நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, June 15, 2006

இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை

விகடனில் வெளிவந்திருக்கும் இச்செவ்வியை இங்கு தட்டச்சி இடுகிறேன். விகடனுக்கு நன்றி.


ஒவ்வொரு ஈழத்தமிழர் வீட்டு வாசலிலும் மரணம் காத்திருக்கிறது. அரசாங்கத்தின் அனுமதியுடன் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஈவிரக்கமின்றிப் புகுந்து கொலை செய்கிறது சிங்கள இராணுவம். அந்தத் துப்பாக்கிகளைப் போலவே அவற்றை ஏந்தியிருக்கிற மனிதர்களும் உணர்ச்சியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இல்லாமல்போனால் 7 வயதுக்குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்ய யாருக்காவது மனம் வருமா? இலங்கையில் அமைதி திரும்ப இன்னும் இப்படி எத்தனை
குழந்தைகளை நரபலி கேட்கப்போகிறார்களோ?

சேனாதிராசா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் துயரம் ததும்புகிறது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் பாராளுமன்றத் துணைத் தலைவருமான சேனாதிராசா தமிழகம் வந்திருந்தார். போர்ச்சூழலின் காரணமாக அகதிகளாகத் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான முன்னேற்பாடுகளுக்காக முகாமிட்டிருந்தவரைச் சந்தித்தோம்.

மீண்டும் அதிக அளவில் ஈழத் தமிழர்கள் அகதிகளாகப் புலம்பெயரத் தொடங்கியிருக்கிறார்களே?

50 ஆண்டுகாலப் போராட்டத்துக்கான தீர்வு இன்னும் எம்மக்களுக்குக் கிடைக்கவில்லை. செழித்து வளர்கிற பூமி எங்களுடையது. விருந்தினர்களாக எங்கள் வீடுகளுக்கு வருபவர்களை வயிறு நிறைய, மனம் நிறைய உபசரித்து அனுப்புவோம். இன்று, ஏர் உழுத தடம் மாறி, பூட்ஸ்களின் தடங்களைச் சுமந்தபடி கேட்பாரற்றுக் கிடக்கின்றன எங்கள் வயல்கள். எம்மக்கள் ஒருவேளைச் சோற்றுக்கும் வழியின்றித் தஞ்சம் தேடி அகதிகளாகின்றனர். இதுவரை 30 000 பேருக்கும் அதிகமான மக்கள்
புலம்பெயர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் சில ஆயிரம் பேர் மட்டும்தான் உயிருடன் வந்துசேர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எங்கே என்று கவலைப்படுவதா? அல்லது இங்கே வந்து அகதிகள் என்ற பெயரில் அனாதைகளாகின்ற மக்களுக்காக அக்கறை கொள்வதா? மக்களைக் கொன்று ஒரே குழியில் போட்டுப் புதைக்கிற புதைகுழிகளைப் பற்றி இனி செய்திகள் நிறைய வரலாம். "செம்மணி" புதைகுழியைப் போல இப்போது "கோப்பாய்" புதைகுழியில் அழுகிய நிலையில் பல
பிணங்களை எடுத்திருக்கிறார்கள். அவை வெகு சமீபமாகக் கொன்று குவிக்கப்பட்ட மக்களின் உடல்களாகத்தான் இருக்கும்.

கடந்தவாரம்கூட மன்னார் மாவட்டம் வங்காலை என்னுமிடத்தில் ஒரு குடும்பத்தையே ஒட்டுமொத்தமாகக் கொலை செய்திருக்கிறார்கள். கணவன், மனைவியுடன் அவர்களின் 7 வயது மகனையும், 9 வயது மகளையும் கொன்று போட்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் எதிரிலேயே அந்தத்தாய் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இப்படி இரத்தம் உறையவைக்கும் இத்தகைய செய்திகளை இன்னும் எவ்வளவு கேட்க வேண்டியிருக்குமோ?

சிங்களர் - தமிழர் இணைந்து கூட்டாட்சி அமைக்கிற வாய்ப்பே இனி இல்லையா?

இலங்கைத் தமிழர்களிடம் இனி இழப்பதற்கு எதுவுமில்லை. ஐந்து வீடுகளைக்கூட பாண்டவர்களுக்குத் தரமுடியாது என்று சொன்ன கௌரவர்களைப்போல் இலங்கைத் தமிழ் மக்களை வஞ்சித்துள்ளது இலங்கை அரசு. இருதரப்புக்குமான நல்ல முடிவுகளை இனி அது எடுக்கும் என்ற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. இனிமேல் தனிநாடுதான் எங்களுக்கான ஒரே தீர்வு. பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதுபோல் இலங்கையிடமிருந்து தமிழ்மக்கள் சுதந்திரம்
வேண்டிப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பாரம்பரியம் மிக்க உங்கள் அரசியல் கட்சி புலிகளின் தலைமையை ஏற்றுக்கொள்ளுமா?

எங்களுக்குத் தேவை விடுதலை. அதைத் தனித்தனியாக நின்று பெறமுடியாது. 2002 ஆம் ஆண்டு தேர்தலில் "விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடுவோம், வாக்களியுங்கள்" என்று கேட்ட எங்கள் கட்சிக்குப் பெரும் வெற்றியைத் தந்து இணைந்து போராடும்படி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள் மக்கள்.

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த மீட்புப்பணியும் நடைபெறாத சூழலில் போர் தேவையா?

போர் தேவை என்று எந்த நாகரிகச் சமுகமும் சொல்லாது. அதிலும் இரண்டு தலைமுறைகளை யுத்தத்தால் தொலைத்த ஈழம் போரை எப்படி விரும்பும்? ஆனால் போர் எங்கள்மீது திணிக்கப்படுகிறது. தமிழர்கள் ஆயுதம் தரிப்பது யாரையும் தாக்குவதற்காக அல்ல, தற்காத்துக்கொள்ளவே! போரில்லாமல் தீர்வு கிடைத்தால் எங்களைவிட யாரும் அதிகம் மகிழமுடியாது.

ஏன் அரசின்மீது கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள்?

உயிருக்கும், உடைமைக்கும் எவ்வித உத்தரவாதமுமின்றி அகதியாக ஒருநாளேனும் வாழ்ந்துபாருங்கள்! எங்கள் வலி என்னவென்று உங்களுக்குப் புரியும்!