பதின்மம்
பதின்மத்தைப் பற்றி என்ன சொல்வது?
தட்டான் பறந்த தூரத்தின் உயரமே இருந்த வாழ்வு
விண்ணில் ஏறி நிலவில் மிதந்து
எங்கும் நிற்காமல் அலைந்த கனவு
அப்பனும் ஆத்தாளும் முக்கனிச்சுவைக்கு வகுப்பெடுத்திருக்க
வேப்பங்காய்ச் சுவை விரும்பித் துடித்த மனதே குரு மற்றவர் எதிரிகள்
சிறுவனும் சிறுமியும் ஊரே அறியத் தொடுத்த அரும்புகள்
ஆணாய்ப் பெண்ணாய் விரிந்து உதிர்ந்த ரகசியப் பொழுதுகள்
உலகை உலுக்கும் அநீதிகளனைத்தையும்
பொசுக்கும் ரௌத்திரம் எனதெனச் சொல்லி
மருதாணி சிவக்கா ராத்திரிக்காக
அழுது சிவந்த கண்களில் மிஞ்சிய
வீரப்புரட்சியின் வெம்மைச் சுவடுகள்
சைக்கிள் ஓட்டிய சாகசத் தழும்புகள்
நீச்சலில் உடைத்த முழங்கால் சில்லுகள்
கவிஞராகி, எழுத்தாளராகி ஓவியருமான
காகிதக் கற்றைகள்
எல்லாம் உள்ளன பதின்மத்தின் சாட்சிகளாய்
இன்னும் சொல்லா நிகழ்வுகளின் சொற்ப ரணங்களும்
கொட்டிய அருவி நதியானால் என்ன
இசை இன்னும் இருந்துகொன்டுதானிருக்கிறது
அதற்குரிய சுருதியோடு
இந்த இசை இருக்கும்வரை இருக்கும் வாழ்வும்.
பின்குறிப்பு:-
அழைத்த தெக்கிக்காட்டானுக்கும், ஆரம்பித்த முல்லைக்கும் கடும் கண்டனங்கள்:))