நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, July 13, 2012

சந்திப்பு

என் கவிதைகளை எங்கோ கடந்துபோன ஒரு
கங்காருவின் பைக்குள் ஒளித்துவைத்துவிட்டேன்
என் கதைகளையும் அப்படியே...

இடியோ, புயலோ எதுவும் கலைத்துபோடமுடியாத
அடிமனதின் மௌனத்தை
காட்டு முல்லையின் மணத்தோடு எப்போதும் எதையாவது மலரவைத்துக்கொண்டிருந்த அந்த மௌனத்தை
ஒரு மதியம் போய்நின்று
சுடுமணலின் தகிப்போடு கடல்மடிக்குள் எடுத்தெறிந்தேன்.

என் பாடல்கள், இசை என
 எல்லாமும்கூடக் கண்மூடி உறங்கும்
ஒரு பிரமை எனக் காலம்

அதிசயக் கோள் ஒன்று முகிழ்த்தது போல்
இன்று மாலையில் கண்கள் கூசும் வெளிச்சம்
காட்டருவி விழ,
 பூக்களை மிதக்கவிட்டு நதியொன்று ஓட,
 ஈன்ற கன்றை வருடும் பசுவின் நாவாய்
 ஈரம் சூழ்ந்த மனம் கசிய
இன்று என் எல்லாமும் என் முன்னே

ஆயிரமான நாட்களுக்குப் பிறகு
நான் உன்னை சந்தித்துத் திரும்பியிருக்கிறேன்
சாவிகளைத் தந்தபோதுதான் என் அறைகளைப் பூட்டியது
நீயென்று அறிந்தேன்.