பதிவில் கடந்த பாதை (முல்லையின் அழைப்பின் பேரில்)
இதற்கு முன்பு இப்படித் தொடர் விளையாட்டுகளில் அழைக்கப்பட்டு நான் எழுதிய ஒன்றே ஒன்று "கிறுக்கு" தொடர்தான். வேறொன்றும் காரணமில்லை, சோம்பேறித்தனம்தான். என்னதான் வலிந்து மனதைச் செலுத்த முயன்றாலும் ஒரு உள் உந்துதல் இல்லாமல் எழுத நினைக்கும் சில விடயங்கள் ஏறாத சுவற்றில் ஆணிஅடித்துத் தோற்பதைப்போல் ஆகிவிடுகின்றன. அப்படி விட்டவையும் உண்டு. சிலமாதங்களுக்கு முன்பு என் மீது வருடங்களாக மாறாத அன்பைக் கொண்ட பேராசிரியர் தருமி தன் பேத்தி மூலம் ஒரு பதிவுலக விருதைத் தந்து ஏற்றுக்கொள்ளச் சொல்லியிருந்தார். ஒரு பச்சைப்பிள்ளை கைநீட்டிக் கொடுத்ததென்றும் பாராமல் அதைப் புறக்கணிக்க வைத்தது அந்நேரத்துப் பாறைமனசு. தேள்கொட்டினாலும் அதைக் காப்பாற்றவே விரும்புகிற துறவியாய் அன்பைத் துறக்காதவர் தருமி.
இப்போது நீண்டநாட்களுக்குப் பின் மீண்டுமொரு தொடர் விளையாட்டில் சந்தனமுல்லையால் அழைக்கப்பட்டிருக்கிறேன். "இந்த விளையாட்டிலும் எழுதாது போனாலும் போவேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்" என அவருக்குச் சொல்லியும் விட்டேன். ஆனாலும் மனதுக்கு இதைச் சொல்வது பிடித்துப்போயிருக்க வேண்டும், வந்தாயிற்று. எப்போதும் முன்னோக்கியே ஓடிக்கொண்டிருக்கிற மனதுக்கு இந்தப் பின்னோக்கிய அசைபோடல்களில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடுவது இயல்புதான். நான் சம்பாதித்தவையும் இழந்தவையும் நிறுக்கப்பட்டு ஒன்றைப்போல் இன்னொன்றும் இயல்பானதுதான் என்ற சமநிலையைப் பழக்கப்படுத்துகிறது இந்த அசைபோடல்.
நான் 2004 பிப்ரவரியில் இணையத்தில் எழுதவந்தேன். அயல்தேச வாழ்வில் கிடைத்த தனிமையான நேரமும், முன்பே ஊரில் மொழிசார்ந்த வேறுதளங்களில் இயங்கிக்கொண்டிருந்த அனுபவமும் எழுத்தில் ஈடுபடவைத்தன. "மரத்தடி" என்ற இணையக் குழுமத்தில்தான் முதலில் போய்விழுந்தது. அங்கே கவிதை, கட்டுரை எனவும் எல்லோர்பாலும் நட்பைத் தேடி நகர்கிற மனதுமாய்ப் போய்க் கொண்டிருந்தது. அப்படியான நாட்களில் அக்குழுமம் தாண்டி 'திண்ணை" யெல்லாம் இருப்பதறிந்து அங்கேயும் எழுத ஆரம்பித்தேன். இக்காலகட்டங்களில் அங்கே வாசித்த, எழுதிய அனுபவங்களில் சில அவ்விடங்களில் இருந்த ஈடுபாட்டை நீர்த்துப் போகச் செய்துகொண்டிருந்தது. இச்சமயத்தில் வலைப்பதிவு என்பது உருவாகிப் பிரபலமாகத் தொடங்கியிருந்தது. என்றாலும் தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்கி எழுதுவது ஏதோ ஒரு பத்திரிக்கையை நானே நிர்வகித்து, வினியோகிப்பதான பயத்தையும் தந்துகொண்டிருந்ததால் வலைப்பதிவு தொடங்கவில்லை. அதற்கேற்றாற்போல் அப்போது பெண்களுக்கான ஒரு கூட்டு வலைப்பதிவை உருவாக்கியிருந்த மதிகந்தசாமியின் அழைப்பின்பேரில் அங்கே எழுத ஆரம்பித்ததும் தனிப்பதிவிற்கான தேவையைக் குறைத்தன.
விரைவில் யாராலோ அத்தளம் தகர்க்கப்பட்டதென நினைக்கிறேன். பிறகுதான் எலிவங்கானாலும் தனிவங்கே தலைசிறந்ததென "நிறங்கள்" 2006 இல் உருவெடுத்தது. வலைப்பதிவில் நான் எழுதிக் கிழித்ததைவிட வாசித்துக் கிழித்தவைதான் அதிகம். எனக்கான புதையல்கள் இங்கிருந்தன. என் தாகத்திற்கான நீரும், என் கண்களைத் திறந்த வெளிச்சமும், என்னையும், என் சமூகத்தையும் எனக்கு அடையாளம் காட்டியவையும் நிறைய இருந்தன. தூக்கம் கெட்டதால் வாசித்தவைகளைவிட, வாசித்ததால் தூக்கம் இழந்து யோசிக்க வைத்தவை நிறைய. உள்வாங்கியதைப் போலவே வெளித்துப்பி மனதை ஒரு சுயசுத்திகரிப்புச் செய்துகொள்ள முடிந்தது.
வாசித்த நேரம் போக எப்போதாவது எழுதுவதுண்டு. அந்தக் குறைந்தநேர எழுத்தாலும் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நான் அப்படி நினைக்காவிடினும் என்னையும் எதிரியாகச் சிலர் ஏற்றுக்கொண்டார்கள்:))நண்பர்களிலும் தாவிப்பிடித்துத் தொடவந்தவர்களில் சிலர் வந்தது மாதிரியே போயும் விட்டார்கள். உண்மையான நண்பர்கள் ஆறுவருட எழுத்துப்பழக்கத்தின்பின்னும் என் தொலைபேசி எண்ணைக்கூடத் தெரிந்துகொள்ளாமலும், ஒருமுறைகூட அரட்டையடிக்காமலும், இன்னமும் நண்பர்களாகவே ஆத்மார்த்தமானவர்களாய் இருக்கிறார்கள்.
தாக்குதல்கள், மிரட்டல்கள்.......அவையெல்லாம் இல்லாமல் போனால் சுவாரசியங்கள் ஏது? இதில் உலகத்தில் நானறியாத மூலையிலிருந்து அனானியாக வருபவர்களில் இருந்து, ஈழத்தமிழ்ச்சாவு குறித்த, உதவி கேட்ட என்இடுகையொன்றில் "நீ எழுதிய கருத்துக்கள் சிலதால் என் புகழ் அழிந்துவிட்டது, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்" என்கிற ரீதியில் எனக்கு மட்டுமின்றி, என் வாழ்க்கைத் துணைவருக்கும் 'தனிமனித, கருத்து சுதந்திரத்திற்குக் குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கிவருகிற ஒரு நாட்டிலிருந்துகொண்டே தாதாத்தன மிரட்டல் விட்ட உள்ளூர்த்தமிழன் வரை சுவாரசியம் சேர்க்கிற இவர்கள் உண்மையில் மனவலிமையைக் கூட்டுபவர்களாயும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இதே உலகின் இன்னொரு மூலையில் உண்மையை ரட்சிக்கும் கடவுளர்களாயும், கீதையை உபதேசிக்கும் கண்ணன்களாகவும் கூடப் பிம்பங்கள் கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும்.
வலைப்பதிவில் எழுதி அடுத்த கட்ட முயற்சியாக என்ன செய்யப் போகிறேன்? பிரபலமடைந்திருக்கிறேனா? அல்லது பிரபலமானவர்களால் குறிப்பிடப்படும்படியாக ஆகியிருக்கிறேனா? என்றெல்லாம் எதுவும் என்னை நான் இப்போது கேட்டுக்கொள்வதில்லை. ஏனென்றால் எழுத்துக்கு வரும்முன்பு வேறு துறையில் சுமந்துதிரிந்த பிரபலக் கிரிடங்களைக்கூடச் சுக்குநூறாக உடைத்துப்போட்டு என்னைக் காலியாக்கி வைத்துக்கொள்ளவே உதவுகிறது எழுத்து.
இப்போதெல்லாம் எப்போதாவது எப்படியாவது தலைதூக்கிவிடும் கிரீடப் பீடை நினைவுகள் ஒரு அடுக்கில் வந்தாலும் அடுத்த நொடியே மூத்திரச் சட்டியோடு சூத்திரனை நினைத்தழுத கிழவனும் வருகிறார். "எனக்கு மன்னிப்புக் கேட்டு உங்களை யார் மனுபோடச் சொன்னது? என்னைத் தூகிலேற்றட்டும், அதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்" எனச் சொன்ன பகத்சிங்கும், பச்சைக் குழந்தையிடமும் சுதந்திரத்தின் தாகத்தை எழுதிவைத்த போராளித்தாய் இடானியாவும் வருகிறார்கள், மாதவிடாய் ஒழுக ஒழுகக் கட்டிக்கொள்ளவும் துணியற்று ஈழவிடுதலைப் போராளியாய் போலீசிடம் அடிபட்டு, உதைபட்டு, பெண் எனும் முறையிலும், தலித்தாகவும் தான் பட்ட வேதனைகளையும் தாண்டி "மேலைத்தேய வாழ்வு நமது சாதீய, பெண்ணீய அடக்குமுறைகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தந்ததாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு "நான் எப்போது அடிமையாக இருந்தேன் விடுதலை பெற? எப்போதும் எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்தே வாழ்கிறேன், இந்த எதிர்ப்பே என் விடுதலை" எனும் புஸ்பரானியும் கூட நினைவின் இன்னொரு அடுக்கில் வந்து நிற்கிறார். அவர்களையெல்லாம் நினைவுகளில் மீட்டு வரும் அப்படியான தருணங்கள் நான் ஒரு வெறும் சருகென்பதை நேர்மையாக எனக்குள்ளேயே பதிவு செய்கின்றன.
"இன்னும் என்னைக் காலியாக்கு, எறும்பினும் சிறிதாகும் எளியளாக்கு" எழுத்தைப் பற்றிச் சொல்லவும், எழுத்திடம் சொல்லவும் இப்போதைக்கு எனக்கு இருப்பது இதுதான்.
நான் யாரையும் அழைக்கவில்லை, விதிமுறைகளைக்கூட ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை. "ஒன்றும் விளங்காததுகளிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால் இப்படித்தான்" என்று முல்லை நீங்கள் பின்னூட்டமிட்டு வாழ்த்த வேண்டுகிறேன்:))