நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, April 22, 2010

தர்மசபை




தர்மசபையைக் கடக்க நேரிடுகையில் எல்லாம்
நியாயங்களின் கூச்சல்கள் குருதிபுகத்தான் செய்கின்றன
இராமனும், தருமனும் கண்ணனும் தீர்ப்பெழுதும் அரங்கத்தில்
சீதையும் திரௌபதியும் எங்கிருக்கலாம் என்பது அறிந்ததுதான்
என்றாலும் சபை நடுங்கும் குரலெடுத்து
நீதியைக் கைகால் தலை பிரித்து அவர்கள் கூறிடும் அழகை
வீதியின் முனையொன்றிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்

வீடணனோ, கும்பகர்ணனோ, துரியோதனனோ, இவனோ, அவனோ
எவனோ ஒருவன் அகப்பட்டிருக்க வேண்டும் இன்றைய பரிபாலனத்திற்கு
ஏன் எவளோகூடக் கூண்டிலேற்றப்படவும் வாய்ப்புண்டு
குரங்கொன்றுக்குக்கூட நேராய்நின்று மோட்சம்தரத் திணறிய ராமந்தான்
தொண்டை புடைக்க நியாயங்களை விளக்குகிறான் தர்மசபையில்
குறிப்பெடுத்து ஏகபத்தினி விரதனை வழிமொழிகிறான் தர்மன்
தன் கருத்த தேகம் அதிர அரியாசனத்திலிருந்து இறங்கி
கையொப்பமிட்டு அதையே முடிவென்று எழுதுகிறான் கண்ணன்

சத்தியத்துக்கு நேர்ந்த சோதனையைத் தீர்த்துவைத்த
பெரும்களைப்பில் அதோ நீதிதேவன்கள் படியிறங்குகிறார்கள்
லட்சுமன, அர்ச்சுன சகாதேவன்களும் கைக்குட்டைகள் சகிதம் பிந்தொடர்கிறார்கள்
புனிதாத்மாக்களில் துளிர்த்த வியர்வை ஒற்றி எடுக்க


காதலோ கண்ணீரோ பெருக தர்மசபைநோக்கி
வெகுதூரத்திலிருந்து பதைத்து ஓடிவரும் ராதைக்குச் சொன்னேன்
"காத்திரு ராதா! சத்தியங்களும் சோதனைகளும் மாறினாலும்
சபையும் நீதிதேவன்களும் இதுதான் இவர்மட்டும்தான்
நாளை தன் அடியார்கள் பூத்தூவ மீண்டும் வரும்
கண்ணன் உனக்குத் தன் கைதூக்கி அபயமளிப்பான்"

படத்துக்கு நன்றி: www. blog.jennescalona.com

Sunday, April 11, 2010

குகையறிந்த குறிப்புகள்




அசைவுறா மௌனங்களாய் அந்தக்குகைகள் நிற்கின்றன
ஆராய்ச்சியாளர்களின் அளவைகளில் அவை இல்லை
வீசும் காற்றில் மெல்லிசையைக் கசியவிட்டு , கடப்பவர் வழியில் சிற்றதிர்வைப் பரப்பி
தம் இருப்பைத் தாமாகவும் அறிவித்துக்கொள்ளவில்லை குகைகள்
மழையடித்த பகலில் தான் ஈன்று புறந்தள்ளிய உயிரின்மீது
புலித்தாயொன்று ஒழுக்கிய பரிவின் ஈரம் குகைவாசலில் உண்டு
சிங்கத்தின் காலடியில் கண்கள் வெறித்தடங்கிய மான்களிலிருந்து
வலுத்தவன் இளைத்தவன் வரலாறுகளை உள்வாங்கி
வருடங்களாய் வைத்திருக்கின்றன குகைகளின் கண்கள்
சூழ்ச்சிகளைக் கைக்கொள்வது எப்படியென்ற புனிதநரிகளின்
பாலபாடங்கள் நடப்பதற்குத் தேர்வான இடங்களில்
குகைகளின் இருள்கவிந்த உட்பக்கங்களும் உண்டு
நீங்கள் எப்போதும் வாசிக்கிற நெய்வடியும் கதைகளுக்குமப்பால்
வாசனையற்று அரூபித்திருக்கின்றன
சிங்கம், புலி, நரிகளின்
குகையறிந்த குறிப்புகள்