நிறங்கள்

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் !

Thursday, March 29, 2007

சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம்

சுடத் தொடங்கிவிட்ட சூரியனின் கதிர்கள்
நீள்வதை ரசித்துக்கொண்டே
நெடிதுயர்ந்த கூரையொன்றின் மேலமர்ந்த பறவை
அலகால் கோதிக்கோதி அழுக்குகளை உதறி
தன் சிறகுகளைச் சுத்தமாக்கிக்கொண்டிருக்கிறது

சலசலக்கும் இலைகளில் இல்லை தன் உயிர்
தாங்கிப்பிடிக்கும் வேரிலிருக்கிறதென நம்பும் அம்மரம்
தன் நிறமிழந்த சருகுகளை உதிரக்கொடுத்துவிட்டு
கொடுங்குளிரில் தவமிருந்ததன் பயனாய்
புதியதளிர்களை ஏந்திக்கொண்டிருக்கிறது இந்த இளவேனிலில்

தனக்குள் இறுகிக்கிடந்த பனிப்பாறைகள்
இளகுவதை இயல்பாய் ஏற்றபடி
மெல்லப்படரும் வெய்யிலுக்கு
உருகிஓடத் துவங்கியிருக்கிறது அந்த ஆறு

ஆனால்
சுற்றியெழுப்பப்பட்ட சுவரும்
சாத்தப்பட்ட கதவுசன்னல்களுமே
பாதுகாப்பெனும் உன்பார்வையில்
இவைஎதுவுமே விழப்போவதில்லை
அறைகவிழ்ந்திருக்கும் இருளும்
அங்கு ஏற்றப்பட்டிருக்கும்
ஒன்றிரண்டு மெழுகுவர்த்திகளையும் தவிர


மேலே உள்ளது எனக்குக் கவிதை எழுதவருகிறதா என்ற வழக்கமான பயிற்சியில் இன்றும் எழுதியது. இனிக் கீழே எழுதப்போவது ஒரு விவாதத்தின் தொடர்பான எண்ணங்கள். காலம்கடந்தவைதான். ஆனாலும் தோன்றியதைச் சேமித்துக்கொள்ளவே இப்பதிவு.

ஒரு எளிய வினா. கற்றறிந்த எம் நண்பர்கள் விவாதிக்கிறார்கள் தமிழ்மணம் விவாதக்களத்தில். "பெண்கள் மூடிக்கொள்ள வேண்டுமா?". இதுதான் கேள்வி. அடித்துப்பிடித்து ஆண்கள் ஓடிவருகிறார்கள் பெண்கள் பற்றி முடிவெடுப்பதற்கு. சரி. ஓடிவந்தவர்கள் ஒற்றுமையாக ஒரு முடிவெடுத்தார்களா என்றால் அதுவுமில்லை. இரண்டு அணிகளாகத் திரண்டு எதிரெதிரே நின்றுகொண்டார்கள். "ஆண்கள் பத்துபேர் இருந்தாலும் ஒருவீட்டில் ஒற்றுமையாக இருப்போம், ஆனால் இரண்டு பெண்களை இருக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்" என்று வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு வலைப்பதிவில் வாய்ச்சவால்விட்டுக்கொண்டிருக்கும் வீரத்தமிழர்களை நினைத்துக்கொண்டு "பிறகேன் பெண்களின் உடைவிடயம் பற்றிப் பேசுகையில்கூட ஆண்கள் இதில் என்மதமே உயர்ந்தது, உன்மதம் எப்போதும் இப்படித்தான் எனச் சண்டையிடுகிறார்கள்?" எனக் கேள்வியெல்லாம்
உங்களுக்கு நீங்களே கேட்டு இந்த இடத்தில் குழப்பிக்கொள்ளக்கூடாது. அந்தக் கேள்வியைத் தப்பித்தவறி நீங்கள் வெளியிட்டால்கூட "அதுவா? பேசியது பெண்களைப் பற்றியல்லவா? அதுதான் இப்படி இரண்டாக அணிபிரிந்து சண்டையிட நேர்ந்தது. மற்றநேரங்களில் நாங்கள் மகாத்மாக்களே" என்றும் பதில்சொல்லத்தெரிந்தவர்கள்தான் மேற்படி வீரத்தமிழர்கள் என்பதையும் இந்நேரத்தில் நீங்கள் மனதில் இருத்திக்கொள்ளவேண்டும். நிற்க.

உடை விலங்கிலிருந்து மனிதன் தன்னை வேறுபடுத்திக்கொண்டதன் அடையாளங்களில் ஒன்று. ஆனால் அந்த உடையை யார் எப்படி அணியவேண்டும் என்பது அவரவர் விருப்பங்கள், ரசனைகள், பொருளாதார வசதிகள் சார்ந்தது. பள்ளியிலோ, அலுவலகத்திலோ, இராணுவத்திலோ மற்ற பணி, கல்விசார்ந்த இடங்களிலோ உடைசம்பந்தமான விதிகள் இருபாலருக்கும் பொதுவானவை. கடைப்பிடிக்கப்படவேண்டியவை. இவைதாண்டி மற்ற இடங்களில், நேரங்களில் தம் உடையைத் தேர்ந்தெடுப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் கண்ணியத்தை அவரவர்
காப்பாற்றிக்கொள்ள உரிமையுடையவர்கள். இதில் இடத்திற்கு இடம், மனிதருக்கு மனிதர், நாட்டுக்கு நாடு, காலத்திற்குக் காலம் வேறுபாடுகள் நேரலாம் வடிவங்களில். உடை பற்றி பொதுவான கருத்தென்றால் இதற்குமேல் எதுவும் வேண்டியதில்லை.

ஆனால் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் உடையும் அடங்கும். கணவன் இருந்தால் எப்படி உடுத்திக்கொள்ளவேண்டும்? இறந்தால் எப்படி உடுத்திக்கொள்ளவேண்டும்? மகா சன்னிதானங்களில் பெண்கள் எதுவரை போகலாம்? எங்கு போகக்கூடாது? பெண் தொட்டாலே தீட்டாகிக் கோபிக்கும் சாமிகோயிலுக்குப் போகப் பெண்களுக்கு உள்ள வயதுவரம்பு என்ன? மடங்களின் பீடாதிபதிகள் பிரசாதமாய்த் தரும் பழங்களை
பெண்களுக்கு எப்படித் தரவேண்டும்? என்பதான விதிகளை இன்னும் இந்துமதம் கொண்டிருக்கவே செய்கிறது. அதைப்போலவே இஸ்லாம் மதத்திலும். சானியா மிஷ்ரா எனும் பெண் ஒரு டென்னிஸ் வீராங்கனையாக அவருக்கு விளையாட ஏற்றதை அணியும்போதும் அவரின் குட்டைப் பாவாடையை விமர்சிப்பதுவரையான உரிமையை அது கொண்டிருக்கிறது. இதில் வாதிடும் நண்பர்கள் அவரவர் மதங்களைக் காப்பாற்றிக்கொண்டு
அடுத்தவர் மதத்தை மட்டும் தயக்கமின்றிச் சுட்டுகிறார்கள். இதில் இஸ்லாம் மதத்தைக் கண்டிக்கும் சிலரைத் தனியாக " இந்துமதத்தில் ஏன் பெண்கள் அர்ச்சகராகக்கூடாது?" என்று கேள்விகேட்டால் அங்கு பெண்களின் மாதவிலக்குத் தீட்டால் கடவுளின் புனிதம் கெட்டுப்போவதிலிருந்து, பெண்கள் அர்ச்சகராயிருந்தால் கோயிலுக்குவரும் ஆண்களின் மனது கெட்டுப்போவது வரையான காரணங்களை அடுக்குபவர்களே. இஸ்லாம் மதத்தில் இதையே பெண்களின் உடைக்குச் சொல்கிறார்கள்.

பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உற்றுநோக்கினால் இரண்டுக்கும் அடித்தளம் ஒன்றே. பெண்கள் என்பவர்கள் ஆண்களின் மனது கெட்டுப்போகாமல் பாதுகாக்கவேண்டிய வீராங்கனைகள். அது எப்படியென்றால் தம்மை விலக்கிக்கொண்டும், உச்சிமுதல் பாதம்வரை
மறைத்துக்கொண்டும். இவைதான் மதங்கள் பெண்களைப் பார்க்கும் பார்வைகள். இதன் பொருள் இதுதான்:- "ஆண் தனக்குள் எழுந்தாடும் காமப் பரதேசியை அடக்கமுடியாத கையாலாகத்தனமோ அல்லது உடல்திமிரோ கொண்டு அலையும்போதெல்லாம் எந்தப் பெண்ணென்றாலும் உறவாடுவான். அதை அடக்கவேண்டிய ஒழுக்கமோ, கட்டுப்பாடோ, நியாயமோ இல்லை. ஆனால் பெண்கள்தான் அந்த ஆண்களுக்குள் அப்படியொரு காமப்பரதேசி எழுந்தாடாவண்ணம் தம்மை அமைத்துக்கொள்ளவேண்டும்". இதைக் கடைப்பிடிக்க வைப்பதற்குத்தான் கடவுளின் பெயர்களும், மதங்களின் விதிகளும்.

இதில் இன்னொரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும். அப்படி ஒரு ஆணின் மனம் கெட்டுப்போகாதபடி உடையணிந்து ஒதுங்கி இருக்கும் பெண்கள் மட்டும் 100 சதவீத பாதுகாப்போடு இருக்கிறார்களா இந்த உலகில் என்பதைப் பார்க்கையிலேயே இந்த மதப் புரட்டுகள் அம்பலமாகிவிடும். ஐநா சபை போன்ற அமைப்புகளின் புள்ளிவிவரத்தில் எத்தனை நிமிடத்திற்கு ஒருமுறை உலக அளவில் பெண்கள் உடல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்ற நுண்ணிய கணக்குவிவரங்களையெல்லாம் விட்டு மேலோட்டமாக "போரும் பெண்களும்" என்று போட்டுத் தேடினாலே கிடைக்கிறது web.amnesty.org என்னும் தளமும் அதில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் உலக அளவில் போர்களில் வன்புணரப்பட்ட
பெண்களின் வலிகளும், கணக்குகளும்.

I was sleeping when the attack on Disa started. I was taken away by the attackers, they were all in uniforms. They took dozens of other girls and made us walk for three hours. During the day we were beaten and they were telling us: "You, the black women, we will exterminate you, you have no god." At night we were raped several times. The Arabs guarded us with arms and we were not given food for three days."

A female refugee from Disa [Masalit village, West Darfur], interviewed by Amnesty International delegates in Goz Amer camp for Sudanese refugees in Chad, May 2004
என்று தொடங்குகிற அந்தத் தளத்தின் ஒரு பக்கத்தில் அக்குறிப்பிட்ட போரில் வன்புணரப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

The girls spend their lives being intimidated and threatened by guerrillas and paramilitaries. They are accused of having relationships with men from the other side. Between February and March [2004] the bodies of three girls who had been raped were found in the area. They mark their territory by leaving scars on the bodies of the women. It is a terror without sound. Sometimes they punish women for wearing low-slung jeans but other times they make them wear low-cut tops and miniskirts so that they can accompany them to their parties"

All the armed groups – the security forces, paramilitaries and the guerrilla – have sexually abused or exploited women, both civilians or their own combatants, in the course of Colombia’s 40-year-old conflict, and sought to control the most intimate parts of their lives. By sowing terror and exploiting and manipulating women for military gain, bodies have been turned into a battleground. The serious abuses and violations committed by all the parties to the armed conflict remain hidden behind a wall of silence fuelled by discrimination and impunity. This in turn
exacerbates the violence that has been the hallmark of Colombia’s internal armed conflict. It is women and girls who are the hidden victims of that conflict
. என்று தொடங்கும் அதன் இன்னொரு பக்கம் அதே நிகழ்வில் நடந்தேறிய இன்னும் பல கொடுமைகளையும், அதைப்பற்றிய ஐநா பிரதிநிதியின் நேரடி விசாரணை அறிக்கையையும் காட்டுகிறது.

இவை வெறும் இரண்டு உதாரணங்கள்தான். மிகச்சமீபத்தின் ஈராக் போரில் இதுபோன்று நடந்தவைகளையோ, இராணுவத்தின் தொடரும் அத்துமீறல்களாய் இலங்கையில் நடந்ததை, நடப்பதை சமீபத்தில் தன் பதிவில் தமிழ்நதி எழுதியதையோ நான் இங்கு மீள்பதிப்புச் செய்யாமலே தினம் உலகச்செய்திகள் படிக்கிற யாரும் அறியமுடியும். வீரப்பனைப் பிடிக்கப் போகையில் வழியில் அகப்பட்ட சின்னாம்பதி கிராமத்துப் பெண்களைச் சின்னாபின்னம் செய்தவர்களின் கதையைத் தமிழகச் செய்திகளை நினைவில் வைத்திருக்கும் யாரும் மறக்க முடியாது.

இந்தப் பெண்கள் செய்த குற்றமென்ன? உறங்கிக்கொண்டிருப்பவர்களையும், உணவருந்திக்கொண்டிருப்பவர்களையும் வீடுபுகுந்துஇழுத்துக்கொண்டுபோய் வன்புணர்ந்த ஆண்களின் கண்களுக்கு முன்னால் தங்களை மூடிக்கொள்ளாமல் வந்து மோகினி ஆட்டம் ஆடியா அந்த ஆண்களின் காம உணர்வை எழுப்பிவிட்டார்கள்? மூடிக்கொண்டிருப்பது பெண்களுக்கு நல்லதாம், பேசுகிறார்கள் எம் கற்றறிந்த நண்பர்கள்.

பேசுங்கள்...பேசிக்கொண்டேயிருங்கள். மடமையோ, மாற்றமோ அது மதங்களில் இருந்து உருவானதில்லை, உருவாகப்போவதுமில்லை. மதங்களையும் உருவாக்கிய மனித மனங்களில் இருந்தே அவை உருவாயின, உருவாகவும் இருக்கின்றன. பெண்களூக்கு வஞ்சனையில்லாமல் அநீதி வழங்கியதில் எந்த மதமும் சளைத்ததல்ல. ஏனென்றால் வழிபடும் கடவுள்களில் வேற்றுமையிருந்தாலும் பெண்களைப் பற்றிய கருத்தாக்கத்தில்
மதங்களுக்கிடையே மட்டுமில்லை சாதிகளுக்கிடையேகூட வேற்றுமை இல்லை அவ்வளவாக. விருப்பமிருப்பவர்கள் அவற்றைக் கடந்து போகிறார்கள். இல்லாதவர்கள் அங்கேயே நிற்கிறார்கள்.

சுற்றியெழுப்பப்பட்ட சுவரும்
சாத்தப்பட்ட கதவுசன்னல்களுமே
பாதுகாப்பெனும் பார்வையில்
எதுவுமே விழப்போவதில்லை
அறைகவிழ்ந்திருக்கும் இருளும்
அங்கு ஏற்றப்பட்டிருக்கும்
ஒன்றிரண்டு மெழுகுவர்த்திகளையும் தவிர


பின்குறிப்பு:-

தமிழ்மணம் விவாதக்களத்தில் பெண்களின் உடை விடயம் மதவிவாதமாய்த் திசைதிரும்பியிருந்தபோதும் இடையில் புகுந்து இதைச் சரியான கோணத்தில் அணுகியிருந்த, எனக்குச் சில புரிதல்களைத் தந்த பின்னூட்டங்களை எழுதியிருந்த நண்பர்களுக்கும், தோழியர்க்கும் நன்றி.

Wednesday, March 07, 2007

சுடரோடு நான்.....நிறைவுப்பகுதி

4. நீங்கள் விட்டு விடுதலையாக உணர்ந்த தருணம் ஒன்று பற்றிச் சொல்ல இயலுமா?. "கருப்பு கவுன்" செல்வநாயகியை மறந்துவிட்டீர்களா? :).

விட்டு விடுதலையாதல் என்பதை நாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதையே சொல்ல முடியாதென நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் அந்தக்கணத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டு மற்றவற்றை விட்டு விடுதலையாகி இருத்தலே உண்மையான சிட்டுக்குருவியைப்போலே விட்டு விடுதலையாதல்:))

கருப்பு கவுன் செல்வநாயகியை மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. ஏனென்றால் அதன் அனுபவம் அதோடு மட்டும் முடிந்துவிட்ட ஒன்றல்ல. சட்டம் முடித்து பார்கவுன்சில் பதிவு முடித்த அன்று அதன் தலைவர் எங்களுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லி உரையாற்றினார். அதில் அவர் சொன்னது, "வழக்கறிஞராய் வாழ்வைத் துவங்கும் நீங்கள் வழக்கறிஞராகவே தொடராமல் போகலாம். ஆனால் இதில் நீங்கள் பெறும் அனுபவம் வாழ்க்கை முழுதும் தொடர்ந்துவரும்" என்பது. அது என்னளவில் உண்மை. அறிமுகமான, ஆகாத மனிதர்களை அணுகுவதிலிருந்து, சொந்தக்காரர்கள் ஒரு பிரச்சினை என்றால் உடனே சில யோசனைகள் சொல்லக் கிளம்பிவிடுவது வரை எனக்கு அது உதவியானது. இப்போது முழுக்க வேறு துறையில் பணிபுரிந்தாலும் அதன் பாடங்கள் இதிலும் உதவுகின்றன. இங்கு திடீரென ஏதாவது வழக்குகளைச் சந்திக்க நேரும் நண்பர்களுக்கு முடிந்த உதவிகளை, ஆலோசனைகளை வழங்கும்போதெல்லாம் அங்கு கருப்பு கவுன் செல்வநாயகி இருக்கிறாள்:)) விடுமுறையில் ஊருக்குப் போனாலும் அருகிலிருக்கும் யராவது சொத்து வாங்கினால் பத்திரங்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்க்கவும், தீர்ப்பான பணம் வரவேயில்லை எதனாலாக இருக்கும்? எனக் கேட்டுக்கொள்ளவும் வருவதும் நேரும்:))

அப்பாடாஆஆஆஆ.........ஒருவழியா நம்ம புராணம் முடிஞ்சது. ஆனா சுடரையும் தொடரா எழுதி நான் சாதனை படைத்த இந்த நிகழ்வை நம் வலை நண்பர்கள் மூன்று பேர் விமர்சனம் செய்தா எப்படியிருக்கும்னு சும்மா ஒரு கற்பனை இங்கு:-

நண்பர் 1: ஏப்பா இந்த சுடர் சுடர்னு ஒன்னு சுத்திச் சுத்தி வருமே அது இப்ப யார்கிட்ட இருக்கு?

நண்பர் 2: அதுவா? ஒவ்வொரு பின்னூட்டத்தையும் மூணு , நாலு பகுதியாப் பிரிச்சுத் தொடர் எழுதிக்கிட்டே இருக்குமே ஒரு பொண்ணு அதும்பட கையில இருக்கு. இப்பத்தான் ஆடி முடிச்சு நின்னுக்கிட்டிருக்கு சுடரோட.

நண்பர்3: யப்பா....அந்தக் கதையக் கேக்காதீங்கப்பு, சுடர வாங்குனாலு வாங்குச்சுப் பின்னத் திருப்பி வாங்கறதுக்குத் தலையால தண்ணி குடிக்க வேண்டியதாப் போச்சு. ஒரு கேள்விக்குப் பதில ஆரம்பிச்சுதுன்னா
முடிக்கறக்குள்ள நாம ரெண்டு மீட்டிங் முடிச்சுரலாம். அப்படியே ஒவ்வொரு கேள்விக்கும் ஆரம்பிக்கையில நாம கிளையண்ட் மீட்டிங் போனா அது இன்னொரு கேள்வியப் பேசும்போது நாம கிளையண்டோட சாபிட்டுட்டே வந்தரலாம்.

நண்பர்1: இதக்கேட்டா எனக்கு ஒன்னு ஞாபகம் வருது. எங்கூர்ல கோயில் விசேசத்துல எல்லாரும் காவடி எடுத்துக்கிட்டுப் போவாங்க. இராத்திரி வினாயகர் கோயில்ல இருந்து முனியப்பச்சி கோயிலுக்குப் போவையில இருட்டுக்கு தீப்பந்தம் புடிச்சுக்கிட்டு முன்னாடி ஒரு ஆள் போய்க்கிட்டு இருப்பாரு. கூட்டத்துல இருந்து சாமிவந்து ஆடும் ஒரு ஆளு கீழே மண்டிபோட்டு உக்காந்துடுவாரு. வெளிச்சம் தெரியட்டும்னு தீப்பந்த ஆளு அவருக்குப் பக்கத்துல வந்து நிப்பாரு. அமைதியா உக்காந்துக்கிட்டு இருந்துட்டுத் தீடீர்னு எந்திரிக்கிற சாமி ஏமாந்தாப்புல நின்னுக்கிட்டிருக்கற அந்தத் தீப்பந்த ஆளுகிட்ட இருந்து அதப் படார்னு புடுங்கீரும். அதும் ஒரு சுடர் மாதிரித்தேன்னு சொல்லலாம். ஆனாக் கொஞ்சம் பெரிசா எரியும். அதைவாங்கீட்டு சுத்திச் சுத்தி ஓடி ஆடும்பாரு சாமீஈஈஈ... எல்லாருக்கும் பயமாப் போயிரும். சாமி கிட்ட வரும்போது தீப்பந்தம் மேல பட்டுரும்னு தள்ளித் தள்ளி நிப்பாங்க. சில தைரியமான ஆளுக கிட்டப்போயி சாமி கையில இருந்து புடுங்கப் பாப்பாங்க. ஆனா முடியாது. அப்படி இறுக்கிப் புடிச்சிக்கும். அப்பறம் ஏண்டா நீ குடுத்தேன்னு தீப்பந்த ஆளத் திட்டுவாங்க.

நண்பர் 2 : ஆமா இத எதுக்கு இப்ப நீ சொல்லிக்கிட்டிருக்கிற?

நண்பர் 1: இல்ல, அந்தச் சாமிகையிலிருந்து தீப்பந்தத்த வாங்கற மாதிரி இந்தச் செல்வநாயகி கையில இருந்து சுடர வாங்கறது பெரும்பாடா இருக்குமாட்டத் தெரியுது. கேள்வி கேட்டா சட்டுப்புட்டுனு ரெண்டு வரியில பதில்சொல்லாம நீட்டி முழக்கி வதைச்சிக்கிட்டு இருக்கு.

நண்பர் 3: இதச் சொல்லக்கூடாது, இதும்பட கையில சுடரக்கொடுத்த அப்பிடிப்போடுவச் சொல்லணும்.

நண்பர் 1: ஆமா அந்த அப்பிடிப்போடு கையில யாரு கொடுத்தா?

நண்பர் 2: அது வேற யாரு அந்த மதி கந்தசாமியோட வேலை.

நண்பர் 3: அந்தக் கந்தசாமி கைக்குப் போனா இப்பிடித்தேம்பா ஆவும். இத அறியாமக் கொடுத்த ஆசாமி யாரோ?

நண்பர் 2: வேற யாரு? நம்ம கவிஞர் பாலபாரதிதான்.

நண்பர் 1: சரியாப் புடிச்சப்பா ஆளக் கையுங் களவுமா. அந்தக் கவிஞரால வந்ததுதான் இத்தனையும். எப்பவுமே இப்படி எதாவது ஏக்குமாக்காப் பண்றதே வேலையாப் போச்சு அவருக்கு. அவரச் சாத்தறதுதான் இதுக்கெல்லாம் ஒரே ஆறுதல், வாங்க போலாம் விடுபட்ட இடத்துக்கு.

ஏற்கனவே வரவனையான் செந்திலிடம் கேசரியாகிப் பொங்கலாகி விட்ட பாலபாரதி இன்று இந்த மூன்று பேரால் சட்டினி ஆகப் போவதை வருத்தத்துடன் ச்சே மகிழ்ச்சியுடன் நினைத்துக்கொண்டு இதுதான் சமயம் என்று சுடரை நான் முத்துலட்சுமிக்குக் கொடுக்கிறேன். அவருக்கான கேள்விகள்:

1. உங்க பள்ளிக்கூட வாழ்க்கை பத்தி சொல்லுங்க. வகுப்புல எப்பவும் பேசிக்கிட்டே இருப்பீங்களா? (அடிக்க வராதீங்க:))

2. காதல் --- திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் --- சிறுகுறிப்பு வரைக.

3. டில்லி பத்திக் கொஞ்சம் எடுத்து உடுங்க. முக்கியமா உங்கள அன்போட தன் தோட்டத்துச் செடிகளைப் பாக்க வரும்படி பின்னூட்டத்துல சொல்லியிருந்த அப்துல் கலாம் பற்றி?

4. ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள் சொல்லுங்க?

5. இப்போ இந்தியாவின் முக்கியமான பிரச்சினை என்ன? அதை எப்படிக் களையலாம்?

சுடரோடு நான்.....பாகம் 3

3. பெண்ணீயம் பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்.... அனுபவங்களும் அதை வலியுறுத்தியே வந்துள்ளதென அறிவேன். பெண் - ஆண்., தலித் பெண் - தலித் ஆண், மேல் சாதி பெண் மற்றும் மேல் சாதி ஆண் என நசுக்கும் கரங்கள் விளிம்பு நிலை மக்களை நோக்கி வரும்போது அதிக அழுத்ததுடனும், பரவிய நிலையிலும் வருகிறது.... ஆனால் அவ்வளவு கொடுமைகளை அனுபவித்த பெண்கள் மிக இயல்பாக ஆர்ப்பாட்டமில்லாது தங்கள் எதிர்ப்புணர்வை ஏதேனும் ஒரு வடிவத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் (ஒரு புரிதலுக்காக கருக்கு பாமா போன்றோர்). இன்னும் ஒரு பிரிவோ அனைத்தையும் மாற்றிப்போட்டு பின் நவீனப்பார்வை கொண்டு உடலே முதலில் ஆண்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவை எனப் பேசுகிறது ( ஒரு புரிதலுக்காக சுகிர்தராணி போன்றோர்). இரண்டும் பெண் விடுதலையை நோக்கிய தளங்கள் என்றாலும்.... பாலியல் தொல்லைகள் மட்டுமேதான் முன்னிருத்தப்படுகிறது. பெண் விடுதலை என்பது வெறும் பாலியல் விடுதலை மட்டும்தானா?.

ஹிஹி... பெண்கள், அவர்களின் பிரச்சினைகள் என்று வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து எது நடந்ததோ இல்லையோ நான் இப்ப ஒரு பெண்ணீயவாதின்னு பேரு வாங்கியாச்சு. என் பதிவை இண்டிபிளாக்கீசில் பரிந்துரைத்த நண்பர்களில் ஒருவர்கூட feminist blogனு சொல்லீருந்தாங்க:)) கூகிள்ல வெளையாட்டாய் என் பேரைப் போட்டுப் பார்த்தாலும் feminism னு போட்டு பக்கத்துல எம்பேரோட இடுகைகள் வந்து விழுது:))

நண்பர் செல்லாகூட பெண்ணியம் பத்தியும், ஆணீயம்(??) பத்தியும் கேள்விகள் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் சொல்லலாம்னு கொஞ்சம் எழுதியதை இங்கே இணைத்துவிட நினைக்கிறேன். அது நான் பெண்கள் பிரச்சினை எழுதவந்த கதையைக் கொஞ்சம் சொல்லலாம். எப்படியான பார்வையும், நோக்கமும் அதற்குப் பின்னணி என்பதையும் சொல்லலாம்.

எந்த இடத்திலும் எனக்கொரு பெண்ணீயவாதி என்ற அடையாளத்தை நான் விரும்பி முன்மொழிந்துகொண்டதில்லை. காரணம் என் விருப்பங்களை, தேடலை அப்படியொரு புட்டிக்குள் மட்டுமே அடைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.

பூமிக்குவந்து கண்விழித்துப்பார்க்கும் குழந்தையொன்று தன் ஒவ்வொரு அசைவையும் அல்லது தன்மீது நிகழ்த்தப்படும் அசைவுகள் ஒவ்வொன்றையும் அதியசத்தோடு பார்ப்பதுமாதிரித்தான் நானும் இருந்திருக்கிறேன். என்னைச்சுற்றிய நிகழ்வுகளுக்கு என் எதிர்வினைகள் என்ன என்பதைப் பார்க்கிறேன். எப்போது எதிர்வினைகள் புரிகிறேன்? எப்போது புரியவில்லை? அப்படிப் புரிவதும், புரியாததும் என்விருப்பத்தால் என்னால் சுதந்திரமாக எடுக்கப்படும் முடிவா அல்லது வேறேதும் புறக்காரணிகளால் நான் தடைபடுகிறேனா? அப்படித்தடைபடும்போது அதன் பின்னணியிலான காரணங்கள் என்ன? இது எனக்கு மட்டுமே ஏற்படுகிறதா இல்லை பலருக்கும் ஏற்பட்டிருக்கிறதா? ஏன் ஏற்படுகிறது? என்று மூட்டை மூட்டையாகக் கேள்விகளைச் சுமந்து திரிந்த, திரியும் ஒரு பாமரள் நான்.


எதன் பெயராலும் என்னைக் கட்டிப்போடுகிற ஒரு கயிறையோ, இன்னொருவரைக் கட்டிப்போட என் கைகளால் திரிக்கப்படும் ஒரு கயிறையோ ஏற்க மறுக்கும் மனதோடு இந்த வாழ்வைப் பொருத்திப்பார்த்து அதிலிருந்து தோன்றும் உடன்பாடுகளையும், முரண்பாடுகளையும் விளங்கிக்கொள்ள நினைக்கும் ஒரு சாதாராண மனுசி. அப்படி விளங்கிக்கொண்டதில் ஏற்பட்ட வெற்றிகளையும், தோல்விகளையும் சேமித்துக்கொள்ள நினைக்கிறேன். அது வேறு யாருக்காகவும் இன்றி எனக்காகவே செய்கிறேன்.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அனுபவமாக மிளிரும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் இப்படி எத்தனையோ சேமித்துக்கொள்ள இருப்பதுபோல்தான் எனக்கும். கிளம்பும் சூரியன், செடியின் துளிர், இலைகளின் இடுக்கில் முளைக்கும் பூ, பனியாய், நதியாய், மழையாய் ஆச்சரியப்படுத்தும் நீர் என்று இன்னபல தீராத ரகசியங்களையெல்லாம் தன்னுள் தேக்கிவைத்திருக்கும் இயற்கையிலிருந்து, நான் சந்திக்கும் மனிதர்கள், சமூகம், மதங்கள் வரைக்கும் எனக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகளைச் சேமித்துக்கொள்வதிலான ஆர்வம்தான் நேரம் கிடைக்கிறபோது எதையாவது எழுதச்சொல்கிறது. அப்படி எழுதுகிறபோது அதிலொரு பாகமாய்ப் பெண்ணுக்கும் மற்றவற்றிற்கும் உள்ள தொடர்பையும் பார்க்க முயற்சிக்கிறேன். அதன் விளைவாய்த்தான் "தவமாய்த் தவமிருந்து" படம் பற்றிப் பலரும் வலையுலகில் பாராட்டி எழுதிக்கொண்டிருந்தபோது என்பார்வையில் நான் சில மாற்றுக்கருத்துக்களை எழுதிவைத்திருந்தேன். அங்குதான் தொடங்கியது நண்பர்களின் கேள்விகளும் அதற்குப் பதில்சொல்ல முனைந்து தொடர்ந்தெழுந்த என் பெண்சம்பந்தமான பதிவுகளும். இப்போது பெண்ணீயவாதி ஆயாச்சு:)) நிற்க. இப்போது கற்பகம் என்னிடம் கேட்டிருக்கும் கேள்வி எனக்குள்ளும் அடிக்கடி தோன்றியதுண்டு.

இதுகுறித்தான என் புரிதலை இதுவரை பெண்கள் குறித்த எப்பதிவிலும் நான் சொல்ல முயற்சித்ததுமில்லை. காரணம் அந்தப் பார்வை என்னளவிலேயே இரண்டுநிலைகளைக் கொண்டது.

முதலாவது, பாலியல் விடுதலை மட்டும்தான் பெண்விடுதலை என்று நான் நினைக்கவில்லை. பாலியல் உரிமைகள் பெண்விடுதலையில் முக்கியமான ஒன்று எனினும் அதையே முதலாவதான ஒன்று என்று நான் கருதவில்லை. ஒரு பெண்ணின் மனமொழி புரிந்துகொள்ளப்படுவது எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. அவளின் சிந்தனை, சுதந்திரம், கல்வி, வேலை, திருமணம் என்று அவள்குறித்தான விடயங்களில் அவளின் முடிவெடுக்கும் உரிமை மதிக்கப்படுதல், ஒவ்வொரு அதிர்விலும், நிகழ்விலும் ஒரு ஆணுக்குத் தோன்றும் உணர்வுகள் அவளுக்கும் தோன்றும் என்பவை புரிந்துகொள்ளப்படுதல், அவற்றைத் தடுப்பது எக்கூறுகளில் எப்படிப் பொதிந்துள்ளது என்பவை அடையாளம் காணப்படுதல், அவை ஒரு வளரும் மானுடத்திற்குத் தேவையற்ற குப்பைகள் என்று கண்டுணரப்படுதல், களையப்படுதல் ஆகிய வாதங்கள் திரும்பத் திரும்ப அதற்கான தேவைகளோடு முன்னெடுக்கப்படும்போது அவளின் பாலியல் உரிமைகள், தெரிவுகள் பற்றிய புரிதல்களையும் செவிமடுப்பதற்கான தயாரிப்பை இச்சமூகத்திற்குத் தரமுடியும்.

நம் லட்சிய எல்லைகள் உச்சியில் இருக்கவேண்டியதும், இருப்பதும் அவசியமானதே. ஆனால் அதை அடைவதற்குப் பல படிகளையும் கடக்க வேண்டியிருக்கிறது. எடுத்தவுடன் அதன் உச்சிக்குப் போய்விடமுடியும் வலிமையுள்ளவர்கள் "என்னைப்போல் தாவி வா" என்று சொல்வதை முதல்படியிலேயே தடவிக்கொண்டிருப்பவர்களால் இயல்பாகப் பார்க்க முடிவதில்லை. அங்குபோய் நின்றுகொண்டிருப்பவர்களை அண்ணாந்து பார்க்கையிலேயே இவர்களுக்குத் தலைசுற்றல் வந்துவிடுகிறது.

பாலியல், உடல்மொழியை அதிகமாக முன்னெடுக்கும் பெண் படைப்பாளிகளுக்கும் நம் தமிழ்ச்சமூகத்திற்கும் உள்ள உறவை நான் மேற்சொன்ன உதாரணத்தோடு பொருத்திப் பார்க்கிறேன். இதில் அந்தப் படைப்பாளிகளைக் குற்றவாளிகள் என்று சொல்லமுடியுமா? இன்னும் 50 ஆண்டுகள் கழித்து வரும் இன்னும் முதிர்ச்சியான தலைமுறைக்கு இப்போது உடல்மொழியை முன்னெடுக்கும் இப்படைப்பாளிகள் ஆதர்சங்களாகத் தோன்றலாம். ஏனென்றால் அப்போது இதன் புரிதலில் இன்னும் சிலபடிகளாவது மேலேறிவிடும் மனநிலை அந்தத் தலைமுறைக்கு வந்திருக்கலாம்.

இரண்டாவது, இப்படி எழுதும் பெண்கள் மீதான தாக்குதல். உடல்மொழி மட்டுமே பெண்விடுதலையாக முன்னிறுத்தப்படுவதில் மாற்றுக்கருத்துக்கள், அதற்கான நியாயங்கள் இருப்பவர்கள் இன்னொருபுறம் எழுதிச்சொல்லவும், பெண்விடுதலையை அவர்கள் பார்வையில் எப்படியான வழிகளில் வளர்த்தெடுக்க முடியும் என்பதை சரியான தர்க்கங்கள் இருந்தால் அவற்றுடனும் முன்வைக்கவும் முடியும் சாத்தியக்கூறுகள் இருக்கையில் அவற்றைப் புறக்கணித்து நேரடியாக உடல்மொழி பேசும் பெண்ணின் ஒழுக்கம்வரை ஆராயப் புகுந்துவிடும், தொலைபேசி, மடல் வழியாக மிரட்டக் கிளம்பிவிடும், அண்ணாசாலையில் எரித்துவிட ஆசைப்படும் மனநிலைகள் கண்டிக்கப்படவேண்டியவை. இந்தமாதிரிக் காலத்தால் பின்னோக்கி நகர்ந்துவிடும் ஆட்கள் இப்பெண்களை அவர்களின் எழுத்துரிமையையே முடக்கிவிட்டு அவர்கள் எதை எழுதவேண்டுமெனத் தாம் தீர்மானிக்கக் கிளம்பிவிடுகிறார்கள். இது அப்பெண்களை அதற்குத் தம் தார்மீக எதிர்ப்பைக் காட்டும் வண்ணமாகவே மீண்டும் மீண்டும் அதையே எழுதவைக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளை எதிர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்த மொழியோ வழியோ வேறென்ன இருக்கமுடியும் இந்த எழுத்தைத் தவிர?

சுடரோடு நான்...பாகம் 2

2. கவிதை, கதை மற்றும் பதிவுகளில் இயல்பான, சீறான எழுத்தோட்டம், உங்களின் பரந்துபட்ட ரசனைகளை கவணமாக ஆவணப்படுத்தும் பாங்கென உங்களின் ஒவ்வொரு பதிவைப் படிக்கும்போதும் வியக்க வைக்கிறீர்கள். பிறரின் படைப்பில் உங்களைக் கவர்ந்த ஒன்று


காசா பணமா? வஞ்சனையில்லாமப் புகழுவோம்னு நிறையச் சொல்லீட்டாங்க அம்மணி:))

எனக்குப் பிடித்த பிறரின் படைப்புகள் என்றால் இங்கு வலைப்பதிவில் கேட்கிறீர்களா? அல்லது வெளியில் பிற எழுத்தாளர்கள் என்று கேட்கிறீர்களா எனத் தெரியவில்லை. எனவே நான் இரண்டையும் சொல்லப்போகிறேன்:)) "அடப்பாவி மவளே! இப்படி ஆரம்பிச்சு இனி இதுக்கு ஒம்பது பத்தி எழுதிக் கொல்றதுக்குப் பதிலா கற்பகத்துக்கு ஒருவரி பின்னூட்டம்போட்டு அங்கயே கேட்டுத் தெளிஞ்சிட்டு எதச் சொல்றாங்களோ அத ஒரு பத்தில சொல்ல முடியாதா உன்னால???" அப்படீன்னு நீங்க கேட்க நெனச்சாலும் பிரயோசனமில்ல. எதுவும் காதுல விழுகாது இப்ப எனக்கு. அந்தளவுக்கு ஐம்புலன்களையும் ஒன்றுகுவித்து எழுத்துல கவனமா எழுதிக்கிட்டிருக்கேனுக்கும்:))

பிடித்தது என்பதை படித்தபோது அல்லது கேட்டபோது என்னை அதிகம் பாதித்தது, சுற்றியிருக்கும் சுவர்கள், மனிதர்கள், சூழ்நிலைகள் மறந்து அதற்குள் நான் கரைந்தது என்று எடுத்துக்கொள்கிறேன். அதில் ஒரு கதை உங்களுக்குச் சொல்லவேண்டும். அது நான் படித்ததுகூட அல்ல. நானும் பங்குகொண்டிருந்த ஒரு கூட்டத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்லி நான் கேட்டது. ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவின் சிறுகதை அது.

ரஷ்ய ராணுவவீரன் ஒருவன். அவன் பெயர் கிரிகோ. அவன் முகாமிட்டிருந்த இடத்தில் எதிரிநாட்டுப் படையுடன் போரிட்டதில் குண்டுபாய்ந்து முகம் மிகப்பாதிப்புக்குள்ளாகிப்போனது. எவ்வளவோ சிகிச்சைக்குப் பின்னும் அவன் சிதைந்த முகம் முந்தைய அழகுக்கோ வடிவுக்கோ வரவேயில்லை. அவனைப் பார்க்கும் யாரும் அவன் பழைய கிரிகோ என்று சொல்லவே முடியாது. அடையாளம் மாறிப்போனான். இத்துயரச் செய்தி எங்கோ ஒரு கிராமத்திலிருக்கும் அவன் பெற்றோருக்குத் தெரியாது. இந்நிலையில் விடுமுறை வருகிறது. தன் வயதான தாய் தந்தையைப் பார்க்க ஊருக்கு வருகிறான். வரும்வழியெல்லாம் யோசனை. தன்னை அடையாளம் தெரியப்போவதில்லை தன் தாய்க்கும். அப்படியே அவன் சொன்னாலும் அவள் அடையப்போகும் வேதனையைப் பார்க்கமுடியாது இவனால். குழந்தையிலிருந்து நிலா என்றும், சூரியன் என்றும் கொஞ்சிக் கொஞ்சித் தடவி மகிழ்ந்த தன் மகனின் முகம் கோரமான நிலையைப் பார்த்தால் எத்தாய்தான் குமுறாதிருப்பாள்?

வீடுவந்து சேர்கிறான். தட்டிய கதவைத் திறக்கும் தாய் கேட்கிறாள், "யாரப்பா நீ?"

"நான் உங்கள் மகனின் நண்பன், அவனுக்கு விடுப்புக் கிடைக்கவில்லை. இந்தப்பக்கமாக வந்த என்னை உங்களைப் பார்த்துவிட்டு இருநாட்கள் தங்கிவிட்டு வரச்சொன்னான், வந்திருக்கிறேன்"

இப்படிச்சொல்லி இருந்துவிட்டுக் கிளம்புகையில் கேட்கிறான் "உங்கள் மகனுக்குச் சொல்ல ஏதும் செய்தியிருக்கிறதா அம்மா?"

"இல்லை, நான் அவனுக்குக் கடிதம் எழுதுவதாகப் போய்ச்சொல்"

மீண்டும் முகாம் வந்து சேரும் கிரிகோவுக்குச் சில நாட்களில் அவன் அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. அது பேசுகிறது:-

"அன்புள்ள க்ரிகோ, நீ நலமாயிருப்பாயென நம்புகிறேன். சிலநாட்கள் முன்பு உன் நண்பன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் நம் வீட்டிற்கு வந்திருந்தான். உன்னைப்போலவே எங்களிடம் பாசமாக இருந்தான். மரியாதையாகப் பேசினான். நான் சமைத்ததை ஆசையாகச் சாப்பிட்டான். ஆனால் எனக்கு ஏனோ அவன் உன் நண்பனல்ல என்கிற என்ணம் வந்துகொண்டே இருந்தது. சொன்னபோது உன் தந்தை அதைப் பொருட்படுத்தவில்லை. இருந்தாலும் எனக்குத் தெரியுமடா. வந்திருந்தது என் மகனின் நண்பன் அல்ல. என் மகந்தான் என்று. ஏனென்றால் எங்களோடு தங்கியிருந்த நாட்களில் அவன் உடுப்புக்களைத் துவைத்துப்போட்டது நான். துவைக்கையில் அந்த உடுப்புகளில் இருந்து வந்தது என் மகனின் நண்பனின் வாசனை அல்ல. என் மகனின் வாசனை. நீ ஏனடா பொய் சொன்னாய்? உன் முகம் அழிந்துவிட்டதென்பதற்காக நான் சிதறுவேன் என எப்படியடா நினைத்தாய்? அதை நீ இழந்தது ஒரு வீரப்போரில் உன் மண்ணுக்காக என்பதை அறியும் போது நான் முன்பைவிடவும் உன்னை அதிகம் நேசிக்கிறேன்"

இப்படித் தொடரும் ஒரு தாயின் பாத்திரத்தைச் சித்தரிக்கும் அந்தக்கதை எனக்குள் ஒரு அழியாத சித்திரமாய் ஆக்கிரமித்திருக்கிறது.

இதுதவிர எனக்குப் பிடித்த இன்னொரு கவிதை சொல்வேன் உங்களுக்கு. மரபின்மைந்தன் எனப்பெயர்சூடிக்கொண்ட முத்தையா எழுதின கவிதை. நெருங்கிய மனிதர்களானாலும் சில துயரங்களைத் துடைத்தெடுப்பதற்கு வார்த்தைகள் உதவுவதில்லை. எப்படித்தொடங்கி எப்படி முடிப்பதெனத்தெரியாமல் சொல்லப்படாத அன்பை நாம் சுமந்துகொண்டே திரியவேண்டியிருக்கிறது சிலவேளைகளில். அது தாயானாலும், தனயனானாலும், நண்பனானாலும், தோழியானாலும். அப்படியொரு சூழலில் அவர் தன் அன்பைக் கவிதைகளில் வடிக்கிறார்:-

உடைந்துபோன உன் கனவுகளெல்லாம்
சில்லுகளாக சிதறிக்கிடக்கும்
தகவல் தெரிந்துதான் வந்திருக்கிறேன்.
ரணமாய் உறுத்தும் ரகசிய வலிகளைக்
காட்டிவிடுகிற கண்கள் உனக்கு.
பத்திய உணவு பிடிக்காத குழந்தையாய்
அழுகையை அழுத்தும் உதடுகள் மீது
இருத்தி வைக்கிற புன்னகைகூட
வருத்தத்தைத்தான் வெளிச்சொல்கிறது.
பளபளக்கிற கண்ணீர்த்திவலையை
படபடக்கிற இமைகள் மறைக்க,
சிலந்திவலையில் சிக்கிய ஈசலாய்
துயரக்குளிரில் துடிக்குமுன் நாசிகள்.

சரிந்துவிழுகிற மணல்வீடென்பது
சமுத்திரக்கரையில் சகஜமென்றாலும்
சிரமப்பட்டுக் கட்டிய பிள்ளைக்கு
சமாதானங்கள் சொல்லவா முடியும்?
தயக்கத்தோடு நான் தொட்டு நிமிர்த்தினால்
விசும்பல்களுடன் நீ வெடித்துச் சிதறலாம்.
பாரம் முழுவதும் இறங்க இறங்க..நீ
ஓயும்வரை என் தோள்களைத்தரலாம்.
நேரம்பார்த்து மெல்லிய குரலில்
தேறுதலாக ஏதும் சொல்லலாம்.
தொடங்கத் தெரியாத தர்மசங்கடத்தில்-என்
ஆறுதல் மொழிகள் காத்திருக்கின்றன..
ஆரம்பமாகாத உன் அழுகைக்காக!


இந்தக் கவிதையின் தலைப்பு "அழுதுவிடேன்!" என்னைச்சுற்றிய மனிதர்களின் சோகநிகழ்வுகள் சிலதில் சொல்ல வார்த்தைகளற்று இப்படி நின்ற நிமிடங்கள் எனக்கும் உண்டென்பதால் இது பிடிக்கும்.

மேலே சொன்னவை தவிர வலைப்பதிவில் எனக்குப் பிடித்த படைப்பு பற்றிச் சொல்லவேண்டுமென்றால் அதையே ஒரு தொடராக எழுதி வருடத்தையே ஓட்டிவிடலாம்:)) நான் வந்த காலம்தொட்டு இப்போதுவரை இருக்கும் பல பதிவர்களின் சில இடுகைகளை எனக்குப் பிடித்தவைகள் பட்டியலில் ஒரு பூச்சரம்போல் சேமித்துவைத்திருக்கிறேன். நான் விரும்பிப் பறித்தெடுத்து ஒவ்வொன்றாய் எடுத்துத் தொடுத்து வைத்திருக்கும் அதில் உனக்குப் பிடித்த ஒரு பூவைச் சொல் என்றால் எப்படி முடியும்? ஆனால் பள்ளியில் முதல்நாள், கல்லூரியில் முதல்நாள், புது ஊரில், புதுவீட்டில் முதல்நாள் மாதிரி எனக்கு வலைப்பதிவுக்கு வந்த முதல் தருணங்களில் நான் படித்ததை, எனக்குப் பிடித்ததைச் சொல்லலாம்.

ஒரு 10 வயதிருக்கும்போது தோட்டத்தில் கம்பு பயிரிட்டிருந்தார்கள். அவை முற்றியிருந்த காலத்தில் அறுவடை ஆரம்பித்தது. அறுத்துக்குவித்திருந்த கம்பங்கருதுகளை வெட்டிக் குவித்திருந்தார்கள். இன்னொரு பகுதியில் வெட்டாத கருதுகளும் நின்றுகொண்டிருந்தன. நான் ஒரு மாலைவேளையில் அந்தப்பக்கமாய்ப் புத்தகம் தூக்கிக்கொண்டுபோய்ப் படித்துக்கொண்டிருந்தேன். வெட்டிப்போட்ட கருதுகளை தென்னந்தடுக்குக் கொண்டு மூடிவைத்திருந்தும் பல சிட்டுக்குருவிகள் ஓரங்களில் அதை இழுத்துக் கம்பு தின்றன. கீச்கீச்சென ஒரே சத்தம். சரி சாப்பிடட்டும் என நகர்ந்தபோது அங்கேயே அருகில் வெட்டாமல் கருதுடன் நின்ற ஒரு கம்பந்தட்டில் கிளைபோலிருந்த தோகைமேல் அமர்ந்திருந்தது ஒற்றைச் சிட்டுக்குருவி. ஆனால் அதிலியே இருந்த கருதில் கம்பு கொத்தித் திங்கவில்லை. எந்த அசைவுமில்லை. அது அசையவில்லையே தவிர காற்றுக்கு அது அமர்ந்திருந்த அந்தக் கம்பந்தட்டு அசைந்தது. மெதுவாக கீழே மேலே..கீழே மேலே என அதன் இயல்பான அசைவில் என்ன சுகம் கண்டதோ அந்தக் குருவி. எழுந்தே போகவில்லை. அருகில் கீச்ச்கீச்சென போட்டிபோட்டுக்கொண்டு கீழே கம்பு தின்றுகொண்டிருந்த குருவிகள் அதன் தியானத்தைக் கலைக்கவில்லை. சிறிது தொலைவில் நின்றுகொண்டு படிப்பதை நிறுத்தி அதையே பார்த்துக்கொண்டிருந்த என்னை என் இருப்பை அது உணர்ந்ததாகவும் தெரியவில்லை. காற்று, கம்பந்தட்டு அசைவு, அதை அப்படியே அனுபவிக்கும் அமைதி என இருந்த ஒற்றைக்குருவியைப் பார்த்துக்கொண்டிருப்பதே என் யோகமானது. ச்சே.. நான் அதாக இல்லையே என்றும் ஏக்கம்...

என்னைத்தேடிக்கொண்டு அங்கு வந்த அம்மாவின் எதிர்பாராத அழைப்பில் கலைந்தது குருவியின் தவமும், என் தவமும். இப்படித்தான் இன்றும் குருவி, அருவி, சிறுமி, இங்கு எழுதும் தருமி(என்றால் அவரின் எழுத்துக்கள்) என்று என் ஒவ்வொரு நாளிலும் சிறுசிறு யோகம் அல்லது தியானம் பெறும் இடங்கள் நிறைய. வாழ்வு இப்படி அவ்வப்போது தவம் கூட்டும் கணங்களாகவும், கலைக்கும் கணங்களாகவும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே நம்மை அதோடு ஒட்டவைத்திருக்கிறது.

இந்தத் தவங்களை அல்லது மென்மையான தருணங்களை எழுத்துக்களிலும் சிதறாமல் வடித்தெடுப்பது ஒரு கலை. நான் முயன்று தோற்றதே அதிகம். ஆனால் வலைப்பதிவுக்கு வந்த முதல் மாதங்களில் தோண்டித்துருவி மேய்ந்துகொண்டிருந்தபோது தங்கமணியின் பதிவில் இம்மாதிரி இயற்கைசார்ந்த அவதானிப்புகளும், அவை தந்த அனுபவங்களுமாக நிறையக் கண்டேன். அது முதன்முறையாக நான் சென்று பின் திரும்பிவராமல் அவரின் எல்லா இடுகைகளையும் ஒரே மூச்சில் படித்துமுடித்த பதிவு. இப்போது எழுதாமல் வனவாசத்திலிருக்கிற (இப்படி நெறையப்பேரு போயிருக்காங்க) அவரின் அந்தப் பழைய பக்கத்தின் முகவரி www. ntmani.blogspot.com. இப்போதைக்கு உதாரணத்திற்கு ஒன்று கீழே:-

மலை இனிது, காடு நன்று, ஆறுகள் இனியன
இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து

எங்களுடைய குடகு (தேன் பள்ளத்தாக்கு) பயணத்தைப் பற்றி நான் எழுதலாம்.

அது எனக்குள் இருக்கும் வனத்தை சொல்லுமா?
ஓடிக்கொண்டிருக்கும் நதியை
வழுக்கும் பாறைகளை
வழிதவறிய பாதைகளை
சொல்லிப்பெய்யும் மழையை
சொல்லாது செல்லும் முகிலை
பாசிபடர்ந்த அந்த மழைக்காடுகளை

ஒரு பயணத்தைப் பற்றி எழுதுவது எளிது
ஒரு வனத்தை, அருவியை, நெடிதுயர்ந்த மரங்களை, கடந்து செல்லும் மேகத்தை
எழுதுவது கடினம்.

ஏனெனில் ஒரு பயணி இவைகளில் கொஞ்சத்தை சேமித்து வருகிறான்
ஒருமாலைப்பொழுதில் சொல்வதற்கு.
ஆனால் ஒரு அனுபவம் இவைகளில் மொத்தமாய்க் கரைந்துவிடுகிறது
மூங்கிலிலை மழைத்துளி அருவியில் விழுவதைபோல்.

முடிந்தால் எழுதுகிறேன்.


ஒரு அனுபவத்தை எழுதமுடியாது என்பதைக்கூட இவ்வளவு அழகாக எழுதமுடியுமா என வியந்திருக்கிறேன் இதைப் படித்தபோது.

சுடரோடு நான்.....பாகம் 1

தேன்கூடு சாகரன் ஏற்றிவைத்துப் பின் பல்வேறு நண்பர்களின் கரங்களில் பலநிறங்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த சுடரை இப்போது கற்பகம் என் கைகளில் தந்திருக்கிறார். ஆசையோடு வாங்கிக்கொண்டேன் என்றாலும் கேள்விகள் கொஞ்சம் பயமுறுத்தவே செய்தன. மூன்று கேள்விகள், அதிலும் முக்கியமாக முதலும் கடைசியும் முழுக்க முழுக்க என்னை இங்கு சொந்தக்கதை எழுதவைப்பவை. எதோ நம்ம பாட்டுக்கு ஒரு மாட்டுவண்டியில
போனமா, நண்பர்களிடம் கொஞ்சம் பின்னவீனத்துவம் படிச்சமான்னு இருக்கற பொழப்பு நன்றாக இருக்கிறது. இதில் என் பேச்சு அனுபவம், கருப்பு கவுன் அனுபவம் என்றெல்லாம் பராக்கிரமங்களை அள்ளிவிட்டு அப்புறம் "மவளே அங்கெயெல்லாம் இப்படியிப்படி இத்தனை பேர வதைச்சு முடிச்சிட்டுத்தான் இப்ப வலைப்பதிவுல எங்களை வதைக்க வந்திருக்கியா?" ன்னு யாரும் வந்தால் என்ன செய்வதென்ற திகில் சிறிது இருக்கவே செய்கிறது. இருந்தாலும் எனைநோக்கி வரும் பூவெல்லாம் (அப்படி எதுவும் வந்தா...) எனக்கு, கல்லெல்லாம் கற்பகத்துக்கு(ஹிஹி) என்று ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு என் சுயபுராண மூட்டைகளை இன்று உங்கள் தலையில் கட்டுவதற்கு ஆயத்தமாகிறேன்:))

1. நீங்கள் சிறந்த பேச்சாளர் என்பது தெரியும். உங்களுடைய எழுத்துப் பணி மற்றும் மேடைப் பேச்சுகள் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?.

இதுல எழுத்துப்பணின்னு ஒரு வார்த்தை போட்டுருக்காங்க பாருங்க சும்மா புல்லரிச்சுப் போச்சு எனக்கு. உன்னையெல்லாம் இப்படி யாராவது சொன்னாத்தான் உண்டு, கெடைக்கும்போது கமுக்கமா வாங்கிக்க புள்ளைன்னு மனசாட்சியின் ஓரத்தில் படுத்திருக்கும் சுயநலவாதி சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அதே மனசாட்சிக்கிடங்குல இன்னொரு ஓரமா கிடக்குற நேர்மைன்னு ஒன்னு இருக்குது பாருங்க, அது உண்மையச்
சொல்லவைக்குது. எழுத்துப்பணி என்பது அமெரிக்கா வந்தபிறகு சிலவருடங்களாய் நான் இணையத்திலும், மிகச்சில அச்சு இதழ்களிலும் எழுதிக்கொண்டிருப்பவைதான். கவிதைகளாகத்தான் எழுதிப்பழக ஆரம்பித்தது. அப்படி எழுதிய கவிதைகள் மற்றும் எழுதி எங்கும் வெளியிடாத சில கவிதைகள் சேர்த்து இந்தியா போனபோது அங்கிருக்கும் இலக்கிய மற்றும் என் பேச்சு ஈடுபாடுடைய நண்பர்களால் கடந்த ஆண்டு "பனிப்பொம்மைகள்"
எனும் தலைப்பில் தொகுப்பாகப் போடப்பட்டது. ஊரில் ஒரு வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும் இருந்த காலகட்டத்தில் எழுதச்சொல்லிப் பல நண்பர்களும் வற்புறுத்தியே வந்திருந்தாலும் நான் அந்த முயற்சி எதுவும் எடுக்கவில்லை கவியரங்கங்கள் சிலவற்றில் எழுதியிருந்ததைத் தவிர. (இப்ப நீ எழுதவேண்டாம்னு யாரும் கதறுனாலும் கண்டுகொள்ளவா போற நீ --இதுவும் மனசாட்சி)

பேச்சு அனுபவங்கள் பற்றிச் சொல்ல நிறையவே இருக்கிறது (ஆரம்பிச்சுட்டா ஆரம்பிச்சுட்டா). எந்த ஒரு பேச்சு, எழுத்து, இலக்கியத்துறை ஆர்வமும் இல்லாத பிண்ணனிதான் எனக்கு. விளையாட்டாய்ப் பள்ளியில் தமிழாசிரியையின் தூண்டுதலால் பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்து அது பள்ளிதாண்டி வட்ட, மாவட்ட, மாநில அளவுகளில் விரிந்தது. கொஞ்சம் நன்றாகப் படித்துக்கொண்டிருந்த அல்லது படிப்பதுபோல்
பாவ்லா காட்டிக்கொண்டிருந்த நான் இப்படி இதில் முழுமூச்சாய் இறங்கியது என் தலைமையாசிரியருக்கு மட்டும் வருத்தமளித்தது. காரணம் ஒரு கிராமப்புறப் பள்ளியான அதன் மாணவ மாணவிகள் கல்வியில் நிறைய மதிப்பெண்கள் பெற்று விருதுகள் வாங்கிக்காட்டவேண்டுமென ஆர்வமிருந்தது அவருக்கு. அப்படியான தகுதியுள்ளவர்களில் ஒருவராக அவர் என்னையும் கருதிக்கொண்டிருந்தார். அவர் கனவைக் கருக்கிவிட்டு நான்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய பேச்சுப்போட்டியில் கீழிருந்து பல நிலைகளில் வென்று கடைசியாக மாநில அளவில் முதல்பரிசாகச் சில காசோலைகளையும், சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வாங்கிக்கொண்டுவந்து காட்டியபோது அவற்றை வருத்தம்பாதி, மகிழ்ச்சிபாதி கலந்துசெய்த மனநிலையோடு வாங்கிப்பார்த்தார். அடுத்த சிலமாதங்களில் பள்ளியிறுதித்தேர்வு முடிவுகள் வந்தபோது நான் பள்ளி அளவில்கூட
இரண்டாவதாகவே வந்தேன். அப்போதும் அவரின் வருத்தத்தை உணரமுடிந்தது.

கல்லூரி வந்தபிறகும் ஊரில் ஒரு போட்டி விடுவதில்லை. அப்போதுதான் கம்பன் கழகங்கள் அறிமுகம். அதில் என் பேச்சால் கவரப்பட்டவர்கள் தமிழகத்தின் பல கம்பன்விழாக்களிலும் பேச அழைப்பு விடுத்தார்கள். வயதாலும் அனுபவத்தாலும் என்னைவிட முதிர்ந்த சீனியர் ஆட்கள் இலக்கியப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பேசுகையில், விவாதிக்கையில் அதற்கு நடுவில் நானும் ஒரு ஆளாக சிட்டுக்குருவியைப்போல் (உருவத்தில்) அமர்ந்திருப்பேன். சீதையத் தீக்குளிக்கச் சொன்ன ராமன் மீதான குற்றச்சாட்டுக்களை வைப்பது, பாஞ்சாலியை
அடகுவைத்த தருமனிடம் என்ன தருமம் இருந்தது என்று கேட்பது, மன்னனிடம் "என் கணவனை நீதிதவறி நீ கொன்றது நியாயமா" என்று கேட்டுப் போராடும் துணிவு இருந்தும், தவறு செய்துவிட்டு வந்த கணவனை ஒருவார்த்தையும் தட்டிக் கேட்காத மனைவியாக இளங்கோவடிகள் படைத்தது ஏன்? என்கிற ரீதியில் பேசும்படியாகப் பெரும்பாலும் எனக்கான தலைப்புகள் அமையும். இவைதவிர இராமாயாணத்தில் தனிப்பட்ட பாத்திரங்கள் என்று
வந்தால் கும்பகர்ணன், குகன், தாரை, மண்டோதரி, ஊர்மிளை என்று தொடரும்.

கைகளில் பெரும்பாலும் குறிப்புகள் இல்லாமல் பேசுவது என் நடைமுறை. அதை சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தேன். தொடர்புடைய நூல்களைப் படிப்பது, மனதில் சிந்திப்பது, அதை வெளிப்படுத்துவது இதுவே பழக்கமானது. ஒரு பேச்சுக்கான தயாரிப்பிலும் யாரும் எழுதித் தந்து பேசுவதிலோ, இன்னொருவரின் பார்வையைக் கேட்டு அதை அப்படியே பேசுவதோ ஆர்வம் இருந்ததில்லை. பேச்சுப்போட்டிக்கென்று முதன்முதலாகப் பள்ளியில் மேடையேறியதுமுதல் சுயமான தயாரிப்புத்தான். ஆரம்பகாலத்தில் இது கடினமாக, நிறைய உழைப்பு வேண்டியதாக இருந்தாலும் பொதுமேடைகளுக்கு வந்தபோது இத்துறையில் தொடர் வாய்ப்புகளையும், வெற்றிகளையும் பெற அது பெரிதும் உதவியது. இம்மாதிரி இலக்கிய நிகழ்வுகளில் ஆரம்பத்தில் செய்த பட்டிமன்ற, வழக்காடுமன்ற முறைகள்கூட
எனக்குச் சிலவருடங்களில் அலுப்பைத்தந்தபோது தனிச்சொற்பொழிவாக உரைநிகழ்த்த வந்த வாய்ப்புக்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தேன். கல்லூரிகள், பள்ளிகள், அரிமா, ரோட்டரி, தமிழ்ச்சங்கங்கள் என்று இந்தப்பட்டியல் நீண்டது. நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்க ஒரு அருமையான ஆயுதமாகப் பயன்படக்கூடிய பட்டிமன்றங்கள் பலசமயங்களில் வெற்றுக் கேலி கிண்டல் பாணி நகச்சுவைகளால் நிறைக்கப்பட்டு வீணாய்ப் போவதில் எனக்கு விமர்சனங்கள் உண்டு. அப்படி அவை ஆகிவிடாமல் முழுக்க
முழுக்கத் தரமான நடையில் அழகான விவாதம் சார்ந்த மேடையாக மட்டுமே வைத்திருக்கும் நடுவர்கள் என் விருப்பமாக இருந்தது. திரு. தமிழருவி மனியன், திருமதி இள்ம்பிறை மணிமாறன் இருவரும் எனக்கு இதில் ஆதர்சங்கள்.


நீங்கள் பேசியவற்றில், நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் பேசிய ஒரு நிகழ்வு பற்றி சொல்லுங்களேன்.

உடன்பாடில்லாத தலைப்புகளைத் தவிர்த்துவிடுவது, தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிகளை ஒத்துக்கொள்வது, அம்முறையில் பிடித்து ஒத்துக்கொண்டு பேசும் நிகழ்வுகளை 100 சதவீத அர்ப்பணிப்போடு செய்வது என்று நானே வகுத்துவைத்திருந்த காரணத்தாலும், அப்படிச் செய்கிறபோது அது நல்ல வரவேற்பைப் பெற்றதாலும் நான் பேசிய ஒவ்வொரு நிகழ்ச்சியுமே எனக்கு இனிமையான நினைவாகவே மாறியது. ஆனால் நீங்கள் கேட்பதற்காகச் சொல்லவேண்டுமென்றால் நான் 3 நிகழ்வுகளைச் சொல்ல விரும்புகிறேன்.

1. மண்டல அளவிலான அரிமா அமைப்பாளர்களுக்காகப் பேச்சாளர் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட ஒரு 100 பேருக்கு அப்போதுதான் வழக்கறிஞராகியிருந்த நான் வகுப்பு எடுத்தது.

2. ஒரு பள்ளியின் ஆண்டுவிழாவில் பேசிமுடித்துக் கிளம்பியபோது ஓடிவந்த ஒரு மாணவி எனக்குத் தன் பேனாவைப் பரிசளித்து "அக்கா நீங்க பேசுனது புடிச்சுது" என்று ஒற்றை வாக்கியம் உதிர்த்துப் போனது.

3. பாரதி பற்றி நிறைய ஆய்வு நூல்கள் எழுதியவரும், செக்கோசுலோவோக்கியா மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டுப் பல ஆயிரம் பிரதிகள் விற்றுத்தீர்ந்த ஒரு நூலை எழுதியவருமான திரு. தொ. மு.சி. ரகுநாதன் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன் அவருக்கு "பாரதி விருது" வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியவர்களில் நானும் ஒருத்தி. அந்த முதிர்ந்த வயதில் ஏற்புரையாற்றியபோது அவர் பேசியதில் ஒரு பகுதி இது:-

"இங்கு விருதெல்லாம் கொடுக்கறாங்க, எல்லாம் பண்றாங்க. ஆனா நீங்க என் ஊரான திருநெல்வேலிக்கு வந்து என் பகுதியில ஒரு மனிதரை பாத்திரக்காரர் எங்க இருக்காருன்னு கேட்டாச் சொல்லுவாங்க, துணிக்கடைக்காரர் எங்க இருக்காருன்னு கேட்டாச் சரியாச் சொல்லுவாங்க. ஆனா எழுத்தாளர் வீடு எங்கன்னு கேட்டா அது யாருன்னு உங்களக் கேப்பாங்க."

வேட்டியைக்கூட இரண்டுநுனிகளும் சரியாக இருக்குமாறு கட்டாமல் ஒருபக்கம் தூக்கியும், இன்னொரு பக்கம் இறக்கியும் கட்டிக்கொண்டு முதுமையில் ஒட்டிப்போன கன்னங்களுடனும், கண்ணாடிக்குள் உள்ளே தேடவேண்டிய சுருங்கிய கண்களுடனும் அந்தப் பெரியவர் இப்படிப் பேசக் கேட்டது மறக்கமுடியாதது. இப்போதும் நான் பேசிய நிகழ்ச்சிகள் என்று நினைக்க ஆரம்பித்தால் இதைத் தவிர்த்து விட்டு மற்றவை பற்றி யோசிக்க முடியாது.

காசுக்குத் தன்னை விற்றுக்கொள்ளாமல் தன் சமூகத்தின் நிகழ்காலத் தொய்வுக்கு வருந்தி அதன் எதிர்கால வளத்திற்கு ஏங்கும் நல்ல ஆக்கங்களை எழுதுகிற ஒரு படைப்பாளி நம் தமிழ்ச்சமூகத்தில் சரியாக அடையாளம் காணப்பட்டு அவரின் எழுத்துக்கள் உடனுக்குடன் கொண்டாடப்ப்டாமல் போவது நம் சாபம். உயிரோடு வாழ்ந்தபோது பாரதிக்கும் அதே, பாரதியை ஆய்வுசெய்த தொ.மு. சி க்கும் அதே. நாளை ஒரு தொ.மு.சி யை
ஆய்வு செய்யும் மனிதருக்கும் இதே என்று தொடர்வது புரையோடிப்போன நம் அறியாமைப் புண்களின் அடையாளம்:((