கடல்கடந்துவந்து பெற்றதும் இழந்ததும்....
அவ்வப்போது மூட்டை கட்டிக்கொண்டேயிருக்கும் நாடோடி வாழ்க்கையில் இப்போது வசித்துக்கொண்டிருப்பது அமெரிக்காவின் விஸ்கான்சின்
மாநிலத்தின் "கிரீன்பே" என்னும் ஊர். ஆர்ப்பாட்டங்கள், அவசரங்கள் இல்லாத அமைதியான வாழ்வியல்முறையைக் கொண்டிருக்கும்
மக்களைக்கொண்ட இந்த ஊரை "கிராமம்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் இரைச்சல்மிகு நகரங்களிலெல்லாம் இருந்துவிட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிற நம் மக்கள். கேளிக்கை கொண்டாட்டங்களிலிருந்து விலகி ஏதோ ஒரு அமைதிக்கு ஏங்கும் மனதுடையவர்களுக்கு இந்த ஊர் பிடிக்காமல்போக வாய்ப்பில்லை. பார்ப்பதற்குச் சிறிய ஊராக இருந்தாலும் அமெரிக்காவின் தினசரிச்
செய்திகளில் அடிக்கடி வந்துபோகும் பெருமையும்கொண்டது. "கிரீன்பே பேக்கர்ஸ்" என்னும் புகழ்பெற்ற கால்ப்பந்தாட்ட அணியின் பிறப்பிடம் இது.
சுற்றி வளைத்திருக்கும் மிச்சிகன் ஏரியும் இதன் இன்னொரு சிறப்பு. டிஸ்யூ பேப்பர் தொழிற்சாலைகளும், இன்னபிற சிறு மற்றும் பெரும்தொழில்களும் அங்கங்கு அமைதியாக ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகின்றன. நிறைவான வேலைவாய்ப்புகள் மட்டுமின்றிக்
குறைவான வாடகைகளில் கிடைக்கும் நல்ல வீடுகளும் இருப்பதால் நடுத்தர மக்களுக்கு இங்கு வாழ்வது சுமையாக இல்லை. இன்னுமொரு
இனிக்கும் செய்தி சொல்லவேண்டுமென்றால் கார் பார்க்கிங்கிற்கு எங்கும் எப்போதும் "இடம் கிடைக்காது" என்ற கவலையே இல்லை. வேறு
மாநிலங்களில் இருந்தபோது சிரமப்பட்டுக் கற்றுவைத்திருந்த "பேரலல் பார்க்கிங்" முறை இங்கு வந்தபின் மறந்தேபோனது. அதற்கு
அவசியமேயில்லாத அளவு இடவசதி பரந்து கிடக்கிறது. மிக அருகில் மிருகக்காட்சி சாலைகளும், பூங்காக்களும் இருப்பது குழந்தைகளோடு
இருப்பவர்களின் பிரச்சினைகளுக்கு மருந்து. இதை எல்லாம்விட என்னைக்கவர்ந்த விடயம் இந்த ஊரில் உள்ள "ஒனிடா பழங்குடியினர்" வாழ்வு. இரண்டு தலைமுறைகளில் மற்றவர்கள் தலைநிமிர்ந்து பார்க்குமளவு தங்களை முன்னேற்றிக்கொண்ட ஒரு இனம். தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே உழைத்துப் பெற்றுக்கொண்ட திறமை. தங்களுடைய தனித்தன்மைகளை முழுவதுமாக விட்டுக்கொடுத்துவிடாத அவர்களின் போராட்ட குணம்.
இப்படிப் பன்முகங்கள் கொண்ட கிரீன்பேயில் தெற்காசியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. தமிழர்களும்
கணிசமாக உள்ளனர். வழக்கமான விருந்துகள், பிறந்தநாள் விழாக்கள் என்று மட்டுமே கூடிக்கொண்டிருந்த நண்பர்களில் சிலருக்கு இங்கு தமிழ்
நிகச்சிகளை ஏற்பாடு செய்யவெண்டுமென்ற ஆர்வம் பிறந்து இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். முழுக்க முழுக்கத் தன்னார்வத்தில் சிறிய அளவில் துவக்கப்படிருக்கும் இம்முயற்சி தொடர்ந்து செல்லவேண்டுமென்ற ஆர்வம் எல்லோர் மனதிலும் அரும்பியிருக்கிறது. குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தருவது, தமிழ் நூல்கள் வாசிப்பது, வாசிப்பதைப் பகிர்ந்துகொள்வது என்று திட்டங்கள் வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. முதன்முதலாக ஒரு
பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் துவக்கலாமென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நண்பர்கள் தமிழில்
பேசவேண்டுமென்று ஆர்வத்தோடு இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். குழந்தைகளும் பெருமளவில் இருப்பதால் எளிய தமிழ்ப் பாடல்களைப்
பாட இசையறிந்தவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். சாப்பாடு சம்பிரதாயங்களின்றி தாய்மொழியில் பேசியும், கேட்டும் இருக்க மட்டுமே
என்று முடிவாகியிருக்கும் அம்முதல் சந்திப்பில் இடம் பெறும் பட்டிமன்றத்தின் தலைப்பு "கடல்கடந்து வந்து பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?" என்பது.
கடல்கடந்து வாழ்கின்றவர்களே தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்ததைப் பொருத்தமான உண்மைகளோடு அலசினால் நன்றாக
இருக்கும் என்ற யோசனையில் இப்படி ஒரு தலைப்பு. ஆயிரம் கேள்விகளோடும், சமாதானங்களோடும், அவ்வப்போது துளைத்தெடுக்கிற
குற்றவுணர்வுகளோடும், ஏற்பட்டுப்போன பள்ளங்களைக் கைவசமுள்ள மண்ணிட்டு நிரப்பும் அவசர நிறைவுகளோடும் புலம்பெயர் வாழ்வுக்குள்
புகுந்திருக்கிறவர்களுள் நானும் ஒருத்தி. இந்த விவாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் தமிழர்கள்தான் கலந்துகொள்கிறார்கள். அதிலேயே
உலகம் முழுதும் வாழும் புலம்பெயர்ந்த நண்பர்களின் கருத்துக்களையும் பதிவு செய்ய முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படி அனைவரும்
சந்திக்கும் தமிழ்மணத்தில் கேட்காமல் வேறு எங்கு இதைக் கேட்பது? நண்பர்களே! நீங்க என்ன நினைக்கறீங்க? கடல்கடந்து வந்து நாம் பெற்றது
அதிகமா? இழந்தது அதிகமா?