நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, April 03, 2008

சுவர்கள்



இருந்தபடிதான் இருந்துகொண்டிருக்கின்றன
அந்தச்சுவர்கள் தன் தடிமன்களோடும் உயரங்களோடும்
இப்போதைக்கு இழந்தவை என்னவோ
வடித்துக்கொண்டிருந்த வண்ணங்களோடு
இன்னும் கொஞ்சம் பூச்சுக்கள் மட்டுமே
சுவர்கள்பற்றிய கனவுகள் சரிவது
சுவர்கள் சொர்க்கமென மதிப்பீடுகளை வளர்த்தவர்
சொந்தத்தவறன்றி சுவர்களின் பிழையில்லை

பெரும்மழை கடும்புயல் அல்லது இயற்கையோ செயற்கையோ
தாக்காதவரைக்கும் கூரைகளுண்டு கவசங்களாக
சுவர்களின் பிம்பங்கள் கலையாதபடிக்கு
கூடங்களாய் அறைகளாய் நீட்டியும் வளைத்தும்
அலங்காரங்களாய் அவை விரிந்தபடியிருக்கும்
வண்ணத்திரைச்சீலைகள் காற்றுக்கு வருட
வார்ப்போவியங்களையும் சுமந்தபடியாக
சுவர்களுக்கிருக்கும் மவுசே மவுசுதான்

சிறுதீப்பொறிகள் செயலிழந்தவை
சுவர்களின் மினுக்கும் கம்பீரங்களோடு
பட்டகரியோ, படரும்கறையோ மறைத்தவிட உண்டு
எசமானரோடு பணியாட்படையும்
சுவர்களின் பொலிப்புக்கும் குறையேதுமில்லை

கவசங்கள் மீறிய கணைகள் சிலவும்
காலத்திடமிருப்பது சுவர்களின் துரதிர்ஷ்டம்
தாமதமாகவேனும் தெரியத்தொடங்கும்
சிலசுவர்களின் சுயங்கள் அப்பட்டமாக
கூரைகள் பிய்யுமொரு கோரப்பொழுதில்
தன் வண்ணங்கள் அழியப் பூச்சுக்கள் கரைய
கூரைகள் இழந்தவை குட்டிச்சுவராகும்

கூரைகள் அழியக் காத்திருப்போருக்குச்
சுவர்களை அறியும் லாவகம் கூடலாம்
இருந்துமென்ன
கூரைகளே அழியாச்சுவர்களுமுண்டு
அவற்றின் சுயங்கள் அறிவது அபூர்வம்

ஒன்றேயொன்று சாத்தியமுண்டு
சுவர்களின் கதைகளில் குழம்பாதிருக்க
மதிப்பீடுகளின்றிச் சுவர்களைப் பார்க்க
அவரவர் மனதைப் பழக்கப் பார்க்கலாம்
சில அதிகாலை நேரத்து ஆகாயப்பரப்பில்
எம்மேகத்துணுக்கும் சேரா நீலம்போல்