுமே!. எங்கள் தெருவில் இரண்டு வீட்டு மூட்டைகள் ஒன்றாக, வெளிவாசலைத் தொட்டபடியிருக்கும் வீதியில் தெருவிளக்கு வெளிச்சத்தில் அடுக்கப் பட்டிருக்கும். அதில் எங்களுடையதும் ஒன்று. பக்கத்துவீட்டைவிட எங்களுக்கு எப்போதும் நிறைய மூட்டைகள் இருந்ததில் எனக்கிருந்த ஆணவம், அழுக்கென்று அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் சந்தைவண்டிக்காரர் எல்லோருக்கும் ஒரே மதிப்பையே கொடுத்து வந்தார். ஒரு மூட்டைக்கு அவருக்குக் கொடுக்கப் பட்ட வாடகை மூன்று ரூபாயில் ஆரம்பித்து வருடாவருடம் ஒரு ரூபாய் ஏறிக் கொண்டிருந்தது.


அவர் எங்கள் வீட்டுக்கு முதன்முதலாய் மூட்டைகள் எடுக்க வந்தபோது நான் 5 ஆம் வகுப்புப் படித்ததாய் ஞாபகம். மிக அமைதியானவர். அனாவசியமாகப் பேச மாட்டார். யாரிடமும் ஒரு ரூபாய்கூட வாடகையாய் அன்றி வேறெதற்கும் வாங்கமாட்டார். ஒரு லுங்கியும், பனியனும், தலைக்கு உறுமால்கட்டும் அணிந்திருப்பார். சின்னப்பிள்ளைகள் யாரிடமும் கலகலப்பாய்ப் பேசமாட்டார். ஆனாலும் அவரை மிகவும் பிடிக்கும் எனக்கு. மூட்டைக்குச் சொந்தக்காரர்கள் யாரையும் துணைக்கு அழைக்காமல், ஒவ்வொரு வீட்டு வெளிவாசலிலும் அடுக்கப்பட்டிருக்கும் எல்லா மூட்டைகளையும் அவர் தனியொருவராய்ச் சுமந்தே வண்டியில் ஏற்றுவார். எங்கள் வீட்டில் மூட்டைகள் வழக்கத்தைவிட அதிகமாகும்போது, ஆண்கள் சந்தை வண்டியில் ஏற்ற அவருக்கு உதவும் பொருட்டு விழித்திருப்பார்கள். அப்போதும், "ஏம்ப்பா நீங்கெல்லா இன்னும் முழிச்சு தூக்கத்தைக் கெடுக்கறீங்க? நானே ஏத்திக்க மாட்டனா?" என்றுதான் கேட்பார். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமென்றால் நான் சில ஞாயிறுகளில் சந்தைவண்டி வந்து மூட்டை எடுத்துக் கொண்டு போன பின்புதான் தூங்கப் போவேன். தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அன்று படித்துக் கொண்டிருப்பேன் இரவு பத்துப் பத்தரை மணிவரை. காரணம் அவருடைய பாட்டு. எங்கள் ஊர் எல்லையை நெருங்கும்போது லேசாய்க் கேட்க ஆரம்பிக்கும், பின் கொஞ்சம் சத்தமாக. "தன்னன்னன்னே தானானே........" என்கிற பல்லவி மட்டும்தான் திரும்பத் திரும்பத் தெளிவாய்க் கேட்கும். சரணங்கள் தெளிவாய்க் கேட்காது.


அது அழகான நாட்டுப்புறப்பாட்டாயிருக்கும். அதன் ராகத்திற்கு நான் அடிமையாகி இருந்தேன். அவர் குரலும் அப்படி. இரவில், பனியில், மழையில், பௌர்ணமியிலும், அமாவாசையிலும் தனியாளாய் வண்டியோட்டும் அவருக்கு அந்தப் பாட்டுத்தான் வழித்துணை. அதுவும் ஊரை நெருங்கி வருகையில் நிறுத்திக் கொள்வார். உறங்குபவர்களுக்கு அவரின் பாட்டுச் சத்தம் தொந்தரவாய் இருக்கக்கூடாது என்ற பரிவாயிருக்கலாம். அப்போது கேட்கும் அவர் எருதுகளின் சலங்கைச் சத்தமும், "ஹை, ஹை" என்று எருதுகளை உற்சாகப் படுத்தும் அவர் ஒலியும்கூட இனிய ராகமாகவே இருக்கும் எனக்கு. எங்கள் வீட்டு முன் மூட்டை ஏற்றும்போது நான் படித்துக் கொண்டிருக்கும் படுக்கையறையில் இருந்து ஜன்னல் வழியாக தெருவிளக்கு வெளிச்சத்தில் பார்ப்பேன். வீட்டில் தூங்கும் பெரியவர்களும் வண்டிச் சத்தத்தில் சிறிதாய் விழித்து "பாலுச்சாமி வண்டி வந்திருச்சு இன்னுந் தூங்காம என்ன படிக்கிறே? நாளைக்குப் படிச்சுக்கலாம் படு" என்று என்னை அதட்டுவார்கள். ஒருபோதும் அவர்களுக்குச் சொன்னதில்லை நான், படிப்பது அவருடைய பாட்டுக் கேட்பதற்கென்று. பலசமயங்களில் அவர் பாட்டுக் கேட்கும் முன்பே விரித்த புத்தகத்தோடு தூங்கியும் போவேன்.


இரவெல்லாம் பயணித்து விடிகாலை 3 மணி வாக்கில் சந்தையை அடைந்து மூட்டையெல்லாம் இறக்கிவிட்டுக் காலை 11 மணிவரை எருதுகளோடு ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும், சந்தையில் எங்கள் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு வாங்கும் தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை மற்றும் தங்களுக்கு வாங்கும் அரிசி மூட்டைகள் எல்லாம் ஏற்றிக்கொண்டு மாலை 5 மணி வாக்கில் ஊருக்குள் வரும் அவர் வண்டி. பள்ளியில் இருந்து வந்து, நொறுக்குத் தீனி கொறித்துப் பால் குடித்துவிட்டு வெளித்திண்ணையில் சந்தைவண்டிக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். என்னோடு என் தோழர் தோழியரும். இப்போது பாட்டெல்லாம் பாடமாட்டார் அவர். ஆனாலும் தூரத்தில் வருகிறபோதே வண்டியைப் பார்க்காமலே அதை சந்தைவண்டி என்று என்னால் சொல்ல முடிந்தது. அதிகாலையில் பாத்திரச் சத்தத்தை வைத்து, அம்மா விழித்துவிட்டதைத் தூங்கிக் கொண்டே உணர்ந்து பின் சிறிது நேரத்தில் காபி ரெடியாகும்போது சரியாய் விழித்து எழுந்துகொள்வது எனக்குப் பழக்கமாகியிருந்தது. அதேபோல் தூரத்தில் கற்கள்மீது ஏறி இறங்கும் சந்தைவண்டியின் "ரொடக்ரொடக்" சத்தமும், பாலுச்சாமி மாமாவின் "ஹைஹை" ஒலியும் எனக்குள் மனனம் ஆகியிருந்தது.


வீடுவீடாக வந்து சந்தையில் வாங்கப்பட்ட மூட்டைகளை இறக்கிவிட்டு, முந்தையநாள் மிளகாய் நிரப்பப்பட்டிருந்த வெற்றுச் சாக்குக்கட்டுகளையும் இறக்கிவிட்டுப் போவார். விவசாயம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி சந்தைவண்டிக்காரர்களுக்கும் வாழ்வு கொடுத்துக் கொண்டிருந்த காலம் என் கண்ணெதிரிலேயே எங்கள் ஊரில் காணாமல் போனது. மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தும், மழை வருடக்கணக்கில் பொய்க்கத் துவங்கியது. என் அப்பாவெல்லாமே, இருந்த பூமியை அப்படியே போட்டுவிட்டு, நகர்ப்புறத்தொழில் நோக்கி நகர்ந்து விட்டார். அங்கேயே இருக்க எண்ணிய என் மாமாக்கள்கூட போர்வெல் புண்ணியத்தில் தென்னந்தோப்புகளும், சொட்டுநீர்ப்பாசனங்களும் ஏற்படுத்திக்கொண்டு நிம்மதியாய் இருந்தார்கள். இதுமாதிரியே ஊரில் நிறையப் பேர் மாறியதால், விளைச்சலும், சந்தைக்கு விற்பனைக்குப் போதலும் குறைந்துபோனது. சந்தைவண்டிமாமாவின் தொழில் நஷ்டமடைந்து அதை அவர் கைவிட நேர்ந்தது. அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அவரின் தொடர்பும் அதற்குப்பின் நிறையநாள் நீடிக்கவில்லை.


கடல்கடந்து வாழும் இச்சூழ்நிலையிலும் நினைவுகள் பின்னோக்கி நீளுகையில் எழுந்துவரும் இனிய நாதங்களில் பாலுச்சாமி மாமாவின் சந்தைவண்டிச் சத்தமும் உண்டு. வாத்தியத்தை இழக்க நேர்ந்தாலும், அனுபவித்த நாதமேனும் இருந்துவிட்டுப்போகட்டும் இன்னும் பலகாலம் என்நினைவில்!!

Tuesday, August 01, 2006

என்னைச் சுமக்கும் புத்தகம்

"ஒரே பாத்தியில இந்த மொளகாச் செடி பெரிசா வளந்திருக்கு, இது மட்டும் சின்னதா இருக்கு!"
"அதுக்குத் தண்ணி செரியாப் பாஞ்சிருக்காதா இருக்கும்"
"இல்லடா அது மொதல்லயே தளைஞ்சிருக்கும், இது அப்பறம் போட்ட பட்டநாத்தா இருக்கும்"

ஐந்தாம் வகுப்புவரை அடுத்தவீடுதான் பள்ளிக்கூடம். பிரச்சினை இருக்கவில்லை. ஆறாம் வகுப்புக்குத் தாவியதும் உயர்நிலைப்பள்ளிக்கு 2 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். மிதிவண்டி பழகும்வரை நடைதான். நடையென்றாலும் கவலையில்லை. துணைக்குத்தான் ஒரு கூட்டமே இருந்ததே!. நேர்வழிகளை நிராகரித்துக் குறுக்குவழிகளில் கூட்டத்தோடு கூட்டமாகப் போகையில் நடக்கும் முக்கிய ஆராய்ச்சிகளின் மாதிரி ஒன்றுதான் மேலே சொன்னது. பிரச்சினை என்று சொன்னால் பள்ளிக்கூடத்தில் மட்டுமின்றிப் பாதைகளிலும் பாடப் புத்தகங்கள்தான் கஷ்டம் கொடுத்தன. எழெட்டு ஒரு குயர் நோட்டுக்களையும், அறிவியல், சமூக அறிவியல் போன்ற குண்டுப்புத்தகங்கள், கோனார் தமிழ் உரை உள்ளிட்ட
ஆறேழு புத்தகங்களையும், கொசுறாக நீளமான கட்டுரை, செய்முறைவடிவியல் நோட்டுக்களையும் சேர்த்துச் சின்னத் தோள்களுக்குக் கொஞ்சம் பெரிய சுமையாகவே இருந்தன. தூக்கும்போது தெரியாது. நடக்கநடக்கச் சுமை. சிறிது தூரத்திற்கொருமுறை கீழே வைப்பதும், பிறகு எடுத்துத் தோளில் போட்டுக்கொள்வதுமாகப் பயணம். அப்படிப் புத்தகங்களைச் சுமந்துகொண்டிருந்த என்னை இன்று ஒரு புத்தகம் சுமக்கிறது.

கல்லூரி முடித்து வழக்குரைஞர் ஆகியிருந்த காலத்தில் " நீ அதை வாங்கினாயா? படித்தாயா?" என்ற ஓயாத நச்சரிப்புகளுக்குப் பின் என் சோம்பேறித்தனத்தை நொந்துகொண்டே நண்பரே அன்பளிப்பாகத் தந்த புத்தகம், அப்படியாவது நான் படிக்கட்டுமென்று. எழுதியவர் அவருடைய நண்பரென்பதால் கூடுதலாகப் புகழ்ந்திருப்பாரோ என்கிற முன்முடிச்சோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்கா வண்ணம் எங்கெங்கோ எதனாலோ எனக்குள் விழுந்துகிடந்த முடிச்சுகளையெல்லாம் அவிழ்த்தெறிந்தது அது. என் இதயத்தின் யாருக்கும் தெரியாத இடத்தில் எதற்கோ சேமித்திருந்த இறுக்கத்தையும் சொட்டுச் சொட்டாகக் கரைத்துத் துடைத்தது. பனி தானே உருகுவதைப் போல், காற்றடிக்காதபோதும் புதிய தளிருக்கு வழிவிட்டு மெல்ல இறங்கும் உயர்ந்த மரமொன்றின் முதிர்ந்த இலையைப்போல் இயல்பாகவும் அழகாகவும் இருந்தன அந்தப் புத்தகத்தின் பெரும்பாலான எழுத்துக்கள். அதற்குப் பிறகு அது நான் எங்கிருந்தாலும் என்னோடு இருக்குமொன்றாகியது. பயணங்களிலும் இதை எடுத்துச் செல்ல மறந்ததில்லை. காரணம் தனியாகப் பயணிக்கையில் நல்ல நண்பனொருவன் கூடவே பேசிக்கொண்டு வருவதைப் போல் இருக்கிறது இதைப் படித்துக்கொண்டு போனால். தூங்கும்போது, சிரிக்கும்போது, அழும்போது என்று ஒவ்வொரு நேரத்திலும் அழகாகத் தெரியும்
கைக்குழந்தை மாதிரி என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கையில், களைப்பில் சலிக்கையில், ஏகாந்தம் தேடுகையில் என்று ஒவ்வொரு நிலையிலியிருக்கும்போதும் இதைப் படிக்கலாம். நிலைக்குத் தகுந்த உணர்வுகளை இதிலிருந்தும் பெறமுடிந்திருக்கிறது. புத்தகத்தின் பெயர்
"எல்லோர்க்கும் அன்புடன்". ஆசிரியர்: வண்ணதாசன். இவர் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் புனைபவர்.

கல்யாண்ஜி வெவ்வேறு காலகட்டங்களில் தன் வெவ்வேறு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள் "வைகறை" பதிப்ப்கத்தார். கடிதங்கள் பெரும்பாலும் இவரின் வாசக மற்றும் எழுத்தாள நண்பர்களுக்கு எழுதப்பட்டவை. சொந்தங்களுக்கு எழுதியவையும் சில. கடிதங்கள் எழுதுவதும், பெற்றுக்கொள்வதும் சுகமானது. தொலைபேசியின் இரண்டு நிமிடப் பேச்சைப்போல் காற்றில்
தொலைந்துபோகாமல், கடிதங்கள் கடைசிவரை பேசும் நாம் பத்திரப்படுத்திக்கொண்டால். மின்னஞ்சலிலும் இப்போது தமிழிலேயே கடிதங்கள் பரிமாறிக்கொள்ள முடிகிறதெனினும், அஞ்சலில் வரும் கையெழுத்துக் கடிதங்கள் எனக்காக யார்யாரெல்லாமோ சுமந்து வந்து என்னிடம் சேர்கின்றன என்று நினைத்துக்கொள்வதிலேயே நெகிழ்வைத் தருகின்றன.

கல்யாண்ஜியின் இத்தொகுப்பிலுள்ள கடிதங்கள் எழுதப்பட்டிருப்பது தனிமனிதர்களுக்கென்றாலும் பேசுவது எல்லோரைப்பற்றியும்தான். மனிதனின்
மென்மையான பக்கங்களை, அவற்றின் ஏக்கங்களை, கசிவை, காதலை, களிப்பை எல்லாம் எடுத்துக்காட்டுகின்றன இக்கடிதங்கள். அத்தொகுப்பின் முதல் கடிதம் இது:

"அன்புமிக்க வல்லிக்கண்ணன்,

வணக்கம். தங்கள் 71 ஆம் பிறந்தநாள் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிற 'முகம்' கிடைத்தது. உங்களை, உங்களின் ஒளிக்கீற்றை இப்படி எங்கேனும் எவரேனும் உணர்ந்து போற்றுகிறார்கள் என்பது மகிழ்வு தருவது. மலைச்சுனைபோலவும், வனச்சிற்றோடை போலவும் எங்கோ, யாருக்காகவோ என்ற நிச்சிந்தையில் அழுக்கற்றுக் காலம் கழிந்து விடுமாகில் எனக்கும்கூட அது உவப்பானதுதான். உங்களைப்போல் 'பொதிகைமலையில் போய் மறைகிற' ஆசை எனக்கென்ன, எல்லோர்க்கும் உண்டு. ஆனால் 'பணியை முடித்துக்கொண்டு' என்று சொல்லியிருக்கிறீர்கள் பணி தீர்வதில்லை. மலையாள சினிமாத் தலைப்பு போல இந்த வாழ்வு ஒரு 'பணி தீராத வீடு'. எது பணி என்று அறிந்து துவங்குவதற்கு வெகுநாள் ஆகிவிடுகிறது. ஆகும் நேரத்தில் பணிக்குப் பிணையாய் பிணி. பிணியின் கவ்வலில் கிழிந்து தொங்கும் நம் 'இனி'!
எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி."


ஒவ்வொரு நொடி, நிமிட, நாள் நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகளினூடாகத் தேவையான சிந்தனைகளைப் பெற்றுக்கொள்ளும்படியாகவும்தான் வகுக்கப்பட்டிருக்கிறது வாழ்க்கை. ஒவ்வொன்றையும் கண்டுணர்ந்துகொள்வதில்தான் இருக்கிறது அதன் சூட்சுமம். வல்லிக்கண்ணனுக்கான இன்னொரு கடிதத்தில் இப்படி எழுதுகிறார்,

"பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு எவ்வளவு அருமையானது. அதுவும் சொந்த வீட்டு அடுக்களையில், மண் அடுப்பில், விறகு எரித்துச் சுடுகிற நேரத்தின் நெருப்பும், அடுப்பின் உட்பக்கத்துத் தணலும், தணலின் சிவப்பில் ஜொலிக்கிற அம்மா அல்லது ஆச்சி அல்லது அத்தைகளின் முகமும் எவ்வளவு ஜீவன் நிரம்பியது. உங்களின் 'கல்யாண முருங்கைகள்' மட்டும் தொலைந்து போயின. நெருப்பு வெளிச்சத்தில் சுடர் தகதகக்கிற எவ்வளவோ முகங்கள் தொலைந்து போயின. சிலசமயம் விஷேச வீடுகளில் தொலைகிற சிறுமிகளின் காதுத் திருகுகள் போல அவை திரும்பக் கிடைத்து சந்தோஷங்களையும் உண்டாக்கி விடுகின்றன.

நேற்றுச் சாயங்காலம் நல்ல மழை. இன்று எழுந்திருந்து பார்க்கும்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. புதிதாக எங்கள் பகுதியில் போட்ட தார்ரோடு கழுவிவிட்ட மாதிரி நன்றாக இருக்கிறது. கழுவின-காய்ந்துகொண்டிருக்கிற-முற்றிலும் காய்வதற்கு முந்திய எல்லாவற்றிலுமே ஈரம் செய்கிற அழகு தனி. எல்லா அழகையும் ஆனால் பன்றிகள் கெடுத்து விடுகின்றன. ஒருநாள் ராத்திரிக்குள் வீட்டைச் சுற்றி உழுது[போட்டதுபோல்
இருக்கிறது. கல் எடுத்து அடிக்கலாம் என்று நினைத்தால், இரண்டு தாய்ப்பன்றிகள் ஒருச்சாய்த்துப் படுத்துக்கிடக்க, பத்துப் பன்னிரண்டு குட்டிகள் பால் குடித்துக் கொண்டிருக்கின்றன. மிருகமோ, மனுஷியோ, பாலூட்டுகிற-பால் குடிக்கிற நேரத்தில் நிகழ்கிற மெய்மறதி தனி. கல்லுக்கு அங்கே இடமில்லை.

உங்களுடைய கால்புண் சரியாக ஆறிவிட்டதா என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய இந்த வயதில் உள்ளேயும், வெளியேயும் எந்த ஆறாத காயங்களும் இருக்கக்கூடாது. காயங்கள் நடைமுறை ஆகிவிட்டன. நம்மிடம் உடைவாட்கள் இல்லையென்றாலும்கூட, கேடயங்களைக் கையில் திணித்துப் போகிறது காலம். ஆனால் ஆறிவிடும்படியாக இருப்போம், எல்லாக் காயங்களும். காயமே இது பொய்யடா.

எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி."


மனுஷ்யபுத்திரனுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று இது:

"அன்புமிக்க ஹமீத்,

வணக்கம்.

நீங்கள் உங்கள் கடிதம் கிடைத்ததா என்று கேட்டிருப்பதைப் பார்த்தால், உங்கள் கடிதம் கிடைத்து அதற்கு நான் எழுதிய பதில் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. என்னுடைய தபால்பெட்டிகளை மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் மறுபடியும் வந்துவிட்டது. சமீபத்தில் நான் அனுப்பிய மூன்று கடிதங்களுக்கும் மேல் போய்ச்சேரவில்லை. எலிகளை ரசிகர்களாக எப்படி அங்கீகரிக்க? இடக்குறைவின் காரணமாக ஜாதிக்காய்ப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட எத்தனை புத்தகங்களை அவை "கரும்பித்" தள்ளியிருக்கின்றன. இப்போது மீண்டும் இம்சை. மிகவும் நெருக்கமான உணர்வுகளுடன் எழுதப்படும் கடிதங்கள் தின்னப்படுவதை எப்படி நான் அனுமதிக்க முடியும்? குரங்குகள் பிடுங்கிச் செல்கிற சாப்பாட்டுப் பொட்டலங்களை பழந்தோட்ட அருவியின் ஒரு அம்சாகவும், குழந்தையின் கையிலிருந்து முறுக்கைக் கவ்விப் போகிற காக்கைகளைப் புறவாசல் காட்சிகளுடன் இயைந்த ஒரு காட்சியாகவும் எப்போதும் எப்படி எடுத்துக்கொள்ள? எப்போது ரோமம் மூடிய கரம் மீண்டும் நம் கைக்கவளத்தின் மீது வீசப்படுமோ, எப்போது கருப்புச் சிறகு காற்றின் கிழிப்புடன் நம் தோளின் மீது அறைந்து அப்பாற்செல்லுமோ என்ற அடுத்த தடவைக்கான பயத்தை என்ன செய்ய? படுக்கை அறையில் மட்டுமல்ல, தபால் பெட்டியிலும் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்.

மதுரைக்கு நீங்கள் வருகிறபோது எப்படியும் பார்த்துப்பேசிவிடலாம் என்றுதான் இருந்தேன். லட்சுமி, மணிவண்ணன், மற்றும் உங்களது சைக்கிள் கடை நண்பர் நேரே பாங்கிற்கு வந்தபோது கூட்டத்திற்கு வந்துவிடுவதாகவும் சொன்னேன். கதிர் கல்யாணம். மீராவைவிட கதிர் எனக்கு நெருக்கமான பையன், எப்படிப் போகாமல் இருக்க? அங்கேயும் கல்யாணத்தைவிடக் கலந்துரையாடல்தான் அதிகமாக இருந்தது. நான் ராகுலதாசனை ஒரு இருபத்தைந்து வருடங்கள் தொலைத்துவிட்டு, சின்ன வயதில் தொலைந்து, உச்சகட்டத்தில் அதே பாட்டைப் பாடிக்கொண்டு ஒன்று சேர்வது போல அந்தக் கல்யாண மண்டபத்தில் கண்டெடுத்தேன்.

எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி."


ரவிசுப்பிரமணியனுக்கு எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று இது:

"அன்புமிக்க ரவி,

வணக்கம்.
தொடர்ந்து உங்கள் கடிதங்கள்.

எதையாவது தொடர்ந்தும், அதனாலோ தொடரப்பட்டும் கடைசிவரை செய்வினை, செயப்பாட்டுவினை ஆகிவிட்டது வாழ்க்கை. கல்நாகங்களின் மாய
அர்த்தங்கள் போல, வாழ்வின் பாறைகளில் வால்சுழித்துப் படம் உயர்த்தி, படத்துக்குள் சிவலிங்கம் தாங்கி, வழிபடுபவரின் குங்குமத்திற்கும், மஞ்சளுக்கும், வழிகிற மழைக்கும், விழுகிற பறவை எச்சத்துக்கும் அசையாதிருக்கவேண்டியதாகிவிட்டது.

நேர்காணல் அவசியமற்றது. என்னைப் பிறர் அறிவதற்கும், நான் பிறருக்கு அறிவித்துக்கொள்வதற்கும் என் எழுத்துக்கள் போதுமானது. ஆனாலும்
'விருப்பமில்லாத திருப்பங்கள்' எத்தனையோ. தவிர்க்க முடியாதவை. "காதலினால் அல்ல கருணையினால்" என்றும் "கருணையினால் அல்ல காதலினால்" என்றும்தான் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவிகிதங்களுடன் நிகழ்கின்றன. இலக்கியத்தில் வன்முறைகளுக்கு இடமில்லை. கரும்புத்தோகைகள் கையைக்கிழித்த அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம். வாய்க்காலில் குளிக்கையில், கிழிந்த பாதத்துடன் கரையேறிக்கிறேன் என் சின்ன வயதில். ஒரு ஏழெட்டுப் பேர் மத்தியில் நான் சரிந்து போயிருக்கலாம். ஒரு நாலைந்து வாசல்கள் முற்றிலுமாக இனி எனக்கு அடைக்கப்படலாம். முகமூடிய தாக்குதல்கள், புனைந்த பெயருடன் வசைகள் இனிச் சிறிது காலம் இருக்கும். ஏனெனில் இது கதையல்ல வாழ்க்கை.
இவர்கள் பாத்திரங்கள் அல்ல மனிதர்கள். வாழ்வும், மனிதர்களும் நான் விரும்புகின்றவை அல்லவா?

எல்லோர்க்கும் அன்புடன்,
கல்யாணி சி."


போதும் நண்பர்களே! இந்தத் தொகுப்பின் ஒரு நூற்றுச்சொச்சத்துக்கும் மேலான கடிதங்களையும் இப்போதே உங்களுக்குக் காட்டவேண்டுமென்ற
வேட்கை இருந்தாலும் நட்சத்திர வாரத்தில் குறைந்தது தினம் ஒரு பதிவாவது போட வேண்டியிருக்கிறது. பின்னூட்ட மட்டுறுத்தல் வேறு:)) வருகிற
பத்திருபது பின்னூட்டங்களையே ஒவ்வொன்றாகப் பார்த்துப் பிரசுரிக்கத் திணறிக்கொண்டு, நூற்றுக்கணக்கில் பின்னூட்டம் பிரசுரிப்பவர்களை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்றாலும் கடைசியாக இந்த ஒரு கடிதத்தை மட்டும் சுட்டி முடித்துக்கொள்கிறேன்.

"அன்புமிக்க ஆன்ந்தன்,

வணக்கம்.

உங்களுடைய கடிதமும் சிருஷ்டியும்.

அடுத்த சிருஷ்டிக்கு என்னுடைய கவிதைகள் சில இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அக்டோபருக்கும், டிசம்பருக்கும் மத்தியில் நிறையக் கவிதைகள் எழுதினேன். 'மூன்றாவது" என்று மானசீகத் தலைப்பிட்டுவைத்திருக்கிற அந்த நாற்பது பக்கங்களை எங்கோ வைத்துவிட்டு அதை எழுதிய முதல் படிவத்திலிருந்து இதைப் பிரதி செய்து அனுப்புகிறேன். அப்போதுதான் ஈன்ற பசுங்கன்றுக்குட்டியைவிட மூன்றுநாள் சீம்பால் குடித்துத் துள்ளுகிற
கன்றுக்குட்டி அழகாக இருக்கும். நக்கி நக்கிச் சுத்தம் பண்ணுகிற தாய்ப் பசுவைப் போல மனம் எத்தனையோ முறை ஈன்று புறந்தந்துகொண்டே இருக்கிறது.

'குளிப்பதற்கு முந்திய ஆறு' எழுதியதற்காக இப்போதுகூடச் சந்தோஷப்படுகிறேன். உங்கள் கண்முன் தாண்டுகிற உயரம் உயரமல்ல. உங்கள்

கண்முன் செதுக்குகிற சிற்பம் சிற்பமல்ல. உங்கள் செவிகளை நிறைப்பது மட்டும் இசைமையின் உச்சமல்ல. நான் வரந்த ஓவியத்தையும் தாண்டி ஒன்றை வரையவே ஒவ்வொருமுறையும் பிரஷ்ஷை எடுக்கிறேன். என் இம்சையைத் தாங்கமுடியாது திரச்சீலைகள் விம்முவதை நான் மட்டுமே அறிவேன். நான் அறியாத வசீகரங்களை, என் விரல்களுக்கு அப்பாற்பட்டு திரைச்சீலை எனக்குத் தரமுயல்கிற நேரங்களும் எனக்குண்டு.
வாசிக்கிறவனை வீணை மீட்டத் துவங்குகிற நேரம் அபூர்வமானது. இசையின் கொடுமுடிகளைத் தொடப் பிரயாசைப்பட்டு அடையும்போது இசையே
இன்னும் சில சிகரங்களுக்குப் பாடகனை நகர்த்தும்.

இந்த வாழ்வின், இந்த மனிதர்களின் மத்தியில் ஒரு அந்தரத்தராசு சதா தொங்கிக்கொண்டிருக்கிறது. இதில் ஆணும் பெண்ணும் துல்லியப்பட்டுச்
சமஎடையில் நில்லாமல், தாழ்ந்தும் உயர்ந்தும் சீசா விளையாடிக்கொண்டிருக்கிரார்கள். இந்தச் சமன் புரிந்துவிட்டால் வாழ்வு ரம்மியமானது. இந்த ரம்மியமான இடத்தைச் சிறிதாவது எழுதிப்பார்க்க வேண்டும்.

குளிப்பதற்கு முந்திய ஆறும் குளித்த பிறகான ஆறும் மட்டும் வேறுவேறு அல்ல. நீங்கள் பார்க்கிற ஆறும், நான் பார்க்கிற ஆறுமே வேறுவேறு.

எல்லோர்க்கும் அன்புடன், கல்யாணி சி. "


வாழ்வை ரசிப்பவன் தன்னை நேசிக்கிறான். தன்னை நேசிப்பவன் தன் சுதந்திரத்தையும் மதிக்கிறான். தன் சுதந்திரத்தை மதிப்பவன் இன்னொருவனுக்கும் அப்படியான சுதந்திரம் தேவைப்படுமென உணர்கிறான். அப்படி உணர்ந்தவர்களால் மற்றவர்களுக்கோ, உலகத்துக்கோ பிரச்சினைகள் வருவதில்லை. இப்படியான ஒரு கருத்தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியதில் "எல்லோர்க்கும் அன்புடன்" நூலுக்கு நிறையவே பங்குண்டு.