சொலவடைப் பதிவென்பதால் சொலவடை சொல்லியே ஆரம்பிக்கலாம். "குடிக்கத் தண்ணி 
கேட்டா நீ குளிப்பாட்டத் தண்ணி கொண்டுவருவே" என்று சிறுவயதிலேயே சொலவடையில் 
திட்டு வாங்கிய ஆள் நான். 
வெய்யிலில் காட்டில் அலைந்துவிட்டு வரும் வீட்டு மனிதர்கள் யாரேனும் "பாப்பா தாகமா 
இருக்குது உள்ள போயி ஒரு சொம்பு தண்ணி கொண்டு வா"  என்று சொல்வார்கள். 
நாமும் சரியென்று எழுந்து செல்வதுதான். ஆனால் வெளித்திண்ணையில் வாங்கிய சொற்கள் 
கீழே படிகளில் இறங்கி உள்நடைக்குள் செல்லும்போதே கொஞ்சம் தேய்ந்து, பார்வை 
அங்கே சுவற்றில் சாய்த்து நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிளில் நிலைகுத்தி அதில் குரங்குப் 
பெடல்(பெரிய சைக்கிளை ஆரம்பத்தில் ஓட்டிப் பழகும் முறைக்குப் பெயர் குரங்குப் பெடல்) 
போட்டுப் பார்க்கவைக்கும். சிலநிமிடம் கழித்து மீண்டும் தண்ணி கொண்டுவரவேண்டிய 
ஞாபகம் வந்தவுடன் நடைதாண்டி உள்திண்ணையும் ஏறியாகிவிடும். ஆனால் அங்கே 
ஒருமூலையில் வைக்கப்பட்டிருக்கும் குடத்து நீர் என்னவோ செய்யும். உள்ளே கையைவிட்டு
ஒரு கை அள்ளிக் குடத்தின் விளிம்பு மீது விட்டு அது சொட்டுச் சொட்டாய் வடிவது 
பார்ப்பதில் ஒரு 2 நிமிடம். "பாப்பாஆஆ..." அதற்குள் வெளித்திண்ணையில் திரும்பவும் 
பிறக்கும் சொல் சமையலைறைச் சன்னல் வழி வந்து செவிகளைத் தாக்கும்.   
சமையலறைக்குள் இப்போதுதான் கால் நுழைகிறதென்றாலும் "தண்ணி மோந்தாச்சுங்க....". 
இதெல்லாம் சொல்ல அந்த வயதிலும் எப்படியோ கற்றாயிற்று.  சொம்பைக் கையில் 
எடுத்துக் குடிக்கிற தண்ணி இருக்கும் சால்ப்பானைக்குள் விட்டு எடுத்துத் திரும்பினால் 
அங்கே குழம்புக்கு அம்மா வேகவைத்துத் தட்டில் தொலிச்சு (தோலுரித்து என்பதன் மரூஉ)
வைத்திருக்கும் உருளைக்கிழங்கு தன்னைக் கொஞ்சம் உடைத்து வாயில் 
போட்டுக்கொள்ளச் சொல்லும். அதையும் முடித்து ஒருவழியாய்ச் சொம்புத் தன்ணியோடு 
வெளித்திண்ணைக்கு வருகையில் வரவேற்பதுதான்  "நீயெல்லா குடிக்கத் தண்ணி கேட்டா 
குளிப்பாட்டத்தான் கொண்டுவந்து தருவே, சின்னப்புள்ள இப்படியா வேலை செய்யறது? ஒரு 
ஓட்டமுட்டாத் தண்ணி வராதா?" எனும் சொலவடைத் திட்டு. அப்பொழுதும் 
திட்டுக்கெல்லாம் சுருங்காத மனம் சொலவடையின் பின்னால்தான் போய்க்கொண்டிருக்கும். 
உயிர்போகும் தாகத்தில் ஒருவன் தண்ணீர் கேட்டால் அதை எவ்வளவு விரைவாகச் 
செய்யமுடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்தால் நல்லது. அப்படியில்லாமல்  தண்ணீர் 
கொண்டுவரப்போகும் வழியில் பலசோலிகளைப் பார்த்துவிட்டு ஆடியசைந்து வந்தால் 
அதற்குள் தண்ணீர் கேட்டவன் உயிர் பிரிந்து அவன் உடல் குளிப்பாட்டவே எடுத்து 
வைக்கப்பட்டு விடும். பிறகு கொண்டுவந்த தண்ணீரை குளிப்பாட்டத்தான் ஊற்ற வேண்டும் 
என்பது இதன் நேரடியான பொருள் என்றாலும் சோம்பேறிகள் பலருக்கும் பல 
சூழ்நிலைகளிலும் இதே சொலவடையைப் பொருத்தியும் பார்க்கலாம். நான் பதிவெழுதும் 
லட்சணத்திற்கும்கூட இது பொருந்திவருவதாகவே உள்ளது. அவ்வளவு வேகம்.....பார்ப்பது, 
படிப்பது, உணர்வது என்று அந்தந்த நிமிடங்களில் எழுதுவதற்கு எண்ணற்ற சிந்தனைகள் 
ஓடினாலும் மாய்ந்து உட்கார்ந்து ஒரு பதிவு எழுதி முடிப்பதென்பது எனக்கு இமாலய 
சாதனைதான். இந்த மடச் சோம்பேறியை நட்சத்திரமாக்கினாலாவது ஒரு வாரத்திற்கேனும் 
தொடர்ந்து எழுதித் தொலைக்குமா எனில் அதுவும் இல்லை. ஏழு நாட்களுக்கு 5 பதிவுகள் 
எழுதிய சா(சோ)தனை நட்சத்திரப் பதிவர் என்பது எனது வரலாறு.
அப்படியிருந்துவிட்டு இப்போது ஒரு நாளுக்குள் இரண்டு பதிவுகள் இடுகிறேனே? நானா 
இப்படி? என்று எனக்கே ஆச்சரியம் கொப்பளித்தாலும் இதற்கான தூண்டுதலை 
எண்ணுகையில் சிலருக்கு நன்றி சொல்லவேண்டும். நான் எழுதுவதை(யும்) இந்தச் 
சிலவருடங்களாகப் படித்தும், எழுதவராதபோது "வந்து எழுது" என உரிமையோடு இழுத்தும் 
வருகிற வலையுலக நண்பர்கள். பிறகு இங்கு ஏற்படும் தற்காலிக, தொடர் நிகழ்வுகள் 
சிலவும் எழுத்துக்கான உத்வேகத்தை வழங்கிவிடுகின்றன. இப்போது எனக்கு அப்படியான 
நிகழ்வுகள் சிலதைச் சொல்ல வேண்டுமென்றால் நான் காணாது போயிருந்த பலமாத 
இடைவெளியில் வலையுலகுக்கு வந்து எழுதத் துவங்கியிருக்கும் பல புதிய நண்பர்களால் 
இங்கு ஏற்பட்டிருக்கும் புதிய நீரோட்டத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.  பதி, 
தமிழன் கறுப்பி, யாத்ரா, அமிர்தவர்ஷினி அம்மா, தீபா, எழுத்தாளர்கள் மாதவராஜ், 
ச.தமிழ்ச்செல்வன் சந்தனமுல்லை, மிஸஸ். டவுட், உமாஷக்தி என்று மெதுமெதுவாக நான்
அறியத் துவங்கியிருக்கும் அப்புதிய நீரோட்டத்துக்காரர்களின் பெயர்ப்பட்டியல் இன்னும் 
நீளுகிறது.
தீராத பக்கங்களில் சடசடவெனக் கொட்டுகிறது மழை. எப்போது நிற்குமெனத் 
தோன்றாமல் இன்னும் பெய்யட்டும் இந்த மழையென்னும்படியான பல்வேறு திசைகளிலும் 
நிகழ்கிறது அங்கே பதிவுப் பாய்ச்சல். தமிழ்வீதியில் நிற்கும் ச. தமிழ்ச்செல்வன் இங்கும் 
தான் உணர்ந்த வாழ்வின் பக்கங்களை அவற்றை வாசித்திருக்காதவர்களுக்கும் இயல்பாக, 
மிக இயல்பாகச் சொல்லிச் சென்றுகொண்டிருக்கிறார். இவர்கள் எடுத்துக்கொள்ளும் 
பேசுபொருள்கள் அவற்றை இன்னும் அறிந்துகொள்ளூம் ஆர்வத்தை, அவைகுறித்து 
உரையாடும் உந்துதலை, தொலைத்த நல்லதொன்றைத் திரும்பக் கண்டுபிடிக்கும் தேடலை 
எனப் பல கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியபடி கடக்கின்றன. எல்லோருடனும் 
ஏதாவதொரு புள்ளியில் ஏற்படும் கருத்து முரண்கள் இவர்களோடும் ஏற்படுகின்றன 
எனும்போதும் இப்போதைக்கு அவர்கள் எழுதும் வேகத்துக்குக் கூட ஓடிப் படிப்பதே 
எனக்கு மூச்சுவாங்கும் நிலையாக இருப்பதால் வெறும் மௌனப் பின் தொடர்தலே.
ஆனால் இவர்கள் இருவரும் எழுதியிருக்கும் சொலவடைகளின் பதிவுகளை வாசித்த பின்பு 
அப்படிச் சும்மா நகரமுடியவில்லை.  இறங்க மறுத்து மனதில் ஏறிக் கூடவே 
வந்துகொண்டிருக்கிறது "சொலவடைகளை  அரிசின்னு அள்ளுவாரும் இல்லை, உம்மின்னு 
ஊதுவாரும் இல்லை" எனும் ச. தமிழ்ச்செல்வனின் வாசகம். அது  நாள்பூராவும்
தொந்தரவு செய்துகொண்டேவும் இருந்தது. பூகோளத்தின் இன்னொரு மூலையில் இன்று 
அன்றாட வாழ்வோடு புரண்டுகொண்டிருந்தாலும் எனக்குத் தொட்டிலிட்ட பூமியின் 
சுகந்தத்தைச் சுமந்து திரியும் சொலவடைகளை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கவைத்தது. 
 நாளின் பெரும்பகுதியை எவனோ ஒருவனின் மொழியில் கழித்துத் திரும்பிய அசதி இந்தச் 
சொலவடைகள் என்னும் என் மூதாதையர் சொல்லித்தந்த முதல்மொழி பற்றிய நினைவுகளில்
தீர்கிறது.  அதனால் கிடைத்த சுறுசுறுப்பே ஒரு பதிவு போட்ட ஒருநாளுக்குள்  இன்னொரு 
பதிவையும் எழுத இந்த மடச்சோம்பேறியையும் தூண்டியது.
சொலவடைகளை வெறும் சொலவடைகளாகப் பார்க்காமல் அவற்றுக்குள் ஒளிந்திருக்கும் 
சூட்சுமங்களையும் பார்க்கத் தெரிகிறது இப்போதைய மூளைக்கு. அவற்றில் என் 
மூதாதையருக்குள்ளிருந்த நல்லவை, நல்லவையல்லாதவை என்பதையும் பிரித்தறிய முடிகிறது. யோசித்து நினைவுபடுத்திக்கொண்டவற்றை இங்கே இப்போதைக்கு வெறுமனே தொகுத்து வைக்கிறேன். 
கரிசல் காட்டுச் சொலவடைகள் பல சிற்சில சொல்மாற்றங்களுடன் கொங்குநாட்டிலும் 
பயன்படுத்தப்பட்டுக் கேட்டிருக்கிறேன். நான் இங்கே எழுதும் கொங்குநாட்டில் 
பயன்படுத்தப்படும் இச்சொலவடைகள் வேறு பகுதிகளிலும் இருக்கலாமெனவும் கருதுகிறேன்.
1. கலைப்பாரு கலைச்சாக் கல்லுங் கரையும்.
2. தாய்மடியில தங்கமே இருந்தாலும் தன் மடியில தவிடு இருந்தாத் திங்கலாம்.
3. சித்தப்பன் பொழச்சா என்ன சிறுநெருஞ்சி பூத்தா என்ன?
   பெரியப்பன் பொழச்சா என்ன பெருநெருஞ்சி பூத்தா என்ன?
   நம்மப்பன் பொழச்சாத்தான் நமக்கெல்லாங்க் கொண்டாட்டம்
4. கொடும கொடுமன்னு கோயலுக்குப் போனா
   அங்க ரெண்டு கொடும எனக்கு முன்னால நிக்குது
5. கும்படப்போன தெய்வம் குறுக்க வந்தாப்பல
6. பொழைக்கறவன் பொழுதோட தூங்குவான்
   கூறுகெடறவன் கோழிகூப்படத் தூங்குவான்
7. அப்பனே அடிமட்டையப் புடிச்சுக்கிட்டுத் தொங்கறான்
   மவன் குருத்தோலை கேட்டானாமா
8.  அண்ணந்தம்பிக்குள்ள என்ன  ஆட்டுக்கறியில அடிச்சுக்குவானுக கோழிக்கறியில  
    கூடிக்குவானுக
9.  ஆடறமாட்டை ஆடிக்கறக்கணும் பாடற மாட்டை பாடிக்கறக்கனும் (இது 
சொலவடையா பழமொழியா எனக் குழப்பம் உள்ளது)
10. குடிகாரம் பேச்சு பொழுதோட ஒண்ணு பொழுது விடிஞ்சா ஒண்ணு
11. பன்னிகூடச் சேந்தா பசுவும் என்னத்தையோ திங்கும்பாங்களே
12.  அவம் பேச்சைக் கொண்டுபோயி தண்ணீல எழுதி வை
13. இருக்கறத உட்டுப்போட்டு பறக்கறதுக்கு ஏண்டா ஆசப்படறே?
14. தாயத் தண்ணிக் கெணத்துல பாத்தாப் புள்ளைய ஊட்டுல பாக்கத் தேவையில்லே
15. தாசி வெச்ச ஊடொன்னு தாதரா மொளச்ச காடொன்னு ரெண்டுமே உருப்படாது.
16.  ஒரு பொண்டாட்டிக்காரனுக்கு உரியில சோறு பல பொண்டாட்டிக்காரனுக்குத்   
     தெருவுலதாஞ்ச் சோறு.
17. ஆனா இந்தமடம் ஆகாட்டிச் சந்த மடம்
18. இருக்கறவனுக்கு ஒரு ஊடு இல்லாதவனுக்குப் பல ஊடு
19. விளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சங் கட்டுனா எப்படியிருக்கும்
20. நாயைக் குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும் அடேங்கற புத்தி போகாது
21. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
22. பொய்யப் பொருதறாப்பல சொன்னா நெசம் நின்னுக்கிட்டு முழிக்குமாம்
23. பூனைவாலைப் புடிச்சா கொஞ்சந்தூரம் போகலாம் ஆனைவாலைப் புடிச்சா 
    ஆத்தேட்டியே தாண்டலாம்
24. ஒள்ளுக்கு ஒருபக்கந்தே இடி மத்தாளத்துக்கு ரெண்டுபக்கமு இடி
25. மாமியா ஒடச்சா மண்பானை மருமக ஒடச்சா பொன்பானை
26. பசிஏப்பக்காரனும் புளிஏப்பக்காரனும் ஒன்னாக முடியுமா
27. அவனே ஒரு சோத்துக்குச் செத்தவன்
28. அதேங்க்கொழுக்கட்டை சப்புன்னு இருக்குது ஒருகாசுக்குங்கூட வெல்லமில்லையாமா
29. எவனோ புதுவட்டலக் கண்டு ஏழுவட்டல் சோறுதின்னானாமா
30. அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவா
31. கூரையேறிக்கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்
32. கண்ணுல பட்டாக் கரிக்குமா புருவத்துல பட்டாக் கரிக்குமா
33.  காடு வாவாங்குது ஊடு போபோங்குது
34. ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரிய மெரட்டுன கதையா இருக்குது
35. தேனெடுத்தவன் கைய நக்காம இருப்பானா
36. ஒள்ளுக்குள்ள தலைய வெச்சாச்சு இனி ஒலக்கை வருதேன்னா ஆகுமா
மேற்கூறியவை பொதுவாக மக்களின் வாழ்வியலைக் கூறுகின்றன. ஆனால் பின்வரும் 
சொலவடைகள் வேறுபல கண்ணோட்டங்களையும், நம் சமூகத்தின் புரையோடிய புண்களின் 
உண்மைகளையுணரவேண்டிய கட்டாயத்தையும் வேண்டிநிற்கின்றன.
1. ஊருக்கு எளச்சவன்  புள்ளாரு கோயல் ஆண்டி
2. பொழப்புக் கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலையச் செரச்சானாம்
3. வகைதெரியா வண்ணாங்கூடப் போனா வெடிய வெடிய வெள்ளாவிக்குத் தீ 
   எரிக்கோணும்
4.  செட்டி நட்டம் குடிபடைக்குள்ள
5. ஆணை அடிச்சு வளக்கோணும் பொண்ணைப் போத்தி வளக்கோணும்
இப்போதைக்கு இவ்வளவுதான். இனி இந்தச் சொலவடைகளை ஒவ்வொன்றும் 
பயன்படுத்தப்படும் காட்சிக்களனை வட்டார மொழியிலேயே எழுதிவைத்தாலும் நன்றாகத்தான் 
இருக்கும். அதற்கான மனத்தூண்டல் அமைகிற ஒரு நாளில் பார்க்கலாம்.
இந்தச் சொலவடைப்பதிவை எழுதத்தூண்டிய தீராத பக்கங்கள் மற்றும் தமிழ்வீதிக்கு நன்றி.