காலம்
உள்ளங்கை ரேகை சுட
ஊன்றி ஏறிய பாறையின் உச்சந்தலையில்
இன்னும் ஒரு துளி உலராமல் தெரிகிறது
நான் ஏறியது கண்டு எழுந்தோடிய கொக்கு
எங்கிருந்தோ கொண்டுவந்து உதறிவிட்டுப் போயிருக்கிறது.
அந்த நாக மடையில்
முழங்கால் நீரில் சீலை உயர்த்திக் கட்டி
ஊரான் துணிகளை அடித்துத் துவைக்கிறாள் நாகன் மகள்
அவள் காலுக்கிடையே விரவியோடும் அழுக்கில் ஒரு துளி நான்
அஞ்சாம் நெம்பர் பஸ்ஸில்
ஓட்டுனரின் வசவைப் புறம்தள்ளி
தன் கொய்யாப் பழக் கூடைக்கு இடம்பிடித்த கிழவி
சுருக்குப்பை திறந்து காசெடுத்து நிமிர்கையில்
பிஞ்ச பழத்தின் தோல் கிள்ளித் தின்று கொண்டிருந்தாள்
நெரிசலில் நசுங்கியிருந்த நெலாப் பொட்டுச் சிறுமி
ஏழு மார்க் பத்தாமல்
ஏழாம் வகுப்பில் பெயிலானதால் லீவுக்கு
மாமன் ஊட்டுக்குப் போவமுடியாதென
வைராக்கியமாய் இருந்தாள் பாலாமணி
குடிக்கும்போது ஒழுகி
வயித்தில் கோடிட்ட தெளுவோடு
வீதியெங்கும் இசையெழுப்பிச் செல்கிறான்
நொங்கு வண்டிச் சுப்பிரமணியன்
பட்டிப்படல் கட்டும் முன்பு எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது
உள்ளே போட்ட சோத்தை
தின்றுமுடித்து விட்டதா செவலை என்று ஆத்தா
குற்றங்களுக்குத் தண்டனை உண்டு
குற்ற உணர்வுகளுக்குத் தண்டனை ஏது
அந்த உணர்வுகளைத் தவிர?