நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Friday, December 30, 2011

எல்லோர்க்கும் அன்புடன்....

எல்லோர்க்கும் அன்புடன் என்று இதைத் தொடங்கவேண்டுமா? அல்லது "ஏன் இந்தப்பக்கம் தலையே காட்டவில்லை என்று கைநீட்டி அழைத்த கயல்விழிமுத்துலட்சுமிக்கு அன்புடன் என இதைத் தொடங்க வேண்டுமா என்று தெரியவில்லை. அவர் அனுப்பிய கடிதத்தின் பின் தான் நெடுநாட்கள் கிடப்பில் போட்டிருந்த வலைப்பக்கம் பற்றிய ஞாபகம் தட்டியது. மரங்களின் மௌனத்தை ரசித்தபடி தரையில் தலைகிடத்தியிருக்கும் பட்டம் ஒரு திடீர் அசைவில் எழுந்தாடுவதுபோல் வாழ்வின் கணங்களும், எழுத்தும் எல்லாம்.

ஓரிரு நாட்களில் புத்தாண்டு தொடங்குகிறது. இதையெல்லாம் சலனமின்றிக் கடந்துகொண்டிருந்த மனதில் வழமைக்கு மாற்றாய் எண்ணப் பின்னல்கள். பழைய வரவு செலவுக் கணக்கென்று பார்த்தால் மகிழ்ச்சி, வருத்தம், நண்பர்கள், பகைவர்கள், லட்சியம், அலட்சியம் என்று சகலவற்றிலும் கொஞ்சம் சம்பாதித்தோம், கொஞ்சம் இழந்தோம் என்று கடந்த ஆண்டைச் சுருட்டி வைத்துவிடலாம்தான். ஆனாலும் பன்னிரண்டுக்கொரு முறை தலைநீட்டும் குறிஞ்சியாக மூச்சுமுட்டும் லௌகீகப் பயணத்தில் கொஞ்சமே கொஞ்சமேனும் மானுட சீவிதத்தில் நிறைவு கொள்ளும்படியான செயல்களை அடையாளம் கண்டு இணைந்துகொள்ள வைத்த வகையில் 2011 ஒரு நல்ல ஆண்டே.

இனிவரும் ஆன்டு தனக்குள் என்னென்ன ஒளித்துவைத்திருக்கிறதென்பது போகப்போகப் புலனாகும். ஒரு மயிலின் விரிக்காத தோகையைப்போல் அது இப்போது வெறுமனே நீண்டு கிடக்கிறது. இதுவரை பார்த்திருக்காத ஒரு பூவின் நிறத்தை, அறிந்திருக்காத தொடுகையை, கேட்டு மறந்துபோன பாட்டொன்றின் மெட்டை, புதிய காதலொன்றின் மலர்ச்சியை, வடிவமற்ற வெளியொன்றின் தொடக்கத்தை, எங்கோ விட்டுப்போனதொன்றின் தொடர்ச்சியை இப்படி எதையும் இனிவரும் ஆண்டும் வழங்கலாம். கேட்டதைக் கொடுக்கும்படியான ஆண்டாகவோ அல்லது கொடுத்ததை ஏற்கும்படியான மனம் தரும் ஆண்டாகவோ 2012 எல்லோர்க்கும் அமையட்டும். எனக்கு எப்போதேனுமேனும் இங்கே எழுத வந்துபோகும்படியான ஆண்டாகவும் 2012 அமையட்டும்:))