நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, September 03, 2007

நீ நிரப்பிய இடங்கள்



எப்போதும்போலத்தான் இருக்கிறேன் நான் எதையாவது செய்துகொண்டோ அல்லது எதுவும் செய்யாமலோ. ஒரு நட்சத்திரத்தின் இயல்போடு இருந்துவிடுவது சுலபமாகுமா மனதுக்கும்? அப்போதுதான் மணந்திருந்த தன் துணையோடு வாழ்வை மணக்க மணக்கச் சுவைக்குமொரு மனிதச்சோடி நடந்துபோகிறபோது மேலே முளைத்துச் சிறிது நேரமாகியிருந்த அந்த நட்சத்திரம் பார்த்தேன். சிரித்தபடியிருந்தது. காட்டில் ஒரு
கட்டுத்தாரையில் உடனிருந்த விலங்குகள் பார்த்திருக்கப் பசுவொன்று வேதனையில் படுப்பதும், எழுவதுமாய்ப் போராடி ஈன்றெடுக்கிறது ஒரு கன்றை. தன் நிலையில் அப்படியே தெரிகிறது நட்சத்திரம். எங்கோ இரைதேடப்பறந்துவிட்டுத் திரும்புகையில் வழிதொலைந்த குஞ்சுக்குருவி ஒன்று கூடுகூடாய் அலைந்து தன் தாயைத் தேடுகிறது. அதன் அவஸ்தையிலும் கிழிபடவில்லை நட்சத்திர அமைதி. காலையில் ஊரே
வாய்பிளக்கத் தன் தகுதிகளைச் சொல்லியபடி உயரத்தில் ஒய்யாரமாய் ஒரு இருக்கையிட்டு அமர்பவன் ஒருவன்தான் முன்னிரவு கழிந்தபின் காசுகொடுத்துக் கவசமிட்டுக் கன்னியொருவளை அணைத்தபடியிருக்கிறான் பூவொன்றைக் கோடாரி பிளக்கும் பாவனையில். மூடிய கதவுகளுக்கு வெளியே நட்சத்திரம் அப்படியேதான். விடிந்தபின் அவள் விபச்சாரியாய்ப் போவதும், அவன் உபசாராங்களோடு ஊர்வலமாய்ப்போவதும் நடக்குமெனத் தெரிந்தாலும் காலையில் வரும் சூரியனுக்கும்கூட எதையும் சொல்லப்போவதில்லை நட்சத்திரம்.

நாம் நட்சத்திரங்களைப்போல் இருக்கமுடியாதென்பது உண்மைதான். ஆனால் அதற்காக உன்னை இப்படி அடிக்கடி உற்சாகமிழந்த சொற்களோடு பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நீயும் நானும் பூமிக்கு வந்தபோது இருந்த ஆர்வம் இத்தனை வருடங்களிலும் எத்தனைமுறை துளிர்த்திருக்கவேண்டும்? சொட்டுச்சொட்டாய்க் குறையவிடலாமா அதை? கட்டிப்போட்டிருந்த கருப்பையை உதைத்து இரத்தத்தில் துவைந்தே வெளிவந்தோம். வெளிவருவதற்காய் நமக்கும், வெளித்தள்ளுவதற்காய் அன்னையருக்கும் நிகழ்ந்த
போராட்டங்களோடுதானே பூமிக்கு வந்தோம்? தொடர்வதும் அதுதான். துவள்வது எதற்கு?

எனக்குப் புரிகிறது உன்னை. உணவுக்காய்த் தலைநீட்டி, கிடைக்கும்வரை அத்திசையில் ஊர்ந்திருந்து, ஒரு ஆபத்தென்றாலும் அபயம்தேடி உள்ளே சுருங்கும் ஓடுகொண்ட நத்தையின் போராட்டமும் உன்னுடையதும் ஒன்றேயல்ல என்பதை உணர்ந்தேயிருக்கிறேன். ஓட்டையும் சுமக்காத சுதந்திரத்தேடல் உடையவள் நீ. அதற்கான விலைகள்தான் உன் இழப்புகள். நீ உன்னை இழக்காதவரைக்கும் எல்லாம் உடையவள். நீ என்பது
உன் பெயரல்ல, உடலல்ல, மனமுமல்ல. அது உயிரைப்போலவே இன்னொருவருக்கு இதுதான் எனக் காட்டமுடியாதது. வடிவங்களற்றது. வேண்டுமானால் உன் சொற்களிலும், செயல்களிலும் உன்னைக் கொஞ்சமாய்ச் சிதறவிடுவாய் எனலாம். அதுகூட முழுமையாகாது. ஏனென்றால் பேசுகிறபோது மட்டுமல்ல, பேசாதபோதும் அதில் ஒரு நீ இருக்கிறாய். ஒன்றைச் செய்கிறபோது மட்டுமல்ல, இன்னொன்றைச்
செய்யாதபோதும் அதில் ஒரு நீ இருக்கிறாய். என் கணக்கில் இன்றுவரை நீ எல்லாம் உடையவள்தான்.

நாம் எங்கும் தனித்துவமாயில்லை. அப்படியிருக்கவும் இயலாது. பொழுதுவிடிந்தால் கலகலவென இரைச்சல் தொடங்கிவிடும் சந்தைகளில்தான் இருக்கிறோம். நீ வியாபாரம் நடத்த விரும்பவில்லையென்றாலும் சந்தைகளில் இருக்க வாங்குபவராகவோ, விற்பவராகவோ ஒரு அடையாளத்தோடுதான் இருந்தாகவேண்டும். எதுவுமற்ற பார்வையாளராகவும் இருந்துபார்க்கலாம். ஆனால் அது ஒரு மேகம் மேலே மிதந்து செல்வது
மாதிரி இலகுவானது. அதுவே பொழிந்து செல்கையில் அதன் அனுபவம் வேறானது. நீ பொழிந்து செல்வதில் ஆர்வமுடையவள். எனவே சந்தைகளில் வாங்குவதும் விற்பதும் தவிர்க்க இயலாதது. என்ன வாங்கினாய்? என்ன விற்றாய்? எப்படி வாங்கினாய்? எப்படி விற்றாய்? இதன் பதில்களில் இருக்கிறாய் நீ.

லாப நட்டக் கணக்குகளில்தான் மனம் சோர்கிறதா? எல்லோருக்குமான பொதுக்கணக்கில் உன் பெயரையும் எழுதியே இருப்பார்கள். எல்லோருடையதும் இலக்கங்களால் நிறையக் காலியாய் இருக்கும் உன் இடத்தில் எட்டிப்பார்த்துச் சிரித்துமிருப்பார்கள். பிறகொரு நீளத்தாளெடுத்து நீ தேறவில்லையெனச் சான்றிதழும் தந்தேயிருப்பார்கள். கைகளில் வாங்கிக் கிழித்துப்போடு. பைகள் நிரப்பும் கனவுகளுக்கே லாபநட்டக் கணக்குகள் அவசியம். வாழ்வை நிரப்புவது என்ன வெறுமனே பைகளை நிரப்புவதா?

பள்ளங்களோடுதான் பயணம். தாண்டத்தாண்ட முடிவுறாதவை. விழுதல் நிகழ்ந்த பொழுதென்றாலும் நீ நிரப்பிய இடங்களைத் திரும்பிப் பார்த்திரேன். பிரகாசமான வெளிச்சம் ஒன்றை இருளின் தேசத்தில் கண்டெடுத்தபின்னும் அதில் ஈசல்களாய் மோதி இறந்தவர்கள் கூட்டத்தில் ஒரு கூரையின் கீழே சிறுவனொருவனுக்குப் படிப்பதற்குதவும் மண்விளக்கொன்றாய் எண்ணெய் தீர்ந்து திரியும் கருகக் கடைசிவரைக்கும் நீ எரிந்துகொண்டிருந்ததை, அழுக்குகள் கிடைக்கும் சாத்தியமறிந்து நீரில்
மீன்களாயிருக்கச் சம்மதியாமல், தேனைத்தேடி திசைதிசையாக நீ சிறகுகள் வலிக்கப் பறந்தே திரிந்ததை, இருத்தல் என்பதை வசப்படுத்துவதற்காய் நரிகளாய் மாறும் வித்தைகள் மறுத்துக் கடிவாளமிட்டோ, கட்டறுத்துக்கொண்டோ நீ ஓடியே வாழும் பரியான கதையை இந்தக் களைத்த தினத்தில் நினைத்துப் பாரேன்.

வெயிலுக்குக் காய்ந்து சிவப்பாகவும், மழைக்குப் பாசியேறிக் கறுப்பாகவும் மாறும் என் ஓட்டை ஓட்டு வீட்டில் நான் கற்றுக்கொண்ட பாடங்களைவிடச் சிறப்பாக நான் இப்போதும் வேறெங்கும் கற்றுக்கொள்வதில்லை. மணிக்கணக்காய் மழைகொட்டும் நாட்களில் உள்ளே ஒழுகும் இடங்களுக்குப் பாத்திரம் வைத்துக்கொண்டே வெளியே எட்டிப் பார்த்திருக்கிறேன். பெரும் இரைச்சலோடு ஊற்றிய மழை கூரையில் அடித்து நிலத்தில் தெறித்தபோது அந்த மண்வாசலில் குழிகளைத் தோண்டிக்கொண்டிருந்தது. பெரும்மழை நின்றபிறகு,
வாங்கிய நீரைக் கூரை எங்கோ வைத்திருந்து சொட்டிக்கொண்டிருந்தபோது அந்தக் குழிகளையும் நிறைத்தது. பெரும்மழை ஒன்றில் நீ குழியாகலாம், பிறகு கூரையில் தேங்கிய நீராய்ச் சொட்டிக் குழிநிரப்பும் மழையுமாகலாம்.

நாம் காலியான இடங்களும், நிரம்பிய இடங்களும், நிரப்பிய இடங்களுமாய்க் கழிகிறது வாழ்வு. இதை அப்படியே ஏற்றபடி, ஏற்கமுடியாததை எதிர்த்தபடி வாழ்ந்துவிட்டுச் சாகலாம். முளைத்த செடி கருகினால் முடித்துக்கொள்வதல்ல போராட்டம். மரம் உருவாகிக் கனியீனும்வரை விதைத்துக்கொண்டும் இருப்பதே போராட்டம். விதைகள் மாறலாம். விதைத்தல்கள் முடியும் வாழ்வேது? உன் கைகளை விசங்களின் விதைகளுக்குத் தந்துவிடாதவரை அல்லது எல்லோருமறிய நல்விதையும், யாருமறியாதபோது புறங்கையால் நீ விசவிதையும் தூவாதவரை உன் விதைப்பில் பூமி குளிர்கிறது.


.........அந்த மண்வாசலில் மழைநிரம்பிய குழிகளுக்குக் கிணறென்று பெயரிட்டுத் தேங்காய்த்தொட்டியில் என்னோடு நீரிறைத்து விளையாடிக்கொண்டிருந்த, இன்று ஊரிலிருந்து தொலைபேசிய உனக்கு...........