வானத்தில் மேகங்கள் அங்கங்கு சிறுசிறு திட்டுக்களாகக் காட்சியளித்தன. ஈசுவரிக்கு
மேகங்கள் எப்போதும் பார்க்கப் பிடிப்பவை. அப்போதுதான் பொறித்திருந்த
இளம்கோழிக்குஞ்சுகளைப் போன்ற சிறிய உருவங்களையும், தூரத்தில் கொஞ்சமே
பெரிதாய் அவற்றின் அம்மாக்கோழியின் உருவத்தையும் அவளுக்கு நினைவூட்டின
அம்மேகத்திட்டுக்கள். இது இப்போது. வேறு சில நேரங்களில் எம்ஜிஆரின் தொப்பியையும்,
பஞ்சுமிட்டாயையும்கூட மேகங்கள்¢ல் கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருப்பாள். சூரியன்
மெல்ல விடைபெற்றுக்கொண்டிருக்க இருள் படர்வதற்கு இன்னும் சிறிது நேரமிருந்தது.
பின்னால் கொசுவம் வைத்து உடுத்திக்கொள்ளும் தன் ஒன்பது முழச்சேலையைப் பெரிய
பக்கெட்டில் போட்டுத் தன் அப்பத்தா அலசிக்கொண்டிருந்ததையும் அவ்வப்போது
கவனித்துக்கொண்டே கைகளால் கனகாம்பரத்தை வாழைநாரில்
தொடுத்துக்கொண்டிருந்தாள் ஈசுவரி. குடிசைவாசலில் போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்துகொண்டு மடிமீது கனகாம்பரப் பூக்களைப் போட்டுத் தொடுத்துக்கொண்டும், மேகங்களைப் பார்த்துக்கொண்டும், அப்பத்தாவோடு இருந்தது அவளுக்குச் சுகமாயிருந்தது. அங்கிருந்து 5 நிமிட நடையில் ஈசுவரியின் அப்பா அம்மா வசிப்பிடம் இருக்கிறது. தன் அம்மா வெள்ளாடுகளை மேய்க்க ஓட்டிக்கொண்டு போய்விடும் மாலையில் அவள் அப்பத்தாவிடம் வந்துவிடுவாள். அம்மாவுக்கு உதவியாகச் சமைக்க விறகு பொறுக்கிவந்து வைப்பதோடு, பக்கத்து அடிபம்பில் தண்ணீரும் எடுத்துக்கொண்டுவந்து வாசல் கூட்டித் தெளித்தபின்புதான் இங்கு வருவாள். பிறகு அம்மா வந்து வெள்ளாடுகளைக் கட்டிவிட்டுச் சமைத்துமுடிக்கும் நேரத்தில் அங்குபோய்விடுவாள். இரண்டு இடங்களிலும் ரேசன் அரிசிச்சோறுதான் என்பதால் ஈசுவரி சிலநாட்கள்¢ல் அப்பத்தாவிடமே இரவு சாப்பிட்டுவிட்டும் போய்விடுவாள். தன் அம்மா தோசைசுடும் இரவுகளில் மட்டும் அப்பத்தாவுக்கும் அம்மாவிடமிருந்து தோசை கொண்டுவந்து தருவாள். பூக்கட்டிமுடித்துவிட்டு மீதமான வாழைநாரைக் குடிசை மூங்கில் ஓரமொன்றில் சொருகப் போனபோது அப்பத்தா கேட்டாள்,
"இன்னம் எத்தன நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடம் ரீவு புள்ள?"
"பத்தாவதுக்கெல்லாம் மூனுமாசம் லீவு ஆத்தா, இப்பத்தான் ஒருமாசம் ஆச்சு. இன்னம்
ரெண்டுமாசம் இருக்குது"
"காடுகாடா வெயில்ல ரோரோன்னு திரிஞ்சு இப்பவே எளைச்சுட்டயே ஈசுவரி?"
"அப்பறம் என்னாத்தா பண்றது? நான் ஊட்டுல இருக்கறதாலதான் அம்மா காலையில
காட்டுவேலைக்குப் போகுது. அண்ணனும் சைக்கிள் கடைக்கு வேலைக்குப் போயிருது.
வெள்ளாடு மேய்க்க நான் வெயில்ல போறேன். ஆனா சாயந்தரம் நான் போறதில்லையே!
வேலையிலிருந்து வந்துட்டு அம்மாவே மேய்க்கப் போகுது."
" ஆமாமா, நாளைக்கே உனக்குக் கல்யாணங்காச்சி மூய்க்க நாலுகாசு வேணுமே,
அதுக்குத்தாம்புள்ள உங்க அம்மாக்காரியும் இந்தப்பாடுபடறா, உங்கப்பன் சம்பாரிக்கறது
அவங் குடிச்சுக் கெட்டழியவே சரியாப்போகுது"
"நேத்துக்கூட அப்பனோட அம்மா சண்டைக்கட்டுச்சு குடிக்கவேண்டாம்னு. ஆனா அப்பன்
இன்னைக்கும் குடிச்சுட்டுத்தான் வரும். அண்ணன் படிக்காமப் போனாலும் நான் நல்லாப்
படிக்கறன் ஆத்தா. படிச்சு ராமசாமிச் சித்தப்பன் ஊட்டு சித்தியாட்ட நானும் டீச்சர்
வேலைக்குப் போய்ட்டா அம்மாவுக்குக் கஷ்டமிருக்காது. நீயுங்கூட எலந்தப்பழமெல்லாம்
பொறுக்கி விக்காம இருக்கலாம். நானே உனக்கும் அரிசி வாங்கியாந்து குடுத்துருவேன்"
ஈசுவரியின் இந்தப் பேச்சைக் கேட்டவுடன் வழக்கம்போல் அழுக ஆரம்பித்துக்கொண்டே
அருகில்வந்த அவளின் அப்பத்தா " நீயெல்லாம் ஒரு நல்ல இடத்துல, அதிர்ஷ்டங்கேட்ட
வயித்துல வந்திருக்கவேண்டிய உசுரு புள்ள, எங்களப்போல ஏழை வயித்துல வந்துட்டியே!
நீ படிக்கறேன்னு சொல்ற. ஆனா உங்கம்மா நிறுத்தி ரெண்டுவருசத்துல
கட்டிக்கொடுத்துட்டா அவ கடமை முடிஞ்சிரும்னு பேசறா. உங்கப்பனுக்கு சாராயம்
இருந்தாச் சரி. அந்தக் கடவுள் உம்படிப்புக்குக் கண்ணு முழிப்பானா?" என்று
கேட்டுக்கொண்டே பேத்தியின் தலைதடவியபோது இருட்டு நன்றாகவே படர
ஆரம்பித்திருந்தது. "அம்மா வந்துருக்கும். நான் போய்ட்டு நாளைக்கு வாரனாத்தா" என்று சொல்லிக்கொண்டே குதித்தோடிய ஈசுவரியை நின்று சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மதியம் ஆக்கிய சோற்றை மோர்விட்டுக் கரைத்துக் குடிக்கக் குடிசைக்குள் போனது அந்த வயதான சீவன்.
ஆனால் ஈசுவரி ஒரு கனவுப் பெண்ணாக இருந்தாள். 16 வயது என்பது கனவுகளுக்குரிய
வயதாக இருப்பதில் ஆச்சரியமுமில்லை. ஈசுவரியின் கனவுகள் எல்லாம் அவள் டீச்சராகிக்
கையில் குடையுடன் நடந்துவருவதாகவும், குழந்தைகள் எல்லாம் அவளைப் பார்த்து
"குட்மார்னிங் டீச்சர்" சொல்வதாகவுமே இருந்தன. எப்போதாவது டீச்சராக இருக்கும்
சித்தி வீட்டுக்குப்போகும்போது டிவியில் படம்பார்க்க நேர்கையில், படத்தில் டீச்சர்
கதாநாயகி கண்டுவிட்டால் சிறகுமுளைத்துவிடும் ஈசுவரிக்கு. தன்னை அதில்
பொருத்திப்பார்த்து மகிழ்ந்துகொள்வாள். அதுவும் அந்த டீச்சர் பாத்திரம் படத்தில்
நல்லவிதமாகக் காட்டப்பட்டால்தான் பிடிக்கும் அவளுக்கு. மாணவர்களிடமோ, பிறரிடமோ
கடுமையாக நடந்துகொள்ளும் டீச்சர்கள் அவள் கனவுகளில் இல்லை.
பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவும், இலவச சீருடை, காலணி, சைக்கிள் என்று அரசின்
உதவிகள் ஈசுவரிமாதிரி மாணவிகளுக்குப் பெரும் உதவியே. அவைதான் இவள்
பத்தாம்வகுப்புவரை எந்தத் தடைகளும் இன்றிப் படிப்பைத்தொடரும்படி உதவின.
மிகநன்றாகப் படிப்பாள் என்று சொல்லமுடியாவிட்டாலும் எந்த வகுப்பிலும்
தேர்ச்சிபெற்றுக்கொண்டே வந்ததே அவர்கள் உறவினர்களில் அவள் நன்றாகப் படிப்பவள்
என்று சொல்லும்படி வைத்தது. ஈசுவரியின் அண்ணன் ஆறாம்வகுப்பில் மூன்றுமுறை
பெயிலானதால் நிறுத்தப்பட்டு சைக்கிள்கடையில் எடுபிடி வேலை செய்ய அனுப்பப்பட்டான்.
இப்போது அதேகடையில் முதலாளிக்கு அடுத்தநிலை ஊழியனாகி வாரம் 300 ரூபாய்
கொண்டுவந்து அம்மாகையில் கொடுத்துக்கொண்டிருந்தான். அதோடு தான்
கூலிவேலைசெய்தும், வெள்ளாடுகள் மேய்த்து விற்றும் சேர்த்த பணத்தில் 4 பேர் உண்டு
உடுத்தியதோடு ஒரு குறிப்பிட்ட சேமிப்பையும் சீட்டுப் போட்டுச் சேர்த்துக்கொண்டுவந்தார்
ஈசுவரியின் அம்மா. வயதுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட ஈசுவரிக்கு ஒரு நல்ல பையனாகப் பார்த்துக் கல்யாணம் செய்துவைப்பதும், பின்னர் ஒழுகும் ஓலை வேய்ந்த
வீட்டிலிருந்து ஒரு செங்கல்சுவர்கொண்ட ஓட்டு வீட்டுக்குப் போய்விடுவதுமே ஈசுவரியின்
அம்மாவுக்கு வாழ்காலத் திட்டங்களாக இருந்தன. இதிலெல்லாம் தனக்கு எந்த சம்பந்தமும்
இல்லாதது போன்றது ஈசுவரியின் அப்பா வாழ்க்கை. கட்டிட வேலைகள் கிடைக்கும்போது
போவதும் மீதிநாட்களில் வெள்ளாடுகள் மேய்க்கப் போனால் அப்படிப்போகும் இடத்தில்
முயல்பிடித்துக்கொண்டுவந்து சமைக்கக் கேட்பதும் அவரின் அன்றாடமாக இருந்தது.
கட்டிட வேலையில் வாங்கும் காசுதான் சாராயக்கடைக் கணக்கைக்
காப்பாற்றிக்கொண்டிருந்தது.
"நல்ல வெலைக்குக் கேட்டான்னுதான்லே வித்தேன், சும்மா பேசிக்கிட்டே இருக்குறா
நெட்டக்காலி" என்று தன் அப்பன் பேசியது காதில்விழ அவர் உட்கார்ந்திருந்த
வெளித்திண்ணைப்பக்கம் நிற்காமல் அப்பத்தா குடிசையிலிருந்து வந்த ஈசுவரி அம்மா
சோறாக்கும் இடத்திற்கு நேராகப் போனாள். கட்டிக்கொண்டுவந்த கனகாம்பரப்பூவை
வாடாமல் இருப்பதற்காக ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துத் தண்ணீர்தெளித்து மூடினாள்.
ஏதோ வெள்ளாட்டுக்குட்டி விற்றதில் பிரச்சினை என்று புரிந்துகொண்டே அம்மா அடுப்பில்
வைக்கத் தோதாக விறகுக்குச்சிகளை எடுத்துக்கொடுக்க ஆரம்பித்தாள்.
"எனக்குத் தெரியுமய்யா நீ நல்ல வெலை வாங்கி உம்புள்ளைக்குத் தங்கச்சங்கிலி
வாங்கிப்போடறது. நாங்குடுக்கற ஏவாரிக்குக் குடுத்தா காசை நான் வாங்கிக்குவேன்னு
புதுசா உஞ்சாராயக்கடை சோட்டாளு எவனையோ கூட்டியாந்து குடுத்துருப்பே நீயி.
வேலைக்குப் போற காசு பத்தாம உஞ்சாராயத்துக்கு இப்ப வெள்ளாட்டுக்குட்டியும்
கேக்குதா? " .அம்மா இன்று அப்பனிடம் அடிவாங்காமலோ, திருப்பிச் சீவக்கட்டைகொண்டு
தாக்காமலோ இருக்கமாட்டாள் என்று நினைத்துக்கொண்டாள் ஈசுவரி.
"வாய மூடுலே நெட்டக்காலி முண்ட, பெத்தவனுக்குத் தெரியும்லே புள்ளையக்
கட்டிக்கொடுக்க. நீதே குடும்பத்தக் காப்பாத்தறவன்னு ஆடாத. எம்பயங் கொண்டாறான்
வாரமான முன்னூறு". அந்த வளவுக்குள்ளேயே உயரமான பொம்பளையான தன் அம்மாவை
சண்டை வரும்போதெல்லாம் நெட்டக்காலி முண்டை என்று தன் அப்பன் பேசுவது
ஈசுவரிக்குப் பழகிப்போயிருந்தது.
"கேடுகெட்ட நாயே, மீசகூட மொளைக்காத பச்சப்புள்ள பாடுபட்டுப்போட்டாத்
தின்னுபோட்டு, வாங்கற காசையெல்லாஞ் சாராயங்குடிச்சுத் தீத்துக்கிட்டு இருக்கற நீ
பயம்பெருமை வேற பேசறயா?". அம்மாவும் அடங்குவதாகத் தெரியவில்லை என
நினைத்துக்கொண்டிருந்த ஈசுவரி, அப்பன் வெளித்திண்ணையிலிருந்து எழுந்து உள்ளே
வருவதைப் பார்த்த கணம் மனதுக்குள் பயத்தின் ஈரம் பரவ அம்மாவிடம் குசுகுசுப்பாய்ச்
சொன்னாள் "அப்பா உள்ளெ வருதும்மா, பேசாம இரும்மா நீ"
"சோறாக்கிப் போடறத உட்டுட்டு சண்டைக்காலே எத்தனம் பண்ணிக்கிட்டு இருக்கறே,
இனி எதாச்சும் பேசுனே, பவுடு கிழிஞ்சிரும் பாத்துக்கோ" என்று சொல்லிய அப்பன்
வாயிலிருந்து வந்த சாராய நாத்தம் ஈசுவரியின் நாசிவரை வந்தது.
"வா வந்து போடு வா, கையுங் காலும் இருந்தாத்தேன போடறதுக்கு வருவே, உனக்குக்
கால் ஒன்ன வெட்டி எறிஞ்சு கஞ்சி ஊத்தறனா இல்லையா பாரு, அப்பறம் பாக்கறன் நானு
சாராயக்கடைக்கு எப்படிப் போவேன்னு? எடுலே ஈசுவரி அந்த வெறகுக்கட்டைய" அம்மா
எகிறுவது ஈசுவரிக்கு எரிச்சலைத் தந்த சமயம் அவளின் அண்ணன் வாசலில் சைக்கிளை
அவசரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்தான்.
"ஏம்மா உங்க ரெண்டு பேருக்கும் வேற பொழப்பே இல்லையாம்மா? அப்பனத்தான் தண்ணி
தெளிச்சு உட்டாச்சல்ல? அப்பறமு அடங்காம அன்னாடு எதுக்குச் சண்டை வளக்கறே நீயி
அந்த ஆளுகூட? குடிச்சாலுஞ்சரி, அழிச்சாலுஞ்சரி ஆம்பளைன்னு சொல்லிக்கிட்டு
இருந்துட்டுப் போவட்டும். நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரும்மா. எப்ப
அடிச்சுக்குவீங்களோன்னு பயந்து பயந்து சாகவேண்டியிருக்கு". ஈசுவரிக்கு அண்ணன் பேச
ஆரம்பித்தது ஆசுவாசம் தந்தது. இனிப் பயமில்லை எனத் தோன்றியது. அப்பனும், அம்மாவும் அண்ணன் பேச ஆரம்பிக்கும் சிலசமயங்களில் அடங்கிக் கொள்வது ஆறுதலாக இருந்தது. இதுவே அண்ணன் மாதிரித் தானும் பேசி அப்பனையும் அம்மாவையும் சண்டையிடாது காப்பாற்றமுடியாதது ஏன் என்ற கேள்வியும் வந்தது. தான் ஆம்பிளைப் பிள்ளையாக இல்லாதது இதுமாதிரி நேரங்களில் வருத்தம் தந்தது. ஆம்பிளைப் பிள்ளையாக இருந்து பேசினால்தான் தன் பேச்சு எடுபடும்போலும் என நினைக்கவைத்தது. அது மட்டுமின்றி அண்ணன் குடும்பத்துக்குச் சம்பாதித்துக் கொடுப்பதாலும் அவன் பேச்சுக்கு மரியாதை இருப்பதாகவும் தோன்றியது. தானும் டீச்சராகிச் சம்பாதிக்கையில் இந்த மதிப்பும் தைரியமும் வரும் என நினைத்துக்கொண்டாள்.
"ஆத்தா மக்க எல்லாம் சேந்து கும்மியடிங்கலே" எனச் சொல்லிவிட்டு அப்பன்
வெளியேறியதை இயல்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஈசுவரி. கால் ஒழுங்காய்
எடுத்துவைத்து நடக்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டே போகும் அப்பன் இன்று
அப்பத்தாவிடம் போய்ச் சோறு தின்றுவிட்டு அங்கேயே தூங்கிப்போகும் என்பதை அறிவாள்
அவள்.
"என்னம்மா பண்ணுச்சு அந்த ஆளு இன்னிக்கு?" அப்பன் காதுகேட்க முடியாத தூரம்
போனவுடன் அம்மாவிடம் அன்பாய்க் கிட்ட வந்து கேட்கும் அண்ணன்மீது மரியாதையாக
இருந்தது ஈசுவரிக்கு. அண்ணன் நிச்சயம் அப்பனைப்போல் ஒரு குடிகாரனாக ஆகமாட்டான்
என்பது அவள் கணக்காகவும், அதனால் நிம்மதியாகவும் இருந்தது.
"வெள்ளாட்டுக்குட்டி விக்க நான் அடுத்தவாரம் ஆளுவரச் சொல்லியிருந்தண்டா. ஆனா
உங்கப்பன் எனக்குத் தெரியாம எவனுக்கோ வெலைபேசி முடிச்சிருக்கு. பணத்தையும் அந்த
ஆளே வாங்குனா அது சாராயக்கடைக்குத்தான் போய்ச்செருமேன்னு வெசனமா
இருக்குதடா"
இந்தமாதிரி நேரங்களில் வாய் திறந்து எதுவும் பேசாத ஈசுவரி இன்று மெல்ல " அந்த
வியாபாரி யாருன்னு தெரிஞ்சு பணத்தை அண்ணனைப் போயி வாங்கீட்டு வரச்சொல்லும்மா"
என்றாள். ஆனால் அவள் அண்ணனின் யோசனை வேறாக இருந்தது.
"அந்த ஆள் யாருன்னு கண்டுபிடிச்சுப் போய்க்கிட்டு இருக்கறதவிட நாளைக்கே
சந்தைக்குப் போற வேனுல குட்டிகள ஏத்திக்கிட்டுப் போயி வித்துட்டு வந்தர்றனம்மா. இந்தப்
பிரச்சினைய இதோட உடு. நாளைக்குத் திருப்பியும் அது குடிச்சிட்டு வந்தா
இதையெல்லாஞ் சொல்லி இன்னொருக்கா ஆரம்பிக்காத நீயி. வரவர அப்பன்
குடிக்கறதுனால நீ சண்டக் கட்டறியா? இல்ல நீ சண்டக்கட்டறதுனாலதா அப்பன்
குடிக்கப்போயுறுதான்னே தெரியலம்மா எனக்கு" என்று சொல்லிவிட்டு சாப்பிட வட்டலை
எடுத்து உட்கார்ந்தான் அவன். சட்டியிலிருந்த சோற்றை அண்ணன், அம்மா இருவருக்கும்
போட்டுக் கொடுத்துவிட்டுத் தானும் போட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள் ஈசுவரி.
சாப்பிட்டுமுடித்தபின் எல்லோர் வட்டல்களையும் கழுவிவைத்துவிட்டுப் பாயைவிரித்துப்
படுத்துக்கொண்டவளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வெள்ளாட்டுக்குட்டிப் பணம்
அம்மாகைக்கு வரும்போது தான் நெடுநாட்களாகக் கேட்டுக்கொண்டிருக்கும் கைக்குக்
கட்டும் வாட்ச் ஒன்று வாங்க அடிப்போடமுடியும் என நினைத்தாள். அவளோடு படிக்கும்
யசோதாதான் ஆறாம்வகுப்பிலேயே முதன்முதலில் வாட்ச் கட்டிக்கொண்டு பள்ளிக்கூடம்
வந்தது. ஊரிலேயே பணக்காரர்களான அவர்கள் வீட்டில் எது கேட்டாலும் உடனே
வாங்கித்தருவார்கள் என்பதை யசோதாவின் பேச்சிலிருந்து அறிவாள். அதற்குப்பின் ஏழாவது,
எட்டாவது எல்லாம் வரவர ராணி, மஞ்சுளா என்று அவள் வரிசையில் உட்காரும்
எல்லோருமேகூட வாட்ச் வாங்கிவிட்டார்கள். எட்டாவது பாசானபோதே அம்மாவிடம்
வாட்ச் வேண்டும் எனக் கேட்டுப் பார்த்தாள் ஈசுவரி. "அதுக்கெல்லாம் செலவு செஞ்சா
உனக்குக் கல்யாணத்துக்குச் சேத்து வெக்க முடியாது புள்ள" என்று பதில்வந்தது
அம்மாவிடமிருந்து. அப்போது அமைதியாய் இருந்தாலும் ஒன்பதாவது பாசானபோது மீண்டும்
வாட்ச் கேட்டாள். அண்ணனுக்கு அவனுடைய முதலாளியின் மகன் எங்கோ டூர் போய்விட்டு
ஒரு வாட்ச் வாங்கிக் கொடுத்திருந்தார். தான் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்துத்
தங்கச்சிக்கும் ஆசையாக இருக்குமென நினைத்தோ என்னவோ அம்மாவிடம் " இதுமாதிரி
எலக்றானிக் வாட்ச் வெலை கம்மியா நெறையக் கெடைக்கும்மா, முப்பத்தஞ்சு ரூவாக்கு
ஒன்னு வாங்கிக் குடுத்துரட்டுமா" என்று அவளுக்காகப் பரிந்து பேசினான் அவளுடைய
அண்ணனும். ஆனால் அம்மா அதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போது
பத்தாம்வகுப்பு லீவில் தினமும் தவறாது வெள்ளாடு மேய்க்கப் போவதைவைத்து
குட்டிவிற்கும்போது அழுதாவது வாட்ச் வாங்கிக்கொள்ளத் திட்டமிட்டிருந்தாள் ஈசுவரி.
பணம் அம்மா கைக்கு வந்தவுடன் அண்ணனிடம் சொல்லி ஆரம்பிக்கலாமா, ரிசல்ட்
வரும்வரை பொறுத்திருந்து பாசானவுடன் பதினொன்னாவது போகையில் கேட்கலாமா
என்பது மட்டும் குழப்பமாக இருந்தது. அப்படியே தூங்கிப்போனாள்.
"ஈசுவரி, எந்திரி புள்ள, சோறு, கொழம்பெல்லாம் ஆக்கியாச்சு. அண்ணனுக்குப் போட்டுக்
குடுத்துட்டு நீயும் தின்னுட்டு வெள்ளாட்ட ஓட்டிக்கிட்டுப் போ, நானு கருப்பராயங்
கோயிலுக்குப் போய்ட்டு வாரம் புள்ள." என்று அம்மா எழுப்பும்போது அன்று
அம்மாவாசையாக இருக்கும் எனத் தோன்றியது அவளுக்கு. கண்களைக் கசக்கிக்
கொண்டே எழுந்தவள் முதல்நாள் கட்டிக்கொண்டுவந்திருந்த கனகாம்பரத்தில் பாதியை
அறுத்து அம்மா தலையில் வைத்து அனுப்பிவிட்டுத் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அண்ணன் சைக்கிள்கடைக்குக் கிளம்பிப் போகையில் அப்பத்தா குடிசையிலிருந்து வந்து
கோழிகளுக்குச் சோளம் இறைத்துவிட்டு அவற்றைத் திங்க வருமாறு "பா பா" என்று
கூப்பிட்டுக்கொண்டிருந்த அப்பனைப் பார்த்தாள். "ஈயச் சட்டியில சோறும், குண்டாவுல
கொழம்பும் இருக்குதுப்பா" என்று சொல்லிவிட்டு வெள்ளாடுகளை அவிழ்த்தாள். கூட
அவிழ்த்துக்கொடுத்து உதவிசெய்த அப்பனிடம் "நாம் போறனப்பா நேராச்சு" என்று
சொல்லிவிட்டுக் கிளம்பினாள். கிளம்பியவளின் பின்னால் "இந்தா புள்ள துண்டு, வெயில்ல
தலைக்குப் போட்டுக்க" என்று தன் மேல்துண்டை நீட்டிக்கொண்டுவந்த அப்பனிடம் திரும்பி
அதைப் பெற்றுக்கொண்டாள். சாராயம் குடித்துவிட்டு வரும் நேரத்தைத் தவிர
மீதிநேரங்களில் அப்பன் மிக நல்லவராகவே தோன்றினார் அவளுக்கு. அங்கிருந்து
கொஞ்சதூரம் போய் அவளுடன் தன் வெள்ளாடுகளை மேய்க்க ஓட்டிக்கொண்டுவரும்
சின்னப்பத்தாவோடு சேர்ந்து போனாள்.
கரட்டாங்காட்டு வேலிகளில் வெள்ளாடுகளை மேயவிட்டுப் பக்கத்திலிருந்த பெரிய
வேப்பமரநிழலில் உட்கார்ந்திருந்தாள் ஈசுவரி. சேலை முந்தானையைக் கீழே விரித்துவிட்டுக்
கண்கள் மூடிப் படுத்திருந்த சின்னப்பத்தாவிடம் பேச ஒன்றுமில்லாமல் தனக்கு முந்துன நாள்
தூக்கத்தில் வந்த கனவை அசைபோடத் தொடங்கினாள். அழகான கருப்புக்கலர்
வார்போட்டுத் தங்கக்கலரில் வட்டமான பகுதிக்குள் அதே தங்கநிற முட்கள் கொண்ட
வாட்ச் கட்டிக்கொண்டு புத்தகத்தை விரித்துவைத்துப் பாடம் நடத்திக்கொண்டிருந்த
டீச்சராகத் தான் ஒரு வகுப்பறைக்குள் இருந்த கனவுதான் அவளுக்கு முதல்நாள் வந்தது.
பெரும்பாலான ராத்திரித் தூக்கக் கனவுகளில் ஒன்றுதான் அது எனினும் ஈசுவரிக்கு அது
பிடித்திருந்தது. அப்பன், அம்மா சண்டைக் கட்டிய ராத்திரியில் தனக்கு இப்படியொரு
கனவைத் தந்து சாமி எதையோ சொல்லுவதாக நினைத்துக்கொண்டாள். அதே நேரத்தில்
கருப்பராயன் கோயிலில் சாமியாடிய பூசாரியின் முன் பணிந்து உட்கார்ந்திருந்தார்
ஈசுவரியின் அம்மா.
"நீ நெனக்கிறமாதிரி நல்ல காரியத்தைக் கூட்டிக்கொடுத்தா எனக்கு என்ன செய்வே"
பூசாரியின்மேல் வந்திருந்த சாமி கேட்டுக்கொண்டிருந்தது.
" பொன்ன வெக்கிற இடத்துல பூவையாவது வெப்பஞ்சாமி, நா நெனைச்சிருக்கிற
காரியமெல்லா நல்லபடியா முடிஞ்சாப் போதுஞ்சாமி" ஈசுவரியின் அம்மா சாமியைச்
சரிக்கட்டிக்கொண்டிருந்தார்.
"அவசரப்படாத தாயி. எப்பவும்போல அம்மாவாசைக்கு இந்தக் கருப்பராயன மறக்காம
வந்துபோ. ரெண்டு வருசத்துல வடகிழக்குல இருந்து வருவான் உம்புள்ளைக்கு
ராசகொமாரன். போற இடத்துல மச்சு ஊடு கட்டி ஊரே மெச்ச இருப்பா உம்புள்ள" சாமி
சொல்லச்சொல்ல அழுவாச்சும்சிரிப்புமாக வந்தது ஈசுவரியின் அம்மாவுக்கு.
"அதுபோதுஞ்சாமி, அழுந்திக்கெடக்குற சீவஞ்சாமி நானு. எம்பயனும், புள்ளையும் நல்லா
இருந்தாப்போதும். அதுக்குத்தே உங்கிட்ட நடக்கறது அம்மாவாசை தவறாம. எல்லா
நல்லபடியா முடிச்சுக்கொடு சாமி. என் வெள்ளாடு போடற குட்டியில ஒன்ன உனக்கு விட்டு
வெட்டிப் போடறஞ்சாமி" என்று சொன்னதில் திருப்தியான சாமி அடுத்து யாருக்குக் குறி
சொல்லலாம் என யோசித்த வேளையில் திருநீறு வாங்கிக்கொண்டு நகர்ந்திருந்தார்
ஈசுவரியின் அம்மா.
ஓட்டிவந்த வெள்ளாடுகள் தாழியில் தண்ணீர் குடித்தபின்பு அங்கேயே ஊஞ்சமர நிழலில்
வழக்கம்போல் படுத்துக்கொள்ள, உள்ளே பேச்சுக்குரல் கேட்க யாரெனப்
பார்த்துகொண்டே நுழைந்த ஈசுவரிக்கு ராமசாமிச் சித்தப்பா வீட்டு டீச்சர் சித்தியைப்
பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தூரத்துச் சொந்தம் என்றாலும் இந்தப்பக்கம் வரும்போது
இவர்களையும் தவறாது வந்து எட்டிப்பார்த்துப் போகும் பழக்கமுடையவர் அந்த டீச்சர்
சித்தி.
"எப்ப வந்தீங்க சித்தி?" எனக் கேட்டுக்கொண்டே கழுவியிருந்த முகத்தைத்
துடைத்துக்கொண்டாள். "அம்மா வந்த பஸ்லதான் கூடவந்தம் புள்ள, நீ சாப்புடு" என்ற
சித்தியின் கையில் கட்டியிருந்த வாட்ச்சை ஒருமுறை பார்த்துக்கொண்டாள். அந்த வாட்ச்
கட்டிய கையால் தட்டைப் பிடித்துக்கொண்டு அதிலிருந்த பொறிகடலையை இன்னொரு
கையால் அள்ளி வாயில் போட்டுக்கொண்டிருந்த சித்திக்கு அம்மா ஆர்லிக்ஸ் போட்டு
டம்ளரில் வைத்திருந்ததையும் பார்த்தாள். இந்தச் சித்தியை மாதிரிப் படித்தவர்கள் வந்தால்
போட்டுக்கொடுக்கத்தான் அம்மா பெரிய போசிக்குள் வைத்து மூடியிருக்கும் ஆர்லிக்ஸை
வெளியில் எடுக்கும் என்பது அவளுக்குத் தெரியும். அதுதவிர அவளுக்கும், அவளுடைய
அண்ணனுக்கும் காய்ச்சல்வரும்போதும் அவர்களுக்கு ஆர்லிக்ஸ் குடிக்கக் கிடைக்கும்.
" இப்பவே அவள நிறுத்தி என்னக்கா பண்ணப்போறீங்க? ஓரளவுக்குப் படிக்கிற புள்ளைய
எதுக்கு நிறுத்தறீங்க?" சித்தி அம்மாவின் பக்கம் திரும்பிப் பேச்சுக்கொடுத்தது
தன்னைப்பற்றியதுபோல் தெரிய சாப்பிட்டுக்கொண்டே காதுகளை அங்கே கொடுக்க
ஆரம்பித்தாள்.
" இன்னமு ரெண்டுவருசம் படிக்க வெச்சாமட்டு நாங்க காலேசிலயா படிக்கவக்கப்
போறோம் லட்சுமி? சாராயங்குடிக்கற அப்பனும் காடுகரையில வேலைசெஞ்சு
கஞ்சிகுடிக்கவேண்டிய அம்மாளும் இருக்கற அவளுக்குப் படிக்கவெல்லாம் யோகமுமில்ல.
குருவியாட்டச் சேத்துக்கிட்டு இருக்கற சீட்டுப் பணத்துல அவளுக்குக் கல்யாணமாவது
நல்லாப் பண்ணி ஒரு நல்ல பயனுக்குப் புடுச்சுக்கொடுத்தா அதுவே பெரிசு" அம்மா
பேசும்போது சாப்பிடுவதை நிறுத்தி வட்டலுக்குள் சோற்றைக் கீறிக்கொண்டிருந்தாள் ஈசுவரி.
"உங்க கஷ்டம் புரியுதுக்கா, ஆனா ஈசுவரிய நெனச்சாலும் கஷ்டமா இருக்கு, பாத்து முடிவு
பண்ணுங்க, நான் கெளம்பறேன். சின்னராசு கொழந்தையப் போய்ப் பாத்துட்டு அங்கிருந்து
நடந்தா அஞ்சரை மணி பஸ்ஸைப் புடிக்க சரியா இருக்கும்" என்று சொல்லிய சித்தி
அருகில் வந்து "சாப்பாட்டைக் கீறாத சாப்பிடு ஈசுவரி" எனச்சொல்லிக் கன்னம் தட்டிவிட்டு
நகர்ந்தபோது அம்மா வழியனுப்ப வாசல்வரை போனதைக் கண்களில் நீர்கட்டப்
பார்த்துக்கொண்டிருந்தாள் ஈசுவரி.
சாப்பிட்டுக்கொண்டிருந்ததை முழுவதும் முடிக்காமல் பாதியில் இன்னொரு தட்டைப்
போட்டு மூடி ஓரமாக எடுத்துவைத்துவிட்டுக் கைகழுவிக்கொண்டாள். மூலையில்
அடுக்கிவைக்கப்பட்டிருந்த தலகாணிகளின்மேல் குப்புறச் சாய்ந்து உட்கார்ந்திருந்தவளை "
ஏம்புள்ள சோத்தை முடிக்காம மூடிவெச்சிட்டயா? தலகீது வலிக்குதா?" என்று கேட்டு
அவளின் அம்மா உலுக்கியபோது பதிலெதுவும் இல்லை.
"வெயில்லயே திரியாம வெள்ளாட்ட உட்டுப்போட்டு நெழல்லதான உன்னைய உக்காரச்
சொல்றேன் நானு. வெயில்ல திரிஞ்சாத் தலைவலி வரும் புள்ள"
இதற்கும் பதில்வராதபோது அம்மாவுக்குத் தெரியும்படியே தேம்ப ஆரம்பித்திருந்தாள் ஈசுவரி.
"ஏம்புள்ள சித்திகிட்ட உன்னையப் படிப்பவிட்டு நிறுத்தப்போறன்னு சொன்னதுக்கு
அழுவறியா? எனக்கு உன்னையப் படிக்கவைக்க ஆசையில்லயா ஈசுவரி? நம்ம
குடும்பநெலமைக்குத் தகுந்த ஆசை வரோனும் புள்ள, காலைல இருந்து பாடுபட்டுட்டு வந்து
படுத்தாக் கை காலெல்லாம் எரியுது எனக்கு. இன்னம் எத்தனை நாளைக்கு இந்தத் தெம்பு
இருக்குமோ தெரியில. நீங்க வயித்துல இருந்த காலத்துல இருந்து உங்கப்பனால நமக்குக்
காசுக்குப் பெரிய பிரயோசனமுமில்ல. நான் நல்லாருக்கும்போதே உன்னையக்
கட்டிக்கொடுத்து நல்லது பொல்லாதது பாத்துட்டுப் போயிருவம்புள்ள."
"நான் படிச்சு வேலைக்குப் போனா உன்னைய நல்லா வெச்சுக்குவனம்மா" கண்ணீர்
வழிந்தோட அழுகையில் கோணிய அவள் வாயிலிருந்து தெறித்து விழுந்தன வார்த்தைகள்
ஒரு அவல ராகத்தில்.
" வேலைக்குப் போகறவரைக்குமெல்லா படிக்கவைக்கறது லேசுப்பட்ட விசயமில்ல புள்ள.
காடுகழனி, காசுபணம்னு இருக்கறவிய எல்லாமே காலேசிக்கு லட்சமெல்லாம்
செலவுசெஞ்சு பொம்பளப் புள்ளைகளப் படிக்கவெக்கமாட்டாம ஊட்டோடவெச்சுக்
கட்டிக்குடுக்கறாங்க. சீட்டுப் போட்டும் வெறும் சிலுவாட்டுக் காசும் வெச்சிருக்கற நாம
மழைக்கு ஒழுகாம உக்கார ஒரங்கனத்துல ஓட்டூ ஊடு கட்டறதும், உனக்கு ஒரு ரெண்டு
பவுனுப் போட்டுக் கட்டிக்குடுக்கறதும் போக வேற ஆசையெல்லாம் படக்கூடாது.
சாமிசொல்லுச்சு. கல்யாணத்துக்கப்புறமா நீ மச்சு ஊடு கட்டிப் பொழப்பேன்னு. நாளைக்கு
உம்புள்ளைகளப் படிக்கவையி நீ நல்லாருந்தா. சாவாமப் பொழச்சிருந்தா நானும்
பாத்துட்டுச் சாகறேன் அதையெல்லாம். அழுகாத சாமி. நீ கேட்டுக்கிட்டே இருப்பியே
வாச்சி கையில கட்டறதுக்கு? அது ஒன்னு வாங்கிப்போட்டுத்தே உன்னக் கல்யாணத்துல
பொண்ணா நிறுத்துவம் புள்ள" தன் அம்மாவின் நீளமான சமாதானங்களுக்குப் பதில்
சொல்ல எதுவுமிருக்கவில்லை அவளுக்கு.
"காபி வெச்சு ஊத்திவெச்சுட்டு வெள்ளாட்டை நானே ஓட்டிக்கிட்டுப் போறம்புள்ள. நீ
சித்தே படுத்திருந்துட்டுச் சாயந்திரமா எந்திரிச்சு வெறகு பொறுக்கி வை" என்று
சொல்லிவிட்டு அடுப்படிக்கு நகர்ந்துவிட்ட அம்மாவின்மீது வெறுப்போ, விருப்போ இன்றிப்
படுத்திருந்தாள் ஈசுவரி. உறைபோடாத கத்திரிப்பூக்கலர் தலகாணிமீது வட்டவட்டமாகப்
பரவியது அவள் கண்ணீர். அந்தக் கண்ணீரால் கரைக்கமுடியாத அவளின் ஆசைகள்
மிச்சமிருந்தாலும் இனி அவளின் தூக்கங்கள் பழைய கனவுகளைத் தொலைத்து
விடுமாயிருக்கும். டீச்சராய்க் குடைபிடித்து நடக்கும் ஒரு பெண்ணுக்குப் பதிலாய்க்
குழந்தைக்கு நிலாக்காட்டிச் சோறூட்டும் ஒரு பெண் இனி அவள் கனவுகளில் வந்து
போவாளோ என்னவோ!
நன்றி:- யுகமாயினி.