நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Wednesday, July 18, 2007

அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்

ஆழத்தில் இருந்து உயிர்த்தெழுந்து மெல்லமெல்ல வேகம்கூட்டி வரும்வழியெங்கும் சேமித்த கோபத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாய் ஆடிவந்து அடித்து காலுக்கடியில் பிடிமணலைக்கரைத்து நம்மை நிலைதடுமாறச் செய்து பிறகு சுதாரிக்கவைக்கும் ஆழியலைகள் உண்டு. அதே ஆழியில் மொட்டொன்று விரியும் மென்மையோடு மெல்லமெல்ல ஊர்ந்துவந்து பாதம் ஈரமாக்கித் திரும்பும் அலைகளும் உண்டு. மனித
மனமும் அப்படியே ஒரு ஆழியைப் போன்றதுதான். எப்போதும் ஒரேமாதிரியான அலைகள் அங்கும் அடிப்பதில்லை. கடந்த பதிவில் எழுந்து ஆடிய வேக அலைகளுக்குப் பின் சிறிது இடைவெளிவிட்டு எழுதுகிறேன் இதை. "மக்கள் பங்குபெறாத புரட்சியால் பயனில்லை" இடுகையில் ஆரம்பித்த முரண்பாடுகள் வெறும் முரண்பாடுகளாகவே நின்றுவிடாமல் தமிழ்க்கணிமை வரலாறு பற்றிய விரிவான அலசல்கள்வரை போய் விருப்பமுள்ள வாசகர்களுக்கு அறியப் பல தகவல்களைக் கொண்டுவந்து குவித்திருக்கும் இந்நிலையில் நான் மீண்டும் திரும்பிப்போய் இதை எழுதாமல்கூட இருக்கலாம். ஆனால்....உணவு இல்லாமலும் வாழலாம் தண்ணீரைக்குடித்துக்கொண்டுகூட சிலகாலம். உறுத்தல்களோடு எப்படி?

அரை நூற்றாண்டுக்கும் ஆறுவருடங்கள் கூடுதலாகக் கொண்ட வயதை உடையவர், இந்தியாடுடே எனும் தமிழ்பதிப்புக்குத் தான் ஆசிரியராக இருந்த காலக்கட்டத்தில் என் மாணவப்பருவத்து மதிப்பில் இருந்தவர், "என் சன்னலுக்கு வெளியே" மூலம் என்னுள்ளூம் சில சன்னல்களைத் திறந்தவர், இணையத்தில் தமிழ் எழுத வந்தபோது இங்கே வரிசையாக நின்று வரவேற்றுக்கொண்டிருந்தவர்களில் நான் வந்தபோது ஒருவராகவும் இருந்தவர் என்மீதான வருத்தம் என்று என்பதிவில் இட்ட பின்னூட்டத்திற்கு எல்லாருக்கும் சமாதானமாகும் விளக்கமாக அது இருக்காதென்றாலும் எனக்குச் சரியென்று பட்டதற்கான காரணங்களையாவது சொல்லிவிடவேண்டுமென்றே இப்பதிவு.


மாலன், "அறிவுஜீவிகள் அதிகார அமைப்புக்கு எதிராகவேதான் நடந்துகொள்ள வேண்டுமா? அவர்கள் அந்தந்தப் பிரச்சினைகளுக்கேற்ப ஏன் நடந்துகொள்ளக்கூடாது?" என்ற உங்களின் கேள்விகளில் தொடங்கி உங்களோடு உரையாட நிறையவே மனதில் சுமந்திருந்தேன் அன்று அந்த இடுகையில். நேரத்திற்குக் காத்திருந்ததில் அவையெல்லாம் முடியாமல்போய் இப்போது முக்கியமானதொன்றை மட்டுமே தொட்டுச் செல்கிறேன். இந்துராமைப் பெயரிலி விமர்சித்ததும், விமர்சித்த விதமும் வருத்தம் உங்களுக்கு. அதை என் போன்றவர்களும் அனுமதித்தது வியப்பாயிருக்கிறதென்றும் சொல்லியிருந்தீர்கள். அதை ஒரு தனிப்பட்ட
தாக்குதல் என்ற அளவிலே(மட்டும்) நீங்கள் பார்க்கிறீர்கள். நான் பார்த்த விதம் வேறு.

நீங்கள் சிலகாலம் இங்கு இல்லாத இடைவெளியில் இங்கு தனிமனிதத் தாக்குதல்கள் எங்கேயோ போய்விட்டன. என்ன எழுதியிருந்தாலும் பதிவைப் படித்துவிட்டு (படிக்காமலேகூட) "பா......ப் பன்னாடை எப்படி எழுதும்?" என்று கேட்கும், பதிவிற்கு எதைப் பற்றி என்ன சொல்லவந்தாலும் "வாங்கய்யா ......'விடப்' பெத்தடின்களா?" என்று வரவேற்கும் அளவுவரை மட்டுமல்ல, "பெரியார்" என்ற ஒருவார்த்தை ஒரு பதிவில்
எங்காவது வந்திருந்தாலே "பாத்துக்கிட்டே இருங்கடா எல்லாம் கூண்டோட செயிலுக்குப் போகத்தான் போறீங்க" என்று நல்வாக்கு அருளும், "பெரியார் எதிர்ப்பு" என்பது எங்காவது தென்பட்டால் அதற்கு அங்கே ஓடிப்போய் இங்கிருக்கும் துளசிகோபாலை நாலு திட்டுத்திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிடும், இவையெல்லாம் பிரசுரமுமாகிவிடும் நிலைவரை போய்விட்டது மாலன். அப்படியான குறிவைத்த தாக்குதல்கள் பட்டியலில் பெயரிலியின் இந்துராம் எதிர்ப்பை என்னால் சேர்க்க முடியவில்லை.

காரணம் நான் இந்த இடுகையைப் போட்டவுடன் "ஆகா குறிப்பிட்ட சாதியைத் திட்ட அருமையான வாய்ப்பு" என்று ஓடிவந்த பின்னூட்டமாக அது இல்லை. பதிவர் சந்திப்பு வந்து என் இடுகையிலே "புரட்சிக்குப் பொறுமை வேண்டும், அது புரட்சிகரத் திண்ணைக் கத்துக்குட்டிக் கம்யூனிஸ்டுகளால் நடக்காது. பொறுமையோடு காத்திருக்கச் சொல்லுகிற இயக்கங்கள்தான் அவற்றை முன்னெடுக்க முடியும்" என்றவுடன் பெயரிலி வந்தார். அந்தப் பொறுமை இயக்கங்கள் யாரை முன்னிறுத்துகின்றன? அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காரமாக விமர்சித்து எழுதினார். அதிலே இந்துராமும் ஒருவர். சாதரணமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைச் சிறுகுழுக்கள் முன்னெடுத்து நகர்த்தும் வேளையிலே, அடித்தட்டு மக்களுக்காகப் போராடுகிறோம் என்றுசொல்லிக்கொள்ளும் இயக்கங்கள் அச்சாதாரண மக்களைத் தம் இயக்கத்திற்குள்ளேயே பொறுப்புக்களில்கூட கொண்டுவரமுடியாமல் இன்னும் மேல்சாதிக்காரர்களின் தலைமைகளிலும், ஆலோசனைகளிலுமே அண்டிக்கிடந்துகொண்டிருக்கும் போக்கைச்
சுட்டினார். இந்த மேல்சாதிக்காரர்களில் பொதுவாகப் பிற உயர்சாதியினரும் அடக்கம். பிரச்சினைகளினால் நொந்துவாழ்பவன் செத்துமடிந்தபின்னும் "பொறுமையாய்ப் புரட்சியைக் கொண்டுவரலாம்" எனப் போதிப்பது எந்தவிதத்தில் நியாயமெனக் கேள்வி எழுப்பினார். "பொறுமையாய் இருங்கள்" என மக்களுக்குப் போதித்துவிட்டு இந்த இயக்கங்களின் மானசீக ஆதரவாளர்கள் இலங்காரத்னாக்களாகவும், அவர்களின்
வாரிசுகள் சுகமானதொரு வாழ்வை அனுபவிப்பவர்களாகவுமே இருப்பதன் ரகசியம் என்னவென்றும் கேட்டார்.

இது முழுக்க முழுக்க சந்திப்புக்குப் பெயரிலி வைத்த வாதம். அதற்குப் பதிலாக சந்திப்பும் திருப்பி "பெயரிலி போன்றவர்களுக்கு இப்படித்தான் வாதம் செய்யத் தோன்றும். உடனே மேல்சாதி விசயங்களை இழுத்துவந்துவிடுவார்கள்" எனப் பதிலிட்டார். "எல்லோரையும் சாதிப் பாரம்பரியம் சொல்லிப் பேசவேண்டிய தேவை எனக்கில்லை. எங்கள் இனத்துக்கு யார் தலைமை என்று முடிவெடுக்கிற, அதுவும் ஆனந்தசங்கரி, டக்ளஸ் போன்றவர்களே தலைமையேற்கத் தகுதியுடையவர்கள் எனத் தீர்ப்பெழுதும் ஆட்களை இப்படித்தான்
பேசுவோம்" என்பது அதில் பெயரிலியின் இறுதியான பதிலாக வந்த பின்னூட்டத்திலே இருந்தது. அதைப் பிரசுரித்துவிட்டு அதற்கான பதிலாக சந்திப்பு ஏதும் வைத்தாலும் அனுமதிக்கத் தயாராகவேயிருந்தேன். நானேகூட விவாதத்தின் இறுதியில் "உங்களின் எல்லாக்கோபங்களும் புரிந்தேயிருந்தாலும் இந்துராமின் மகளையும், தந்தையையும் இதிலே தவிர்த்திருக்கமுடியாதா பெயரிலி?" எனக்கேட்கவும்கூட எண்ணிக்கொண்டிருந்தேன். சந்திப்பின் புத்தகம்மீதான பெயரிலியின் கருத்துக்கு நட்போடு அவரோடு
சண்டைக்குப்போக முடிந்திருந்த எனக்கு இந்துராம் விசயத்தில் இப்படிக் கேட்பதிலேமட்டும் என்ன தயக்கம் இருந்துவிடமுடியும்? ஆனால் பெயரிலி இப்படியொரு கருத்தை வைத்தவுடன் அதன் பின்னான எல்லா வலிகளும் மறந்துபோய் இந்துராமுக்கு வலிக்குமே என்ற கவலை மட்டும் நம்போன்றவர்களுக்கும் துருத்திக்கொண்டு வந்துவிடுவதுதான் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது மாலன்.

அறிவுசீவிகள் இந்துராமைப் போல் இருக்கவேண்டுமா மாலன்? அல்லது நீங்கள் மதிக்கும் அறிவுசீவிகளிலே இந்துராம் அத்துனை முக்கியமானவரா? நெடுங்காலமாக அறிவுசார் உலகத்திலே தானுமொரு அங்கமாய் இயங்கிவரும் உங்களின் 'அறிவுசீவிகள்" பற்றிய பார்வையோடு என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. எந்தவொரு மனிதவடிவ உயிருக்குள்ளும் ஒரு அறிவுசீவி இருக்கிறானா என்று பார்க்கும்முன்பே ஒரு மனிதன்
இருக்கிறானா என்று பார்க்கவே என்னால் முடிகிறது. பலநேரங்களில் எல்லா இசங்களையும் "மனிதநேயம்" எனும் ஒற்றைச்சொல்லுக்குள் புதைத்து மூடிவிட்டு அதன்மீது வாழமுடிந்தாலே வாழ்வு இலகுவாய் ஆகிவிடும் எனத் தோன்றியிருக்கிறது. நம் இதயம் வெறும் நான்கு அறைகளால் பிரிக்கப்பட்ட இரத்தப்பிண்டம் அல்லவென்றும் அது இன்னொருவன் கண்களால் எவ்வளவு பெரியதென்று கணக்கிட்டுச் சொல்லமுடியாத
கருணையினைக் கொண்டிருக்கமுடியக்கூடியதும் என்றும் நம்புகிறேன். அப்படி உண்மையிலேயே கொண்டிருக்க இயலுபவனே மனிதனாக வாழத் தகுதியுடையவனும். அது நீங்களானாலும், நானானாலும் யாரானாலும்.

இந்துராம் எனும் அறிவுசீவியின் தேசியவாத, மனித உரிமை நிலைப்பாடு என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் மாலன். அந்தநிலைப்பாட்டிலே உங்களுக்கு உடன்பாடு இருக்கலாம், இன்னும்சிலருக்கு இல்லாமல் போகலாம். ஆனால் காலச்சக்கரத்தின் சுழலும் ஆரங்கள் அத்துனையிலும் மனிதர்களைத் (தமிழர்களைக்) கதறக் கதறக் கொன்றழிக்கும் ஒரு அரசின் இரத்தம் தோய்ந்த கரங்களால் கட்டியணைத்துக் கொடுக்கப்பட்ட "இலங்காரத்னா" வைப் பணிந்து பெற்றுக்கொள்ளும் ஒருவரை
மனிதநேயமுள்ள யாரும் மரியாதையோடு பார்க்கமுடியுமா தெரியவில்லை. இந்துராம் எனும் தமிழருக்கு அவர் தமிழர்களுக்கு ஆற்றிய எத்தகைய சேவைக்காக இலங்கை அரசு இதை வழங்கிச் சிறப்பித்தது?

புலிகளை விமர்சிக்கலாம், அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். இன்னும் எத்தனையோ லாம்களையும் அவரவருக்கு ஏற்றபடி செய்துகொண்டும் இருக்கலாம். ஆனால் இலங்கையின் கண்ணீர் ஒரு இனத்தினுடைய கண்ணீரென்பது மறுக்கப்படமுடியாத உண்மை. குருத்துக்களைத் தீக்கிரையாக்குவதுபோல் குழந்தைகளை, ஒரு மாலையைப் பிரித்தெறிவதுபோல் பெண்களை, இன்று இவன் வீடுவந்துசேர்வான் என்பதற்கு எந்த
உத்தரவாதமும் இல்லாது மனிதர்களைத் தன் இராணுவம் கொண்டும் கிள்ளியெறிந்துவிட்டுக் கிஞ்சித்தும் குற்றவுணர்வு இல்லாது இயங்கிவரும் ஒரு அதிகார அமைப்பிடமிருந்து ஒரு மானமுள்ள அறிவுசீவியாக அல்லது தமிழராக இந்துராம் இலங்காரத்னாவைப் பெற்றுக்கொள்ளாமல் மறுத்திருந்தால் நீங்கள் சொல்வதுபோல் அவரை devalue செய்ய யாரும் முனையும்போது கவலைப்படலாம். எப்போதே தன்னைத்தானே தன் செயல்மூலம் devalue செய்துகொண்டுவிட்ட ஒருவரை இனிப் புதிதாக devalue செய்ய என்ன இருக்கிறது?

நீங்களும் வலியைத்தான் நினைக்கிறீர்கள் மாலன். இந்துராம் எனும் அறிவுசீவியை இப்படியெல்லாம் திட்டினால் அவருக்கு வலிக்காதா என்று அவரின் வலியை நினைக்கிறீர்கள். நானும் வலியைத்தான் நினைக்கிறேன். குழந்தையின் உயிரைமட்டுமாவது காப்பாற்றிக்கொள்ளலாம் எனப் படகில் ஏறியும் இந்தப்புறம் கொண்டுவந்து சேர்ப்பதற்குள்ளாகவே அதையும் பறிகொடுத்த அவலத்தின் வலியை, ஏழுகடல்தாண்டி எங்கோ ஒரு புலம்பெயர்ந்தநாட்டில் இருந்தபடியே தன்னோடுவராமல் தாய்மண்ணிலேயே தங்கியிருந்த தமையன் செத்த செய்திகேட்டும் "இன்று இவன், நாளை எவனோ" என்ற பயத்துடனேயே வாழநேருகின்ற தலைமுறைகளின் வலியை , பாலுக்கழுகிறதா, போர்முடியாப் பூமியிலே பிறந்ததற்கு அழுகிறதாவெனத் தெரியாமல் பிறந்த குழந்தையையும் அழுதுகொண்டே அணைக்கவேண்டிய தாய்களின் வலியை, மக்களைக் காக்கவெண்டிய அரசின் இராணுவத்தாலேயே வன்புணரப்பட்டுத் தூக்கிவீசப்பட்ட பெண்களின் வலியை
எல்லாம் நினைத்தால் இந்துராம்களுக்கு அவர்களின் செயல்பாடுகள்மீதான ஆற்றாமையை வெளிப்படுத்திய வார்த்தைகளே வலிக்குமென்று நான் நினைக்கவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டாலாகவும், தெனாலியாகவும் அவர்களின் வாழ்வு நமக்கொரு மூன்றுமணிநேரப் பொழுதுபோக்கோடு முடிந்துவிடும். அவை ஒழுங்கான உண்மைகளைச் சொல்பவைதானாவென்ற யோசனைகள்கூட வராது. ஆனால் அவர்களுக்கோ தாம் சாகக்கொடுத்த, கொடுக்கும் உயிர்களின் வலிகளாகத் தலைமுறைகள் கடந்தும் கூடவரும். நம் அறிவுசீவிப் பார்வைகளோடு நாம்; அரைநுறு ஆண்டுகளாகத் தினம்தினம் எல்லோருக்கும் சூரியன் விடிந்தும் தமக்கொரு விடியல் கிடைக்காத வேதனைகளோடு அவர்கள். நாம் அவர்களாக இல்லாமல்போனது சுயநலம்சார்ந்தபார்வையில் அதிர்ஷ்டவசமாய்த் தெரியலாம். அதனாலேயே அவர்களின் மொழிகூட நமக்குப் புரியாதுபோய்விடுவது
துரதிஷ்டவசமானது. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்று கூசாமல் பொய் சொல்லியிருக்கிறான் கணியன் பூங்குன்றன். தமிழனுக்கு இன்னொரு தமிழனே அப்படியிருக்காதபோது இது பொய்யன்றி வேறென்ன?


கடைசியாகப் பெயரிலிக்கு:-

பெண்கள், பாலியல் தொழிலாளர்கள் பிரச்சினைகளையெல்லாம் பேசவிரும்பாததன் காரணங்களாக நீங்கள் என் கடந்த இடுகையின் பின்னூட்டத்திலே குறிப்பிட்டிருந்தவை பெரும்பாலானவற்றையும் விரிவாக விமர்சித்து உரையாடவே திட்டமிட்டேன். அதில் குறிப்பிட்ட சில இடங்களில் எங்கெங்கோ நடந்த சண்டைகளின் சாயல்கள் தெரிந்தபோதும் பேசுவதற்கொரு சூழலைக் கனியத் தந்த உங்களோடு எல்லாவற்றையும் உரையாட
முடியுமென்ற பேராவலை நானும் கொண்டிருந்ததாலேயே அவற்றைப் பிரசுரிக்கவும் செய்தேன். குடும்பத்துக்குக் கெட்டநேரமென்று உறுப்பினர்கள் எல்லார் பேரிலும் குலதெய்வத்துக்கு அர்ச்சனை செய்துவிடும் ஒரு பக்தனைப்போல் வலையுலகில் யாரேனும் எதுசெய்தாலும் மொத்தமாய் ஒரு லட்சார்ச்சனை (நன்றி மூக்குசுந்தர்) நிகழ்த்த உங்களுக்கு வேகம் வந்துவிடும் பொழுதுகளில் உங்களோடு உரையாட எனக்குத் தெம்பு வந்ததில்லை:)) ஆனால் போன இடுகையில் சூழல் கனிந்த ஒரு சமயத்தில் பேசும் ஆவல் வந்தது. அதையும்
ஒரு பெருமழை வந்து அடித்துக்கொண்டே போய்விட்டது. இனிஒரு மழைவராத நாளில் முடிந்தால் பார்க்கலாம்:))

Thursday, July 05, 2007

மக்கள் பங்குபெறாத புரட்சியால் பயனில்லை

‘‘நீயெல்லாம் செத்தா சந்நியாசித் தோப்பு சுடுகாட்டுல தான்டா புதைப்பேன்!’’ & என்னை, நான் ஒரு சேகுவேரா போல நினைத்-துக்கொண்டு அலைந்த மாணவப் பருவத்தில், என் அப்பா இப்படித்தான் திட்டுவார். காரணம், சந்நியாசித் தோப்பு சுடுகாடு... பாண்டிச்-சேரியில் அனாதைப் பிணங்களைப் புதைக்கிற இடம். தான்தோன்றித்தனமாகத் தன் பையன் திரிகிறானோ என்ற பயம், கவலை, கோபம் அவருக்கு. ஆனால், இன்று அப்பா இருந்திருந்தால், எல்லா வகையிலும் நான் சரியாகத்தான் வாழ்-கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு இருப்பார்.



பள்ளிப் பருவத்தில், ஈழப் -பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்தது. மொத்தத் தமிழகமும் ஈழத் தமிழர்களுக்காகக் கொந்த-ளித்த காலத்தில், ‘இந்திய அரசே! இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பு. இல்லாவிட்டால் எங்களை அனுப்பு’ என்றெல்லாம் நாங்களும் போஸ்டர் ஒட்டிப் போராடுவோம்.

பள்ளிப் -படிப்பை முடித்து, தாகூர் கலைக்- கல்லூரியில் சேர்ந்தபோது பெருஞ்சித்திரனாரின் மகன் பொழிலனின் நட்பு கிடைத்தது. மொழி, இனம்,


நாடு என்று தமிழ்த் தேசிய நலன்களைப் பேணும் கொள்கை-களைத் தீவிரமாக நானும் ஆதரித்தேன். தமிழ்நாடு விடுதலைப் -படைத் தலைவர் தமிழரசனின் தொடர்பு கிடைத்தது. பெரியவர் புலவர் கலிய-பெருமாளின் வழிகாட்டுதலில் தனித் தமிழ்க் கொள்கைகளை வலியுறுத்தி அமைப்பு கட்டினோம். 87&ல் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையில் திட்டமிட்டு தமிழரசன் கொல்லப்பட்ட பிறகும், நாங்கள் தொடர்ந்து இயங்கினோம். ஈழப் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, இந்தியாவும் தலை-யிட்டது. ஆனால், அது ஈழத் தமிழர்களை விலக்கிவிட்டு, இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்துகொண் டதும் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு.

அப்போது தூர்தர்ஷன் அந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவான பிரசாரத்தை முடுக்கிவிட, டி.வி. பெட்டி உடைப்புப் போராட்-டம் நடந்தது. சென்னை, கத்திப்பாராவில் இருக்கிற நேரு சிலையை வெடி வைத்துத் தகர்க்கும் முயற்சி நடந்தது. கொடைக்கானல் டி.வி. டவரை குண்டு வைத்துத் தகர்க்-கும் முயற்சி நடந்தது. இந்த இரண்டு வழக்கிலும் பொழில-னுடன் என்னை-யும் சேர்த்துக் கைது செய்தது காவல் துறை. 18 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து நாங்கள் விசாரிக்கப்-பட்-டோம். பின்னர், நான் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டேன்.

மக்கள் பங்கு பெறாத எந்தப் புரட்சியும், அதை யாருக்-காக நடத்துகிறோமோ அவர்களுக்கே பயன்படாமல் போய்விடும். சிறு குழுக்களின் ஆயுதத் தாக்குதல் முயற்சி-களெல்லாம் மக்கள் ஆதர-வில்லாத குறுங்குழு வாதம் என்பதைப் புரிந்து-கொண்டேன். ஆனால் 18 நாள் சட்ட விரோதக் காவலில் இருந்த நாட்களும், சிறைச் சாலை அனுபவங்களும் என்னை மனித உரிமையின் பக்கம் திருப்பின. நான், ரவிக்குமார் எல்லாம் சேர்ந்து, 1989&ல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைத் தொடங்கி-னோம்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் பத்மினிக்குப் பாலியல் கொடுமை நடந்தபோது, சி.பி.எம். கட்சியுடன் இணைந்து நீதி கேட்டுப் போராடினோம். சம்பவம் நடந்த மூன்றாவது நாள், பத்மினி-யிடம் ஒரு வாக்குமூலம் பதிவுசெய்து அதை ஆயிரக்-கணக்கில் அச்சடித்து மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம். அந்த வழக்கில் நாங்கள் பதிவுசெய்த அந்த வாக்குமூலம் ஒரு ரத்த சாட்சி-யாக இருந்து, பத்மினிக்குத் துன்பம் செய்தவர்களைச் சிறைக்கு அனுப்ப உதவியாக இருந்தது.



அது போல, ரீட்டாமேரி வழக்கில் பேராசிரியர் கல்யாணியுடன் இணைந்து பணியாற்றி-னோம். பார்வதி ஷா கொலை வழக்கு, கோதண்டம் என்கிற இளைஞர் காவல் நிலையத்தில் கொல்லப்-பட்டது என்று ஏராளமான அத்துமீறல்-களில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தன் பங்களிப்பைச் செய்திருக்கிறது.

ஒரு சமூகம் நாகரிகமான முறையில் தன் குடிமக்களை நடத்துகிறதா என்பதை, அந்தச் சமூகத்தில் இருக்கும் சிறைச்சாலை-களையும் காவல் துறையை-யும் வைத்தே அளவிட முடியும் என்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெருமளவு உரிமை மீறல்-கள் காவல் நிலையங்-களிலோ, காவல்துறையின-ராலோதான் நடைபெறுகின்றன. சிறைச்-சாலைகள் சித்ரவதைக் கூடங்களாக இருக்கின்றன.

புதுவையில், செக்குமேடு என்று பாலியல் தொழிலாளர்கள் வாழும் பகுதி இருக்கிறது. கமலா, கௌரி, மேனகா என மூன்று பெண் ஏஜென்ட்டு-கள் பல பெண்களை வைத்து தொழில் செய்து வந்தார்கள். மாதா மாதம் அவர்களிடம் இருந்து மாமூல் வசூலிப்பது போதாதென்று அடி, உதை, சித்ர-வதை, வழக்கு என்றும் துன்புறுத்தப்-பட்டார்கள். அவர்களுக்-காக நாங்கள் நீதி கேட்டுப் போராடி-னோம். அவர்-களுக்கு மாற்று வாழ்க்-கைக்கு ஏற்பாடு செய்-யுங்கள் அல்-லது பாலியல் தொழிலை அங்கீகரியுங்கள் என்றோம். பாலியல் தொழிலை அங்கீகரிப்பதா என்று பலருக்கு அதிர்ச்சி!

படிப்பறிவில்லாத ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டால், தங்கள் அனுபவத்தில் இருந்து அவர்கள் மற்றவரின் உரிமை பாதிக்கப்படும் போது நிச்சயம் குரல் கொடுப்பார்-கள். அத்தியூர் விஜயா இப்போது தன்னைப் போல பாதிக்கப்படுகிற பெண்களுக்-காகக் குரல் கொடுக்க, காவல் நிலை-யங்களுக்குப் போகிறார். காவலர்கள் அவரை இப்போது மிக மரியாதையோடு நடத்துகிறார்கள். இதுதான் மனித உரிமையின் மகத்துவம்!

கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டபோது, அவரை விடுவிக்க பழ.நெடுமாறன், கல்யாணி, நக்கீரன் கோபால், நான் எல்லோரும் காட்டுக்குள் போனோம். ராஜ்குமார் மீட்கப்பட்டார். இப்-போது வீரப்பனைக் கொன்றாகி-விட்டது. ஆனால், வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்-பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு சதாசிவம் கமிஷன் வழங்கச்சொன்ன நஷ்டஈட்டை இன்னும் முழுமையாகக் கொடுக்க வில்லை.

மரண தண்டனை, என்கவுன்ட்-டர்கள், சட்டவிரோதக் காவல் சித்ர-வதைகள், சாதிக் கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறை, குழந்தை-கள் மீதான வன்முறை என இடத்துக்கு இடம் வன்முறை-யின் வடிவம் மாறுகிறது. இதுபற்றிய விழிப்பு உணர்வு பரவி-னால்-தான், மக்க-ளிடையே எழுச்சி ஏற்படும்.


நாடாளுமன்றத் தாக்கு-தலில் தூக்குத் தண்டனை விதிக்-கப்பட்டு இருக்கும் முகமது அப்சல் உட்பட யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்கி-றோம். காந்தியைக் கொன்ற கோட்சே இன்றைக்கு இருந்-திருந்-தாலும், கோட்சேவுக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்லி-யிருப்போம். காரணம், காந்தியே தூக்குத் தண்ட-னையை எதிர்த்தார். தவிர, தண்டனையின் நோக்கம் குற்றவாளியைத் திருத்து-வதாக இருக்க வேண்டுமே தவிர, அரசும் பதிலுக்கு ஒரு கொலையைச் செய்யக் கூடாது!

இதைச் சொன்னால், விபசாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் தேசத் துரோகிகளுக்கும் ஆதரவாகப் பேசுவதா எனச் சிலர் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ரௌடி-கள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள், தீவிர-வாதிகள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கும் நம்மைப் போல மனித உரிமைகள் உள்ளன. அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்கிறோம்.

சமீபத்தில், மும்பையில் என்-கவுன்ட்டர்-களுக்கு எதிரான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் தீர்க்கமாகச் சில விஷயங்களைப் பேசினோம். அது தமிழ்ச் சூழலுக்கும் பொருந்தும். ரௌடி-களை ஒழித்துவிட்டால், ரௌடியிசமே ஒழிந்துவிடும் என நினைப்பது தவறானது. காரணம், இங்கே ரௌடியிசம் என்பது அரசியலுடன் கலந்திருக்கிறது அதன் ஆணி வேரைக் கண்டுபிடித்துச் சரி செய்-யாமல், ரௌடியிசத்தை சட்டம்& ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்ப்பதால் ஒரு பயனும் ஏற்படாது!

வாழ்வியல் அறம்
அதிகாரத்துக்குப் பயப்படாமல், நேர்மையாக உண்மைகளைப் பேசுவது!
ரோல் மாடல்!
ஆந்திராவில், நக்சலைட்டுகளுக்கும் ஆந்திர அரசுக்குமிடையில் பாலமாகச் செயல்படும் மனித உரிமைப் போராளியான டாக்டர் கே.பாலகோபால்!
எதிர்காலக் கனவு!
மனித உரிமைகள் என்றாலே என்னவென்று தெரியாத மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்!
பிடித்த நபர்
தந்தை பெரியார்!
இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது... உங்களுக்கு உரிமைகள் இருப்பதை உணருங்கள். அதை யாருக்காகவும் எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காதீர்கள்.உங்களுக்கும் கீழான மக்களின் உரிமைகளைப் பறிக்காதீர்கள்.அவர்களுக்குக்கைகொடுங்கள்!

************ ******************
எப்போதாவது இணையத்தில் விகடன் மேய்வதுண்டு. ஆனந்த விகடனில் "முதல் தலைமுறை" என்றொரு பத்தி வருகிறது போலும். இதற்குமுன் அந்தப் பக்கத்தில் நின்று படித்ததாக நினைவில்லை. ஆனால் இன்று இவர் படிக்கவைத்தார். "மக்களிடையே விழிப்புணர்வைக் கொண்டுசேர்க்காமல் சிறுசிறு குழுக்களால் ஆயுதப் போராட்டமே நடந்தாலும் அதற்குப் பெரிதாய்ப் பலனிருக்காது " என்ற இடம் சமூக மாற்றங்களை விரும்புவர்கள் மிகவும் யோசிக்க வேண்டியது. நன்றி சுகுமாரனுக்கும் விகடனுக்கும்.

Tuesday, July 03, 2007

பெய்யாத மழை

வெக்கையால் தகிக்கும்
அந்தப்பாலைவனத் திசையிலிருந்துதான்
வெண்பஞ்சின் வண்ணமொத்த மேகங்கள் சில
வந்துபோகின்றன ஒவ்வொருநாளும்

காக்கைகளும் கரையாத மத்தியானப்பகற்பொழுதில்
மழைவந்தால் ஒழுகும் தன் ஓட்டுவீட்டின்
காரைபெயர்ந்த திண்ணையிலமர்ந்து
தடியூன்றி நடக்கும் பெருங்கிழவி
குதப்பித்துப்பிய வெற்றிலைச்சாற்றின் காய்ந்த நிறத்தில்
சிவந்துகிடக்கிறது பாலைமணல்தரை

காற்றுவெளியின் உயரழுத்தங்கள் உந்தித்தள்ள
மரங்களடர்ந்த பிரதேசத்திற்கு நகர்ந்துநகர்ந்து
நடுவே ஒரு மைதானத்தில் குத்திட்டு நிற்கின்றன அம்மேகங்கள்
தாம் மழையாய்ப் பெய்யத் தோதாகுமாவென

வரிசையாய் வெற்றிக்கோப்பைகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்க
செயிப்பதற்கானதொரு ஆடுகளமாய் மனிதர்களைத் தாங்கிநிற்கிறது மைதானம்
போட்டி துவங்கும் முன்பே பரிசைக்குறிவைத்து
திரைமறைவில் நகரும் காய்கள்
தான் ஓடிச் செயிக்கத் தடையாய் இருப்பவனை
இழுத்துத் தள்ளும் தந்திரங்கள்
எங்கென்று தெரியாதபடி ஒவ்வொருவனுக்குள்ளும்
ஒளிந்துகொண்டிருக்கும் கத்திகள்
பீத்துளி கிளப்பிப் பயமுறுத்துவதிலிருந்து
உயிர்பறித்து உண்ணும் உள்வெறிவரையான உண்மைகள்
எல்லாம் செரித்துப் பெருமூச்சுக்களாய் வெளிப்படும் பரப்பில்
காற்றில் கலக்கும் அவ்வதிர்வுகள் தாக்கக்
கறுத்துக்கனக்கும் மேகங்கள்
வந்த திசையிலேயே திரும்பச் செல்கின்றன
இன்னும் பெய்யாத மழையைச் சுமந்தபடி

மனிதர்களின் மைதானங்களில்
மழையாய்ப் பெய்யமுடியாத தம் துக்கத்தை
வெற்றிலை எச்சிலின் காய்ந்த நிறம்கொண்ட
பாலைவனத் தரையில்தான் யாருமற்ற இரவுகளில்
இரத்தமாய் அழுது தீர்க்கின்றன அம்மேகங்களெனக்
கூவிக் கடக்கிறது
இன்று எதற்கோ
இவ்வழியாகப் பறந்த வால்நீண்ட கருங்குருவி