நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Monday, April 30, 2012

உங்களுக்கென்ன?

உங்களுக்கென்ன? மீன் பிடித்த வலையை மேலே தூக்கிய பிறகு கண்ணிகள் வழியே கடல் மடிக்குள் கசியும் நீர்த்துளிகள் போல் அன்பைக் கசியவிட்டு அந்தப்பக்கம் நகர்கிறீர்கள். இன்று முழுதும் அந்த ஈரம் அழுத்தக் கிடந்தேன், உங்களுக்கென்ன? உங்களுக்கென்ன? பூக்கள் மட்டுமல்ல, இலைகளும் இல்லாதொரு பருவத்தில் மரம் நிற்க முன்பொருநாள் கனியீன்ற செயல்சொல்லிப் பறவைகளாய் அமர்கிறீர்கள். இனி மரம் மழை ஈனும் பருவத்திற்கு மனுப் போட்டுக் காத்திருக்கும். உங்களுக்கென்ன? போர் இல்லை, பூசல் இல்லை, சிறியதொரு அகல் விளக்கில் சமாதானக் கதிர் வீச சர்வம் அமைதி மயம் என்ற உங்கள் ஓலை வந்ததுதான். ஆனால் கவனமே சிதறாது கையில் வைத்திருந்தும் கங்குகளைச் சிதறவிட்டுக் காட்டுத்தீ மூட்டிவிடும் காற்றுப் பயம் இன்னும் கனவில் வருகிறதே! உங்களுக்கென்ன? பின் குறிப்பு:- இந்த மொக்கை இன்று "ஏன் எழுதுவதில்லை" எனக் கேட்ட செந்திலான், தருமி இருவருக்கும் சமர்ப்பணம்:))