பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் ஒன்னா?.....அய்யன் கதை 5
அம்மாவாசை முடிஞ்சு அஞ்சாறு நாள் போனா ஆகாயத்துல சின்னக் கீத்தாட்ட வளந்து நிக்கற பெறைநிலா அழகாத்தான் இருக்கும். சித்த நேரம் நின்னு பாத்துட்டுப் போலாம்னுதான் தோணும். ஆனா அந்தப் பொறைநிலா மாதிரி வளஞ்சு கூனுப் போட்ட ஒடம்போட நடந்து, உக்காந்து, உண்ணு, உறங்கின்னு வாழறது எவ்வளவு சிரமமா இருக்கும்னு நல்ல மேலு காலோட கைவீசி நடக்கறவங்களுக்குப் புரியுமா தெரியாது.
இதெல்லாஞ் சரிபண்றதுக்கு மருத்துவத்துல இப்பெல்லாம் வசதிகூட இருக்குமாயிருக்கும். ஆனா நம்மூருல அப்படிக் கூனுப் போட்ட அய்யன் ஆத்தாவெல்லாம் அந்தக் கூனோடவேதான் வழ்ந்து மடியறாங்க. அதோடவே எல்லா வேலை வெட்டியும்வேற செஞ்சுக்கிட்டும் .
கோயிந்தாத்தா அப்படியொரு கூனுப்போட்ட ஆத்தா. ஆத்தா பேரு கோயிந்தம்மான்னு இருக்கலாம். ஆனா அவங்களை அக்கான்னு கூப்பிட்டவங்க எல்லாம் ஊருக்குள்ள "கோயிந்தக்கா" னு சொல்லிப் பழக்கமாயிருச்சு. அதுபோலவே சிறுவயசுக் கூட்டத்துக்கு "கோயிந்தாத்தா" ஆகியாச்சு. பேர்ல என்ன இருக்குது? அவங்க வாழ்க்கை என்னன்னு பாத்தா அது சொல்ற சங்கதி என்னமோ நெறையத்தான்.
வெய்ய காலம் தாண்டி அக்கினி நட்சத்திரமெல்லாம் கருக்கி முடிஞ்ச கடைசியிலயாவது வானம் கண்ணத் தொறந்தா காஞ்ச பூமியில பச்சையப் பாக்கலாம். அந்தப் பச்சைக் காலத்துல ஊர் முழுக்க இருக்கற வேப்ப மரங்க நல்லாக் கொழுந்து விட்டுப் பூப் பூத்துக் காய் காய்க்க ஆரம்பிக்கும். ஊருக்குள்ள மட்டுமில்லாம காடு கழனிகளுக்குப் போற புழுதி ரோடுகள்ல ரெண்டுபக்கமுமாப் பூத்து நிக்கற வேப்பமரக் காத்து ஒரு தனி சொகந்தான். கொத்துக் கொத்தாப் பச்சைப் பசேல்னு கெளைக முழுக்காத் தொங்கி நிக்கற வேப்பங்காய்க அனேகமா ஆடி மாச வாக்குல நல்ல மஞ்சளாகி உதிரத் தொடங்கும். பழம் பழுக்கற காலத்துல வேப்ப மரங்க மேல விருந்தாளிக கூட்டம் பேசிச் சிரிக்கறது சங்கீதமாக் கெடக்கும். வேற யாரு? காக்கா குருவிகதான். அதுக பாடு அதுகளுக்கு. இப்படி இரைச்சலும், இசையுமா மேல உக்காந்து திங்கற பறவைக் கூட்டம்னா, அந்த வேப்ப மரங்களுக்குக் கீழ ஒரு ஆழ்ந்த அமைதியோட உழுந்து கெடக்கற வேப்பம் பழங்களப் பொறுக்கிச் சேத்துக்கிட்டிருக்கற கோயிந்தாத்தாவப் பாக்கலாம். ஜாக்கெட்டுப் போடாத சுருக்குழுந்த தோள்களோட கூனுழுந்த உடம்பால குத்தவெச்சு உக்காந்து ஒரு சின்னப் போவினியில வேப்பம் பழத்தையும், முத்தையும் பொறுக்கிப் போட்டு அது நெறஞ்சாக் கொட்டி வெக்க ஒரு பத்துப் படி புடிக்கிற கூடை ஒன்னையும் வெச்சுக்கிட்டு கோயிந்தாத்தா அங்க இருக்கும்.
காடும் கால்நடையுமாப் பொழைக்கற அய்யன் ஆத்தா கதைக வேற. அதே ஊருக்குள்ள இந்தக் கோயிந்தாத்தாக்களோட கதைக வேற. பெராந்து(பருந்து) அடிச்ச கோழிக்குஞ்சுகளாட்ட வாழ்க்கையாலயும், வறுமையாலயும் தொரத்தப்படறவங்க வரிசையிலதான் இவங்களுக்கு இருப்பிடம். மரம் மரமா காக்காயும் குருவியுமா தின்னு
கழிக்கிற வேப்ப முத்து நம்ம கோயிந்தாத்தாவுக்கு ஒரு படகா இருந்து கரை சேர உதவுச்சு. பொறுக்கிக்கிட்டு வர்ற வேப்பம் பழங்களை ஒன்னா வாசலோட ஒரு மூலையில குமுச்சு வெச்சு சாக்கைப் போட்டுக் காத்துப் போகாம மூடி வெச்சுக்கிட்டு வரும் ஆத்தா. ஒரு மாசம் போலப் பொறுக்கிச் சேத்து இப்படிப் போட்டு வெச்சா பழமெல்லாம் நல்லா இத்து நசநசன்னு ஆகும். அந்தப் பக்குவத்துல எடுத்து வாச நடுவுல போட்டுச் சுத்தியும் பழத்தாலயே வரப்பாட்டக் கட்டித் தண்ணி ஊத்திக் காலால நல்லா மிதிச்சு வேப்ப முத்தெல்லாம் பழத்துல இருந்து பிதுங்கி வாரப்ப அப்படியே ஒன்னு சேத்து மறுக்காவும் சில நாளைக்கு மூடி வெச்சுரும். அப்பறமா எடுத்துத ஒரு பெரிய சல்லடையாட்ட இருக்கற கூடையில போட்டுத் தண்ணி ஊத்தி ஊத்தி அலாசுனா அழுக்கெல்லாம் போயி நெறையா முத்தும், கொஞ்சம் தொப்பையுமா இருக்கும். அதை வெய்யில்ல காயப்போட்டு எடுத்துத் தொப்பையெல்லாம் பொறுக்கி வீசீட்டு முத்தை எடுத்துக் கொட்டி அளந்து வைக்கும் ஆத்தா. பாக்கறதுக்குச் சுலபமாத் தெரிஞ்சாலும் இது ஒரு பெரிய தொழிற்சாலையில நடக்குற நீளமான தயாரிப்பு வேலை மாதிரித்தான். இப்படிச் சேத்த முத்தை ஊருக்குள்ள வர்ற ரெண்டு மூனு ஏவாரிககிட்டப் பேசி யாரு ஒரு பத்துப் பைசா படிக்கு அதிகமாக் கொடுக்கறாங்களோ அவங்களுக்கு விக்கும் ஆத்தா.
வேப்பம் பழம் பொறுக்கற மாதிரிக் கூனு ஒடம்ப வெச்சிக்கிட்டு அதை மிதிச்சு அலாசவெல்லாம் கோயிந்தாத்துவுக்கு முடியாமப் போவும். அப்ப மவளையும் மருமவனையும் அந்த வேலைகளைச் செய்யச் சொல்லீட்டுப் பக்கத்துல இருந்து பக்குவம் சொல்லும். ஆத்தாளுக்கு ஒரே மகதான். அய்யன் கண்ணை மூடிக் காலமாச்சு. மவளும், மருமவனும் ஒரே பேரனும் ஆத்தா கூடத்தான். இருக்கறதுக்கு ஒரு ரெண்டங்கன ஓட்டு ஊடு இருந்துச்சு. அதுவும் மழை வந்தா ஒழுகும்தான். பொழைக்கறதுக்கு ஒரு ஏக்கர் காடு இருந்து என்ன பிரயோசனம்? கெணறில்லாத வெறுங்காடு. மழை பேஞ்சா ரெண்டு பயிரு பச்சைய வெதைக்கிறதுதான். அதுவும் அப்பறமா மழையில்லாமக் காஞ்சாலும் போச்சு. ஊட்டுச் செலவுக்கு ஆகற மாதிரி ஒரு நாலு படி கெடைச்சாலும் உண்டு. ஒன்னுமில்லாமப் போனாலும் போச்சு. மழைப்பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்குங்கூடத் தெரியாதாமான்னு ஆத்தாவே சொல்றப்போ காடு வெதைச்ச பயிறு ஊடு வந்து சேரும்ங்கறதுக்கு என்ன உத்தரவாதம் இருக்குது?
அதனால இதையெல்லாம் நம்பியும் நம்பாமத்தான் கோயிந்தாத்தா பொழைக்கிறதுக்கு மக, மருமகனுக்கும் புத்தி சொல்லிக்கிட்டே தானும் இப்படி வேலை செஞ்சுக்கிட்டே இருந்தது. மருமவன் வேறொரு பண்ணையத்துல வாரத்துக்கு ஆடு மேச்சாரு. மக கொஞ்சம் சீக்குக்காரிங்கறதால அப்பப்பக் கூலி வேலைக்குப் போறதும், முடியலைன்னாப் படுத்துக்கறதுமா இருந்தது. ஆத்தா வேப்பங்காய்ச் சீசன் முடிஞ்ச உடனே எந்தக் காடுகள்ல வேலை இருக்குன்னு விசாரிச்சுக் கூலிக்கும் போகும். மொளகாய் பொறிக்கிறது, களையெடுக்கிறதுன்னு ஆத்தா தன்னை வருத்திக்காத நாளு கம்மிதான்.
மாசமெல்லாஞ் சேந்து வேப்ப முத்துப் பொறுக்கி நானூறு ஐநூறு வரைக்கும் வித்தா அதுக்கூடவும் கொஞ்சம் ஒட்டவெச்சு அரிசி சோளம்னு ஆக்கி உங்கறதுக்கு ரெண்டு மூட்டை வாங்கிப் போட்டு வைக்கச் சொல்லும் மருமவனை. அவரும் கொஞ்சம் மசமசன்னு சூது வாது தெரியாத மனுசனா இருந்தது ஆத்தாவுக்குக் கவலைதான். "நானும் உங்கய்யனாட்டக் கண்ணை மூடிட்டா நீங்க வேய்க்கானமாப் பொழைக்கொனும்னேதேன் எங்கவலை" னு அடிக்கடி சொல்லும். தாங்கெல்லாங் கஷ்டப்பட்டாலும் பேரனாவது நல்லாப் படிச்சுத் தலை நிமிந்து நிக்கோனும்னு ஆசையும் பட்டுச்சு. பொழுது விடிஞ்சு பொழுது போனா ரவும் பகலா ஆத்தா மனசுல இதே கருக்கடைதான். நெஞ்சுக்கூட்டுக்குள்ள வெந்த வேதனைகள ஆத்தா அடுத்தவங்ககிட்டச் சொல்லக்கூட ரொம்ப யோசிக்கும். ஏன்னா ஊருக்குள்ள ஒரே சாதியா இருந்தாலும் கூலிக்குப் போற கோயிந்தாத்தாவுக்கு மத்த ஊட்டுக்காரங்கள்ல நெறையப் பேரு வேலை கொடுக்கறதுனால எசமான ஒறவுலதான் தெரிஞ்சாங்க. மேக்காலப் பண்னையத்துக்கும், வடக்காலப் பண்ணையத்துக்கும் மொளகாய் பொறிக்கப்போன கோயிந்தாத்தாவும், அதே வேலைக்கு வந்த மாதாரிக் கிட்டாவும் வறுமையில ஒன்னாத்தான் இருந்தாங்க. மாதாரிக் கிட்டாவுக்கு வாசல்ல நிக்கவெச்சுத் தேங்காத் தொட்டியில காப்பி ஊத்துனவங்க கோயிந்தாத்தாவ ஊட்டுக்குள்ள பொழங்க உட்டு சில்வர் தம்ளருல காப்பி கொடுத்தாங்க. அந்த சில்வர் தமளாரு உபச்சாரம் சாதியில நீ எங்கூட ஒன்னுன்னு தூக்கி வெச்சுக்கிட்டாலும் பொழப்புல நீ எங்கிட்ட வாங்கி வயிறு கழுவுற கூலிக்காரிதான்ங்கற பாகுபாட்டைக் கொறச்சதில்லை. வெய்ய வேனல்னு ஒன்னா வேலை செஞ்சு ஒருவாய் சோறு திங்கற வர்க்கத்துல ஒன்னா இருந்தாலும் கோயிந்தாத்தா ஊட்டுக்குள்ள மாதாரிக் கிட்டா வரமுடியாதுங்கறது ஒலகமே அழிக்க முடியாத இன்னொரு கொடுமை.
எழுதப் படிக்கத் தெரியாது. நாடென்ன நம்ம விசயமென்ன? விவரமெல்லாம் புரியாது. ஆனா கூலிக்குப் போற கொடுமை எசமான மனங்களைப் புரியத்தான் வெச்சுது கோயிந்தாத்தாவுக்கு. தன் சாதியா இருந்தாலும் இப்படியானவங்களோட நாலு மொழம் தள்ளி நின்னுது. ஊரு, ஒறவு விசேசம்னு கூப்புட்டாலும் போனமா வந்தமா சித்த நேரம்தான். பட்டும், சரிகையும், நகையும் நட்டுமாக் கூட்டம் கூடிச் சிரிக்கிற எடங்கள்ல ஒட்டாம ஒதுங்கி வெளிய வந்துரும். "அவ புள்ளை ஓடிப் போய்ட்டாலாமா, இவம் பயன் பொண்டாட்டிகூட இல்லையாமா" தின்ன சோறு செரிக்கப் பேசற பொம்பளைகளுக்கு நடுவ ஆத்தா இருந்ததில்லை. வேலை இருந்தாச் செய்யறது இல்லைன்னா ஊட்டு வாசப்படியில உக்காந்து தன்னோட, மகளோட கிழிஞ்ச சீலைகளைத் தைக்கிறது, வளத்தற கோழிக்குஞ்சுகளுக்குத் தீனியப் போட்டு அதுக திங்கறத உக்காந்து பாக்கறது, வாசல்ல மொளச்சிருக்கற புல்லு, பூண்டுகளைப் புடுங்கி எறியறதுன்னு ஆத்தா அதுக்குன்னு ஒரு வாழ்க்கை மொறையை வெச்சிருந்தது. அப்படியே யாராச்சும் ஆத்தா ஊட்டு வழியா நடந்து போகையில "ஆத்தா சித்த நேரம் உக்காந்து ஒரு சனத்துகிட்டப் பேசுனா அதுக்குள்ளக் கோழியக் கீரி புடுச்சுக்கிட்டுப் போயிருமுங்களா?" னு கிண்டல் கேலி பேசுனாலும் ஆத்தாகிட்ட இருந்து வர்ற பதில்ப் பழமை "உங்ககூடவெல்லாம் நான் என்னத்தையாத்தா பேசறது? பசி ஏப்பக் காரரும், புளி ஏப்பக்காரரும் ஒன்னாப் பேச என்ன இருக்குது?" ங்கறதுதான்.
இந்தப் பழமொழி புரியாதவங்களுக்கு:- நெறையா வயிறு முட்டத் தின்னுட்டுச் செரிக்க முடியாம இருக்கறவனுக்கும் ஏப்பம் வரும், அது அசீரண ஏப்பம், உள்ள இருந்து சாப்பிட்டதையும் கொஞ்சம் கொண்டுக்கிட்டுப் புளிப்புச் சுவையோட வர்ற ஏப்பம் அது. வயிறு காஞ்சு ஒரு வாய்ச் சோத்துக்கு ஏங்கறவனுக்கும் ஏப்பம் வரும், அது பசியால கண்ணைக் கட்ட வைக்கிற, உள்ள ஏதாவது ஊத்துன்னு கேக்கற பசி ஏப்பம். அசீரண ஏப்பம் விட்டுக்கிட்டு இருக்கறவன்கிட்ட நீங்க உக்காந்து பசியால ஏப்பம் விட்டாலும் அது அவனுக்குப் புரியவா போகுது? கோயிந்தாத்தா ஊருக்குள்ள மத்தவங்ககூடச் சேராததுக்குச் சொன்ன பழமொழி சரிதானே?
மண்ணுல பொறந்து உழுந்த நாள் முதலா மண்ணுல வெதச்சு, மண்ணுல பொறுக்கி அப்பவும் கண்ணுல எந்த மகிழ்ச்சியுமில்லாம மண்ணுக்கிரையாப் போய்க்கிட்டிருக்கற கோயிந்தாத்தாக்கள் இன்னும் இருந்துக்கிட்டுத்தான் இருக்கறாங்க. வேப்ப மரங்களையே மறந்துபோன சனத்துக்கெல்லாம் வேப்ப மரத்துக்கடியில உக்காந்திருக்கற கோயிந்தாத்தா தெரியவா போறாங்க?