நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, February 09, 2011

நான் யார் தெரியுமா?

இன்று எதேச்சையாக எதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது தோழி சொன்னாள், வெளியே எங்கள் குடியிருப்புக்குச் சொந்தமான பூங்காவில் விளையாடுகிற இங்கிருக்கிற இந்தியக் குழந்தைகள் தங்களுக்குள் குழு அமைத்துக் கொள்வதும், வலுவான குழு வலுவற்ற தனிக் குழந்தைகள் அல்லது குழுவை அவமானப்படுத்துவதுமாக நடந்துகொள்வதை.
அவர்களுக்குப் பெரியவர்கள் மீதும் எந்த ஒரு மரியாதையோ, மதிப்போவும் இல்லாதிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டு ஒரு உதாரணம் சொன்னாள், தன் ஒரு வயதுப் பெண் குழந்தையை அதே பூங்காவில் விளையாடவிட்டுக் கொண்டிருந்தபோது அருகே இருந்த ஒரு ஐந்து வயது இந்தியச் சிறுவன் இவள் கண் எதிரிலேயே இவள் குழந்தையின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறான். இவள் "அப்படிச் செய்யக்கூடாது, பாப்பாவின் கண்களில் மண் விழும்" என்று சொல்லியிருக்கிறாள். மீண்டும் அந்தச் சிறுவன் நிறுத்தாமல் அதைச் செய்யவே "நீ நிறுத்த வேண்டும்" என்று தன் குரலில் கொஞ்சம் கடுமையைக் கூட்டியிருக்கிறாள். அதற்கு அந்தச் சிறுவனின் பதில் "என்னைப் பார்த்துச் சத்தம் போடுகிறீர்களா? நான் யார் தெரியுமா? என் கடைசிப் பெயர் என்ன தெரியுமா?" என்று அவனும் கடுமையான மொழியிலேயே பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் இந்தக் குழந்தைகளின் மனதிலும் பரவும் வன்முறை பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். நாளைய உலகைப் பற்றிய நம்பிக்கைகளினும் மேலாகப் பயங்களும் கவ்வ ஆரம்பிக்கின்றன. ஏழு வயதைத் தொட்டிருக்கும் மகன் என் துணையின்றி மெல்ல மெல்லத் தானாகத் தன் நட்புகளைத் தேடிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான். தானே பொறுப்பேற்றுத் தேர்வு செய்தாலும் பிறகு நட்பின் பிரச்சினைகளைக் கையாளத் தெரியாமல் அவன் குழப்பங்கள் கொள்ளும்போது கூட நிற்கிறோம். வீட்டில் அவனினும் ஐந்து வயது இளைய குழந்தையிடம் அவன் நாளும் காட்டியாகவேண்டிய பொறுமையிலிருந்தும், புத்தகங்கள் இன்னபிற நடைமுறை நிகழ்வுகள் சார்ந்த வகுப்புகளிலிருந்தும் ஆரோக்கியமான, அனுசரனையான உறவுகளைப் பிறரிடம் பேணுவது பற்றிய அறிவை ஓரளவு பெற்றே இருக்கிறான். ஆனாலும் கைகளில் கத்தியிலாவிட்டாலும், கவசங்களேனும் இல்லாமல் நிற்க பிஞ்சுகளுக்கும் முடியாதுதான் போலும்.

ஆசையாகத் தேர்வு செய்த நண்பன் ஒருவன் நாட்கள் செல்லச் செல்ல இவனைத் தனக்குக் கீழே ஏவும் எல்லாவற்றையும் செய்பவனாக ஆக்கப் பார்ப்பதாக உணர ஆரம்பித்தான். தன்னைப் பற்றிய பெருமைகளை முன்வைப்பதில் சளைக்காதவனாகவும், மற்ற குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் "அதுக்கு இப்ப என்ன?" என்று நக்கலைப் பதிலளிப்பவனுமாகத் தன் நண்பன் இருப்பதை உணர்ந்த தருணத்தில் "இப்படிப் பேசுவது மற்றவருக்கு நீ மரியாதை தருவதாக இல்லை" என்று தனக்குத் தெரிந்ததைக் கூறியுமிருக்கிறான். அதற்கு நண்பனின் பதில் "மரியாதைன்னா என்ன?".
இவனிடமிருந்து எல்லாப் பொருட்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புபவனாகவும் அதேசமயம் தன் பொருள் ஏதையும் இவன் தொட்டாலும் "எங்க அம்மா யாருக்கும் கொடுக்கக் கூடாதுன்னு(இந்திய அம்மாதான்) சொல்லியிருக்காங்க, ஏன்னா என்னோடது புதுசு, அதோ அங்க நிக்கறாம்பாரு... அவன் தன் பொருளை எல்லோருக்கும் கொடுப்பான், அதப் போயி எடுத்துக்க" என்று அறிவுரை சொல்பவனுமாக நண்பர் போய்க்கொண்டிருக்கவே ஒரு கட்டத்தில் "இந்த நட்பிலிருந்து நான் எப்படி வெளிவருவது?" என்ற ஆலோசனைக்காக எங்களிடம் வந்து நின்றான். நட்பை ஆரம்பிப்பது எளிதானதாகவும், முறிப்பது கடினமானதுமாகவே இருந்து விடுகிறது எல்லா வயதிலும். பிறகு அவன் ஆசிரியை, முதல்வர் உள்ளிட்ட ஆலோசனையின் பேரில் முடிவு செய்தோம் பிரித்து விடுவதே சிறந்தது என்று. ஒரு நட்பின் வெற்றிடத்தை இன்னொரு நட்பால் காற்றுபோல வந்து நிரப்பிவிட்டுக் கொண்டேவும் இருக்கிறது காலம் எல்லோருக்கும். இது பலருக்கும் ஏற்படுகிற அனுபவம்தான். ஆனாலும் கேள்விகள் எழுகின்றன.

எந்த மாசுமற்ற மனங்களிலும் கழுவ முடியாத கறைகள் எங்கிருந்து வந்து படிகின்றன? புத்தகங்களும், பாடங்களும் பள்ளிகளில் அடுத்தவன் மேலான அன்பை வலியுறுத்திக் கொண்டிருக்கக் கண்களுக்குப் புலப்படாத கத்திகளோடு கல்விச்சாலைகளிலும் பிஞ்சுகள் ஏன்? நம் வீடுகளும், குடும்பங்களும் குழந்தைகள் என்ற பெயரில் எவற்றை உற்பத்தி செய்கின்றன? அவர்களின் மனதிலும் நம் மன அழுக்குகளைக் கொட்டி கொட்டியே நாம் குழந்தைகளுக்குப் பதிலாகக் குப்பைத் தொட்டிகளையா வளர்த்துக் கொண்டு வருகிறோம்? யோசிப்பதற்கும், செயல்படுவதற்கும் பல விசயங்களைக் கூப்பிட்டுச் சொல்கிறது நிகழ்காலம். முதன்முதலாக மகனை இரண்டு வயதில் நூலகத்தின் விளையாடும் இடத்தில் விட்டிருந்தபோது இவனினும் கொஞ்சம் பெரிய பெண்குழந்தை ஒன்று இவனுக்குப் பொம்மைகளைத் தராமல் எடுத்து வைத்துக்கொண்டது. இதைத் தூர இருந்து கவனித்த முடியும், முகமும் ஒரே வெளிர் நிறமான பாட்டி வந்து அந்தப் பேத்திக் குழந்தைக்குச் சொன்னாள், "அவனை உனக்குத் தெரியாது என்றோ நண்பன் இல்லை என்றோ பகிரமறுப்பது மோசமான செயல், நீ அவனோடு சேர்ந்துதான் விளையாட வேண்டும்" என்று. அந்தக் குழந்தையும் செய்தது. இதோ ஆறு வயது இந்திய தேவதை தன் தோழியிடம் கூறிக்கொண்டு விலகி நடந்துகொண்டிருக்கிறாள் "she doesn`t belong to us" என்று.

பல் இனம், பல் கலாச்சாரம் சூழ்ந்த வாழ்வியல் சூழலிலும் நாம் நம் இந்தியக் குழந்தைகளைத் தனித்துத் தெரியும்படியாகவேதான் வளர்த்து வருகிறோமோ என்றும் சில நேரங்களில் எண்ணத்தோன்றுகிறது.