பாதை
வலையில் எழுதுவது நிர்ப்பந்தங்களற்றுப் போனதால் சில மாதங்கள் பக்கத்தையே திறந்து பார்க்கவில்லை. நண்பர்கள் ஜோதிஜி, இரா.தங்கபாண்டியன், போலூர் தயாநிதி, விஜி ஆகியோரின் பின்னூட்டங்கள் நாள்கணக்கில் காத்திருந்தன போலும், இன்றுதான் பிரசுரித்தேன். மன்னிக்கக் கோருகிறேன்.
இன்று ஏதோ ஒரு பொழுதில் தோன்றிய இந்த ஒற்றையடிப்பாதைக்காய்ப் பக்கத்தைத் திறந்தேன்.
நடந்து நடந்து புற்களைக் கொன்று
போட்ட ஒற்றையடிப்பாதை
தனித்துக் கிடக்கிறது
மீண்டும் படர்கின்றன புற்களின் வேர்கள்
கால் அழுத்தமற்ற ஆசுவாசத்தோடு
கொன்றை மரம்கூட
பூக்களை உதிர்த்திருக்கிறது
கொண்டாட்டச் சிவப்பில்
மெல்ல ஊர்ந்து நகர்கின்றது
இரைவிழுங்கிய நாகம்
தன் உடல்தடத்தைப் பதித்தபடி
சந்தடியின்மையில் பெருமூச்செறிந்து
இன்னும் முழுதும் அழிந்திடாத
பாதை காத்திருக்கிறது
காலடி ஓசைகளைக் கனவினில் சுமந்து
இருந்தாலென்ன?
திசைகளை அழித்த கால்களுக்கில்லை
இனியெப்போதும்
நினைவுகள் கனக்கும் பாதையின் பாரம்