சாம்பல் பூத்த பின்னும்
குளித்துமுடித்ததும் வழியும் திவாலைகள்
தவறுதலாய்க் கைபட்டுச் சிந்திய ஏதோவொரு திரவம்
எனத் துடைத்து எடுத்துவிடுவதுபோல்
சுலபமாய் முடிந்துவிடுவன அல்ல உன் நினைவுகள்
எப்போதோ வந்துபோகுமொரு ரயிலுக்காக
கானகத்தில் நீண்டு கிடக்கும் தண்டவாளமாய்
அடிமனதில் உன் நட்பை அடைகாத்தபடி
படுத்திருக்கிறது விவரிக்கவியலாத என் உணர்வு
ஒரு குளிர்தருவோ தளிர்நிழலோ
உவமானமாகிட முடியாது நம் சந்திப்புக்கு
அக்கினியாய்ச் சூடு பரவிய வெளியொன்றில்
தீயின் நாவுகளினிடை
நாட்கள் நகர்ந்த போராட்டக்களத்திலிருந்துதான்
கைகுலுக்கினாய் உன் காய்த்த விரல்கள் நீட்டி
ஒரு நடுச்சாமத்தின் நல்ல தூக்கத்தில்
என் கூரை உடைத்தொழுகிய மழையின் ஈரத்தில்
இருந்தன உன்னிடம் தரிசித்த தத்துவங்கள்
வாழ்வு ஒரு அணுவென்றால் அதன் எல்லாத் துகள்களையும்
உணர்ந்துவைத்திருந்த அமைதி உன்னிடம் இருந்தது
ஒரு மலையுச்சியில் உட்கார்ந்து நகர்ந்துவிடும்
மேக இருப்பின் கால அளவே கதைத்திருப்போம்
கோர்த்தலைப்போலவே பிரிதலிலும்
இயல்பாய் விலகின நம் விரல்கள்
அருகாமை, பகிர்தல்கள், தொடர்பிணைப்புகள்
எதுவும் தேவையிருக்கவில்லை நமக்கு
பாண்டியனின் சபையில்
கண்ணகியின் சிலம்பிலிருந்து சிதறிய பரல்களாய்
உணர்வுச் சிந்தலும் பிரிதலுக்கில்லை
காலம் இப்போதும் எடுத்துச் சென்றுகொண்டுதானிருக்கிறது
உன்னையும் என்னையும் இருவேறு திசைகளில்
உன்னுள் படர்ந்திருந்த தீ அணைந்திருந்தாலும்
அதிலிருந்து பற்றிக்கொண்ட சுடர்கள்
எங்குமிருக்கலாம் என்னிடமுமிருக்கலாம்
மீண்டுமொரு திருப்பத்தில்
உருமாற்றங்களோடு சந்திக்கநேர்ந்தாலும்
கைகுலுக்குவோம்
அப்போது கதைக்க ஏதுமில்லாதுபோனாலும்
உனக்குள் நீ தீவளர்த்த பிரதேசத்தின்மீது
பூத்திருக்கும் சாம்பல் விலக்கி
தேடிக்கண்டுகொள்ள முயல்வேன்
நீ தொலைத்த உன்னை