"சோத்துக்கு வந்தவந்தான?"......அய்யன்கதை 1
நாளைக்கே நம்மளய "நீங்க இப்படி அடாது மழை பெய்தாலும் விடாது பதிவெழுதித் தமிழ் இலக்கியத்துக்கும் இணையத்துக்கும் எதுவும் வெளங்காமப் போகச் சேவை செய்யனும்னு நெனைக்க மூலகாரணமா அமைஞ்சது எது?" அப்படின்னு யாராச்சும் பேட்டி எடுக்கறாங்கன்னு வைங்க, அதெல்லாம் நடக்கப்போகுதாங்கறீங்களா? அடச் சும்மா ஒரு பேச்சுக்கு வெச்சுக்கவுமே, நெருப்புன்னா வாய் வெந்தா போகுது? நாம என்ன பதில் சொல்லலாம்ங்கறீங்க?
"எங்க அம்மா தமிழாசிரியர், தாத்தா தேவநேயப் பாவாணரோட நண்பர், அப்பா பொதுவாழ்க்கையில இருந்ததாலே எப்பவும் அறிஞர்கள் கூடும் எங்க வீடு, இப்படி இருந்த சூழல்ல பொறந்ததால நான் எட்டு மாசத்துலயே எட்டுத்தொகை பாட ஆரம்பிச்சுட்டன்னாப் பாருங்களே!" ன்னு எடுத்து உடறதுக்கெல்லாம் ஒன்னுமில்லைன்னு வைங்க. கை ஊனி எந்திரிச்சப்ப, கைசூப்பி நடந்தப்ப, காதுகுத்தப்ப, காட்டுல தூங்குனப்பன்னு ஆத்தாமாருகளும், அத்தைமாருகளும் சொன்ன அவங்கவங்க ஊட்டுக் கதைகதே நாம கேட்ட, படிச்ச மொதத் தமிழ்இலக்கியமாப் போச்சு. கம்பன்ல தேனூறுச்சு, இளங்கோவுல மனசூறுச்சு, பின்னால பாரதியில மூளை ஊறுச்சுன்னெல்லாம் நம்ம இலக்கியத் தேடலப் படம் போட்டுக்கிட்டாலும் எல்லாமுக்கும் மூலமா இருந்த கதைசொல்லிக நம்ம ஊருல வெய்யில்லயும், வேக்காட்டுலயும் கருகிக் கெடந்தவங்கதான்ங்கறத மறந்தா மனுசரா நாம?
நாங்கேட்ட கதையில விதத்துக்கொன்னு இருந்தாக்கூட இப்ப உங்களுக்குச்சொல்லப்போறது "அய்யன்கதை"
மட்டுந்தான். அய்யனை எழுதலாம்னு சொன்னதீமு ஆளாளுக்கு வந்து ஆதரவு கொடுத்த உங்களுக்கு நான் பாத்த அய்யன்களை எழுதறதுக்கும் முன்னால கேட்ட அய்யன் ஒருத்தரச் சொல்லலாம்னு தோணுச்சு. ஒத்த அய்யனா இருந்து இன்னைக்குப் பொட்டுப் பொடுசுகளோட ஒரு முப்பது முப்பத்தஞ்சு வாரிசுகள் வரைக்கும் இருக்கற ஊட்டுக் கதை இது. அய்யனோட மருமக, மருமகளுக்கும் மருமகன்னு பலபேரு சொல்ல, பல்லு உழுந்து மொளச்சப்ப இருந்து பலமொறை அந்த அய்யனோட கதையக் கேட்டாச்சு. அதனாலயோ என்னமோ நான் கண்ணுத் தொறந்து பூமியப் பாக்கும் முன்னாலயே போய்ச் சேந்துட்ட அந்த அய்யன், போட்டோவெல்லாம் புடுச்சு வைக்கப்படலைன்னாலும் எம் மனசுலயும் பதிஞ்சுதான் கெடக்கறாரு.
பொழுது சாஞ்சு மசமசன்னு ஆயிருச்சு. காட்டுல இருந்து வந்து கைகால் கழுவீட்டு,நல்ல நாயம் பேசும்போது ஊடு இருட்டாக் கெடக்கக்கூடாதுன்னு ஊட்டுப் பொம்பளைக தீபம் பத்தீட்டாங்களான்னு எட்டிப் பாத்துட்டு வெளித்திண்ணையில உக்காந்து மச்சுனங்கிட்டச் சொல்லுச்சு பெரியூட்டு அய்யன்,
"நாளைக்கு நாளு நல்லா இருக்குமாட்ட இருக்குதுங்க, பழையசோத்து நேரம் போய் உப்புக் கெணத்து சோசியங்கிட்ட முகூர்த்தத்தக் குறிச்சுக்கிட்டு வரலாம்னு"
"சேரிப் போய்ட்டு வந்துட்டாப் போகுதுங்க"
"அதெல்லா போவேண்டீதில்ல, தீபங் கெட்டுப் போச்சு, சயனஞ் செரியில்ல" சொல்லிக்கிட்டே வந்த பொன்னாத்தாளுக்குத்தே கல்யாணம் பேசிக்கிட்டிருந்தாங்க அவங்கய்யனும் மாமனும். தீபமுங்கூடத் தானாக் கெடலை, ஊதிக் கெடுத்துட்டு வந்ததே நம்ம பொன்னாத்தாதான். ஏன்னா பொண்ணுப் புள்ள பொன்னாத்தாளுக்கு ஊட்டுப் பெருசுக அதைய சாமீப்ப மாப்பளைக்குக் கட்டி வெக்கறது புடிக்கலை. இந்த சாமீப்ப மாப்பளைதான் என் மனசுல பதிஞ்சு கெடக்குற நான் இன்னைக்கு உங்களுக்குச் சொல்லப்போற அய்யன்.
சாமீப்பய்யன் பொன்னாத்தாளுக்கு அத்தை மவன். அத்தை தூரத்து ஊருக்கு வாக்கப்பட்டுப் போயி மொத மவனா சாமீப்பய்யன் பொறந்தபோதே பெத்துபோட்டுட்டு பிரசவத்துல போய்ச் சேந்திருச்சு. கொழந்தைக்குத் தகப்பன் வேற கல்யாணம் பண்ணிக்க,பொறந்தவளோட மவனைத் தன் மவனா வளத்திக்கலாமுன்னு ஒரு பாசத்துல மாமங்காரரு கூட்டிக்கிட்டு வந்துட்டாரு. கூட்டியாந்ததுக்கு ஒன்னும் கெட்டுப்போகலை. சாமீப்பய்யனும் மாமன் மேலயும், அவரு குடும்பத்து மேலயும் உயிராத்தாங் கெடந்திருக்காரு. மாமனுக்கும் பையன் இல்லாதிருக்க ஊட்டுக்குச் சொந்தப்பயனாட்டமா வேலை செஞ்சுக்கிட்டிருந்தாருக்காரு. பொன்னாத்தாளுக்கு அக்கா ஒன்னு இருந்திருக்கு, அதுக்கும் தம்பி மாதிரி சாமீப்பன்னா பாசந்தான். ஆனா நெறைய வயசு வித்தியாசமாப் போச்சு, அதுனால அக்காவ வேற மாப்பளை பாத்து கட்டி அனுப்பிட்டாங்க.
பொன்னாத்தாளச் சாமிப்பனுக்கே கட்டி வெச்சுட்டுக் கண்ணை மூடோனும்ங்கறதுதான் மாமங்காரரோட ஆசை. ஆனா பொன்னாத்தா போக்கு வேற மாதிரி இருந்துருக்கு. சிறுசுல இருந்தே சாமீப்பய்யன்கிட்டச் சண்டை போடறதும், வெளையாட்டூச் சண்டையிலகூட
"நீ எங்கூட்டுக்கு மொத்தச் சோத்துக்கு வந்தவந்தான?"ன்னு வெடுக்கு வெடுக்குனு பேசறதுமா இருந்துருக்கு. ஆனாச் சாமீப்பய்யன் அதையெல்லாம் பெருசு பண்ணிக்கிட்டதில்லை, கன்னுக்குட்டி எட்டி ஒதைச்சாலும் மாட்டுக்கொசரம் பொறுத்துக்கற மாதிரி
பொன்னாத்தாகிட்டப் பொறுத்தேதான் போயிருக்கு.
இது எதோ சின்னப்புள்ளைக சண்டைன்னு நிக்காம கல்யாணப் பேச்சு எடுக்கும்போதும் பொன்னாத்தா பூந்து வெளையாடியிருக்குது. "இத்தன பண்ணையத்த வெச்சுக்கிட்டு ஒன்னுமில்லாம சோத்துக்கு வந்து இருந்தவனுக்குக் கட்டி வெக்கறீங்களா? நான் தெக்காலூரு மணிக்குட்டியத்தான் கட்டிக்குவேன்" ன்னு ஒரு நூறு வருசத்துக்கு முன்னாடியே அந்தக் கரட்டாங்காட்டுல இருந்துக்கிட்டு "பெண்ணுரிமை" பேசியிருக்குது பொன்னாத்த ஆத்தா. ஆனா பெருசுக தம் பேச்சக் கேக்காம மறுக்கா மறுக்கா கல்யாணத்து நாயத்த எடுத்தா நம்ம பொன்னாத்தாளுக்குப் புடிக்கறதில்லை. அதுனால நடக்கறதுதான் இந்த சயன வெளையாட்டு. பெரியவங்க பேசும்போது தீபத்தை நிறுத்தறது, எதையாவது ஒடைக்கறது, செஞ்சுட்டு ஓடிவந்து சயனஞ் செரியில்ல பேச்சை நிறுத்துங்கன்னு சொல்லிப்பாக்கறது, அப்படியாவது தனக்கு மணிக்குட்டி மாப்பளை கெடைக்க மாட்டாரான்னு ஏக்கம் பொன்னாத்தாளுக்கு.
இப்படியே நடக்கறதப் பாத்துக்கிட்டு இருந்துட்டு ஒருநாளு சாமீப்ப அய்யன் சொல்லீருக்காரு "பொன்னாத்தாளுக்கு இஷ்டமில்லீன்னா உட்டுருங்க மாமா, மணிக்குட்டிக்கே கட்டி வெச்சுருங்க, நான் அவ பசங்கள வளத்திக்கிட்டு இப்பிடியே இருந்துக்கறேன்" அப்படீன்னு. இதைக் கேட்ட பொறகு "இவன விட ஒனக்கு எந்த மவராசன் மாப்பளை கெடைப்பான்? நீ ஒன்னுமே பண்ண வேண்டீதில்லை, தலமேல வெச்சுத் தாங்குவாஞ் சாமீப்பன்" னு பொன்னாத்தாளை ஒரே அமுக்கா அமுக்கீட்டாங்க எல்லாரும்.
அவங்கெல்லாம் சொன்னதிலயும் ஒன்னும் கொறையில்லை. பொன்னாத்தாளைப் பூப்போலத்தான் பாத்துக்கிட்டாராமா சாமீப்ப அய்யன். நாலு பசங்க, ரெண்டு பொம்பளைப் புள்ளைக பொறந்து எல்லாத்தையும் நல்லா வளத்திக் கல்யாணங் காச்சி மூச்சு வந்த மருமக்கமாருககிட்டயும் பாசமா இருந்து செத்துப் போயிருக்குது அய்யன். அய்யனோட பொறுமைக்கு ஒரு உதாரணம் சொல்வாங்க அய்யன் கதை சொன்னவங்க. பொன்னாத்தா ஆத்தா வாய்தான் நெறையாப் பேசுமாமா. ஆனா வேய்க்கானம் பத்தாது. மழைபேஞ்ச காத்தால ஒழவோட்டிக்கிட்டு இருக்கற சாமீப்பய்யனுக்குப் பழைய சோறு கொண்டுபோகோனும் ஆத்தா. அப்ப எல்லாம் சோளச்சோறு, கம்மஞ்சோறூதான உணவு? ஆக்கிக் குண்டாவுல போட்டுச் சும்மாடு கூட்டித் தலையில வெச்சுக் கொண்டுபோகுமாமா. போற வழியில தடத்துல சாணி கெடந்தா ஆத்தா சும்மா போகாது. சாணி தடத்துல கெடந்தா வீணாப்போவுது, எடுத்துப் பக்கத்தால காட்டுக்குள்ள வீசுனா மண்ணுக்கு ஒரமாவும்னு சோத்தை வெச்சுப்போட்டுச் சாணிய எடுத்து வீசிட்டுக் கையைப் பக்கத்து ஊத்துத் தண்ணியில போயிக் கழுவிக்கிட்டு வருமாம். வரதுக்குள்ளே தடத்துல வெச்சுருந்த சோத்த நாய் எதாவது போச்சுன்னா தட்டியுட்டுத் தின்னுக்கிட்டிருக்குமாம். அப்பறம் வெறுங்குண்டாவைத் தூக்கீட்டுப் போய் அய்யங்கிட்ட "சோறுதான் போயிருச்சு, ஆனாச் சாணியப் பத்தரமாக் காட்டுக்குள்ள போட்டுட்டு வந்துட்டேன்" ன்னு சொல்லுமாம். பொழுது கெளம்பப் பூட்டுன ஏரை எளமத்தியானம் வரை ஓட்டீட்டுப் பசியோட கெடந்தாலும் பொண்டாட்டியச் சோத்தை நாயிக்கு உட்டுட்டு வந்துட்டாளேன்னு ஒரு சொல்லும் கடிஞ்சு பேசமாட்டாராம் அய்யன். "போனாப் போவுது ஊட்டுக்குப் போயி ஆக்கி வை" ன்னு சொல்லீட்டு வேப்பமரத்துல குச்சிய ஒடுச்சுப் பல்ல வெளக்கீட்டுப் பனைமரமேறரவுங்க எறக்கி வெச்சிட்டுப் போன தெளுவுத் தண்ணியவே மறுக்காவும் குடிச்சிட்டு காட்டுக்கு மாட்டை அவுத்துட்டு ஓட்டிக்கிட்டுப் போவாராம். "இப்பிடிப் புருசனத்தான பொன்னாத்தா கட்டிக்க மாட்டேன்னாளாமா" ன்னு ஊருக்குள்ள பேசிக்குவாங்களாம்.
சாமீப்பய்யனோட வாழ்வுக்கு நான் மரியாதை செலுத்தறதுக்கு இன்னொரு காரணம். நாலு பசங்களுக்குள்ள சின்ன வயசுகள்ல எதாச்சும் சண்டை வந்தா அவங்க பேசி முடிக்க வரைக்கும் அமைதியா இருந்துட்டுக் கடைசீல அய்யன் சொல்லுவாராமா "எப்புடியோ எல்லா ஒரே வயித்துல வந்து பொறந்திட்டீங்கடா, ஒரு ஆகாவழிக் கெரகத்துக்கு அடிச்சுக்கறதுக்கு முன்னால இன்னொருக்காவா நாம இப்படி ஒன்னா வந்து பொறக்கப்போறோம்னு நெனச்சுப் பாருங்க, இந்தக் கெரகமெல்லாம் பெருசாத் தெரியாது" அப்படீன்னு. சரியாத்தான் சொல்லீருக்காரு சாமீப்ப அய்யன். ஆனா நமக்கெல்லாம் மண்டையில ஏறனுமே!