நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, January 31, 2007

பின்னூட்டம் ஏன் பிரசுரிக்கப்படவில்லை?

ஒரு நபரின் பின்னூட்டத்தைப் பிரசுரிக்க நிராகரித்துவிட்டு, அதற்கான காரணங்களை

"என் இடுகைகளில் இனிமேல் உங்களின் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படாது. இதற்குக் கடைசியாக நீங்கள் இப்போது இட்டிருக்கிற பின்னூட்டம் காரணமல்ல. செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு அப்பாவியைப்போல் வந்து கேள்விகேட்டுக்கொண்டிருப்பது தவிர அந்தப்பின்னூட்டத்தின் மொழியில் வேறொன்றுமில்லை பிரசுரிக்க முடியாமல் போகும் அளவு. ஆனால் இந்த முடிவை நான் எடுத்ததற்கு எனக்கு வேறு சில காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் இங்கு விளக்கிச் சொல்லிக்கொண்டிருப்பது ஒரு தெருச்சண்டைக்கு வேண்டுமானால் வழிவகுக்குமே தவிர வேறொரு உருப்படியான பயனும் விளையாதென்பதாலும், அதிலெல்லாம் இயல்பிலேயே எனக்கு ஆர்வமில்லையென்பதாலும் தவிர்க்கிறேன். இதுகுறித்து(ம்) உங்களுக்குத் தெரிந்த மொழியில், முடிந்த இடங்களில் விமர்சனமாகவோ, கதையாகவோ, கதைத்தலைப்பாகவோ, பின்னூட்டமாகவோ, எதிர்வினையாகவோ ஏதாவது எழுத விருப்பமும், நேரமும் இருந்து நீங்கள் எழுதினாலும் எழுதி மகிழவும்"

என்று நான் நாகரீகமாகச் சொன்னதைவிட,

"உங்க கான்செப்டையெல்லாம் புரிந்துகொள்ளமுடியாதபடி எனக்கு மேல்மாடி காலி என்று உங்களுக்குத் தெரியும். இதற்கு கற்றதனால் ஆன பயனென்ன என்று தலைப்பு வைத்ததற்கு ஏதும் ஸ்பெஷல் காரணம் உண்டா? சொன்னால் புரிந்துகொள்ள முயற்சிப்பேன், just curious."

என்ற அந்த நபரின் இந்தப் பின்னூட்டத்தைப் பிரசுரித்தும்விட்டு,

"புரியாமல்தான் என்தொடரை வரிக்குவரி விடாமல் படித்துவிட்டு அதில் நான் சொல்லியிருக்கும் கருத்தை நக்கலடித்து "பெண்ணியமும் சில புடலங்காய்களும்" என்று தலைப்பு வைத்துக் கதை ஏழுத முடிந்ததா? என்தொடர்பான தனிப்பட்டவிடயங்கள் முழுதையும் என் தனி வலைப்பக்கமான நிறங்களில் என்குறித்தான இடுகைகளில் நான்
சொல்லியிருப்பதிலிருந்து எடுத்துக்கொண்டுபோய், கதையில் ஒருபாத்திரத்திற்குப் பொருத்தி அதன்கணவர் ஒரு தண்ணீர்பார்ட்டியில் அந்தமனைவியோடு குடும்பம் நடத்துவது கடினம் என்று சொல்லிப்புலம்புவதாக எழுதி ஒரு பெண்பதிவருக்கு எதிராகக் கீழ்த்தரமான அரசியல் செய்யமுடிந்ததா? ஒரு பொதுவெளியில் எழுதவந்தால் தன்னைப்போலவே எழுதும் இன்னொரு சகபெண்பதிவரிடம் ஒரு மனிதனாக நடந்துகொள்ளக் கற்றுக்கொண்டு வரவும். பிறகு என் தலைப்பான "கற்றதனால் ஆன பயன் என்ன?" என்பதன் பொருளை ஒரு பதிவராகக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கலாம்"


என்று நான் அவரின் பின்னூட்டத்திற்குப் பதிலும் எழுதியிருக்கலாம்தான். ஆனால் செய்யவில்லை. ஏனெனில் இதுவரை அப்படி எதுவும் எழுதி எனக்குப் பழக்கமில்லாதது ஒரு காரணம். கிட்டத்தட்ட மூன்றுவருடங்களாக இணையத்தில் அங்கங்கு எழுதிவந்திருக்கும் எனக்குப் பெண் நண்பர்களைப்போலவே ஆண் நண்பர்களும் என் எழுத்துக்களை விமர்சித்தும்,
கருத்துச்சொல்லியும் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறார்கள். அப்படியிருக்கத் தரமற்ற தாக்குதல் தொடுத்த இந்த ஒரு நபருக்காக இதெல்லாம் எழுதத்தேவையில்லை, புறக்கணிப்பு மட்டுமே போதும் என்று நினைத்தது இன்னொரு காரணம்.


என் நட்சத்திரவாரத்தில் "கொழுகொம்பாகும் கொடிகள்" எனும் இடுகையிலிருந்து ஆரம்பித்தன இவரின் பின்னூட்டங்கள் என் இடுகையில். வெறும் நக்கலாகத்தான் இவரின் பின்னூட்டம் தொடங்கியது என்றாலும் கருத்துரிமை என்ற அளவில் அனுமதிக்கப்பட்டே இருக்கிறது அங்கு. எழுத்துசுதந்திரம் என்ற பெயரில் தான் நினைக்கும் எதையும்
எழுதமுடியும் என்று நினைக்கிற இந்த நபருக்கு அவரின் கருத்தின்மீது இன்னொருவர் அதுவும் ஒரு பெண்பதிவர் காரமான விமர்சனம்வைத்தால் பொங்கிஎழுவார். என் "கொழுகொம்பாகும் கொடிகள்" இடுகையில் இன்னொரு ஆணைத் தனிப்பட்டமுறையில் கிண்டலடித்த இவரின் செய்கையைத் தவறென்று நான் சுட்டியபோது அதை ஒத்துக்கொள்ளும் நேர்மையின்றி எனக்குப் புத்திமதி சொல்வதிலேயே குறியாகவும் இருந்தார். அந்தப்பதிவை இப்போது படிக்கும் யாரும்கூட அங்கிருக்கும் இவருடனான என்
உரையாடல்களில் உள்ள இவரின் மொழியை உணரமுடியும். அந்தமொழியையும், அதற்குப்பின்னிருந்த வெறும் திமிரையும் நான் பல்லைக்கடித்துக்கொண்டோ அல்லது பல்லை இளித்துக்கொண்டோ பொறுத்துப்போகவேண்டும் என அவர் நினைத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் எதிர்க்கருத்துக்களை வைத்தபோது, திருப்பி அவற்றிற்குப் பதிலைக் கருத்துக்களாகவே வைக்காமல் என் தனிப்பட்ட விடயமொன்றை இழுத்துக் கடைசியாக ஒற்றைவரிப் பின்னூட்டமிட்டபோது அதை நிராகரிக்கவேண்டிவந்தது எனக்கு. http://selvanayaki.blogspot.com/2006_07_01_archive.html


இப்போது சக்தியில் நான் எழுதிய தொடரில் இறுதியாகத் தான் இட்ட பின்னூட்டத்தை நான் பிரசுரிக்கவில்லை என நீதி பேசித் தன்பக்கத்தில் ஒரு பதிவெழுதி அந்தப் பின்னூட்டத்தையும் பிரசுரித்துக்கொள்ளும் நேர்மை ஏனோ அன்று என் 'கொழுகொம்பாகும் கொடிகள்" இடுகையில் இவருக்கு இருக்கவில்லை. அது இப்படி நீதிபேசுவதற்கான தகுதியுள்ள பின்னூட்டமாக இல்லாதிருந்ததை ஒருவேளை இவர் உணர்ந்திருக்கலாம். ஆனாலும் சும்மாயிருக்கவில்லை. என் பதிவில், வேறொரு நண்பருக்கான பதிலில் ஒட்டுமொத்த சமூகம்சார்ந்தவிடயங்களையும் முன்னிறுத்தி நான் பயன்படுத்திய "கட்டுடைத்தல்" என்கிற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, என் இடுகையில் நான் காட்டியிருந்த ஆணையும் என்
நட்சத்திரவாரத்தையும் எள்ளி நகையாடி ஒரு பதிவு எழுதினார். அதில் ஒன்றும் எனக்கு இப்போதும் பிரச்சினையில்லை. ஏளனங்களும் எழுத்துக்கள்மீதான விமர்சனமாக வரும் என்பது புரிந்தேயிருக்கிறேன். ஆனால் எழுத்துக்கள்மீதான தாக்குதல்களுக்கும், எழுதுபவர்மீதான தாக்குதல்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை நேர்மையும்,
தரமும் உள்ள யாரும் செய்யவிரும்புவதில்லை. இந்த நபருக்குப் பிரச்சினை என் எழுத்துக்கள் என்பதைவிட இவரை வெற்றிலைபாக்குவைத்து அழைத்துக்கொள்ளாத நான்தான் என்பதை அடுத்த பதிவில் நிரூபித்தார். அதற்கு அடுத்து உடனடியாக அதே சூட்டில் ஒரு கதையெழுதி அதில் ஒரு ஆணோடு முறையற்ற பாலுறவு வைத்திருக்கிற ஒரு
பெண்பாத்திரத்தைப் படைத்து, அதற்குத் தெய்வநாயகி எனப் பெயரிட்டு, "தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி" எனத் தலைப்பிட்டுத் தமிழ்மணமுகப்பில் உலவவிடவேண்டிய தேவையும்
இவருக்கு ஏற்பட்டது. அந்தப் பெண்பாத்திரத்தை இங்கு பலரும் என்னை செல்வா என அழைப்பதை நினைவூட்டும் வகையில் தெய்வா என்று அழைக்கும் ஆர்வமும் ஏற்பட்டது. இதன் பின்னுள்ள கீழ்நிலை வன்மத்தை நான் உணர்ந்தே இருந்தேன். யாரும் கேள்வி கேட்கமுடியாதபடி கேட்டாலும் கதைதானே இது, கதைக்கு நான் எப்படியும் தலைப்பிடுவது என்
உரிமை, அதுவும்கூட அதேபெயரா என்ன? வேறுபெயர்தானே?" என்று கேட்டு நீதிமானாகிவிடும் தந்திரமும் இவருக்குத் தெரிந்திருக்கிறதென்பதையும் அறியமுடிந்தது.


ஆனாலும் இவற்றாலெல்லாம் பாதிப்படையும் மனநிலைஉடையவள் அல்ல என்பதாலும், என்மீது குறிவைத்துத் தந்திரங்களோடு நிகழ்த்தப்படும் தாக்குதல் பொதுவில் எழுதிச்சொல்லவேண்டிய அளவு தேவையில்லாதது என்பதாலும் என் பதில் புறக்கணிப்பாகமட்டுமே இருந்துவந்திருக்கிறது. என்பார்வைகளை என்நோக்கில் நான் தொடர்ந்து எழுதியும் வந்திருக்கிறேன். எல்லாம்தாண்டி நீண்டநாட்களுக்குப்பின் நான் சக்தியில் தொடர் எழுத ஆரம்பித்ததேன். "வேலைக்குப்போதல், வீட்டிலிருப்பது போன்ற பிரச்சினைகளில்,
குழந்தைகளுக்காக ஒருவர் வீட்டிலிருக்கவேண்டிய தேவை வரும்போது அது எப்போதும் பெண்ணாக இருப்பதையே நம் சமூகம் விருபுகிறது அல்லது திணிக்கிறது. பொருளாதார ரீதியாக மனைவியின் பணி குடும்பத்திற்குப் பயன் தருமென்ரால் தம்பதியருக்குள் முடிவுசெய்து ஆண் வீட்டிலிருப்பதில் என்ன தவறு? அப்படித் தாங்கள் விரும்பியே முடிவெடுத்து வாழும்
மனநிலை சில தனிப்பட்ட ஆண்களுக்கு இருந்தாலும் அவர்களைக் கிண்டலடிக்கவும், எள்ளிநகையாடவும் சமூகத்திற்கு என்ன உரிமை இருக்கிறது?" என்ற கேள்வியை முன்வைத்து
என் கொழுகொம்பாகும் கொடிகள் இடுகையைச் சுட்டினேன். அந்தக் கொழுகொம்பாகும் கொடிகள் பதிவில் மோகன் தாஸ் என்கிற இந்த நபர் மட்டுமில்லை, உதயகுமார், மாயா போன்ற நண்பர்கள்கூட என்கருத்தை விமர்சித்து மாற்றுக்கருத்தை எழுதியே இருக்கிறார்கள். ஆனால் இந்தநபரைப்போல் ஒரு தனிப்பட்ட ஆணைக் கிண்டலடித்து அல்ல.


நான் அவ்விடுகையைச் சுட்டியவுடன் என் தொடரின் இரண்டாம்பாகத்தில்,
இவர் பின்னூட்டமிட்டார். அதைப் பிரசுரித்தே இருக்கிறேன். அதிலும் கருத்தென்று எதுவும் எழுதாமல் வேறெதற்கோ அலைகிற ஆர்வம் மட்டுமே தெரிந்தது. . மாற்றுக்கருத்தெழுதிய மற்ற நண்பர்களுக்கு மதித்துப் பதில் எழுதியபோல இவருக்கு நான் எதுவும் செய்யவில்லை. எனக்குமட்டும் புரியும்படி என்பெயரைச் சிறிதுமாற்றிக் கதைக்குத் தலைப்பாக வைத்து அரசியல்நடத்தும் ஒருவரை மதிக்கத் தேவையில்லாதது என் தனிப்பட்ட உரிமை என்றாலும், கருத்துரிமை என்ற அளவில் இவரின் பின்னூட்டத்தைப் பிரசுரித்தே இருக்கிறேன் அங்கு.

இந்தத் தொடரில் நான் முன்வைத்த சிலவிடயங்களுக்குக் கடுமையான மாற்றுக்கருத்துக்களை செந்தில்குமரன், சிவக்குமார், ஆசாத் போன்ற நண்பர்கள் என் பதிவிலேயே வந்து எழுதினார்கள். நானும் முடிந்தவரை என்தரப்பை அவர்களுக்கு எழுதினேன். என் கோணம் முற்றிலும் அவர்களின் கோணமில்லாதபோதும், நான் அவர்களின் கருத்துக்களை
நகைச்சுவையாகவும், கடுமையாகவும் மறுத்தே இருந்தபோதும் அவர்கள் யாரும் உடனே "பெண்ணியமும் சில புடலங்காய்களும்" என்று இந்த மோகன்தாசைப்போல் கதை எழுத நினைக்கவில்லை. அந்தக்கதைக்குள், என் சமீபத்திய "தோழிமார் கதை" பதிவில் என்னைப்பற்றி நான் சொல்லியிருப்பவையிலிருந்து, இதற்குமுன்பு எங்கோ சொல்லியிருந்த நான்
வீட்டிற்கு ஒரே பெண் என்ற தகவல்வரை சேகரித்து, அதேவிடயங்களுடன் ஒருபாத்திரத்தைப் படைத்து அதன் கணவன் தண்ணீர்பார்ட்டியில் அந்த மனவியைப் பற்றிப் புலம்பியதாக ஒரு காட்சி வைக்கவேண்டிய தேவையும் என்னோடு கருத்துக்களால் முரண்பாடுகொண்ட மற்ற எந்த நண்பருக்கும் ஏற்படவில்லை. அவர்களின் கண்ணியம் அப்படி.


என் இடுகைகளிலேயே நான் விமர்சித்திருந்த கருத்துக்களைச் சொன்னவர்களான நண்பர் ஓகை, சந்தோஷ் போன்றவர்களும் இங்கிருக்கிறார்கள். என் இடுகைகளுக்கு வராதபோதும்,
வேறு இடுகைகளில் சொல்லியிருந்த அவர்களின் கருத்துக்களுக்காக நான் என்பதிவில் விமர்சனம் சொல்லியிருந்தபோதும் அவர்கள் யாரும் இப்படி ஒரு தரம்தாழ்ந்த தாக்குதல் என்மீது நடத்தவில்லை. இவர்கள் மட்டுமின்றி என் தொடர் போய்க்கொண்டிருந்தபோதே போட்டித்தொடர் எழுதித் தன்பார்வைகளை முற்றிலும் வேறுதளத்தில் வைத்திருந்த நண்பர்
அரைபிளேடும் எங்களின் கருத்துக்களைத் தாக்கியிருந்தாரே தவிர எங்களைத் தனிப்பட்டமுறையில் எந்த இடத்திலும் தாக்கியிருக்கவில்லை. அவர்பதிவிலேயே போய் தங்கள் விமர்சனங்களைச் சொல்லியிருந்த மற்ற பெண்பதிவர்களான உஷா, பொன்ஸ் போன்றவர்களிடம் மரியாதையுடனும், கன்ணியத்துடனும் தன் கருத்துக்களை எழுதியிருந்தார். இன்னும்
சொல்லப்போனால் அவர் வைத்த கருத்துக்கள் எனக்குத் துளியும் பிடிக்காதவையெனினும், அவரின் நகைச்சுவைநடைக்காக அத்தொடர் முழுதையும் நானும் ஆர்வத்துடனே படித்து வந்தேன். கடைசியாக அவர் நிறைவு செய்தபோது, தன் மனைவி ஊரிலிருந்து வந்துவிட்டதால் தன்தொடரைப் பயந்துகொண்டு நிறுத்துவதாக அவர் எழுதியிருந்தபோது வாய்விட்டுச் சிரித்து ரசித்தேன். பூரிக்கட்டை வரப்போகிறது என்று ஒரு நண்பர் அவரைப் பின்னூட்டத்தில் நகையாடியபோது "நானெல்லாம் பூரிக்கட்டையில் அடிவாங்கமாட்டேன், ஏனென்றால் பூரிக்கட்டையை ஒளித்துவைக்க எனக்குத்தெரியும்" என்று அரைபிளேடு பதில் சொன்னபோது அந்த டைமிங் நகைச்சுவைக்காக மட்டும் அவருக்கு ஒரு பாராட்டு எழுதக்கூட நினைத்தது உண்டு.


வேறு பலவிடயங்களிலும் எனக்கு நேர் எதிர் கருத்துநிலைகள் கொண்டவர்களாக நான் கருதுகிற எஸ்கே, செல்வன் கால்கரிசிவா போன்றவர்களும்கூட என்னுடைய வேறுசில இடுகைகளுக்கு வந்து தன் கருத்துக்களை எழுதியே போயிருக்கிறார்கள். இவைதவிர என்னைத் தொடர்ந்துவாசித்து தம் கருத்துக்களை வழங்கி உற்சாகப்படுத்துகிற பிற
நண்பர்களும் உண்டு. நான் போய் அவர்களுக்கும், எனக்கு அவர்களும் பின்னூட்டமிட்டிருக்காத இன்னும் பலரையும்கூட நான் விரும்பிப் படித்தேவருகிறேன். என்னினும் இளையவர்களானாலும் சிலவிடயங்களில் என்னை ஆச்சரியப்படுத்துகிறவண்ணம் எழுதும் ஜி. ராகவன், கண்ணபிரான் போன்றவர்களுக்கெல்லாம் சொல்லப்படாத நட்பு ஒன்றும் என்
மனதில் உண்டு. இப்படியானதுதான் பதிவுலகில் என் அணுகுமுறை. இதுவரை மட்டுறுத்தப்படவேண்டிய அளவில் தேவையில்லாத பின்னூட்டங்களை நான் யாருக்கும் எழுதியதில்லை. நானும் யாருடையதையும் தேவையில்லாமல் மட்டுறுத்தியதும் இல்லை. மூன்றுவருடங்களாய் இங்கிருப்பினும், அந்த இருப்பை என்னோடு உரையாடியும், ஊக்கப்படுத்தியும் எனக்குச்
சுகமானதாக்கிய மற்ற பதிவர்களுக்கு பொதுவில் நன்றிசொல்வதற்கென்று ஒருஇடுகையும் இதுவரை நான் எழுதியதில்லை. இச்சந்தர்ப்பத்தில் அந்த நன்றியை மற்றவர்களுக்குச் சேர்த்துவிடவும் ஆசைப்படுகிறேன்.


இப்படியிருக்க மோகன்தாஸ் என்கிற இந்த ஒரு பதிவருக்கு மட்டும் "இனிமேல் ஒட்டுமொத்தமாக உங்கள் பின்னூட்டம் என் இடுகைகளில் புறக்கணிக்கப்படும்" என்று நான் சொன்னதற்குக்காரணம் என்னளவில் நான் கீழ்த்தரமானதென்று கருதும் அவரின் செயல்களே. ஒரு பெண்பதிவர் வெளியில் தைரியமாகச் சொல்லி நிரூபிக்கமுடியாதவகையில் கதை
என்று தந்திரமாக அதற்குப் பெயரிட்டு அவர்மீதான ஏளனங்களை எடுத்துவிட்டுக்கொண்டிருப்பதைத் தொடர்ந்து செய்யமுடியும் ஒரு பதிவரை என்னளவில் ஒரு மனிதராகக்கூட நான் மதிக்காததாலேயே அவருக்கு அப்படியொரு முடிவெடுத்தேன். அத்தனையையும் செய்துவிட்டு என் தொடரின் கடைசிப் பாகத்தில் அது எழுதப்பட்டு நிறையநாட்களுக்குப்பிறகு வல்லி என்பவர் படித்துப் பாராட்டி ஒருபின்னூட்டமிட்டவுடன், இவர் வந்து என் கான்செப்ட் தனக்குப் புரியாதது எனவும், ஆனால் என் தலைப்பை நான் அப்படி வைத்ததற்கு என்ன காரணம் என்றும் கேட்டு எழுதியபோதுதான் நான் அப்படி முடிவெடுத்தேன். எல்லோருடைய கருத்து சுதந்திரத்தையும் மதிப்பது தேவையானது என்பதை உணர்ந்தவள்தான் நான். அதேசமயம்
தன்னை மதிக்காத ஒரு பெண்பதிவரைக் கீழ்த்தரமாகத் தாக்கிக் கதை என்ற போர்வையில் ஒளிந்து எழுதமுடியும் ஒருவரின் மனநிலையைக் குட்டிச்சுவரில் உட்கார்ந்துகொண்டு போகிறவருகிற பெண்களை விசிலடித்தும், இளக்காரமாக எதாவது பேசியும் மகிழும் ஒருமனநிலையாக மட்டுமே பார்க்கமுடிந்தது என்னால். அவ்விதத்தில் ஒருமனிதனாகக்கூட
என்னால் மதிக்கப்படமுடியாத ஒருவரின் பின்னூட்டத்தை என் இடுகைகளில் பிரசுரித்து அவரின் கருத்துரிமையைக் காப்பாற்றிக்கொண்டிருக்கத்தேவையில்லை என்று முடிவுசெய்தேன்.


இந்த எரிச்சலில் அவர்பாணியில் வழக்கம்போல் கதை எழுதித் தன் அரிப்பைத்தீர்த்துக்கொண்டாலும் எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் கதைவழித்தாக்குதல் அலுப்பைத்தந்திருக்கவேண்டும் இவருக்கு. எனவே வழக்கமான தன் பாணியைவிட்டுத் திடீரென நியாயம் பேசும் நீதிமானாக என் தொடரின் பெயரையே வைத்து ஒரு பதிவெழுதி நான் பிரசுரிக்காத பின்னூட்டத்தைப் பிரசுரித்தும்கொண்டார். அதில் அவர் எழுதியிருப்பவைதான் மிகப்பெரிய காமெடி. நான் ஏதோ புத்தகத்தைப் படித்துவிட்டுப்
பெண்ணீயம் எழுதுவதாகவும், இவரையெல்லாம் மூடன் என்று சொல்லிக்கொண்டு என்னை ஒரு அறிவாளியாகக் காண்பித்துக்கொள்வதாகவும் எழுதியிருக்கிறார். அதுமட்டுமில்லை
படிமமாகவும் கோர்வையாகவும் எழுதுவதால் நான் அறிவாளி கிடையாது என்று ஒரு தீர்ப்பும் வழங்கியிருக்கிறார். போயும்போயும் இந்த மோகன்தாஸ் என்கிற பதிவர் என்னை அறிவாளி என்று ஒத்துக்கொள்வதால் எனக்கொரு லாபமோ, அவர் ஒத்துக்கொள்ளாததால் எனக்கொரு நட்டமோ வரப்போவதில்லை, அதைவிடுங்கள்.


அடுத்த காமெடி என்னவென்றால் தான் நக்கலாக எழுதினாலும்கூட அது ஸ்ட்ரிங்க் தியரிப்படி பெண்ணீயத்தின் இன்னொரு பரிமாணம் என்றும், தான் ஒன்றும் அறிவில்லாதவன் கிடையாது என்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவர் அறிவாளியாகவும், நான் அறிவில்லாதவளாகவுமே இருந்துவிட்டுப் போகட்டும் அதனாலென்ன? ஆனால் அவரின் அறிவிலிருந்து பெண்ணீயத்தின்
இன்னொரு பரிமாணத்தையாவது கற்றுக்கொள்ளலாம் என்று என்னை மாதிரி அறிவிலிகள் அவர் எழுத்துக்களை நோண்டிப்பார்த்தால் அங்கு பெண்ணீயம் என்ற தலைப்பில் அவர் எழுதிவைத்திருப்பவை செல்வநாயகி என்கிற பதிவரை மட்டம் தட்டியவை மட்டுமே. ஒருவேளை ஸ்ட்ரிங்க் தியரிப்படி 2007 ஆம்வருடம் இணையத்தில் பெண்களைப் பற்றி எழுதும்
செல்வநாயகி என்கிற பதிவரை மட்டம் தட்டிக்கொண்டிருப்பதுமட்டும்தான் பெண்ணீயத்தின் இன்னொரு பரிமாணமா? ஸ்ட்ரிங்க் தியரி படித்த என் நண்பர்கள் உதவவும்:))


இன்னுமொரு காமெடி அவர் அந்தப்பதிவில் எழுதியிருப்பது. "முகமூடிகளை எல்லோரும் அணிந்துகொண்டிருக்கும் இந்தப் பதிவுலகில் தான் மட்டும் முகமூடியில்லாதிருப்பது தவறாக இருக்கிறது" என்கிற சுயசோகம். அது உண்மைதான். முகமூடி இல்லாதவர்தான் அவர். முகமூடி யாருக்குத் தேவைப்படும்? ஒருமுகம் உள்ளவருக்கு. வேறேதேனும் செய்யும்போது
தன்னை யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி முகமூடி தேவைப்படும் ஒரு முகமுள்ளவருக்கு. ஆனால் கைவசம் முகங்களே பல உள்ள ஒரு நபர் நேரத்திற்குத் தகுந்தபடி மாட்டிக்கொள்ள முகமூடி எதற்கு? முகத்தையே ஒன்றைக் கழற்றிவிட்டு, இன்னொரு முகத்தை அணிந்துகொண்டால் ஆயிற்று. தாக்குதல் நடத்தக் கதாசிரியர் முகம். நியாயம் கேட்க நீதிமான் முகம் இப்படி...... தான் எழுதுவதை எல்லாம் இந்த அவசர வாசிப்பில் யார் நினைவில் வைத்திருக்கப்போகிறார்கள் என்கிற நினைப்பிலோ அல்லது தானே நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத மறதியிலோ இவர் பேசுவதில் எத்தனை முரண்பாடுகள்?


டில்லிக்குக் குடிபெயர்ந்திருக்கும் மங்கை என்கிற பதிவர் அங்கு ஒரு தமிழர் இன்னொரு தமிழரைப் பார்த்தாலும் தமிழில் பேசாமல் இந்தியில் பேசுவதாக ஆதங்கப்பட்டபோது அங்கே ஆஜராகும் மோகன்தாஸ் "உங்க மெண்டாலிட்டியை மாத்திக்கிட்டு வாழப்பழகவும்" என்று புத்திமதிகளை மங்கைக்கு அல்ளிவீசுகிறார். வீசிவிட்டு ஓடிவந்து மெண்டாலிட்டி மாற்றப்படுமா என்று ஒரு பதிவு எழுதினார். அதில் திருச்சியிலிருந்து புனேவுக்கு ரயிலேறிப்போனதில் தன் பழைய மெண்டாலிட்டி மாறிப்போய்த் தான் எதையும் சரியாகப் பார்க்கக் கற்றுக்கொண்டதகவும், பார்வைகள் திருந்திப்போனதாகவும் சொல்லிவிட்டு மங்கையெல்லாம் டில்லியிலிருந்துகொண்டு தமிழ்நாட்டு மெண்டாலிட்டியிலேயே இருப்பதால்தான் அப்படிப் புலம்புகிரார் என்கிற மறைபொருளிலும் எழுதியிருந்தார். அதே மோகன்தாஸ் இப்போது அமெரிக்காவில் இருக்கும் நான் என் மெண்டாலிட்டி மாறிப்போய் அமெரிக்கப் பார்வையில்
பெண்கள் பிரச்சினையை எழுதுவதாக ஒரு சான்றிதழை அவரே கொடுத்துவிட்டு அதைத் தவறு என்கிறார். இந்திப் பிரச்சினையில் திருச்சியிலிருந்து புனே அல்லது டில்லிக்குப் போவதால் இவரின் மெண்டாலிட்டி மாறிப்போகிறது. எனவே டில்லியிலிருக்கும் தமிழர்கள் பிற தமிழர்களுடனும் இந்தி பேசுவது சரி என வாதிடுவார். வாதிடுவது மட்டுமில்லை. அதுகுறித்துத் தம் ஆதங்கத்தைத் தம் பதிவில் எழுதுபவர்களுக்கும் ஓடிப்போய் போதனையை ஆரம்பிப்பார். ஆனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தாலும் பெண்கள்
பிரச்சினைகள் மீதான பார்வையில் மெண்டாலிட்டி மாறக்கூடாது என்று எனக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டிருக்கிரார் இப்போது. இங்கு வீட்டிலிருக்கும் மனைவி, வீட்டிலிருக்கும் கணவன் என்ற பேதமின்றி மக்கள் இயங்குவதைக் குறிப்பிட்டு நான் எழுதினால் "அமெரிக்க மெண்டாலிட்டியில் எழுதுவது" என்று முத்திரை குத்தி அது சரியான பார்வையல்ல என
எடுத்தியம்புவார். இங்கு எல்லோரும் குருடர்களாயிருப்பதால் இப்படியெல்லாம் எழுதி ஒற்றைக்கண் உடைய நான் அரசாள்வதாக உதாரணம் சொல்வார். அதுவும்கூட இந்த நியாயம் பேசும் நீதிமான் வேடத்தில்தான். மற்ற நேரங்களில்தான் இருக்கிறதே கதாசிரியர் வேடம்.


சரி , மற்றவர்கள் குருடர்கள். ஒற்றைக்கண் உள்ள நான் கண்டதையும் எழுதி அரசாள்கிறேன். இரண்டு கண்களும் உடைய இவர் என்ன செய்கிறார் என்பதைப் பதிவுலகின் பல இடங்களிலும் தேடிப்பார்த்தால் எந்தப் பதிவரின் முக்கியமான விடயம் குறித்த இடுகையிலும் தர்க்கரீதியான வாதங்களை இவர் வைத்ததற்கான தடயங்களைக் கண்ணுக்கெட்டியதூரம்வரை காணவில்லை. முடிந்தவரை அடுத்த பெண்பதிவர்களை மட்டம் தட்டுவது. முடிகிறபோதெல்லாம் தான் மேதாவி என்று சொல்லிக்கொள்வது. மட்டம் தட்ட இவர் அதிகம் தேர்ந்தெடுப்பது பெண்பதிவர்கள்தான் என்றாலும், பாலபாரதிக்கும் ஒரு நீதிபோதனை வகுப்பு எடுத்தேயிருக்கிறார். மங்கையைப்போலவே மும்பையில் உதவிகேட்டபோது
இன்னொரு தமிழர் தன்னிடம் இந்தியில் பதில்சொன்னதாகவும், அது புரியாமல் தான் அவரைத் தமிழில் கெட்டவார்த்தையில் திட்டியபிறகு அதே தமிழர் தமிழில் பதில்சொன்னார் என்றும் தன் அனுபவத்தைப் பதிவுசெய்திருந்த பாலபாரதிக்கு "கெட்டவார்த்தையில் திட்டினீர்களா? நீங்களெல்லாம் ஒரு பத்திரிக்கையாளரா?" என்கிற ரீதியில் புத்திமதி இவரிடமிருந்து. ஆனால் கதாசிரியர் வேடம் பூண்டு சகபெண்பதிவரை முடிந்தவரை இழிவுபடுத்தி எழுதுகிற இந்த நியாயவான், நேர்மையான முறையில் தான் செய்ததை எழுதி, தவற்றைத் தவறு என்று
ஒப்புக்கொள்ளமுடியும் துணிச்சலும்கொண்ட ஒரு பத்திரிக்கையாளருக்குக் கண்ணியமொழியைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்ததுதான் காமெடி. இப்படியெல்லாம் மங்கை, பாலபாரதியை இந்திவிடயத்தில் புத்திமதி சொல்லித் திருத்த முயன்ற இதே பதிவருக்கு, " இந்தி எதிர்ப்பு என்பது என்ன? அது ஏன் முன்னெடுக்கப்பட்டது? அதற்கான காரணங்களாகத்
தமிழ்சமூகத்துக்கு ஏற்பட்டவை என்ன?" என்பதுபோன்ற பல கருத்தாழமான விடயங்கள் கொண்ட கட்டுரையைப் பரிந்துரைத்துப் படிக்கச்சொல்லி நண்பர் சங்கரபாண்டி கொடுத்தபோது, "படித்தேன்" என்கிற ஒற்றைச் சொல்லோடு சரி. வேறேதாவது அதைப்பற்றி மூச்சு விடவேண்டுமே. குருடனாயில்லாதவர், ஒற்றைக்கண்ணாக இல்லாமல், இரண்டு கண்களும் கொண்டவர் இதுமாதிரியான நேரங்களில், தனக்குத்தெரியும் என தான் அடிக்கடி பீற்றிக்கொள்ளும் ஸ்ட்ரிங்க் தியரிப்படி இன்னொரு பரிமானத்தையோ, கேம்தியரிப்படி இன்னொரு தீர்வையோ யாருக்கும் காட்டாமல் கண்களை இறுக்க மூடிக்கொள்வார்.


சரி, தெரிந்ததையெல்லாம் எழுதிக்கொள்ளட்டும் என்று அவரின் நீதிபேசும் இடுகைக்கும் அமைதியாகவே இருந்தால் மீண்டும் "தமிழ்மணவிவாதக்களமும் பெண்ணீயமும்" என்று தலைப்பிட்டு ஒரு பதிவெழுதியிருக்கிறார். அதில் விவாதக்களத்தில் மட்டுறுத்தப்பட்டதென்று சொல்லி இவர் எழுதியிருக்கும் பின்னூட்டத்தில் மீண்டும் என்மீதான தாக்குதலும், இவரின் பின்னூட்டம் என் இடுகையில் பிரசுரிக்கபடாததையும் சொல்லும்விதத்தில் நீதிப்பேச்சும். தொடர்ந்து என்னைச்சுட்டித் தன் பின்னூட்டங்கள் பிரசுரிக்கபடாததையும் சொல்லி நீதி
ஓலமிடும் இந்த நபருக்காக இல்லையெனினும், பார்க்கிறவர்கள் இந்த ஓலம் மட்டுமே உண்மையென நம்பிவிடாமல் இருப்பதற்காகவேனும் இத்தனையையும் சொல்ல நினைத்தே இப்பதிவு எழுத நேரிட்டது.


கடைசியாக இவர் எடுத்துப்போட்டு எழுதியிருக்கும் என் கருத்துக்கள் இரண்டும் நான் மனிதராகக்கூட மதிக்காத இவரையெல்லாம் கணக்கில்கொண்டோ, அல்லது பொதுவாகவோகூட சொல்லப்படவை அல்ல. நான் மதிக்கும் மற்ற பதிவர்களில் இரண்டு பேருக்கு அவர்கள் என்னைப்பார்த்து வைத்த கேள்விகளுக்குப் பதிலாக அவர்களைப் பெயர்
சொல்லி அழைத்து எழுதியவை. அதிலும் ஒன்று தமிழ்மண விவாதக்களத்தில் எழுதப்பட்டதுகூட அல்ல. சக்தியில் என் தொடரில் "இக்காலப் பெண்கள் சமையல் செய்வதைக்கூட இழிவாகக் கருதிக்கொண்டு வேலைக்குப்போவதை மட்டும் பெண்விடுதலை என்கிறார்கள்" என்ற பொருளில் சொன்ன செந்தில்குமரனுக்கு நான் வைத்த பதிலில் "அப்படியெல்லாம்
சொல்லவேண்டியதில்லை, சமையலில் அதுவும் கணவனுக்குச் செய்து பரிமாறுவதில் சங்கத் தமிழச்சி ஒருவருக்கு இருந்த காதல் எங்களுக்கும் உண்டு" என்று சொல்லிக்கொண்டது. அங்கு எழுதப்பட்ட ஒன்றை இங்கு எடுத்துப்போட்டு அதைத் தன்போன்ற ஒரு நபருக்கும் சேர்த்து நான் சொன்னதாகத் தானே நினைத்துப் பதில்சொல்லவேண்டிய அளவுக்கு இருக்கிறது ஏதோ ஒரு அரிப்பு.

இன்னொரு கருத்தும், "வீட்டில் சண்டைபோடு, வெளியில் வா" என்று வெறுப்பை வளர்க்கும்விதமாகவே இங்குபலர் பெண்களுக்கு எழுதுவதாக வருத்தப்பட்ட சிவக்குமாருக்கு "அப்படியெல்லாம் இல்லை சிவக்குமார், அன்பான தாம்பத்தியம் கண்டு கரைகிற மனதும் எங்களுக்கு உண்டு" எனும் பொருளில் எழுதியது. அதையும் சம்பந்தமில்லாது எடுத்துப்போட்டு
நான் இப்படி ஜல்லியடிப்பதை என் வாடிக்கையாக வைத்திருக்கிறேன் என்று சொல்லும் இவரைப்பார்த்தால் எனக்குச் சிலவேளைகளில் பாவமாகவும் இருக்கிறது. சரி, என் ஜல்லிகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டுத் தன் காமம் மற்றும் காதல் கதைகளிலெல்லாம் தனக்குத் தெரிந்த கேம் தியரி, ஸ்டிர்ங்க் தியரி எல்லாம் புகுத்திப் புதியபரிமாணம் காட்டும் கருங்கல் (ஜல்லிக்கு எதிர்ப்பதம் இதுதானே மக்களே) பதிவராக இவர் இருக்க வாழ்த்துக்கள். ஜல்லிகளை ஒதுக்கிவிட்டுக் கருங்கல் போடும் இவர் கூடவே கிரிப்டோகிராபி, ஆர்ட்டிபீசியல் இண்டலிஜென்ஸ் போன்ற அறிவியல் சிமெண்டும் போட்டு நாளைக்கு நம் சுஜாதாவைப்போல் (இதில் உள்குத்து என்று யாரும் சிரிக்கக்கூடாது, அறிவியல் கதைன்ன்னா என்னைமாதிரி ஒற்றைக்கண் ஆளுகளுக்கெல்லாம் தெரிஞ்ச உதாரணம்) ஒரு அறிஞராகவும் வாழ்த்துக்கள்! கூடவே இன்னும் ஏதாவது தார் ஊற்றி உலகுக்கு ஒரு புதிய
சாலை அமைக்கவும் வாழ்த்துக்கள். யார் அமைச்சா என்ன சாலை அமைஞ்சா சரி.


"நீங்கள் உங்களுக்கு முதலில் நேர்மையாயிருக்கவும்" என்று சொல்லி என்னைமாதிரி நேர்மையற்ற பாவிகளைக்காக்க அவதாரம் எடுத்திருக்கிறார் இந்தப் பின்நவீனத்துவ புத்தர். தான் பொழுதுபோகாமல் பார்த்த படங்களுக்கெல்லாம் விமர்சனமென்றும், இன்னபிறவுமாக ஒரு நாளைக்கு 20 பதிவுகள் எழுதி வலையேற்றிவிட்டு, மீதிநேரத்தில் செல்வநாயகி என்கிற பதிவர் தனக்கு நேர்மையாக இருக்கிறாரா, அடுத்தவருக்கு நேர்மையாக இருக்கிறாரா என்று கண்காணிப்பும் செய்கிற இந்தப் புத்தர், மாதம் பிறந்தால் சம்பளம் தந்து தனக்கு மூன்றுவேளை சோறுபோடும் தன் முதலாளிக்காவது நேர்மையாக இருக்கிறாரா என்று கொஞ்சம் சுயநேர்மையையும் சோதித்துக்கொண்டால் நல்லது.

எனக்குத் தோன்றிய ஒரே ஆதங்கம், அடுத்தவர்களுக்கு ஒழுக்கத்தையும், நேர்மையையும் சொல்லிக்கொடுத்துக்கொண்டும் அப்படியில்லாத என்போன்றவர்களையெல்லாம் கண்டுபிடித்து உலகுக்குக் காட்டிச் சேவையும் செய்யும் இவ்வளவு ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட இந்த நபர் தன் படத்தைப் போட்டுக்கொண்டு ஆற்றிவரும் இம்மாபெரும் பணியைப் பார்த்துப்
புளகாங்கிதம் அடைய அவர் உயிரோடு இல்லை. பாவம் சேகுவரா!

Thursday, January 11, 2007

தோழிமார் கதை

எந்தத் திட்டமிடலுமில்லாது டிசேவின் வைரமுத்து பற்றிய இடுகையைப் படித்ததன் விளைவாய் இதை எழுதும் விருப்பம் ஏற்பட்டது. இணையத்தில் எழுத ஆரம்பித்தபோதிருந்த ஆர்வம் எனக்கு நிச்சயமாய் இந்தமாதிரி இலக்கியம் சார்ந்ததாக மட்டுமே இருந்ததெனலாம்.
ஊரைவிட்டுக் கிளம்பும்வரை கம்பன்விழா, சிலப்பதிகாரவிழா, திருக்குறள்விழா, இன்னபிற சட்டம்சார்ந்த விழிப்புணர்வுக் கூட்டங்களில் எல்லாம் உரையாற்றி மக்களைக் கொல்கிற மாபெரும் வேலையும் செய்துகொண்டிருந்ததிலிருந்து விடுபட்டு வந்திருந்ததன் தாக்கமே
இணையத்தில் தமிழ் தேட வைத்தது. அதுவரை கவிதைகளைப் பேசி மட்டும் மக்களைச் சிரமப்படுத்திக்கொண்டிருந்ததிலிருந்து சிறிது மாறுபட்டு கவிதை எழுதிக் கவிதையையே கொல்லும் செயல் மேற்கொள்ளப்பட்டது. பிறகு ஊருக்கு ஒரு விடுமுறைக்குப் போனபோது
"அங்குபோனபின் தமிழுடனான தொடர்பு எப்படியுள்ளது?" என்று முந்தைய இலக்கியவட்ட நண்பர்கள் கேட்க, ஒரு நேர்மறைப்பதிலாக இருக்கட்டுமென்று "ஓ அது நன்றாகவே உள்ளது, நான் இப்போது கவிதைகள் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன்" என்று சொல்லப்போக
அவர்களும் "காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்று கருதி என் பயணத்திற்கு முன்பு அவசரமாக அவற்றை அச்சிட்டு வெளியிடுவதும் நடந்து முடிந்தது. வெளியீடெல்லாம் நன்றாகவே இருந்தது. விழாவுக்கு வந்திருந்த 150 பேரில் அன்றே அந்தப் புத்தகத்தை
வாங்கிப்போன 60 பேரை நினைத்தால்தான் அவ்வப்போது கொஞ்சம் கவலையாக இருக்கும். அதில் ஒரு 20 பேர் சொந்தக்காரர்களாய் இருப்பார்கள். அவர்களைப் பற்றி ஒன்றுமில்லை. வளர்த்ததன் பலனை அனுபவித்தேதான் ஆகவேண்டும் அது புத்தகவடிவில் வந்து
கொடுமைப்படுத்தினாலும்.

இங்குவந்து சேர்ந்தபிறகும் "ஹிக்கின்பாதாம்ஸில் உங்கள் கவிதைநூல் கிடைத்தது, வாங்கிப் படித்தேன், பல கவிதைகளும் புரிகிறமாதிரி இருந்தது" என்ற ரீதியில் வந்த சில கடிதங்களிலிருந்து "அப்படியானால் நாம் நவீனக் கவிஞர் ஆகவே முடியாதா?" என்ற விடைதெரியாத கேள்வியின் கணம் அழுத்தத் தொடங்கும். அப்போதெல்லாம் வலைப்பதிவில் நல்ல இரண்டு இடுகைகள் படித்தபின் மனம் அவற்றுடன் போகத்துவங்கி என் புத்தகத்தை நினைவுபடுத்தாமல் நல்லது செய்துவிடும். விற்பனை உரிமையை
கற்பகாம்பாள் பதிப்பகத்துக்கும், கவிதைக்குச் செய்த தீங்குக்குப் பிராயச்சித்தமாய்ப் பணலாபத்தை ஒரு சமூக அமைப்புக்கும் கொடுத்துவிட்டதோடு அதனுடனான தொடர்பைத் துண்டித்துக்கொண்டு இருந்தால், நீண்ட இடைவெளிக்குப் பின் முன்பின் தெரியாத
முகவரியிலிருந்து "I bought ur book through online. 2good" என்று வந்த ஒரு மின்னஞ்சல் நான் மறந்திருந்ததை மீண்டும் நினைவுபடுத்தி "இவர் 2 good என்று சொல்லியிருப்பது முன்னட்டையையும், பின்னட்டையையுமாக இருக்குமோ?" என்று எண்ணத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்திப்போனது. நிற்க.

மேலேசொன்ன இவ்வளவு சொந்தக்கதைக்குப் பின்னால் ஒரு செய்தி இருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்டதையெல்லாம் ஒரு பெரியவிடயமாகவோ, ஒரு தகுதியாகவோ என்னளவில் நான் கருதுவதில்லை. என்னைவிடவும் நன்றாகவும், ஆழமாகவும், மொழிஅழகோடும்
எழுதுகிற பல நண்பர்களை இங்கு படிக்கும்போது மரங்கள் மௌனமாக இருக்க இலைகள் சலசலப்பதுபோல் நான் செய்தது என்று நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் ஒன்றுகுறித்து மட்டும் சந்தோசப்பட்டுக்கொள்கிறேன். தேடலும், ஆர்வமும் மட்டும் தேய்ந்துபோகாமல்
வளர்ந்துகொண்டிருக்கிறது இதுநாள்வரைக்கும். பார்வைகள் ஒரே இடத்தில் நின்றுபோகாமல் பயணிக்கவேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது. ஈழத்து இலக்கியத்தின்மீதெல்லாம் இப்போது ஒரு நேசம் வந்திருக்கிறது. அரசியல், சமூகம்சார்ந்த கட்டுரைகளையும் விரும்பிப் படிக்கிற வெறி ஒன்று உருவாகியிருக்கிறது. நா.அருணாச்சலம் அவர்கள் நடத்திய கூட்டமொன்றில் உடன் உரையாற்றிய, ஈழ ஆதரவை ஊடகங்களிலும் தெரிவித்துவரும் நண்பரொருவருடன் "வன்முறையைக் கைக்கொள்வதால் புலிகளும் தீவிரவாதிகளே!"
என்றெல்லாம் வாதிட்டுக்கொண்டிருந்த என் அறியாமையைக் கொஞ்சமேனும் கரைத்தகற்றிக் கண்திறந்து பார்க்கும் ஒருநிலைவரை வந்துநிற்க முடிகிறது. இவையெல்லாவற்றிற்கும் மூலமாய் ஆதியில் என்னை வாசிப்புக்குள் இழுத்துவந்தது வைரமுத்துவின் கவிதைகள்தான்.
(அப்பாடா பேசுபொருளுக்கு வந்தாச்சு!)

என்னைத்தூக்கி வளர்த்த மனிதர்களின் கைகள் ஏர் உழுது உழுது தழும்பானவை. அக்கைகளில் ரேகைகளை எப்படித் தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமோ அப்படித்தான் நான் வளர்ந்த வீட்டில் புத்தகங்களையும். காமராஜர் காலத்தில் பஞ்சாயத்துத் தலைவராயிருந்த உறவுக்காரத் தாத்தா ஒருவர்தான் கொஞ்சம் "தமிழரசு" புத்தகங்களைச் சேர்த்து வைத்திருந்தார். அதையும் சரஸ்வதிபூசையன்று சாமிகும்பிட மட்டுமே வெளியில் எடுப்பார். பூசைக்கு உதவுவதாய்ச் சொல்லிப்போய் அதில் படம் பார்ப்பதோடு சரி. இவைதவிர ஒரு கும்மிப்பாட்டுப் புத்தகமும், அம்மாவின் ஆதிபராசக்தி வழிபாட்டுப் பாடல்கள் நூலும் இருக்கும். இச்சூழலில் புத்தகவாசிப்புக்கான உந்துதல் உயர்நிலைப்பள்ளி
போகும்வரை ஏற்படவில்லை. மெல்லமெல்லத் தமிழாசிரியை தந்த ஊக்கத்தில் பேச்சுப்போட்டிகளில் ஆர்வம் வந்தபோதுதான் அதற்கான தயாரிப்புகளுக்கென்று அங்கிருந்த நூலகம் பக்கம் போக ஆரம்பித்தது. அப்போதும் திருக்குறள், பாரதி, பாரதிதாசன், உவேசா தாண்டி வரவில்லை. பொழுது சாய்வதற்குக் கொஞ்சநேரம் இருக்க, அம்மா முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த சாயந்தரம் ஒன்றில் இலங்கை வானொலியில் வைரமுத்து "மரங்களைப் பாடுவேன்" வாசித்துக்கொண்டிருந்தார். அவரின் மொழியோ, உச்சரிப்போ, உணர்ச்சியோ, இல்லை ஏற்கனவே எனக்குப் பிடித்தமானதாயிருந்த மரமோ எது பிடித்ததோ மிகவும் கவரப்பட்டேன். அதன்பின் அவரின் பெயர் கேட்க நேர்ந்தால் அது எதுசம்பந்தமானதென அறியும் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் என் பள்ளி நூலகத்தில் அவரின் நூல்களெல்லாம் இல்லை. காசுகொடுத்து வாங்கும் வசதியுமில்லை.

கல்லூரி வந்தபிறகு அறைத்தோழி ஒருவள்தான் அறிமுகப்படுத்தினாள் முதன்முதலாக அவருடைய "இதுவரை நான்" ஐயும் "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்" நூலையும். அவள் பாலகுமாரன் கதைகளையும் வைத்திருந்தாள். எடுத்த எடுப்பிலேயே எனக்குப்
பாலகுமாரன் கதைகள் பிடிக்காமல் போனது. "இதுவரை நான்" படித்தபிறகு வைரமுத்துவின் "சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்" என்னும் இளைஞர்களுக்கான குறிப்பாக மாணவர்களுக்கான கட்டுரைத் தொகுப்பைக் காசு கொடுத்து வாங்கினேன். ஒரு மிகச்சாதாரண வாழ்விலிருந்து தான் வந்த கதையின் காயங்கள், வலிகள், வாய்ப்புகள் என வழிநெடுகச் சந்தித்ததை அவர் பதிந்துவைத்திருப்பது மாணவநிலை மனதுக்கு உரமிடுபவை. அதுதான் கல்லூரி மாணவர்களில் தமிழார்வம் உடையவர்கள் அவர்பால் ஈர்க்கப்படக்
காரணமாயிருக்கலாம். சினிமாப்பாடல்களினால் மட்டும் கவரப்பட்டுமிருக்கலாம்.

ஒரு உறவுக்கார மாணவன் அல்லது மாணவிக்கு நல்ல பரிசளிக்க விரும்பினால் இப்போதும் நான் "சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்" ஐ வாங்கிக்கொடுக்கிறேன். ஒரு தேர்வுக்கான தயாரிப்பிலிருந்து பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும், பெற்றோ¡ருக்குமான உறவுகளின்
பிரச்சினைகள்வரை நன்கு எழுதப்பட்ட நூல் அது. பிறகு காசு மிச்சமாகும் வேளைகளில் புத்தகங்களாய் வாங்கியதில் வைரமுத்துவின் பெரும்பாலான கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள் கைக்கு வந்தன. அப்துல்ரகுமான், வானம்பாடிக் கவிஞர்கள், மேத்தா, அறிவுமதி, என்ற வரிசையில் அப்போதைய புத்தக ஆர்வம் நீண்டன. இலக்கியங்கூட்டங்களுக்குச் செல்லும் ஆர்வம், வாய்ப்புகள் எல்லாம்
வாய்க்கப்பெற்ற கல்லூரிவாழ்வின் இடைப்பகுதியில் வைரமுத்து, அப்துல்ரகுமான் போன்றவர்களின் தலைமையில் பேசுகின்ற நிகழ்வுகளும் நடந்தேறின. டிசே சொல்லியிருப்பதுபோல் அவர் பழகுவதற்கு இனிய மனிதர் என்பதுதான் என் அனுபவமும். ஒரு சபையில் அறிஞர் நிலையிலிருந்தவர்களையும், என்போன்ற மாணவநிலையிலிருந்தவர்களையும் பேதம்பிரிக்காமல் மதிக்கவும், ஊக்கப்படுத்தவும் செய்தார். அவர் வருகிற நிகழ்ச்சிக்குக் கூடும் கூட்டங்கள் கட்டுப்படுத்தமுடியாதனவாய் இருந்தன. சினிமாவெளிச்சமே அதற்குக் காரணமாயிருக்கலாம். தன் ரசிகனொருவரின் திருமணத்திற்கு அவர் வர ஒப்புக்கொண்டிருந்து வருகிறாரென, மண்டபத்திலிருக்கவேண்டிய அந்த மாப்பிள்ளை ரசிகன் இரவு அவர் வரவேண்டிய வழியில் அவருக்காகப் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்ததையெல்லாம் கேட்க நேர்ந்தது.

போஸ்டர் ஒட்டாவிட்டாலும் இதே ரசிகமனப்பான்மையோடு இருந்த பலரைப் பார்க்கமுடிந்தது. அவர்களைத் தாண்டினால் "டைமண்டு" என்கிற ரேஞ்சில் போட்டுத் தாக்கிக்கொண்டிருந்த இன்னொரு பிரிவினரும் இருந்தனர். இதற்கிடையில் அவர் எழுத்துக்கள்மீதான நடுநிலையான நல்ல விமர்சனங்களைத் தேடிப்படிப்பது அப்போது எனக்கு இலகுவாயில்லை. புதிதாக இலக்கிய உலகம் அல்லது படைப்பாளிகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் உள்வருகிற இளைய தலைமுறைக்கு இந்த நடுநிலையான நல்ல விமர்சனங்கள்
உதவியாக இருக்கமுடியும். ஆனால் அது நம் சூழலில் குறைவாகவே இருக்கிறது. ரசிக மனோபவத்தில் வானுயர்ந்த பாராட்டுக்களும், இல்லாவிட்டால் பாதாளத்தில் போட்டு மூடிவிடும் அளவில் மண்நிரப்பும் வேலைகளும் அதிகமாய் நடக்கின்றன. இலக்கியவாதிகளிடமும் அரசியல்வாதிகளை மிஞ்சிய அரசியல் வந்துவிட்டிருக்கிறது. தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் எத்தனங்களும், இன்னொருவனைத்
தனக்குமேல் வளரவிடாமல் பார்த்துக்கொள்ளும் குள்ளநரித்தனங்களும், கூட்டங்களில் அடித்துக்கொள்ளும்வரையான கலாசாரமும் விரவிக் கிடக்கிறது. இலக்கியத்திற்கு நல்ல எழுத்தாளர்கள், நல்ல விமர்சகர்கள், நல்ல எழுத்துக்களை இனம்கண்டு படிக்கிற வாசகர்கள்,
அவற்றைப் பதிப்பிக்கிற பதிப்பகத்தார் எனப் பலவும் ஒருங்கே அமையவேண்டியிருக்கிறது.

வைரமுத்துவின் பாடல்கள், தனிக்கவிதைகள், நாவல்கள், கட்டுரைகளில் பாடல்களே அவரை அதிகம் முன்னிறுத்துபவை. நாவல்களில் திரும்பத்திரும்ப அலங்கார வார்த்தைகளையே படிக்க நேரிடும்போது அலுப்பு வந்ததுண்டு. தனிக்கவிதைகளுக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரால் உருவாக்கப்பட்ட பாணி இப்போது நவீன இலக்கியவாதிகளால் "அது கவிதையே இல்லை" என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இன்றும் சாதாரண மக்கள் கூடுகிற சபைகளில் வைரமுத்துவின் கவிதைகள் உடனே
பொருள்புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் எழுத்து யாருக்காக? என்ற கேள்வியும் அது பாமரனுக்கும் என்றால் வைரமுத்துவின் எழுத்து பாமரனுக்குப் புரிவதாய் இருக்கிறது. இப்போது என்ன சொல்வது? என்கிற இன்னொரு கேள்வியும் வந்து
போகிறது. நான் படித்தவரை வைரமுத்துவின் நாட்டுப்புறக்கவிதைகள்தான் எனக்கு மிகவும் பிடித்தவை. அவருடைய தனிக்கவிதைத் தொகுப்புகளில் இம்மாதிரிப் பல கவிதைகளைப் பார்க்கலாம். நாட்டுப்புற மனிதன் அல்லது மனுஷியின் வாழ்வியலை அவர்கள் மொழியில்
அவர்களே பேசுவதுபோல் அமைந்த அக்கவிதைகள் படிக்கும்போதே மனதில் இறங்கி உட்கார்ந்துகொண்டவை. இப்போதைக்கு ஒன்றை நினைவிலிருந்து எடுத்து எழுதுகிறேன். கிராமத்தில் வளர்ந்த இரண்டு தோழிகள் திருமணமாகிப் பிரிகின்றனர். பின்னொரு காலத்தில்
ஒருத்தி இன்னொருத்தியை நினைத்து ஏங்குகிறாள். கவிதையின் பெயர் "தோழிமார் கதை".

ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து
கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்
போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!