வெறும் நாள்
ஒரு வெறும் நாளின் அசைவுகளை எந்த மொழியிலும் பொருத்த முடியவில்லை
வெறும் நாள் சுருண்டு படுத்திருந்த பாம்பு தலைதூக்கிப்பார்ப்பதுபோல் விடிந்தது.
வாசலில் எந்தநாளும் போட்டிராத கோலத்திற்காகப் புள்ளிகளை மட்டும் அது வைத்தது
தன் நியாயங்களைச் சுவற்றில் கோடுகளாகக் கிழித்தது
மதியத்து வாசலில் ஒரேயொரு வெள்ளைப்பூவை உதிர்த்தது
எதுவும் சொல்லாமல் கையசைத்துச் சென்று மறைந்தது
தூங்குகிற குழந்தையின் கைகள் விரித்தபோது கவனித்தேன்
கனமான மலையொன்றாய்க் கடந்து மறைந்த வெறும் நாளின் அசைவுகள்
உவமையற்ற மென்மையை எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறது
யாரொருவரும் கையளிக்காத ஆதூரத்தில் நனைத்தெடுத்து