இவன் மரணத்தைக் கொலை என்றும் சொல்லலாம்
'சத்தியத்துடன் சோதனை' இது தன் வாழ்வைப் பற்றி காந்தியடிகளுக்கு இருந்த எண்ணம். அதுபோல் பாரதியின் வாழ்க்கைக்கு என்னை ஒரு தலைப்பிடச் சொன்னால் 'விடுதலையுடன் சோதனை' என்றுதான் வைப்பேன்.
அவன் உண்மைகளைத் தேடினான். தான் சில உண்மைகளைக் கண்டதாகவும் முடிவுக்கு வந்தான். 'உண்மை தெரிந்து சொல்வேன்' என்று அவற்றை எடுத்துரைக்கவும் செய்தான். அதைவிட முக்கியம் அந்த உண்மைகளின் படி வாழ்ந்திடவும் முயன்றான். தான் நம்பிய உண்மைகளை எதார்த்த வாழ்வில் காண விழைந்தபோது தனக்குத் தன்னுடனே ஏற்பட்ட முரண்களும், பிறருடன் ஏற்பட்ட முரண்களும், காலத்துடன் ஏற்பட்ட முரண்களும் எதிர்நின்றபோது நிகழ்த்திய போராட்டங்களும் காயங்களுமே அவனது வாழ்க்கை!
ஒரு படைப்பாளி என்ற விதத்தில் அவனது ஆற்றல்களும் அவற்றைச் சுமந்து நிற்கும் இலக்கியங்களும் அவனை வெற்றி
பெற்றவனாகவும், காலத்தை வென்றவனாகவும் காட்டுகின்றன. அதே வேளையில் ஒரு மனிதனாகக் காணுகின்றபோது சுயம்தேடிய தன்னுடைய வாழ்வில் அடிக்கப்பட்டவனாக, வீழ்த்தப்பட்டவனாக, நொறுக்கப்பட்டவனாகக் காண நேருகிறது.
ஐந்து வயதாக இருக்கும்போதே ஏங்கவிட்டு விண்ணுலகடைந்த தாயின் நினைவில் கசிந்த சிறுவனை விளையாடவிடாமல் தடுத்த தந்தையின் கட்டளையைச் சொல்லித்தன் இளம்பருவம் தாயும், நட்புமற்றுக் கழிந்ததைக் கூறுகிறான். தான் விரும்பிய கல்வியைக் கற்கவிடாமல், வற்புறுத்தித் திணிக்கப்பட்ட கல்வியால் நொந்துபோய் 'அய்யரென்றும்,
துரையென்றும் அன்றெனக்கு ஆங்கிலக்கலை கற்பித்த பொய்யரே! இது கேளுங்கள்! பொழுதெல்லாம் உங்கள் பாடத்தில் போக்கி மெய்யயர்ந்தேன்; விழிகள் குழிவெய்தினேன்; வீறிழந்தேன்; உள்ளம் நொய்தேன்; சுதந்திரமிழந்தேன்' என்று அவன் தன் பள்ளிப்பருவத்தை எண்ணிக் கொந்தளித்துப் பேசுகிறான்.
நினைக்க நெஞ்சமுருகும் என்றும் பிறர்க்கு எடுத்துச் சொல்ல நா நனிகூசும் என்றும் தொடங்குகிறான் தன் திருமணம் பற்றி! பத்து வயதில் ஒரு கன்னியை நெஞ்சிடை ஊன்றி வணங்கியவனுக்கு, பன்னிரண்டாண்டில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார் தந்தை! அவனுக்கு விருப்பமில்லை. 'பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட' தன் திருமணம் குறித்துப் பாரதி,
"சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள்
சகுன மந்திரத்தாலி மணியெலாம்
யாத்தெனைக் கொலை செய்தனர்..." என்றுகூறி திருமணம் என்ற பெயரால் தான் கொலை செய்யப்பட்டதாகக் குமுறும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
தாயின் முகம் நினைவறியாது இருந்த குழந்தை, தந்தையையும் இழந்தான். 'தந்தை போனான் பாழும் வறுமை சூழ்ந்தது; அஞ்சாதே! என்று சொல்ல உலகில் ஒருவரும் இல்லை, உடலிலும் வலிமையில்லை. மந்த மடையர்களிடம் பொருள் கொடுத்துப் பயின்ற மடமைக் கல்வியால் ஒரு மண்ணும் பயனில்லை, ஐயோ! எந்த மார்க்கமும் தோன்றவில்லையே என்று
திக்கற்றுப் புலம்பி, 'பாருக்குள்ளே நல்ல நாடு' என்று கொண்டாடிய வாயால், அவன் 'ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டினிலே' என்று அரற்றுகிறான்.
சுற்றத்தார் ஆதரவில் வாழ்ந்து உள்ளூர் ஜமீன்தாரிடம் கையேந்திப் பிழைக்க விரும்பாமல் ஓடிவந்து, பத்திரிக்கையாளனாகி , அரசியல்வாதியாகி அடக்குமுறைச் சட்டத்திற்கு ஆட்பட விரும்பாமல், உதவிபுரிய யாருமற்ற இடத்தில் அடைக்கலம் புகுந்து, ஏற்றிருந்த அரசியலும் ஒன்றுமற்று முடிந்துவிட, இயக்கம் முடங்கி அடங்கிய அவனது பரபரப்பான குறுகிய அரசியல் நாட்கள் அதிர்ச்சியானவை.
இந்தியா, கர்மயோகி, விஜயா என்று பத்திரிக்கை முயற்சிகள் ஒவ்வொன்றாய் முறிந்து விழ விழ, எழுதத் துடித்த கைகளுக்கு வந்த தடைகளும் எத்தனை!
'சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்' என்று கொதித்தெழுந்தவன், கடலூரில் கைதி எண் 253 ஆகி, இடர்மிகு
சிறைப்பட்டு, சென்னை மாகாண கவர்னருக்கு,
"மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கூறுகிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளையும் துறந்து விட்டேன். நான் எப்போதும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும் சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்" என்று எழுதிக் கொடுத்ததும் நம்பியிருந்த இயக்கம் தேய்ந்துபோக, நிர்க்கதியான ஒரு போர்வீரன் கையற்று நின்ற அவலம் அதிரவைக்கிறது.
எந்த எட்டயபுரம் ஜமீன்தாரைக் கேலி செய்தானோ, உறவை மறுத்து விலகி வந்தானோ அந்தச் சின்னச்சங்கரன் - பெரிய சங்கரனாகிச் சீட்டுக் கவியெழுதி உதவி வேண்டிக் கெஞ்சியதும்,
"முன்பு கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதரால் எழுதப்பட்ட
சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ்நடையில் பலவிதமான குற்றங்களுடையதாக இருப்பது ஸந்நிதானத்துக்குத் தெரிந்த
விஷயமே. அதைத் திருத்தி நல்ல, இனிய, தெளிந்த தமிழ்நடையில் நான் அமைத்துத் தருவேன்" என்று இராஜவம்சத்து வரலாறு எழுத மன்றாடுவதும் அதிர்ச்சி தருகிறது.
பூனூல் அறுத்தவனைத் திரும்பவும் போட வைத்து நொறுக்கியது சனாதனம்! சாதியிலிருந்து விலக்கி, ஊரிலிருந்து ஒதுக்கி, உணவு கொடுப்பதைத் தடுத்து, அவனை ஒடுக்கிப் பார்த்தது அவனது சொந்த சாதி. சாதியைக் கடந்து, மதத்தைக் கடந்து மனிதரை நேசித்தவனை வெறுத்து ஒதுக்கி அவனைப் பட்டினியிட்டு ஒடுக்கிப் பார்த்தன 'சாதிமத தர்மங்கள்'. ஊருக்கு
வெளியே கஞ்சி குடிப்பதற்கில்லாமல் கிடந்த அவனது நாட்கள் கொடுமையானவை!
ஒவ்வொரு இறகாகப் பிடுங்கப்பட்டுக் கிடந்தான் பாரதி
துடிக்கத் துடிக்க!ஒடுக்கப்பட்டு...நொறுக்கப்பட்டு....
இழந்து...இழந்து...இழந்து...
அவன் இறந்தான் என்பதா?
இல்லை,கொலை செய்யப்பட்டான் என்பதா?
............................பாரதிபுத்திரன் பாரதி குறித்துச் சொன்னவை 'தம்பி நான் ஏது செய்வேனடா' என்ற நூலிலிருந்து........................