ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
மனிதர்களை இரைச்சலுக்குள் புதைத்துவைத்திருக்கும்
இக்கொடும்நகரில்
சிறுதெருவின் முனையொன்றில்
பேரானந்தப் பெருவாழ்வு சுகிப்பவளாய்
புன்னகைத்து நடந்தபடியிருக்கும்
அக்கிறுக்கிதான் விதைத்திருக்கவேண்டும்
எனக்குள்ளும் அப்படியான ஆசையை
பேருந்து நிறுத்தம் அவள் படுக்கையறை
கைப்பைசுமந்தோடும் காரியதரிசிகளும்
நகரும் வாகனங்களின் அலறும் ஒலிப்பான்களும்
ஒன்றும் செய்யமுடியாத அவள் தூக்கத்தை
புத்தகப்பையுடன் கட்டப்பட்ட சிணுங்கும்சிறுவன்
கடக்கும் சிறுநொடியில் கலைத்துவிட்டுப்போகிறான்
அவன் அழுகுரல் கேட்டுணரும்
கிறுக்கியின் காதுகள் கூர்மையானவை
சாக்கடை அவள் ஓய்வறை
முடப்பட்ட நாற்றங்களாய்
ஒளித்துவைத்துக்கொண்ட மனங்களை
சுமந்துதிரியும் மானுடரோடொப்பிடுகையில்
இத்திறந்த சாக்கடை
பெரும்நாற்றமில்லையெனச் சிரித்திருக்கிறாள்
கிறுக்கியின் நாசிகள் பலமானவை
சிரிப்பதற்கு அவள் சலிப்பதில்லை
வீட்டிற்கு வருவோரை
'வீதிமுனையில் பைத்தியம் இருக்கிறது
பார்த்துப்போங்கள்' என தவறாது சொல்லும்
வைரமூக்குத்திக்காரி வழியில் பட்டாலும்
தலையாட்டிச் சிரிக்கிறாள் கிறுக்கி
அவளுக்கு யாருடனும் உடன்பாடில்லாததைப்போல்
முரண்பாடுகளுமில்லை
கிறுக்கி ஒரு ஞானி
அவளுக்கும் உண்டு நண்பர்கள்
பக்கத்துப் பள்ளிக்கூடத்தின்
மீந்த சத்துணவு கிறுக்கியின் வட்டலில்
அதையும் பங்கிட்டுக்கொள்கிறாள்
எசமானர்கள் இல்லாத
எலும்புதுருத்திய நாய்களுக்கும்
கூரைமேல் புதுப்படையல் வாய்க்காத
இறக்கை இளைத்த காக்கைகளுக்கும்
கிறுக்கி ஒரு உயிர்நேசி
அவளுக்கென உண்டு ஒரு மொழி
சாம்பலைக்கிளறி கரித்துண்டுகளெடுத்துவந்து
அதட்டும் குரல்களற்ற ஆதரவான நாட்களில்
தெருவோரச் சுவரொன்றில்
எழுதிக்கொண்டிருக்கிறாள் கிறுக்கி
வாழ்வு ஒரு சமுத்திரம் என்றோ
அது ஒரு காட்டாறு என்றோ
அல்லது அது ஒரு பனித்துளி என்றோ
எழுதியிருக்கலாம் அவள்
அதற்கான காரணங்களையும் சேர்த்து
பைத்தியம் கிறுக்கியிருக்கிறதென
மனிதர் சுண்ணாம்புகொண்டு அழிப்பதற்குமுன்
அவசரமாய்ப் படித்துக்கொண்டிருக்கின்றன
நிலவும் நட்சத்திரங்களும்
இரவில் நெடுநேரம் கண்விழித்து
யார் கண்டது
அவற்றின் நாளைய ஒளியில்
கிறுக்கியின் மொழி கசிந்தாலும் கசியும்.
நண்பர் ஆழியூரான் கிறுக்கு ஆட்டத்துக்கு அழைத்ததோடு தனிமடலிட்டும் எழுதியே ஆகவேண்டுமென அன்புக் கட்டளை இட்டிருந்தார். சட்டென எழுதமுடியாமல் மனம் சண்டித்தனம் செய்தபோது அவரிடம் வாய்தா வாங்கிக்கொண்டே காலம் கடத்திவந்தேன். ஆனால் அவ்வப்போது உள்ளே கிறுக்கலாய் இதுகுறித்த எண்ணங்கள் வந்தபடியுமிருந்தன. சமீபமாகத்தான் கண்ணுற்றேன் விஎஸ்கேவின் பதிவிலும் எனக்கு ஒரு அழைப்பு இருந்தது. இருவருக்குமாய் சேர்த்து இன்று அரங்கேற்றம்:)
கிறுக்கா, கிறுக்கா நான் கிறுக்கேதானா......
காலா, அரையா, இல்லை முழுசேதானா......
இளசா, நடுவா, இல்லை முத்தலேதானா......
இன்னும் பதிலறியாத தேடல்கள் பல இருப்பதுபோல் இதுவும் உண்டு. குணங்களையும், அன்றாட நடவடிக்கைகளையும் வைத்துத்தான் இது முடிவுசெய்யப்படும் எனில் நீங்கள் என்னை எப்படியும் முடிவுசெய்துகொள்ளுங்கள் என்று பெரும்பொறுப்பை(!!!) உங்களுக்கே கொடுத்து நான் உதவியாகச் சில குணங்களை எழுதிவிட்டு நகர்ந்துகொள்கிறேன்:))
1. பேரொலி மழையின் முடிவொன்றில் பெரும்வெள்ளம் கரைபுரண்டு ஓடப் பள்ளிக்கூடம் சென்றிருந்த பிள்ளைகளைத் தாவிப் பிடித்தும், தட்டுத் தடுமாறியும் கரைதாண்டி வீடுகொண்டுவந்துசேர்க்கும் முயற்சியில் பெரியவர்கள். ஒவ்வொருவராய்க் கரைதாண்டிக் கொண்டுவந்துவிட்டு நாங்கள் பத்திரமாய் வீடுபோய்ச் சேர்வோமென்ற நம்பிக்கையில் திரும்பிப் போனார்கள். எல்லோருடனும்தான் இருந்தேன். எப்போது
விலகினேன் எனத் தெரியாது. ஓரமாய் உடைந்திருந்த ஒரு சிறுபாலம் மீது உட்கார்ந்தபடியே செங்கலரில் சினந்தோடிய வெள்ளத்தில் மூழ்கிய பார்வையைத் திருப்பி எடுக்கமுடியவில்லை. அப்படியே மணிக்கணக்கில் அந்தப் பெருவெள்ளத்தின் பேரொலியில் என்ன கண்டிட்டேன்? தெரியாது. வீட்டிலிருந்து வீதிக்குவந்து பிள்ளையைக் காணாத அதிர்ச்சியிலும், ஓடிய வெள்ளத்தில் மிதந்துபோன கருப்புநிற உருண்டையான
பொருளையெல்லாம் அது என் தலையாக இருக்குமோ என்ற பீதியிலும் சேர்ந்திருந்த துக்கத்தை என்னைக் கண்டுபிடித்தவுடன் அழுது கரைத்தார் அம்மா. அப்போதும் இப்போதும் அம்மாவின் அந்த அழுகை எதுவும் செய்யவில்லை. ஆனால் அந்த வெள்ளம் இன்னும் உள்ளே ஓடியபடி இருக்கிறது.
தண்ணீர் அருவியாய்க் கொட்டுகிற இடத்தில் யார் உடனிருந்தாலும் அவர் தெரிவதில்லை. மழையாய்ப் பெய்கையில் குடைவிரிக்கும் பழக்கம் பிடிப்பதில்லை. பனியாய் உறைகையிலும் உயிர்குடிக்கும் குளிரென்றாலும் அதில் உலாவவே பிரியம். நான் தள்ளியிருந்தாலும் எனக்குள்ளிருந்து எழும் ஒருத்தி தான் சலிக்கும்வரை இங்கெல்லாம் கூத்தாடியே திரும்புவாள். அவளின் கூத்தாட்டப் பொழுதுகளில் மற்றவர்களுக்கு நான் ஒரு செவிடி, குருடி, ஊமையும்கூட.
2. ஒரு பெரியம்மா தூக்கு மாட்டிச் செத்துப்போனார். அடுத்த வீட்டில் கிடத்தியிருந்தார்கள் சவத்தை. சன்னல் வழியாய் நிகழ்வுகள் பார்த்தேன். அங்கே அழுதவர்களில் எத்தனைபேர் உண்மையாய் அழுதார்கள், எத்தனைபேர் ஒப்புக்கு அழுதார்கள் என்று பகுத்தாயும் வயதில்லை. எதற்கு அழுகிறார்கள் என்ற கேள்வியுமில்லை. வெறுமனே பர்த்துக்கொண்டிருந்தேன். சுடுகாட்டில் வைத்துத் தீமூட்டிவிட்டு எல்லோரும்
வீடுவந்துசேர்ந்தபிறகு நான்மட்டும் தனியாகப் போய்ச் சுடுகாட்டுக்குக் கொஞ்சம் தள்ளியிருந்த
பாறையொன்றின் மேல் நின்று அந்தப் பெரியம்மா இன்னும் எரிந்துகொண்டிருக்கிறாரா எனப்
பார்க்கத்துவங்கி தீச்சுவாலை முழுதுமாய் அணையும்வரை நின்றுகொண்டிருந்தேன். ஏன் செய்தேன் தெரியாது.
இப்போதும் இப்படியான அனிச்சை அவதானிப்புகள் நிறைய உண்டு. குழந்தை, பறவை, என சில கடந்துபோகும்போது நினைவு ஒருங்குவித்த கவனிப்புகளில் இருப்பேன். எந்த அவசரமும் இந்த நேரச் செலவழிப்புகளைப் பறித்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. சோறு, தண்ணி எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
3. 100 சதவீத ஆசை. ஒரு வேலை, ஒரு நட்பு, ஒரு உறவு அதில் எதுவென்றாலும் ஏற்றுக்கொண்டபின் அதில் என் பங்களிப்பை 100 சதவீதம் செய்யாவிட்டால் அல்லது செய்யமுடியாத எதிர்பாராத் தடைகள் வந்தால் மண்டைகுறுகுறுக்க, மனசு உறுத்தி, சித்தம் சிதறி ஒரு ஒழுங்கில்லா மொழியில் உளறிக்கொண்டிருப்பேன்.
4. தண்ணி அடிப்பதில்லை என்றாலும் நிறையக் குடித்துவிட்டு சாலையில் நினைவிழந்துகிடப்பவனுக்கான மயக்கம் வருவதுண்டு ஒரு நல்ல புத்தகம் படித்து முடிக்கும்போது. ஒரு மாலையில் சந்திக்கும் நபர் தன் குரல்கிழித்து, வியர்வை துடைத்துப் பேசிக்கொண்டிருந்தாலும் நான் "நீ என்ன பேசினாலும் என்னை ஒன்னும்
செய்யமுடியாது" என்ற பாவனையில் அமர்ந்திருந்தால் மனதுக்குள் அன்று படித்துத் தொலைந்த புத்தகம் பேசிக்கொண்டிருக்கிறது என்று பொருள். அடிக்கும் தொலைபேசியில் உயிர்நண்பன் அழைத்தாலும் அது அவனுக்குரிய எண்ணென்று தெரிந்தாலும் எடுக்காமல் அதேபோல் பார்த்துக்கொண்டிருப்பேன். "இன்று குடித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு ஒருவரிடம் சிலவிடயங்களைப் பேசும் அல்லது பேசாத முடிவெடுப்பதுபோல், உன்னிடம் படித்திருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு எதையும் செய்யவேண்டியிருக்கிறது"
என்பது என்மேலான நானும் ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டு.
5. யோகா படிக்கிறேன் என்றெல்லாம் ஆரம்பித்து முடித்து இப்போது யாராவது தனிப்பட்ட சுயநலம்சார்ந்த பிரச்சினைகளைச் சொல்ல ஆரம்பித்தால் "இதுக்கு ஏன் கவலைப் படறீங்க? எதையுமே நடந்தா நல்லது, நடக்காட்டி ரொம்ப நல்லதுன்னு இருந்து பாருங்க வாழ்வில் எதற்கும் கவலை வராது" என்று எடுத்துவிடுவது, தங்கம் பணம் பொருள் என எது தொலைந்தாலும் நானும் சிறுதுளியும் கவலையின்றி இருக்கத் துவங்கியிருப்பது இதெல்லாம் வீட்டிலுள்ளவர்களுக்கு எப்போதாவது கவலை தந்தவண்ணம் உள்ளது "எங்கே இவளே ஒருநாள் தொலைந்து போவாளோ?" என்று. "ஏற்கனவே எங்கோ தொலைந்துபோய்த்தான் வேறு வேறு இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறேனாக்கும்" என்று பதிலுக்கும் நான் எதையாவது எடுத்துவிடுவது அதைவிடக் கொடுமையாக இருக்கும் அவர்களுக்கு:))
6. இருபத்தைந்து கிலோவைத் தலையில் வைத்து இருபதுமைல் நடக்கச் சொன்னாலும் சுமையாய் இருக்காது. இரண்டு அல்லது மூன்று வாண்டுகளை ஒரேசமயம் தூக்கிக்கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாடிகள்கூட ஏறினாலும் சுமையாய் இருக்காது. இந்தநாள், இந்த நேரத்திற்குள் இந்த வேலையைச் செய்து முடிக்கவேண்டும் என்று கொடுக்கப்பட்டாலும் சுமை அழுத்தாது. இவ்வளவு பளுவானாலும் தூக்கிவிட முடியும் என்ற திமிர் உண்டு. ஆனால் இரண்டு சொற்களைச் சொல்லப்படவேண்டிய இடத்தில் சொல்லாது விட்டுவிட்டால் அது மனதில் பெரும்சுமையாக இருந்து அழுத்தும். ஒருவருக்கு அதைச் சொல்லாது விட்டதை
ஒரு பத்துப் பேருக்காவது சொல்லிப் பாரம் குறைக்க முயன்றாலும் விடாது கனக்கும் அவை. அவை மன்னிப்பு, நன்றி என்ற இரண்டும்தான். அறியாமையாலோ, விளங்காமையாலோ ஒரு தவறு செய்துவிட்டேன் என்றால் அது யாரென்றாலும் பிறகு யோசித்து உணர்கையில், அல்லது நான் பொறுப்பான ஒன்றிற்கு நான் சரியாகப் பங்காற்றவில்லை என்று வந்தால் சம்பந்தப்பட்ட இடத்தில் மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும். அதேபோல் நன்றி. இந்த வார்த்தை படுத்தியபாட்டுக்கு ஒரு கதை சொல்லலாம்:))
பத்து மாதங்களாய் உள்ளே சாகசங்கள் நிகழ்த்தியவண்ணம் ஒட்டிக்கொண்டிருந்தவர் வெளியேவரத் துடித்தார். வலிவந்து மருத்துவமனை போய், கொண்டவர் கூட இருக்க, கூட இருந்தும் வாங்கமுடியாத வலியைப் பார்த்ததில் அவர் துவண்டு போயிருக்க, 16 மணிநேரங்கள் சுகப்பிரசவத்திற்குக் காத்திருந்த மருத்துவர் இனியும் தாமதிக்க முடியாதென அவசரகதியில் அறுவைசிகிச்சை முடித்து மாதக்கணக்காய் மறைந்திருந்து மகிழ்வித்த உயிரை நேரில் எடுத்துக் காண்பித்தார். இரண்டு மூன்று முறை மயக்கமருந்து கொடுக்கப்பட்டும்
அந்த முகம் பார்க்கும் நிமிடம்வரை ஒரு வைராக்கியத்தில் பிடித்துவைத்திருந்த நினைவு அதற்கொரு முத்தம் பதித்த அடுத்த நொடி காணாமல் போனது. அதற்குப் பிறகு எதுவும் தெரியாது. கிழிக்கப்பட்ட வயிறு ஒட்டப்பட்டதோ, வெறும் மயக்கம்தானா? வேறேதும் நிகழ்ந்துவிட்டதா எனத் துணையான நண்பன் துடித்துக்கொண்டிருந்ததோ, செவிலிகள் எல்லாம் சேர்ந்து அள்ளிக்கொண்டுவந்து அறையில் போட்டதோ, விடாத குளிரில் வெடவெடத்த உடம்பை அவர்கள் என் உள்ளங்கால் தேய்த்து உஷ்ணப்படுத்தியதோ எதுவும்
அறியாத உணர்வற்ற நிலையில் கட்டிலில் கிடந்திருக்கிறேன். எல்லாம் சரியே என சோதித்த மருத்துவர், வலிவந்த நொடிமுதல் என் இன்னொரு தாயாக உடனிருந்த களைப்பில் "காலையில் பார்க்கிறேன். அவள் சரியாக இருக்கிறாள்" எனச் சொல்லி நகர்ந்து நள்ளிரவுதாண்டிய இருளில் மருத்துவமனை வாசல்வரை போயிருப்பார். உடல் அசையாத மயக்கத்திலும் என் உதடுகள் அசைத்துக் கேட்கிறேன் "where is Bonnie?"
"அவர் ஓய்வுகொள்ளப் போயிருக்கிறார், காலை மறுபடியும் உன்னைப் பார்ப்பார், உறங்கு" என்று உடனிருந்தவர்களின் குரல்கள் காதுகளை எட்டவில்லை. தொடர்ந்து அதே பல்லவியை அழுத்தமாகவும் பாடத் தொடங்குகையில் பயந்துபோன செவிலிகள் ஓடிப்போய்ப் பிடித்தே வந்துவிட்டார்கள் தன் வாகனம் கிளப்பிக்கொண்டிருந்த மருத்துவரை. "Yes dear I am here" அது Bonnie யின் குரலாக வந்ததும் மூளைக்கு எட்டுகிறது. "Thank you doctor, you saved me and my child" அவ்வளவுதான். அதன்பின் அவர் தலைதடவிக்
கொடுத்ததோ இந்த நன்றியைக் காலைவரை சுமந்திருக்க முடியாத அவசரக்காரியா இவள் என்று அவர் நகையாடிச் சென்றதோ எதுவும் தெரியாத உணர்வற்ற நிலைக்கே மீண்டும் பலமணி நேரங்கள் பயணம்.
சொல்லப்படவேண்டியவர்க்கு இந்த நன்றியை ஒரு மடலிட்டோ, தொலைபேசி அழைப்பிலோ, ஒரு செய்கையிலோ செலுத்திவிடும்வரை மற்ற நிகழ்வுகளிலும் மேற்சொன்ன அவஸ்தை வாட்டி எடுத்துவிடும் என் வலியை யாரிடம் சொல்வது:)) பிரசவ வலி தவிர வேறெதற்கும் வைத்தியம் செய்யாத Bonnie க்குப் புரியுமா என்னுடைய இந்த ரகசிய வலி:)) Bonnei க்குப் பிரச்சினையில்லை ஒருவருட உறவுதான். மற்றவர்கள் என்ன செய்வது? எனவே 50 மைல்கள்தாண்டி இந்திய மளிகைசாமான்கள் வாங்கப்போனாலும் அங்கிருந்து
கிளம்பும்போது மறக்காமல் கேட்டுக்கொள்கிறார் "நீ எதும் மறக்கலையே?". "இல்லையே,
எழுதிக்கொண்டுவந்த சாமான்கள் எல்லாம் வாங்கி விட்டேன்" இது நான். "அதில்லை. இங்கு யாருக்காவது நன்றி, மன்னிப்பு எல்லாம் சொல்லவேண்டியிருந்தால் மறக்கலையே?". இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை:))
இத்தனை குணங்கள் போதும் இப்போதைக்கு. சீரியசாக எழுதக்கூடாதென நீங்கள் சொல்லியிருந்தும் இப்படித்தான் எனக்கு எழுதமுடிந்தது ஆழியூரான். பொறுத்துக்கொள்ளுங்கள்:))
தென்றல், லட்சுமி இருவரிடமும் இங்கு அழகுக்காகவும் ஒரு வாய்தா வாங்கிக்கொள்கிறேன்.