ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்
ஆட்சியிலிருக்கும் முதல்வருக்கு வயதாகிவிட்டதென்றும் எனவே அதை அவர் வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு வேறு கட்சிப் பணிகள் ஆற்றலாம் என்றும் ஞாநி எழுத, அதற்குப் பின்னால் இருப்பது சாதீயமே என்று பற்றவைக்கப்பட்ட திரி இன்னும் எண்ணெய் வற்றாமல் எரிந்துகொண்டிருப்பதும், சோவை, சுஜாதாவை விமர்சிக்கும்போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவளிக்க ஓடோடி வருபவர்கள் இப்போது ஞாநிக்கும் அதே அடிப்படையிலோ அல்லது கலைஞர் எதிர்ப்பு அடிப்படையிலோ பாதுகாப்புக்கவச எழுத்துக்களைப் பதித்து வருவதும் நிகழ்நாட்களின் முக்கியமாக்கப்பட்ட விசயங்கள்.
இணையத்தின் சிறப்பான கட்டற்ற கருத்து சுதந்திரம் ஞாநியின் சட்டைக்குள் பூணூல் நெளிவதாகக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு வளர்ந்துவரும், செறிவான படைப்புகளை வழங்கும் வல்லமை வாய்க்கக்கூடியவர் என்று நான் நம்பும் ஒரு நண்பர்கூட ஞாநி என்று எழுதும்போது "அரைவேக்காட்டு ஞாநி" என்றே அடைமொழியிட்டு எழுதுகிறார் இப்போது.
அடுத்தவர்களுக்கு இப்படியெல்லாம் தெரியும் ஞாநி எனக்கு எப்படித் தெரிகிறார் என்று யோசித்துப் பார்த்தேன். அதில் தெறித்த குறிப்புகளாய் இவ்விடுகை.
விசாலமான வீதிகள், மழைவந்தால் கிளம்பி மணம்தூக்கும் மண்வாசனை, தெருவில் நடந்தாலும் தனியாய் இருக்கமுடிந்த குறைந்தபட்ச இரைச்சலற்ற வாழ்க்கை என்றிருந்த
கோவையிலிருந்து சென்னைக்குள் வந்துசேர்ந்தபோது தெருக்களில் எப்போதும் கசகசத்த கூட்டமும், மரங்களைப் பார்த்தாலும் காற்றைப் பார்க்கமுடியாத நெருக்கமும் ஒரு
விருப்பமில்லாத புறச்சூழலை ஏற்படுத்தின. ஆனால் அகச்சூழலுக்குள் என்னை மெல்ல வேறு பரிமாணத்திற்கு வார்த்த பெருமை சென்னைக்கே உண்டு.
முதன்முதலாய்ச் சேர்ந்துபோன ஒரு பெரிய புத்தகக்கடையில் நான் வழக்கம்போலவே கி.வா.ஜகந்நாதனை, கிருபானந்தவாரியாரை, வள்ளளாரை, இன்னும் ஈரமான மொழியில் முளைத்த சில கவிதை நூல்களை அள்ளியெடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது அவற்றிற்கான பணம் செலுத்திவிட்டு அவன் வெளியில் நின்றிருந்தான். "நீ எதுவும் வாங்கவில்லையா?"
"வாங்குவேன், ஆனால் அவை இங்கு கிடைக்காது. அவற்றை நான் வழக்கமாய் வாங்குமொரு இடத்திற்குப் போகிறேன் வருகிறாயா?"
அப்போது சென்னையின் எல்லாத்தெருக்களும் எனக்கு ஒரே தெருவாகவே தெரிந்தன. எங்காவது ஒரு இடத்தில் தொலைந்துபோனால் திரும்பிவரத்தெரியாத புது ஊரில் எங்கோ
வளைந்து வளைந்து ஒரு சாலையில் வாகனம் சென்று இறுதியில் ஒரு பிளாஸ்டிக் கவரில் சில புத்தகங்களோடு திரும்ப வந்தான். துருவிப் பார்த்தால் உள்ளே "தீம்தரிகிட", "தலித்
முரசு", "கவிதாசரண்".
"என்ன இதெல்லாம்? நான் இதுவரை தெரிந்துகொள்ளவில்லையே?"
"அதனாலென்ன? இப்போது ஆர்வமிருந்தால் தெரிந்துகொள்ளேன். இவையெல்லாம் உனக்கு சமூகத்தின் இன்னொரு பக்கத்தைச் சொல்லும்"
சரி நேரமிருக்கும்போது படித்துப் பார்க்கவேண்டும் என்ற நினைத்துக்கொண்டேன். வாசிப்பது என்பது இருவருக்குமான பொது ரசனை என்றாலும் புத்தகங்கள் பொதுவானவையாக
இல்லாதிருந்ததால் அப்போது தனித்தனி அலமாரிகள்.
சிலநாட்கள் சென்றிருக்கும். பணியிடத்திலிருந்து ஒரு பயணம். தவிர்க்கமுடியாததாய் அலுவலகத்திலிருந்து எல்லோருடனும் போயாகிவிட்டது.
"இந்தப் பள்ளிக்கு எதற்கு வந்தோம்? என்ன விசேசம் இங்கு?"
"பெரியவர் வருகிறார். அவரைப் பார்க்கத்தான் இத்தனை கூட்டம். நாமும் அதற்கே வந்திருக்கிறோம்."
ஓ அந்தச் சாமியாரா? சாமியை விட்டு விலகியிருக்காத நாட்கள்தான் அவை. ஆனாலும் சாமியார்களைவிட்டு வெகுதூரத்தில். காரணம் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படித்தபோதே ஒரு சாமியாரை வழியெல்லாம் பூத்தூவி அழைத்துவந்து பாதபூசை செய்தார்கள். உச்சிகுளிரிந்த நேரத்தில் "இந்தப்பள்ளியின் சிறந்த ஏழை மாணவர்கள் இருவருக்கு என் கல்லூரியில் இலவசமாகக் கல்வி தருவேன். வருடக் கடைசியில் அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார் சாமியார்". அவர் பேச்சை நம்பிக் கல்லூரிக்கு மாணவர்களை அழைத்துப்போய் "சாமி அப்படித்தான் சொல்லீட்டு வருவார், ஆனா அதையெல்லாம் அப்பவே மறந்துருவார். இந்தளவு நன்கொடையோடு வாருங்கள், சேர்த்துக்கொள்ளலாம்" என்ற பதிலைப் பெற்றுக்கொண்டு திரும்ப வந்த தலைமையாசிரியர் சொல்லியதே சாமியார்கள் மீதான கொஞ்சநஞ்ச மரியாதைகளையும் காற்றில் பறக்கவைத்திருந்தது. சில யோக வகுப்புகளை விரும்பிப் படிக்கப்போனாலும் குருஜிக்களுக்குத் தலை தரைதொட வணங்கி நிற்கும் பணிவும் வந்து தொலைக்கவில்லை.
இப்போது முதன்முதலாய் ஒரு பெரிய பீடாதிபதி வரும் இடத்தில் வந்து மாட்டியாகிவிட்டது. அத்தனை மாணவர்களும் எழுந்துநின்று பஜனை பாட, முக்காடிட்டு அவர்
வந்துகொண்டிருந்தார்.
"பெரியவர்னு அவரத்தான சொல்லுவாங்க. நீங்க இவரையா பெரியவர் வரார்னு சொன்னீங்க?"
"இவரும் பெரியவர்தான். சின்னப் பெரியவர்".
பூசைகள் நடந்தன. பொன்னாடைகள் குவிந்தன. பிரசாதம் வாங்கத் தவறினால் வாழ்வில் எல்லாம் தவறிவிடும் என்கிற பதைப்பில் வரிசையாய் மனிதர்கள். வரிசைக்குள் ஒருத்தியாய்
நானும் நின்றேன் அல்லது நிற்கச்சொன்னபோது மறுப்பேதும் சொல்லாமல் நின்றுகொண்டேன். ஒவ்வொருவராய் ஊன்றிக் கவனித்துக் கண்கள் மூடி ஏதோ உச்சரித்துச் சாமியார் பிரசாதங்கள் கொடுத்துக்கொண்டிருந்தார். யாருக்கு எப்படிக் கொடுத்தார்? கவனிக்கவில்லை. என் முறை வந்தபோது பிரசாதமாய் ஒரு ஆப்பிள் கைகளுக்கு வந்தது. அது வந்த விதம்தான் முக்கியமானது. சுமார் 50, 60 செமீ உயரத்துக்குத் தூக்கி அவரின் கைகள் அதற்கும் கீழே வந்தால் இங்கிருந்து ஏதோ ஒன்று போய் ஒட்டிக்கொண்டு அவரைக்
கொன்றுவிடுவது போன்ற பாவனையில் உயரத்திலிருந்து என் கைகளில் எறியப்பட்டது அப்பிரசாதம். ஒரு குறிப்பிட்ட மதம்சார்ந்த பெரிய மடாதிபதி என்று மக்களால் கருதப்படும் ஒரு துறவியை முதன்முதலாக நேரில் பார்த்தபோதே "மனிதரில் ஒருவரிடம் இப்படித் தீண்டாமை பார்த்தும், தீண்டினால் தனக்கு ஏதோ ஆகிவிடுவது போன்ற பயத்திலும் உள்ள ஒருவர் எப்படித் துறவியாவார்? கேவலம் ஒரு பயத்தைத் துறக்க முடியாத நபர் முற்றுந்துறந்த துறவியாதல் சாத்தியமா?" என்ற கேள்விகள்தான் தோன்றினவேயொழியக் கைகளில் எறியப்பட்ட ஆப்பிள் வாய்க்குப் போகாமல் கைகளிலேயே கனத்தபடி இருந்தது.
அன்றைய நாள் நிகழ்வுகளின் பகிர்வாய் நான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது இச்சம்பவமே முக்கியமாய் இருந்தது. என் சோர்வைப் புரிந்துகொண்ட அவன் சொன்னது
இதுதான். "ஆண்பெண் சமத்துவம் என்றும், பாரதி வலியுறுத்திய பெண்ணுரிமை என்றும் வாசிக்கிற, பேசுகிற நீ என்றேனும் அடிமைத்தனத்தின் வேர்கள் முகிழ்க்கும் இடங்களை, அவை வறண்டுவிடாமல் நீருற்றப்படும் இடங்களை வாசித்தோ, பார்த்தோ அறிந்திருக்கிறாயா? அந்தச் சாமியாருக்கு உன்னிடம் தீண்டாமை பாவிக்கக் காரணம் நீ பெண்ணாயிருப்பதுதான். இது நம் மதத்தில் பெண் என்பதோடு முடிந்துவிடுகிற தீண்டாமையுமல்ல. சாதிகளின் பெயரால் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே எல்லாவற்றிற்கும் உகந்தவராய், மற்றவர்கள் கடவுள் ஆலயங்களுக்குப் போனாலும் அவர்களிடமே கையேந்தி நிற்பவராய் இருப்பதன் சூட்சுமங்கள், வரலாறுகள் பற்றி யோசித்திருக்கிறாயா? சாமியார் மேல் சலிப்புற்று இருக்கும் இந்நாள் நீ இவைகளைப் படிக்க ஆரம்பிக்கிற நாளாக இருக்கட்டுமே" .
அவன் அலமாரிக்குள்ளிருந்து "தீம்தரிகிட" வை எடுத்துக்கொண்டு அமர்ந்தேன். "சங்கராச்சாரி" என்று தலைப்பிலே நின்ற சொல்லே ஆச்சரியமளித்தது. எழுதியிருந்தவர் ஞாநி. அப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். பிறகு சிலகாலம் நான் தொடர்ந்து வாசித்த அவரின் இதழோ, எழுத்துக்களோ சாதீயச் சிந்தனைகளை, மூடத்தனங்களை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் துணிச்சலான ஆயுதங்களாகவே இருந்தன. இதில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஒரு நேர்மையான சமூக அக்கறையுள்ள எழுத்தாளன் சாதி ஆதிக்கங்களை மட்டும் எதிர்ப்பவனல்ல. அதன் வடிவங்கள் எவ்வகையிலிருப்பினும் எதிர்ப்பவன். அப்படிப் பார்த்தாலும் ஞாநி அதற்குள் பொருந்தியே வருவார். ஏனென்றால் ஆண் பெண் சமத்துவ நிலைகளை வெறுமனே எழுத்தில் வடித்துக்கொட்டிவிட்டுத் தான் எழுத்துக்குத் தன் வாழ்வைத் தியாகம் செய்திருக்கக் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட தியாகச்செம்மல் என் மனைவியே என்று சான்றிதழ்கள் தரும் வாய்ச்சொல் வீர எழுத்தாளர்களில் ஒருவராய் இன்றித் தான் பங்குபெற்ற பத்திரிக்கையில் தன் மனைவியையும் பங்குபெற வைத்தவர். பெண்கள் பிரச்சினைகள் குறித்து ஞாநியின் மனைவி எழுதிவந்த தொடரும், ஞாநியும், அவர் மனைவியும் மேற்கொண்ட வாழ்க்கை முறையும் அவர்களின் எழுத்துக்கும்
வாழ்க்கைக்குமான ஒற்றுமைக்குச் சாட்சி. பெரியாரைத் தொலைக்காட்சிக்குக் கொண்டுவந்தது, பாய்ஸ் படத்திற்காக சுஜாதாவைக் கடுமையாக விமர்சித்தது என்று மேலோட்டமாகப் பார்த்தாலே அவருக்குச் சாதீயப் பற்று இருக்கமுடியாது என்பதற்கான உதாரணங்களைக் காண முடியும்.
ஞாநியின்மீது இவ்வளவு விமர்சனங்களை அள்ளியிறைக்கிற இணையத்திலேயே ஞாநி எழுதியிருந்த கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. கர்நாடக இசைப்பாடகி எம் எஸ்
சுப்புலட்சுமி இறந்தபோது எங்கெங்கும் அவருக்குப் புகழ்மாலைகளே இறைந்துகிடக்க முற்றிலுமொரு வேறு கோனத்தில் அவர்மீது விமர்சனப்பார்வையை வைத்திருந்தார் ஞாநி. எம் எஸ் சுப்புலட்சுமி தன் கலைத்திறமைக்காகப் பாராட்டப்படவேண்டியவரே என்றாலும் அவரின் இன்னொரு பக்கத்தையும் பார்க்கவேண்டும். ஒரு உயர்சாதி ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு அந்த ஆணின் வாழ்வுமுறையோடு முற்றிலுமாய் ஒன்றி அச்சாதியின் கலாசாரங்களையே தனதாகவும் வரித்துக்கொண்டு அவற்றின் சாயல்களைத் தன் கலைத்திறமைகளிலும் கரைத்தபடி அவ்வட்டத்திற்குள்ளேயே வாழந்துமுடித்தவர்தான் அவரும் என்கிற பொருளில் எழுதியிருந்தார் ஞாநி. அக்கட்டுரையை அப்போது இணையத்தில் யார்யாரெல்லாம் கிழித்துக்கொண்டிருந்தார்களோ அவர்களின் மற்றநிலைப்பாடுகள், கருத்துக்கள் இவற்றையும் கணக்கிலெடுத்துப் பார்த்தபோதும் ஞாநி எந்தெந்த இடங்களைவிட்டு எவ்வளவுதூரத்தில் விலகி நிற்கிறார் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது.
அப்படியெல்லாம் சமூகத்தின் போக்கை எதிர்த்து நின்ற ஞாநிதான் இப்போது கலைஞருக்கு வயதாகிவிட்டது, அவர் முதல்வர் பதவியிலிருந்து ஓய்வு பெறலாம் என்று எழுதியதற்காகச்
சாதீயத்தின் பேரால் விமர்சிக்கப்படுகிறார். இந்த விமர்சனங்களும், கண்டனக்கூட்டங்களும், தாக்குதல்களும் எங்களுக்குச் சொல்வது நிறைய. புனிதத்தன்மைகளாகப் போற்றி
வளர்க்கப்படும் மூடக்கருத்தாக்கங்களை எதிர்க்கவேண்டும் என்று குரல்கொடுப்பவர்களுக்கும்கூட சில புனிதத்தன்மைகள் வேறு வடிவங்களில் இருக்கின்றன. இப்போது அது அவர்களுக்குக் கலைஞர் வடிவத்திலே அமைந்துவிட்டது. அதுதான் ஞாநிமீது அடிப்படையற்ற தாக்குதல்களைச் செய்யவும் காரணமாகிறது. பகுத்தறிவு என்பது ஒன்றின்
புனிதத்தன்மையை உடைத்துவிட்டு இன்னொன்றைப் புனிதமாகவோ, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாகவோ பிடித்துக்கொள்வதில் இருக்கமுடியுமா? போகிறபோக்கைப் பார்த்தால்
அதுதான் நிகழும் போலிருக்கிறது.
எத்தனையோ பேருக்கு எத்தனையோ காரணங்களுக்காகக் கலைஞர் பிடித்திருப்பது மாதிரி
எனக்குச் சில காரணங்களுக்கு அவர் மீது மரியாதையும், சில காரியங்களுக்கு விமர்சனங்களும் சேர்ந்தே உண்டு. இந்நிலையில் அவரின் மூப்பு மற்றும் பதவி விலகல் பற்றி ஞாநி பேசியிருப்பது இவ்வளவு தாக்குதல்களுக்குரிய பிழையென்றும் தோன்றவில்லை. பொதுவாகவே நம் அரசியல் நடைமுறைகளில் இன்னும் மாற்றங்கள் வேண்டியே இருக்கின்றன. ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு நபர் குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் ஒரு பதவியை வகிப்பதேகூட மாற்றப்படலாம். அதே கட்சி வந்தாலும்கூட அடுத்தமட்டத் தலைவர்களைப் பதவியில் நியமித்து, அவர்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து புதிய மனிதர், புதிய செயல்முறைகள் என்று தொடர் மாற்றங்களைச் செய்யலாம். நல்ல தலைவர்கள் அடுத்த தலைவர்களை உருவாக்குவதிலும் வெற்றி பெறுவாரேயன்றித் தன் தலைமையிடம் எப்போதும் தவறிப்போகாமலே இருக்கவும், அது அடுத்துத் தன் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகவேண்டும் என்று நினைத்தும் இருப்பதில்லை. ஆனால் ஒரு கட்சிக்கு அடுத்த தலைமை யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதுகூட ஒரு கட்சியாலோ அதன் தொண்டர்களாலோ செரித்துக்கொள்ளப்படாமல்போய், நடத்தியவர்களை எதிர்ப்பதாய் நினைத்து அது அப்பாவி மக்கள்மீதான வன்முறையாகக் கட்டவிழ்க்கப்படும் அரசியல் சூழல்கள் நம்முடையவை என்பது வருங்காலத் தலைமுறைக்கு எவ்வித நம்பிக்கைகளை அவர்களின் மனதில் விதைக்கும் எனத் தெரியவில்லை.
ஒரு கட்டுரைக்காகச் சாதி மறுப்பாளர் ஒருவர் அவரின் சாதியின் பெயரால் எள்ளப்படுவதும், அதைச் செய்பவர்கள் அதே சாதிமறுப்புக்கொள்கை கொண்டவர்கள் என்பதும் ஒரு ஆரோக்கியமான அறிவுச்சூழலை இங்கு காட்டவுமில்லை. தன் சொந்தசாதி தாழ்ந்துவிடக்கூடாதென்று சாதியரிப்பிலே ஒரு இடத்தில் வலிந்து ஆதரவளித்து எழுதுவது எவ்வளவு அருவெருப்பானதோ அதற்குச் சற்றும் குறைச்சலில்லாததாகவே தோன்றுகிறது பலகாரணங்களுக்காகத் தன் சொந்தசாதியையே எதிர்த்து நின்ற ஒருவருக்கும் அச்சாதி முத்திரையைச் சட்டென்று குத்திவிடுவதும்.
ஒரு தையல்காரர் எல்லோருக்கும் ஒரே அளவுகளில் துணி தைப்பதில்லை. அவரவருக்கான அளவுகளைச் சிரமேற்கொண்டு எடுத்துக்கொண்டும் அதிலிருந்து மாறிவிடாமலும்தான் தன் பணியாற்றுகிறார். ஆனால் நம் அறிவுஜீவிகள் சில பொதுக்கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அந்தக்கணக்குகளை அப்படியே எல்லோருக்கும் பொருத்தி ஒரு வடிவம் தயாரிக்கிறார்கள். அதற்குள் பொருந்திவராதவன் தங்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே எதிரி என்றும் சொல்லிவிடுகிறார்கள். அந்தப் பொதுக்கணக்குகளில் தனக்கும், தன்னால் தாக்கப்படுபவனுக்குமுள்ள தனிப்பட்ட கசப்புகளோ, காழ்ப்புகளோகூட அடக்கம். சிலநேரங்களில் அறிவுஜீவிகளை வாசித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருப்பதைவிட ஒரு தையல்காரரை நின்று கவனித்துக்கொண்டிருக்கலாம். இவர்களைவிட அவரிடம் நிறையத் தொழில்நேர்மை உண்டு.